Saturday, December 31, 2005

குவியம் - 21


+ -
ன்னொரு கிரகோரியன் ஆண்டு கழிகிறது; ஆண்டுக்கூட்டலும் கழித்தலும் பெருக்கலும் பிரித்தலும் வாழ்த்துப்பரிமாற்றங்களின் அடைப்புக்குறிகளிடையே ஒலி, ஒளி, எழுத்தென்று சொல்லிப் பரவுகின்றன. ஆண்டுக்கணக்கீடு வேறெதற்கு உதவக்கூடும்? கட்டம்போட்டு நேரச்சட்டத்துள்ளே வெற்றி தோல்விகளையும் வரவு செலவுகளையும் சரிபார்த்துக்கொண்டு, வரப்போகும் சட்டத்துக்குள்ளே காலடி வைப்பதற்கான முன்னேற்பாடுகளுக்கு தயார்படுத்திக்கொள்கிறோம்; பலரோடு சேர்ந்து மகிழ்ச்சியடையும்போதும் உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளும்போதும், நம்பிக்கை அதிகரிப்பதுபோல உணர்கிறோமோ என்னவோ தெரியவில்லை. ஆனால், ஆண்டாண்டாக எடுக்கப்படும் உறுதிமொழிகளை வாழ்த்துகளை எதிர்பார்ப்புகளைக் கவனிக்கும்போது, Grounddog day திரைப்படத்திலே பில் முர்ரே திரும்பத் திரும்ப அதேநாளிலேயே எழுகிற சலிப்புணர்வுதான் வருகின்றது.

ஆனால், பொதுவாக, டிசெம்பர் 31 இலிருந்து ஜனவரி 01 தொடங்கும் கணத்தினை ஓர் அந்தரிப்பான கணமாகவே உணர்கிறேன்; கூட வந்த எதையோ இழக்கிறோம் என்ற உணர்வுக்கும் சுற்றியிருப்பவர்கள் கௌவிப்பிடித்துக்கொள்ளும் உற்சாகத்திற்கும் இடையிலே தொங்கித் தவிப்பதால், இவ்வுணர்வு ஏற்படுகிறதோ தெரியவில்லை. அதனால், கூட்டல் கழித்தல்களைப் பார்த்துக்கொள்ளும்விதமாக, 'புத்தாண்டி'ன் நள்ளிரவு கழியும் கணங்களிலே சிலவற்றினை தனியே எனக்கெனக் கைப்பற்றிக்கொள்கிறேன்.

இவ்வாண்டிலே மகிழ்ச்சியை ஏற்படுத்தியவை ஒரு புறமிருக்க, கழிந்தவற்றிலே தனிப்பட மிகவும் வருத்தமேற்படுத்திய செய்தி, சூறாவளி கதரினா விளைவான நிதிமீள்பங்கீட்டுப்பிடுங்கலிலே துலேன் பல்கலைக்கழகம் தன் நூற்றாண்டு கடந்த குடிசார்பொறியியல், இயந்திரப்பொறியியற்றுறைகளை இழுத்து மூடத் தீர்மானித்திருப்பது. ;-('05, டிசெம்பர். 31 சனி 22:30 கிநிநே.

~


நாளை மற்றுமொரு நாளேஇற்றைநாள் இனிது காண்க

~

Thursday, December 29, 2005

நெகிழ்வு - 1


Shadow & Mellow - 1


நிழல்

நெகிழ்வு
'05 டிசம்பர், 27 வியாழன்

மெருகூட்டப்பட்டதும் படாததுமான படங்கள்

மோல்டன் பட்டினம்,
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.
....

Thursday, December 22, 2005

கவின் - 11


3 in 1'05 டிசம்பர், 22 வியாழன் 15:39 கிநிநே.

எண்ணியமெருகூட்டப்பட்ட படங்கள்
ஸ்னெல் நூலக வகுப்பறைநடைகூடம்
நோர்த்ஸ்ரேன் பல்கலைக்கழகம்

பொஸ்ரன் நகர்,
மஸாஸூஸெட்ஸ் மாநிலம்,
ஐ.அ.நா.
....

சிதறல் - 113


Twilight Zone
'05 டிசம்பர், 21 புதன் மாலை.

எதுவித மெருகுமூட்டப்படாத படங்கள்

பொஸ்ரன் நகர்,
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.
....

Monday, December 19, 2005

சிதறல் - 112


Boston - Cold Afternoon'05 டிசம்பர், 19 திங்கள் 15:38 கிநிநே.

எண்ணியமெருகூட்டப்பட்ட படங்கள்

பொஸ்ரன் நகர்,
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.
....

Sunday, December 18, 2005

கந்தை - 40


Beating Around the Bush'2005 டிசெம்பர், 18 ஞாயிறு 21:20 கிநிநே..

துளிர் - 48


Night, Day & Light'05 டிசம்பர், 17 சனி

எண்ணியமெருகூட்டப்பட்ட படங்கள்

பைன் பாங்க்ஸ் பூங்கா, மோல்டன்,
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.
....

Saturday, November 19, 2005

புலம் - 17

"We do support the principles of democracy and support efforts to bridge the differences among Iraqis." - Secretary of State (USA) Condoleezza Rice, in her visit to Iraq, appeals to sunni arabs to participate in new national elections in december; 2005 Nov., 11

1942 இன் பின்னரை; வட ஆபிரிக்காவின் போர்முனை; பாலைவனத்துநரி என்று எதிரிகளாலும் விதந்தோதப்பட்ட ஜெர்மனியின் தளபதி எட்வின் உரோமல் (Edwin Rommel) பிரித்தானியத்தளபதி பேர்னார்ட் மொண்ட்கோமரியினால் (Bernard Montgomery) பின்வாங்குநிலைக்கு உள்ளாக்கப்படுகின்றார். இதற்கு உரோமலின் குள்ளநரித்தனம் தோற்றுவிட்டதுதான் முழுக்காரணமென்று சொல்லமுடியாது; முன்னர் வட ஆபிரிக்காவிலே உரொமலின் வெற்றிக்குக் காரணமாகவிருந்தது, கூட்டுநாடுகளின் சங்கேதச்செய்திப்பரிமாற்றத்தை இத்தாலியப்புலனாய்வாளர்களின் உதவியோடு உரோமல் உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதென்றால், பின்னர் அல்ட்ரா (ULTRA) என்ற தமது சங்கேத உடைப்பின்வழியிலே பிரித்தானியப்படையினர் உரோமலின் படைப்பிரிவின் சங்கேதசெய்திப்பரிமாற்றத்தினை உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதும் முக்கியமாகிறது. தோற்றுப்போகும் உரோமலை ஹிட்லர் ஜெர்மனிக்கு வரவழைத்து தரமுயர்த்தி, ஆனால், கட்டாய ஓய்விலே சில மாதங்கள் வைத்திருக்கின்றார். பின்னர், பிரான்ஸுக்கு ஜெர்மனிசார்பிலே உரொமல் போர்த்தளபதியாகச் செல்கிறார்.நோர்மண்டியிலும் மூக்குடைவு. இறுதியாக, ஹிட்லருக்கெதிராகச் சதி செய்திருக்கலாமென்ற கருத்திலே, கட்டாயப்படுத்தப்பட்டு நஞ்சருந்தி இறக்கின்றார். வாகன விபத்தின் விளைவான மரணமென்ற செய்தியோடு, தேசப்பற்றாளராக வெளியுலகுக்குச் சொல்லப்பட்டு, முழு இராணுவமரியாதையுடன் மரணநிகழ்ச்சி அரங்கேறுகின்றது. அதன் பின், அரையாண்டுக்குள்ளே ஹிட்லரின் ஆட்டம் முடிவுக்கு வருகின்றது.

தான் விரும்பியபடி பிரதமர் பதவியை அதிகாரமுள்ள பதவியாக்கி அதிலே தான் உட்கார வழிசெய்யும்வரைக்கும் பதவியில் நீடிக்க முடியாமல் அரசியற்றுறவறம் போக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இலங்கையின் (முன்னாள்) அதிபர் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா, காம்ரேட் நரசிம்மன் ராம் இற்கு ஸ்ரீலங்காவின் இரத்தினத்தினை வழங்கிய செய்தியை வாசித்தபோது, ஜெர்மனிக்கு வரவழைக்கப்பட்ட உரோமலுக்குக் கொடுக்கப்பட்ட பதவியுயர்வும் நஞ்சுமே ஞாபகத்துக்கு வந்தன.

தொடர்ந்து அவதானித்தவரையிலே இலங்கையின் அரசியல் குறித்து தோழர் இராம் மூன்று வகையான குறிக்கோள்களுடன் செயலாற்றுகின்றார்.

1. இந்தியாவின் (மேலாதிக்க)நலன்

2. இந்தியப்பத்திரிகைத்துறையிலே தன்னையொத்த இலங்கையின் அரசியலிலே பாரம்பரிய மேட்டுக்குடி ஆட்சியாளர்கள்/வாரிசுகளின் நலனைப் பேணுதல்

3. விடுதலைப்புலிகள் மீதான, அவரது பதிப்பூடகங்கள் இன்னும் விடாது வலியுறுத்தும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் தோல்வியின் விளைவாக அடிபட்டுப்போன அவரின் 'நான்' இற்கு ஒத்தடம் கொடுத்துவிடக்கூடிய காழ்ப்புணர்வும் பழிவாங்குணர்வும்

இந்தியாவின் மேலாதிக்கநலனை வலியுறுத்துவதிலேதான் அவரின் பத்திரிகையும் சஞ்சிகைகளும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக, இந்திய அரசின் நலனை மிக வெளிப்படையாக முன்வைக்கும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி 'கருணா' முரளிதரன் ஆகியோரினை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்துவதைக் கண்டுகொள்ளவேண்டும். இங்கே ஈழமக்களிடையே இவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் எந்நிலையிலிருக்கின்றனவென இவருடைய ஊடகங்கள் எதுவிதமான செய்திகளையும் தமது விசு-வாசகர்களுக்கு மேற்படி அரசியல்வாதிகள் தேர்தல்களிலே பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைகள் மூலமோ கருத்துக்கணிப்புகள்மூலமோ அறியத்தருவதில்லை. பத்திரிகையின் கருத்துப்பத்திகளுக்கும் செய்திப்பதிவுகளுக்கும் வித்தியாசமேயில்லாத விதமாகத் தருவதுதான் அவரது த இந்து பத்திரிகையும் ப்ரொண்ட் லைன் சஞ்சிகையும் நிகழ்த்தும் பொம்மலாட்டம்.

தன்னையொத்த மேட்டுக்குடித்தன்மை பொருந்திய பரம்பரைகளின் தொடர்ச்சியாக வரும் இடதுசாரிமுகங்களை முன்னெடுப்பதிலே அவர் தொடர்ந்து செயலாற்றி வருகின்றாரென்பதை மிகவும் சுலபமாகக் கண்டுகொள்ளலாம். சந்திரிகா குமாரணதுங்கா, அவரது சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா, நீலன் திருச்செல்வம், இலஷ்மண் கதிர்காமர் போன்றோரை இவர் முன்னிலைப்படுத்துவதற்கு இந்த இந்து பாரம்பரியம்-ரத்வத்தை பாரம்பரியம்-திருச்செல்வம் பாரம்பரியம்-கதிர்காமர் பாரம்பரியம் என்ற ஒரு மேட்டுக்குடிநேசக்கூட்டு, அரசியலினைத் தாண்டி, நாட்டைத் தாண்டியும் நிலவுகின்றது. ஒரு புறம் இவர் சார்ந்திருக்கும் மார்க்ஸியவாதிகள், பகிரங்கமாகவே ஸ்ரீலங்காவின் அதிவலதுசாரிநிலைப்பாடுள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) இனை மார்க்ஸிய நேசசக்தியென தமது இந்திய தேசப்பொதுவுடமைவாதிகளின் மகாநாட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்துகின்றனர். இது, ஏறக்குறைய ஹிட்லரின் தேசியப்பொதுவுடமை ஜேர்மன் தொழிலாளர் கட்சியினை (National Socialist German Workers Party), சோஷலிஸ்டுகளின் மூன்றாம் அகிலம், நான்காம் அகிலம் மகாநாடுகளுக்கு அழைத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியான கூத்துத்தான். ஆனால், அவ்வழைப்பினைக் குறித்து சகமார்க்ஸியராக காம்ரேட் இராமின் ஊடகங்கள் எந்த (எதிர்ப்பு)க்குரலையேனும் எழுப்பவில்லை; த இந்துவின் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் பாரம்பரியத்தினைப் போற்றும் அறிவுசீவிகளும் அது குறித்தேதும் கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், இதே பத்திரிகையிலே அண்மையிலே சந்திரிகா அம்மையாரினை எப்படியாக தொடர்ந்து அவரின் குடும்பத்துக்கு விசுவாசிகளாக மட்டுமேயிருந்து வந்த இராஜபக்ஸ குடும்பத்தினைச் சேர்ந்த மஹிந்த இராஜபக்ஸ, ஜேவிபியின் ஆதரவோடு ஓரங்கட்டி, வனவாசம் முடிந்து வரும்வரையிலே பாதுகையை வைத்தாள்பவராக இராமல் அல்லது முறைக்குரிய அரசவம்சத்தின் அடுத்த வாரிசு பட்டஞ்சூடும் வயதினை அடையும் வரையிலே காப்பாளாராக இராமல் தானே முடியைச் சூட்டிக்கொள்ள முயல்வதைச் சுட்டிக் காட்டி ஒரு கருத்துப்பத்தி வந்திருக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட பத்தி, இராம் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா இரத்தினத்தினைப் போல முக்கியமான ஒன்று. அதைப் பற்றி இக்குறிப்பிலே வேறோரிடத்திலே பார்க்கலாம்.

மூன்றாவது நோக்கு, மிகவும் தனிப்பட்ட உணர்வோடு சம்பந்தப்பட்டது; இலங்கை இயக்கங்களுக்கு ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகப் போராடும்வண்ணம் உயிர்கொல்லும் பயங்கரவாதிகளுக்கான ஆயுத உதவியினை இந்தியா வழங்கிக்கொண்டிருந்த 1985 இலே (30.12.85) புரொண்ட் லைனுக்காக செவ்வியிலே விடுதலைப்புலிகளின் தலைமையிடம் கேள்விகள் இப்படியான கருத்துகளோடு வந்து விழுகின்றன: "விடுதலைப்புலிகள், இராணுவ இயக்கமாகத் தொடங்கி, மார்க்ஸிய-லெனினிய இயக்கமாக மலர்ந்திருக்கின்றது; மக்களிடம் சென்றடைய உங்களிடம் தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவா?" இதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் சொல்கிறார்: "நாங்கள் சோஷலிஸநாட்டினையே ஆக்கவிரும்புகின்றோம்; எங்களிடம் தொழிற்சங்கங்களில்லை; நேரடியாகவே மக்களிடம் சென்றடைகின்றோம்." விடுதலைப்புலிகள் என்றைக்கு மார்க்ஸிய-லெனிய இயக்கமாக இருந்ததென்று தெரியவில்லை; தமிழீழவிடுதலை இயக்கமும் (டெலோ) விடுதலைப்புலிகளும் அடிப்படையிலே வலதுசாரி இயக்கங்களாகத்தான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவரின் பதிலும் மெய்யிற்கு மாறான சுவையானதுதான்.. ஆனால், இப்படியாக, விடுதலைப்புலிகளிலே மார்க்ஸிய-லெனினிய நிலைப்பாட்டினைக் கண்ட புரொண்ட்லைன் ஆசிரியர், அவர் பத்திரிகையிலே இன்றும் ஈழத்தமிழருக்கான சிறப்பான ஒப்பந்தமென முன் வைக்கும் இலங்கை அரசு - இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தினை விடுதலைப்புலிகள் நிராகரித்த பின்னால், பொல்பொட் வகை இயக்கமென எதிர்க்கின்றார். இத்தனைக்கும் பொல் பொட்டின் ஆதரவாகத் திகழ்ந்த சீன அரசின் விருந்தினராகச் சென்று வந்து சீனாவினையும் சீனாவின் திபெத்து மீதான ஆக்கிரமிப்பினை விதந்தேத்தவுமோ அவர் தவறுவதில்லை. எல்லாவற்றினையும் விட நகைச்சுவையான அவரின் கருத்து, தம் பாரம்பரியப்பிரதேசத்திலே வந்தேறுகுடிகளான இஸ்ரேலியர்களை எதிர்க்க பாலஸ்தீனியர்களுக்கு இருக்கும் அவசியமும் நோக்கும் ஈழத்திலே இல்லை என்று அவர் சுபமங்களாவிலே கோமல் சுவாமிநாதனுக்குக் கொடுத்திருக்கும் செவ்வி. ஒரு குடியின் பாரம்பரியப்பிரதேசங்களெவை என்றோ அப்பிரதேசங்களின் மீதான அரசியற்சூழலை முற்றாகவே மாற்றும்வகையிலே திட்டமிட்டுச் செயற்பட்டு, மாற்றுக்குடிகளை ஏற்றுவது முறையல்ல என்பதையோ நெடுங்காலமாக இலங்கைக்காகச் சேவையாற்றியதற்கு இலங்கை இரத்தினத்தைப் பெற்ற இராம் தெரிந்து கொள்ளாமலிருந்திருக்கமுடியாது; அப்படியான குடியேற்றங்களும் ஈழக்குரலினை முடுக்கக்காரணமானதென்பதையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முன்வைக்கும் அவர் அறியாமலிருந்திருக்கமுடியாது. ஆக, அவரது ஈழத்தேவையின்மை போன்ற கருத்தெல்லாம் விடுதலைப்புலிகளின் இந்தியநிலைப்பாடு மீதான முரண்பாட்டின்பின்னாலும் இந்தியாவிலே தங்கியிராமற் செயற்படத்தொடங்கிய பின்னருமே உருப்பெற்றிருக்கின்றதெனலாம்.இவ்வகையிலேயும் அவர் ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு ஜனநாயக இயக்கமுகமூடிகளை அணிந்து காட்ட முயற்சிக்கின்றனவாகத் தெரிகின்றன.

இத்தனை நாட்களும் அவரது மூன்று குறிக்கோள்களும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால், மஹிந்த ராஜபக்ஸவின் தேர்வோடு இராமின் இரண்டாவது குறிக்கோளினால் மீதியிரண்டு குறிக்கோள்களும் முரண்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றதென்றே தோன்றுகின்றது. சந்திரிகாவின் குடும்பநலனை முன்னிட்டு (பண்டாரநாயக்கா குடும்பத்தின் அடுத்த வாரிசான அனுரா அண்மையிலே இந்தியா வந்தபோது சந்தித்துச் செவ்வி கண்டவர், சந்திரிகா வந்தபோது, ஜெயலலிதாவினை அறிமுகம் அந்தக்காலம் செய்துவைத்தவர், மஹிந்த இராஜபக்ஸ வந்தபோதெல்லாம் கண்டு கொண்டதாக நானறியத் தெரியவில்லை), மஹிந்த இராஜபக்ஸவின் பெயரை அடக்கி வாசிப்பாரா அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிராக இயங்குவதற்காகவும் இந்தியாவின் நலனைப் பிரதிபலிப்பேனென தேர்தற்காலத்திலே மிகவும் வெளிப்படையாகச் சொன்னதற்காவும் இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதுவாரா என்று அவதானிக்கவேண்டும். இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதும்பட்சத்திலே, தேர்தலின்போது, இராஜபக்ஸவின் ஜேவிபிகூட்டு, கருத்துவெளிப்பாடு குறித்து அவரின் பத்திரிகைப்பத்தியிலே வந்த கருத்து மீள அவதானிக்கப்பட்டு, முரண் சுட்டப்படும்.

எதுவோ, இராமுக்குக் கிடைத்த இந்த விருது, குறித்து ஈழத்தமிழர்களும் அவர்களின் நலனிலே அக்கறையுடையவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், அடையவேண்டுமென்று படுகிறது; மிகவும் வெளிப்படையாக, நடுநிலைப்பத்திரிகையாளராகச் சேவைசெய்ததற்கும் ஸ்ரீலங்காவிற்கான சேவைக்காக அவர் உழைத்தாரென்பதற்காவும் கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விருது அவ்வகையிலேதான் உரோமலுக்கு ஹிட்லரின் அதிகாரிகளினாலே கொடுக்கப்பட்ட நஞ்சினை ஒத்திருக்கின்றது. இந்த விருது, அவரின் பத்திரிகைகளிலே இத்தனை நாட்கள், வெளிவந்த கருத்துப்பத்திகளின், செய்திகளின் "நடுநிலை"யையும் இனி வரப்போகும் கருத்துப்பத்திகளின், செய்திகளின் நடுநிலைகளையும் ஸ்ரீலங்கா-இந்திய-ஈழ அரசியலை வெளியிலேயிருந்து பார்க்கும் இராமின் ஊடகங்களை இவை குறித்த செய்திகளுக்காக நம்பிய வாசகர்களின் நம்பிக்கைகளிலே பொத்தல் விழச்செய்திருக்குமென நினைக்கிறேன்; இராம்மீது அவர்சார்ந்த ஊடகங்களின்மீதும் அவற்றின் ஈழ-ஸ்ரீலங்கா அரசியற்செய்திகள் குறித்த உள்நோக்குகளிலே சார்புத்தன்மையும் பொய்மையும் திரிபுமுமிருக்கின்றனவெனக் குற்றம் சாட்டுகின்றவர்களின் கருத்துகள் கவனிக்கப்படச்செய்யும். ஆகவே, ஈழத்தமிழர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விருது குறித்து மகிழ்ச்சியடையவேண்டும்.

இதே காரணத்தினாலேயே, ஈழத்தமிழர்களின் தாய்நாட்டுக்கான தேவை குறித்து எப்போதும் மறுப்புத் தெரிவிக்கும், அதன் காரணமாக இலங்கை அரசியல் குறித்து இராமின் கண்ணோட்டத்தினையும் நிலைப்பாட்டினையும் ஆதரிக்கும் அரசியலறிந்த ஒரு சாரார் இராமுக்கு விருது கிடைத்ததும் அவர் அதை ஏற்றுக்கொண்டது குறித்தும் வருத்தமடைந்திருக்கின்றார்கள். (மறுதலையாக, விருது கிடைத்தால் அஃது ஓர் அங்கீகாரமென்ற வகையிலே எண்ணி அவரைப் பாராட்டும் இன்னொரு சாரார், இலங்கை அரசியலிலே இராம் கொள்ளூம் நிலைப்பாட்டினை இராமே சொல்கிறாரேயென பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்கின்றவர்கள்; இவர்களும் முதற்சாராராரும் ஈழம் குறித்து ஒரே நிலைப்பாட்டினையெடுத்தாலுங்கூட, காரணகாரியங்கள் தலைகீழாகக் கொண்டவர்கள். தினமொரு பொன்முட்டையிடும் வாத்தை, உடனடி முட்டை ஒன்றுக்கும் சில குட்டிக்கருக்களுக்குமாக ஒரு நாளிலே வயிறு கிழித்துப் போட்டுவிட்டதையெண்ணி வருந்தும் முதற்சாரார் குறித்து எப்போதுமே எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியமுண்டு).

அதனால், இப்போதைக்கு, இராமுக்கான இரத்தினத்தினை ஒரு வரப்பிரசாதமெனக் கொண்டு, அதன்பின்னான நகைச்சுவைத்துணுக்குகளென அச்செய்தி குறித்த வாழ்த்துகளைக் கொள்ளவேண்டுமெனத் தோன்றுகிறது.

'05 நவம்பர், 19 சனி 04:07 கிநிநே.

Monday, November 14, 2005

குவியம் - 19


Rambling Russian Roulette

இன்றைக்குப் பற்றிப் பிடித்த இரு-பத்து தமிழ்ப்பாடல்கள்


 1. http://www.musicindiaonline.com/p/x/oqygl-sVpd.As1NMvHdW/

 2. http://www.musicindiaonline.com/p/x/2UCg9y3gXd.As1NMvHdW/

 3. http://www.musicindiaonline.com/p/x/vJygfCRm7S.As1NMvHdW/

 4. http://www.musicindiaonline.com/p/x/kJOgxOmcX9.As1NMvHdW/

 5. http://www.musicindiaonline.com/p/x/zqfgexD4Fd.As1NMvHdW/

 6. http://www.musicindiaonline.com/p/x/_JCgWD36Bt.As1NMvHdW/

 7. http://www.musicindiaonline.com/p/x/GJbsOmGB-S.As1NMvHdW/

 8. http://www.musicindiaonline.com/p/x/GJ2gAz9QfS.As1NMvHdW/

 9. http://www.musicindiaonline.com/p/x/fJbskj64Bt.As1NMvHdW/

 10. http://www.musicindiaonline.com/p/x/NVvg4Ce8R9.As1NMvHdW/

 11. http://www.musicindiaonline.com/p/x/ZVfgBDdemt.As1NMvHdW/

 12. http://www.musicindiaonline.com/p/x/6U7gcpQG.t.As1NMvHdW/

 13. http://www.musicindiaonline.com/p/x/SJxg.5n2-d.As1NMvHdW/

 14. http://www.musicindiaonline.com/p/x/H4pg78I3MS.As1NMvHdW/

 15. http://www.musicindiaonline.com/p/x/xrbgfzvGM9.As1NMvHdW/

 16. http://www.musicindiaonline.com/p/x/qJ7gKDNPud.As1NMvHdW/

 17. http://www.musicindiaonline.com/p/x/p5xg4bhln9.As1NMvHdW/

 18. http://www.musicindiaonline.com/p/x/iUb2DJ-ar9.As1NMvHdW/

 19. http://www.musicindiaonline.com/p/x/gJQ97_xJVd.As1NMvHdW/

 20. http://www.musicindiaonline.com/p/x/BqQ2uuy_Od.As1NMvHdW/


 21. The "Sri Lanka Ratna" is conferred for "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka in particular and\or humanity in general."


Thursday, November 10, 2005

கணம் - 480


Phase

'98, கோடை


இடைவிடா இருநாட்களுக்கு
இறந்தார் பற்றிப் பேசுகிறோம்;
எம்மைப் பற்றி இருந்தது பற்றி
எதுவும் பற்றாது இறந்தது பற்றி
இருப்பைப் பற்றி இறப்பது பற்றி
அன்று பற்றி இன்று பற்றி
கலந்தது பற்றிக் கரைவது பற்றி
இருந்ததெல்லாம் பேசி இழந்த பின்
அறுந்திருக்கிறோம் அடுத்தோர்
இறப்பாரைக் காத்து.

அவமூடும் அவத்தை
ஆங்கு.


'05, நவம். 10 வியா. 04:38 கிநிநே.

Wednesday, November 09, 2005

கணம்


An American Dream

புதர்க்குரங்கு (Bush Monkey)
கூட்டுரு: '05, நவம்பர் 09 புதன் 11:41 கிநிநே.
நன்றி: மூலப்படம்


"I look at the term species, as one arbitrarily given for the sake of convenience to a set of individuals closely resembling each other...." - Darwin, 1859

நான் ஒரு கனவு கண்டேன்....

கன்ஸாஸ் கபாடம்,
துளிர்காற்றுக்கு மஞ்சி விழிமூடிக்கொண்டதை
அதில் நான் கண்டேன்.

மத்தியகாலம் ஒத்தமைந்ததோர் உலகு;
மின்விளக்குகள் உடைத்து திரி கொளுத்தினர் மெழுகு.
தலைகீழெனக் கயிற்றில் தொங்கினான் டார்வின்.
கண்கள்பிடுங்கலுற்றான், தன் கிழவுடல்,
கல்பகோஸ் விலங்கு, நகக் கூர் கிழித்து
ஆயத்தூங்கினான் கூர்ப்பின் அப்பன்.

அவனுடல், கல்லெறி மனிதரை ஊக்கினார் கைத்
திருப்புத்தகம் உள்ளே நெளிந்தன கருந்தேள்கள்.
சந்தியில், சந்தையில், மேடையில், மலம் கழிக்கையில்,
பேர்னாட் குயிகள் பேசினர் பெருந்தொழில்நுட்பம்,
தம் படைத்தல் விஞ்ஞானம்.
திரித்துப் பேசுதல் தரித்துப்போன தவர் கோட்டைநாவில்,
கொடும்முற்றுகையிட்டது ஆட்சிவலிமை.

ஆய்வுகூடங்களை அறிந்தறிந்து காட்டிக்கொடுத்தனர் அரைவெள்ளிக்காசுகட்கு;
அணியணியாய் ஊர்வலம் போய் ஆணிச் சிலுவையில் அறையுண்டன
பாவக்கறை படிந்த பழம்பாறைச்சுவடுகளும் ஆபிரிக்கப் பாதி
ஆதிமண்டையோடுகளும்.

தம் கட்டில்-புணர்தலுக்காய்,
ஆங்காங்கே அவசரமாய்
ஆண் என்புவிலாக்கள் மட்டும்
ஒடிந்து ஒசிந்து உன்மத்த உருக்கொண்டாடின
ஓரிரு கட்டிளம்பெண் உற்பத்தி பண் ஊக்கத்தே.

அண்டத்தின் தோற்றமும் நகர்வும்கூட,
அடர் பேரதிர்வுக் கன்ஸாஸ் கதவடிப்புடன்
கலங்கி மூடின தம் கண்.
காலம் பின்னோக்கி முகம் காட்டி ஓடச்
சாட்டை அடித்தது கல்விச்சட்டம்.
அறிக,
ஒருநாள் காலையில், பழ உலகம் நழுவிப் பாலிற் பிறந்தது,
திறந்த தேனீரில் மல ஈ வந்து வீழ்தல்போல்.
சில நாள் போக,
தோன்றினான் தந்தை நினையத் தரணியில் மைந்தன்,
முன்னொரு ஈ விழக் கண்டு, தான் இறக்க, இன்னொரு
வண்டு வீழ்
எளிமையாய்.

பின் என் நா எனக்காய் அசைத்துப் பேச விடக் கூவினேன்,
என் மூச்சின் மூலத் தோற்றெங் கென்று
எதிர்ப்பட்டார் எவர்க்கும் எடுத்துச்சொல்ல.
கோரமாய்க் கூவியது தொன்னையில் அருந்திய கூட்டம்,
கொடியசைத்து, தோள்குலுக்கி, தொடை தட்டி.
கூர்ப்பின் தோற்றுவாயைக் குதறிக் கீழிறக்கி வீசி,
குறி இறுக்கித் தூக்கிக் கட்டினர் என்னைப் பலியாய்.

முதற் கபாலக் கல்லெறியில் விழித்தேன் மீள,
கன்ஸாஸ் கபாடத்தின் வெளியெங்கோ, கடல் கடந்து,
புல்மூடு டார்வின் கல்லறைத்தரை மீதென்றார் யாரோ.

அருகே,
புதிதாய்ப் பொருந்திக் கிடந்தது
ஒரு சிறு குழவிக்கல்லறை
இனி, அதன் வெளியே கோரைப்புல் கூர்த்துப் பூத்தது எருக்கலம்பூ.

..... இதுவாய், இனி வருமொரு காலை,
மனிதர், விலா முள் என்பால் தம் முகம் விளங்க,
அண்ட மூலமும் சாரமும் அறியான் கையுள்ளினுள் அடங்க,
என் உணர்வினைப் பறித்து பிறர் தமதை உட்திணிக்க,
இன்று ஒரு துன்புறு கனவு கண்டேன்
என் அமெரிக்கத்துயிலில்.

'99 செப்டெம்பர், 04
கன்ஸாஸ் மாநிலம் இவ்வாரம் புத்திசாரமைவு (intelligent design) இனைக் பாடசாலைக்கல்வித்திட்டத்திலே சேர்த்துக்கொண்டதையிட்டு இந்த மறு உள்ளீடு. இணையத்திலே இதன் முதல் உள்ளிடுகை 99 ஆம் ஆண்டு தமிழ்_கலந்துரையாடல் யாஹூ!குழுமத்திலே இடப்பட்டது.

Friday, November 04, 2005

நிகழ்வுகள் - 12


London: Nov., 20 2005 Sun.
நிகழ்வுகளிலே தரப்பட்டிருக்கும் அறிவிப்புகளின் உள்ளடக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அலைஞனின் அலைகள் பதிவுகள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

....

நிகழ்வுகள் - 11


London Nov. 19, 2005 Sat
நிகழ்வுகளிலே தரப்பட்டிருக்கும் அறிவிப்புகளின் உள்ளடக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அலைஞனின் அலைகள் பதிவுகள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

....

Thursday, November 03, 2005

என்ன சொல்ல!


சூரியன் வருவது யாரால் என்பதல்ல இப்போதைய கேள்வி. ஏன் வருகின்றது எங்கிருந்து வருகின்றது என்பதைத்தான் சிந்திக்கவேண்டும். இப்போது இதையேன் சிந்திக்கவேண்டுமென நீங்கள் நினைக்கலாம். அதற்கான காரணம் மிகவும் முக்கியமானது. புளொக்கர் தமிழ்ப்பதிவினை மைக்ரோஸொப்ட் வேர்டிலிருந்து நேரடியாக அடித்து அனுப்ப முடிகின்றதாவென வேறெப்படி நான் (image placeholder) ஏதாவது எழுதித்தானே தீரவேண்டும் (

இங்கே ஒரு படம் போடுவோமா?

அதற்குமேலே என்னத்தைச் சொல்வதாம்?


Wednesday, November 02, 2005

படிமம் - 163


Burnt Out'05 nov., 02 15:53 கிநிநே.

புடம் என்னுடையதாயினும்,
படம் என்னுடையதல்ல

....

Tuesday, October 25, 2005

கணம் - 479'05, துளிர்காலம்


ஒவ்வொருவரிடமும் இன்னொருவர்
எதையேனும் எதிர்பார்க்கின்றார்.
மண்ணிடம் மரத்தை
மரத்திடம் கிளையை
கிளையிடம் இலையை

இலையிடம் நீ
எதை எதிர்பார்ப்பாய்?

எவரும் கேட்க முன்,
இலையிடம் சொல்லாம்:
"எதையும் சொல்லாமல்
உதிர்ந்து
விடியமுன்
மண்ணிடம் போ."

'05, ஒக்., 25 செவ். 14:33 கிநிநே.

Saturday, October 22, 2005

கணம் - 478'05, செப்., 19 திங் 18:05 கிநிநே.


நகரத்தில்
கண்களை அணிந்துகொண்டவர்களின்
நெளிபாம்புத்தெரு முளைத்தது தனியாய்.

ஒற்றைப்பாவனைத் தொடுவில்லை போல்
கண்கள் எடுத்துப் பொருத்தி நடந்தது தெரு.

அணிந்த கண்களுக்கு அணிந்துரைக்கண்கள்
அடுத்து முளைத்த தெருவில் கிடைத்தன.

கண்களுக்குக் கருத்து எதிர்த்து(ம்) முளைக்க
இன்னொரு தெரு கிளைத்து முளைத்தது;
சின்னச்சீசாவில் சொல், நீர், சுரணை
-வியாபித்துச் சூடு பிடித்தது வியாபாரம்; விழி.

அணிந்த கண்களை அவிக்கத்
தேவை பிறக்காதாவென்றால்,
அதுவும் தொடர்ந்தது; அப்பால்
தழைத்தது அவிகரணர் தெரு.

அவித்த கண்கள் -> அழிந்த கண்கள் ->
அவிழ்த்த கண்கள் -> கழித்த கண்கள்
கழித்ததைக் கிளற முளைத்த சிறுவர்
பொம்மைக்குப் பொருந்தப் பொறுக்கின
கண்களால் பிறந்துழன்றன இரண்டு
பிள்ளைத்தெரு, பொம்மைத்தெரு.

பொறுக்கலின்பின் பொருந்தலின் பின்
இழிந்தவை குவித்து எரிக்கப் புகுந்தார்
இருந்திடத் தெருவொன்று இறங்கிட நகரினில்...

.....கண்களால் தின்றார்;
........கண்களால் கேட்டார்;
...........கண்களால் தொட்டார்;
.................கண்களால் நுகர்ந்தார்.

.................கண்களை நுகர்ந்தார்;
...........கண்களைத் தொட்டார்;
........கண்களைக் கேட்டார்;
.....கண்களைத் தின்றார்.

இந்திரன் தோல், தெரு சமைத்த மாபூஸ் நகரில்
பாகர்கொல் மதயானை கால் தழுவித்தடவி
அலைந்து திரிவர் கண்ணணி அலங்காரிகள்.


'05, ஒக்., 22 சனி 17:50 கிநிநே.

Friday, October 21, 2005

புனைவு - 26


அந்த சம்பந்தப்பட்ட மீசைமழிதாடி அதிகாரியைச் சந்தித்தபோது, கதிரைக்கு வெளியே மேசையைத் தாண்டி உருவம் கண்களை வந்தடைய முடியாதவளவிலே இருந்தார். அவர் தலைக்குப் பின்னாலே உயரத்திலே சூரியவெளிச்சத்தினை மங்கமுறித்து உள்ளேயனுப்புவிதமாக ஒரு முப்பரிமாணப்பலகணியும் படுதாவும். என்ன என்று கண்ணாலேகூட அவர் கேட்கவில்லை. கருங்கல்லுக்கு அங்கம் சேர்த்து கதிரையில் இறுக்கியதுபோன்ற ஆள். தன்னிடம் வேறெதற்கு வருவார்களென்ற பழக்கப்பட்ட சிந்தனையோ அல்லது வந்தவர் தனக்கு வேண்டியதைக் கேட்பார்தானே என்ற எதிர்பார்ப்போ இருந்திருக்கலாமென நினைத்தேன். என் பங்கீட்டட்டையை நீட்டினேன். எடுத்தவர் பங்கீட்டு அட்டையின் இன்றைய நிறத்தினைக் கவனித்தார்; பின்னால், கதிரைக்கு வெளியே உருவத்தினைக் கொண்டுவந்து அதே நிறத்திலே இருந்த தடிப்பமான பதிவுப்புத்தகத்தினை தலைக்குமேலிருந்த அலுமாரியிலிருந்து எடுத்து மேசையிலே வைத்தார். இந்தக்கணக்குகளையெல்லாம் ஒரு கணணியிலே பதிவு செய்து வைத்தால், அரசுக்கும் அலுவலகர்களுக்கும் எத்துணை பயனோ இருக்கக்கூடுமேயென்று தோன்றியது. இதுவரை காலமும் எதுவிதமான குளறுபடியும் பிக்கல் பிடுங்கலும் இந்தப் பங்கீடு காரணமாக எனக்கு ஏற்பட்டிருக்கவில்லையென்றாலுங்கூட, இந்த எண்ணம் தோன்றியது; சிலவேளை, கொடுத்த தொகைக்கு வரைந்துகொண்டு சிக்கனமாய்ச் செயற்பட்டதால் பிக்கல் ஏற்படாதிருந்திருக்குமோ? இருக்கலாம்.

அட்டையிலே என் பெயரைப் பார்த்தபின்னால், பெயரின் தொடக்க எழுத்தினைக் குறிக்கும் பக்கத்தினை திறந்தார். "சென்ற மாதத்திலே மிஞ்சியிருந்த நிலுவையை இந்த மாதத்துக்குச் சேர்த்துக்கொள்ளப்போகின்றீர்களா அல்லது வேண்டுவார் வேறு யாருக்காவது கடத்தி விட்டு, ஈட்டுத்தொகை பெறப்போகின்றீர்களா?" எனக் கேட்டார். அந்த ஆண்டு புனைவு தொடர்பாக அதிகம் செயற்படமுடியவில்லை. இனியும் புனையலாமென்ற நம்பிக்கையுமிருக்கவில்லை.

"கடத்தப்போகின்றேன்"

குறித்துக்கொண்டார். அலுவலகமூடாகத்தான் கடத்தமுடியும். சொந்தமாக அலுவலகத்துக்கு வெளியே விற்பனை செய்ய முடியாதென்பதல்ல, ஆனால், கூடாது. இந்த "கூடாது" இனையும் மீறி வெளியே அறாவிலைக்கு விற்றும் விகல்பமும் வில்லங்கமுமில்லாமலிருக்கின்றவர்களை அறிவேன். 'எனக்குத் துணிவில்லை. அவ்வளவே' என்று சொல்லி இந்தக்கிளைக்கதை வளர்ச்சியைச் சொற்சிக்கனம் கருதி வெட்டிவிடலாம்.

"உங்கள் அனுபவம் இருபதாண்டுகளாக இந்த மாதத்துடன் ஆகின்றது. ஆகையால், தகைமைப்படியேற்றத்துடன் இன்னொரு நிறத்தினை உங்களுக்குத் தரவேண்டும்"

[தாருங்கள் ஐயா. இப்போது கிடைப்பதிற் பாதியையே அடுத்த மாதம் உங்களிடம் மீள விற்கும் நான் இன்னொரு நிறப்பங்கீட்டினைப் பயன்படுத்துவேனா என்பது தெரியாதபோதும், மாத முடிவுகளிலே விற்கும் தொகையை அதிகரிக்கலாம் அல்லவா? அதனால், தாருங்கள் ஐயா] - எண்ணிக்கொள்ளலாம். சொல்லக்கூடாது. அரசின் ஆணைநிறைவேற்று அதிகாரியினை அவமதிப்பதின்மூலம் அரசினை அவமதிக்கும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவிடுவேன்.

ஏற்கனவே இன்னொரு சாயம் தோய்த்து வைக்கப்பட்ட வெற்று அட்டையை எடுத்து என் பெயரை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக, தேய்ந்த அரசுத்தட்டச்சுப்பொறியிலே அடித்தெடுத்தார். கையாலேயே எழுதியிருக்கலாமென்றபோதுங்கூட, அலுவலகரின் கையெழுத்திலே அவரின் தனியாள்_ஆளுமை கடத்துப்பட்டு விடுமோவென அரசு கவலைகொண்டிருக்கக்கூடும். சாயங்கள் தோய்க்கமுன்னால், பங்கீட்டட்டை சுயமாக என்ன நிறத்திலே இருந்ததென்று நான் கேட்கவில்லை; கேட்கத் தோன்றாததற்கு முன் பத்தாண்டுகளாக இவரினை விடவுங்கூடச் சிரித்த முகத்தோடும் பருத்த உருவத்தோடும் இருந்த அதிகாரிகளைக் கேட்டு, அவர்கள் பண்போடு சொல்ல மறுத்துவிட்டதுதான் காரணமென்பேன்.

வாங்கிக்கொண்ட அட்டையை எடுத்துக்கொண்டு முப்பரிமாணப்பலகணி அறைப்படுதாவின் பார்வைக்கு வெளியே வந்து விழுந்த பின்னாலேதான் சூரிய வெளிச்சத்திலே இம்மாதத்துக்கும் இனி வரும் ஐந்தாண்டுகளுக்குமான பங்கீட்டுவீதங்களையும் தொகைகளையையும் பார்த்தேன்.

முன்னைய அட்டைகளின் அமைதலின் பிரகாரமே, உணர்வுகள் குறித்தும் உரையாடல் குறித்தும் எதுவிதமான குறிப்பேற்றமுமில்லை. அவற்றில் தொடர்ச்சியைப் பேணலாமெனக் கருதிக்கொண்டேன். நிகழ்வுகளுக்கான தொகை போன மாதத்துக்குப் பத்து வீதம் அதிகரித்திருந்தது; புனைவுக்கான வீதம் போன மாதத்துக்கு இருபத்தைந்துவீதம் அதிகரித்திருந்தது. இரண்டினையும் கலக்கக்கூடிய நிகழ்வு/புனைவு விகிதவெண்ணின் உயர்பட்ச எல்லை கணிசமாகக் குறைந்திருந்தது. இதனால், புனைகதைகள் எழுதாத எனக்கேதும் பெரிய பாதிப்பிருக்கப்போவதில்லையென்று நினைத்தேன். ஆக, நிகழ்வுகளைமட்டும் நிகழ்வாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளிக்கு - நிகழ்வுகளை வெறும் நிகழ்வுகளாக எழுதுகின்றவனைப் படைப்பாளியெனச் சொல்லமுடியாது என்ற வாதமும் இருந்ததால் நிகழ்வெழுதி என்று இனிமேல் சொல்கிறேன் - அதாவது, நிகழ்வெழுதிக்கு எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை.

ஆனால், இவ்வகையான பங்கீட்டுக்கலவையை அரசு முற்போட்டிருக்க ஒரு பின்புலமிருக்கின்றது. அதற்கான அண்மைக்காலத்திலே நிகழ்வுகளைப் புனைவென்றும் புனைவுகளை நிகழ்வென்றும் பிணித்தும் பிசைந்தும் இடைவரைகோட்டின் அடையாளத்தினைத் தேய்த்துக்கொண்டு வந்த நிகழ்வுகளையோ படைப்புகளையோ அரசின் பங்கீட்டலுவலகம் வகை பிரிக்கமுடியாமற் திணறியதும் ஒரு காரணம். இதற்கு பங்கீட்டு அட்டை வழங்கு அதிகாரிகள் போலல்லாது, வகைபிரிப்பதற்கான அதிகாரிகளின் திறமை, அனுபவக்குறைபாடு காரணமென்று அரசுசார்பிலே பேசவல்ல பேச்சாளர்கள் தம் பேச்சிலே சொன்னாலுங்கூட, அதற்கப்பாலும் அதை விட முக்கிய காரணங்கள் இருக்கலாமென வல்லுநர்கள் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்; அடிப்படைக்கல்வியையும் அனுபவ ஆண்டுக்கணக்கினையும் வைத்துப் பங்கீட்டு அட்டையை வழங்கிவிடுவது மிகவும் இலகுவான ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுமாதிரியான செயல்; ஆனால், நிகழ்வினையும் புனைவினையும் பிரிப்பது அப்படியான தெளிவுத்தன்மையுள்ள இலகுவான செயலில்லை. இருக்கும் பழைய ஆவணங்களின் அடிப்படையினை வைத்தும் புரிதலினை வைத்தும்மட்டுமே செயற்படவேண்டிய அவலம் இந்த அதிகாரிகளுக்கிருந்தது. ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் புனைவுகளாகவும் வெறும் புனைவுகள் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் சேர்க்கைப்படுத்தலென்றும் சட்டத்தினதும் நுட்பத்தினதும் ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிகழ்வெழுதிகள், புனைவெழுதிகள், கலந்தெழுதிகளினாலே சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேதான் அரசின் நிர்வாகிகள் இப்படியான புனைவுகளின் மேலெல்லையும் நிகழ்வுகளின் கீழெல்லையும் மீறமுடியாதபடி, தனிப்புனைவெழுதலுக்கும் தனிநிகழ்வெழுதலுக்கும் ஊக்கமளிக்கும்வண்ணம் (அதாவது, மாறுபடக் கலந்தெழுதிப் பிழைப்பவர்களை அழுத்தித் தள்ளும்வண்ணம்) இப்படியாக புனைவுக்கான தொகையை நிகழ்வுக்கான தொகையைவிட மிக அதிகமாகவும் அதேநேரத்திலே நிகழ்வு/புனைவு விகிதவெண்ணின் உயர்பட்ச எல்லையைக் குறைத்தும் விட்டிருந்ததென்று எனக்குத் தோன்றியது.


***** ***** ***** ***** *****


இது நிகழ்ந்து ஓராண்டுக்குப் பின்னால், ஒரு மாதத்திலே எனது மாதப்பங்கீட்டினைப் பெற்று வர அலுவலகத்துக்குப் போனால், படுதாப்பலகணிக்குக்கீழே கதிரைக்குள்ளே வேறொரு மனிதர் தொலைந்திருந்தார். முன்னர் தொலைந்திருந்தவர் எங்கே போய்த்தொலைந்தாரென்று அரசு அதிகாரி-பயனாளி என்ற உறவுமுறையிலே நான் இருபதாண்டு அனுபவத்தின் பின்னாலே கேட்பது சட்டரீதியான குற்றமென்று அறிவேன். ஆனால், எனக்குச் சொல்லாமல், அதிகாரியை மாற்றிவிட்டு அந்த அதிகாரியைப் பற்றி ஓராண்டு அறிந்த மனிதனாக எந்தக்கேள்வியையும் எழுப்பமுடியாத மனிதனாக என்னையாக்கிய அரசினை எப்படியாவது பழி வாங்கிவிடவேண்டுமென்று தோன்றியது. இந்த மாதமாவது, சென்ற மாதத்திலே தேங்கிய என் பங்கீட்டெஞ்சலையும் இந்த மாதத்துக்கான என் முழுப்பங்கீட்டினையும் பயன்படுத்தி விடுவதெனத் தீர்மானித்தேன்.

நான் விரும்பியபடியே கேட்டு புதிய அதிகாரியினை அட்டைக்காரரின் வழமைக்குமாற்றான செயல்குறித்துக் கண்புருவம் சுருக்கிப் பார்க்க வைத்து, பங்கீட்டினைப் பெற்று, சூரிய வெளிச்சத்துக்கு வெளியே வந்தபோது மிக உற்சாகமாகச் சீட்டியடித்துச் சிரித்துக் கடந்த தாடிமழிமீசை ஆளைத் திரும்பிப்பார்த்தேன்.

அந்நேரத்திலே என் கைகளை இரு அரசுபங்கீட்டலுவலகக்கண்காணிப்பதிகாரிகள் வந்து பிடித்தனர். வாசலிலே ஆளைப் பார்த்ததுவரை எழுதியிருந்தபோது, எனது அந்த மாதப் பங்கீடு அத்தனையையும் சட்டப்படி செலவழித்து முடித்திருந்தேன். அதற்கப்பால், இருபத்தோராண்டு அனுபவம் வாய்ந்த எனக்கு அரசுப்பங்கீட்டுச்சட்டத்தினை மீறி ஒரு வாக்கியம் முணுமுணுத்தேனும் அவர்களுக்குச் சொல்லத் துணிவு வந்திருந்தது:

"நிகழ்வு புனைவுகளை அரசுப்பங்கீட்டுச்சட்டங்களை மீறி எழுதுகின்றவனில்லை நான்."
கரு: '05, செப். 18, ஞாயிறு.
கதை: '05, ஒக். 21, வெள்ளி. 15:53 கிநிநே.

Wednesday, October 19, 2005

குவியம் - 18

நேற்றைக்குவரை போன ஒரு மாதமாகப் பண்ணிய உருப்படியான காரியமென்னவென்றால், பதிவுகளின் பக்கம் அடிக்கடி வராமலிருந்தது. குஷ்பு விவகாரம், சுந்தரராமசாமி மரணம் இதிலெதிலுமே நானும் ஒரு தனிப்பதிவு போட்டேனென்று எண்ணிக்கைக்குப் போடாதிருந்தது சொந்த நிம்மதிக்கும் நேரச்சேமிப்புக்கும் உதவியது. தமிழ்மணத்திலே பதிவுகளை நெறிப்படுத்துவது குறித்து சர்ச்சையை நேற்றைக்கு வாசிக்க நேர்ந்ததால் தனியே சொந்த நலனை முன்னிட்டு மூன்று பந்திகளில் சின்னக்குறிப்பு எழுதவேண்டிய அவசியம்.

தமிழ்மணத்தினால் பதிவுத்தொடுப்புகள் மிக இலவாக ஆக்கப்பட்டிருக்கின்றன (அல்லது ஆக்கப்பட்டிருந்தன). அஃது இயங்கும் தொழில்நுட்பம் முழுமையாக எனக்குத் தெரியாது - அதனால், அதனை இயக்குவதற்கான பொருள், நேரத்தேவைகள் குறித்தும் தெளிவான விளக்கமில்லை. உயிர்ப்போடு இயங்காத பதிவுகள் நிர்வகிப்பதிலான சிக்கல் காரணமாக அகற்றப்படின், அந்நிலையை ஏற்றுக்கொள்ளவே வேண்டிய இக்கட்டு - இதனால், தற்போது புதிய உள்ளிடுகைகள் அற்ற பதிவுகளிலே காணப்படும் விடயங்கள் வரப்போகின்ற புதிய பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரியாமலே போகக்கூடுமென்ற நிலையிலுங்கூட.

ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியதுபோல, ஆக்கலும் அவனே அழித்தலும் அவனே என்ற இருமுனைப்பிலே தமிழ்மணம் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் முழுவதிகாரம் காசிக்கு இருக்கின்றது. ஆனால், அவரைக் கட்டுப்படுத்த வல்லமையுடைய ஒரே வழியான தார்மீகக்கடப்பாட்டின் அடிப்படையிலே நோக்கின், எதை நீக்குவது எதைச் சேர்ப்பது என்பது எதேஷ்டமாக (மதம் என்பதுபோன்ற விடயங்கள்) இருக்கமுடியாது. வெடிகுண்டு செய்வது பற்றி ஒருவர் பதிவு போட்டால், அதைத் தமிழ்மணம் சேர்க்கமுடியுமா இல்லையா என்பதை அவர் தீர்மானிக்கலாம். ஆனால், அப்பதிவினை தமிழ்மணத்திலிருந்து நீக்க அவரை நிர்ப்பந்தப்படுத்தும் வலுவான காரணங்கள் எதுவென எனக்குத் தெரியவில்லை. புரியாமல் தமிழ்மணத்தூடாக வாசிக்கும் எதற்கும் தமிழ்மணத்தின் சிகையைப் பிடித்தாட்டும் பதிவாளர்கள்/வாசகர்களிடையே தன் பெயர் கெட்டுவிடக்கூடாதென அவர் கருதுவதாகவும் இருக்கலாம். குசும்பனும் அவரைச் சார்ந்தவர்களும் இட்ட பல பதிவுகள் என்னைப் பகிடி செய்து வந்திருப்பதை என்னைப் போலவே பலரும் பார்த்திருக்கலாம். ஆனால், தமிழ்ப்பதிவு என்றளவிலே சொல்லத் தோன்றுவது, குசும்பனின் பதிவினையோ அதுபோன்ற எந்தப்பதிவினையோ தமிழ்மணத்தின் இணைப்பிலிருந்து நீக்கவேண்டிய அவசியமில்லை. இதை, இதே அலைவரிசையிலே பேர் ஏ ரீலியின் பதிவினை இரண்டாண்டுகளுக்கு முன்னால் நடத்தியவன் என்றளவிலே சொல்லவரவில்லை.

தானம் கொடுத்த மாட்டினைப் பல்லைப் பிடித்துப் பார்க்கக்கூடாதென்பதோடு, நண்டு கொழுத்தால் வலையிலே தங்காது என்பதும் எந்த உன்னதமும் தன் உச்சநிலையடைந்து சுருங்குமென்பதும் இயல்பு. இணையத்திலே தமிழ்நெற் இலே இதனைத் தெளிவாகக் கண்டிருக்கின்றேன். தொழில்நுட்பத்தின் போதாமையும் நேரத்தின் போதாமையும் தமிழ்மணம் போன்று தனியொருவரினாலே அல்லது குழுவினாலே நிர்வகிக்கும் ஒரு தொடர்பாக்கியின் வீச்சத்துக்கு எல்லை வகுக்கும். தமிழ்மணத்துக்கு அது நேர்ந்திருக்கின்றதென்று நினைக்கிறேன். தமிழ்மணம் இல்லாது, இத்துணை தூரம் கடந்த ஓராண்டாக வந்திருக்கமுடியாதென்பது மிக்க உண்மை; அதற்காக காசிக்கும் தமிழ்மண இணை-மட்டுறுத்துனர்களுக்கும் நன்றி. ஆனால், நேரமும் நிதியும் நிர்வாகத்திலே சிக்கல் தராதவிடத்து, பதிவுகளினைச் சேர்த்தலும் விலக்கலும் குறித்து தமிழ்மண நிர்வாகம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்பது என் அவா. ஆனால், அவ்வாறு செய்யாவிடின், தமிழ்மணத்திலிருந்து என் பதிவினையெல்லாம் விலக்கிக் கொல்லவேண்டுமென்று கேட்கமாட்டேன். அது நோக்குக்கே முரண்.

'05 ஒக்., 19 புத. 12:03 கிநிநே.

Wednesday, October 12, 2005

பின்னல் - 27


Planet Sudoku
பதிவிட நேரம் கிடைப்பதில்லை என்ற புலம்பப்போவதில்லை. பதிதலிலே ஆர்வம் குறைந்து வருவதும் ஒரு காரணம். போகிற போக்கிலே நானும் ஒரு பதிவைப் போட்டிருக்கின்றேன் என்ற விதத்திலே போடுவது ஒரு விடலைப்பையனின் விளையாட்டுத்தனமாகத் தோன்றுகிறது. 'காலத்தே பயிர் செய்' என்பதும் 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்பதும் அடிக்கடி அம்மம்மாவும் அப்பாச்சியும் அந்தக்காலத்திலே சொல்லித் தந்த அறிவுரைகள். ஆனால், அவற்றின் முக்கியத்துவம் அந்நேரத்திலே புரியவில்லை. இப்போதாவது சரியாகப் புரிந்ததா என்றால், அது குறித்தும் சரியாகச் சொல்லமுடியவில்லை; வேண்டுமானால் தர்க்கத்துக்குப் புரிகின்றது ஆனால் உணர்வுக்குப் புரியவில்லை என்று மட்டும் சொல்லலாமோ? தெரியவில்லை.

ஆனால், கழுதையின் உச்ச வயதைக் கடந்த கடந்த நாற்பது நாட்களிலே, தனக்கான நேரம் என்பது குறித்து நிறைய எண்ணத் தோன்றுகிறது. அந்த எண்ணங்களுக்கான இடைவெளி வரும் தருணங்கள்கூட தொடர்வண்டிப்பயணங்களிலும் நடக்கும் குளிக்கும் பொழுதுகளிலேமட்டுமே கிடைக்கின்றன.

ஒருவனுக்கு தனக்கான நேரமென்பது ஒரு முக்கியமான விடயமென்று எனக்கு முதன்முதலிலே தோன்றியது எண்பத்தேழு எண்பத்தெட்டிலே என்றதாக யோசித்துப் பார்க்கையிலே தோன்றுகிறது. தோன்றிய இடம், கடற்கரையோ, சவக்காலை மதிலோ, பொதுநூலகமோ, ஈருருளி பொழுதுபோக்காக ஓட்டி ஊரைச் சுற்றிய ஒரு வீதி மூலையோ என்பது குறித்தும் திட்டமாகச் சொல்லமுடியவில்லை. அதையெல்லாம் மீட்டிப் பார்த்து எழுதினால், டிஜே சொன்னதுமாதிரி கைபரபரக்கின்றதென்பதாக ஆகிவிடுமென்பதாலே நிறுத்திக்கொள்கிறேன் ;-)
Wednesday, September 28, 2005

கரைவு - 6ஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க...... &
கொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல் பின்னான குறிப்பு

திரு. மறவன்புலவு சச்சிதானந்தன் தமிழகத்திலே காந்தளகத்தினை வைத்திருக்கின்றபோதும், "ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும்" என்று சொல்வது மிகவும் பெருந்தன்மையுள்ள கருத்து. இதை அடிக்கடி நாம் ஈழத்தவருக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாகவிருக்கின்றது. ஒவ்வொருவரும் தாம் விரும்புவதை எங்கே பதிப்பிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரமென்பதை ஒத்துக்கொள்கின்றோம். ஆனால், பெரும்பாலான ஈழத்தமிழர்களின் நிலைமையைத் துணிந்து பதிப்பு, தொலைக்காட்சி, திரைப்படம் மூலம் வெளியிட மறுத்த மறுக்கின்ற திரித்த திரிக்கின்ற பெரும்பாலான தமிழகப்பதிப்பகங்களும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தொலைக்காட்சிச்செய்திகளும் திரைப்படத்துறையாளர்களும் வெட்கமின்றி ஈழப்பதிப்புகளை வர்த்தக ரீதியிலே அணுகுவதும் அவ்வணுகுதலை பல ஈழப்(புலம்பெயர்) "படைப்பாளிகள்" சாதகமாக்கிக்கொண்டு "ஈழப்படைப்பு, புடைப்பு, புடலங்காய்" என்று குறிசுட்டுக்கொண்டு பதிப்பதும் மிகவும் வேதனையளிக்கின்றது. தமிழ்நாட்டின் மிகச்சில படைப்பாளிகளும் பதிப்பகங்களும் மட்டுமே எக்காலத்திலும் ஈழத்தவர்களின் நலனிலே தம் நலன் கெடுகின்றபோதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கின்றார்கள்; இன்னும் செயற்பட்டிருக்கின்றார்கள்; இனியும் செயற்படுவார்கள். ஆனால், இன்றைக்கு இணையத்திலும் தமிழ்வெகுசன ஊடக, பதிப்பக, பத்திரிகைத்துறையிலே ஈழத்தவர்களின் படைப்புகள் எமக்கூடாகவேயென்றும் நாமே அவர்களைத் தாங்குகின்றோமென்றும் பதாகைபிடிக்கும் பிரபல்யங்கள் இந்த மெய்யான நலன்விரும்பிகளுள்ளே அடக்கமில்லை.

அதே நேரத்திலே, சச்சிதானந்தத்தின் "ஈழத்தவர் என்றாலே காமாலைக் கண்ணுடன் பார்க்கக் கூடிய தமிழகச் சூழ்நிலையிலும் (இராஜீவ் கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர் சிலோன் விஜயேந்திரன்) தரமான எழுத்துக்கும் படைப் புக்கும் அணுகு முறைக்கும் தமிழகப் பதிப்பாளர் தரும் ஆதரவு போற்றுதற்குரியது. மணிமேகலைப் பிரசுரத்தார் ஈழத்தவர் படைப்புகளை வெளிக் கொணரும் வேகத்தைப் பாராட்டுகிறேன்" என்ற கருத்தினை ஈழதேசிய அணுகுமுறையிலே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மணிமேகலைப்பிரசுரம் அடிப்படையிலே விற்பனையை முன்வைத்து எதையும் செய்யக்கூடியவர்கள். மணிமேகலைப்பதிப்பகத்தின் லெட்சுமணன் அவர்கள் ஒரு முறை திரு. நாராயணன் மாலன் என்ற இன்னொரு பத்திரிகையாளருடன் சேர்ந்து, வழக்கம்போல வாயை வைத்துக்கொள்ளமுடியாத, தற்போது இந்தியாவிலே பாதிநேரம் தஞ்சம் புகுந்து தானுமொரு பதிப்பாளராக உருவெடுத்துள்ள திரு. எஸ். பொன்னுத்துரை என்பவரின், "புலம்பெயர்படைப்புகளே தமிழிலக்கியத்தினை நிமிர்த்தி நிறுத்தப்போக்கின்றன" என்ற மாதிரியான கருத்துக்கு, எதிர்வினையாக அதேமேடையிலே "சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் என்று பட்டம் கொடுத்தவர்கள் நாமே" என்ற விதத்திலே பதிலிறுத்ததை இப்பாராட்டினை சச்சிதானந்தன் அவர்கள் மணிமேகலைப்பிரசுரத்துக்கு வழங்கும்நிலையிலே நினைவிலே கொள்கிறோம்; சுப்பிரமணியபாரதியையும் உ.வே.சாமிநாதரையும் ந. பிச்சமூர்த்தியையும் ரா. கிருஷ்ணமூர்த்தியினையும் மாதவையாவையும் ராஜமையரையும் மட்டுமே வைத்துத் தமிழிலக்கியவரலாறு கட்டப்படும் அவச்சூழலிலே அதன் நீட்சியாக தமிழிலக்கியத்தின் எதிர்காலவரலாறெழுதுதல் அமையக்கூடிய நிலை குறித்து அழுத்தி நினைவூட்டவிரும்புகிறோம்.

ஆயுதந்தாங்கு தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் முற்பட்ட காலமிருந்தே தமிழ்த்தேசியத்தினை முன்வைத்திருக்கும் திரு. சச்சிதானந்தன் இப்படியாக எத்தனையோ ஈழத்தமிழர் நலனையும் மெய்யாகவே பிணைத்துக்கொண்டு செயற்படுகின்ற நல்ல தமிழகப்பதிப்பகங்கள் (அவருடைய காந்தளகம் உட்பட) இருக்கும்போது, மணிமேகலைப்பிரசுரம் போன்ற சேற்றைக்கண்டால் பதித்து, ஆற்றைக்கண்டால் விற்கும் பதிப்பப்பங்களின் செயற்பாடுகளைப் பாராட்டுக்குரியதாகச் சொல்வது முற்றான புரிதலை அவர் கொண்டிருக்கவில்லையோவென ஐயமேற்படுத்துகின்றது.

இலெட்சுமணனின் தமையனாரான இரவி என்பவர் ஈழத்தின் திருகோணமலை தொடக்கம் இலண்டன், பெர்லின் வீதிகளூடாக அமெரிக்காவின் பொஸ்ரன் நகர்வரைக்கும் இப்படியான விற்பனை-பதிப்பக வர்த்தகராக எப்படியாக அலைகின்றார் ---- மன்னிக்கவேண்டும், ஈழத்தவர்களிடையே ஊடுருவித்திரிகின்றார் - என்பதை நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டேயிருக்கின்றோமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதற்கு, பதிப்பிலே தமது கோவணச்சலவைக்கணக்கும் சாம்பார்ச்சமையற்குறிப்பும் வந்தாலே போதுமென்ற வெறியிலே அலையும் புலம்பெயர்ந்த பெயராத ஈழத்தமிழர்களிலே பலரும் காவு போவது வெட்கத்துக்குரியது. ஆனால், இவர்களுக்கு தற்கால மணிமேகலையின் அண்மைக்கால பிட்சாபாத்திர வரலாறு தெரியாமலிருப்பதும் ஒரு காரணமாகும்.

ஈழத்தின்/ஈழத்தமிழர்களின் சுயமான சுயாதீனமான, சுதந்திரமான எதிர்காலத்துக்கு, இந்தியாவிலே முழுமையாகத் தங்கியிருக்கும் எந்த நிலையும் - அது பதிப்பகமாகட்டும், படைப்பாகட்டும், படமாகட்டும், எந்தப் பணியாரமாகட்டும் - நல்லது செய்யப்போவதில்லை. மிகச்சிறந்த உதாரணம், ஈழத்திலே தக்கிப்பிழைத்த விடுதலைப்புலிகள் இயக்கமும் தக்காது தேய்ந்த மாற்றியக்கங்களும். அதைவிட மிகவும் சிறப்பான கொள்கைகளும் ஆட்பலமும் மிக்க மீதி இயக்கங்கள் அழிந்தபோதும், விடுதலைப்புலிகள் இயக்கம் தக்கப்பிழைத்த முதன்மைக்காரணம், விடுதலைப்புலிகள் இயக்கம் தன் தளத்தினையும் உற்பத்தியினையும் முக்கிய நிலைகளையும் ஈழத்தினை மையமாக, ஈழத்திலே வைத்து செயற்பட்டதே.

அதனால், இன்றைக்கு இந்தியமேலாதிக்கவாதிகளின் கலாச்சார ('பண்பாடு' என்றால் அவர்களுக்குப் பிடிக்காது, 'கலாசார' என்றுகூட இயன்றவரை சரியாக எழுதாமலு மடம் பிடிப்பார்கள்) காவலர்கள் ஆடென ஆடவும் பாடெனப் பாடவுமே நமது தக்கித்திருப்பதற்கான பண்பாட்டுக்கோவையும் எதிர்காலமுமில்லையென்று ஈழத்தவர்கள் உணர்த்தவேண்டிய தேவையும் வாழவேண்டிய அவசியமும் எமது எதிர்காலச்சந்ததியினையிட்டேனும் உள்ளது.

திரு. சச்சிதானந்தத்தின் கருத்து, "I personally believe without India's effective intervention nothing can come to pass in Sri Lanka. And Indian intervention requires a good understanding of the ground situation in Sri Lanka" என்று இன்றுங்கூட இருக்கலாம்; ஆனால், எண்பதுகளிலே இராணுவரீதியாக ஊருடுவமுடியாது தோற்ற இந்திய மேலாதிக்கவாதிகள், ஈழத்திலே இன்றைக்கு வர்த்தக, பண்பாட்டுரீதியாக ஊடுருவ முயன்று ஓரளவுக்கு வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதை அவர் கவனிக்கவேண்டும்.

சன் தொலைக்காட்சி, கல்கி, மணிரத்தினம், மணிமேகலைப்பிரசுரம் தொடக்கம் விடுமுறைக்காலங்களிலே இந்தியக்கோயிற்சுற்றுலா, உடுபுடவை வாங்குதலென்று இந்தியமேட்டுக்குடிகளின் கலாசாரத்தினைத் தம் பண்பாடு என்று எண்ணி மயங்கும் ஈழத்தவர்களை அடுத்த இந்தியமேட்டுக்குடிமயமாக்குதலின் அடுத்த கட்டமே, இந்தியமேலாதிக்கக்கூறுகளை மையங்கொண்டியங்கும் தமிழகக்காவலர்கள் ஈழத்தவர்களின் படைப்புகளை எடுத்து தம்விருப்புப்படி உடைப்பிலே போடும் இந்நிலை.

தனிப்பட்ட அளவிலே எவரும் -ஈழத்தவரானாலும் சரி, வேறெந்த மானிடக்குஞ்சானாலுஞ் சரி- தமக்கு விரும்பியபடி எங்கும் பதிப்பிக்கலாம் எதையும் பதிப்பிக்கலாம்; அதை மறுக்கவில்லை; ஆனால், ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவரும் பதிப்புத்துறையிலே நெடுங்காலம் பணியாற்றுகின்றவருமான திரு. சச்சிதானந்தன், மணிமேகலைப்பிரசுரம் ஈழப்படைப்புகளை "துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" என்று வெளியிடுவதை, பாராட்டுவதைச் சரியான பார்வையிலே வந்திருக்கக்கூடிய முடிவாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்கள், இயன்றவரை பதிப்பகங்கள் தொடக்கம் படங்கள்வரைக்கும் கோயில் தொடக்கம் கோவணம்வரைக்கும் இந்தியமேலாதிக்கத்தினை முனைப்புடனோ அல்லது மூளையின் ஒரு மூலையிலேயேனுங்கூட மறைத்துவைத்தோ செயற்படும் கூட்டத்திற்கு ஒரு சதமேனும் மறைமுகமாகச் செல்லாமல் செயற்பட முயலவேண்டும். குறைந்தபட்சம், எக்காலத்திலும் இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்திலே, அதைக் கெடுக்காத ஈழநலனையும் முன்னெடுக்கும் எத்தனையோ பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலே உள்ளன. அவற்றினை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முயலவேண்டும்.

அதைவிட முக்கியமாக, ஈழத்தின் பதிப்பகத்துறை தொழில்நுட்பவளவிலே இன்னும் முன்னேறவேண்டும்; இது குறித்து விரிவாக தன் பதிப்புத்துறை குறித்த பதிவுகளிலே எழுதியிருக்கும் திரு. சச்சிதானந்தனுக்கு நன்றி. இலங்கையின் கொழும்பினை மட்டுமே சார்ந்திருக்காமல், ஸ்ரீலங்கா அரசின், இந்தியாமேலாதிக்க அரசின் ஊடகக்கூலிகளின் கட்டுப்பாடு செல்லுபடியாகாத கைபடாத கைபடமுடியாத ஈழத்தின் முடுக்குகளிலே இப்பதிப்பகங்கள் தோன்றவேண்டும். வெளிச்சம் போன்ற இயக்கம் சார்ந்த பதிப்பகங்களும் இயக்கம் சாராத இன்னும் பல தமிழ் பதிப்பகங்களும் முகிழ்க்கவேண்டும்.

ஆனால், தற்போதைய சூழலினைக் கவனிக்கும்போது, இதுவெல்லாம் நடக்குமென்று எனக்கு நம்பிக்கையில்லை; 80 களிலே இராணுவ, அரசியல்ரீதியாக ஊடுருவ முனைந்து தோற்ற மேலாதிக்க இந்தியா, இன்றைக்கு பொருளாதார, ஊடக, கலை, பண்பாட்டுரீதியாக ஊடுவ முனைந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதே சோகமான யதார்த்தமான நிலையாகும். :-(

எனினும், இயன்றவரை இந்தியமேலாதிக்க/மேட்டுக்குடிகளின் ஈழ எடுபிடிகளை நாம் அடையாளம் கண்டுகொள்வதும் அவர்களின் பாதைகளை நமக்கேனும் நாம் தேர்ந்துகொள்ளாமல் மறுத்துக்கொள்வதும் மிகவும் அவசியமாகும்.

வாழ்க ஈழம்! வளர்க தமிழ்த்தேசியம்!!பாடலுக்கு நன்றி: தமிழ்தேசியம். அமை

'05 செப்ரெம்பர், 28 புதன் 14:45

பி.கு: இப்பதிவு, இப்பதிவினையும் இதுபோன்ற பதிவுகளையும் இப்பதிவுகளையிடுகின்ற எம்மைப் போன்றவர்களுக்கு இட முடியாதென தாம் நினைக்கும் விதத்திலே கிண்டலடித்து ஒரு கிழ மைப்பதிவிட்டுப் பிழைக்க மட்டுமே பெருந்தன்மையும் பேரறிவும் கொண்ட எல்லா இந்தியமேலாதிக்கச்சின்னக்குசுமூடிக்கழுதைப்புலிகளுக்கும் நம் பின்னூட்டத்தகுதியில்லாத உதிர்ந்த .யிர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. கவனிப்புக் கலையும் இவ்வுரோமங்களுக்கு, தமிழ் அத்துணை பிடிக்காதென்பதால், Please serve yourself and go on living on what I pee(d) on my exdispense ;-) :-)
_/\_


பிற்போக்கைக் கண்டிலர் விண்டிலர் ;-)
கரைவு~

Saturday, September 24, 2005

குவியம் - 17

மிகுந்த மனவழுத்தத்துடன் எழு(து)கிறேன்


தொரந்தோ வாழ் ப்ரோ அவர்கள் நேற்றும் நேற்றுமுன்தினமும் என்னைப் பற்றி மிகவும் தவறான வதந்திகளை இரு பதிவுகளிலே பரப்பியிருக்கின்றார்.

ஒன்று: சிங்கப் பூரான் வாசியா(தவரா)ன ஈயநாத்தன் என்பவரின் பதிவிலே தென்னங்குரும்பா கீழ்க்கண்டவாறு வெட்டியிருக்கின்றார்.

பெயரிருந்தும் படம்போட்டு பெயர்மறந்தார் பெயரிலி

நான் அருகிலிருக்கும் இந்தச்சின்னஞ்சிறுபாலகன் தன் வாழ்க்கையிற் சறுக்கி விளையாடும் வண்ணப்பப்படத்துக்கு ஏன் குழந்தையின் பெயரைப் போடவில்லையென அந்தக்கர்த்தருக்கும் அல்லாவுக்கும் ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் என்னுளம் துன்புறும் வண்ணம் நான் பதிவிலில்லாத வேலை/ளையிலே தேவையில்லாமல் தொரந்தோவாசி தொந்தரவு பண்ணியிருக்கின்றார்.

இரண்டு: நமது டோலி சாரா ஜெஸியின் படத்தினைப் போட்டுவிட்டு, சிரிப்பு, லைவ்லி, லௌலி, லோலி, லைவ்நீ, லௌ கீ கம் நீ என்றெல்லாம் பிதற்றியதோடு மட்டுமில்லாமல், "கார்த்திக், பார்த்தீங்களா.....ஒரு ஜெஸிக்கா பார்க்கரைப் போட்டவுடன் எப்படி எங்கடை ப்ரோ பதிவு, படம், பின்னூட்டம் என்று எதுவும் இல்லாமல் மயங்கிக் கிடக்குகிறார் என்று :-)" என்ற பொய்ப்பிரசாரத்தினையும் பிரசாதமாக 21/2 ஏக்கர் இதய கோல்டன்பெல், உடன்பிறவா கேது காமாசு ஆகியோரிடம் அவிழ்த்துவிட்டிருக்கின்றார்

பாம்புத்தோலர் தோழர் ப்ரோவின் தோளதிலே அடித்துத்தட்டிச் சொல்கிறோம், "ஜெஸிக்கா பார்க்கரைப் பார்க்காமல் பிஸியாய் என்ன பார்க்கர்பேனையா வாங்கினாய் என்று கேட்கிறாயே? அதைவிட முக்கியமான பூனை ஒன்றைத் துரத்தி நாம் திரிந்திருக்கக்கூடுமென்பது உனக்கு மண்டையிலே மறந்து போய்விட்டதா மனத்திலே மறைந்துபோய்விட்டதா? தொரந்தோ பார்க்கரைப் பதிவிலே திறந்து பார்க்காமல் நாம் மியாவ் மியாவென மந்திரம் முனகிக்கொண்டு பொஸ்ரன் பாரிலே உலாவியது உனக்கெங்கே தெரியப்போகின்றது! லௌலியை அடக்கிவாசிக்கவேண்டாமா? இப்படியாக நாட்டுப்பூனைக்கு முன்னால் பாரின்பேனையை நீ முன்வைப்பாயானால் நாங்கள் க்ளாங்கென்று உனது மண்டையிலே எரிகணையோ ஈக்கல்லோ எறிந்தோ எடுத்தோ போடும் இழவு நிர்ப்பந்தம் இத்தால் ஏற்படுமென்று இத்தாளால் எச்சு அரிக்கின்றோம்."

Thursday, September 22, 2005

படிமம் - 162


Chocolate Fields'05 செப்., 22 வியாழன் 18:03 கிநிநே.

நாளது தொலைந்தது
நானதிற் தொலைந்தேன்
ஆளது தொலைவதால்
ஆனதோ தொலைவு/வாழ்வு?

நானும் பதிகின்றேன் என்ற மாதிரிக்கு....

தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

Tuesday, September 20, 2005

படிமம் - 161

தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

மழைமதியம் '05/20/09 செவ்வாய்.
எழுக பலர்
எழுதுக பல
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து

Saturday, September 17, 2005

குவியம் - 15


படம் பார் படங்கீறியவரைச் சொல்

தமிழ்ப்பதிவுகளிலே படத்தைப் போட்டு, 'ஆளைக் கண்டுபிடியுங்கள்' விளையாட்டினை ஆரம்பித்திருக்கின்றார்கள். வாத்துகள், காட்டுப்பன்றிகள் மறைய, பதிவுக்கூர்ப்பிலே அடுத்தகட்டமாக, இந்த "ஆளைக் கண்டுபிடி-அகதியைக் கண்டுபிடி" விளையாட்டினை ப்ரோக்கள் செய்கின்றார்கள். மாறுதலாக, எமது பங்களிப்பாக, படம் போட்டவரைக் கண்டுபிடியுங்கள் என்று அவரின் படத்தினையும் போட்டுச் சொல்கிறோம்.ஐம்பதாண்டுகளுக்கு முன்னால், மேலுள்ள படங்களைக் கீறியவரின் படமும் பக்கத்திலே தரப்பட்டிருக்கின்றது; பொஸ்ரனில் வாழும் சண்(முகலிங்கம் துரைசாமி) இன் மலையாளப்பாவை பல்வேறு விடயத்தொகுப்பிலே, இந்தப்படங்கள்-படம் கீறியவர் குறித்து வந்திருக்கின்றதைத் தந்திருக்கின்றோம்.

படம் வரைந்தவரின் பெயரைப் பற்றி(யும் மேலோட்டமாக 'மலையாளப்பாவை' குறித்தும்) பின்னால்.

Friday, September 16, 2005

கணம் - 477


'Che' Incorporated


'05, செப்., 16 வெள் 17:34 கிநிநே.


தோரோ கடனட்டைக்காய்த்
தவளைக்குளம் தூர்த்தார்
ஐயன்ஸ் ரீன் பென்சில் விற்க
வகுப்பு இரண்டுக்குப் போனார்
உலூதர் கிங் வாய் பொறுக்கி
விற்றார் கடித்த அப்பிள்.

பின்னால்,
ஆடி வெக்கை மதியத்தில்
ஒரு கோகாகோலாவுக்காய்
ஒளிந்திருந்து விரல்காட்டிக்
கொடுக்கப்பட்டான்
என் ஐயன்.

வேறாய்ச் சிந்தி!

வேறேதும் சிந்தி!!

'05, செப்., 16 வெள் 18:00 கிநிநே.

படிவு - 14பிபிஸி தமிழோசை
16 செப்ரெம்பர் 2005


இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க முடிவு

இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார்.

உல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார்.Thursday, September 15, 2005

உணர்வு - 35


Blessed, Beautified, Brassed, Burnt


'05, செப் 15 வியா. 18:24 கிநிநே


தமிழிலே தலைப்பு நீளும் என்பதாலே தரப்படவில்லையென்பதல்ல, பீம்சிங்-சிவாஜி படவரிசையிலே 'ப' இலே தலைப்புகள் தேடும் பஞ்சியும் காதிலே பஞ்சடைத்தாற்போற் பசியும் விழி துஞ்சிட அவாவும் (இந்த எதுகை போதுமா? மோனே, இன்னும் மோனை வேணுமா?) விஞ்சி நிற்பதாலே தரமுடியவில்லை. பிறகொருநாள் பார்த்துக்கொள்ளலாம்.

துளிர் - 47


Noise Evaporation


வீதிக்கரைப்புல்லுப்பழம், மஸாஸுஸெட்ஸ் மாநிலம்
'05, செப், 15 13:20 கிநிநே. விடாமழைக்காலைம்

படங்களிலே வாத்தும் வானமும் வனமும் வானரவழிவந்தவையும் கூடினதாலே அருள் கிடைத்து கனி பெற்றோம் ;-)

உணர்வு - 34


Momentary Reflection


'05, செப் 15 வியா. 11:24 கிநிநே

இப்படத்தினை எடுக்கப் பொறி தந்த தங்கமணியின் 'கண்ணில் தெரியும் வானம்' இற்கு நன்றி.

Wednesday, September 14, 2005

தெறிப்பு - 23


Glued to the Blue Screen
படங்களைப் பொறுத்தமட்டிலே எந்தப்படமென்றாலும் அலுக்காமல் இருந்து முடிவுவரை பார்ப்பேன் என்ற நம்பிக்கையும் பெருமையடிப்பும் என்னிடமிருந்தது. இருந்ததென்று ஏன் சொல்கின்றேனென்றால், எழுபதுகளிலே ஈஸ்ட்மென் கலர், டெக்னிக்கல் கலர் வண்ணப்படங்களாக சிவாஜி, ஜெமினி நடித்த சில படங்களை அண்மையிலே பார்க்கும் துர்ப்பாக்கியம் கிட்டியது. ஆறுபதுகளின் கருப்புவெள்ளைகளிலே சிவாஜி, ஜெமினி நடித்த படங்களைப் பாடல்களுக்காகவும் நகைச்சுவைக்காகவும் மிகவும் விரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, இது பெரியதாக்கத்தைத் தந்ததென்பதிலும் விடத் தூக்கத்தைத் தந்தது.

தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

Tuesday, September 13, 2005

குவியம் - 14


படம் பார் பாடம் படி
நாட்டிலே இன்றைக்கு மிக முக்கியமான விடயம் எத்தனையாவது பதிவு நாம் போடுகிறோமென்பதுதான் என்பது எனக்குத் தெரியவந்தபோது, நான் எத்தனை பதிவுகளைப் போட்டேன் என்று கணக்கெடுக்க விருப்பம் வந்தது; அனால், இலுப்பைக்கொட்டை, புளியங்கொட்டை, முருக்கங்கொட்டை எண்ணுவதுபோல, பதிவுகளை எண்ணுவது சுகமான வேலையில்லை; பஞ்சிபிடிச்ச வேலை.

ஆனால், தொள்ளாயிரத்து முப்பத்தியேழாவது நாள், இருபத்தொரு மணி நாற்பத்தி மூன்று நிமிடம் இருபத்தி மூன்றாவது செக்கனிலே போட்ட ஏழாயிரத்து நாற்பத்து மூன்றே கால்_பதிவினைப் பற்றி எவருமே கேட்காதலாலே, மிருகங்கள் தமது ஏரியாவிலே ஒண்டுக்கடித்துத் தம் இறைமையினையும் சுதந்திரத்தினையும் உரித்தினையும் நிலைநாட்டுவதுபோல நானே போட்டு வைக்க வேண்டியதாகிப் போனது. இல்லாவிட்டால், அதிப்ரமாண்டமான ஈஸ்ட்மென் கலர் வண்ணப்பதிவின் வரலாற்றின் ஏடுகளைக் குறிப்புக்காகவும் சலவாத்துக்காகவும் (இது வேற சலத்திலே நீந்தும் வாத்து) புரட்டப்போகும் ஆர் ஆட்சியாள 70 மிமீ ராஜராஜசோழர்கள் சோழர்கள் நம்பியாண்டார் நம்பிகள் நம்பியார்கள் என்னை மறந்து பதிவு வரலாற்றினைப் புதுக்கிவிடுவார்கள். பிறகு, என் வாரிசுகள் மனம் நொந்துபோகாதா? இருக்கிற காலத்திலேதான் உருப்படாமற்போன நாசமறுவான், செத்துங்கூட ஒரு கோதாரியும் எம் பெயர் சொல்ல ஏதும் பண்ணாமல் போய்விட்டானே எனத் திட்டுவார்களென ''Deep throat' Mark Felt மாதிரி நான் felt பண்ணியதாலே, இரண்டாம் பதிவினைப் போடவேண்டியதாயிற்று. "முதற்பதிவைத்தானே போடுவது முறை; ஏன் இரண்டாம் பதிவு?" என்று யாராவது அறிஞர் பெருந்தகை கேட்கக்கூடுமென்பதாலேதான், இரண்டாம்பதிவினைப் போட்டிருக்கின்றோம். வரலாற்றாசிரியர்கள் சந்தேகத்தோடு கேள்வி கேட்க இடம் கொடுக்காத எப்பேர்ப்பட்ட ராஜராஜகம்பீர கொசுகடித்தான் அந்ரஸாகேப்பும் அய்யோன்னு சரித்திரத்திலே சாமான்யமானப் போவான் என்பதால், இப்படியாக கேள்விகளுக்கான இடைவெளியைப் பள்ளத்தாக்காக விட்டுப்போகிறோம் என்று அறிக. அடிக்கடி "நாங்கள் இதைப் பண்ணியிருக்கிறோம் அதைப் பண்ணியிருக்கின்றோம்" என்று லேஞ்சியைப்போட்டு ஜன்னலோர ரெயின்சீற்றைப் பிடித்ததையும் ரெஸுமியிலே எழுதிக்கொள்ளவேண்டியது வாழுங்கலைகளிலே ஒன்றாதலால் நாமிதைச் செய்யவில்லை என்று சுட்டிச் சொல்லிக்கொள்வது ஒரு கலை. "களையிலாமற் கலையில்லை; கலையில்லாமற் களையில்லை" என்று யாராவது புலவர் அனானிமாசாகச் சொல்லியிருப்பார் என்பதைக் கவனியுங்கள்; சொல்லாவிட்டால், யாராவது புரவியாகப்போகிறவர்கள் புழுதியாகப்போகிறவர்கள் சொல்லக்கூடும். தமிழை நாமே கண்டுபிடித்தோம்; நாமே - இலக்கணத்தமிழ், இலக்கியத்தமிழ், இசைத்தமிழ், அறிவியற்றமிழ், அவித்ததமிழ், அவியாவுருளைத்தமிழ், கூழ்முட்டைத்தமிழ், குப்பத்துத்தமிழ் அனைத்துத்தமிழையும் அவியலாய்க் கண்டு பிறர் இன்புற முதலில் அளித்தவர், அழித்தவர், அழி ரப்பர் பென்சிலோடு சில்லோட்டக் கற்றுக்கொடுத்தவர் நாமே. நாமேதான்.

தமிழ்மணப்புனலோடு போகாமலிருக்க இத்தனை புலம்பவேண்டியிருக்கிறது பாருங்கள். ஐய்யய்யோ மறந்துவிட்டேன். புனற்றமிழ், புனைத்தமிழ், பூனைத்தமிழ், பூனாத்தமிழ் வகைப்பட்ட பொல்லாத்தமிழ்களையும் புனைந்து தந்தவர் நாமே; யாமே; பண்டைமாந்தர் யாங்கு ஈடேற பண்போடு பண்டமிழ் வழங்கிப் பண்டம் பெறாமலே போன பயிற்றங்காய்த்தமிழர் யாமென்று சொல்லிப் புக்கும் வாருங்காலவராலாறு.
பின்னல் - 26


Aura of a Door-stopper
இப்பதிவு, தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக எத்தனை மேலதிக தமிழ்ப்புலம்பல்களை இங்கே நடத்தவேண்டியதாகவிருக்கிறது. ஆனாலும், பாதகமில்லை. இல்லாவிட்டால், தமிழ்ப்பதிவென்றே ஒரு தம்பி, ஒரு தங்கைச்சி எழுதமாட்டினம். ஆனால், இப்படியான பதிவுகளிலே எது மெய்யான புலம்பல், எது தமிழ்மணத்துக்குத் தேவையான புலம்பல் என்று அறிய விரும்புகின்றவர்கள், கீழே காணும் பெருப்பிக்கப்பட்ட அளவீடுக்கு மேலே இனி வரும் காலத்திலே உரசிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கூடவே, கதவுத்தடுப்பியின் கால் & கையைப் பற்றிப் பின்குறிப்பு எழுத முயற்சிப்பவர்களுக்காக, கால்கை என்பது emission என்பதாகக் கொள்க என்று சொல்லி உபகாரம் பண்ணிக்கொள்கிறேன்


சம்பந்தப்படாத பி.கு: ப்ரோ ரப்பர் மேலே வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்து

தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....


படிமம் - 160


(Over)Exposedதமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

அறியாதார் அவலங்களுடன் விடிகிறது காலை
அறியாதார் கொய்த தேயிலைத்துளிருடன்
அறியாதார் வனைத்த கோப்பைப்பிடியுடன்
அறியாதார் எழுதிய அறிவியற்கட்டுரையுடன்
அறிந்தும் -
அறியாதான்போல் (சு)வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
அதிகாலையை

Monday, September 12, 2005

சலனம் - 4


After Life / Wandafuru raifu (1998)

After Life/Wandafuru raifu (1998)


ஐப்பானியப்படங்களோடு ஒப்பிடும்போது, பொதுவாக பிற நாட்டுப்படங்களிலே இறப்பினைச் சுற்றிய அதீதமான எண்ணச்சுழல்வும் ஈர்ப்பும் மிக அரிதாகவே இருக்கின்றன [Ingmar Bergman இன் 'The Seventh Seal' (1957), Abbas Kiarostami இன் 'A Taste of Cherry' (1997) போன்ற சில குறிப்பிடத்தக்க படங்களைத் தவிர]. ஐப்பானியத்திரைப்படங்களைப் - குறிப்பாக, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான- பொறுத்தமட்டிலே, அவற்றின் மேலே இறப்பின் சாயல் கவின் நிமித்தமாகவேனும், ஒரு மெலிதான ஒய்யாரத்திரையாகப் படிந்திருப்பதைக் காணலாம். இரண்டாம் உலகப்போரின் முடிவிலான ஐப்பானியர்களின் அளவிடமுடியா மனித உயிரிழப்பு மொத்தமாக அவர்களின் சிந்தைப்போக்கிலே இறப்பினைக் குறித்த ஒரு நீக்கமுடியாத பாதிப்பினைத் தந்திருக்கின்றதோ தெரியவில்லை [குரோஸோவாவின் அநேகமான படங்கள் (குறிப்பாக, Ikiru (1952)), Shohei Imamura இன் படங்கள் (குறிப்பாக, Ballad of Narayama (1983)) போன்றவை உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன]. இந்த வகையிலே 'வாழ்வுக்குப்பின்னால்' (After Life) இனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்படம், இறப்பினைக் குறித்தும் வாழ்காலஞாபகங்கள் குறித்தும் பேசுவது; படக்கதையின் சுருக்கத்தினை ஒரு வசனத்திலே சொல்லிவிடலாம்: "ஒருவரின் இறப்பின்பின்னால், அவரால் தன் வாழ்க்கையின் ஒரு ஞாபகத்தினைமட்டும், வரப்போகும் காலத்துக்கெல்லாம் நிலைத்து வைத்துக்கொள்ளலாமென்றால், அவர் எதற்காக, எஞ்ஞாபகத்தினைத் தேர்ந்தெடுப்பது என்பதைக் குறித்தது." புதிய வாரமொன்றின் வேலைநாள் தொடங்குவதாக உணர்த்தப்படுவதோடு படம் தொடங்குகின்றது; இறப்புக்குப்பின்னால், நிலைத்த ஓரிடத்துக்கு (அது, 'நரகம்.எதிர்.சொர்க்கம் என்பதாக படத்திலே எக்குறிப்பும் தெளிவாக உணர்த்தப்படவில்லை; சொல்லப்போனால், அப்படியான வேறுபாடு இல்லையென்பதாக ஒரு பாத்திரத்துக்குச் சொல்லப்படுகின்றது) இறந்தவர்கள் செல்லும்வரைக்கும் அவர்கள் இவ்விருநிலைக்குமிடைப்பட்ட ஒரு திரிசங்கு ஞாபகவிசாரணை + தேர்வுக்கூடத்திலே ஒரு வாரம் தங்க வைக்கப்படுகின்றார்கள். அங்கே, அவர்களுக்குத் தமக்கு முக்கியமான ஞாபகத்தினை மட்டும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது; அதைத் தேர்ந்தெடுக்க, இந்த இடைநிலைகூடத்தின் விசாரணையாளர்கள் (வேண்டினால், இறந்தவர்களின் வாழ்க்கை முழுக்கவுமே ஒளிப்படமாக இருக்கும் படக்கோப்புகளை எடுத்து மீள இறந்தவர்களுக்குப் பார்வையாளர்களாகவிருந்து தம் வாழ்க்கையை மீளப்பார்க்கப் போட்டுக்காட்டியோ, அல்லது தமது வினா-விடைகள்மூலம் முடிவெடுக்கவோ) உதவுகின்றார்கள்; அஞ்ஞாபகம், விசாரணையாளர்கள் துணையோடு இறந்தவர்களும் பங்குபெற மீளவும் நடாத்திக்காட்டப்படுகின்றது; படமாக்கப்படுகின்றது. வாரமுடிவிலே விசாரணையாளர்களுடனான ஒரு விருந்தோடும் விசாரணைத்தலைமையாளரின் உரையோடும் இறந்தவர்கள் அடுத்தநிலைக்குப் போகின்றார்கள்; புதிய வாரம் பிறக்க, புதிய இறந்தவர்கள் கூடத்துக்குள்ளே உட்புகுகின்றனர்; விசாரணை தொடங்குகின்றது.

இச்சாரத்தோடு, பாத்திர ஆய்வுகள் நிகழ்கின்றன; படத்தினைப் பார்க்கும்போது, 'தன் வாழ்க்கையின் முக்கியமான ஞாபகமென்று ஒருவர் கருதுவது, அவரின் விருப்புக்குரிய ஞாபகமாகவிருக்கவேண்டியதில்லை' என்பதாகத் தோன்றுகின்றது. தனது பிடித்த ஞாபகமென்று ஒருவர் எண்ணிக்கொள்வது, சில சமயங்களிலே மெய்யாகவே அவர் ஞாபகப்படுத்திக்கொள்வதுபோல நடந்திருக்கவேண்டியதில்லை, ஆனால், அவர் உணர்ந்துகொள்வதும் ஞாபகத்திலே வைத்திருக்கவிருக்க விரும்புகின்ற விதத்திலுமாகவிருக்கின்றது. சிலருக்குத் தமது கடந்த காலமே ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. இவற்றினூடாக, விசாரணையாளராக இருக்கும் மோஸிஸுகி (Mochizuki) என்பவனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவனிடம் தொழில்பயிலுனராகவும் அவன்மேலே காதல் கொண்டுமிருக்கும் சதோனகா (Satonaka) என்ற இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்படுகின்றன.

விசாரணையாளர்களும் எப்போதோ இறந்தவர்களே; அவர்களை யார் விசாரணையாளர்களாக ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற்றுகின்றார்களெனத் தெளிவாகச் சொல்லப்படவில்லை; இறை, நம்பிக்கை குறித்துப் பேசப்படவில்லை. ஆனால், குறிப்பாக, விசாரணையாளர்களிலே ஒருவர் தனக்கான விருப்பஞாபகத்தோடு அடுத்த நிலைக்கு நகர்கையிலே புதிதாக இறந்து வந்தவொருவர் அந்தப்பதவிக்கு விசாரணைக்கூடத்தின் தலைவராலே நியமிக்கப்படுவது காட்டப்படுகின்றது. விசாரணைக்கூடம், வாழும் உலகத்தின் ஒரு சாதாரண அலுவலகத்தின் பாணியிலேயே காட்டப்படுகின்றது; விசாரணையாளர்களுங்கூட. இவ்விதமான இயக்குநரின் அணுகுமுறை படத்தோடு பார்வையாளரின் ஒன்றிப்போக உதவுகின்றதென்று சொல்லலாம்.

இயக்குநர் ஹொரே எரா டா (Hirokazu Koreeda) இன் விடய அணுகுமுறை, இறப்பினைக் குறித்த மிகவும் சிக்கலான பார்வைகளையும் விவாதங்களையும் தத்துவவிசாரங்களையும் தவிர்த்துவிடுகிறது. அவருடைய இலக்கு, இறப்பு என்பதிலும்விட, தனிமனிதனுக்கும் அவனுடைய ஞாபகங்களுக்கும் இடையிலான ஊடாடல்களைப் பேசுவதாகத்தான் தெரிகின்றது. பட ஒளியத்தட்டிலே மேலதிகமாகத் தரப்பட்டிருக்கும் இயக்குநரின் படத்தின் தேவை, தயாரிப்பினைக் குறித்த பின்புலத்தகவல்கள் மனித ஞாபகத்தினைச் சுட்டிப் பேசுகின்றன; அவர், 'அல்ஸைமர்ஸ் நோயினாலே, இறந்துகொண்டிருந்த தனது பாட்டனார் அவரினைப் பற்றியே அறிதல் உலர்ந்துகொண்டு போனபோது, இப்படம் குறித்த விதை தன்னுள்ளே முளைக்க ஆரம்பித்தது' என்கிறார். ஒரு மனிதன் தனக்கு முக்கியமான ('விருப்பமான' என்று சொல்லமுடியுமோ தெரியவில்லை) ஒரு ஞாபகத்தினை மட்டுமே சேகரித்துத் தன்னுடன் எக்காலத்துக்கும் தக்க வைத்துக்கொள்ளலாமென்றால், 'எதை/ஏன் கொள்வான், அவன் ஞாபகமென்று கொண்டிருப்பதற்கும் மெய்யாக நிகழ்ந்ததற்குமிடையே எத்துணை ஒன்றிப்பு இருக்கின்றது' என்பது குறித்து அலசுகின்றார். இப்படத்தின் கதையினை அமைக்கும்போது, நூற்றுக்கும்மேலானவர்களை நேர்கண்டு, அவர்களின் முக்கிய ஞாபகங்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் கதையினை அமைத்திருக்கின்றார்.

படத்தின் நாயகன் என்று சொல்லக்கூடிய மோஸிஸுகி பாத்திரத்துக்கு, பல நடிகர்களை நேர்கண்டு, அராடா (Arata) என்ற புதுமுகத்தினை எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. அடிப்படையிலேயே ஒரு சோகம் கவிழ்ந்த முகம், அவருடையது; கூட நாயகி, சதோனகா ஆகக் கருதக்கூடிய, எரிகா ஓடா (Erika Oda) இற்கும் பாசாங்குத்தன்மையற்ற, தன் பாத்திரத்துக்குரிய அனுபவமின்மையை முகத்திலேயே காட்டக்கூடிய தன்மை தெரிகின்றதான தேர்வு. கூட வரும் துணைப்பாத்திரங்களான தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேரமுடியாத கிழவர் வடானபே, செர்ரீ பூக்கும் காலத்தினை வேண்டும் கிழவி நிஸிமூரா, டிஸ்னியின் ஸ்ப்ளாஸ் மவுண்டன் நினைவிலிருக்கும் பதின்மப்பருவப்பெண் யோஸிரோ, தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேர்ந்தெடுக்க மறுக்கும் மனிதர், பழைய ஞாபகங்களை மறக்கவிரும்பும் மனிதர், 'ஞாபகமாய் எதுவுமே குறிப்பிட்டுச் சொல்ல இல்லை' என்பதாகப் பிடிப்பின்றிப் பேசும் இளைஞன், தன் ஞாபகங்களைக் கேட்கும் இளம்பெண்விசாரணையாளருக்குத் தன் பாலியற்கிளர்ச்சியூட்டும் ஞாபகத்தினை விரித்து விபரிக்கும் நடுவயது மனிதர் ஆகியோர் முன்னர் பார்த்த ஏதோவொரு ஜப்பானியப்படத்தின் ஏதாவதொரு பாத்திரத்தினை ஞாபகப்படுத்தினாலுங்கூட, இப்படத்தின் நோக்குக்கு, மிகவும் கச்சிதமாக ஐப்பானிய சமூகத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைச் சுட்டும்விதமாக பொருந்தியிருக்கின்றார்களென்று சொல்லலாம்.

படம் முடிந்தபோது, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்பட்டதென்பது உண்மை; அதே நேரத்திலே, ஒரு வெறுமையும் பயமும் கலந்த உணர்வும் ஏற்பட்டது; அவ்வுணர்வுக்குக் காரணம், 'எனக்கு விருப்பமான ஒரு ஞாபகத்தினைத் தீர்மானிக்கச் சொன்னால், என்னத்தினைத் தீர்மானிப்பேனென்ற குழப்பமா, மரணம் குறித்த - காலகாலத்துக்கும் அதே ஞாபகத்துடன் எங்கே உறைந்து நிற்பேன், இப்போதைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட அவ்வொரு ஞாபகத்தோடு மட்டுமே உறைந்து எப்போதைக்குமே அதிலே அலுப்பேற்படாது நிற்பேன் என எண்ணுவது சரியா என்ற குழப்பமா, அல்லது பட முடிவிலே தேர்ந்தெடுத்த தத்தமக்கான ஞாபகங்களோடு இப்பாத்திரங்கள் எங்கே போகின்றார்களென்ற முடிவு தெரியாமையின் விளைவான அச்சமா' என்று என்னால் குறிப்பிட்டுத் தேர முடியவில்லை.

மூலத்தலைப்பு: Wandafuru raifu (1998)
நாடு/மொழி: ஜப்பான்
ஆங்கிலத்தலைப்பு: After Life
ஆண்டு: 1998
ஓடு நேரம்: 118 நிமிடங்கள்
இயக்கம்: Hirokazu Koreeda
நடிகர்கள்: Arata, Erika Oda


'05 செப்., 12 திங்கள் 13:35 கிநிநே.


Sunday, September 11, 2005

புனைவு - 25


தொழிலகத்திலிருந்து பதினைந்து இருபது நிமிடங்கள் மாலைவெயிற்கசகசப்பிலே நடக்கவேண்டும்; நடந்தான். பிறகு, தொடர்வண்டியில் நெருக்கடிக்கேற்ப நின்றோ இருந்தோ முப்பத்தைந்து நிமிடங்கள் வரவேண்டும்; வந்தான். இறங்குநிலையத்திலிருந்து, வீட்டுக்கு, பத்து நிமிட நடை; நடந்து வந்து, கடிதங்களைப் பெட்டியிலே பொறுக்கிக்கொண்டு கதவைத் திறந்தான்.

குழந்தை கெக்கட்டமிட்டுக்கொண்டு கையை விரித்துக்கொண்டு ஓடிவந்தது; தூக்கிக்கொண்டான். தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.நிகழ்ச்சியின் பின்புலம் தொடர்பான மூன்று தகவல்களை மனைவியிடம் தெரிவித்தான்:- செந்நாய்க்குக் குரல் கொடுப்பது இன்னார்; இத்தொடர்நிகழ்ச்சி தயாரிக்கத் தொடங்கின ஆண்டு & முடிந்த ஆண்டு; இத்தொடரின் சிறந்த அங்கங்கள். குழந்தை தாயிடம் மீளத் தாவியது. தோட்பையை ஓரமாகப் போட்டான்; முகப்பிலேயே முழுவதும் தெரியும் கடன், எரிபொருட்கணக்குவழக்குகளுடனான உப்புச்சப்பறுகடிதங்களைப் பிரிக்காமலே மனைவியிடம் நீட்டினான்; இடது இடுப்புக்குக் குழந்தையை மாற்றிக்கொண்டு, 'இதுக்கெல்லாம் நான்' என்பது வெளிப்பட்ட தலையசைப்புடன் வலக்கையால் வாங்கிக்கொண்டாள்.

மீதியாய்க் கைக்கிடந்த இன்னோரன்ன விளம்பரங்களைக் கட்டிலிலே பரப்பி வாசித்துக்கொண்டு உடையை மாற்றினான்; ஊரிலே விபத்துகளுக்கான சட்டத்தரணியின் தொழில்மேசை, விளம்பரத்திலே வேறொரு கோணத்திலே படமாகத் தரப்பட்டிருந்தால், எடுப்பாயிருந்திருக்கலாமெனத் தோன்றியது. விளம்பரங்களைக் கசக்கிக் காலால் அழுத்தித் திறந்த குப்பைக்கூடைக்குள்ளே போட்டபோது, உள்ளே கிடந்த நேற்றைய விளம்பரமொன்றிலே வாசிக்காமல் விட்ட ஒரு குறிப்பு கன்ணிலே பட்டது; 'பரீஸுக்கும் பிரெஸில்ஸுக்கும் குறிப்பிட்ட முகவரூடாக விமானச்சீட்டுக்கு ஒரே தொகைதானெனத் தெரிந்துகொண்டான். தான் கழற்றித் தோளிலே தொங்கிய உடுப்புகளை ஒரு முறை உதறிக் கொண்டு இரண்டாக மடித்து, அலுமாரிக்குள்ளே தொங்கப்போட்டான். சுவரலுமாரிக்கதவுச்சக்கரங்களில் ஒன்று உருள மறுத்தது. தூக்கி வைத்தான்; நிமிர்ந்தபின்னும், உள்ளங்கைகளிலே சமாந்திரக்கோடுகளாகப் பாரம் உறுத்தியது. இந்த உறுத்தும் உணர்வுக்கு அறிவியல்ரீதியான காரணம்...

குளியலறைக்குப் போகும் வழியிலே செல்பேசியை மூடியபின்னான கடந்த இருபது நிமிடங்களிலான உலகநடப்புமாற்றங்களைப் படுக்கையறைக்குள்ளேயிருந்த கணணியூடாக, சில நிமிடங்கள் உந்தலோடு அறிந்துகொண்டான்; தெற்காசியாவிலே ஒரு சின்ன நிலநடுக்கம் - 6.7 ரிட்சர் அளவு; கௌதமாலாவில்....

திருப்தி; நிமிர்ந்து, குளிக்கப்போவதை உரத்துச் சொல்ல, குழந்தை கெக்கட்டமிட்டுச் சிரித்தபடி ஓடிவந்தது. அதன் கைகளும் கால்களும் ஓடுகையிலே எப்படியாக சமநிலையைப் பேண முயல்கின்றதென்பதை அவதானித்தபடி, தூக்கிக்கொண்டான். குழந்தை தன் முகத்தை அவன் முகத்தோடு தேய்த்த அடுத்த கணத்திலேயே அவன் முகத்தினைத் தள்ளிவிட்டு, அம்மா இருக்கும் திசையைக் காட்டி, "ங்கா" என்றது; தாயைக் கண்டு தாவியது; அவர்கள் அந்தப்புறம்போக, இவன் குளியலறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டான்.

குளியலறை முகம்பார்க்கும்கண்ணாடிக்குள்ளே மாலைவெயிலிலே அவன் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் எடுப்பாகத் தோன்றியதாகப் பட்டது; இன்றைக்குமட்டும் தொழில்நிலையத்தலைமைக்குத் தெரியாத ஆறு... இல்லை... ஏழு விடயங்களைச் சுட்டிக் காட்டப் பாராட்டு - குறிப்பாக, மதியத்தின் வாரக்கூட்டத்திலே தொய்கணங்களை உயிர்ப்பூட்ட ஈரக்கையை உதறச் சிதறுகிற நீர்போல, தொழில்நுட்பம் சாரா உலகத்துச் சின்னத்தகவல்கள்:- 'நெருப்புக்கோழி மெய்யாகவுமே தலையை மணலுக்குள்ளே நுழைத்துகொள்கின்றதா என்பது குறித்தது; மழைநீர்த்துளிக்கு மூன்று வடிவங்கள் இருப்பதும் குளியலறைக்குழாயிலே சொட்டும் நீர்த்துளியின் வடிவிலே மழைத்துளியிருக்காதென்பதும் குறித்தது.'

இயலுமானவரை உதடுகளை வெளித்தள்ளி இளித்துப் பார்த்தபடி, பற்களை -வத்தகைப்பழத்திலே நல்லது கெட்டது பார்க்கத் தட்டுவதுபோல- சுண்டிவிட்டான்; வாயைத் திறக்க, கண்ணாடியிலே ஆவிபடர்ந்து மூக்குக்கு நாற்றம் தெறித்தது. பற்களைத் தீட்டிக்கொண்டிருக்கும்போது, ப்ரோக்கலி, வத்தாளங்கிழங்கு ஆகியவற்றிலேயிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்துகளின் வீதங்கள் தனக்கு ஞாபகமிருப்பது சரியா என்பது குறித்து தலைக்குள்ளே கணச்சந்தேகம் ஓடியது; "என் தரவுத்தளம் தளும்பாதது; பாபா வெம்பாவை நான் முதலிலே கேட்ட நாள்... நாளென்ன நாள்.... நேரம்.. சரியாக, ஆயிரத்துத்தொள்ளாயிரத்து...."

குளியற்றொட்டிக்குள்ளே நீரை, சுடுநீரும் தண்ணீரும் அளவாகக் கலக்கும்வரை சரிபார்த்துத் திறந்துவிட்டுக்கொண்டு இறங்கித் தலையைப் பிடித்தான். நீர் கரைத்துக்கொண்டோடியது. கசகசக்காத மாலைகளிலே குளிக்கத் தேவையில்லைத்தான்; ஆனாலும், பழக்கம் விடுவதில்லை; வேலைமுடிந்துவந்து குளிப்பதினால், தொழிலகம் முற்றாகத் தொடர்பறுந்து வீடு மட்டுமே காலைக்குளிப்புவரைக்கும் என்றாகிறதாக உணர்வு.

சீறி மூர்க்கத்துடன் விராண்டப்போகும் பூனைபோலக் கைவிரல்களை மடித்து, உள்ளங்கைகள் முகத்தைக் காணக் குனிந்து பார்த்தான்; நீர் விரல்களிலே சொட்டியது; ஆ,,க்,,, ஹா!............ வலக்கைச்சின்னிவிரல் நகவிடுக்கில் ஒரு கருந்தார்ப்பொட்டு; பதின்மவயதுநடிகையின் மார்பக-இடுப்பு-பின்புற அளவுகள் குறித்தது. தேய்த்தான். போவதாகத் தெரியவில்லை; சவர்க்காரமும் ... ம்ஹூம்! போக்கவில்லை; XX-YY-ZZ இளித்தபடி இன்னும் கருமையாக நுரைக்குள்ளாக மின்னியது. குளியற்றொட்டி விளிம்புகள் தேய்க்கும் வன்பஞ்சை எடுத்துத் தேய்த்தான்; சவர்க்காரநுரையைத் தள்ளிவிட்டு, நீருக்கு வெளியே பிடித்து வாயால் சின்னிவிரலை ஊதி உலர்த்திய பின்னால் - ஈரப்பதன் குறைந்த காற்று, இலகுவிலே உலர்த்துமாம் - வன்பஞ்சாலே அழுத்தித் தேய்த்தான். எரிந்தது; நகமும் விரலும் சேருமிடத்திலே தோல் கழன்று எரிந்தது; கசிவூடக, இரத்தம் மெல்லியதாகப் படர, நடிகை மறைந்துபோனாள்.

வெற்றி, கொட்டிய வம்பயர் வேட்டைப்பல்லிரத்தமாய்ச் சொட்ட, விரலை மீண்டும் மேலிருந்து கொட்டும் நீருக்குள்ளே எடுக்கையிலேதான் அவதானித்தான்; ஐரோப்பாவின் மிகச்சிறியநாட்டின் நிலச்சமவுரக்கோடுகள் அவனுடைய வலதுகையின் நடுவிரல்மொழிக்கும் மணிக்கட்டுக்குமிடையே ஏழிடங்களில் மையங்கொண்டெழுந்த வட்டங்களாக, நீள்வளையங்களாக, வளைகோடுகளாக, மண்ணிறத்தேமல் பூசிப் படர்ந்திருந்தன. ஹா!!! கண் விரிய அடித்தொண்டையிலிருந்து அலறல் கிளம்பிக் கேவலாக வெளிவர, திரும்பக் கையை வெளியேயிழுத்து வன்பஞ்சாலே தேய்த்தான்; நாட்டுவரைபடம் அங்குமிங்கும் சிதம்பினாலுங்கூட, அழிவதாகக் காணோம். குளியலறைக்குழாயுலோகத்திலே பின்னங்கையைத் தேய்த்துப் பார்க்கவும் கொஞ்சந்தான் நாடு மறைந்தது. குளியலறைச்சுவரிலே பின்னங்கையை அடிக்கத் தொடங்கினான்; ஆரம்பத்திலே நடிகையின் இடையும் மார்பும் பின்புறமும் மறையக் கிழிந்தெழுந்த எரிச்சல், இப்போது தெரியவில்லை. வலக்கை உள்ளங்கையைப் பளிங்குச்சுவற்றிலே அழுத்திக்கொண்டு, குளியலறைச்சின்னவாளியை எடுத்து இடது கையாலே சேதமடைந்த வரைபடம்மீது அடித்துக் கொண்டிருந்தபோது, வலது முழங்கையிலே தென்னாபிரிக்க அரசிலே இருக்கின்ற இந்தியவழிவந்த அரசியல்வாதிகளின் பெயர்களும் முகங்களும் இருப்பது அவனுக்கு நீரடித்துக் கழுவப்பட்டுத் தெளிவாகத் தெரிந்தன.

ஒரு மணிநேரமாகியும் குளிக்கப்போனவன் வெளிவராததையிட்டுக் கவலைப்பட்ட மனைவி, பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தன் பலம் கொண்டளவும் தட்டிக் களைத்துப்போய், உதவி தேடியபோது, குழந்தையும் கலவரமுற்று வீரிட்டு அழுதது; நகர்காவலரும் தீயணைப்புப்படையும் வந்து கதவை ஒரு சுத்தியலடியிலே உடைத்துத் திறந்தனர். குளியற்றொட்டியிலே குதம் கக்கிய மலமாய்க் குவிந்துகிடந்த சதையையும் தசையையும் தோலையும் எலும்பையும் அவர்கள் அள்ளிக் கொடுக்க, மனைவியின் வேண்டுகோளின் பேரிலே கொளுத்திச் சாம்பலாக ஒரு செம்பிலே மூடிக் கொடுத்தார்கள் இரண்டு நண்பர்கள். அவள் தொலைக்காட்சிப்பெட்டியையும் கணணியையும் அகப்பட்ட விலைக்கு விற்றுவிட்டுக் குழந்தையோடு வேற்றூருக்குத் தொழில் தேடிப்போனாள்.

'05 செப்., 11 ஞாயி. 00:48 கிநிநே.