Thursday, July 06, 2017

திருகோணமலை இந்துக்கல்லூரியும் சிறப்புவிருந்தினரும்



திருகோணமலை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுவிழாவுக்கு இந்தியத்துணைத்தூதரக அதிகாரி நடராஜனைச் சிறப்பு விருந்தினராக அழைத்தது பற்றிய என் சொந்தக்கருத்து; கடந்த சில நாட்களாகச் சொல்லாமலே தவிர்க்க முயன்றேன். ஆனால், இன்றைக்குக் கண்ட ஒரு விளக்குமாற்றுவிளக்கத்தின் பின்னாலே சொல்லாதிருக்க முடியவில்லை;


இந்தியத்தூதரகமும் இராமக்கிருஷ்ணசங்கமும் ஒன்றல்ல. இராமகிருஷ்ணசங்கம் அரசியல் அமைப்பல்ல (விவேகானந்தரின் இந்துப்புத்தெழுச்சி அரசியலை அது வந்த காலத்தையிட்டு விட்டுவிடலாம்).   ஆனால், இந்தியத்தூதரகம் இந்தியாவின் நலனை ஈழத்திலே நுழைப்பதற்காகமட்டுமே இயங்குவது.


நடராஜன் என்ற ஆசாமி அவரின் நாடான இந்தியாவின் நலனுக்காக மட்டும் எதையும் செய்யக்கூடியவர்; யாழ்ப்பாணத்திலே ஹிந்தியினைக் கற்பிக்கவும் ஹோலிப்பண்டிகையை நடத்தவும் முனைகின்றவர். யாழ்ப்பாண Managers’ Forum இலே “யாழ்ப்பாணப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது எப்படி?” என்று ‘அழைப்புக்கு’ இணங்கிப்போய் விரிவுரையாற்றுகின்றவர். இந்தியாவின் விரல்கள் எம்மீது எவ்வண்ணம் விளையாடுகின்றதென்று நாம் அறியாதவர்களில்லை. சாம்பற்றீவின் லக்ஷ்மிநாராயணர் கோவிலைப் போன்ற பிரமாண்டத்தை தனியொருவர் கட்டினார் என்று நாம் எவருமே நம்பவில்லை; அதன் பின்னே இயக்கும் விசைகளை நமக்குத் தெரிகின்றது. உள்நாட்டின் ஆசாரிகளுக்கும் அம்புலன்ஸ் ஓட்டிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலையில்லாமலிருக்க, இந்தியாவிலிருந்து அழைப்போம் என்று அழைக்கும் நிலையிலே கொணர்ந்து எம்மைத் தள்ளியதிலே இந்தாளின் இந்தியத்துணைத்தூதரகத்துக்கும் பங்குண்டு.  சொல்லப்போனால்,  ஈழத்திலே இயல்பாகவிருந்த சைவத்தினை அழித்து, இந்தியாவின் வைஷ்ணவம், அனுமான், சாஸ்தா எல்லாம் உள்ளடங்கிய இந்து'த்துவா'ப்பொதியினை நம் பண்பாடு என்று திணித்துப் பொதிக்கும் சிக்கலைக் காண்கிறோம். சம்பந்தமேயற்ற அப்துல் கலாம் சிலையை யாழ்ப்பாண நூலகத்திலே வைத்துத் தலையாட்டிய வெட்கக்கேட்டினை ஒத்த நிலையையே இப்போது நம் இந்துக்கல்லூரியும் செய்திருக்கின்றது. நாம் இந்தியாவின் பொதிப்பண்டங்களோ பிதிர்ப்பிண்டங்களோ அல்ல.  யாழ்ப்பாணத்திலும் ஈழத்தின் மற்றைய பகுதிகளிலும் இந்தியாவின் துணைத்தூதரகத்தின் கை எவ்விதம் அழுத்தி விரிகின்றதென்று அறிந்த பின்னும் நாம் இந்துக்கல்லூரியிலே இந்தாளுக்கு ஓர் அழைப்பினைக் கொடுத்திருக்கவேண்டுமா?


சொந்த இந்திய நாட்டிலே சக மனிதர்களின் ஏழ்மையையும் சாதியத்தையும் திருத்தமுடியாத நாட்டின் தூதர்களெல்லாம் திருகோணமலை இந்துக்கல்லூரிக்கு அள்ளித்தருவார்கள் என்று நாம் நம்புகின்றோமானால், நம்வங்கம் தந்த பாடத்தினைக் கற்றுவிட்டும் மாலைதீவு ஓடிப்போய் இந்தியாவுக்குச் சேவை செய்து மாய்ந்த” ஈழப்போராட்டம் நமக்குத் தந்த அரசியலைப் பற்றியும் இத்துணை காலம் நமக்குத் தந்த பட்டறிவிலிருந்து நாம் கற்றுக்கொண்டது பற்றியும் சொல்ல எதுவாக மிஞ்சி இருக்கின்றது? ஒரு புறம் கிறீன் திருகோணமலையென்று இந்தியாவின் நிலக்கரி மின்னாலையை எதிர்க்கின்ற தலைமுறை ஒன்று; மறுபுறம், இந்திய நலனே நம் நலனெனக் கருதச் சொல்லும் அதன் தந்தைத்தலைமுறை வேறொன்று. இந்தியாவின் துணையுடான இத்தனை கொடூரங்களும் கொலைகளும் எமக்கு இழைக்கப்பட்டபின்னரும் இந்தியத்தூதரகம் நம் நலனுக்காக உதவும் என்று எப்படியாக நாம் எதிர்பார்க்கின்றோம்?


இந்துக்கல்லூரியும் மற்றைய திருகோணமலையின் நகரினைச் சார்ந்த பெருங்கல்லூரிகளும் தம் சுயத்தினைக் காத்துக்கொள்ளவேண்டும்.  இனிவரும் காலத்திலே வெளிநாடுகளிலிருந்து திருகோணமலைக்கு உதவ எண்ணுகின்றவர்கள், பெருங்கோபுரங்கள் கொண்ட பணமுதலைகளின் ஆலயங்களுக்கும் இந்தியாவின் பின்னாலே செல்லும் பெரும்பாடசாலைகளுக்கும் உதவாமல், கிராமப்புறங்களின் பாடசாலைகளுக்கும் எல்லையைக் காத்து இன்னமும் எமது இருப்பினை நிறுவும் சிறுகிராமக்கோவில்களுக்கும் கொடுக்கவேண்டும்.


இந்துக்கல்லூரி என்னைப் போன்ற பலருக்கு அடிப்படைக்கல்வியினைத் தந்து வாழ்க்கையை அமைத்துத் தந்தது; ஆனால், இப்படியான இந்திய நலனைப் பேணும் போக்கிலேதான் போகுமென்றால், நம் போன்றாரின் எளிய ஈடுபாடும் அக்கறையுங்கூட அற்றுப்போகும்.


 இந்தியா ஆட்சியதிகார இயாப்பின்படி ஒரு சைவ நாடு அல்ல - சிங்கள பௌத்த வெறியர்களுக்கு ஈடான மாட்டிறைச்சி தின்னுகின்ற முஸ்லீம்களைக் கொல்லும், ஹிந்தியைத் திணிக்கும் இந்துத்துவா அரசு ஆட்சியிலிருந்தாலுங்கூட. கிறீஸ்தவ அமைப்புகளும் முஸ்லீம் அமைப்புகளும் செய்யும் திட்டமிட்ட மத நடவடிக்கைகளுக்குப் பதிலாகச் செயற்படுகின்றோமென்று எண்ணிக்கொண்டு, இந்தியாவினை இந்துக்கல்லூரி உதவிக்கு அழைக்கமுடியாது. சைவ அமைப்புகளை நாடுங்கள். மேலாக, புலம்பெயர்ந்த இந்துக்கல்லூரியின் மைந்தவர்களை அணுகுங்கள். அவர்கள் செய்வதற்கு எத்தனையோ உண்டு. செய்யக்கூடும். ஆனால், தயைகூர்ந்து இந்தியாவின் நலனைமட்டுமே கொண்டு நடக்கும் நடராஜன் போன்றவர்களை அழைத்து, உதவும் பழைய மாணவர்களிலே கணிசமானவர்களையும் விலகச் செய்துவிடாதீர்கள். பழையமாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர் பலரின் சேவைகளைத் தூர இருந்து எடுத்தெறிந்து விமர்சிப்பதை நான் இங்கே செய்யவில்லை என்று நம்புகிறேன். இவ்வமைப்பிலே இருக்கின்றவர்கள், அதிபர், உப அதிபர் உட்பட்ட பலரோடு கூடப் படித்தவன், நாற்பத்தைந்தாண்டுகளுக்கும் மேலான காலத்து நண்பன் என்றளவிலே கூடப்படித்த பாடசாலை குறித்த ஆதங்கத்திலே எழுதிய தனிப்பட்ட என் கருத்து மட்டுமே இது.

No comments: