Thursday, December 21, 2017

ஈழச்சிவசேனைப்பயிர்ச்செய்கை


நான் கீழே எழுதியிருப்பது நடராஜனின் இரு  இடுகைகளுக்கும் அதற்கான பின்னூட்டங்களுக்கும் பின்னாலான என் கருத்து.
==========================


அன்பின் நடராசன் அவர்களுக்கு,
அகரமுதல்வன்- அரவிந்தன் நீலகண்டன் சம்பந்தமாக, 'ஈழத்தின் எல்லாத் தமிழ்த்தேசியர்களுக்கும் ஒரே வகையினர் அல்லர். அவர்களிலே பெரும்பாலோர் தமிழகத்தமிழரை நோக்கித் தமக்கு வசதிப்பட எவை அந்நேரத்திலே தேவைப்படுகிறன என்பதாக ஒட்டியும் வெட்டியும் காண்பவர்களுமல்ல' என்பதை உங்களுக்குச் சொல்லவே இச்சிறுகுறிப்பு.

என்னளவிலே அகரமுதல்வன் முதலிலே கிழக்கு பதிப்பகத்தைத் தன்னூலை வெளியிட அணுகியதே பொருத்தமற்றது. தனிப்பட்ட எழுத்தாளர் என்றளவிலே அவருக்கு எவரையும் அணுக உரிமையுண்டு. ஆனால், தமிழ்த்தேசியராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, கிழக்கு பதிப்பகத்தை அணுகும்போது அவர் தன் அரசியலையும் தன் தனிப்பட்ட எழுத்தினைப் பதிப்பதற்கான தேவையையும் ஒன்றாகக் கலந்து கரைக்காமலிருந்திருக்கவேண்டும். கிழக்கின் பத்ரி பதித்த இந்துத்துவாநூலின் ராஜீவ் மல்ஹோத்ராவின் சகஎழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் இதனுள்ளே வசதியாக அழைக்கப்பட்டுத் தலையைப் புகுத்தியிருப்பது புரியத்தக்கதும் வியப்புக்குரியதுமல்ல. பெரும்பாலான பதிப்பகங்களைப்போல (இந்துயாவை விமர்சிக்காமவரைக்கும்) விற்பனை ஒன்றே குறியானது கிழக்கு; வீரப்பன் செத்தால், சுடச்-சுட வீரப்பன்; பிரபாகரன் செத்தால், பிரபாகரன் (காந்தி கண்ணதாசன் கண்காட்சியிலேவைக்கவேண்டாமென்று வெருட்டினால்மட்டும், "கிழக்கு அலுவலகத்திலே புத்தகம்பெறுங்கள்" என்பார்கள்); இப்போது, அகரமுதல்வன் போன்ற நாடி நிற்கும் ஈழத்தமிழர்.

அதனால், ஈழதேசியம் பேசும் ஈழத்தினை அடியாகக் கொண்ட எல்லோருமே அகரமுதல்வனின் நிலைப்பாட்டினை, இக்கூட்டணியை ஆதரிக்கின்றார்கள் என்பதாகக் கொள்ளக்கூடாது. என்னைப் போன்றவர்கள் கடிந்தேயிருக்கின்றோம். ஆனால், அஃது அவரின் நூல்; எங்குப் பதிப்பதென்பது அவரின் விருப்பம். ஆனால், ஈழத்தின் அடையாளமாகவும் பிரதிநிதியாகவும் அவர் தன்னைக் காட்டும்போது அதற்கான விமர்சனத்தினையும் கொள்ள ஆயத்தமாகவிருக்கவேண்டும். அவர் அந்நிலையைப் பலரிலும்விட, துணிவாகவே ஆயத்தமாயிருந்து எதிர்கொண்டிருக்கின்றார் என்பதை அவரின் விழாவின் பேச்சு காட்டுகின்றது என்பேன், அவரின் செயற்பாடோடு இப்போதும் கிஞ்சித்தும் ஒப்புதலில்லாதபோதுங்கூட.

அதே நேரத்திலே, 'இந்துத்துவா = ஈழத்தின் சைவம்' என்ற ஒரு சூத்திரச்சமப்படுத்தலை தமிழகத்தின் ஈழத்தோழர்கள் அப்படியே ஈழத்திலேயிருக்கும் சைவத்திலே காசி ஆனந்தன், காந்தளகம் சச்சிதானந்தம், அகரமுதல்வன் இவர்களை வைத்துக்கொண்டு நோக்கித் தள்ளுவது பொருத்தமற்றது. இலங்கையின் நாவலரின் சாதியப்பார்வையும் விழுந்து செறிந்த சைவத்தில் சமூகக்குறைகள் நிறைய உண்டு என்பதை மறுக்கக்கூடாது; ஆனால், அதனை அப்படியே இந்துத்துவா என்பது தமிழ்த்தேசியத்துக்கு எதிரான ஆதவன் தீட்சண்யா போன்றோரின் இலங்கைவழிகாட்டி நட்பாளர்களின் திட்டமிட்ட திரிந்த வாதத்துக்கு ஒப்பானதாகும்.

சொல்லப்போனால், வட இலங்கையின் நாவலரின் 'நல்லூர்'ச்சைவத்துக்கும் வன்னியின், கிழக்கின், தென்கிழக்கின் சைவம் என்று அடையாளம் காணப்பட்ட நெகிழ்ச்சியான சைவவடிவங்களுக்கும் இடையேயான ஒப்பீட்டு ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. ஆனால், இவை எதுவும் அடிப்படையிலே அரசியல் முடுக்கம் கொண்ட இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்பது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகாக, இந்திய நலனைக் கொண்டு உள்ளே கேரளகஞ்சாபோல வெளித்தூதர்களாலும் உட்தரகர்களாலும் 'ஈழச்சைவம்=இந்தியத்துவா" செய்யும்படியாக வெளிப்படையாகவும் நுணுக்கமாகவும் நுழைக்கப்படுகின்றது என்பேன்.  சொல்லப்போனால், ஈழத்தின் முற்போக்குத்தமிழ்த்தேசியர்கள் இன்று எதிர்க்கவேண்டிய இந்தியமயமாக்குதலிலே இந்துத்துவாவினை வேர்விடாமலே தடுத்தல் ஒரு முதன்மையான செயற்பாடாகவிருக்கவேண்டும். நம்மிலே பலர் அப்படியே கருதுகின்றோம் என்றும் சொல்வேன். இதனை ஈழதேசியத்தின் தமிழக நண்பர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பது என் விழைவு.

மதநம்பிக்கை அற்ற எனக்கு ஈழத்தின் சைவம் குறித்துப் பல விடயங்களில் விமர்சனம் உண்டு; ஆனால், தொடர்ச்சியாக ஈழச்சைவத்தினை இந்துத்துவா என  அடையாளப்படுத்திக்கொண்டு, மீதி மதங்களின் குறைகளை (சைவத்தின் சாதியம், சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவாவின் அடிப்படைவாதம் உட்பட்ட பண்புகளையும் தம்மளவிலே சமாந்திரமாய் உள்ளடக்கிய) விமர்சிக்க மறுத்தும், சொல்லப்போனால், இன்னமும் ஓரடிமேலே சென்று, அவற்றினை இந்துத்துவாவினை எதிர்க்கின்றோம் என்ற பேரிலே விமர்சனமின்றி இந்திய நண்பர்கள் ஆதரிப்பதும், இன்னமும் ஈழம் சார்ந்த சைவர்களை இந்துத்துவா நோக்கித் தள்ளச் செய்யும் அபாயத்தினையே பெருக்கும்.  இக்கெடுநிலைதனையே இலங்கையிலே இந்தியத்துணைத்தூதரகம் முதல், சுவரொட்டி, ‘தமிழ்ச்சைவம்’ என்று ‘சிங்களபௌத்தம்’ என்பதுக்கு ஈடாகச் சுவரொட்டும் நுழைந்த சிவசேனாவரை விரும்புகின்றன என்று சொல்வேன்.

. மார்க்ஸின் முழுத்தமிழ்த்தேசியத்தின் எதிர்ப்பு அடிப்படைவாத இஸ்லாமியக்கூறினை விமர்சனமின்றி அரவணைத்தது.  கூல் போன்றவர்களின் "கிறிஸ்தவர்கள் இலங்கையில் தமிழர்களிலே ஒடுக்கப்படும் சிறுபான்மையோர் ஆகின்றார்கள்; யாழ்ப்பல்கலைக்கழகத்தில் யார் யார் என்னென்ன சாதி என்று எழுதுகிறேன்" போன்ற சிவசேனைக்குச் சமாந்திரமான  கெடுதல்மதப்பார்வை ஒருவரும் விமர்சிக்கத் துணியாமலும் குறிப்பிட்ட சில தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களாலே தமிழ்த்தேசியத்துக்கு எதிரான வாதமாகத் தமிழகத்துள்ளே அவர்களின் கூட்டாளிகளூடாகப் பரப்பவும்படுகிறன.  சிங்களபௌத்தத்தின் பேரினவாதக்கூறினை (சகோதர இடதுசாரிக்கட்சியாக ஜேவிபி காணப்படுவது உட்பட) விமர்சிக்க மறுத்து அரவணைக்கின்றவர்கள் தமிழ்த்தேசிய எதிர்ப்பினை முழுமையாக ஆதரிக்கும் சிபிஎம் அரசியல், கலைப்பிரிவுகள், ஒரு பகுதித்தமிழ்நாட்டுத்தலித்தியர்கள்.  இவர்களின் மீது விமர்சனமற்றுத் தப்பவிடும் தமிழக இடதுசாரிகளின் போக்கும் நடராஜன் அவர்களின் பின்னூட்டத்திலே கோபத்தினைக் காட்டும் ஈழத்தமிழ்த்தேசியர்களின் நிலைக்குக் காரணமோ என்ற ஐயமும் எனக்கு உண்டு. அ. மார்க்ஸ், கூல் போன்றோரின் போக்குகள்  இந்துத்துவா ஈழத்திலே விரலூன்ற ஏதுவாகவிருக்கும் (மதமாற்றம், மதம் சார்ந்த நிலம்|தொழில்மீதான ஒடுக்கல் போன்ற) உள்ளூர்க்காரணிகளாலே வெறுத்திருக்கின்ற சில பகுதிச்சைவர்களை இன்னமும் இந்துத்துவாவை நோக்கித் தள்ளுகிறதா என  ஆய்வு நடத்தப்படவேண்டும்.  வெறுமனே, சிவசேனை ஊக்கிகளையும் அகரமுதல்வன் விளைவுகளையும் மட்டும் நொந்து பயனில்லை;  மதம் சார்ந்த கெடுதலே தொடர்ந்து வளரும் அவலநிலையைத்தாம் காணமுடிகின்றது. இப்படியான மதம் சார்ந்து இயங்கும் | இயங்கவெளிக்கிடும் தமிழ்த்தேசியவாதிகளை எப்படியாக எதிர்கொள்வது, மதத்தைப் பின்தள்ளி தமிழ்த்தேசியத்தின் தேவை மதவடையாளத்தினதும்விட வலிமையானதும் நியாயப்படுத்தக்கூடியதுமான இணைப்புச்சரம் என்பதை உணர்த்துவது என்பதையும் காண நாம் முயலவேண்டும். தமிழத்திலுங்கூட, திராவிடக்கட்சிகளினதும், சிபிஎம் போன்ற இடதுசாரிக்கட்சிகளினதும் தமிழ்நாட்டின் நலன் குறித்த தெளிவின்மையும் அலட்சியமும் தமிழ்த்தேசியத்தின் ஒருபகுதியினை மிகவும் பாசிசத்தன்மையுள்ளதாக, சாதியம், இந்து அடையாளங்களூடே தள்ளுவதைக் கண்டுகொண்டிருக்கின்றோம். (பிரபாகரன் படத்தைப் போட்டுக்கொண்டே, சாதியப்பெருமை பேசுகின்றவர்கள் வியப்பும் வெறுப்பும் ஒருங்கே கக்கவைக்கின்றார்கள்)  

அதனால், ஈழதேசியத்தின் தமிழக நண்பர்கள், அகரமுதல்வன், காசி ஆனந்தன், சச்சிதானந்தன் போன்ற தமிழ்த்தேசியர்களை விமர்சிக்கும்போது, அவர்களை ஈழத்தமிழ்த்தேசியத்தின் முழு அடையாளமாகக் காண்பதினைத் தவிர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோலவே, ‘ஈழத்தின் சைவம் = இந்துத்துவா என்று இவர்களை வைத்து அடையாளப்படுத்துவதையும் ஒப்பீட்டுப் பார்த்து ஆய்ந்து தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும்மேலாக, இப்படியாக ஈழத்தின் நாளாந்த வாழ்நிலைச்சைவத்தினை மட்டும் அதற்கான பயன்பாட்டு ஒழுகுவெளியைக் கொடுக்காது, அரசியல் இந்துத்துவாவாக விமர்சனப்படுத்திக்கொண்டு, இலங்கையின் மற்றைய மதங்களுக்கு தமிழ்நாட்டின் நிலையை எண்ணிக்கொண்டு,சிறுபான்மையார் என்ற வகையிலே விமர்சனமற்ற முழு ஆதரவினைத் தருவது இந்துத்துவாவினை வெற்றி பெற வைக்கும் நிலைக்கே இலங்கையிலே தள்ள உதவும்; இது நீண்டகால நோக்கிலே  நாடுகடந்த முற்போக்குத்தமிழ்த்தேசியத்தினையும் நசிக்கவே நாடுகடந்தும் உதவும்.

அதனால், அகரமுதல்வனைக் கண்டிக்கும்போது, ஈழத்தமிழ்த்தேசியத்தின் முழு அடையாளமாக அவரையும் அவரின் ஈழ ஆதரவாளர்களையும் கொண்டு உங்களின் கருத்துகளை வைக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். அதுவும் இடதுசாரிநிலையிலிருந்து- அதே நேரத்திலே தமிழகத்தின் ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன், இந்து ராம் இவர்களைபோன்ற கட்சிசார் சிபிஎம் இடதுசாரிகளை முற்றாக நிராகரிக்கும் ஒருவனாகவும் உங்களைப் போன்ற இடதுசாரிகளைப் புரிந்துகொண்டவனாகவுமே வைக்கின்றேன் என்பதைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்.

Wednesday, July 26, 2017

ஆற்றோடு இழுப்பட்டுப்போவோம்

முல்லைத்தீவிலேயும் திருகோணமலையிலும் நயினாதீவிலும் சிலாவத்துறையிலும் மூதூரிலும் ஆரையம்பதியிலும் வாழைச்சேனையிலும் அறுகம்குடாவிலும் திட்டமிட்டே தமிழர் பகுதியிலே ஏற்படுத்தப்படும் குடியேற்றங்களைப் பற்றிப் பேசத் துணிவற்ற நாம் சுமந்திரனையும் இளஞ்செழியனையும் போன்ற கற்ற 'கட்டப்பஞ்சாத்துக்காரர்'களையும் சட்ட 'என்கவுண்டர் ஹீரோ'க்களையுமே நல்ல குடிமக்களாக சிறிலங்கா நாட்டுப்பற்று மிகுந்த பெரும்பான்மை சமூகத்தினர் அங்கீகரிக்க, ஏற்றுக்கொண்டு தலையிலே சுமந்து கொண்டாடும் நளாயினிசமூகத்தவர் ஆனோம். (இப்போதெல்லாம், "கட்டப்பஞ்சாயத்து', 'என்கவுண்டர்' போன்ற தமிழகத்து உதிர்|ரிமொழியின் திசைச்சொற்களற்று நாம் நமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமுடியாததாலே, இவ்வாறாகச் சுட்டவேண்டியிருக்கின்றது)

 இளஞ்செழியன் ஒரு திறமான நீதிபதியென்றே கொள்வோம்;  சட்டத்தரணி சுமந்திரனைப்போல சிறிலங்கா அரசினை முறித்துக்கொள்ளாத திடமான நீதிபதியும்கூட. ஆனால், நல்லூரடியிலே நிகழ்ந்த சூட்டுச்சம்பவத்திலே அவரினை, கொலைசெய்யப்படுமளவுக்குப் பாதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு போராளியாகக் காட்டுவது எத்துணை நாம் உணர்ச்சி வசப்படுதலிலே நியாயத்தையும் நிகழ்வினையும் தொலைத்துவிட்டு நிற்கின்றோமென்று காட்டுகின்றது.

வீதியிலே நாட்டின் சட்டதிட்டங்களாலே தட்டிக்கேட்க ஆளில்லாமல் கெட்டுப்போன குடிமகன் ஒருவன் பண்ணிக்கொண்டிருந்த நுழைவுச்சீட்டில்லாத கேளிக்கை நிகழ்வினைத் தாண்டி இளஞ்செழியனின் வாகனம் போகமுடியாததாலே, இறங்கிப்போன அவரின் மெய்ப்பாதுகாவலர்கள், நிதானமின்றிக் கூத்தடித்துக்கொண்டிருந்தவரிடம் கைத்துப்பாக்கியினை எடுத்து மிரட்டுவதையெல்லாம் சட்டத்தினையும் ஒழுங்கினையும் ஏற்படுத்தும் நடவடிக்கை என்று கொள்ளலாமா?    கடமையிலே ஒருவர் இறந்ததையும் அதற்காக அவரின் அதிகாரி குமுறி அழுததையும் கடமை உணர்ச்சியின் தன்மையாகவும் மனிதத்தின் தன்மையாகவும் நிச்சயமாகக் கொள்ளலாம். ஆனால், இந்நிகழ்வினை பழம்புலிப்போராளி இளஞ்செழியனைக் கொல்லவந்ததாகத் திரித்து அவரைத் திருநிலைப்படுத்தும் அற்பத்தனம், ஓரிராண்டுகளுக்குமுன்னால், சுமந்திரனைக் கொல்ல முயற்சி செய்ததாகக் காட்டிச் சிலரைச் சிறை வைத்திருக்கும் அரசியலுத்திக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. பெருந்தலைகளான கருணாக்கள், கேபிகள் இவர்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட அரசுக்கும் அதனை மறுத்தோடாதாருக்கும் 99 வரை மூன்றாண்டுகள் புலிகளிலே இருந்த ஒருவர் இளஞ்செழியனைக் கொல்ல வந்ததாகக் காட்டும் தேவை அரசியலற்றி வேறென்ன? தமது காணிகளினை எடுத்துக்கொள்ளாதிருக்கவும் எடுத்ததை திரும்பத்தரவும் காணாமற்போன உற்றாரின் குறித்த நீதி கேட்டுத் தொடரும் தாய்மார் குழந்தைகளின் கண்ணீரினைக் கண்டுகொள்ளாத அத்தனை பேரும் இளஞ்செழியனின் கண்ணீருக்கு நொருங்கிப்போவதை மனிதநெகிழ்வுக்குமப்பால் வசதியான அரசியல் என்றுதான் பார்க்கமுடிகின்றது.

 இங்கே அரச எந்திரங்கள் எத்துணை இலகுவாக, ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் தன்மையைக் கொண்டிருக்கின்றதென்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம்.  வீதியிலே குடிமக்கள் நின்று செய்யும் குழப்பங்களையும் சட்டவிரோத கள்ளச்சாராயங்களையும் கேரளாக்கஞ்சாக்களையும் மதகுச்சண்டியர்களையும் வாள்வெட்டுகளையும் கடந்த ஒன்பதாண்டுகளாக எத்துணை திட்டமிட்டே பெருகவிட்டிருக்கின்ற அரசினையும் இதே மெய்பாதுகாவலர்களும் நீதிபதியும் வேலைசெய்யும் சட்டமும் ஒழுங்குமான துறைகளையும் கண்டிக்க மறக்கின்றோம் அல்லது மறுக்கின்றோம்.

சிறிலங்கா அரசும் அதனியந்திரங்களும் அவற்றுக்காகக் கண்ணீர்விடும் அத்தனை மொழி, இன, மதமக்களும் மெய்யாகவே நீதியும் நேர்மையும் கொண்டவர்களாகவிருந்திருப்பின், 2009 இலே என்ன நிகழ்ந்தது என்ற பாரபட்சமற்ற விசாரணைகூட வேண்டாம், குறைந்தளவும் கேரள கஞ்சாவினையும் வீதிச்சண்டியர்களையும் சட்டவிரோதக்குடியேற்றங்களையும் ஒடுக்குவார்களா? தடுப்பார்களா? இல்லாவிட்டால், சுமந்திரன், இளஞ்செழியன் போன்றவர்கள் இலங்கையின் "பிக்பொஸ்ஸ்" நிகழ்வின் இரு நடிகர்களாகமட்டுமே பலராலே பார்க்கமுடியும்.

ஜூலை 26 உள்ளிட்ட இவ்வாரத்திலே எண்பத்து மூன்றிலே எமக்கிழைக்கப்பட்ட கொலைகளையும் அவற்றைத் தொடர்ந்து இன்னும் ஒடுக்கும் நொருக்கும் துயர்களையும் தன்னலமற்று அழிந்து மறைந்துபோன அனைத்துத்தியாகிகளையும் நினைவுகூர மறந்துவிட்டு, இளஞ்செழியன் போன்ற அரசியந்திரத்தின் அற்புத வீட்டடிமைகளுக்கு நிகழாத துன்பத்தையும் கற்பனைக்கதைகளினையும் வீரபுருஷனின் கதையாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

பல்வேறு பொம்மைகளை வைத்து இயக்கப்படும் பிக்பொஸ்ஸ் தொடர்நிகழ்ச்சிகள் சூடேற்றும்பொழுதிலும் நம்மிலே சிலர் ஜூலை 83 இனையும் மே 09 இனையும் இன்னமும் மறக்கவில்லை; மறக்கவும் போவதில்லை.

Thursday, July 13, 2017

வீர சந்தானம்

பட மூலம்: தளவாய் சுந்தரம்

உயிர்நனைத்த ஓவியங்களுக்கும் ஒத்த உரிமைக்குரலுக்கும் மெத்த நன்றி.
சென்று வருக!

Thursday, July 06, 2017

திருகோணமலை இந்துக்கல்லூரியும் சிறப்புவிருந்தினரும்திருகோணமலை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுவிழாவுக்கு இந்தியத்துணைத்தூதரக அதிகாரி நடராஜனைச் சிறப்பு விருந்தினராக அழைத்தது பற்றிய என் சொந்தக்கருத்து; கடந்த சில நாட்களாகச் சொல்லாமலே தவிர்க்க முயன்றேன். ஆனால், இன்றைக்குக் கண்ட ஒரு விளக்குமாற்றுவிளக்கத்தின் பின்னாலே சொல்லாதிருக்க முடியவில்லை;


இந்தியத்தூதரகமும் இராமக்கிருஷ்ணசங்கமும் ஒன்றல்ல. இராமகிருஷ்ணசங்கம் அரசியல் அமைப்பல்ல (விவேகானந்தரின் இந்துப்புத்தெழுச்சி அரசியலை அது வந்த காலத்தையிட்டு விட்டுவிடலாம்).   ஆனால், இந்தியத்தூதரகம் இந்தியாவின் நலனை ஈழத்திலே நுழைப்பதற்காகமட்டுமே இயங்குவது.


நடராஜன் என்ற ஆசாமி அவரின் நாடான இந்தியாவின் நலனுக்காக மட்டும் எதையும் செய்யக்கூடியவர்; யாழ்ப்பாணத்திலே ஹிந்தியினைக் கற்பிக்கவும் ஹோலிப்பண்டிகையை நடத்தவும் முனைகின்றவர். யாழ்ப்பாண Managers’ Forum இலே “யாழ்ப்பாணப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது எப்படி?” என்று ‘அழைப்புக்கு’ இணங்கிப்போய் விரிவுரையாற்றுகின்றவர். இந்தியாவின் விரல்கள் எம்மீது எவ்வண்ணம் விளையாடுகின்றதென்று நாம் அறியாதவர்களில்லை. சாம்பற்றீவின் லக்ஷ்மிநாராயணர் கோவிலைப் போன்ற பிரமாண்டத்தை தனியொருவர் கட்டினார் என்று நாம் எவருமே நம்பவில்லை; அதன் பின்னே இயக்கும் விசைகளை நமக்குத் தெரிகின்றது. உள்நாட்டின் ஆசாரிகளுக்கும் அம்புலன்ஸ் ஓட்டிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலையில்லாமலிருக்க, இந்தியாவிலிருந்து அழைப்போம் என்று அழைக்கும் நிலையிலே கொணர்ந்து எம்மைத் தள்ளியதிலே இந்தாளின் இந்தியத்துணைத்தூதரகத்துக்கும் பங்குண்டு.  சொல்லப்போனால்,  ஈழத்திலே இயல்பாகவிருந்த சைவத்தினை அழித்து, இந்தியாவின் வைஷ்ணவம், அனுமான், சாஸ்தா எல்லாம் உள்ளடங்கிய இந்து'த்துவா'ப்பொதியினை நம் பண்பாடு என்று திணித்துப் பொதிக்கும் சிக்கலைக் காண்கிறோம். சம்பந்தமேயற்ற அப்துல் கலாம் சிலையை யாழ்ப்பாண நூலகத்திலே வைத்துத் தலையாட்டிய வெட்கக்கேட்டினை ஒத்த நிலையையே இப்போது நம் இந்துக்கல்லூரியும் செய்திருக்கின்றது. நாம் இந்தியாவின் பொதிப்பண்டங்களோ பிதிர்ப்பிண்டங்களோ அல்ல.  யாழ்ப்பாணத்திலும் ஈழத்தின் மற்றைய பகுதிகளிலும் இந்தியாவின் துணைத்தூதரகத்தின் கை எவ்விதம் அழுத்தி விரிகின்றதென்று அறிந்த பின்னும் நாம் இந்துக்கல்லூரியிலே இந்தாளுக்கு ஓர் அழைப்பினைக் கொடுத்திருக்கவேண்டுமா?


சொந்த இந்திய நாட்டிலே சக மனிதர்களின் ஏழ்மையையும் சாதியத்தையும் திருத்தமுடியாத நாட்டின் தூதர்களெல்லாம் திருகோணமலை இந்துக்கல்லூரிக்கு அள்ளித்தருவார்கள் என்று நாம் நம்புகின்றோமானால், நம்வங்கம் தந்த பாடத்தினைக் கற்றுவிட்டும் மாலைதீவு ஓடிப்போய் இந்தியாவுக்குச் சேவை செய்து மாய்ந்த” ஈழப்போராட்டம் நமக்குத் தந்த அரசியலைப் பற்றியும் இத்துணை காலம் நமக்குத் தந்த பட்டறிவிலிருந்து நாம் கற்றுக்கொண்டது பற்றியும் சொல்ல எதுவாக மிஞ்சி இருக்கின்றது? ஒரு புறம் கிறீன் திருகோணமலையென்று இந்தியாவின் நிலக்கரி மின்னாலையை எதிர்க்கின்ற தலைமுறை ஒன்று; மறுபுறம், இந்திய நலனே நம் நலனெனக் கருதச் சொல்லும் அதன் தந்தைத்தலைமுறை வேறொன்று. இந்தியாவின் துணையுடான இத்தனை கொடூரங்களும் கொலைகளும் எமக்கு இழைக்கப்பட்டபின்னரும் இந்தியத்தூதரகம் நம் நலனுக்காக உதவும் என்று எப்படியாக நாம் எதிர்பார்க்கின்றோம்?


இந்துக்கல்லூரியும் மற்றைய திருகோணமலையின் நகரினைச் சார்ந்த பெருங்கல்லூரிகளும் தம் சுயத்தினைக் காத்துக்கொள்ளவேண்டும்.  இனிவரும் காலத்திலே வெளிநாடுகளிலிருந்து திருகோணமலைக்கு உதவ எண்ணுகின்றவர்கள், பெருங்கோபுரங்கள் கொண்ட பணமுதலைகளின் ஆலயங்களுக்கும் இந்தியாவின் பின்னாலே செல்லும் பெரும்பாடசாலைகளுக்கும் உதவாமல், கிராமப்புறங்களின் பாடசாலைகளுக்கும் எல்லையைக் காத்து இன்னமும் எமது இருப்பினை நிறுவும் சிறுகிராமக்கோவில்களுக்கும் கொடுக்கவேண்டும்.


இந்துக்கல்லூரி என்னைப் போன்ற பலருக்கு அடிப்படைக்கல்வியினைத் தந்து வாழ்க்கையை அமைத்துத் தந்தது; ஆனால், இப்படியான இந்திய நலனைப் பேணும் போக்கிலேதான் போகுமென்றால், நம் போன்றாரின் எளிய ஈடுபாடும் அக்கறையுங்கூட அற்றுப்போகும்.


 இந்தியா ஆட்சியதிகார இயாப்பின்படி ஒரு சைவ நாடு அல்ல - சிங்கள பௌத்த வெறியர்களுக்கு ஈடான மாட்டிறைச்சி தின்னுகின்ற முஸ்லீம்களைக் கொல்லும், ஹிந்தியைத் திணிக்கும் இந்துத்துவா அரசு ஆட்சியிலிருந்தாலுங்கூட. கிறீஸ்தவ அமைப்புகளும் முஸ்லீம் அமைப்புகளும் செய்யும் திட்டமிட்ட மத நடவடிக்கைகளுக்குப் பதிலாகச் செயற்படுகின்றோமென்று எண்ணிக்கொண்டு, இந்தியாவினை இந்துக்கல்லூரி உதவிக்கு அழைக்கமுடியாது. சைவ அமைப்புகளை நாடுங்கள். மேலாக, புலம்பெயர்ந்த இந்துக்கல்லூரியின் மைந்தவர்களை அணுகுங்கள். அவர்கள் செய்வதற்கு எத்தனையோ உண்டு. செய்யக்கூடும். ஆனால், தயைகூர்ந்து இந்தியாவின் நலனைமட்டுமே கொண்டு நடக்கும் நடராஜன் போன்றவர்களை அழைத்து, உதவும் பழைய மாணவர்களிலே கணிசமானவர்களையும் விலகச் செய்துவிடாதீர்கள். பழையமாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர் பலரின் சேவைகளைத் தூர இருந்து எடுத்தெறிந்து விமர்சிப்பதை நான் இங்கே செய்யவில்லை என்று நம்புகிறேன். இவ்வமைப்பிலே இருக்கின்றவர்கள், அதிபர், உப அதிபர் உட்பட்ட பலரோடு கூடப் படித்தவன், நாற்பத்தைந்தாண்டுகளுக்கும் மேலான காலத்து நண்பன் என்றளவிலே கூடப்படித்த பாடசாலை குறித்த ஆதங்கத்திலே எழுதிய தனிப்பட்ட என் கருத்து மட்டுமே இது.