Sunday, February 16, 2014

பாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டுகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர்.

எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தமிழ்த்தேசிய இளவல்கள் சிறிமா அரசியற்காலத்திலே நாலாம்மாடியிலே விசாரிக்கப்பட்டோ சிறை சென்றோ வந்தவர்களே! மாவை சேனாதிராஜா இருக்கவேண்டிய இடத்திலே கட்சிக்குள்ளே படிப்பும் பதவியும் அதிகாரப் பின்புலமுமிருந்த சம்பந்தர் தான் எழுபத்தேழிலே தங்கத்துரையைத் தள்ளிவிட்டு திருகோணமலை பாஉ ஆக முன்னுக்கு வந்து நின்றதுபோல விக்கினேஸ்வரன் என்ற தான் சார்ந்த சமூகத்தின் பெரும்பான்மைக்கு ஒட்டாத ஒரு பேர்வழியை மற்றைய பெரும்பான்மைச்சமூகத்தினை முழுநிறைவு செய்ய ஆக்கிவைத்திருக்கின்றார். மாறாக, அதே எழுபத்தேழிலே இராஜதுரை-அமிர்தலிங்கம் இவர்களுக்கிடையேயான தனிப்பட்ட பலப்பரீட்சை, மட்டக்கிளப்பு-யாழ்ப்பாணம் என்பதுபோல கிளப்பிவிடப்பட செல்வநாயகம் இறந்தநிலையிலே, அமிர்தலிங்கம் மட்டக்கிளப்பு இரட்டைத்தொகுதி இரண்டாம் வேட்பாளராக நிறுத்த, பலிக்கடாவாகிப்போனவர் காசி ஆனந்தன். அதன்பிறகும், புலிகளோடு சேர்ந்தவர் என்று தன்னைக் காட்டிக்கொண்டாலுங்கூட, அவருக்கு அங்கே எத்துணை மதிப்பிருந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால், அவரின் சகோதரர் சிவஜெயம் அவ்வியக்கத்திலே 88 இலே மாண்ட ஒருவரென்பதாலே -அவரினைக் கிண்டல் செய்யும் மாமா, மச்சான், மனைவியின் அப்பா சகவாசத்தாலே தி(ருக்குவளை) மு(த்துவேல்) (ருணாநிதி) அண்மை வாய்த்த வட்டங்கள், பெருவட்டங்கள் இவர்களைவிட,- அம்மனிதர் நிறைய இழந்திருக்கின்றார். குறைந்தளவு மூன்றாண்டு இயக்கத்திலேயிருந்தேன் என்று கதைகவிதைகட்டுரைபண்ணிக்கொண்டே முப்பதாண்டுகள் அதைவிற்றே வாழ்க்கையை அவர் ஓட்டிக்கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பிரதேசவாதம்|சாதியம் இவற்றை முதல் பண்ணி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும், மறைமுகமாக எத்தனையோ பேரழிவு உட்பட்ட அடக்குமுறைகளை, தாம் சார்ந்த கட்சிக்காக, "குரூப்"புக்காக நியாயப்படுத்திக்கொண்டோ பேசிக்கொண்டே, "புரட்சி(யும்) நடத்துகின்றேன் பார் நான்" என்று பம்மாத்து அவர் காட்டியதாகவும் தெரியவில்லை - அவர் கொண்ட தமிழ்த்தேசியம் மிகவும் வரண்ட ஒற்றைத்தன்மை கொண்டதானபோதுங்கூட.  இலங்கை அரசு செய்யும் கொலைகளை அதர்க்கங்களாலே நியாயப்படுத்தும் மாற்றுக்கருத்து மெனிக்கேகளை, தங்களின் சீமான் | நாம் தமிழர் மீதான தனிப்பட்ட பிணக்குகள்காரணமாக முற்றுமுழுதாக நிபந்தனையின்றி "லைக்" இட்டு ஆர்ப்பரித்து ஆதரிக்கும் திமுக_தொண்டர்கள், ஆண்டாண்டுக்கு டெசோ மகாநாடு நடத்தமட்டும் எப்படியாக நூற்றெண்பது பாகையிலே வெட்கமேயின்றித் திரும்பி உரிமைக்குரல் எழுப்பிவிட்டு, மறுநாள் மீண்டும் திட்டித்தள்ளப்போகின்றார்கள் என்பதுதான் காணும் வலைவாழ்க்கையின் அற்புதம்.

நன்றி: நாம் தமிழர் தளம்
தன் -பெற்ற & பெறா -மக்களுக்காகவும்  கொள்கை வரலாறு|பாரம்பரியம் தெரியாத நடிகைகளுக்காகவும் கட்சியையே தொலைக்கத் தயங்காதவர்கள், சொந்த இழப்புகளையும் சொந்தமான மக்களையும் இழந்த நைந்த பலமற்ற மனிதர்களின் கீச்சுக்குரல்களைப் பற்றிச் சுயகேள்விகளேயில்லாமல், கண்டதுண்டமாகக் கிண்டல் செய்து கிழித்துவிட்டுப்போகலாமென்பதுதான் இந்த அலட்சியத்திலே பிறந்த நிகழ்வு.

நன்றி: நாம் தமிழர் தளம்
மெஷின்கண் என்றாலே ஒற்றை விஜயகாந்த் உப்புசத்தொப்பை வழிந்து சரியச் சரிய, இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு அந்தரத்திலே எம்பிச் சுழல, சத்தத்தோட்டா பீய்ச்சித்தள்ளும் நெகிழிப்பொம்மை என்ற உளக்கண்காட்சிக்கற்பிதம் உள்ளவர்களின் "நான்கு நாளில் ஈழம் எடுத்துக்கொடுக்கும்" நுண்விரத அரசியலிலிருந்து மிகவும் வேறானது, மெய்யாகவே இழப்பினைச் சந்திக்கச்செய்யும் அரசியலானது.

 ~~~~~~

விகடனிலே பத்திரிகையாளராக இருக்கும் ஒருவர் "சீமான்|காசி ஆனந்தன் பேசியது விகடம்" என்று கிண்டல் செய்கின்றார். ஒரு விகடன் பத்திரிகையாளர் தன் சஞ்சிகை மெய்யையே என்றும் நெற்குத்தும் எந்திரத்தின் பிளந்தவாயிலே கொட்டிப் பதர், உமி, தவிடு நீக்கிய வெண்ணரிசியைக் கீழ்க்குதத்தாலே கொட்டும் அரிச்சந்திர அமைப்பு என்பதுபோல, காசி ஆனந்தன் பாலுமகேந்திரா பற்றிச் சொன்னதை விமர்சிக்கத் தனக்கு நேர்மையிருக்கின்றதென்பதாக நினைக்கின்றார். வரவனை யானும் இப்படியாகச் சொல்லலாமா? முப்பதினாயிரம் பேர்களைக் கொன்ற ஓர் அரசின் அமைச்சருக்கு அதற்காக, "இலங்கை யெறிந்த கருணா கரன்றன் இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்; கலிங்க மெறிந்த கருணா கரன்றன் களப்போர் பாடத் திறமினோ" எனப் பரணிபாடி நன்றி தெரிவிக்கும் ஒர் இனப்படுகொலையின் கூட்டுக்கையாளன், மற்றவனைப் பிணந்தின்னி என்று சொல்லத் தனக்குத் தகுதியிருக்கின்றதென்று நினைக்கிறான். "பகிரங்கமாக ஆறு திருநங்கைகளைச் சுட்டுக்கொன்றார்கள்"என்று  அடித்துச்சொன்னவர், அதை இன்றுவரை ஆதாரத்துடன் நிரூபிக்கமுடியாதவர், இன்றைக்கு எதுவித கிலேசமுமின்றி காசி ஆனந்தன் பாலுமகேந்திரா பற்றிச்சொன்னதை, இருக்கமுடியாது என்று தான் தீர்மானித்துவிட்டதால், ஆனந்தவிகடன் பத்திரிகையாளர்கூடச் சேர்ந்து நக்கல் செய்யத் தனக்குத் தார்மீகத்தகுதியிருக்கின்றதென்று நம்புகிறார். "சிறிலங்கா அரசியலிலே என்றைக்குமே இனப்பிரச்சனையில்லவேயில்லை; இருப்பதெல்லாம், வர்க்கப்பிரச்சனையே; சுயநிர்ணய உரிமைக்கான வேண்டுகோள் இல்லாமலே சமதர்மப்பாட்டாளி அரசு உருவாகும்" என்று முதலாளித்துவ ஐரோப்பாவிலேயிருந்து கொண்டு, வரலாற்றை அமுக்கியும் திரித்தும் தன்னளவுக்கான சட்டைக்குத் துணிவெட்டிப் பொருத்தி எழுதுகின்றவர்கூட, "காசி ஆனந்தன் தமிழர்களின் வரலாற்றையே திரித்து எழுதுகிறார்" என்று அடித்துச் சொல்கின்றார்.

மேலோட்டமாக, நாமும் நக்கல் செய்துவிட்டுப்போனாலுங்கூட, கொஞ்சம் இருந்து நிதானமாகப் பார்த்தால், இது குஷ்பூ அம்மையார், "பெரியார் திருச்சியிலே பிறந்தார்" என்று பகிரங்கமாக ஆதாரம் தேடாமலே கேட்பவர்களுக்குக் கேட்டவுடனேயே வழுத்தெரியும் வரலாற்றின் பிறழ்குறிப்பினைப் போன்றதான "திறத்தலும் மூடலுமான" கருத்தில்லை என்பதாகத் தோன்றுகின்றது. (குஷ்பூ அம்மையார் சொன்னதை "இன்றிலிருந்து பெரியார் திருச்சியிலே பிறந்தார்" என்பதாகச் சொல்லவந்தாரென நிறுவித் தொலைக்க முயல்கின்றவர்கள்கூட, காசி ஆனந்தனிலே கல்லடித்துப்பார்க்கத் தயங்குவதில்லை)  "காசி ஆனந்தன் சொல்வது பொய்" என்று இவர்கள் அடித்துச் சொல்வது எத்துணை நம்பிக்கையின்மை என்ற கருதுகோளிலே வருகின்றதோ, அதைப்போலவே அவர் சொல்வதுதான் மெய் என்று இன்னொருவர் நம்ப இருக்கும் எடுகோளின் நம்பிக்கையளவுமிருக்கும். அவர் சொல்வது பொய் என்று கால|ஆள் ஆதாரங்களுடன் இவர்கள் நிறுவவேண்டும். ஆனால், இவர்கள் செய்வது அப்படியானதல்ல; வெறும் கிண்டல், குத்தல், "நமக்கு நம்பிக்கையில்லை", "சொல்வது சீமான்|காசி ஆனந்தன் இரட்டை" என்ற அடிப்படைகளிலே கட்டியெழுவது. இப்படியான தூசத்திவார மாளிகையமைப்பையே, சீமானும் காசி ஆனந்தனும் அவர்களின் ஆதரவாளர்களும் சுட்டிக்காட்டி, "பாலுமகேந்திரா இருந்திருந்திருந்தால், யாராவது கேட்டிருந்தால், நாங்கள் சொன்ன உண்மையைச் சொல்லியிருப்பார்" என்று சொன்னால், அதுவும் தூசத்திவார மாளிகைதானென்றாலுங்கூட, அதேயளவு ()சாத்தியத்தைத்தான் கொண்டதாகும். குறைந்தளவு "பாலு மகேந்திரா என்பவனை இவர்களும் திரைப்படவுலகும் அறியமுன்னால், மட்டக்கிளப்பிலே பாலநாதன் மகேந்திரனை நான் அறிவேன்" என்று காத்தமுத்து சிவானந்தன் சொல்ல காலம்|இடம்|ஆட்கள் சார்ந்த சாத்தியம் பெரிது; குறிப்பாக, "எங்கள் "லொல்லுசபா", "காமெடி டைம்" "குரூப்பு"கள் சார்ந்த நையாண்டிமேளத்துக்கடாக்களும் 'பஞ்ச் டயலாக்'குகளுமே காசி ஆனந்தன் பொய் சொல்கின்றார் என்பதற்கான வலுவான ஆதாரம்" என்று இவர்கள் வேண்டி நிற்பதனை, ஏரணத்தின்பாற்பட்டு ஒரு நம்புவதற்கான (அ)சாத்தியத்திலும்விட பெருஞ்சாத்தியமானது. "மீண்டும் மீண்டும் சொல்வதனாலே, ஒன்றை உண்மையாக்கிவிடலாம்" என்ற கோயாபல்ஸ், தி இந்து வகை விடாமுயற்சி இது. குழுமப்பண்பாடும் அரசியலும்மிகுந்த அவசர இணையசமூகத்தளங்களிலே "I invented the Internet - Al Gore" வகை வாதங்களே வருங்காலத்துக்கான ஆதாரங்களாக படிவுண்டு போகலாம். இத்தகா அவலச்சூழலிலேயே வாழ்கிறோம் நாம்."நுமக்கான ஆதாரம் என்பது நம் வாய்மொழிமட்டுமே என்பதே" என்பதான துயரத்தைத்தான் காசி ஆனந்தனும் அவரைக் கிண்டல்செய்து எதிர்ப்பவர்களும் ஒரே மாதிரியாகப் பிழிந்தெறிகின்றார்கள். ஆனால், இன்றைய நிலையிலே வலுவிழந்த வாழ்வுகொண்ட காசி ஆனந்தனை விமர்சிக்கும் நாம், இந்த விருதாத்தட்டச்சாளர்களை மேம்போக்கிலேயே நம்பிவிட்டுப்போகிறோம்.

மாவை & காசி #

இந்நிலையிலே, எழுபத்தேழாம் ஆண்டுப்பொதுத்தேர்தலிலே, திருகோணமலைச்சிவன்கோவில் முன்றலிலே, "தம்பி 'அண்ணா, சிறையிலே உங்களுக்கு என்ன உணவு?' என்று கேட்டான்; என்ன சொல்வேன் தம்பி! அடி! உதை! பாண்" சம்பல்!" என்று சொல்ல, விடாது கைதட்டைப் பெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிப்பேச்சாளர் ஒருவர் ஞாபகம் வந்து போகிறார். (இங்கே நான் காசி ஆனந்தனைச் சொல்லவில்லை; அப்படியாகச் சொன்னேன் என்று ஒரு பூதத்தைப் பின்னே கிளப்பாதீர்கள்; என் நினைவுக்கு எட்டியவரை, நான் சொல்லும் மனிதன், நேற்றைக்குக் கொழும்பிலிருந்து இறக்குமதியான வாசுதேவ நாணயக்காரவின் மேற்றட்டுப்பவிசுச்சம்பந்தியிடம் நாட்டின் பெரும்பான்மையையும் "படிச்ச உலகின்" நாகரீககனவான்களையும் நிறைவுபடுத்தத் தனக்கான இடத்தினைக் கொடுத்துவிட்டு ஓரமாக அடுத்தநிலையிலே நிற்கின்றான்). ஆனால், சொன்னவர்கூடச் சிறையிருந்தவர் காசி ஆனந்தன். மனைவியின் மாமா அமைச்சர் என்பதற்காக ஆபிரிக்காவிலே கூட்டாளிகூட பயன்படுத்தியின் தேவைக்கேற்ற படமுத்திரை அடித்துவிட்டு, கட்சித்தலைவரோடு படம்பிடித்து, "ஆபிரிக்காவே கட்சித்தலைமையை வியந்து முத்திரை அடித்தது"  என நம் கண், காது, நாசி, தோல், வாயென ஐம்புலனும் நோக நோக முன்னாலேயே பொய்யைச் சொல்லிவிட்டுப் பின்னாலே குண்டிமண்ணைத் தட்டாமலே போய், சீமானையும் காசி ஆனந்தனையும் நக்கல் செய்யத் தனக்கு அருகதையுள்ளதென்று எண்ணும் பிறவிகள் இவற்றை அறிவதேயில்லை; கேள்விப்பட்டாலும், உணரவேனும் இவற்றாலே முடியுமா என்றும் தெரியாது. எந்திரத்திலே தொகுதியாக நெகிழிப்பொம்மைகள் செய்கின்றவனுக்கு, களிமண்கொண்டு வனைவதன் நுட்பமோ கலையோ தனிப்பட்ட பிணைப்பினையோ அறிதல் பெருங்கடினம்; அதற்கான அடிப்படையறிவோ பட்டறிவோ பக்குவமோ இல்லை.

ஊரிலே போங்காலத்திலே தானுண்டு தன்வேலையுண்டு என அடங்கிக்கிடக்கும் எத்தனை கிழங்கள் இறந்தபின்னால், "அந்தக்காலத்திலே காதல்மன்னன், சந்திச்சண்டியன்" என்ற கதைகளைக் கேட்டிருக்கின்றோம் கண்டிருக்கின்றோம்; எழுபதுகளின் நக்ஸலைட்டுகளிலே எத்தனை பேர் நூற்றெண்பது பாகை சுற்றி வாழ்ந்து போனார்கள் என்பதை நாம் வாசிக்கின்றோம். கல்லக்குடித்தண்டவாளத்திலே கருணாநிதி தலையை வைத்தாரா என்று கேள்வியில்லாமலே நம்பிவிடுகின்றவர்களுக்கு காசி ஆனந்தன் சொல்வதற்குமட்டும் ஆதாரம் கேட்பது அசாத்தியமே!

மேலே சொன்னவற்றிலே எதுவுமே காசி ஆனந்தன் உண்மையைச் சொன்னார் என்பதாகவோ சீமான் அதனை மிகவும் பொறுப்போடு மேற்கோள்காட்டிப் பேசினார் என்பதாகவோ நான் நம்புகிறேன் என்பதாக அர்த்தம் கொள்ளப்படக்கூடாது. ஆனால், அவர்களை மறுதலித்து எள்ளி நகையாடுகின்றவர்களுக்கு அவர்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்சநஞ்ச ஆதாரங்கூட இல்லை என்ற அவமான உண்மையையும் அதைவிட மோசமான "நையாண்டி செறிந்த நம் அவநம்பிக்கையையே முற்றாக நம்புங்கள்" என்ற எடுத்தெறிந்த அயோக்கியத்தனமான சுயநிபந்தனைகளும் - குறிப்பாக, நையாண்டி செய்கின்றவர்கள் பலரின் அப்பட்டமான புளுகுகளை நாம் அனைவரும் கண்ட நகைமுரணான நிலையிலே- இவ்விடத்தே சுட்டிக்காட்டப்பட்டு, நாம் நிதானமாக எண்ணவேண்டுமென்பதே இக்குறிப்பின் நோக்கு. ஒரு சாதாரணனின் அன்றாடத்துயரைக்கூட, "புலி || புலியெதிர்ப்பு", "திமுக || நாம் தமிழர்", "பிரபாகரன் || கருணாநிதி" என்ற முரண்கோணங்களிலேயே பார்த்துத்தொலைப்போமென்றே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் சமூகத்திலே இந்நிலைதான் தேங்கச்செய்யும்.

ஆனால், எஃது எப்படியிருந்தாலுங்கூட, பாலு மகேந்திரா அடையாளமாக நிலைத்து நிற்கப்போவது, அவரின் ஒளிப்படமாக்கலுக்கும் மேல்நாட்டுத்திரைப்படங்களை ஒத்தியெடுத்த படங்களுக்குமே... ஒருவேளை அவரின் முதுமையுறா மனத்தின் கறுத்த இளம்பெண்களின்மீதான காதலுக்குமாகலாம். ஆனால், ஒருபோதும், அவர் என்றோ ஒரு நாட்டுவெடிகுண்டு எறிந்தாரா இல்லையா என்பதற்கல்ல; எம்ஜிஆர் நினைவிலே நிற்பது, அவரின் மக்களைத் திட்டமிட்டு வசீகரித்துக்கொண்ட அரசியல்நுணுக்கத்துப்பிம்பத்துக்காக; குறியேடத் தாந்திரியின் தொடர்புக்காக ஸ்மார்த்தவிசாரத்துக்குட்பட்டு, நாடுகடத்தப்பட்ட மருதூர் கோபாலமேனனின் மகன் என்பதற்காகவல்ல.

எல்லாவற்றுக்கும்மேலாக, மன்னாரிலும் திருகோணமலையிலும் புதைகுழிகள் தோண்டப்பட்டும் யாழ்ப்பாணத்திலே மக்கள் தம்மிருப்பிடங்களுக்காக மறியல் செய்யவும் ஆன நாடொன்றின் நாளொன்றிலே பாலுமகேந்திரா அறுபத்தெட்டிலே ஒரு பின்கரியருள்ள பைசிக்கிள் வைத்திருந்தாரா என்பது 'காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிற சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்றாகாது!'* என்றுமட்டுமே சொல்லமுடிகிறது.
† - கலிங்கத்துப்பரணி
* - பிரமிளை முன்பின்னாகப் பெயர்த்தது
# - 1970 களில் மாவை சேனாதிராசா & காசி ஆனந்தன். நண்பனொருவனின் குடும்பப்படத்திலிருந்து வெட்டி எடுத்தது. நண்பனுக்கு நன்றி. 

3 comments:

Sri Rangan said...

மறுக்க முடியாத தர்க்கத்தோடானவுங்கள் கட்டுரையை வாசித்தபோது (அ)-நியாயம் என்பதற்கப்பால் ,அழகிய மொழி நடை கவிதையாய் மனதிற் தைத்தது.விசயத்தைக் குவித்துத் தர்க்க -நியாயத் தன்மைக்கான உங்கள் வலி புரியத் தக்கதே பெயரிலி!

குறும்பன் said...

என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை. உங்க இடுகைய படிச்சி புரிஞ்சிக்கறது பெரிய வேலையாக இருக்கும் போல.

உங்க இடுகையை புரிய உங்கள மாதிரி பேச்சு வழக்கு பேசறவங்களா\தெரிஞ்சவங்களா இருக்கனும் அல்லது உங்க எழுத்து நடைய புரிஞ்சிக்கற அளவு பெரிய ஆளா இருக்கனும். எனக்கு இரண்டும் இல்ல :-(( நீங்க சொல்லாததை சொல்லியதாக குழு சேர்த்து சொல்லணும் பெரிய பிரச்சனை ஆக்கனும் :) நமக்கு குழு இல்லை, "அந்த" மாதிரி எண்ணமும் இல்லை. :)

பலமுறை உங்களுக்கு இதை சொல்லியிருப்பாங்க உங்களுக்கு தோண்றியதென்றால் மாற்றி எழுதவும். இது வேண்டுகோளே.

viyasan said...

///கல்லக்குடித்தண்டவாளத்திலே கருணாநிதி தலையை வைத்தாரா என்று கேள்வியில்லாமலே நம்பிவிடுகின்றவர்களுக்கு காசி ஆனந்தன் சொல்வதற்குமட்டும் ஆதாரம் கேட்பது அசாத்தியமே!///

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. :))