Sunday, June 11, 2023

எண்ணெனப் படும் எழுத்தென்பது

இலக்கியம் என்ற சொல்லே கற்ற மேட்டுக்குடிக்கான தம்மை மேலாராகப் பிரித்துக்காட்டும் புதுத்திரிநூலே! இதற்கு இன, மொழி, பால், சாதி, சமய, நிறபேதமில்லை. வசதிப்படும்போது, போராடுகின்றவர்களின் எழுத்தையும் தனதெனத் தத்தெடுத்துக்கொள்ளும். வாசகர்வட்டம் முதல் இலக்கிய அமைப்பு, புத்தகக்கண்காட்சி ஊடாக விருதுவழங்கல்வரை ஓர் ஒழுங்கமைப்பிலே கோர்த்தியங்கவைக்கப்படும் சிறுபொறிகளின் கூட்டமைப்பாகவே "இலக்கியமேட்டுக்குடி' தனக்கான படிநிலைகளை உறுதிப்படுத்திக்கொண்டியங்கும். இலக்கியக்குடிக்கு எழுத்து ஒரு சமூக அங்கீகாரமேயொழிய, வாழ்நிலைக்கான தத்துவத்தின் வழிப்பட்ட வெளிப்பாடில்லை. அதற்கு, விமர்சனம், விருது, விழா, விற்பனை எல்லாம் துணைக்கோள்களாக சுற்றிச் சுழல மையத்திலே கறங்கும் எந்திரமாகமட்டுமே எழுத்தானது தெரியும்.


தன் அடையாளத்தை முன்வைத்து எழுத்தை, அதிகாரத்தோடு ஒத்தோடிச் சந்தைப்படுத்துகின்றவன்|ள், அறமற்றவன்|ள். உண்மையாகத் தன் வாழ்வின் போக்குக்கும் அதை வழிப்படுத்துவதாகத் தான் நம்பும் தத்துவத்துக்கும் இடையிலே பிரிவோ பிளவோ ஏற்படாதெழுகின்ற நிலைநின்று எழுதுகின்ற ஒருவன்|ஓருத்தியின் சொற்கள்தாம் எழுத்திலே அறத்தின் முடிநிலை; அது விருதையும் விருந்தாளியும் புரவலரையும் புலமையையும் எதிர்பார்த்திருப்பதில்லை. அதனாலேயே, இலக்கியம் என்பது வருவாய்க்கான முழுநேரத்தொழிலென எப்போதுமே ஒப்புக்கொள்ளமுடிவதில்லை; வாழ்வின் நம்பிக்கையான தத்துவத்தோடு வயிற்றுக்கான வருவாயைச் சமரசம் செய்துகொள்ளவேண்டிய எதுவும் அறமான எழுத்தாகமுடியாது.

வாழ்தலுக்கான சொந்த உழைப்பின்றி எழுத்தினையும் தத்துவத்தினையும் இலக்கியமென்று வெளிவிட்டுக்கொண்டிருப்பதையும் அறமென்று ஏற்கமுடியாதிருக்கின்றது. அடுத்த அந்தத்திலே வாழ்க்கைக்கான வருவாய் நிரம்பிய நிலையிலேயிருக்குமொருவர் சமரசத்துக்கான தேவையில்லா நிலையிலே எழுதிக்கொண்டிருப்பதையுங்கூட, அறமென்று சொல்லிவிட முடியாது. இருப்புக்கான கேள்வி எழுகின்ற நிலையிலே கொண்ட கொள்கைக்கு வழுவின்றி இழப்பினையும் எதிர்கொள்கையிலே எழுகிறதுமட்டுமே எழுத்துக்கான அறத்தினைப் புனல்மிதப்பதாய் நிறுவமுடியும்.

எழுத்து என்பது வாழ்வுசார்நிலைப்பாடு என்பதிலும்விட ஆள்சார் அடையாளம் என்று கொள்கின்றவர் உள்ளவரை அண்டா நிறைய அறக்கூழ் காய்ச்சி வடித்தாலுங்கூட, அவர்கொள் விருதும் விருந்தினரும் ஒட்டுண்ணிகளாகத் தொத்திக்கொண்டேயிருப்பார்கள்!

இலக்கியத்தின் அறம் அறமென்று புனைவின் கவினையும் அதிகாரத்தின்வழியினையும் மட்டுமே நிறுவ முயற்சிக்கின்றவர்கள், தம்மிருப்புக்காக இவ்வேமாற்றுக்குத் தொடர்ச்சியாக உதவிக்கொண்டேயிருப்பார்கள்.