Wednesday, November 09, 2005

கணம்


An American Dream

புதர்க்குரங்கு (Bush Monkey)
கூட்டுரு: '05, நவம்பர் 09 புதன் 11:41 கிநிநே.
நன்றி: மூலப்படம்


"I look at the term species, as one arbitrarily given for the sake of convenience to a set of individuals closely resembling each other...." - Darwin, 1859

நான் ஒரு கனவு கண்டேன்....

கன்ஸாஸ் கபாடம்,
துளிர்காற்றுக்கு மஞ்சி விழிமூடிக்கொண்டதை
அதில் நான் கண்டேன்.

மத்தியகாலம் ஒத்தமைந்ததோர் உலகு;
மின்விளக்குகள் உடைத்து திரி கொளுத்தினர் மெழுகு.
தலைகீழெனக் கயிற்றில் தொங்கினான் டார்வின்.
கண்கள்பிடுங்கலுற்றான், தன் கிழவுடல்,
கல்பகோஸ் விலங்கு, நகக் கூர் கிழித்து
ஆயத்தூங்கினான் கூர்ப்பின் அப்பன்.

அவனுடல், கல்லெறி மனிதரை ஊக்கினார் கைத்
திருப்புத்தகம் உள்ளே நெளிந்தன கருந்தேள்கள்.
சந்தியில், சந்தையில், மேடையில், மலம் கழிக்கையில்,
பேர்னாட் குயிகள் பேசினர் பெருந்தொழில்நுட்பம்,
தம் படைத்தல் விஞ்ஞானம்.
திரித்துப் பேசுதல் தரித்துப்போன தவர் கோட்டைநாவில்,
கொடும்முற்றுகையிட்டது ஆட்சிவலிமை.

ஆய்வுகூடங்களை அறிந்தறிந்து காட்டிக்கொடுத்தனர் அரைவெள்ளிக்காசுகட்கு;
அணியணியாய் ஊர்வலம் போய் ஆணிச் சிலுவையில் அறையுண்டன
பாவக்கறை படிந்த பழம்பாறைச்சுவடுகளும் ஆபிரிக்கப் பாதி
ஆதிமண்டையோடுகளும்.

தம் கட்டில்-புணர்தலுக்காய்,
ஆங்காங்கே அவசரமாய்
ஆண் என்புவிலாக்கள் மட்டும்
ஒடிந்து ஒசிந்து உன்மத்த உருக்கொண்டாடின
ஓரிரு கட்டிளம்பெண் உற்பத்தி பண் ஊக்கத்தே.

அண்டத்தின் தோற்றமும் நகர்வும்கூட,
அடர் பேரதிர்வுக் கன்ஸாஸ் கதவடிப்புடன்
கலங்கி மூடின தம் கண்.
காலம் பின்னோக்கி முகம் காட்டி ஓடச்
சாட்டை அடித்தது கல்விச்சட்டம்.
அறிக,
ஒருநாள் காலையில், பழ உலகம் நழுவிப் பாலிற் பிறந்தது,
திறந்த தேனீரில் மல ஈ வந்து வீழ்தல்போல்.
சில நாள் போக,
தோன்றினான் தந்தை நினையத் தரணியில் மைந்தன்,
முன்னொரு ஈ விழக் கண்டு, தான் இறக்க, இன்னொரு
வண்டு வீழ்
எளிமையாய்.

பின் என் நா எனக்காய் அசைத்துப் பேச விடக் கூவினேன்,
என் மூச்சின் மூலத் தோற்றெங் கென்று
எதிர்ப்பட்டார் எவர்க்கும் எடுத்துச்சொல்ல.
கோரமாய்க் கூவியது தொன்னையில் அருந்திய கூட்டம்,
கொடியசைத்து, தோள்குலுக்கி, தொடை தட்டி.
கூர்ப்பின் தோற்றுவாயைக் குதறிக் கீழிறக்கி வீசி,
குறி இறுக்கித் தூக்கிக் கட்டினர் என்னைப் பலியாய்.

முதற் கபாலக் கல்லெறியில் விழித்தேன் மீள,
கன்ஸாஸ் கபாடத்தின் வெளியெங்கோ, கடல் கடந்து,
புல்மூடு டார்வின் கல்லறைத்தரை மீதென்றார் யாரோ.

அருகே,
புதிதாய்ப் பொருந்திக் கிடந்தது
ஒரு சிறு குழவிக்கல்லறை
இனி, அதன் வெளியே கோரைப்புல் கூர்த்துப் பூத்தது எருக்கலம்பூ.

..... இதுவாய், இனி வருமொரு காலை,
மனிதர், விலா முள் என்பால் தம் முகம் விளங்க,
அண்ட மூலமும் சாரமும் அறியான் கையுள்ளினுள் அடங்க,
என் உணர்வினைப் பறித்து பிறர் தமதை உட்திணிக்க,
இன்று ஒரு துன்புறு கனவு கண்டேன்
என் அமெரிக்கத்துயிலில்.

'99 செப்டெம்பர், 04
கன்ஸாஸ் மாநிலம் இவ்வாரம் புத்திசாரமைவு (intelligent design) இனைக் பாடசாலைக்கல்வித்திட்டத்திலே சேர்த்துக்கொண்டதையிட்டு இந்த மறு உள்ளீடு. இணையத்திலே இதன் முதல் உள்ளிடுகை 99 ஆம் ஆண்டு தமிழ்_கலந்துரையாடல் யாஹூ!குழுமத்திலே இடப்பட்டது.

5 comments:

arulselvan said...

>>ஆய்வுகூடங்களை அறிந்தறிந்து காட்டிக்கொடுத்தனர் அரைவெள்ளிக்காசுகட்கு;
அணியணியாய் ஊர்வலம் போய் ஆணிச் சிலுவையில் அறையுண்டன
பாவக்கறை படிந்த பழம்பாறைச்சுவடுகளும் ஆபிரிக்கப் பாதி
ஆதிமண்டையோடுகளும்.

:-)

ஆமாம், '99, செப்.= இலே என்ன நடந்தது?

காலையிலே ஒண்ணு போட்டேன்.
(http://www.livejournal.com/users/arulselvan/7092.html)
எங்கேயோ காணோம்.
அருள்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Peyarili in full form .
history repeats itself, one farce after another.
The irony is that USA is home to leading biologists who swear by evolution and some of the best works on evolution have been from USA. The elites in scientific community do not seem to have much influence in the bible belt.

-/பெயரிலி. said...

அருள்,
99 செப்.:
//The Kansas vote marks the third time in six years that the Kansas board has rewritten the standards on the teaching of evolution. In 1999 the board eliminated most references to evolution, prompting Harvard University palaeontologist Steven Jay Gould to comment that it was like teaching “American history without Lincoln”.//


ரவி,
/The irony is that USA is home to leading biologists who swear by evolution and some of the best works on evolution have been from USA. The elites in scientific community do not seem to have much influence in the bible belt./

செப்ரெம்பர் (27?) Richard Dawkins அவருடைய நூலான, "The Ancestor's Tale: A Pilgrimage to the Dawn of Evolution" இனைப் பற்றியும் இடார்வினிலிருந்து இதுவரை நிகழ்வது பற்றியும் Charlie Rose இன் நிகழ்ச்சியிலே பேசினார். உயிருருவாக்கம் குறித்து அமெரிக்கா பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் தொனியிலேயே அவருடைய கருத்துமிருந்தது.
அவருடைய intelligent design குறித்த நிகழ்ச்சி ஒன்றுமிங்கே
இன்று வானொலியிலே கன்ஸாஸின் ஒரு கத்தோலிக்க + அறிவியல் பாடசாலை ஆசிரியர் வந்து தத்துவத்துக்கும் நிரூபித்தலுக்குமான தொடர்பு பற்றி வெட்டிவிழுத்திவிட்டுப்போனார்; தொடர்ந்து அறிவியல்மட்டுமே கல்வி என்ற விதத்திலே இன்னோர் ஆசிரியர். கொஞ்சக்காலத்துக்கு நாடு பரபரக்கும் ;-)

Anonymous said...

பழைய படம்தான்; ஏதோ இந்த நேரத்தில் பொருத்தமாயிருக்குமென்று தோன்றியது :-)

-/பெயரிலி. said...

சன்னாசி,
"I look at the term species, as one arbitrarily given for the sake of convenience to a set of individuals closely resembling each other...." - என்பதற்கா இந்தப்படம்? ;-)
இதுவரைக்கும் தலைவர் கன்ஸாஸில் நிகழ்ந்தது குறித்து, தன் கருத்தினைத் தெரிவிக்கவில்லை என்றே படுகிறது.
FAith Based Education: F-APE ;-)