Saturday, October 17, 2015

கலக்கப்போவது யாரு?

கோடம்பாக்கநடிகர்சங்கத்தேர்தலிலே இருபக்கத்தாரினதும் விழியங்களை உயூரியூப்பிலே இன்று தொடர்ந்து பார்த்தேன். 

தமிழ்ப்படங்களிலே கதாநாயகனின் தொந்தி, கதாநாயகியின் புடவைக்கட்டு, அப்பா பாத்திரத்தின் அரைப்பூசணிக்காய்த்தலை, அடைப்படைக்கதை லொஜிக் என்ற இறங்குவரிசையிலே எது சரிந்தாலும், எப்போதுமே நகைச்சுவை சரிவதேயில்லை என்பது பேஸ்புக் மீமீக்களிலேயே வழக்கமாக நமக்குத் தெட்டத்தெளிவு. இந்நடிகர்சங்கத்தின் தேர்தற்போட்டிப்பேச்சு, "எங்களுடன் நின்று கட்டிடம் கட்டினாயா? கிரிக்கெட் விளையாடினாயா? மாமனா? மச்சானா? உனக்கு எதற்கு வேண்டும் நாங்களே இன்றுவரை கண்டுகொள்ளாத நாடகநடிகர் வாக்கு? பாதுகாப்பு?" வகை அனல் பறக்கும் புனல் பொங்கும் விழியங்களிலே விழுந்து செவியிற் கலப்பது தமிழ்த்திரைப்படங்களின் உணர்வில் நிலைத்த நகைச்சுவைத்தரத்தினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

ஆனால்,இந்த ரியலிட்டி ஸோவிலே அடியோடி ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தமுறுஞ்சும் அட்டைகளாய் உறுத்திக்கொண்டிருப்பவை நிறைய இருக்கின்றன; கதாநாயகர்-நாயகி, நகைச்சுவை நடிகர்-நடிகை, வில்லர்-வில்லி, துணைநடிகர்-நடிகை, தொலைந்துபோனநடிகர், திடீரென நடிகராகத் தோன்றும் மனிதர் அத்தனை பேரும் அவர்கள் நடிக்கும் படவில்லர்களாகவே சொல்லுக்குச் சொல் பேசுகின்றார்கள்; தோன்றுகின்றார்கள். இத்தனை சாதியாக, பிரதேசமாக, மதமாக, "ஒண்டிக்கொண்டி ஆம்பிளையோடு மோதுடா; பொம்பளைகளோட மோதாதடா" ஆளுகளாய் வெளிவந்தவர்கள் அடுத்தடுத்த படங்களிலே எப்படியாக முகங்களை இத்தனையையும் எதிர்க்கும் ஆட்களாக அரிதாரத்தின் பின்னாலும் கேக்கின் பின்னாலும் மூடிமறைத்து வேஷம் கட்டப்போகின்றார்கள் என்பதுதான் வியப்பாகவிருக்கின்றது. இத்தனைக்குப் பின்னும் நம்பிக் காசையும் கட் அவுட்டையும் பாலையும் கோயிலையும் அங்கப்ப்ரதட்சணத்தையும் செய்யும் விசிறிகளின் பனைமட்டைவிசுவாசத்தின்மீது இவர்களுக்கு அத்தனை நம்பிக்கையிருக்கின்றதுமட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

"நடிகர் சங்கக்கட்டடத்தைக் காணோம்" வடிவேலு நகைச்சுவையை இன்னமும் எடுத்து விட்டாலும், அஃது அதைவிடவும் ஆழமாக ஷியாம் பெனகலின் Well Done Abba கிணற்றுக்கதையாக ஆகிவிடுகின்றது. ஆளுக்காள், "கட்டிடத்தைக் காணோம்" என்பதும் "அந்தக்கட்டடம்தாங்க இந்தக்கட்டடம்" என்று வாழைப்படக்கதை சொல்வதும் கட்டித்தருவோம் என்பதும் கோடி உழைக்கின்றவர்கள் "வியர்வை சிந்தி நடித்துக் கடன் அடைக்க ஆயிரம் தருவோம்" என்பதும் "நைஜீரியன் இளவரசியின் சொந்தாக ஆபிரிக்க வங்கியொன்றிலே இருக்கும் ஐநூறு மில்லியனை எடுக்க, நூறு டொலர் அனுப்பி உதவினால், ஐநூறு மில்லியன் கைக்குவந்ததும் ஐந்துவீதம் உங்களுக்கு" என்ற அளவுக்குக் கீச்சுக்கீச்சு மூட்டுகின்றது.

இவ்வகையிலே பார்த்தால், இவர்கள் அன்றைக்குப் படம் பார்க்கக்கொடுத்த காசுக்கு இன்றைக்காச்சும் நடிக்கின்றார்கள். ஆனால், நடிக்கவே வராத புலி, வேதாளம் வி..லா...ங்குகள்; மேடைக்கே வராமல் இன்னமும் வழுக்கிக்கொண்டே ஓடுகிறன. 

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை! நாளாந்த சூழ்நிலையிலே இருக்கின்ற அழுத்தத்தினைக் குறைத்துச் சிரிக்க உதவுகின்றதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், திருட்டுவிழியமாக ஏற்றப்படாமலே, ஆலிவுட்டு, ஈரான்புட்டு, கொரியன் உட்டு என்று ஆரும் காணாத நேரத்திலே அரைக்கிலோ கதை, காட்சி மூலத்திலிருந்து அள்ளிப்போடாமல், இலவசமாக இப்படியோர் அசல் கதைவசனம் இயக்கத்திலே வாரநீள அனைத்துநடிகர் சீரியல், பான்கேக்,, தோசை கணமும் மொறுமொறுவென்று எண்ணெய் ஒழுக ஒட்டத் தொய்யாமலே தருவது இன்னும் இரண்டு நாட்களிலே இல்லாமலே போகப்போகின்றது என்பதிலே மிகவும் வருத்தமே!. 

ஆனாலும், அதுவரை கண்டு க..............ழி........ப்போமே!

பிகு: அஹேம்! எல்லாம் அந்த ஶ்ரீலங்கா தமிழருக்காக ஆறுமணிநேர அரிதார உண்ணாவிரதம் இருக்கப்போகையிலே கண்ட காணாமற்போன கட்டடப்பிரச்சனைதான் என்பது நினைவிருக்கட்டும். ஆக்காங்! அப்பப்ப அப்படியொரு சிரங்கு, படைப்பிரச்சனை இருந்ததை ஞாபகம் கொள்றோம்பா! விஷால் ரொட்டி சார், கருணாஸ் டேவர் ஸார், சரத்குமார் நடுவார் ஸார், ராதாரவி நாய்த்ரீ ஸார், கார்த்தி கவுண்ட் ஸார், நாஸர் காக்கா ஸார், ஆர்ய சேகர் ஸார், மன்சூரு வென்னீரு ஸார், ஊர்வசி சாட்சி மேடம் அப்புடியே ஒங்களோட இம்மாம்பெர்ய ப்ராப்ளத்தை வெறும் நொறுக்கு அம்மாமி அப்ளாமாய் ரெண்டு விசிட்டுல நொருக்கி அமுக்கிவிட நீங்கள் நாடவேண்டிய ஒரேயொரு நம்பிக்கைக்குரிய வேறெங்கும் கிளைகளில்லாத் தனியாள் ஸ்தாபனம் எங்கடை அப்புக்காத்து சுமந்தி.... .:-)

Wednesday, October 14, 2015

அரிவாளாதிருப்பாரின் அறிக்கை

கிளிநொச்சி பிடிக்கப்பட்டவுடன், முதலிலே இராணுவமும் ஶ்ரீலங்கா அரசும் உலங்குவானூர்தியிலே கொண்டு சென்று காட்டி முதலிலே வெற்றிக்கட்டுரை எழுத வைத்த பத்திரிகை த ஹிண்டு. அதன் ஆசிரியர் நரசிம்மன் ராம் ஶ்ரீலங்காவுக்கான சேவைக்காக லங்கா ரத்னா வழங்கப்பட்ட மிகச்சிலரான வெளிநாட்டினரில் ஒருவர். சைவ உணவுகள் மட்டுமே சமைக்க வலியுறுத்தப்படும் உணவகத்தைக் கொண்ட பத்திரிகைநிறுவனத்திலே அடிப்படையிலே திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை ஆதரிக்கும் வண்ணமே தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வரைகிற கம்யூனிஸ்டு தோழர்.

ராஜபக்ச சகோதரர்களுக்குக் 'கௌரவ கலாநிதி' பட்டங்கள் கொடுத்த கொழும்புப்பல்கலைக்கழகத்தையே திரும்ப அவற்றைக் கொலைக்குற்றங்களின் பேரிலே பெற்றுக்கொள்ள முன்னர் கலாநிதிப்பட்டத்துக்குப் பிரேரித்த பேராசிரியர்தான் ஓய்வுபெற்றபின்னர் வெளிப்படையாகக் கொழும்பு ரெலிக்ராப்பிலே கேட்டு எழுதுகிறார்.

உலகநாடுகள் தத்தம் அரசியலுக்காக முன்னுக்குப் பின் மசுந்தினாலும், ஒப்பீட்டளவிலே பெருங்கொலைகள் இலங்கையிலே ஶ்ரீலங்கா அரசினாலே நடத்தப்பட்டதை ஒத்துக்கொண்டிருக்கின்றன; குறைந்தளவு, "உள்நாட்டிலாவது ஒப்புக்கு விசாரணை வை" என்றாவது சொல்கிறார்கள்.

இப்படியான நிலையிலே ஒரு நேர்மையான பத்திரிகையாளர் என்றால், லங்கா ரத்னாவை என். ராம் இந்தியாவின் படைப்பாளிகள் சிலர் தேசியவிருதுகளைக் குற்றம் கடிந்து திருப்பிக்கொடுத்ததுபோல ஶ்ரீலங்கா அரசுக்குத் திருப்பிக்கொடுத்திருக்கவேண்டாமா? கொடுக்கவில்லை; கொடுக்கக்கூடியளவு கொடுக்கிருக்கின்றதாகவும் தெரியவில்லை.

அந்நிலையிலே அவர் சார்ந்த அரசியற்கட்சியினைச் சேர்ந்த தமுஎகச தமிழ்ச்செல்வன் போன்றோர் சூடு சுரணையோடும் இதயசுத்தியோடும் விருது, எருது, கதிரு, குதிரு, அரிவாளு, சம்மட்டி எல்லாம் திருப்பிக்கொடுப்பார்கள் என்று நம் பேஸ்புக் நண்பர்கள் என்று எதிர்பார்ப்பதைப் பரிதாபமாகப் பார்க்காமல் வேறென்ன செய்வது?

கட்சிக்கம்யூனிசம் என்றாலே வெறும் கார்ல் மார்க்ஸ் கட்டுரைவரைதல்தாம் காண்! நடிகர் சங்கத்தேர்தலிலே நிற்கவேண்டியவர்களெல்லாம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே பதவிகளிலே நின்று காற்றிலே கைவீசிக் கறுப்பு, அறுப்பு அறிக்கைவிடுகின்றார்கள்.

இப்படியாக, பிழைப்புக்கு அரிவாளையும் சம்மட்டியையும் காட்டுகிறவர்களை, பெருங்கொலைகளை மேடைகளிலே கொட்டின இரத்தம் உறையமுன்னரே கிண்டல் செய்தவர்களை, ஒண்டிப்புலிக்கவிதைகளைச் செத்தபுல்மேய விட்டவர்களையெல்லாம் அறிக்கைக்குமேலே அரையங்குலம் நகர்வார்களென வாய்பார்த்து விருதைச் சகமனிதனுக்காக, படைப்பாளிக்காக விட்டெறி என்று எதிர்பார்ப்பதெல்லாம் "சாரி ரொம்ப ஓவர்!"

டேவிற் ஐயா










தென்னைமரத்து

சந்தனமேடை எம் இதயத்திலே (santhanamEdai em ithayaththilE

தண்ணிக் கை சப்பை

ஓர் அரசுசார்ந்த குழு என்பது நடுநிலையான, ஒழுக்கக்கோவையின் அடிபப்டையிலே, தொழில்சார்நெறியுடன் தொழிற்படவேண்டியது.
"போர்க்களத்திலே ஒரு பூ" என்ற படத்தினை எஸ். வி. சேகர் உள்ளடங்கிய தணிக்கைக்குழு "பெண்களுக்கு எதிரான பலர் உள்ளடங்கிய வன்முறை", "தாய்நாட்டுக்கோ அதன் நட்புநாட்டுக்கோ எதிரான கருத்துகள்:" என்பதன் அடிப்படையிலே தடை செய்தது (ஆதாரம்: எஸ். வி. சேகரின் ஊடகங்களுக்கான செவ்வி http://www.tamilwin.com/show-RUmtyJSZSVju2G.html
இயக்குநரின் செவ்வி: https://www.youtube.com/watch?v=H6CZr8ZMX4o ).
அதன் பின்னால், இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் 'போர்க்களத்திலே ஒரு பூ' இயக்குநர் கணேசனுக்குமான முரண்பாடு குடும்பத்தினரின் எதிர்ப்புக்கும் மாறாக கணேசன் படத்தினைத் தந்ததாக வெளிவந்த செய்தியிலிருந்தது.
(ஆதாரம்: https://www.youtube.com/watch?v=UubHl3jb8X0&feature=youtu.be )
இதிலே இரண்டாவது செய்தியை மட்டும் நாராயணமூர்த்தி தன் பேஸ்புக் செய்தியாக இட்டிருந்தார். அதிலே, அப்படத்தினைத் தடைசெய்த தணிக்கைக்குழு உறுப்பினர் எஸ். வி. சேகர் வந்து, என்று கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார். ( ஆதாரம்: https://www.facebook.com/moorthy.n.moo…/…/10153695975977490…{%22tn%22%3A%22R%22 }
ஒரு செய்தியை, தகவலை சட்டரீதியாகச் சம்பந்தப்படாதவர்கள் பகிரங்கமாக விமர்சிப்பது என்பது ஒரு விடயம், சட்டரீதியாக/தொழில்சார் ஒழுக்காற்றின்கீழே செயற்படவேண்டிய ஓர் அதிகாரி வந்து தன் தொழில்சார்ந்த எல்லைக்கு அப்பாலே இறங்கித் தனிப்பட விமர்சிப்பது என்பது வேறு. இரண்டாவது நிலை, சம்பந்தபப்ட்ட பாதிக்கப்பட்டவர் என்று தன்னைக் கருதக்கூடிய பட இயக்குநர் இப்படியான தனிப்பட்ட உணர்வு அடிப்படையிலே பகிரங்கமாக சமூகவலைத்தளங்களிலே கருத்து வெளியிடும் (ஆதாரம்: https://www.facebook.com/sve.shekher/posts/10153194966697496 ) தணிக்கை அதிகாரி அப்படியான தனிப்பட்ட அடிப்படையிலேயே தன்னைத் தடைசெய்ததாகச் சொல்லச் சட்டரீதியான வழக்குத்தாக்குதலுக்கு வழிவகுக்காதா?
தணிக்கைக்குழு அதிகாரிக்கு/உறுப்பினருக்குத் தனிப்பட்டவராகக் கருத்துகள் இருக்கும்; அதை மறுக்கமுடியாது. ஆனால், தனது அரசுக்குழுவின் செயற்பாடு சம்பந்தப்பட்ட சிக்கலிலே, வெளிப்படையாக வந்து, எடுக்கப்பட்ட தீர்வுக்குச் சொல்லப்பட்ட குழுவின் வரைமுறைக்கு அப்பாற்பட்ட கருத்துகளை உணர்வு அடிப்படையிலே பகிர்வது, அவ்வரசுக்குழுவின் நோக்கத்தினையும் செயற்பாடுகளையும் களங்கம் கொண்டவை என்று காட்டுவதாகாதா? இப்படியான உளநிலையிலேயே இத்தணிக்கைக்குழு செயற்பட்டிருக்குமானால், இத்தணிக்கைக்குழுவின் தொழில்சார்நெறி என்ன? இப்படியான செயற்பாடு, தணிக்கைக்குழுவின் இறைமையினைக் கேள்விக்குறிக்காக்காதா?
இயக்குநர் இசைப்பிரியா குடும்பத்துக்கு இழைத்தது சரியா என்பதும் 'போர்க்களத்திலே ஒரு பூ' இந்திய தணிக்கைச்சட்டத்தின்கீழே தடைசெய்யப்படச் சொல்லப்பட்ட காரணங்கள் நியாயமானவைதானா என்பதுவும் அல்ல இத்தாலே பேசப்பட்டவை.
ஒரு தணிக்கைக்குழுவின் தலைவர் சமூகவலைத்தளத்திலே தன் தணிக்கைக்குழு சார்ந்த தீர்ப்புக்குமப்பால், தனிப்பட்ட அளவிலே பாதிக்கப்பட்டதாகத் தன்னைச் சொல்லும் இயக்குநர் குறித்த கருத்துகளைப் பரப்புதல் தொழில்நெறிக்கு முரணானதும் சம்பந்தப்பட்ட தணிக்கைக்குழுவின் இறைமைக்குக் குந்தகம் விளைவிப்பதும் ஆகாதா? இதனையே சம்பந்தப்பட்ட இயக்குநர் சுட்டிக்காட்டி வழக்குத் தொடரவோ, குறைந்தளவு (கருத்துக்கூறிய தணிக்கைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்காத) மாற்றுத்தணிக்கைக்குழுவினைத் தன் படத்தினை மீளப்பரிசீலனை செய்யக்கேட்கவோ வழிவகுக்காதா?

டாக் டர்ர்ர்ர்ர்ர்ர்

தமிழ்த்திரைப்படத்துறைக்கு வக்காலத்து வாங்கும் ஆளாய்க் கடைசியிலே வந்து சேர்ந்திருக்கிறேன். அதன் குறைகளெனப் படுகின்றவற்றைச் சுட்டிக்காட்டும்வேளையிலே அதன் அடிமடியிலே குத்துகின்ற முறையற்றதையும் சுட்டவேண்டியதாகின்றது.

அப்துல் கலாமுக்கு டாக்டர் பட்டம் பெயருக்கு முன்னாலே போட்டு மகிழ்ச்சியடைகின்றவர்கள் எல்லோரும் கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி, விஜய், விஜயகாந்த் இவர்களின் பெயர்களுக்கு முன்னாலே போட்டால்மட்டும் கிண்டல் செய்வது ஏனோ?

அவரவர் அவரவர் துறையிலே சிறப்பினைப் பெற்றால், கௌரவ டாக்டர் பட்டத்தை எவராவது எதற்காவது வழங்கித்தான் தீருவார். இதிலே கலாமுக்கு மட்டும் பயபக்தியோடும் கருணாநிதிக்கும் மற்றோருக்கும் பகிடியோடும் போட்டுப் பார்ப்பது, ஆக, போடுகின்றவர்களின் அரசியலைத்தான் காட்டும்.
அப்துல்கலாமின் கௌரவ முனைவர் பட்டங்கள் எத்தனை அரசியல் சார்ந்து கொடுக்கப்பட்டவை என்பதைக்கூட இவ்விடத்திலே விட்டுவிடலாம். ஆனால், திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட ஐந்து முதலமைச்சர்களைக் கண்டுவிட்ட தமிழ்நாட்டிலே, தமிழ்ப்படம் ஒவ்வொன்றின் வெளியீட்டையும் அதன் பாடல்வெளியீடு, பூஜைபோடுதல் இத்தனையையும் உடனுக்குடன் பெரும்படமாகவும் உரையாடலாகவும் நிகழ்த்திக்காட்டும் அதே கற்றார் சமூகம், ஒரே திரும்பலாக, அடுத்த கணத்திலே திரும்பி, அப்துல் கலாமின் கௌரவ டாக்டர் பட்டத்தை உச்சிமுகர்ந்தும் விஜயகாந்தின் கௌரவடாக்டர் பட்டத்தை எள்ளிநகையாடுவதும் என்ன நிலை?

கௌரவ 'டாக்டர்' பட்டங்களையும் கற்றுப்பெற்ற 'டாக்டர்' பட்டங்களையும் வேறுபடுத்த நாம் முனைவதில்லை. கற்காமலே ஒற்றை அறைக்கடதாசிப்பட்டம் விடும் பாழ்கலைக்கலகங்களிலிருந்து கற்றதாய்ப் பெற்ற டாக்டர் பட்டங்களைப் போட்டுக்கொள்ளும் 'டீ ஸ்வாமி'ஜீக்களைக்கூட அங்கீகரித்துவிடுகின்றோம். ஆனால், பத்துப்பேர் அவனை/அவளை/அவரை ஆய்வு செய்து பல்கலைக்கழகத்திலே 'டாக்டர்' பட்டம் பெற உதவுமளவுக்கு ஒரு நடிகர் பேரிலே இருக்கும் பட்டறிவினை, ஆகர்ஷத்தை வைத்து ஒரு கௌரவப்பட்டம் கொடுத்தால், அதுமட்டும் கிண்டலுக்குரியதாகிவிடுகின்றது.
சிவாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ராதா போன்றோர் மேற்கின் வகுப்பறை/அகடமி சார்ந்த பல்கலைக்கழகக்கல்வியைப் பெறவில்லை என்றபோது, அவர்கள் நாளும் நாடகக்குழுவிலேயே கிடந்து, உழன்று, கற்றவர்கள் என்பதைக் காணும்போது அவர்களின் பெற்ற அறிவும், பட்ட அறிவும் ஒரு பல்கலைககழக 'டாக்டர்' பட்டத்துக்குரிய ஆராய்ச்சிக்கும் மேலானவை; கௌரவ டாக்டர் பட்டத்துக்குரியவை.

நிச்சயமாக, இக்கௌரவ 'டாக்டர்' பட்டத்தைக் கொடுப்பவர்கள் யார், கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பவை ஆளுக்காள் மாறுபடும். இவை எல்லாவற்றையுமே நாம் நடிகர்களைக் கிண்டல் செய்யமுன்னால், எண்ணிக்கொள்ளவேண்டும்.

கனவுகள் மட்டுமே உச்சத்தை எட்ட உதவுமென்ற பார்வையிலேதான் கலாமும் கனவு காணச் சொன்னார்; விஜயின் கதாநாயகனும் கனவு காணச் சொல்கிறான்.

சொந்தமாக இசையமைத்த ராஜேந்தரைக் கிண்டல் செய்து கொண்டு, வேற்றிசைகளிலிருந்து நுள்ளி மெல்ல அள்ளிப்போடும் இசையமைப்பாளர்களுக்காக உருகும் உலகம் நமது. "என்ன இருந்தாலும் படித்தவர்களில்லையா?" ஆன நம்மிடமிருந்து உள்ளுக்கு இன்னும் "மழித்தலும் நீட்டலும் மயிர் ஓயாது விக்கிரமாதித்தன் முதுகுதொங்கு வேதாளமாய் வளர வளர" நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றது.


[பிகு: தனிப்பட்ட அளவிலே 'கலாநிதி' என்பதையே Doctor(ate) என்பதற்கு ஈடான பதமாகத் தமிழிலே பயன்படுத்துகின்றபோதுங்கூட, இவ்விடத்தே இக்குறிப்புக்கான பின்புலத்தினையிட்டு, 'டாக்டர்' என்றே பயன்படுத்தியிருக்கின்றேன்.]