Saturday, December 11, 2010

சொன்னாங்க! சொன்னாங்க!!


மாபெரும் தர்மவான் தோழர் மாதவராஜ்

"போங்கய்யா.. நீங்களும் உங்க பத்திரிகைதர்மமும்!" என்று உதறி அறைகூவல் விட்டிருக்கின்றார் தோழர் மாதவராஜ்.

அவர் சொல்லிருக்கும் விடயத்திலே எனக்கேதும் மாறுபாடில்லை. ஆனால், ஏடெட்டுப்பின்னூட்டப்பொறுக்கலுக்கான இதே கூவலை இந்தாள் என்றைக்காவது இந்துவுக்குச் சொல்வாரா? மாட்டார். கட்சி கோபித்துக்கொள்ளும். கொள்கை கொல்லைப்புறத்தினாலே கொல் கையாயிடும். பஞ்சாயத்துக்கூடி ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஒதுக்கிவைக்கப்பட்டவர் ஆறுகுளம் தேடி அலைந்தொழிந்த பின்னால், பின்வரும் தோழர்கள் பேரறிக்கை விடுவார்கள். ஒரு சில இளைஞர்கள் துணிவாகப் போட முயன்ற கூட்டத்துக்குப் பயந்து இந்து ராம் 'இராஜபக்சவின் இரண்டாம் ஆட்சி'க்கூட்டத்தைத் தவிர்க்கின்றார். இவர்கள் இவை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்.

துணிவிருந்தால், அடுத்ததடவை கட்சியைவிட்டு வெளியே வந்து சமூகநியாயம் தேடும் மனுசனாக இந்து ராமை "இப்படியெல்லாம் இராஜபக்சே சார்பிலே நீரே ஒரு செவ்வியையும் எடுத்து, நீரே பதிலையும் போட்டுக்கொடுப்பதெல்லாம் பத்திரிகாதர்மமுமேதானா? போங்கய்யா.. நீங்களும் உங்க பத்திரிகைதர்மமும்!" என்பாரா இவர்? லெனினும் மார்க்ஸும் எங்கும் அதற்குள்ளே ஓடிப் போய்விடமாட்டார்கள். சிவப்புப்புத்தகத்துள்ளேயும் கட்சிக்கொடிகளிலுமே வழக்கம்போல தூசு, மழை காற்று அறைகூவல் எல்லாம் சகித்துச்சுகித்துத் தூங்கிவழிந்துகொண்டிருப்பார்கள். வந்து திரும்பப் பைக்குள்ளே வைத்துக்கொண்டு கையை விசுக்கி விசுக்கிப் புகழ் பரப்பலாம்.

அண்மையிலே ராடியா ஒலித்துண்டின்பின்னாலே, "Headlines today" இலே போட்டி ஐந்தாம்தூண் பிரபு சாவ்லா திரும்பி, பாரதப்பத்திரிகாதர்மத்திலே அவிர்ப்பாகப்பங்கு கொடுத்தாரே கேட்டாரே, ""All editors give advice;the way N. Ram gives advice to Sri Lankan government." இதுபற்றியெல்லாம் மாதவராஜோ வேறெந்த சிபிஎம் சப்ளாக்கட்டையுமோ பதிவும் போடாது; போடும் பதிவுக்குப் பதிலும் போடாது; போடும் பதிலையும் ஊடுபுகவிடாது.

போலிகளுள்ளேயே அசலான போலிகள் இவர்கள். அமெரிக்காவையும் முதலாளித்துவத்தையும் திட்ட விக்கிலீக் மணற்கடிகாரம் ஒரு வலிதுடுப்பு; வேகும் அசானின் நிழலிலே நின்று கூடைப்பந்தாட்டம். அவ்வளவே! தன் கட்சிமுன்றலிலே ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடிபிடித்து வாய்தா வாங்கும் பத்திரிக்கைத்தர்மத்தைக் கேட்கமட்டும் வாயிலே கொழுக்கட்டையும் கையிலே கட்சிக்கொடியும் அரிவாளும். இதற்குள்ளே பாரதியார் பாடல் ஒரு கேடு. "நெஞ்சில் உரமுமின்றி..." என்று வரிகளை எடுத்து வேறு யாராவது பதிற்பாடல் போட்டால் வியப்பில்லை. சே!

"கட்சிக்காரர் பத்திரிகைகள்மீது இந்தப் பதிவுத்தோழர்களுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். அசானின் எழுச்சியை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, இந்துவின் ஸ்ரீலங்கா அரசுசார்ந்த செவ்விகளையும் செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? பதிவுலக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது.

போங்கய்யா.. நீங்களும் உங்க பத்திரிகைதர்மமும்!" 

------------------

இலக்கியம் என்பது இலக்கு உய்ய என்பதாம்!

/விளக்கு இன்னமும் தன் இலக்கில் இருந்து விலகவில்லை. ஆனால் இயல் முற்றிலும் திரிந்து பல்கலைக்கழக கொடுக்கல் வாங்கல் ஆட்டங்களுக்கு களமாகிவிட்டது. /

திண்ணையை நடத்துகின்றவர்கள் (இன்றைய) 'விளக்கு' விருதுடன் சம்பந்தப்பட்ட ஆட்கள். ஜெயமோகன் விளக்கேந்தும் கட்டுரை வருவது சுபமும் சுலபமும் என்பதை நாஞ்சில்நாடன் அறியவேண்டும். தமிழை, தமிழரை முறித்தால், சிறப்பு. வெறுமனே வழிகாட்டிகளின் துணையை நம்பிவந்து அமெரிக்காவிலே அரசியலையும் நிலையையும் நடப்பு இலக்கியமென்று பதியும் ஜெயமோகன் போன்றவர்களை முன்னிலைப்படுத்துவது, நாஞ்சில்நாடன் போன்ற முதிர்ச்சியான எழுத்தாளர்களுக்கு அழகல்ல. அண்மையிலே அமெரிக்கா வந்து விளக்கு சார்ந்த சிலருடனும் அவர்கள் நண்பர்களுடனும் தங்கி உலாப்போன ஜெயமோகன் இவர்களுக்குத் தாங்கிப் பிடிப்பதேதும் அதிசயமானதல்ல.

'இயல்', புலம்பெயர்ந்த கனடாவாழ்தமிழர் கொடுப்பது. இதிலே ஜெயமோகனை மாமனுசனாக மதிக்கும் ஆசாமிகளும் உள்ளடக்கம். இத்தனைக்கும் இதே ஆட்களின் 'கால'த்திலேயே ஜெயமோகனின் வால் வேதசகாயகுமார் ஈழச்சிறுகதைகளைக் கிண்டல் செய்து வளரவில்லை என்பார்; ஜெயமோகன், ஈழக்கவிதைகள், பெண்கவிதைகள் அரசியல் ஒப்பாரி என்பார். இத்தனைக்கும் பின்னால், இயல் விருதை ஜெயமோகன்போல ஈழத்தமிழர்களின் செத்தவீட்டிலே காந்தியம் போதிக்கும் ஆட்களை மகிழ்ச்சிப்படுத்தக் கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அ. முத்துலிங்கம் போன்ற தமிழ்நாட்டின் மேட்டுக்குடி மாமாக்கள், மாமிக்களின் கால்களுக்குச் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கும் ஆட்களும் ஏதோவகையிலே சார்ந்ததுதான் இது. சொல்லப்போனால், 'இயல்' கும்பல், தமிழக எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பதே தவறு. இன்னமும் தமிழக முத்திவெடிச்ச கலைஞானக்குஞ்சாமணிகட்கு எப்போதும் கோவணமாக இலக்கியம் ஆடும் விளையாட்டு வெறுப்பேற்றுகிறது.

ஜெயமோகனுக்கு விளக்கு நன்றாகத் தெரிகிறதாம்; இயல் மட்டும் தடுமாறுகிறதாம். திண்ணையின் அரசியல் நிலைப்பாடும் அதிலே எழுதுகின்றவர்களின் வட்டமும் எல்லோருக்கும் தெரியும். இவை எவ்வகையிலும் ஜெயமோகனின் அரசியல், தத்துவ, தேசிய வட்டங்களைக் குறிக்கிடாதவை; உள்ளடங்கியவையாகலாம். இயல், எப்போதும், அப்படியாக இருப்பதில்லை. அவ்வப்போது, இலங்கைசார்ந்த - சமயங்களிலே இந்தியமுரண்கொண்ட- ஆட்களுக்கும் விருதினைக் கொடுத்துவிடும். அதனாலேதான், ஜெயமோகனாருக்கு ஆகிவரவில்லை. நாஞ்சில்நாடனுக்கு என்ன கேடு? ஜெயமோகன் என்று தன் போருக்கு அடுத்தாரை உசுப்பேற்றும் பாம்பட்டியைப் பற்றி நாஞ்சில்நாடனுக்குப் புரியவில்லையா? அல்லது, புரிந்தும் "ஆயிரம் பொற்காசாச்சே!" என்று உசாத்துணைவிடுகின்றாரா?

அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும்விட கேடுகெட்ட ஆட்கள் இந்த இலக்கியவாதிகள் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகின்றது. இலக்கிய அரங்கக்கண்ணாடியாக இல்லாமல் அவுரங்கசீப்பாக இருக்கின்றவர்கள் உத்தமர்களென்பேன். இத்தனை மண்டகப்படிக்கதைகள் எழுதின இவர்களைவிட 'சோளகர்தொட்டி' என்ற ஒற்றைத்துண்டம் முறிந்தமொழியில் எழுதின பாலமுருகனுக்கு ஆயிரம் விருது கிடைத்திருக்கவேண்டும்.

(தமிழ்மணம் விருதுகள் உட்பட்ட பதிவு விருதுகள் உட்பட்ட எந்த) விருதுக்காகவும் வெளியீட்டுவிழாவுக்காகவும் மட்டும் கவிதையும் கதையும் எழுதி... தூ! என்ன இலக்கியக்காரர்களோ!

எனக்கென்ன! என் காசா, கலையா! கொடுத்துவிட்டுப்போங்கள்! போய், இலக்கியவாதியை ஏளனம் செய்கிறான் என்று விளம்பரப்பலகை போட்டுக்கொண்டு பிச்சை எடுங்கள்.