Saturday, August 30, 2008

தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்

தமிழ்நதியின் இன்றைய இடுகையைப் பார்த்தேன். கிங்கும் அதே படங்களோடு இடுகையிட்டிருந்தார். தமிழ்நெற்றிலே காணக்கிடைக்கும் படங்கள் இன்று காலை முதல் உள்ளே பிழிந்து கொண்டிருக்கிறன. 'பிழிந்து கொண்டிருக்கின்றன" என்று சொல்வது அதீதப்படுத்திய, செயற்கையான சொற்றொடராகவே எப்போதும் எனக்குப் படும் - சென்னைச்சன்சீரியல்கள் உட்கொள்ளாத பேர்வழியாக நானிருக்கும்போதுங்கூட; ஆனால், இப்படியான அவப்படங்கள் மட்டுமே அப்படியான 'பிழிகிறன" என்பது வெறுமையான அதீதப்படுத்தப்பட்ட சொல் அல்ல என்பதை உணர்த்தி நிற்கின்றன.

இங்கே துயரமான சூழ்நிலை என்னவென்றால், இப்படியான படங்களை வெளியிட்டு, இந்நிலைக்கு வர முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளே காரணம் என்று ஐக்கிய இலங்கை ஆலாபனை, அமார்க்சிச நிரவல், மனிதாபிமான நிறுவல் முயற்சித்து முடிக்கும் புலம்பெயர்ந்த தலித்-பெண்ணிய-மனிதவுரிமை-முற்போக்கு-வயிற்றுப்போக்கு ஆசாமிகளும் அவர்களின் இணையத்தளங்களிலேகூட வெளிப்படையாக மாற்றுக்கருத்தினைத் தெரிவிக்கமுடியாத தன்மையும் இவ்வகைத்தளங்களையும் இந்த ஆசாமிகளையும் ஈழத்தமிழர்களின் புரட்சிகரமாற்றுச்சக்திகளின் பற்றவைத்த வெடிகுண்டுத்திரிகள் என்று இந்தியக்குரங்காட்டி வித்தைக்காரர்கள் முன்வைப்பதுமே.

அண்மையிலே தேசம் இணையத்தளத்திலே வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றுக்கு மாற்றான கருத்துகளைச் சொந்தப்பெயரிலில்லாமல் பின்னூட்டமாகத் தெரிவித்திருந்தேன். ஓரிரண்டு வரவேயில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஆனால், ஒரு பின்னூட்டம் கருத்து மாறாட்டம் தரும் வகையிலே வெட்டப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இப்பின்னூட்டம், அரசியல் குறித்ததேயல்ல. இன்னொரு பின்னூட்டம் அப்படியே நீக்கப்பட்டு, ஆனால், எனது பின்னூட்டப்பெயரிலேயே என் கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு வரியிலே சொல்லப்பட்ட கட்டுரைக்கு ஆதரவானதுபோல ஒரு வரிக்கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. இதுதான் இவர்களின் மாற்றுக்கருத்தினையும் கேட்கும் சுதந்திரம். இதனைக் கேள்வி கேட்பது சிக்கலான காரியமல்ல. ஆனாலும், என்ன பயன்? இவர்களுக்கு, செல்வி, சிவரமணி தொடக்கம் செல்லடித்துச் சாகும் சிறு குழந்தைகள்வரை வெறுமனே விடுதலைப்புலிகளைத் திருவிழாக்காலத்திலே வறுத்துக்கொட்டி விற்பனைக்கும் விளம்பரத்துக்கும் விட உதவும் வெந்தணல் குந்திய தாய்ச்சிச்சட்டிமட்டுமே. விடுதலைப்புலிகளுக்குக் காசு சேர்ப்பது பற்றி பக்கம் பக்கமாக "புல்லன் ஆய்வு" செய்து ஒட்டிக்கொள்ளும் இப்படியான இணையத்தளங்களின் முழுநேரச்செய்திபரப்பாய்வாளத்தொண்டர்களும் இலங்கை+இந்திய அடிக்கடி_திக்விஜயர்களும் எட்டுத்திக்கும் கொட்டிமுழக்கும் வானொலி அண்ணா, மாமா, ஐயாக்களும் அகில இலங்கை அந்நியோன்ய சனநாயகப்பேரவை அமைப்பாளர்களும் எங்கிருந்து தாம் சங்கநிதி, பதுமநிதி பெற்றுக்கொள்கின்றனரென்று ஒருபோதுமே சொல்வதில்லை. தமக்குத்தாமே தலித்தியப்புயல், பெண்ணியக்கயல், பின்நவீனவயல், அமார்க்ஸியமயில், மனிதநேய ஒயில் என்றெல்லாம் பட்டம் சூடிக்கொள்ளும் புரட்டுகரச்சகதிகளிடம் நாமும் கேட்கமுடியாதல்லவா? நம்மைப்போலக் கேள்வி கேட்பனவெல்லாம், கேள்வி கேட்ட கணத்திலிருந்து ஆறுநாள் யாழ்ப்பாணிப்பாசிசத்திலே ஆழ ஊறவைத்துச் செய்யப்பட்ட வன்னிப்புளிப்பயற்றம்பணியாரங்களல்லவா?

நண்பர் ஒருவர் அண்மையிலே சொன்னது; "இப்படியான வைக்கோல் மாட்டுச்சத்திகள் ஈழத்தமிழரின் பிரதிநிதிகள் என்று ஆகாதிருப்பதற்கேனும், விடுதலைப்புலிகள் இருந்தாகவேண்டும் என்பதுதான் யதார்த்தமாய்ப் போச்சு நிலை." அவ்வகையிலே எனக்கு அக்கருத்திலே துமியேனும் மாற்றுக்கருத்தில்லை. (கூடவே, அவர் இன்னொன்றையும் சொன்னார்; "இவங்களின்ரை தளங்களிலை பின்னூட்டமிடுறதும் மிச்சம் கவனம். ஐபி, ஆராருக்கு எதெதுக்குப் போகுதெண்டு ஒருத்தருக்கும் தெரியாது" அடப்பாவிகளே, ஆயிரம் முரண் அவர் பற்றியிருந்தாலுங்கூட, "கவிஞர்" சேரன் முறையான கலாநிதிப்பட்டமேதான் பெற்று (துணைப்)பேராசிரியராகத்தான் 'நாலாண்டு காலேஜ்' என்ற வகைக்கும் மேற்பட்ட கலாநிதிப்பட்டமும் வழங்கும் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்திலே தொழில் செய்கின்றார் என்று சொல்வதிலுமா கருத்தைச் செதுக்கிப் போட்டு, சொல்லுகிறவன் இணையமுகவரி இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் கொடுக்கும் மாற்றுக்கருத்து அபாயத்துள்ளே சொல்லுகிறவனைக் கொண்டு போய் பாசிசவரித்தோலும் காலிடைவளைவாலும் சேர நிறுத்தப்போகிறது!! உப்பிடியே இணையத்தளமெல்லாம் இலங்கை+இந்திய அரசுகளின் பிள்ளையார்பிடிக்களம் எண்டு நினைச்சால், "எங்கடை கருத்து எதிர்க்கிறவனெல்லாம் பாசிசப்புலி" எண்ட உவங்களுக்கும் உவங்கட கருத்தோட முரண்படுகிறவைக்கும் என்ன வித்தியாசமிருக்கப்போகுது?? :-()


நிற்க; இப்படியான படங்களினை வெளியிட்டு வேதனையை இணையத்திலே புலம்புவதுமட்டும் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. தம்பதிவிலே குசேலனுக்கும் தசாவதாரத்துக்குமிடையிலே இரண்டு வரி ஒப்பாரி வைக்கும் பெரும்பான்மையான இந்தியத்தமிழர்கள் எதையுமே ஈழத்தமிழருக்காகக் கிழித்துவிடப்போவதில்லை. தமிழகத்திலே ஒரு குருவிக்குஞ்சின் ஈனக்குரலிலேகூட ஈழத்தமிழர்நிலை குறித்து ஒலி எழுப்பாத இவர்களா ஏதேனும் நீங்கள் எழுதுவதை, போடும் படத்தினை வாசித்து, பார்த்துவிட்டு உணர்ச்சி வந்து இணையத்துக்கு அப்பாலே நடைமுறைக்குச் செயல்வினையாக ஏதேனும் கிழித்துக்கொட்டிவிடப்போகின்றார்கள்? நேரடியான எதிர்ப்புச்சக்திகளான இந்து ராம், சோ ராமசாமி போன்றவர்களை விட்டுவிடலாம். தமது தலைவன் கருநாநிதியின் வெளிப்படையான அண்மைக்கால ஈழத்தமிழர்எதிர்நிலையைக்கூட இல்லையென்று நியாயப்படுத்தவே குத்தி முறிந்து கரணம் போடும் தொண்டரடிப்பொடிகள்தான் தமிழகத்திலே ஈழத்தமிழர்களின் நண்பர்களென்றால், எதற்கு யாரிடம் இதையெல்லாம் சொல்லிப் புலம்புகின்றீர்கள்? இணையத்திலே வடிகட்டியெடுத்து, எண்ணி விடக்கூடிய தமிழக நண்பர்களே ஈழத்தமிழர்களின்மீது, போகிற போக்கிலே இரண்டுவரி ஒப்பாரிப்பின்னூட்டமிடுவதற்கு அப்பாலும், மிகக் கரிசனையோடு -நடிகர்களை வரவேற்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் பெருமடங்கு மேலாக- சிறப்புடன் செவ்வனே செயற்படுகின்றார்கள். அப்படியான மெய்யான கரிசனை கொண்டவர்களிலே பெரும்பான்மையோர் இப்போது தமிழகத்திலே வாழவில்லை என்பது எமது அவநிலை. மிகுதியாக, தமிழகத்திலே வாழ்ந்த தமிழ்நதி போன்றவர்கள் அவர்களது தமிழக நண்பர்களிலே ஒருவரையேனும், ஈழத்தமிழருக்காக இணையத்து இருசொட்டு ஈரப்பின்னூட்டத்துக்கு அப்பாலும் இரங்கி, தமிழக மண்ணிலே இறங்கிக் குரல் எழுப்பினாரென்று காட்டிவிட்டு, இதுபோன்ற அடுத்த இடுகையைப் பதிவு செய்ய வேண்டும். அல்லாவிடின், இணையத்தின் வெற்று -"கடமுடா"- ஓசைகளையே உயிர்த்துடிப்பு என்றெண்ணி, உண்மையாகவே ஈழத்தமிழர்களின் குரலுக்குப் பலம் சேர்க்கும் சுருதிப்பெட்டிகளாக எண்ணிக்கொண்டு பதிவிடுவது, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது மட்டுமே.

தமிழகத்திலே தமக்கான எதிரிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவோ எதிர்ப்போ கொண்டவர்கள் என்ற எண்பதாம் ஆண்டுகளின் எண்ணச்சிந்தையின்படி, ஈழத்தமிழர்கள் பற்றி இணையத்திலே எதிர்ப்பு/ஆதரவுப்பின்னூட்டமிடும் இந்தியா வாழும் இந்தியத்தமிழப்பதிவர்களிடையே ஈழத்திலே குழந்தை குண்டு விழுந்து சாவதைப் பற்றியோ, உயிரஞ்சி ஓடிக் காடுறைவது பற்றியோ பேசி எவ்விதமான பயனுமில்லை - எமது நேரத்தினை அவமே செலவழிப்பது தவிர. இணையத்தின் இருவரி காலம் மாற்றாத அச்சொட்டு ஆறுதல் வார்த்தைகளுக்கு அப்பால், தாம் காலூன்றியிருக்கும் மண்ணிலே எதையும் செய்ய முடியாத/முயலாத இவர்களிடம் என்னத்தினை எதிர்பார்த்து இப்படியான இடுகைகளைப் பதிவு செய்கின்றீர்கள்? ஈழத்தமிழர் என்று வரும்போது, குரல் எழுப்புவதிலே, சோ ராமசாமி, இந்து ராம், வாஸந்தி, மாலன் தீவிர பாரம்பரிய வாஸகர்களுக்கும் கருநாநிதி, அ. மார்க்ஸ் அடிப்பொடிகளுக்கும் நடைமுறைச்செயற்பாட்டிலே பெரிய வித்தியாசமில்லை; குறைந்த பட்சம் முன்னையவர்கள் நேரடியாகவேனும், எதிர்ப்பினைக் காட்டுகின்றார்கள் அல்லது குதறப் பதுங்கிச் சமயம் பார்த்திருப்பார்கள்; அவர்களை எமக்கு அடையாளம் கண்டுகொள்ள இலகுவாகவிருக்கின்றது. மற்றையவர்களை, பம்மாத்தா, பத்தரை மாற்றா என்று நாம் இனம் காண முன்னால், ஊரிலே பாதிச்சனம் மேலே போய்ச் சேர்ந்துவிடும் என்றே படுகிறது. அண்மைய நெடுமாறன்~கருநாநிதி விவகாரத்திலே, ஈழத்தமிழர்கள் ஆதரவுத் திமுகத்தொண்டுப்பதிவாளர்கள் போட்டிருக்கும் இடுகையும் பின்னூட்டங்களும் வலைக்குரலுக்கு அப்பால், நடைமுறையிலே இவர்கள் எவ்விடத்திலே எங்கே நிற்பார்கள் என்று நான் அண்மைக்காலத்திலே உணர்ந்து கொண்டதைத் தெளிவாக்கியிருக்கின்றது. அவர்களின் நிலை எனக்குப் புரிகின்றது. சோ+ராம்+மாலன்+வாஸந்தி குழாம் வாஸகவிமர்ஷகர்களின் ஈழநோக்கு கொடுவிடத்தன்மையோடு பார்க்கும்போது, இந்நண்பர்களின் சாரைப்பாம்புச்சரசரப்போட்டம் அத்துணை கெடுதலானதல்லத்தான். ஆனால், நெடுமாறன் பிரச்சனைக்கு அப்பாலே, கருநாநிதியின் ஈழத்தமிழர்கள் குறித்த இன்றைய செயற்பாடுகள் எதையுமே இவர்கள் பேசுவதில்லை - அவர்களுக்கு அது குறித்த அக்கறை உண்டென்று கொண்டாலுங்கூட.

தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்: வேண்டுமானால், ஈழம் குறித்து இனியும் கவிதை எழுதுங்கள்; தோழர்கள் கையைத் தட்டுவார்கள். ஆனால், நீங்கள் கொஞ்சம் நிதானித்து, உங்கள் கவிதையை நீங்களே இரண்டு நாட்களின் பின்னாலே வாசித்துப் பாருங்கள்; எண்பதுகளிலே வைத்த ஓலத்திலிருந்து, இன்றைக்கான எமது ஒப்பாரி (கவிதை என்று வாசிக்கவும்) எத்துணை மாறுபட்டிருக்கின்றதென்பதை; எண்ணிக்கைக்கு உதவும்; ஆனால், என்னத்தினைச் சாதிக்க உதவும்?

முடிந்தால், ஈழத்தமிழர்களின் அவலத்துக்காக பதிவுகளின் பின்னூட்டங்களிலே கண்ணீரை, செந்நீரை, தம் கணி(ச்)சொல்நீர்த்துத் தள்ளும் இந்தியா வாழும் தமிழ்க்குசேலர்கள் தாம் நடைமுறையிலே தம்நாட்டில் ஈழத்தமிழரின் அவலப்பொட்டணியை எக்கிருஷ்ணனுக்கு எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தார்களென்பதைத் தெரிந்து கொண்ட பின்னால், இப்படியான "விபரம்" சொல்லும் பதிவுகளைப் போட்டுத் தள்ளலாம். வலைப்பதிவிலே "Stop the killings of journalists" என்று ஒட்டிக்கொள்வதிலும்விட, தமிழகப்பத்திரிகைத்துறையிலேயிருக்கும் பதிவாளர்கள், தம் தொழிலைச் செய்ததற்காக, இன்னமும் விசாரணையின்றி ஸ்ரீலங்காவின் சிறையிலே கிடக்கும் திஸநாயகம், ஜதீஸ்கரன், வளர்மதி போன்றவர்கள் பற்றி, தமிழக/இந்தியப்பத்திரிகையாளர்களும் தமது எதிர்ப்புக்கருத்தினை தத்தமது ஊடகங்களிலே வெளியிட முயற்சி செய்திருக்கலாமே; மாட்டார்கள். ஏன்?

மர்மயோகியின் கதையென்ன? ட்ரெய்லர் வந்துவிட்டதா? ஐயோ! அக்குழந்தையின் முகம் மனதைப் பிழிகிறது. செல்வகணபதி இருக்கிறாரே.... ரித்திஷா? சாம் அண்டர்சனா? நல்லூர்க்கோவிலின் நாலாம் தெருவிலா!!

பிகு:
1. இவ்விடுகைக்கு, "ஓமோம்", "ஆமாம்" போட்டு, அதே பாத்தியிலே தண்ணீர் பாய்ச்சவிரும்புகின்றவர்கள், சக்தியையும் நேரத்தினையும் சேமித்துக்கொள்ளுங்கள். நமக்குள்ளே பழங்கதைகள் பேசி என்ன பயன்? 'நானும் நீங்களும் குந்தியிருந்து கட்டியணைத்து கந்தகநாசியர்க்கும் அந்தகக்குருடருக்கும் நிந்தகச்செவியருக்கும் வலைக்கூத்துக் காட்டுவதுபோல ஒப்பாரி வைப்பதினால் எப்பயனுமில்லை' என்பதுதான் இவ்விடுகையின் நீதி.

2. மேலே எழுதியதை வைத்துக்கொண்டு இந்தியத்தமிழர்களிடம் ஈழம் குறித்துக் குரல் எழுப்ப இரந்து கேட்கிறேன் என்று எண்ணிக்கொள்ளும் ஜர்னலிஸ்ட்ஜீக்களுக்கு, "அகதியாக இப்படியான ஈழத்தமிழர்கள் பற்றிய காழ்ப்புப்பதிவர்களும் பொழுதுபோக்குப்பதிவர்களும் குறிப்பிடத்தக்களவு வாழும் இந்தியா ஓடுவதிலும் அடிபட்டுத் தெருநாய்களாக என்னைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலே சாவதே மேல்" என்பதை அடிக்கடி உறுதியாகக் கூறும் என் பழைய ஜாங்கிரி இடுகைகளை டவுசர்களைப் பிய்த்துக்கொள்ளாமலும் தேசியக்கொடிச்சக்கரத்துக்குக் கீழே அகப்பட்டுக்கொள்ளாமலுமிருந்து வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்.

3. "நீயென்ன செய்து கிழித்தாய்?" என்று பதிலாகக் கேட்பவர்களுக்கு, "ஒன்றுமில்லை; ஆனால், நான்தான் போலி என்று ஊருக்கே தெரியுமே" என்றோ, "சக்தி, நேரம் சேர்ந்துக் கிழித்தும் பயனில்லாத எதையும் கிழிக்கப்புகாததே ஒரு பெருங்கிழிப்பு" என்றோ சொல்லிக் கொள்கிறேன்.


படமூலம்: தமிழ்நெற்.கொம் தளம், இந்திய அரசுத்தளம், ஓல்ற்றநெற் தளம்

சின்சினாட்டி வான்வரைவு

பாலைவனவண்டி

இரு பறவைகள்

Monday, August 11, 2008

புகாரூடு நடத்தல்

யானைப்படம்


கொப்பர் கூட்டிக்கொண்டு போன இடத்திலை கோச்சி வரும்; கவனம்


என் படங்களை ஒழுங்காகத் திரட்ட மறுக்கும் தமிழ்நிழத்தனமான காரியங்களைக் கண்டிக்கிறேன்.

இது திட்டமிட்ட படச்சுதந்திரத்துக்கெதிரான சதியெனப் இத்தால் ஈங்கு ஈண்டு பதிகிறேன்.

தனியாள் தாக்குதல்.


;-))

அது புளொக்கரின் சின்னதைப் பெரிசாக்குவதிலே வரும் எதேச்சைச்சதி....

Wednesday, August 06, 2008

படங்கும் கரித்துண்டும்


பழசோ பழசு


சச் சச் சச்

சச்சரித்துக்கொண்டிருந்தன எலிகள் - விட்டால்,
பற்கள் பெருகிச் செத்திடுவோம் என்னுமாப்போல்,
தம் முலகிற் சஞ்சரித்து, தலை
தட்டுத் தடவெனத் தாளமிட்டுக்
கை கொட்டிக் கொட்டிக்
குதூகலமாய்க் கூட்டம்போட்டு.

வழவழத்தோடி, வழி சறுக்கி, சொற்சலம் பெருக்க, ஒட்டித் தூக்கினேன் கால்;
கொழகொழத்து வெளிக்கொட்டாமல், பல்லிடுக்கில் ஒட்டிய துளிச் சொற்கள்
எகிறி, எட்டிக் குந்தின என்மீதும் குத்தின கூர்ந்தம்பால்.

சிற்றெலி சிதறப் பொறுக்கி வாய்
பேரெலி போட்டுப் போட்டதொரு பேரொலி கேட்டுப்
பார்த்தால், மிச்ச எலியெல்லாம் பேரொலி பிரித்துப்
பிளந்தன; பேசின; பின்னெல்லாம், பிய்த்த எச்ச சொச்ச
எதிரொலியிருந் தெழுந்தும் பிறந்தன பறந்தன பெரிதென,
பெயர், வினை, எச்சம்; எச்சத்துப் பிறவினை; வினையணை பெயர்...
... பல் தத்திடத் தடங்கிட, தாளம் சொல்......சச்சிட; சச் சச்;
சச் சச் சச்; சட சச்; சச் சச்; ச் ச் ச்; சச் சட் சட சட..

நிறுத்தம் வந்தது; இருக்கை வெளிக்க, எட்டினேன்; இறங்கினேன்.
தரித்தொரு கணம், முறித்து, தலை திருப்பிப் பார்த்தேன்;
முண்டியடித்துள் ஏறின மூவருள், சொல்லெலிச்சச்சரவால்
எட்டு வரியேனும் எவர் எழுதுவார் இனிக் கவி?

'05 மே, 16 திங். 15:20 கிநிநே.


ஒரு நாய்க்கவிதை

நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.

வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.

ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.

கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.

'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.


முறுக்காமற் கிட

போகின்ற பாதையிலே புடுங்கிப்போடுகிறாய் புதர்முள்;
ஒரு சொல் பேசாமற் போகிறேன்; சுற்றி முன் போய், விடாது
போகக்கூடிய வெளிப்புல்லிற்கூட முள்ளைத் தழைக்கிறாய்.

உனக்குத் தெரிந்ததெல்லாம் வகிடெடுத்து வகுத்த தெருவில்,
வரைந்த வயல்வரம்பில், திசை கிடத்திக் கிழித்த நீர் வாய்க்காலில்
தேரும் ஏரும் படகும் ஆள் காட்ட வழி நகர்த்துதல்.

வெளியில் அடுத்தான் விதை கிள்ளி அள்ளிப்போட்டுக்கொண்டு
பெருமரம் முளைப்பார் பாவனையில் முயங்கக் கிடக்கிறது முழுத்தேசமும்.
முழுத்தேசமென்றால், உன் பூச்சித்தேகமும் அடங்கும் பார் அதனுள்ளே.

"எனக்கென்ன? கிடக்கட்டும் விடு" என்றிருக்க நான், சொல்,
தன்பாட்டில் விரல் முடக்கிக் கிடப்பான் குறியை முறுக்குவானேன் நீ?

'05 Feb., 14 04:22 EST


படுக்கவிடுவாயா பாம்பை?

நாட்டுப்பட்டறைக்கு அப்பாலே படர்வது என் தாவரம்;
வைத்திருக்கும் கையுளியால் உனக்குப் பட்டதை, கொத்து, கொந்து;
உன் உளி; உன் வழி; உன் இஷ்டம்; ஆனால்,
விட்டுவிடு படாத அடர்வனத்தை பரந்து படர்ந்திருக்க.
பட்டறை, சிந்தைக்குட்படு செத்த கட்டைச் சிலும்பாச் சிலைக்குதவும்;
எதேச்சை ஒரு சுயேட்சை இலை வெடிக்க என்றேனும் இயலுமா?

உளி செதுக்கிக் காய் காயமரப்பட்டறைக்கப்பாலே
கால் தன்னிச்சைப்படி ஏறிப் படர்வதென் பெருவனம்.

ஓய வனம் படுக்கும் பாம்புவால் மிதிப்பாயா,
இல்லை, பையத் திரும்பி,
பாதம் வந்த திசை நோக்கி மெல்ல நடப்பாயா,
நீ?

'05 Feb., 14 02:54 EST


வால்களும் குதிகளும்

குரங்கின் வாலும் நாயின் வாலும்
குழைத்துப் புனைந்ததென் கூர்ப்பு வால்.
எரிகின்ற முனையும் குழைகின்ற திசையும்
எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.

விலங்கும் பூப்பூக்கும் தாவரமும் ஊனுண்ணும்
விந்தைப்பூமியிலே உலவுன்றதென் குதிகள்.
கண்கள் அறுந்த காலக்குமிழிற் கிளர்ந்து
குதித்துக் குதித்துக் குதிர்ந்தெல்லாம் பெருங்குதிகள்.

அடுத்த விலங்கின் ஆதர்சம் காண் கண் துடித்து விளையாது
அந்தக விலங்கின் வால் விரிவின் செவ்வெரிவும் தண்குழைவும்.

ஊன்றிக் குதி நடக்கின்ற நிலம் குறித்து வால் முளைக்கின்ற
குருட்டுவிலங்கொன்றின் நீள்மூக்கிற் துளிர்ப்பது புறப்பார்வை.

விழியறு விந்தைப்பூமிக்குள் வில்லெடுப்பார் வேண்டாதார்.

'05 Feb., 14 03:23 EST


கோடு போடுதல்

தான் தோன்றி
நெடுக்கப் போடுகிறேன் கிடைக்கோடு
குறுக்காய்
செங்குத்தி உன் நிலைக்கோடு
அடி இரண்டு பக்கம் நகர்ந்து
போடுகிறேன் இன்னோர் நெடுங்கிடை
உயர்ந்து நிலை இரண்டடியாய்
கிளைக்கிறது உன் குறுக்குநிலை.
அடுத்து எழுந்து அடி உயர்ந்து நான்
போடும் கோடு,
எனக்குக் குறுக்கு, உனக்கு இணை
என்ற பின்னால், சடக்கென
எதுக்குச் சரிகிறது கிடையில்
உன் நெடுக்கு?

'06 ஜூலை 25 செவ். 09:44 கிநிநே.


கிளிப்போர்வீரன்

காலைத்தூக்கத்தின் கடைசியிலே
தனிக்கிளிப்போர்வீரன் கழிசுற்றி
வழிபோகக் கண்டேன் நான்;
அகல விழி கொண்டேன் பின் விரைந்து.

மெல்லாமலே மிரட்டுஞ்சொற்களை,
கூவித்தின்றும் கூட்டித்துப்பியும்
குறுக்கும் நெடுக்கும்
கொண்டுபோனான்;
கொட்டிக் கொட்டிக்
குதறிக்கொண்டும்கூட.

தனக்கு வெந்ததையே மீளமீள வெக்கைப்படுத்திப்போனான்;
சொல் மாளச் சொல் மாள, பையெடுத்துச்
சொன்னதையே வன்கதியிற் சுற்றிப்போனான்.

இல்லாத கேள்விகளுக்கும் இந்தா பதிலென்று
எடுத்தெறிந்தான் இங்குமங்கும்.
எதற்கு இதுவென்றால், அதற்குமோர்
அந்தரத்தே தான் தங்கும் அசிங்கப்பதில் தந்தான்.

வந்ததுவும் போனதும் தன்னடைக்கே தெளிவு என்றான்;
என்னதுவும் உன்னதுவும் எல்லாமே பொய்யென்றான்.
கண்ணைத் திறந்தால் கூர்க்காற்கைகொண்டு பொத்தினான்;
நான் நிலவைக் காணத்தானே தான்
கண்ணைக் கொண்டு பறத்தலென்றான்.

தத்தித்திரிந்தான் முன்னுக்கும் பின்னுக்கும்;
முடுக்கத்தில் முக்கிக் கழித்தான் சொட்டெச்சம்;
முரமுரவென்று மூக்குள் மூச்சோடு முனகினான்.

எந்த வினைக்கும் எதிர்ப்பட்டாரைக் குறை சொன்னான்;
தன் வினைக்கு முன்வினையைத் தானே முன்வைத்தான்.
கழுத்தைச் சுழித்தான்; சரித்தான்; வட்டக்கண்ணைப் படபடத்தான்;
அடர்ந்த அலகைமட்டும் அவதியிலே கொறிக்க வைத்தான்.

இறக்கை தறித்த கிளிப்போர்வீரன் தத்தலுக்கு,
ஏட்டுச்சுவடியினை இழுத்துக் கதை சொல்வதற்கு,
என்னத்தைப் பதிலாக இங்கே எழுதிவைக்க?

"அவதி அலகை மூடிக்கொள்; அறுந்த சிறகை முளைக்கச்சொல்;
விரைந்து பறக்கக்கல்; வெளியை மிதிக்கச்செல்.
கொறித்துக் கொறித்துக் குறை கொட்டித் திரிதலுக்கு,
கொவ்வை ஒன்றை ஒழுங்காய் எடுத்துருட்டி,
உண்டலகு மென்று தின்று மூடிக்கொள் நா"
என்றால் கேட்குமா இறகறுந்த அலகுக்கிளி?

தனிக்கிளிப்போர்வீரனின் போர்வையெல்லாம்
கேட்டலும் கிழித்தலும் பிதற்றலும் பீய்ச்சலுந்தான்.

"கழிசுழற்றும் கிளியெல்லாம்
கிண்ணிக்களி கண்டால்,
தண்ணீர்சுனை கண்டால்
என்ன செய்யும்?
என்னைப்போல்,
தின்னுமா, குளிக்குமா,
தினவெடுத்துத் திரியுமா?
என்ன சொல்வாய்?"
என்று கேட்டேன்.

பதிலொன்றும் சொல்லாமல்
காலைத்தூக்கத்தின் தனிக்கிளிப்போர்வீரன்
கழிசுற்றி கடந்துவழிபோகக் கண்டேன் நான்;
அசரும் விழி மூடிக்கொண்டேன்.
மோனத்தில் என்னைமட்டும்
மோகித்து மொத்தமாயொரு
வட்ட முடிச்சிட்டிருந்தேன்
மிச்சவிடிநேரத்துக்கு.

'01, ஜூன் 22, வெள்ளி 20:05 மநிநே


தளையுறாததும் தலைப்புறாததும் IX

அடுத்தாள் அடிப்பதற்காய் வாயில்
புடைத்துப் பருத்திருக்கிறது ஆராய்ச்சி மணி.
குலைக்காவேளையிற் குட்டிநாய்
பாதிக்கண் பொருத்தி படுத்திருக்கும்.
"உருக்குருக்கி ஒலியுரு வடித்தவன் யார்? - ஓசைப்படாது,
என் வாயில் தூக்கிக் கொழுவி முடித்தவன் யார்?"
கூறாமல், அடுத்தாள் தான் முன்னாள் முடித்த
பிடித்த நேரத்தில் முடிப்பிழுத்திழுத்து
அரற்ற அடிக்க வகை புடைத்திருக்கும்
என் வாசல் ஒரு மழுக்கு பழமுருக்குமணி.
முருக்கம் கதியால் வெறுமுதுகு இழுத்துக்கிழிப்பதுவாய்
போவான் வருவாள் பொல்லாப்புக்கெல்லாம்
என் வாயில் இழுத்து அடிப்பார் வாயிலெல்லாம்
உருக்கி வடித்து உருக்காவிக் கொணர்ந்து கொழுவார்
எனது வாயில் இழுத்தழுத்து அடித்துப்போவதினாற் பொழுது
இல்லாமலே நிம்மதியாய்க் காயும் ஏதுமின்றி அரற்றுமணி.

~13 மே 2004, வியாழன் 04:53 மநிநே.