"We do support the principles of democracy and support efforts to bridge the differences among Iraqis." - Secretary of State (USA) Condoleezza Rice, in her visit to Iraq, appeals to sunni arabs to participate in new national elections in december; 2005 Nov., 11
1942 இன் பின்னரை; வட ஆபிரிக்காவின் போர்முனை; பாலைவனத்துநரி என்று எதிரிகளாலும் விதந்தோதப்பட்ட ஜெர்மனியின் தளபதி எட்வின் உரோமல் (Edwin Rommel) பிரித்தானியத்தளபதி பேர்னார்ட் மொண்ட்கோமரியினால் (Bernard Montgomery) பின்வாங்குநிலைக்கு உள்ளாக்கப்படுகின்றார். இதற்கு உரோமலின் குள்ளநரித்தனம் தோற்றுவிட்டதுதான் முழுக்காரணமென்று சொல்லமுடியாது; முன்னர் வட ஆபிரிக்காவிலே உரொமலின் வெற்றிக்குக் காரணமாகவிருந்தது, கூட்டுநாடுகளின் சங்கேதச்செய்திப்பரிமாற்றத்தை இத்தாலியப்புலனாய்வாளர்களின் உதவியோடு உரோமல் உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதென்றால், பின்னர் அல்ட்ரா (ULTRA) என்ற தமது சங்கேத உடைப்பின்வழியிலே பிரித்தானியப்படையினர் உரோமலின் படைப்பிரிவின் சங்கேதசெய்திப்பரிமாற்றத்தினை உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதும் முக்கியமாகிறது. தோற்றுப்போகும் உரோமலை ஹிட்லர் ஜெர்மனிக்கு வரவழைத்து தரமுயர்த்தி, ஆனால், கட்டாய ஓய்விலே சில மாதங்கள் வைத்திருக்கின்றார். பின்னர், பிரான்ஸுக்கு ஜெர்மனிசார்பிலே உரொமல் போர்த்தளபதியாகச் செல்கிறார்.நோர்மண்டியிலும் மூக்குடைவு. இறுதியாக, ஹிட்லருக்கெதிராகச் சதி செய்திருக்கலாமென்ற கருத்திலே, கட்டாயப்படுத்தப்பட்டு நஞ்சருந்தி இறக்கின்றார். வாகன விபத்தின் விளைவான மரணமென்ற செய்தியோடு, தேசப்பற்றாளராக வெளியுலகுக்குச் சொல்லப்பட்டு, முழு இராணுவமரியாதையுடன் மரணநிகழ்ச்சி அரங்கேறுகின்றது. அதன் பின், அரையாண்டுக்குள்ளே ஹிட்லரின் ஆட்டம் முடிவுக்கு வருகின்றது.
தான் விரும்பியபடி பிரதமர் பதவியை அதிகாரமுள்ள பதவியாக்கி அதிலே தான் உட்கார வழிசெய்யும்வரைக்கும் பதவியில் நீடிக்க முடியாமல் அரசியற்றுறவறம் போக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இலங்கையின் (முன்னாள்) அதிபர் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா, காம்ரேட் நரசிம்மன் ராம் இற்கு ஸ்ரீலங்காவின் இரத்தினத்தினை வழங்கிய செய்தியை வாசித்தபோது, ஜெர்மனிக்கு வரவழைக்கப்பட்ட உரோமலுக்குக் கொடுக்கப்பட்ட பதவியுயர்வும் நஞ்சுமே ஞாபகத்துக்கு வந்தன.
தொடர்ந்து அவதானித்தவரையிலே இலங்கையின் அரசியல் குறித்து தோழர் இராம் மூன்று வகையான குறிக்கோள்களுடன் செயலாற்றுகின்றார்.
1. இந்தியாவின் (மேலாதிக்க)நலன்
2. இந்தியப்பத்திரிகைத்துறையிலே தன்னையொத்த இலங்கையின் அரசியலிலே பாரம்பரிய மேட்டுக்குடி ஆட்சியாளர்கள்/வாரிசுகளின் நலனைப் பேணுதல்
3. விடுதலைப்புலிகள் மீதான, அவரது பதிப்பூடகங்கள் இன்னும் விடாது வலியுறுத்தும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் தோல்வியின் விளைவாக அடிபட்டுப்போன அவரின் 'நான்' இற்கு ஒத்தடம் கொடுத்துவிடக்கூடிய காழ்ப்புணர்வும் பழிவாங்குணர்வும்
இந்தியாவின் மேலாதிக்கநலனை வலியுறுத்துவதிலேதான் அவரின் பத்திரிகையும் சஞ்சிகைகளும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக, இந்திய அரசின் நலனை மிக வெளிப்படையாக முன்வைக்கும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி 'கருணா' முரளிதரன் ஆகியோரினை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்துவதைக் கண்டுகொள்ளவேண்டும். இங்கே ஈழமக்களிடையே இவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் எந்நிலையிலிருக்கின்றனவென இவருடைய ஊடகங்கள் எதுவிதமான செய்திகளையும் தமது விசு-வாசகர்களுக்கு மேற்படி அரசியல்வாதிகள் தேர்தல்களிலே பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைகள் மூலமோ கருத்துக்கணிப்புகள்மூலமோ அறியத்தருவதில்லை. பத்திரிகையின் கருத்துப்பத்திகளுக்கும் செய்திப்பதிவுகளுக்கும் வித்தியாசமேயில்லாத விதமாகத் தருவதுதான் அவரது த இந்து பத்திரிகையும் ப்ரொண்ட் லைன் சஞ்சிகையும் நிகழ்த்தும் பொம்மலாட்டம்.
தன்னையொத்த மேட்டுக்குடித்தன்மை பொருந்திய பரம்பரைகளின் தொடர்ச்சியாக வரும் இடதுசாரிமுகங்களை முன்னெடுப்பதிலே அவர் தொடர்ந்து செயலாற்றி வருகின்றாரென்பதை மிகவும் சுலபமாகக் கண்டுகொள்ளலாம். சந்திரிகா குமாரணதுங்கா, அவரது சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா, நீலன் திருச்செல்வம், இலஷ்மண் கதிர்காமர் போன்றோரை இவர் முன்னிலைப்படுத்துவதற்கு இந்த இந்து பாரம்பரியம்-ரத்வத்தை பாரம்பரியம்-திருச்செல்வம் பாரம்பரியம்-கதிர்காமர் பாரம்பரியம் என்ற ஒரு மேட்டுக்குடிநேசக்கூட்டு, அரசியலினைத் தாண்டி, நாட்டைத் தாண்டியும் நிலவுகின்றது. ஒரு புறம் இவர் சார்ந்திருக்கும் மார்க்ஸியவாதிகள், பகிரங்கமாகவே ஸ்ரீலங்காவின் அதிவலதுசாரிநிலைப்பாடுள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) இனை மார்க்ஸிய நேசசக்தியென தமது இந்திய தேசப்பொதுவுடமைவாதிகளின் மகாநாட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்துகின்றனர். இது, ஏறக்குறைய ஹிட்லரின் தேசியப்பொதுவுடமை ஜேர்மன் தொழிலாளர் கட்சியினை (National Socialist German Workers Party), சோஷலிஸ்டுகளின் மூன்றாம் அகிலம், நான்காம் அகிலம் மகாநாடுகளுக்கு அழைத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியான கூத்துத்தான். ஆனால், அவ்வழைப்பினைக் குறித்து சகமார்க்ஸியராக காம்ரேட் இராமின் ஊடகங்கள் எந்த (எதிர்ப்பு)க்குரலையேனும் எழுப்பவில்லை; த இந்துவின் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் பாரம்பரியத்தினைப் போற்றும் அறிவுசீவிகளும் அது குறித்தேதும் கேள்வி எழுப்பவில்லை.
ஆனால், இதே பத்திரிகையிலே அண்மையிலே சந்திரிகா அம்மையாரினை எப்படியாக தொடர்ந்து அவரின் குடும்பத்துக்கு விசுவாசிகளாக மட்டுமேயிருந்து வந்த இராஜபக்ஸ குடும்பத்தினைச் சேர்ந்த மஹிந்த இராஜபக்ஸ, ஜேவிபியின் ஆதரவோடு ஓரங்கட்டி, வனவாசம் முடிந்து வரும்வரையிலே பாதுகையை வைத்தாள்பவராக இராமல் அல்லது முறைக்குரிய அரசவம்சத்தின் அடுத்த வாரிசு பட்டஞ்சூடும் வயதினை அடையும் வரையிலே காப்பாளாராக இராமல் தானே முடியைச் சூட்டிக்கொள்ள முயல்வதைச் சுட்டிக் காட்டி ஒரு கருத்துப்பத்தி வந்திருக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட பத்தி, இராம் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா இரத்தினத்தினைப் போல முக்கியமான ஒன்று. அதைப் பற்றி இக்குறிப்பிலே வேறோரிடத்திலே பார்க்கலாம்.
மூன்றாவது நோக்கு, மிகவும் தனிப்பட்ட உணர்வோடு சம்பந்தப்பட்டது; இலங்கை இயக்கங்களுக்கு ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகப் போராடும்வண்ணம் உயிர்கொல்லும் பயங்கரவாதிகளுக்கான ஆயுத உதவியினை இந்தியா வழங்கிக்கொண்டிருந்த 1985 இலே (30.12.85) புரொண்ட் லைனுக்காக செவ்வியிலே விடுதலைப்புலிகளின் தலைமையிடம் கேள்விகள் இப்படியான கருத்துகளோடு வந்து விழுகின்றன: "விடுதலைப்புலிகள், இராணுவ இயக்கமாகத் தொடங்கி, மார்க்ஸிய-லெனினிய இயக்கமாக மலர்ந்திருக்கின்றது; மக்களிடம் சென்றடைய உங்களிடம் தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவா?" இதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் சொல்கிறார்: "நாங்கள் சோஷலிஸநாட்டினையே ஆக்கவிரும்புகின்றோம்; எங்களிடம் தொழிற்சங்கங்களில்லை; நேரடியாகவே மக்களிடம் சென்றடைகின்றோம்." விடுதலைப்புலிகள் என்றைக்கு மார்க்ஸிய-லெனிய இயக்கமாக இருந்ததென்று தெரியவில்லை; தமிழீழவிடுதலை இயக்கமும் (டெலோ) விடுதலைப்புலிகளும் அடிப்படையிலே வலதுசாரி இயக்கங்களாகத்தான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவரின் பதிலும் மெய்யிற்கு மாறான சுவையானதுதான்.. ஆனால், இப்படியாக, விடுதலைப்புலிகளிலே மார்க்ஸிய-லெனினிய நிலைப்பாட்டினைக் கண்ட புரொண்ட்லைன் ஆசிரியர், அவர் பத்திரிகையிலே இன்றும் ஈழத்தமிழருக்கான சிறப்பான ஒப்பந்தமென முன் வைக்கும் இலங்கை அரசு - இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தினை விடுதலைப்புலிகள் நிராகரித்த பின்னால், பொல்பொட் வகை இயக்கமென எதிர்க்கின்றார். இத்தனைக்கும் பொல் பொட்டின் ஆதரவாகத் திகழ்ந்த சீன அரசின் விருந்தினராகச் சென்று வந்து சீனாவினையும் சீனாவின் திபெத்து மீதான ஆக்கிரமிப்பினை விதந்தேத்தவுமோ அவர் தவறுவதில்லை. எல்லாவற்றினையும் விட நகைச்சுவையான அவரின் கருத்து, தம் பாரம்பரியப்பிரதேசத்திலே வந்தேறுகுடிகளான இஸ்ரேலியர்களை எதிர்க்க பாலஸ்தீனியர்களுக்கு இருக்கும் அவசியமும் நோக்கும் ஈழத்திலே இல்லை என்று அவர் சுபமங்களாவிலே கோமல் சுவாமிநாதனுக்குக் கொடுத்திருக்கும் செவ்வி. ஒரு குடியின் பாரம்பரியப்பிரதேசங்களெவை என்றோ அப்பிரதேசங்களின் மீதான அரசியற்சூழலை முற்றாகவே மாற்றும்வகையிலே திட்டமிட்டுச் செயற்பட்டு, மாற்றுக்குடிகளை ஏற்றுவது முறையல்ல என்பதையோ நெடுங்காலமாக இலங்கைக்காகச் சேவையாற்றியதற்கு இலங்கை இரத்தினத்தைப் பெற்ற இராம் தெரிந்து கொள்ளாமலிருந்திருக்கமுடியாது; அப்படியான குடியேற்றங்களும் ஈழக்குரலினை முடுக்கக்காரணமானதென்பதையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முன்வைக்கும் அவர் அறியாமலிருந்திருக்கமுடியாது. ஆக, அவரது ஈழத்தேவையின்மை போன்ற கருத்தெல்லாம் விடுதலைப்புலிகளின் இந்தியநிலைப்பாடு மீதான முரண்பாட்டின்பின்னாலும் இந்தியாவிலே தங்கியிராமற் செயற்படத்தொடங்கிய பின்னருமே உருப்பெற்றிருக்கின்றதெனலாம்.இவ்வகையிலேயும் அவர் ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு ஜனநாயக இயக்கமுகமூடிகளை அணிந்து காட்ட முயற்சிக்கின்றனவாகத் தெரிகின்றன.
இத்தனை நாட்களும் அவரது மூன்று குறிக்கோள்களும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால், மஹிந்த ராஜபக்ஸவின் தேர்வோடு இராமின் இரண்டாவது குறிக்கோளினால் மீதியிரண்டு குறிக்கோள்களும் முரண்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றதென்றே தோன்றுகின்றது. சந்திரிகாவின் குடும்பநலனை முன்னிட்டு (பண்டாரநாயக்கா குடும்பத்தின் அடுத்த வாரிசான அனுரா அண்மையிலே இந்தியா வந்தபோது சந்தித்துச் செவ்வி கண்டவர், சந்திரிகா வந்தபோது, ஜெயலலிதாவினை அறிமுகம் அந்தக்காலம் செய்துவைத்தவர், மஹிந்த இராஜபக்ஸ வந்தபோதெல்லாம் கண்டு கொண்டதாக நானறியத் தெரியவில்லை), மஹிந்த இராஜபக்ஸவின் பெயரை அடக்கி வாசிப்பாரா அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிராக இயங்குவதற்காகவும் இந்தியாவின் நலனைப் பிரதிபலிப்பேனென தேர்தற்காலத்திலே மிகவும் வெளிப்படையாகச் சொன்னதற்காவும் இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதுவாரா என்று அவதானிக்கவேண்டும். இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதும்பட்சத்திலே, தேர்தலின்போது, இராஜபக்ஸவின் ஜேவிபிகூட்டு, கருத்துவெளிப்பாடு குறித்து அவரின் பத்திரிகைப்பத்தியிலே வந்த கருத்து மீள அவதானிக்கப்பட்டு, முரண் சுட்டப்படும்.
எதுவோ, இராமுக்குக் கிடைத்த இந்த விருது, குறித்து ஈழத்தமிழர்களும் அவர்களின் நலனிலே அக்கறையுடையவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், அடையவேண்டுமென்று படுகிறது; மிகவும் வெளிப்படையாக, நடுநிலைப்பத்திரிகையாளராகச் சேவைசெய்ததற்கும் ஸ்ரீலங்காவிற்கான சேவைக்காக அவர் உழைத்தாரென்பதற்காவும் கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விருது அவ்வகையிலேதான் உரோமலுக்கு ஹிட்லரின் அதிகாரிகளினாலே கொடுக்கப்பட்ட நஞ்சினை ஒத்திருக்கின்றது. இந்த விருது, அவரின் பத்திரிகைகளிலே இத்தனை நாட்கள், வெளிவந்த கருத்துப்பத்திகளின், செய்திகளின் "நடுநிலை"யையும் இனி வரப்போகும் கருத்துப்பத்திகளின், செய்திகளின் நடுநிலைகளையும் ஸ்ரீலங்கா-இந்திய-ஈழ அரசியலை வெளியிலேயிருந்து பார்க்கும் இராமின் ஊடகங்களை இவை குறித்த செய்திகளுக்காக நம்பிய வாசகர்களின் நம்பிக்கைகளிலே பொத்தல் விழச்செய்திருக்குமென நினைக்கிறேன்; இராம்மீது அவர்சார்ந்த ஊடகங்களின்மீதும் அவற்றின் ஈழ-ஸ்ரீலங்கா அரசியற்செய்திகள் குறித்த உள்நோக்குகளிலே சார்புத்தன்மையும் பொய்மையும் திரிபுமுமிருக்கின்றனவெனக் குற்றம் சாட்டுகின்றவர்களின் கருத்துகள் கவனிக்கப்படச்செய்யும். ஆகவே, ஈழத்தமிழர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விருது குறித்து மகிழ்ச்சியடையவேண்டும்.
இதே காரணத்தினாலேயே, ஈழத்தமிழர்களின் தாய்நாட்டுக்கான தேவை குறித்து எப்போதும் மறுப்புத் தெரிவிக்கும், அதன் காரணமாக இலங்கை அரசியல் குறித்து இராமின் கண்ணோட்டத்தினையும் நிலைப்பாட்டினையும் ஆதரிக்கும் அரசியலறிந்த ஒரு சாரார் இராமுக்கு விருது கிடைத்ததும் அவர் அதை ஏற்றுக்கொண்டது குறித்தும் வருத்தமடைந்திருக்கின்றார்கள். (மறுதலையாக, விருது கிடைத்தால் அஃது ஓர் அங்கீகாரமென்ற வகையிலே எண்ணி அவரைப் பாராட்டும் இன்னொரு சாரார், இலங்கை அரசியலிலே இராம் கொள்ளூம் நிலைப்பாட்டினை இராமே சொல்கிறாரேயென பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்கின்றவர்கள்; இவர்களும் முதற்சாராராரும் ஈழம் குறித்து ஒரே நிலைப்பாட்டினையெடுத்தாலுங்கூட, காரணகாரியங்கள் தலைகீழாகக் கொண்டவர்கள். தினமொரு பொன்முட்டையிடும் வாத்தை, உடனடி முட்டை ஒன்றுக்கும் சில குட்டிக்கருக்களுக்குமாக ஒரு நாளிலே வயிறு கிழித்துப் போட்டுவிட்டதையெண்ணி வருந்தும் முதற்சாரார் குறித்து எப்போதுமே எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியமுண்டு).
அதனால், இப்போதைக்கு, இராமுக்கான இரத்தினத்தினை ஒரு வரப்பிரசாதமெனக் கொண்டு, அதன்பின்னான நகைச்சுவைத்துணுக்குகளென அச்செய்தி குறித்த வாழ்த்துகளைக் கொள்ளவேண்டுமெனத் தோன்றுகிறது.
'05 நவம்பர், 19 சனி 04:07 கிநிநே.
13 comments:
NALLA ORUU PATHEEVUUU
THANKS
பெயரிலி, விபரமாக எழுதியுள்ளீர்கள். நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. நன்றி.
....
அண்மையில் ஆனந்தசங்கரியைச் சந்தித்த நண்பரொருவர், ஆனந்தசங்கரி 'என்னிடம் ஒருநாள் அதிகாரம் முழுவதையும் கொடுங்கள் எல்லாவற்றையும் இந்தியாவைக் (இந்தியா மறுத்தால் அமெரிக்காவிடம் ஆனந்த்சங்கரியார் ஒடியிருப்பார்)கொண்டு தீர்த்துவிடுகின்றேன்' என்று கூறினாராம். 'முதல்வன்' பட நாயகனாக எல்லாம நமது அரசியல் ஞான சூனியங்கள் இருக்கும்வரை, அவரைப் போன்றவர்களுக்கு முடிசூட்டி ஆசைப்பட 'நடுநிலையாளப் பத்திரிகையாளர்கள்' பற்களை இளித்துக்கொண்டிருக்கும்வரை...'அனைத்தும் நன்றாகவே நடக்கும்' :-(.
பெயரிலி,
இராமின் குறிக்கோளாக நீங்கள் கூறும் மூன்று கருத்துகளில் முதல் கருத்தை(அடைப்புக்குள் இருப்பதை தவிர்த்து) சரியென நானும் ஏற்றுக் கொள்கிறேன். அவரவர் பாதுகாப்பையும் நலனையும் அவரவர்தான் பேன வேண்டும் அதில் தவறொன்றும் இல்லை. இந்தியாவின் மேலாதிக்கத்தை அவர் எங்கே வலியுறுத்தினார் என்பதை காண்பிக்கவும். கடைசி இரண்டிற்கும் நீங்கள் கொடுக்கும் ஆதாரம் வெறும் ஊகமே. அதற்கு மேலொன்றும் இல்லை. இராஜபக்சவின் மீதான எதிர்ப்பு அவரின் கூட்டணி மற்றும் சிங்கள அடிப்படைவாதியோ என்ற ஊகத்தின் பொருட்டான எதிர்பென்றே நான் கருதுகிறேன். மேலும் இராஜபக்சவின் வெற்றியை மறைமுகமாக உறுதி செய்த புலிகளின் சிந்தனையோட்டத்தை நீங்கள் சுட்டிக்காட்டிய இரு கருத்துப் பத்திகளிலும் ஏறக்குறைய சரியாகவே படம் பிடித்திருந்தன.
இந்து நாளிதழ் புலிகளின் மீதான செய்திகளை கருத்து நிலையிலிருந்துதான் வெளியிடுகிறது. ஆனால் அது புலி எதிர்ப்பு ஊடக வெற்றிடத்தை நிரப்புகிறது என்பது என்கருத்து. அதனடிப்படையிலேயே நான் அதை அவதானிக்கிறேன். எனவே இதழியல் தர்மம் பற்றி வாதாடப்போவதில்லை. கருத்து நிலையில், புலி வன்முறைகள்/அரசியல் கொலைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. புலியெதிர்ப்பு கொள்கையுடையவர்களின் வாழ்வுரிமை, பேச்சுரிமைகளுக்கு எப்போதும் புலிகள் மரியாதை தந்ததாகத் தெரியவில்லை. இது போன்ற ஒரு அமைப்பை ஒரு பாசிச அமைப்பாகவும் அதன் கட்டற்ற அதிகார வளர்ச்சியை ஒரு ஆபத்தாகவும் பார்ப்பது தற்காலத்தய அளவுகோள்களின் படி சரியானெதே. அதைத்தான் இராம் செய்கிறார், சில நேரங்களில் ஒரு அரசியல் வாதியளவிற்கு.
இராமின் முகமூடி கிழிந்ததென நீங்கள் மகிழலாம். ஆனால் அவர் முன்வைக்கும் கருத்தில் உள்ள சரி/தவறுகளை அது ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. எனெனில் ஈழத்திற்கெதிரான அநீதியும், கதிர்காமருக்கெதிரான அநீதியும் தவறுகள் என்பதை இராம் சொல்லித்தான் யாம் அறியப் போவதில்லை.
நன்றி
இந்து நாளிதழ் புலிகளின் மீதான செய்திகளை கருத்து நிலையிலிருந்துதான் வெளியிடுகிறது. ஆனால் அது புலி எதிர்ப்பு ஊடக வெற்றிடத்தை நிரப்புகிறது என்பது என்கருத்து
well said...
இந்தபதிவில் இன்னொரு விசயத்தைச் சொல்லவிரும்புகிறேன். அதாவது ஈழத்தமிழர்களின் சார்பிலான இந்தியத் தலையீடானது இந்தியாவின் நலனை, அல்லது மேலாதிக்கத்தை முன்னிருத்தி செய்யப்பட்டதாக சிலரின் உள்நோக்கமுள்ள கருத்தை நீங்களும் எடுத்தாண்டிருப்பதாகப் படுகிறது. ஈழத்தமிழர்களுக்கெதிரான இந்திய அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியநலனை முன்வைத்திருப்பதாகச் சொல்லப்படுவது ஒரு முழுப் பொய்யே! பசுமாட்டைக் காட்டி அரிசியும் காய்கறியும், பணமும் வாங்கிச்செல்லும் புரோகிதத்தனத்துக்கு நிகரானதே இது. இந்தியக்கடற்பரப்பிலேயே தினமும் கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்களைப் பற்றி கவலைகொள்ளாத ஆனால் கடற்புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்து எனத் திரிக்கும் சூரியநாராயணன்கள், இராஜீவ்காந்தி துப்பாக்கிக் கட்டையால் அடிக்கப்பட்டதை, பாகிஸ்தானோடும், சீனாவோடும் உறவாடி இந்தியாவை இளக்காரம் செய்யும் கொழும்பு இவற்றை வசதியாக மறைத்த, மறந்த ராம்கள், சு.சுவாமிகள் அவர்கள் அடிப்பொடிகள் முதலானோர் உருக்கொடுத்து உருவாக்கி உலவவிட்டிருக்கும் கருத்துதான் 'இந்திய நலன்' என்பதுவும். இதன் மூலம் அவர்கள் (Delhi-South Block)நலனை இந்தியநலனாக முன்வைக்கிறார்கள். இது இந்தியத் துணைக்கண்ட அரசியலில் பல நூற்றாண்டுகளாக நடந்துவருவதால் புதிதானதல்ல. இதை நீங்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
//இந்து நாளிதழ் புலிகளின் மீதான செய்திகளை கருத்து நிலையிலிருந்துதான் வெளியிடுகிறது. ஆனால் அது புலி எதிர்ப்பு ஊடக வெற்றிடத்தை நிரப்புகிறது என்பது என்கருத்து//
இது ஆச்சர்யமானது.மிகத்தெளிவாக தமிழீழத்தையே (புலிகளை, அதன் வழிமுறைகளை மட்டுமல்ல) இப்போது எதிர்க்கும் ஆனால் அரம்பகாலங்களில் ஆதரவு காட்டி வந்த பத்திரிக்கை எப்படி கருத்து நிலையில் இருந்து செய்திகளை வெளியிடமுடியும்? தனது கருத்தை ஒருவர் வெளியிடுவதும், அதில் செய்திகளில் தோய்த்து வெளியிடுவது முற்றிலும் வெவ்வேறு. இராம் தனது கருத்தை, நம்பிக்கையை பத்திரிக்கைகளில், மேடைகளில் வெளியிடுவது பரப்புவது வேறு. ஆனால் செய்தி அறியவே வாசிக்கும் வாசகர்களை தனது கொள்கைச்சார்பில் கட்டியிழுத்துச் செல்வதென்பது வேறு. செயலை அல்ல செயலின் ஊற்றுக்கண்னான சிந்தனையை பாதிப்பதே என் வேலை என்று சு.ரா ஒரு முறை சொன்னது போல் வன்முறையினை ஊற்றுக்கண்ணை திறந்து விடுவது கருத்து நிலையல்ல.
//இந்தபதிவில் இன்னொரு விசயத்தைச் சொல்லவிரும்புகிறேன். அதாவது ஈழத்தமிழர்களின் சார்பிலான இந்தியத் தலையீடானது இந்தியாவின் நலனை, அல்லது மேலாதிக்கத்தை முன்னிருத்தி செய்யப்பட்டதாக சிலரின் உள்நோக்கமுள்ள கருத்தை நீங்களும் எடுத்தாண்டிருப்பதாகப் படுகிறது. ஈழத்தமிழர்களுக்கெதிரான இந்திய அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியநலனை முன்வைத்திருப்பதாகச் சொல்லப்படுவது ஒரு முழுப் பொய்யே! பசுமாட்டைக் காட்டி அரிசியும் காய்கறியும், பணமும் வாங்கிச்செல்லும் புரோகிதத்தனத்துக்கு நிகரானதே இது.//
இந்தக் கருத்தைச் சொல்லத் தங்கமணிக்கு மனது வருகிறதென்றால் இதை எதிர்த்துக் கருத்துச் சொல்வதற்கு எனக்கும் அதே மனது உள்ளது.இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பிராந்திய நலனே இந்தியாவுக்கு முதன்மையானது.தனது எதிர்கால'இந்திய ஆளும் வர்க்க நலனை'முதன்மைப் படுத்தாத டெல்கி அரசுகள் எதுவும் கிடையாது.அதே போன்றுதாம் அனைத்து உலகமும்.இவர்களெல்லோருமே தத்தமது வர்க்க-அரசியல்,வர்த்தக நலன்களை முதன்மைப்படுத்தியே நமது பிரச்சனையை இவ்வளவுதூரம் சீரழித்துள்ளார்கள்.இதை மறுப்பது அவ்வளவு இலகுவானதில்லை இந்த 'வர்க்க'ச் சமுதாயத்தின் 'வர்க்க'அரசியலில்.இது மார்க்சியம்,வரட்டுப் பார்வை-இரமல்,தொண்டைக் கரகரப்பு எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நம்மீது ஏவி விடாது,தர்கத்தோடு இந்தப் பிரச்சனையை அணுகவும்.தமிழ் நாட்டில் பிரமணர்களும் அந்தச் சாதியிலுள்ள(மற்றைய சாதிகளின் வாத்தகர்களும்தாம்) பெரு வர்த்தகர்களும் ஏன் தமிழீழத்தை எதிர்கிறார்கள்?கொழும்பு இறக்குமதி செய்யும் கொச்சிக்காய்,பம்பாய் வெங்காயம்,பூண்டு,மல்லி,பலசரக்கு வருட மொன்றுக்கு எத்தனை பில்லியன் டொலர் தெரியுமா? 70வீதச் சிங்களவர்களும்தாம் இதை மிகுதியாக உண்பவர்கள்.தமிழர்களுக்கு அவர்களது பிரேதேச உற்பத்தியே ஓரளவு தன் நிறைவைத் தரும்.இங்கெல்லாம் 'வர்த்தக நலன்' முதன்மை பெறுவதும்,தமிழ்நாட்டு விடுதலைக்கு வித்திடும் ஈழம் விருப்புக்கில்லை, இந்திய ஆளும் வர்க்கத்துக்கு.இந்தியா என்றவொரு 'ஒரே' நாடு இருக்க வேண்டுமானால,; இலங்கை இந்தியாவின் செல்வாக்குக்குள்-ஒரே நாடாக இருந்தே ஆகவேண்டும்.இதை யாரும் தத்தமது 'மனவருப்புக்கு'ஏற்றவாறு கூறினால் அது அவரவர் பாhவைதாம்.அரசியல் அறிவு வேறானது.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
இந்திய மேலாதிக்கம் குறித்து ஜேகே, தங்கமணி, ஸ்ரீரங்கனின் கருத்துகளிலேயிருந்து எனது கருத்தினைக் கொஞ்சம் விளங்கப்படுத்தவேண்டியிருக்கின்றது. என். இராமின் முதலாவது குறிக்கோளினை "இந்தியநலன் முன்னிறுத்துவதாகக் காட்டிக்கொள்வது" என்று சொல்லியிருக்கவேண்டும். தங்கமணி சரியாகச் சுட்டிக்காட்டியதுபோல, இராம், சூரியநாராயணன் போன்றோரின் கருத்து வெளிப்பாடுகள் இந்தியநலனுக்குக் கேடு வரும் என்ற பூச்சாண்டியைக் காட்டுவதினாலே, தமது 'வர்க்க'நலனைக் காத்துக்கொள்வதாகவே இருக்கின்றதெனச் சொல்லலாம். தங்கமணி + ஸ்ரீரங்கன் சொல்வதினைச் சேர்த்து யோசிக்கும்போது, இந்திய மத்திய அரசின் ஸ்ரீலங்கா+ஈழம் மீதான தலையீட்டுக்கு மூன்று காரணங்கள் எனக்குத் தென்படுகின்றன:
1. தென்னாசியாவிலே இந்திய நலன் (ஈழவிடுதலையியக்கங்களுக்கு சோவியத் சார்பு இந்தியா/ராவின் உதவி கிட்டியதற்கான காரணம், அமெரிக்கசார்பு பாகிஸ்தானின் ஆதரவினை ஸ்ரீலங்கா அரசு கொண்டிருந்தது); இந்தியாவுக்கு ஈழவிடுதலையியக்கங்களே பயங்கரவாதத்தை இறக்குமதி செய்யதாக ஓரிடத்திலே சொல்கிறவர்கள், அதே வீச்சுடன் வேறோரிடத்திலே ஈழத்தமிழ் விடுதலையியக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் முதலிலே தந்தவர்கள் நாமே என்ற நன்றியில்லாத ஈழத்தமிழர்களென்று சொல்லத் தயங்குவதில்லை. ((தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை, இப்படியாகப் பேசுகின்ற பலரே அறிந்து பயன்படுத்துவதில்லை)
கூடவே, மொழி, கலை, பண்பாட்டுரீதியிலே இணைக்கப்பட்டதினால், அதன்விளைவான வர்த்தகநலன். ஸ்ரீரங்கன் சொல்வதுபோன்ற கொச்சி(ன்)காய், (பம்பாய்)வெண்காயம், (மசூர்) பருப்பு இறக்குமதி தொடக்கம், இலக்கியம், இசை, படம், சீலை, கோயில்வரை வர்த்தகம் தமிழர்+சிங்களவர்+முஸ்லீம்கள் என்ற பேதமின்றித் தங்கியிருக்க விரிந்திருப்பது
2. இந்தியாவின் உள்நாட்டு அரசியல்; எண்பத்துமூன்றினைச் சுற்றிய ஆறாண்டுகளிலே, தமிழ்நாட்டின் அரசியலிலே ஈழத்தமிழரின் விவகாரம் முக்கிய இடத்தினை எடுத்துக்கொண்டது. இது பற்றிய விவரணம் அஃது எல்லோருக்கும் தெரிந்திருக்குமளவிலே அவசியமற்றது.
3. இந்தியாவின் குறிப்பிட்ட வர்க்கத்தின் தக்கிப்புக்கான மேற்படிப்பூச்சாண்டியினை நம்ப இருக்கும் மத்தியதட்டின் கணிசமான ஒரு பகுதி இந்தியநலன் என்பதற்கும் அப்பாலே சென்று முற்றுமுழுதான இந்தியமேலாதிக்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பதும். இதற்கான சின்ன உதாரணங்கள் பலவற்றைக் காட்டமுடியும். இந்திய இராணுவம் ஈழத்திலே நடந்து கொண்டது குறித்த த இந்து உட்பட்ட பல இந்திய ஊடகங்களின் செய்தித்தணிக்கைகளும் திரிபுகளையும் ஜெயகாந்தன், சோ. ராமசாமி, மா. பொ. சிவஞானம் உட்பட்ட பிரபல்யங்களின் ஒற்றைப்படையான கருத்துகளையும் அவற்றினை ஈழத்தின் இருப்பு இந்தியாவின் இறைமைக்குப் பங்கமானதென்ற கருத்துமுன்வைப்போடு இன்றைக்கும் முன்னிலைப்படுத்துகின்றவர்கள் இந்த மேலதிக்கவாதிகளாகின்றார்கள். இராஜீவ் காந்தி ஜே ஆர் ஜயவர்த்தனாவுடன் செய்துகொண்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் நலனைப் பேண அமைத்துக்கொள்வதாகத்தான் செய்யப்பட்டதாகச் சொல்கின்றவர்கள் முதலாம் வகையினரிலும் மூன்றாம் வகையினரிலும் இருக்கின்றார்கள்.
இவர்கள் விடுதலைப்புலிகளினையும் ஈழத்தமிழர்களினையும் வேறுவேறெனக் காட்டுவதும் ஒன்றேயெனக் காண்பதும் பேசப்படும் சந்தர்ப்பங்களின் தேவைக்கேற்ப மாறுபடும். இராஜீவ் காந்தியின் கொலையிலே விடுதலைப்புலிகளின் பங்கினைப் பற்றி மீளமீளப்பேசும் இவர்களும் இவர்கள் முன்னுதாரணம் காட்டும் உசாத்துணை காட்டும் இந்திய ஊடகங்களும் விடுதலைப்புலிகளுக்கெதிரான ஊடகங்களும் ஒருபோதும் அதற்குமுன்னான, இந்தியாவின் ஈழ இயக்கங்களுக்கான ஆயுத ரீதியான ஊக்குவிப்பினையோ அல்லது ஈழத்திலே இந்திய இராணுவத்தினதும் இந்தியத்தூதுதரகத்தினதும் அவர்களின் சார்பாகச் செயற்பட்ட உதிரித்தமிழியக்கங்களின் செயற்பாடுகள் பற்றியும் நல்லதற்ற எதையுமே பேச விரும்புவதில்லை.
இராம் இந்திய மேலாதிக்க/நலன்விரும்பிகளின் பயத்தினைத் தூண்டித் தனக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்கின்றார் என்பதற்கு ஓர் உதாரணமாக, அவரது சுபமங்களா செவ்வியிலே வரும் இந்த வரிகளைச் சொல்லலாம்:
"இஸ்ரேல் என்ற ஒரு நாடு வலுக்கட்டாயமாக ஸ்தாபிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை இழந்தனர். அவர்கள் சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள். இஸ்ரேல் அவர்கள் பூமியை கவர்ந்து கொண்டதோடு பாலஸ்தீனர்களைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் ஈழம் அப்படியல்ல. இங்கு ஜார்கண்டு, உல்ஃபா போன்றவர்கள் தனிநாடு கேட்பதை ஒத்தது அது.....இனக்குழு என்று கூறுவது 'ethnic' என்ற வார்த்தையின் தமிழ் வடிவம் என்றே நினைக்கிறேன் இனக்குழு என்பது ஒரு தந்திரமான வார்த்தையாக இருக்கிறது. அது ஒரு ஆதிவாசிக் குழுவாக இருக்கலாம் - ஒரே மொழி பேசும் குழுவாக இருக்கலாம். காலிஸ்தான் கோரிக்கையாளர்களைப் போல அடிப்படை மதவாதக் குழுக்களாக இருக்கலாம். இனக்குழுத்தன்மை (ethnicity) என்பது ஒரு குழப்பமான கருத்து. கூர்க்காலாண்ட் ethnic அடிப்படையில் கோரப்படுகிறது. ஆனால் சிக்கிமில் 75 சதம் நேபாளியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த கோரிக்கையை ஆதரிக்கவில்லை. காஷ்மீர் ஒரு இனமா, லடாக் ஒரு இனமா, ஜம்மு ஒரு இனமா - இது ஒரு hold all மாதிரி. இதற்குள் எதையும் அடக்கலாம். ஒன்று மட்டும் உறுதி. நாம் மிகப்பெரிய பாரம்பரியமிக்க மக்கள். ஒரு புதிய தேசியத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உறுதி...."
/இராஜபக்சவின் மீதான எதிர்ப்பு அவரின் கூட்டணி மற்றும் சிங்கள அடிப்படைவாதியோ என்ற ஊகத்தின் பொருட்டான எதிர்பென்றே நான் கருதுகிறேன்/
ராஜபக்ஸ கூட்டுவைத்திருக்கும் அதே ஜேவிபியுடனேதான், சந்திரிகாவும் சில ஆண்டுகள் கூட்டமைத்து, அரசுப்பங்கீடும் செய்திருந்தார். ஆனால், அந்நேரத்திலே, அது குறித்த கண்டனத்தினை த இந்துவோ ப்ரொண்ட் லைனோ செய்திருந்ததாகத் தெரியவில்லை.
/இந்து நாளிதழ் புலிகளின் மீதான செய்திகளை கருத்து நிலையிலிருந்துதான் வெளியிடுகிறது. ஆனால் அது புலி எதிர்ப்பு ஊடக வெற்றிடத்தை நிரப்புகிறது என்பது என்கருத்து/
மன்னிக்கவேண்டும்; புலியெதிர்ப்பு ஊடகவெற்றிடம் எங்கே எந்தவாசகளுக்கான, எந்த மொழியிலேயான புலியெதிர்ப்பு ஊடகமென்பதை நோக்கினால், இது மிகவும் அபத்தமான வாதமாக எல்லாக் கோணங்களிலும் படுகின்றது. இன்னொரு பின்னூட்டத்திலே இது குறித்து.
Sorry Peyarili. OFF TOPIC.
This post and comments from this particular post have been copy+pasted in Boston Balaji's 'Snap Judge' blog.
I am posting here the comment i had written there.
http://snapjudge.blogspot.com/2005/11/n-raam.html
//ஒருவரின் பதிவில் அவர் எழுதியிருக்கும் விதயங்களையும், அவரது பதிவில் மற்றவர்கள் எழுதியிருக்கும் பின்னூட்டங்களையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் இப்படி எடுத்து இட்டுக்கொள்வது சரியா என்றொரு கேள்வி.
more than the blogger who wrote this, my question is about the people who commented on the said post. they posted comments for that particular post. i am sure, they wouldnt expect to see their comments being copy+pasted somewhere. Personally, I, as a commenter would be very unhappy to see my comments being copy+pasted somewhere else.
பெயரிலி பதிவிலும் இதை இடுகிறேன்.
-மதி//
Take me as an eg. I am coming and commenting in your post. I would not my comments to be copy+pasted somewhere else lock stock and barrel without getting any permission from anyone. Was your permission sort as the blog owner to do this? (esp. the comments..)
Sorry for the diverting this.
மதி மற்றும் பிறருக்கும், நேரம் கிடைக்கும்போது படிப்பதற்காக சேமித்து வைத்திருக்கிறேன். நீக்க வேண்டுமானால், மடலிடவும்.
Thankx Mathy for letting us know about this. It is kinda weired and I too feel uncomfortable about seeing my comment in another place which is totally unknown for me.
The problem is, If someone is writing a comment about this posting or my comment there, how it is possible to response for that? (Cuz I only knew the first place where I did comment)
மதி, பாலாஜி & டிஜே,
snap judge என் பதிவு இருப்பதனாலே, என் பதிவுக்கு வராதவர்கள் வாசிக்கக்கூடுமென்பதாலே எதுவிதமான ஆட்சேபணையுமில்லை. ஆனால், இங்கிட்ட பின்னூட்டங்களும் சேர்ந்திருக்கும்போது, அவற்றினையிட்டவர்களின் அனுமதி அவசியமென்றே தோன்றுகின்றது.
நல்ல பதிவும், பின்னூட்டங்களும். நன்றி.
Post a Comment