Sunday, November 14, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு: மண்டகப்படிகள், மண்டையோடுகள், மண்டையுடைவுகள்

பேஸ்புக்கிலே அள்ளிப்போட்டு நண்பர் ஒருவருக்குப் பின்னூட்டங்களாக எழுதிய அவியல் அள்ளிக்குவிப்பான பதிற்குறிப்பின் நீட்சி கருதி வாசிக்கவேண்டிய ஒருவருக்காக, இங்கே


நடத்துகின்றவர்களின் நோக்கங்கள் எவையென்றாலும் நன்றே என்றுதான் முடிவின்றி வாதாட நேரமும் பொறுமையுமின்றி விட்டுவிடுவோம். இம்மகாநாட்டினை ஸ்ரீலங்கா அரசு எவ்வாறு தன் 'சமரசம் உலாவச்செய்யும் களமானது எம்நாடு' என பிறருக்குக் காட்டச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டி இதிலே கலந்து கொள்ளவேண்டாமென்று கேட்பது என் தரப்பு நிலை.



எச்சூழலிலே எவரிடையே என்ன சாதகமான கலாசார நல்லிணக்கப்பரிவர்த்தனை நிகழ்வுகள் சாத்தியமாகியிருக்கின்றன என்று சொல்லுங்களேன். அரசை விமர்சிக்காத பொதுவுடமைவாதிகளினதோ புலியெதிர்ப்பாளர்களினதோ புத்தக, பதிப்பவெளியீட்டு விழாக்கள்தானென்றாலுங்கூட, சிங்களமக்களிடையே இந்நிகழ்வுகள் எடுத்துச்செல்லும், சென்ற சேதிகள் என்ன?



யாழ்ப்பாண நூலகத்திலே இரு வாரங்களுக்கு முன்னாலே நிகழ்ந்ததைப் பற்றி எடுத்துச்சொல்லப்படுகிறதா? இன்றைய பிபிஸி சந்தேச சிங்கள செய்தியிலே வந்த பத்தாண்டுகளுக்கும்மேலாக அடையுண்டிருக்கும் தமிழ்க்கைதிகளைப் பற்றிப் பேசப்படுகின்றதா? இந்நிலையிலே எங்கே போருக்குப் பிந்தித் தொடங்கிய சாதகமான நல்லிணக்கப்பரிவர்த்தனை வருகின்றது?கேட்கமுடியாது முடங்கிக்கிடக்கவேண்டிய அவலத்தின் முனகலிலா? "அரிசியை நாம் கப்பமாய்க் கொணர்கிறோம்; உமியை நீவீர் ஒருபிடி கொணர்க; ஊதி ஊதி இருசாராரும் உண்போம்" என்பதிலா? இத்தனை பேர் நாய்கள் மாதிரியாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அதைக் கேட்பாரில்லை; அதை 100% இழைத்தவர்கள் பிடிக்காத காரணத்தினாலே 200% இழைத்தவர்களுக்கு விளம்பரம் எடுத்துக் கொடுக்கப்போகத்தான் வேண்டுமென்பதுமாதிரியாகத்தான் எனக்கு இது தொடர்பாகப் போகவேண்டுமென்று லெ. முருகபூபதியை வைத்து செவ்வியரசியல் நிகழ்த்துகின்றவர்கள் யாரெனக் காணும்போது தோன்றுகின்றது. இஃது எவ்வகையிலும் போகாதே என்பவர்களிலே எல்லோரினதும் நியாயங்களையும் ஆதரிப்பதாக ஆகாது. துரோகிகள் என்பதாக இதுவரைநாள் நானெங்கும் எவரையும் எழுதியறியேன் - தன் பிள்ளைகளுக்கொரு நீதி, ஊரார்பிள்ளைகட்கொரு நீதி வைக்கும் மேதைகளைக்கூட அப்படியாகச் சொல்லவில்லை. அதனால், கூட்டத்துக்குப் போவோர் துரோகிகள் என்றெல்லாம் என் கருத்தில்லை. ('இப்போதெல்லாம் எம்மைத் துரோகிகள் என்று சொல்லுங்கள்" என்று அறிக்கை விடுவதெல்லாம் "நான் உங்களுக்காக உரோமர் சிலுவையிலே அறையப்படுகிறேன் பாருங்களேன்" என்பதுமாதிரியாகப் படங்காட்டுவதைக் காணுகையிலே எரிச்சல் வருகின்றதா சிரிப்புவருகின்றதா என்று எனக்கே தெரியவில்லை :-() ஆனால், ஸ்ரீலங்காவின் ராஜபக்ஷ அரசின் பிரசாரப்பீரங்கிகள் இவ்விழாவினை எப்படியாகப் பயன்படுத்தும் என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்துகொண்டும் இவ்விழாவினை நிகழ்த்துகின்றவர்களும் முட்டிமோதிக்கொண்டு அவ்விழாவினைத் தாங்கிப்பிடிக்கின்றவர்களும் 200% ஸ்ரீலங்கா அரசுக்கு விளம்பரம் கொடுக்கின்றோமென்பதை அறிந்துகொண்டே செய்கின்றார்கள். அவ்விளம்பரம் யாழ்ப்பாணத்தமிழ்த்தேசியவெள்ளாளமேலாதிக்கத்தைப் பெரிதும் பாதிக்காத, ஆனால், அப்பெருங்குடியினால் 'ஒடுக்கப்பட்ட' வன்னி, கிழக்குமக்களின் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறையினையும் பெருங்கொலைகளினையும் பேரழிப்புகளையும் மறைத்துக்காட்டி, அவ்வரசினை உலக அரங்கிலே ஒதுக்கிவைக்கவோ நீதிவழங்கலுக்குட்படுத்தவோ 200% உதவவிடாது செய்கின்றதென்பதாலே இவ்விழாவிலே கலந்துகொள்ளக்கூடாதென்பது என் தனிக்கருத்து. இத்துணை கொடூரநிகழ்வுகளையும் போருக்குப் பின்னான இனங்களுக்கிடையேயான கலாசாரப்பரிவர்த்தனையிலே கொழும்பிலே வைத்து எல்லோரும் கேட்கச்சொல்லமுடியுமென்று சொல்லுங்கள்; அப்படியான நேரத்திலே அடுத்தபக்கத்திலிருந்து இதனை என்றோ புரிந்துகொண்டிருக்கின்றோமென்று -இதுவரை நாள் பதினெட்டு மாதங்களாகியும் கேட்காத -ஆறுதலும் தேறுதலும் பகிரங்கமாகச் செய்திப்படட்டும்; 100% இம்மாநாட்டின் தேவையை ஒத்துக்கொள்கிறேன். 100% போருக்குப் பிந்தைய இலங்கையின் சாதகமான கலாச்சார நல்லிணக்கப் பரிவர்த்தனைகளில் மண்ணள்ளிப் போடுகிறது அறிவுசார் இறைமையறுசெயலென ஒத்துக்கொள்கிறேன்.



பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் வைத்துக்கொண்டு போரையும் இறையாண்மையையும் சுயநிர்ணயத்தினையும் கோடு வரைந்து கீறலின் எப்புறம் நாம் என்பதை வைத்துக்கொண்டு குதூகலிப்பதுதான் சாதகமான கலாசாரநல்லிணக்கப்பரிவர்த்தனையென்றால் அறிவுசார் இறைமையும் முழுமையும் நிறைந்த செயலென்றால் சொல்வதற்கில்லை.



இது நாடுகடந்த தமிழீழத்தார், தேசங்கடந்த ஸ்ரீலங்கர் என்பதல்ல பிரச்சனை. சர்வதேசத்தமிழர் என்றால் எவரும் மூக்கை நுழைக்கலாம். அதுவும் தமிழ் எழுத்தாளர் என்றால், எளுத்துப்பிலையோடு எழுதும் பிறபள பதிவார்களும் வாலை ஆட்டலாம். எதுக்கு எப்போதுமே புலிகளையும் நாடுகடந்தவர்களையுமே குற்றக்கூண்டிலே ஏற்றவேண்டும்? மாற்றுக்கருத்தாளர்கள் என்ன கேள்விக்கும் விமர்சனத்துக்கும் அப்பாலிருக்கும் கவசகுண்டலங்களுடனும் தொங்காட்டான்களுடனுமா பிறந்தார்கள்.



இத்தனைபேர் 100 மைல்கள் தொலைவிலே வன்னியிலும் கிழக்கிலும் செத்துக்கொண்டிருக்கையிலே கொழும்பு பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்திலே மறைந்துபோன மனித உரிமையாளர் பெயரை வைத்துக்கூட்டம் நடத்திக் மனிதத்தைக் காத்தபோது, இப்போது கூட்டம் கூட்டி எல்லோருக்கும் பண்பாட்டுப்பரிமாற்றம் செய்ய எண்ணும் நாம் ஒரு சொட்டுக்குரலையும் எழுப்பவில்லையே! அப்பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்திலே வரைமுறையற்று சுடுகலன்களின் எதேச்சைச்சரமாரிக்கு நிகழ்தகவின் அடிப்படையிலேமட்டும் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வாலும்வரியுமற்ற குழந்தைகளைப் பற்றிப் பேசாமல், எப்போதோ செத்துப்போன உறவின் பேரில் மனிதத்தை விற்று விளம்பரம் தேடியவர்கள் ஏன் அப்போது பண்பாட்டுப்பரிமாற்றம் வந்திருந்த மேற்தட்டு நுனிநாக்கு ஆங்கிலக்கறுவாக்காட்டுச்சீமான்களிடமும் சீமாட்டிகளிடமும் பண்ணமுடியவில்லை. நாமும் கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. அதே கூத்தே இங்கும் பரிமாற்றத்தின்பேரிலே அரங்கேறுமென்பதாலேதான் இதன் நிகழ்வின் -கொலைகார அரசியற்கலைஞர்களின் முகங்களைக் காக்கக்கூடிய- எதிர்காலப்பயன்பாடு பயத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்துக்கின்றது.



இப்படியான அடுத்தவரிடம் நாம் எதிர்பார்ப்பின்றி, கடந்ததின் 'ஞானம்' இன்றி நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது, பூனைக்கு மணிகட்டும் விளையாட்டு; நாயகன் பாணியிலே அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துகின்றேன் என்பதல்ல இங்கே நிகழ்வது. இங்கே நிகழ்வது இன்னமும் அழுத்தப்பட்ட நிலையிலே, நிகழ்ந்தவற்றுக்கெல்லாம் ஒரு பக்கத்தினை மட்டும் சாடிக்கொண்டு, மறுபக்கத்தினை எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தாது, அப்படியே நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு போவோமென்பது.... வெறும் பகவத்கீதை பாடிக்காட்டும் அறுதிமுழுச்ச்சரணாகதித்தத்துவமாகமட்டுமே எனக்குத் தோன்றுகின்றது. நம்பிக்கை என்பது வெறுமென கேள்வியற்றுத் தலையைச் சிங்கத்தின் வாய்க்குள்ளே வைப்பதாக ஆகாதென நினைக்கிறேன். இப்படியான நம்பிக்கை, நீங்கள் கூறும் அறிவுசார்ந்த இறைமைக்குட்படாது. கடந்தகாலத்தின் மழைப்பொழிவுகளை வைத்துக்கொண்டே, எதிர்காலத்தினை எதிர்கூறமுடிகின்றது.நம்பிக்கையைமட்டும் வைத்துக்கொண்டால், அறிவியலும் ஏரணமும் தேவையில்லை; வெறும் சந்திமரத்தடிக்கிளிச்சாத்திரியாரின் பறவை இழுக்கும் ஓலையே மழைவீழ்ச்சியைச் சொல்லப்போதுமானதாகிவிடுமே! இத்தனைநாட்கள் புரியாமலிருந்ததற்குப் புலிகள்தான் காரணமா? இன்றைக்கு நம்பிக்கை துளிர்விட்ட நேரத்திலே எத்தனை மறுபக்கத்திலிருந்து இப்பக்கத்துப்பார்வைகளிலே இருக்கக்கூடிய நியாயங்களையும் பயங்களையும் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்? அல்லது, புரிவார்களென்ற நம்பிக்கை உங்களுகிருக்கின்றது? இதனை நீங்கள் முதிர்ச்சியினை என்பது - சொல்வதற்கு மன்னிக்கவேண்டும் - உங்கள் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகின்றது. திரிபரசியல் இங்கே செய்கின்றவர்கள் யார்? "விடுதலைப்புலிகள் தலித்துகளையும் கம்யூனிஸ்டுகளையும் அடக்கி ஒழித்துத்தள்ளினார்கள்" என்று சொற்களை மிகநேர்த்தியாக விற்பனைக்கேற்பத் தேர்ந்து இந்திய ஆங்கிலப்பத்திரிகைக்குச் செவ்விகாணும் ஒருவரைவிடவா திரிபரசியலை நாம் எம் கண்முன்னே நிகழ்த்திவிடமுடியும்? இப்படியான ஒருவர் இம்மகாநாடு நடந்தேயாகவேண்டுமென்கின்றபோதுதான், 200% எனக்கு இம்மகாநாடு ஸ்ரீலங்கா அரசின் கோரமுகத்துக்குக் காப்பிடும் திரிபரசியலின் நீட்சியாகத் தோன்றிப் பயமுறுத்துகின்றது.



இலங்கை இனங்கள் ஒன்றுபட்டுப்போவதிலோ இலக்கிய, சளாப்பிய, சல்லாபக்கூட்டங்கள் நடப்பதிலோ எனக்கேதும் வருத்தமில்லை; மகிழவேண்டியவிடயமே. ஈழம் என்று பிரிந்துதான் விடுதலை என்றில்லை; புவியரசியற்காரணங்களாலே என்றும் அது நிகழுமென்றும் நான் எதிர்பார்த்ததில்லை. சொல்லப்போனால், அந்நாட்டிலே நான் வாழப்போவதுமில்லை. ஆனால், கோடரி கொண்டு வெட்டிய கைப்புண்ணுக்கு மருந்திடாது, அழகிய காப்பினைப் போட்டு அழகுபார்ப்பது நல்லுள்ளத்தின் செயலென நம்பமாட்டேன்; அஃது என்னைப் போன்றவர்களின் முதிர்ச்சியினமை என்றால் இருந்துவிட்டுப்போகட்டும். இழைக்கப்பட்டவற்றுக்கு உண்மையறிதலில்லாது இன்னமும் அழுத்திக்கொண்டு இணைந்து பேசிப் பரிமாறிப்புரிந்துகொள்வோமென்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இதுதான் நம்பிக்கை வளர்க்கும் முதிர்ச்சியான செயற்பாடென்றால், அறிவியல்சார் வருமழை எதிர்கூறுவானாக நான் முதிர்ச்சியற்றே இருக்கவிரும்புவேன் :-( தென்னிலங்கை மக்களுக்குப் போய்க் கன்னியாய், குருநகர், நாவற்குழி, மணியம்தோட்டக்குடியேற்றங்களைப் பற்றிப் புரியவைத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்போமென்றோ, சர்வதேசத்தமிழ் எழுத்தாளர் மகாநாட்டிலே சிங்கள இலக்கியவாதிகளை அரைமணிநேரம் கூட்டிப் பண்பாட்டுப்பரிவர்த்தனையிலே எல்லாம் புரியவைப்போமென்றோ நம்பிக்கை கொள்ளும் முதிர்ச்சி என்னிடமிருக்கமுடியாது..

மாநாடு நடப்பதால் குருதிசிந்துவதற்கான இன்னொரு நிர்ப்பந்தம் இல்லாதொழியுமென்பது நிகழுமென நம்பிக்கை தர முன்னாதாரத்துடன் சொல்லுங்கள். நிச்சயமாக சொல்கின்றவர்களுன் அப்படியே ஒத்துக்கொள்வேன். அப்படியான என் வாழ்விலே காணாச் சமரசம் உலாவுமிடமே எனக்குமான கனவென்பேன்; எல்லோருக்குமான கனவென்பேன். குருதி சிந்தாதிருத்தல் என்பது முக்கியமானதே. ஆனால், நாம் தவிர்ப்பதனாலே மட்டும் ஏதோ வகையிலே குருதி சிந்தும் நிர்ப்பந்தம் ஒழிந்துவிடுமா? வேண்டுமானால், சிறிதுகாலத்துக்கு ஒளிந்துவிடலாம். தமிழீழக்கனவென்பதெதையும் நான் விற்கவில்லை; விற்கவும் போவதில்லை. அதற்கான ஆயுதக்கிட்டங்கிகளிலே கனவுகளைப் புதைக்கவுமில்லை. ஆனால், சுயநிர்ணயமென்பதும் சமநிலையிலே சகமனிதனைப்போல வாழ்வதென்பதும் மிகவும் அவசியமானது. நான் பேசும்மொழிக்காக நான் தண்டிக்கப்படும்போது, நான் பிறந்த என்னிடம் என்னிடமிருந்து எப்போதும் கவரப்படலாமென்கிறபோது, குடியேற்றங்களை நியாயப்படுத்திக்கொண்டு பரிவர்த்தனைப் பரிமாற்றங்களைச் செய்வது குருதியைச் சிந்தச்செய்யாது, இனி வரப்போகும் என் குழந்தைகளுக்குச் ('என்' என்றால் மற்றவர்கள்போல அமெரிக்காவிலிருக்கும் உன்னுடையதா என்று கேட்கமாட்டீர்களெனத் தெரியும்) சரியானதைச் செய்யுமா? செய்தவற்றின் நியாயங்களை நியாயமாகக் கேட்காது, இன்னும் அழுத்திக்கொண்டு பேச்சுப்பரிவர்த்தனை செய்கின்றவர்களிடம் எனக்குப் பெற என்ன 'ஞானம்' இருக்கப்போகின்றது? இன்று குருதி சிந்தாது என்பது சரி; ஆனால், சிந்திய குருதிக்கான சரியான கேள்விகளைச் சம்பந்தப்பட்ட அத்தனை பேரிடமும் நிறுத்திக்கேட்காது, 100% பழியை ஒருவரிடம் போட்டுவிட்டு, 200% மற்றைய தரப்பினை மறைமுகமாகக் காப்பாற்றும் செயலுக்கு எவ்விதம் துணை போவது? இதைப் புரிந்து கொள்ளப் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ளும் மேதமையும் தேவையில்லை. ஸ்லோவேனியப்புதுச்சிந்தனையாளர்களைப் பின்பற்றவும் தேவையில்லை. இருக்கும் பட்டற்றிவினைச் சிறப்பாகப் பயன்படுத்துதலே போதுமானதெனப்படுகின்றது.

மீதிப்படி, இலக்கியச்சந்திப்பு என்பது கொழும்பிலே நிகழ்ந்தாலென்ன, ரொராண்டோவில் ஓடினாலென்ன, சென்னையிலே மிதந்தாலென்ன, பிரான்ஸிலே தவழ்ந்தாலென்ன, தான் தோன்றிமந்திகளின் மாந்தோப்பில் மாந்திக்குதிக்கும் களியென்பது என் தனிநம்பிக்கையாதலால், சொல்வதற்கேதுமில்லை.அடுத்தவன் விடாய்க்கு ஒரு கோப்பை தண்ணீரும் கொடுக்க வக்கணையற்ற இலக்கியம் தன் திமிர்த்த நானுக்கும் அடங்காவிடாய்களுக்கும் சொட்டு நிரப்பமட்டுமே உத்தமப்படுவது இலக்கியசந்திப்பு.



என் கருத்து; திணிக்கவில்லை; ஆனால், இப்படித்தான் விமர்சனபூர்வமாக அணுகமுடிகின்றது; நான் விடுமுறைக்காக அப்போதும் போகவில்லை; இப்போதும் போகவில்லை; இனிமேல் போகமாட்டேன் என்று அறிக்கையும் விடப்போவதில்லை; இலங்கையிலே முதலீடிடக் கையேதும் நிதியுமில்லை. அதற்காக இத்தனை நாள் புலிகளை நோக்கி நாவற்கிளை சாய்த்துக் கையைக் காட்டிக் கொண்டிருந்துவிட்டு அடங்கிய இந்தியதேசியப்புளிகளைப்போலவோ, மாற்றுக்கருத்துக்கு மாற்றுடையில்லாமல், இன்னமும் செத்தபுலிவாலிலே வரியிலே சிதிலம் சுரண்டி இன்னமும் 'முன்னைய புலி உறுப்பினர்' அடைப்பம் பெயர் முன்னிடும் பசித்த காயசண்டிகைகளைப் போலவோ விற்றிருப்பவர்கள்போலவோ சொல்கட்சி சார்ந்து சாயாது பந்தாடிக்கொண்டிருக்கவும்போவதில்லை.

இயன்றவரை கடந்த ஈராண்டுகளாக நானும் இப்படித்தான் இலாயக்கற்றவனென எஃதெப்படியோ நமக்கென்னெண்டிட்டுண்டிருமென்று தவிர்த்துக்கொண்டிருப்பேன். எப்படியாவது, எங்கேனும் உள்ளே ஓர் அச்சிலிசுக்குதிநரம்பு மேதமையாக இழுத்துக்கொள்ளும் ;-)

நாம் நிற்றல் பெரும்பான்மையற்ற பொழுதெல்லாம் உண்மையிலே பேச்சின்றியிருப்பது பெருநிம்மதி... என்ன, 'பேசவேண்டிய நேரத்திலே பேசாமல் விட்டுவிட்டோமே' என்று பிறிதோர் அவப்பொழுது மீள்தோன்றி நெருங்காலம் நெருக்கியறுக்கும். அதனாலே, அச்சிலிச்சுக்குதிநரம்பு நெம்ப ஆடவேண்டியதாகின்றது :-)

அவ்வளவே.