Tuesday, May 24, 2005

துத்தம் - 5

சந்தனமேடை எம் இதயத்திலே... - 2சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

இந்தக்காலகட்டத்திலே வெளிவந்த இலங்கைப்பாடல்கள், ஒன்று துள்ளிசைப்பாடல்களாக இருந்தன அல்லது மெல்லிசைப்பாடல்களாக இருந்தன. இலங்கைத்தமிழர் வேண்டிக் கேட்ட மூன்றாவது வகைப்பாடல்கள், பக்திப்பாடல்கள். அவற்றின் சில, பக்திப்பாடல்கள் என்பதற்கப்பாலும் பிரசித்தி பெற்றவை. அவற்றிலே ஒன்று. இணுவில் வீரமணி ஐயர் யாத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடிய, "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே." புலம்பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறைகளின் சங்கீத, நடன அரங்கேற்றங்களிலே இது பொதுவிலே புகுந்துவிடும். வீரமணி ஐயரின் இந்தப்பாட்டு 70~80 களிலே வெளிவந்ததா என்று தெரியாது. அநேகமாக, 77 இன் பின் ஜே ஆர். ஐயவர்த்தனா ஆட்சியின் திறந்த பொருளாதார ஆரம்பத்தின்போது, தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கோவில்களின் திருவிழாக்களுக்கு ஆடம்பரச்செலவு செய்து, தமிழ்நாட்டுப்பாடகர்களை அழைப்பது வழக்கமானபோது, உருவாகியிருக்கலாம். இப்படியாக, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அம்மன் பாடல்களும் இருக்கின்றன. அதேவகையிலே, "கோணேஸ்வரம் எனக்கு இராமேஸ்வரம்" என்ற பாடலுமிருந்தது. நிச்சயமாக, அகதியாகப் படகிலேறி ஓடி "இராமேஸ்வரம் எனக்குக் கோணேஸ்வரம்" என்று பாடும் நிலை வர முன்னாலே வந்த பாடல் இது.

இந்த ஈழத்துப்பாடல்கள் எனப்படும் மெல்லிசைப்பாடல்களை அவை இலங்கை வானொலியிலே தினமும் ஒலிபரப்பாகி நான் கேட்டிருக்கக்கூடிய என் பாடசாலைக்காலத்திலே விரும்பிக்கேட்கும் ஆர்வம் இருக்கவில்லை; அதற்கு அவை ஒலிபரப்பான, காலைச்செய்திக்கும் பொங்கும் பூம்புனலுக்கும் இடைப்பட பதினைந்து நிமிடங்களிலே காலை வகுப்பு-கோயில்-சாப்பாடு-பள்ளிக்கூடம் என்று ஓடும் நிலை இருந்தது மட்டும் காரணமல்ல; எல்லோரையும்போல தமிழ்த்திரைப்படப்பாடல்களின்மீது ஆர்வம் கவிந்திருந்ததுதான் முக்கியமாகும். ஆனால், இலங்கைப்பாடல்கள், ஒரு காலகட்டத்திலே வானொலியிலும் மக்களிடையேயும் இளையராஜாவினை ஒற்றியெடுத்த மோஹன்ராஜ்-ரங்கன் போன்ற இளம் இலங்கை இசையமைப்பாளர்களினாலே (மோஹன்ராஜின் தந்தை முத்துச்சாமி, முதன்முதலிலே, திருவனந்தபுரத்துக்கு அருகிலேயிருந்து, இலங்கையின் முதற்படத்துக்கு இசையமைப்பதிலே உதவ வந்து, இலங்கையிலேயே தங்கி இசையமைப்பாளர் ஆகிவிட்டவர். வி. பி. கணேசனின் படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர் என நினைக்கிறேன்) முழுக்க முழுக்கத் கோடம்பாக்கத்திரைப்படப்பாடல்களின் பதிவாகப் போனப்பிறகு, பழைய ஈழத்துப்பாடல்களிலே எண்பதின் பிற்பகுதியிலே ஒரு பிடித்தமுருவானது. சிலவேளை கடந்த காலத்திற்குரியதைப் பிடித்துக்கொள்வதால், அந்தக்காலத்தினை இரைமீட்டக்கூடிய ஓர் உளப்பாங்குதான் இதன் காரணமோ தெரியாது.

ஆனால், இப்பாடல்களிலே ஈடுபாடு உண்டான காலத்திலே அவற்றினைக் கேட்பதிலே சிக்கலுமிருந்தது; இப்படியாகப் பிடித்துப்போன, ஈழத்துப்பாடல்களை ஓர் இசைநாடாவாகவோ அல்லது இசைவட்டாகவோ பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒன்று இப்பாடல்கள் வானொலியிலே ஒலிபரப்பாகும்போது, ஒலிநாடாவிலே பதியவேண்டும்; அல்லது, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே யாரிடமாவது தொகுதியாகப் பெறவேண்டும். முதலாவது முறைப்படி, பாடலைப் பதியும்போது, பதிவுற்றதிலே விரும்பின பாடலைவிட மீதி அத்தனை சுற்றுப்புறச்சத்தங்களும் பதிந்ததால், வெறுத்துப்போனது; இரண்டாவது முறையிலே பெற வானொலிக்கூட்டுத்தாபனத்துக்குப் போனால், நாடிருந்த நிலையிலே வெலிக்கடை, பூஸா இராணுவமுகாங்களிலே கொண்டுபோய் அடைக்கப்படுவதுதான் குறைந்தபட்சத்தண்டனையாக இருக்கலாம் என்னுமாப்போன்ற நிலையிருந்தது.. ஆகவே, விரும்பிய பாடல்கள் கைவரப்பட முடியவில்லை. (இப்போது, இணையத்திலேகூட இவற்றிலே ஒரு பாடலையுங்கூடக் காணமுடியவில்லை.)

என்னைப் பொறுத்தமட்டிலே, ஈழத்துப்பாடல்கள் திருகோணமலையின் பரமேஸ்-கோணேஸ் சகோதரர்களுடன் ஆரம்பமாகின்றது. 1974 இலோ 1975 இலோ இவர்கள் தமது பாடல்களை ஒரு பாட்டுப்புத்தகமாக பெரிய அளவிலே வெளியிட்டார்கள்; ஆண்டு சரியாக ஞாபகமில்லை. இலங்கையின் துள்ளிசைப்பாடல்களும் அப்படியாக பாடற்புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரைப்படப்பாடற்புத்தங்கள் போல ஒரு படத்தின் பாடல்களும் அப்படக்காட்சிகள் அட்டையிலும் திரைக்கதைச்சுருக்கமும் "மீதி வெள்ளைத்திரையிலே காண்க" தொக்குநிற்றலுமில்லாமல், ஒரு தொகுப்பாக வந்திருந்தது. இதை எங்கள் வீதியும் + பரமேஸ்-கோணேஸ் ஆகியோரின் வீட்டுவீதியும் சந்திக்குமிடத்திலே அப்போதிருந்த வாணி புத்தகசாலையிலே காசு அங்குமிங்குமாகச் சேர்த்து வாங்கியிருந்தேன். பொதுவாக, பெண் குரலுக்கு, கோணேஸின் மனைவி, மாலினிதான் குரல் கொடுப்பாரென்று ஞாபகம். ஆனால், 1977~1979 இலே பரமேஸ்-கோணேஸ் இருவருக்கிடையிலும் பிளவு ஏற்பட்டு, அப்படியே இருவரும் வேறு வேறு திசைகளிலே போய்விட்டார்கள். நாங்கள் ஒரு நாள் தனியார் வகுப்பு முடிந்து வரும்போது, இசைக்கருவிகள் உடைபட்டு அவர்கள் வீட்டுவாசலிலே இருக்க, சண்டை நிகழ்வதைக் கண்டோம். அநியாயமான பிளவு அது. தற்போது, பரமேஸ் எங்கிருக்கின்றாரென்று தெரியவில்லை. ஆனால், கோணேஸ், கனடாவின் ITBC வானொலியினை நடத்திக்கொண்டிருப்பதாக இணையத்தினூடாக வாசித்தேன். பின்னால், இவர்களுடனிருந்த பஞ்சாட்சரம் போன்றோர் திருகோணமலையிலே மெல்லிசைக்குழுக்களை நடத்திக்கொண்டிருந்தாலுங்கூட, இவர்களினைப் போல, சுயமும் திறமையும் கொண்டிருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இக்காலகட்டத்திலே இக்குழுக்களிலே ரோபல் ராகல், தற்போது பொஸ்ரனிலே வதியும் லோகேஸ்வரன் போன்றோர் மெல்லிசைப்பாடகர்களாகவும் இருந்தார்கள்.

பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் பாடல்கள், தமிழ்நாட்டின் ஏ. எம். ராஜா, ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் முணுமுணுக்கும் குரல்களின் பாணியை ஒத்தும் சற்றே துள்ளிசைப்பாடல்களின் வேரினைக்கொண்டும் அமைந்த பாடல்களெனச் சொல்லலாம். துள்ளிசைப்பாடல்களின் ஆரம்பகாலச்சாயல் எனும்போது, பைலா வகையான பாடற்சாயல் கொண்டவை அல்ல; பைலா பாடல்களின் தாக்கமில்லாதவை என்றே கேட்கும்போது தோன்றுகிறது.

இவர்களின் பாடல்கள் என நான் எண்ணிக்கொண்ட பாடல்கள் (சிலவறறினை நிச்சயமாக இவர்களுடையதா எனச் சொல்லமுடியவில்லை)

1. உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது?
2. தங்கமேனி கன்னம் தாமரைப்பூ
3. என் ராஜா இது நியாயந்தானா? (தேனாடும் பூவில் தானாடும் வண்டு)
4. அழைக்கும் ஓசை கேக்கவில்லையா?
5. நீ வாழுமிடமெங்கே? எந்தன் பார்வை விழும் அங்கே
6. முத்துக்கிண்ணக் கன்னத்திமேல் பத்துப்பத்து முத்தங்கள்
7. நீ இன்றி நிலவு ஏன் வந்ததிங்கு?
8. பாடல் எனக்கிது முதற்றரந்தான்
9. போகாதே தூரப் போகாதே; தாங்காதே நெஞ்சம் தாங்காதே
10. சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம்
11. அன்று தேடினேன்; இன்று பாடினேன்
12. மனமாளிகை ரோஜா! மணம் வீசுது இலேசா
13. கொஞ்சிக்கூவும் சிட்டே என் சேதி சொல்வாயோ?
14. நெஞ்சைத் தொட்டுப் பேச வந்த கொஞ்சும் பாவையே
15. தக்காளிப்பழத்துக்கும் தளதள உடம்புக்கும் வித்தியாசம் இல்லையடி பாப்பா (??)
16. எழுதுகிறேன் பாட்டு; இனிய தமிழ் கேட்டு

பாடல்களை நேரே கேட்கின் இசையாது. பாடல்களைக் கேட்க, cybersist தளத்திலே சென்று, பயனர் பெயர் & கடவுசொல்லை சேர்த்து அங்கத்துவம் பெற்றுக்கொள்ளுங்கள். Groups இன் கீழே eelaththuppaadal குழுவிலே சேர்ந்துகொண்டால், Files பகுதியிலே இவற்றினைக் கீழிறக்கிக் கொள்ளலாம். கொஞ்சம் சுற்றி வளைத்த வேலைதான். ஆனாலும் வேறு வழி தோன்றவில்லை:( மன்னிக்கவேண்டும்

* இங்கே பரமேஸ்-கோணேஸின் பாடல்களுக்கு இணைப்பினைத் தந்திருப்பது, அவர்களின் திறமையும் சுயமும் ஈழத்துத்தமிழிசையிலே அவர்களுக்கான இடமும் பெரிதும் தெரியாமலே போய்விட்டது என்பதற்காக, அவர்களினைப் பற்றிய பதிவினை முழுமையடையச் செய்வதற்காகமட்டுமே. இப்பாடல்கள், தற்சமயம் இசைத்தட்டுகளிலே கிடைக்கின்றனவா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவ்வாறு அவை அவற்றின் பாடலுரிமை பெற்றோரினாலே விற்பனைக்கு இப்போது கிடைக்குமென்பது தெரியவரின், இப்பாடல்களை இணையத்திலிருந்து உடனடியே நீக்கி விடுவேன். கூடவே, அவை அவ்வாறு கிடைப்பின், அவ்விசைத்தட்டு குறித்த விபரம் தருகின்றவர்களுக்கும் நன்றியுடையோனாவேன்.

'05 மே 25, புத. 03:54

22 comments:

Balaji-paari said...

பாடல்கள் இசைக்கவில்லை..:(

வசந்தன் said...

//பரமேஸ்-கோணேஸ் இருவருக்கிடையிலும் பிளவு ஏற்பட்டு, அப்படியே இருவரும் வேறு வேறு திசைகளிலே போய்விட்டார்கள்.//

இது இசைக்கலைஞர்களின் குணமோ?

-/பெயரிலி. said...

பாரி, நேரே சொடுக்கின் இசையாது.
"Save Target as" இனூடாகக் உங்கள் வன்றகட்டிலே mp3 வடிவிலே கீழிறக்கிக்கொண்டு பின்னாலே கேட்கலாம்.

மதி கந்தசாமி (Mathy) said...

nope! it's not working ramani.

-/பெயரிலி. said...

பாரி, நேரே கேட்கின் இசையாது. அதை பாடல்களை ஏற்றுவதிலே நான் கவனிக்கவில்லை.
cybersist தளத்திலே சென்று, ஓர் அங்கத்துவராகச் சேர்ந்து கொள்ளுங்கள். (சும்மாதான்; பயனர் பெயர் & கடவுசொல்லைப் பெற்றுக்கொள்ளுங்கள்) Groups இன் கீழே eelaththuppaadal குழுவிலே சேர்ந்துகொண்டால், Files பகுதியிலே இவற்றினைக் கீழிறக்கிக் கொள்ளலாம்.

கொஞ்சம் சுற்றி வளைத்த வேலைதான். ஆனாலும் வேறு வழி தோன்றவில்லை. :-(

Venkat said...

ரமணி - அலுவலகத்திலிருந்து எழுதுகிறேன். பாடலை இறக்கிக் கேட்க முடியாது. தரவிறக்க முயற்சித்துவிட்டு பின்னர் எழுதுகிறேன்.

அற்புதமான குறிப்பு. உங்களுக்கு நான் பெரிதும் நன்றியுடையவன். பாடல்களைக் கேட்டுவிட்டு வருகிறேன்.

Haranprasanna said...

//அதற்கு அவை ஒலிபரப்பான, காலைச்செய்திக்கும் பொங்கும் பூம்புனலுக்கும் இடைப்பட பதினைந்து நிமிடங்களிலே ...//

இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனலையும் அதன் இசையையும் அதற்குப் பின்னர் பத்து மணி வரையில் வரும் நிகழ்ச்சிகளையும் என் சிறுவயதிலிருந்து தவறாமல் கேட்டிருக்கிறேன். இலங்கை நிகழ்ச்சிகளை வைத்தே வீட்டில் நேரம் இன்னது எனத் தெரிந்துகொள்வோம். வாழ்க்கையில் மறக்கமுடியாதவை அவை. என்ன ஆயிற்று அந்த வானொலி நிலையம்? குண்டு வீசி அழிக்கப்பட்டதாகவும் இனி கண்டெடுக்க முடியாத சில திரைப்பாடல்களின் ஆவணங்கள் அழிந்ததாகவும் அறிந்தேன். இது பற்றித் தகவல்கள் தெரிந்தால் சொல்லவும். இதுபோக இன்னொரு கேள்வியும். முன்பெல்லாம் இலங்கை நேரமும் இந்திய நேரமும் ஒரே நேரமாக இருந்தது. பின்னர் இலங்கையின் நேரம் அரை மணிநேரம் முன்னாகிப் போனது. இது ஏன்? நினைத்தால் மற்றிக்கொள்ள இது சாத்தியமா? இது பற்றித் தெரிந்தாலும் சொல்லவும்.

நல்ல பதிவு. பாடல்களைக் கேட்கவேண்டும்.

பெயரிலிக்குக் கையெழுத்து. என்னமோ போங்க.:)

அன்புடன்
ஹரன்பிரசன்னா

கொழுவி said...

96 இல் இலங்கையில் கடும் மின்சார நெருக்கடி வந்த போது மின் சக்தி சேமிப்பிற்காக 1 மணித்தியாலத்தினை முன்னோக்கினார்கள்.

பின்னர் அதனை அரை மணித்தியாலம் பின்னகர்த்தினார்கள்.

இப்போது இந்திய நேரத்தை விட இலங்கையில் அரை மணி நேரம் முன்னோக்கி இருக்கும்.

ஆயினும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இன்னமும் பழைய அதாவது இந்திய நேரம் தான்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசின் நேரடி நிர்வாகமும் விடுதலைப் புலிகளின் நிழல் நிர்வாகமும் இருப்பதனால்.. இன்னமும் அங்கே நேரம் ஒரு முடிவுக்க வரவில்லை. வீடுகளில் பழைய நேரமும் அலுவலகங்களில் புதிய நேரமும் கடைப்பிடிக்க படுகிறது.

இன்னமும் யாழ்ப்பாணத்தில் உள்ள எவரிடமும் நான் நானை 8 மணிக்கு உன்னை சந்திக்கிறேன் என்று சொன்னால்.. எப்ப பழைய நேரமா இல்லது புதிய நேரமா என்று கேட்பார்கள்.

இதையே சிலர் பகிடியாக.. பிரபாகரன் நேரம்.. சந்திரிகா நேரம் என்றும் சொல்வார்கள்.

வசந்தன்(Vasanthan) said...

ம்.
இலங்கை நேரப்பிரச்சினை சுவாரசியமானது. (எல்லாம் எங்கட நேரம்தான்:-((


யாழ்ப்பாணத்தில அம்மா நேரம், ஐயா நேரம் எண்டும் சொல்லுவினம். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நுளையும் போதே நீங்கள் நேரத்தை மாற்றிவிட வேண்டும்.

ரத்வத்த ஐயா செய்த ஒரு நல்ல வேலை இந்த நேர மாற்றம். (அப்போதைய நிலையில்).

நிற்க, பொங்கும் பூம்புனலின் இசைக்கோர்வை நினைவு தெரிந்த நாளிலிருந்து நாம் கேட்டு வருவது. தனியார் வானொலிகளின் ஆதிக்கத்துக்குள்ளும் நின்றுபிடிக்கிறது இலங்கைவானொலியின் வர்த்தகசேவை.

பத்மா அர்விந்த் said...

பொங்கும் பூம்புனல் என்று சிறுவயதில் கேட்டவற்றை நினைவு படுத்தி விடீர்கள். அருமை. உங்களிடம் சில பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளதா? சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே போன்ற பாடல்கள். இருப்பின் அவற்றின் இணைப்பயும் தரவும்.
நன்றிகள்

-/பெயரிலி. said...

பிரசன்னா, தகர்க்கப்பட்டவை, கொக்கிளாய், மண்டைதீவு என்ற இரண்டு வானொலி மேற்காவி நிலையங்களே (rely stations). மிகுதிப்படி, மூலமாக இருந்து ஒலிபரப்பும் கொழும்பிலே உள்ள வானொலி நிலையம் பிரச்சனையில்லாமலே இருக்கின்றது. 83 கலவரத்திலே அழிந்துபோனது, பல இலங்கைத்திரைப்படங்கள் (சில ஈழத்துத்திரைப்படங்களின் மூலப்படிகள் இருந்த) ஒரு தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளரோடு சம்பந்தப்பட்ட களஞ்சியமே. :-(

தேன்துளி, நீங்கள் சின்னமாமியே இனை (அதன் பழைய பாங்கிலும் புதியபாங்கிலும்) தமிழமுதம் தளத்திலே கேட்கலாம். ஏ. ஈ. மனோகரன் பிற்காலத்திலே தன் மூலப்பாடல்களை மாற்றிப் பாடியதுபோலவே, நித்தி கனகரத்தினமும் இசை மாற்றி, "மொழி மாற்றி"ப் பாடி வயித்தெரிச்சலைக் கிளப்புகிற மாதிரியாக புதிய பாங்கிலே இருக்கும் பாடல்கள் இருக்கின்றன. :-(

டிசே தமிழன் said...
This comment has been removed by a blog administrator.
டிசே தமிழன் said...

பெயரிலி, நல்ல பதிவு.
கோணேஸ் இங்கையும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பெரிதாக் வெளித்திடல்களில் நடந்த சில நிகழ்வுகளுக்கும் இசையமைத்ததாய் நினைவு. அவர் இசையமைத்த பாடல்கள் இங்கே இசைத்தட்டாய் வந்ததா என்று சரியாகத் தெரியவில்லை.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

ரமணி
you made my day. பரமேஸ் கோனேஷ் பற்றி ஒருமுறை சந்திரவதனா பதிவில் கேட்டேன். இப்போது தெரிகிறது உங்க ஊர் ஆட்கள் என்று. பொங்கும் பூம்புனல் கேட்டு ஆடித்திரிந்தது ஒரு காலம். மிக்க நன்றி -அருள்

-/பெயரிலி. said...

எம். பி. பரமேஸ் பாடிய இரு பாடல்கள் தமிழமுதம் தளத்திலும் இருக்கின்றன. ஆனால், இவை பைலா மெட்டிலே இருப்பவை

Haranprasanna said...

//மிகுதிப்படி, மூலமாக இருந்து ஒலிபரப்பும் கொழும்பிலே உள்ள வானொலி நிலையம் பிரச்சனையில்லாமலே இருக்கின்றது//

இப்போதும் ஒலிபரப்பு தொடர்கின்றதா? விவரங்கள் வேண்டும். கண்டிப்பாக அறியத் தரவும். :-)

அன்புடன்
பிரசன்னா

-/பெயரிலி. said...

அருள், நல்லது.
பிரசன்னா, இலங்கை வானொலியின் தளம் இணையத்திலே உள்ளது. நிகழ்ச்சிகள் இப்போது எவ்வாறு நடக்கின்றன என்று தெரியவில்லை. கேட்டு நெடுங்காலம்.

மேற்கூறிய பாடல்களை eelaththuppaadal குழுமத்திலே இறக்குவதிலே இருக்கும் நேரச்சிக்கலை உணர முடிகின்றது. அதனாலே, ஈழத்துப்பாடல் குழுமத்திலே எவரும் இறக்கிக் கொள்ளும்முகமாக ஒரு கணக்கினைத் திறந்திருக்கின்றேன்.

Memeber Log In இலே
User name: eelamsongs
Password: tamil
என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள். நேரடியாக, Files இலிருந்து பாடல்களை இறக்கிக்கொள்ள முடியும்.

newsintamil said...

இலங்கை வானொலி குறித்த பழைய நினைவுகளை மீட்டி விட்டது உங்க பதிவு. அன்று எங்களுக்கு கேட்ட மாதிரியான ஒலித் தெளிவு இப்போதைய இலங்கை வானொலிக்கு இல்லை. அப்போதெல்லாம் எல்லா நாட்களும் காலையும் மாலையும் ஞாயிறன்று பகல் முழுவதும் வானொலியோடுதான் பொழுது போகும். மெல்லிசைப் பாடல்களும் துள்ளிசைப் பாடல்களும் கூட பிடிக்கும். அறிவிப்பாளர்களில் அப்துல்ஹமீதையும் பிடிக்கும் என்றாலும் கே. எஸ். ராஜாவின் ரசிகர்கள் நாங்கள். அது ஒரு கனாக்காலம்!

பெயரிலி! உங்க டெம்ளேட் அகலத்தைக் கொஞ்சம் குறைப்பது எங்க கண்களுக்கு நல்லது...

அப்புறம்... http://akaravalai.blogspot.com/2005/05/520.html ? உங்கள் பெயரை கொஞ்சம் வம்புக்கிழுத்தததால் இந்தச்சுட்டி!

-/பெயரிலி. said...

/உங்க டெம்ளேட் அகலத்தைக் கொஞ்சம் குறைப்பது எங்க கண்களுக்கு நல்லது/
குழப்பமாக இருக்கிறதே; ஆனால், பிரகாஷ்கூட, எழுத்து பெரிதாக இருக்கின்றதென்று ஒரு முறை சொன்னார். நானும் நாலைந்து கணணிகளிலே சோதித்துப்பார்த்தேன். பிரச்சனையேதும் தெரியவில்லை. காண்திரை கொஞ்சம் சிறிதானதிலே பக்கம் முழுவதும் ஒரே திரைக்குள் அடங்காத சிக்கலிருக்கமுடியுமென்று தோன்றுகிறது. மீதிப்படி என்ன பிழையென்று தெரியவில்லை.

என் வாக்கும் கே. எஸ். ராஜாவின் ஒலிபரப்புத்திறனுக்குத்தான். அப்துல் ஹமீதிடம் இருந்தது வேறு வகையான ஆற்றல், தொழில்நுணுக்கமும் பேசும் விடயத்திலே அறிவும். ஆனால், கவர்ந்திழுக்கும் குரலுக்கு ராஜா ராஜாதான்.

பெயரிலி-அநாமிகா-அநாமதேயம் எல்லாம் அன்றைக்கே பார்த்துவிட்டேன். ;-)

newsintamil said...

// காண்திரை கொஞ்சம் சிறிதானதிலே பக்கம் முழுவதும் ஒரே திரைக்குள் அடங்காத சிக்கலிருக்கமுடியுமென்று தோன்றுகிறது//

அதே தான். 14" திரையில் முழு அகலமும் அடங்கவில்லை. பெரிய திரையானால் கூட நீளமாக கண்களை ஓடவிட்டுப் படிப்பது சிரமம்தானே!
பத்தி அகலத்தை சற்று குறுக்குவது வாசிக்க வசதியாக இருக்கும்.

icarus prakash said...

எனக்குக் கூட அனுராக்கின் நிலைமைதான். ஆனால், சில சமயங்களில் படிக்காமல், தவிர்த்து விடுவதற்கு legitimate காரணம் தேவைப்படும் ["ட்ரிங் ட்ரிங்... அல்லோவ்... நான் தான் ----- பேசறேன். -----ஐ படிச்சீங்களா?" " அயோ... ஒரே கடி....மௌஸை லெ·ப்ட்டுக்கும் ரைட்டுக்கும் தள்ளி கண்ணு வலி வருது... அதான் படிக்கலே.. ஏன் எதுனாச்சும் விசேசமா?"] . அதனாலே customer service க்கு புகார் கொடுக்காமல் விட்டுட்டேன். இடப்பக்க மூசியை/வலப்பக்கம் தள்ளித் தள்ளி/விரல்கள் வலிக்கின்றன/அய்யா நாளையேனும்/ ரிப்பேர் செய் ன்னு குமாரபாலர் பாணி கவிதை எழுதி அனுப்பலாம் என்று யோசனை இருந்தது. உங்க நல்ல நேரம்....

-/பெயரிலி. said...

நேரம் கிடைக்கும்போது, சிறிதாக்கிவிடுகிறேன்.