Tuesday, July 29, 2008

Twitter as a Toothpicking Tool

நயனதாரா நெஞ்சுக்கும்
காலி ஆடுகளத்துக்கும்
இடை-க்-கணம்
ட்வீட்டரில் தொங்கும்
மனித முகம்
எனது

Monday, July 21, 2008

இருபத்தைந்து ஆண்டுகள்


அடிப்படைப்படவுரிமை: கலாநிதி. மிரண்டா அலிசன்

கடந்த பாதையைத் திரும்பிப் பார்த்தேன்;
கிடந்த பாயிற் புரள்கிறேன்.
புரண்ட பாயைக் கிண்டிப் போக,
வரண்ட சாலையில் எழுகின்றேன்.

சுற்றும் வட்டத்து,
சுழிப்பரிதிகளைச்
சுட்டிச்சுட்டி
நாண் பயணம்,
நாட்கணக்கு.

கவர்ச்சிக்காக மட்டும்


Saturday, July 19, 2008

எடடா தம்பி கொலைவாளை

முடிவுக்குக் கொண்டு வருதல்

மூன்று நிலைகளிலே
முடிந்து விடுகிறது
என் கவிதை -

அடுக்கிய சொல்;
பொறுக்கிய படம்;
அங்கீகாரம்.

Wednesday, July 16, 2008

நுகத்தடிகளின் விருப்பப்படியே தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்

மிகவும் யோசித்துத்தான் இதை எழுதுகிறேன். உணர்ச்சிமயப்பட்டோ அல்லது பரிதாபகரமான "போகாதே போகாதே" பூ, கற்களையோ (சகதமிழ்மணம் நிர்வாகிகள் உட்பட) எதிர்பார்த்தோ நிச்சயமாக எழுதவில்லை. முதலிலேயே அதைத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது.

தமிழ்மணம் திரட்டியின் செயற்பாட்டிலிருந்து விலகியிருக்கலாமென்று எண்ணுகிறேன். இஃது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மணத்தின் சகநிர்வாகநண்பர்களிடம் தனிப்பட உள்ளிருந்து இயங்கும் அழுத்தத்தின் காரணமாகச் சொன்னதே. அவர்கள் மறுத்ததின்பின்னால், தொடர்ந்தும் நீடித்தேன். அதன்பின்னால், என் செயற்பாடுகள், சும்மா பெயருக்குத் தமிழ்மணம் திரட்டியிலே இருப்பதாலேயே சகதமிழ்மணம் நண்பர்கள் பெற்ற, பெற்றுக்கொள்ளும் தொல்லைகள் குறைவில்லையென்பதே கண்கூடு. தமிழ்மணம் திரட்டிக்கு வெளியிலிருந்து டிஎம்ஐயின் அங்கத்துவனாக வேறெந்த வேலையைச் செய்வதாயினும் எனக்குச் சங்கடமில்லை. ஆனால், தமிழ்மணத்திரட்டியின்மீது சும்மா ஒப்புக்கு என் பெயர் இருந்தாலும், தமிழ்மணத்தையும் என்னையும் தாக்கும்போக்கு இந்த வட்டாரத்திலே இருந்துகொண்டேயிருக்கும். பதிவர்களுக்கும் நான் சுருக்கமாக விலகிக்கொள்கிறேன் என்பதை நானே சொல்லிவிடலாம். கடந்த ஒரு மணிநேரத்தின்முன்னரேமட்டும் தமிழ்மணம் நண்பர்களுக்கு அஞ்சல் அனுப்பிவிட்டு, அவர்களின் எதிர்வினை வருமுன்னரே, பொறுப்பின்று இங்கே பகிரங்கமாக எழுதுவதற்கு அவர்கள் மன்னிக்கவும். புரிந்துகொள்வீர்களென்று நினைக்கிறேன். நான் பெண்ணில்லாததாலே, நான் தமிழ்மணம் திரட்டிக்கு வெளியே போகிறேன் என்று நானே தீர்மானித்துக்கொண்டதற்காக, உங்களின்மேலே ஒரு கழுகும் மொய்க்காது என்று மகிழ்ச்சியடையுங்கள் :-). வேடிக்கையை விட்டுச் சொன்னால், பொறுப்பின்றித் தடாலடி விலகுவது முறையற்றதுதான். ஆனால், என் பெயருக்காக, நீங்களும் ஏன் சேர்ந்து அடிவாங்கவேண்டும்? விளக்கம் கொடுத்துக்கொண்டேயிருக்கவேண்டும். தமிழ்மணம் திரட்டி என்ற அளவிலே எதையுமே நான் இவ்வாண்டு உருப்படியாகச் செய்ததில்லை. அதனால், ஓட்டை விழுந்து ஆறு வற்றப்போவதில்லை.

இது பயந்து ஓடும் செயற்பாடில்லை; சோர்ந்துபோகும் செயற்பாடுமில்லை; தமிழ்மணத்திலே இணையும்போது, தமிழ்மணத்தினை நடத்தும் ஒவ்வொருவரையும் போலவே எனக்கும் இங்கே எருமைத்தோல் தேவையென்று நிச்சயமாகத் தெரியும். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னே soc.culture..... usernets இலே பெற்ற பயிற்சி எருமைத்தோலாகவிருக்கப்போதும். ஆனால், தொடர்ச்சியாக எதற்குத் தமிழ்மணம் திரட்டிக்கு அடிக்க நான் இருப்பதே வசதியான காரணமாக வேண்டும்?

ராஜாவனஜ் போன்ற அருமையான பகுத்தறியும் பொதுவுடமைத்தோழர்கள் அவர்களின் தோழி தமிழச்சியை நீக்கியபின்னால், தமிழ்மணத்திடம் என்னை நிர்வாகப்பொறுப்பிலிருந்து விலக்கக் கேட்டிருந்ததை முன்னரே இணைத்திருந்தேன். ஓரிடத்துக்குப் பலமாகவிருப்பதே செய்யும் சேவையிலே சிறப்பு - பலகீனமாகவிருப்பதல்ல. இப்போது ராஜாவனஜ், ஸ்டாலின் போன்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் எனறு நம்புகிறேன்.

குறிப்பிட்ட என்னை இவர்கள் வெறுப்பதற்குக் காரணம் - உண்மையை வெளிப்படையாகச் சொல்லப்போனால் - நான் தமிழகத்தமிழன் இல்லையென்பதுதான் என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது. ஈழத்தமிழன் என்று கணமும் யோசிக்காமல், என்னைத் தாங்கி நிற்கும் தமிழகநண்பர்களை எல்லா வலைப்பதிவாளர்களுமே காணக்கூடியதாக இருக்கும் அதே நேரத்திலே, என்னைத் தாக்குகின்றவர்களுக்கு நான் ஈழத்தமிழனாக இருப்பதே வசதியாகிப் போய்விட்டது. என்னை நேரடியாகவோ ஏதோ விதத்திலோ சந்திக்கவேண்டிய அவசியம் இப்படியானவர்களுக்கு இல்லை. நான் எனது குடும்பம் தமிழகத்திலே கொண்ட ஈழத்தமிழனோ, மூன்றாண்டுக்கொரு முறை தமிழகத்துக்குப் போய்வரும் ஈழத்தமிழனோ அல்ல. என்னை நேர்கொண்டு சந்திக்கவேண்டிய கட்டாயமோ தேவையோ இவர்களுக்கும் மறுதலையாக எனக்குமில்லை. போட்டுச் சாத்துவதாலே இவர்களுக்கு ஏதும் நட்டமில்லை. இவர்களுக்கும் ஸ்ரீலங்கன்பாஸ்போர்ட்டோடுதானே நாட்டைவிட்டுப்போயிருக்கின்றீர்கள் என்பவர்களும் என்னைப் பொறுத்தமட்டிலே அதிக வித்தியாசமில்லை. இவர்களைப் போலவே குணம் கொண்ட பல ஈழத்தமிழர்களையும் கண்டிருக்கின்றேன். இவர்களுக்கும் இவர்கள் முரண்டுபிடித்துக்கொள்ளும் பார்ப்பனியசக்திகளுக்கும் தளம் வேறு என்பதைத் தவிர ஏதும் வித்தியாசமில்லை. பழைய புளொட் நண்பர் ஒருவர் கூறியதுபோல, "விடுதலைப்புலிகள் பாசிசம் நிறைந்தவர்கள் என்று குற்றம் சாட்டும் இதே இயக்கங்கள்தான் ஐபிகேப் வந்து தமக்கு அதிகாரம் கிடைத்தபோது அவர்களைவிட மோசமாகப் பாசிசத்தைச் செயற்படுத்தினார்கள்." இப்போது ஊடக அதிகாரத்திலிருக்கும் பார்ப்பனிய சக்திகளை இந்தச் சகதிகள் இடம்பெயர்த்தால், அதைவிட மோசமாக இந்த நவபார்ப்பனியசகதிகள் செயற்படுவார்கள் என்பதிலே இத்துணை கண்டபின்னால், இன்றைக்கு எனக்கேதும் சந்தேகமில்லை. வலதுசாரிகள் எல்லாப்பொந்துகளிலிருந்தும் தாம் வலதுசாரிகள் இல்லை என்று சொல்லிக்கொண்டே வெளிவருவார்கள்.

தமிழ்மணம் திரட்டியின் நலன் கருதியேனும், நான் ஒதுங்கியிருக்கவிரும்புகிறேன். லக்கி லுக், தமிழச்சி, சுகுணா திவாகர், ஓசை செல்லா, பொட்"டீ"கடை, செந்தழல் ரவி, இரவுக்கழுகுகள், அவர்களுடைய நுகத்தடிகள், நெம்புகோல்களும் அவர்களுக்கும் ஈழத்தமிழருக்கும் எதிரான பார்ப்பனிய சக்திகளும் இனியேனும் புதிய ஈழத்துத்தட்டுக்கழுவும் வேட்டைப்பன்றியைத் தேடட்டும்.

இவர்களைப் போன்றவர்களை வாழ்த்துவதே இவர்களுக்கு வாழ்த்துப்பின்னூட்டமிடுகின்றவர்களுக்கான தண்டனை என்ற மகிழ்ச்சியை மட்டும் என்னோடு தக்க வைத்துக்கொள்கிறேன். விலகுவதால், தமிழ்மணம் திரட்டியிலே மீண்டும் என் பதிவினை இணைக்கலாமென்றும் தோன்றுகிறது.

இந்தப்புரட்சிப்போராளிகளின் நக்கல்கள், விக்கல்கள் வழக்கம்போல வளரட்டும். அதேநேரத்திலே, இவர்களினைத் தம் சொந்த வர்க்க/கன/அடுக்கு நலன் கருதி எதிர்ப்பதற்காக மட்டுமே என்னைத் தூக்கிப்பிடிக்கப்போகும் மக்களையும் மற்றோர் அடையாளம் கண்டுகொள்ளட்டும்.

I appreciate if no person will link this post to his/her site/"collection"/"archives". thank you very much.

ஜ்யோராம் சுந்தரின் பதிவிலே இட்ட பின்னூட்டம்

ஜ்யோவ்ராம் சுந்தர்,

/இதுவரை நான் பெயரிலியைப் பற்றி பாதகமாக எங்கும் எதுவும் எழுதியதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு ஸ்காலர் எனக் கேள்விப் பட்டு மதிப்பு வைத்திருக்கிறேன்/
இதற்கு மற்றவர்களைப் போல என்னை "ஈழத்துத்தட்டுக்கழுவி நாயே" என்று கூப்பிட்டிருந்தால் நன்றாகவிருக்கும்.

செல்வராஜ் மிகவும் தெளிவாக ஓர் இடுகையைப் போட்டிருக்கின்றார். அதைத் தவிர, இங்கே மேலும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை - நான் தொடங்கிய இரண்டு விடயங்களைத் தவிர.
1. உங்களின் பின்னூட்டம் அனுமதித்தது தொடர்பானதிலே என்ன நடந்தது என்பதினை முழுமையாக அறிந்து, என் மீது தவறென்றால், முழுமையாக அறியாது நான் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்பது

2. ஓசை பதிவினை நடத்தும் செல்லா, தமிழ்மணத்தின் தீர்மானத்தின்படி நீக்கப்பட்டாரேயொழிய, அவரின் வேண்டுகோளுக்காக அல்ல என்பதை நிரூபிக்க

மீதிப்படி, தெளிவுபடுத்தும் மனநிலை எனக்கு இல்லை; பதியும் இன்னொரு வலைப்பதிவர் வார இறுதியிலே வளர்மதி+ஜ்யோவ்ராம் சுந்தர் குறித்து எனக்கு எழுதிய அஞ்சலுக்குப் பதிலாக எழுதிய அஞ்சல்களை அப்படியே தருகின்றேன் - நண்பரின் பெயரை மட்டும் விலக்கியிருக்கிறேன்.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்; இங்கே நீங்களும் வளர்மதியும் (அய்யனாருங்கூட) எதற்காகப் பேசுகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியும்; அதேபோல, இங்கே உங்கள் மூவரைத் தவிர்த்துப்பேசும் பலரின் நோக்கங்கள் அவையல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

---
1.
நிச்சயமாக தமிழச்சியையும் ஜ்யோராம் சுந்தரினையும் ஒன்றாக நான் நினைக்கவில்லை. அவரின் படைப்புகள் குறித்து எனக்கு நிச்சயமாக் மதிப்புண்டு; ஆனால், காமக்கதைகள் erotica ஆகவும் தேறவில்லை; ஒரு சமூகப்பார்வையிலே கட்டுடைக்கும் படைப்பாகவும் தேறவில்லை (இப்படித்தான் கடைசியாக voice on wings பதிவிலே பின்னூட்டியிருக்கிறேன்). I have no respect left to suguNA Diwakar any more. In my PoV, he is one of the most double standard holding hypocritics who thinks of himself above anyone. அய்யனாரின் படைப்புகள் முன்னர் நிறையக் கவர்ந்தன; இப்போதெல்லாம், கைதட்டலுக்கு எழுதும் ஆளாகப் போய்விட்டதிலே வருத்தம். சில விடயங்களை இங்கே எவரும் கண்டுகொள்ளவில்லை.

1. ஜ்யோராம் சுந்தரின் பதிவு/இடுகை எதுவுமே நீக்கப்படவில்லை என்பதை; காமம் என்ற சொல் தடுக்கப்படவில்லை.

2. எதற்காக இப்படியான முகப்பிலே காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தோன்றும் நிலையைத் தவிர்க்கவேண்டியிருக்கின்றதென்பதை; இவர்கள் மக்கள் மக்கள், மக்களுக்குத் தேவையான பாலியற்சுதந்திரம் என்று பேசுகிறார்கள்; அதே நேரத்திலே அதே மக்களைப் பதிவுப்பக்கத்தினை நோக்கித் திருப்புகையிலே, இப்படியாகத் தொங்கினால், எவருக்கு இவர்கள் இவர்களின் கதைகளூடும் சுதந்திரம் ஊட்டமுடியும்/ ஒருவரும் பதிவுப்பக்கதுக்கே வரமாட்டார்கள். தமிழகச்சஞ்சிகைகளுக்கு இவர்களே பதிவுகளெல்லாம் நிறைகாமம் செப்பும் தும்பிகள் என்ற செய்தியை உருவாக்கிக்கொடுப்பார்கள

3. தனிப்பட, இவர்களின் படைப்புகளெதுவுமே எனக்குப் புரட்சியாகத் தெரியவில்லை. இவற்றைப் பெருவிரல்-சுட்டுவிரல் இடுக்கிலே சுண்டித்தள்ளும் பாவனை பேசாத இயல்பான படைப்புகளைத்தான் தேடுகிறேன்; கண்டிருக்கிறேன். ஜி. நாகராஜன் அப்போது சொல்லாத என்ன இழவை இப்போது இவர் சொல்லியிருக்கின்றார்?

4. தமிழ்மணத்தின் செயற்பாட்டிலே இருக்கும் நடைமுறைச்சிக்கலையும் (புதியபதிவர்களை ஊக்குவிக்கும் தேவை) தமிழ்மணத்திலேயுள்ள எங்களைப் போன்றவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடுகளையும் வேறாகப் பார்ப்பதில்லை; இவரிடம் profession - personal life என்று பிரித்துப்பார்க்கும் தன்மை இருப்பதேயில்லை. போர்னோ குறித்த என்னுடைய நிலைப்பாடு தொடக்கம் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா? என்ன உரிமை இவர்களுக்குத் தாம் ஏனோ முற்போக்குப்பின்நவீனத்துவ (sic) கொம்புகள், மீதித்தமிழ்மணத்திலேயிருப்பவர்களெல்லாம் கழுதைவால்கொண்ட கட்டுப்பெட்டிகள் என்று திட்ட இடம் கொடுக்கிறது? தமிழச்சி என்னைப் பாப்பான் என்று திட்டக் கேட்டிருந்த விந்தைக்கு இது பெரிதில்லை என்றாலும், சில சமயங்களிலே ஈகோ திரும்ப உதைக்கவே உந்துகிறது. பொழுதும் நிலமையும் இடம் தந்தால், சுகுணா திவாகர்,ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார் போல பாவனை பண்ணிப் படைப்பது அவ்வளவு சிக்கலான காரியமில்லை. என்ன புரட்சிக்கு உந்தப்பட்ட நிலையிலே உதைப்பதற்கு வசதியான தமிழ்மணம் மாதிரியான ஒரு நொண்டிக்கழுதையை அதிகாரபீடமாக எண்ணிக்கொண்டு காலைத் தூக்கவேண்டும். ;-)

5. தமிழ்மணத்திலேயிருந்தாலுங்கூட கடந்த சில மாதங்கள் எதையுமே நான் செய்ததில்லை; இப்போதுங்கூட, அறிவிப்பு எழுதி வந்ததிலேதான், வாசித்து -அதன் தேவை அறிந்து- சம்மதித்தேன். பாதிப்பேர் திட்டுவதைப் பார்த்தால், இது -/பெயரிலி.யின் வேலை (தன்னுடைய மூன்று வயதுக்குழந்தையிடம் கொடுத்து எழுதிப் போட்டது; 24 வரிகள் கொண்ட வசனம்...... ;-)) என்று தீர்மானித்து உதைப்பதே அவர்களுக்கு முக்கியமாகிறத

6. இவர்களுக்கு அதிகாரபீடம் எதுவெனத் தீர்மானித்து உதைக்கும் அதிகாரபீடம் எப்படியாகக் கிட்டியதென்று அந்த அல்லாவுக்கும் அரனுக்கும் அய்யனாருக்குமே வெளிச்சம் ;-) என்ன இத்தனையிலும் ஒரு நல்ல விடயம்; வளர்மதி பற்றிய தெளிவும் கிட்டியது. did you notice that every middle class madhavan wants to pretend him as a postmodernist maadaasamy with a foucault-marxist mind?

Shit certainly happens. ;-)


2.
நீங்கள் சொல்வதிலுள்ள சில உண்மைகளை ஒத்துக்கொள்கிறேன். வளர்மதி எழுதுவதை 1997 இலிருந்து ஆறாம்திணையிலிருந்து அங்குமிங்குமாக வாசித்திருக்கின்றேன். அவர் இணையத்தினைச் சிற்றிதழ் நீட்சியாக எண்ணுவதிலும் தனிப்பட எனக்கு முழுமையான ஒப்புதலேஎ; சிற்றிதழ் எனும்போது, ஒரு நடைமுறைக்கான தேவையைக் கருதி, ஒத்த கருத்துள்ளோர் ஓர் எழுத்து முயற்சியினைக் கொண்டிருத்தல் என்பதாகவே இங்கே நான் சொல்லவருகிறேன். ஆனால், அவர் ஒரு குருபீடத்தட்டிலே ஏறி இருந்து கொண்டு மிடில்க்ளாஸ் மாதவன்களைப் பற்றிப் பேசும்போது, கிட்டத்தட்ட முன்னுக்கிருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாது என்ற தொனிதான் எகிறியது. இதிலே voice on wings போன்ற நிதானமானவர்களே கொஞ்சம் நிதானமிழந்து பின்னூட்டிப் பதிவுமிட்டார்கள். வேறு யாரும் இதே குரலிலே பேசியிருந்தால், போகட்டுமென்று தோன்றியிருக்கும். ஆனால், வளர்மதியிடமிருந்து வரும்போது கொஞ்சம் உதைத்தது. அண்மைக்காலத்திலே என்னை உள்ளிட்ட பலரின் ஒரு நிலையைக் கவனித்தேன்; முற்றாக, மிடில் கிளாஸ் என்பதை மறுதலிக்கவும் அல்லது அதனை ஒரு தவறான மறைநிலையாகச் சொல்லவுமே பயன்படுத்துகிறோம். அந்த மிடில்கிளாஸின் மாங்காய்ச்சிந்தையை மாற்றுவதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொள்ளாமல், விலகி நின்று வீயாக்கியானம் பேசுகிறோம். இதுவும் ஒரு மிடில்கிளாஸ் மெண்டாலிட்டிதான். சமூகத்திலே தன்னிருப்பினையும் இடத்தினையும் ஒத்துக்கொள்ளாமல், அந்தரத்திலே கால்பாவி நின்று ஆசீர்வாதமும் அறிவியலும் அவித்துக் கொட்டுவதிலே அர்த்தமில்லை. வளர்மதி அதைத்தான் செய்கிறார்.

-/பெயரிலி. என்பவனுக்கும் தமிழ்மணத்துக்கும் என்ன தொடர்பு, -/பெயரிலி. என்பவன் எவன் என்பதெல்லாம் நிச்சயமாகத் தமிழ்மணத்தினைப் பயன்படுத்தும் மிகப்பெரும்பான்மைக்குத் தெரியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், இப்படியானவர்களிலே பலர் "விசைநெம்புகோலுடன் இணையத்தைப் புரட்டு" முயற்சியிலே பேசுவதில்லை; இங்கே சத்தமிட்டுக்கொண்டிருக்கும் சுகுணா திவாகர், லக்கி லுக், செந்தழல் ரவி, பொட்"டீ"கடை, ஓசை செல்லா போன்றவர்களுக்குத் தமிழ்மணத்தினைத் திட்டுவதென்பதும் -/பெயரிலி.யைத் திட்டூவதென்பதும் ஒன்றுதான். இதனை ஒத்துக்கொள்வீர்களென்று நம்புகிறேன். இவர்களுக்கு ஏதோ நான் மட்டுமே தமிழ்மணத்தின் நீக்குதல்களைச் செய்து அறிக்கைகளை எழுதுவது என்ற உணர்வு. இந்தக்கடைசிக்களேபரத்திலே, என் பங்கு ஒன்றுமேயில்லை - நடவடிக்கையினை மற்றைய தமிழ்மண நண்பர்களோடு இறுதியிலே ஆதரித்ததுதவிர. தமிழச்சியைப் புரட்சிச்செம்மல் என்று எண்ணிக்கொண்டு, அறிக்கை விடுகின்றவர்களைப் பற்றிச் சொல்வதற்கில்லை.

சுகுணா திவாகர் பற்றி நீங்கள் சொல்லும் கருத்து எனக்கு ஓராண்டு முன் வரை இருந்தது. ஆனால், வளர்மதியுடனான சண்டையிலே வீதியிலே அழுதுகொண்டுபோனேன் போன்ற உணர்வுக்குதம்பலின்பின்னான பல செயற்பாடுகளுடன் முற்றாகத் தேய்ந்து, நான் என்ன தமிழச்சிக்குச் சொன்னேன் என்பதை வாசிக்காமலே "தமிழச்சி-பூல்" என்றெல்லாம் எழுதியவர் என்னைக் காராசாரமாக விமர்சித்து எழுதியபோது இன்னமும் தேய்ந்து, கடைசியிலே அதற்காக நான் அவருக்கும் விளக்கி -/பெயரிலி. என்ற பெயருடன் எழுதிய பின்னூட்டத்தினை அனுமதிக்காமல் தொடாந்தும் என் செயற்பாட்டைத் திட்டியபோது அற்றுப்போய்விட்டது. விமர்சிக்க இவருக்கு என்ன அருகதையுள்ளது? இதேபோலவே, ஜ்யோராம் சுந்தருக்குத் தமிழ்சசி தொழில்நுட்ப ரீதியிலே அவருடைய பதிவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைச் சுட்டி, எவ்விடுகையும் விலக்கப்படவில்லை என்று எழுதிய பின்னூட்டத்தினை அவர் அனுமதிக்கவில்லை. ஆனால், தொடர்ந்தும் தன் பதிவு "நீக்கப்பட்டதற்கு" நக்கலாக எழுதிக்கொண்டிருக்கின்றார். இவ்வளவுதானா போராட்ட நேர்மை?

விடுங்கள். சந்திரமதி விவகாரத்துடன் இப்படியான "போராடப் பொய்யாகவேனும் ஓர் அதிகாரபீடம் தேடும் இணையப்போராளிகளைக் கண்டபின்" ஓரளவுக்கு ஒதுங்கி, தமிழச்சி விவகாரத்துடன் நான் எதிலுமே தலையிடுவதில்லை. Blogging is merely a self-gloating egostic popularity game, after all.

Monday, July 14, 2008

அதிகாரபீடங்கள் மறுதலிக்கும் குருபீடங்கள்

நீட்ஷேயும் செத்தார்; பூக்கோவும் பொறிந்தார்;
நானும் போனேன்.
நுள்ளான் கடவுள் மட்டும்
மல்லாக்காய்
கவட்டைத் திறந்து காட்டிக் கிடந்தார்
எலும்பு மனுசருக்குத் தீனி
ஏதொரு புதுப்பொல்லாப்புமின்றி.
உமக்கென்ன, புண்ணியன் நீர்;
கிடப்பீர்; கிழிப்பீர்.
அனந்தசயனத்தும் ஆத்தாவை
அரவணைத்துப் படுப்பீர்
கீழே ஒடுங்கி
முடுக்கியவருக்கெல்லோ தெரியும்
வஸ்துள் மூத்திர அவஸ்தை.

- போமோதாசன் மாமூசமூகத்துக்காய்ப் புனைந்தளித்தது


அதிகாரபீடங்கள் மறுதலிக்கும் குருபீடங்கள் (அ) பம்மாத்துப்பேப்புடுக்குகளைப் புடுங்குவதெப்படி?

தலபூ மேல அதிருதில்ல.... அதுவும் நம்ம நாலேஜுக்கு ஹைக்கூபோமோதான்.


பரபரப்பினையும் தம்மை அடையாளப்படுத்துதலையும் முன்வைக்காத நிதானமுள்ள சுயசிந்தனை கொண்டவர்கள் என்று நான் கருதியவர்களே இப்போதெல்லாம் இணையத்திலே பதிவு விசேஷமாக வெகுஜன-மிடில்கிளாஸ் மாதவ -மக்களுக்காகப் புரியும்படி, பொதுப்புத்திக்கு மாறாகப் புதுப் பனித்திரை போடுகிறார்கள் என்பது செரித்துக்கொள்ளச் சங்கடப்படுத்தும் அதிர்ச்சிதான் என்றாலுங்கூட ஒரு வகையிலே நல்லதுதான். ஆடிக்காத்திலே இப்படியாக கனத்த பவுசர்களே இறக்கை கட்டிப் பறந்தால், கிழிந்த டவுசர்களை இனி நான் என்ன குறை சொல்லமுடியும்?!! [இவற்றினை வாசிக்கும்போது, "முகமது பின் துக்ளக்" படத்திலே வடிகட்டின வலதுசாரி சோ ராமசாமி, சுதந்திரா கட்சியை நக்கல் செய்து சொன்ன, "மக்களே, உங்களுக்கு ஒன்றும் தெரியாது; நாம் சொல்கிறோம்; துக்ளக்குக்கு வாக்குப் போடுங்கள்; பகவத் கீதா படியுங்கள்" என்பது யாருக்காவது ஞாபகம் வந்தால், நான் பொறுப்பல்ல] இவற்றையெல்லாம் இணைய வசதியுள்ள மிடில் கிளாஸ் மாதவர்கள் தேடி எடுத்து வாசிக்க மாட்டார்களா? அதற்கு எதற்கு "நாங்கள் சொல்லித்தருகிறோம்" என்பது போல விழிப்புணர்வு ஆட்டை போடும் ஓர் இடைநிலைப்பூசாரி? ஒருவேளை இவர்களின் (ஆளுமை) இருப்பே அப்படியான இடைநிலைப்பூசாரித்தொழிலினை மையப்படுத்தித்தான் இருக்கின்றதா?

மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி என்று எட்டி நின்று எச்சில் துப்பித் திட்டிக்கொண்டிருக்கின்றோம் (ஓமோம், நானுங்கூடத்தான்). எனக்கென்னவோ அப்படியான திட்டும் செயற்பாடும் ஒரு மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி - மத்தியதட்டு உளப்பாங்காக, சிந்தையாகவே தோன்றுகின்றது. இரண்டாம் உலகப்போரின் பின்னாலான, அல்ஜீரியவிடுதலைப்போரின் பின்னாலான் சிந்தைமாற்றத்தின் விளைவாகவும் சில புள்ளிகளிலே மார்க்ஸியத்தின் போதாமையும் உள்வாங்கி நாற்பது ஆண்டுகளின் முன்னாலே மேற்குச்சிந்தனையிலே விரிந்த ஒரு பரவலான கருத்துநிலைப்பாட்டினை பத்தாண்டுகளின் முன்னாகவே -ஓரிருவர் தவிர்த்து - தமிழ்பேசும் மிடில்கிளாஸ் புத்திசீவிகள் பொறுக்கி/ஒத்தி எடுத்து கடலை வறுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆரம்பத்திலே இக்கருத்துகளை உள்வாங்கி வாழும் சூழலுக்கேற்பவும் ஓரளவுக்கு ஏற்கனவே இருந்த சிந்தைப்போக்குடன் ஊடாடிப் பார்க்கவுங்கூட ஒரு முயற்சியிருந்தது - பெரியாரியம், தலித்தியம் என்பவற்றினையும் கவனத்திலே கொண்டு. ஆனால், தற்போது இணையத்திலே பார்க்கும்போது, பலரும் இந்த பின்நவீனத்துவம், கட்டுடைப்பு போன்ற சொற்களை சும்மா இட்லிக்கு சட்னி என்பதுமாதிரியாகப் பயன்படுத்திக்கொள்வதுதான் மிடில்கிளாஸ் மெண்டாலிட்டியை விட்டு நகர்ந்திருக்கும் நிலையா? உருப்படியாக, இணையத்திலே எமது பின்நவீனத்துவப்பிரபுகள் (ஓமோம், பிரபுக்களேதான்) முன்வைத்திருக்கும் சுயசிந்தனை என்ன?

சில வேளைகளிலே எம்மைப் பெரும்புரட்சிக்காரர்கள் (அதாவது, மாற்று ஏற்பாடின் மகாபுனிதர்கள், ஓல்றனேற்றிவ் அப்போஸ்தலர்கள்) ஆக்கிக்-காட்டிக்-கொள்ள எமக்கு நாம் சார்ந்தவற்றிலே நம் பங்கினை முழுக்க மறுதலித்துக் காட்டும் தேவை ஏற்பட்டுவிடுகின்றது. இதன் விளைவே மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி என்று திட்டித்தள்ளுவது. முன்னர் பார்த்திருந்தால், நானும் இதையே நிறையச் செய்திருக்கின்றேன். இணையத்தின் குழுசார்ந்த மிதக்கும் வெளிகளிலே குறுஞ்சாமிக்குரவையும் அய்யனார் வழிபாடும் என்னைத் தக்க வைக்கும் இருப்புக்கு இப்போது தேவையில்லாததால், இதைச் சொல்வதிலே ஏதும் வெட்கமேதுமில்லை. எங்காவது அப்பர்கிளாஸோ, லோவர்கிளாஸோ இந்த மிடில்கிளாஸ்மெண்டாலிட்டி பற்றிப் பிய்த்துமேய்ந்து பிளந்துகொட்டுவதைப் பார்த்திருக்கின்றீர்களா? இதே மிடில்கிளாஸ்தான் மேய்ந்துகொட்டிக்கரிக்கின்றது. நோம் ஸோம்ஸ்கியும் பூக்கோவும் முப்பது வருடங்களுக்கு முன்னாலே என்ன பேசினார்கள் என்பதை இன்றைக்குப் பிரித்தெடுத்து நடைமுறைத்தேவைக்கின்றி "who dunnit?" ஆய்வுக்குச் செய்யும் வேலை எம்மைப் போன்ற மிடில்கிளாசுகளுக்குத்தான் இருக்கின்றது. ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ நாமும் இந்த மிடில்கிளாஸின் கூறாகவே பிறந்து கூறாகவே வளர்ந்து அதை விமர்சிப்பதிலும் அதன் கூறாகவே கிடக்கிறோம்; நடக்கிறோம்; பிளக்கிறோம். அப்படியான ஒவ்வொரு கணத்திலும் - மிடில்கிளாஸை விமர்சிப்பதிலிருந்து - மிடில்கிளாஸின் மைக்ரோ எலிமெண்ட்ஸ் நாமென்பதையே உணர்த்திநிற்கிறோம்; என்ன எமது வார்த்தைகள் - ஆ! மந்திர வார்த்தைகள்... அதற்குப் பின்னால் வருகிறேன் - எம்மை நாம் யாரென்பதை ஒளித்து விடுகின்றன; அல்லது, நாம் மிகவும் கவனமெடுத்து ஒளிக்க முயற்சித்துவிடுகிறோம் - ஒரு பெரும்பான்மைச்சமூகத்தின் முன்னால், எமது அடையாளங்கள் எமக்கு எதிராகச் செயற்படுமென்றால், அதனை ஒளித்துவிடுவதுபோல (ஒழித்து விடுவதைமட்டும் ஏனோ ஒழுங்காகச் செய்வதில்லை).

இன்னும் இரண்டு விடயங்கள் சொல்ல வேண்டியிருக்கின்றன.

ஒன்று; அதிகாரபீடங்களுக்கெதிரான விளிம்புநிலைப்போராட்டங்களும் புரட்சிகளும் அவசியமாகின்றன. ஏனென்றால், இருக்கும் சூழலிலே வாழும் வசதிக்காக ஏற்படுத்திக்கொள்ளும், வகுத்துக்கொள்ளும் விதிகளும் வரைமுறைகளும் ஒரு சாராரைப் பொதிகழுதையாக்கையிலும் சிறுசாராருக்கு சவாரிக்குதிரையாகும்போதும், இயங்கியல் உலகில் விதிகளை முறித்து, நகர்ந்த கணத்து & களத்து நிலைக்கேற்ப, புதுவிதிகளை அமைத்துக்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. அப்படியாக, மாறிக்கொள்ளாத விளிம்புநிலைகள், தம்மை மையப்படுத்து அதிகாரபீடங்களாக - தாம் ஒப்புக்கொள்ளாவிடினும் - ஆகிவிடுகின்றன. பின்திரும்பி நகர்ந்திருக்கும் பொதுவுடமைப்புரட்சி பேசிய நாடுகள் காட்டும் உண்மை இதுதான். அப்படியாக ஒத்துக்கொள்ளாதிருப்பதும் பெரும் வெட்கமல்ல; ஆனால், புரட்சி முடுக்கிலே அச்சமின்றி மூத்திரம் விடுவதற்கும் ஆசனவாயை வைத்தழுத்தவும், எதிர்ப்பின்றி உதைவாங்க + பதிலுக்குக் கடிக்கவென்ன, குறைந்தபட்சம் குரைக்கக்கூடத் திராணியற்ற சங்கிலி கட்டிய அடையாள நொண்டிநாய் ஒன்றைத் பின்நவீனத் தமிழ்மணக்கத் தேடிக்கொண்டிருப்பது கோபமும் வெறுப்பும் தருகிறது.

(நொண்டி என்பதை politically correct ஆகச் சொன்னால், இங்கே சொல்லவந்ததின் அழுத்தம் கூர்/று கெட்டுப் பாசாங்கு ஆகிவிடும் & சொல்ல வந்ததின் வேகமும் உணர்வும் வாசிப்பவர்களுக்குக் கடத்தப்படாது. சோபா சக்தியின் கொரில்லாவிலே தூசணங்கள் என்று மஹாஜனங்கள் ஒதுக்கிக்கொள்பவை இடத்துக்கேற்ப யதார்த்தமாகிப் போகையிலே ஆபாசமாகத் தோன்றவேயில்லை. "fuck you" என்று ஆத்திரத்திலே திட்டும்போது, முன்னாலிருப்பது ஆணா பெண்ணா என்பதுகூட முக்கியமற்றுப்போகிறது; இந்த Fuck You இனையும் படச்சுருளினையுங்கூட அமெரிக்கப்பெருந்திரைப்படநிறுவனங்களின் சார்பிலியங்கும் அதிகாரம்மிக்க தணிக்கைக்குழு என்ன மாதிரியாக, சுயாதீன+சிறு படக்குழுவினர்.எதிர்.பெருந்திரைப்படக்குழுவினர் என்பதை நுணுக்கி நுணுக்கி இயக்கிய ஆளை, தயாரித்த நிறுவனத்தைப் பார்த்து மட்டுமே பல சந்தர்ப்பங்களிலே வெட்டுகின்றார்கள் என்பதை This Film Is Not Yet Rated சிறப்பாக உரித்திருந்தது.

ஆனால், "எனக்கும் புரட்சி முட்டிக் கலகம் முடுக்குகிறது" என்ற வகையிலே, 'பூல்', 'யோனி', 'மூத்திரம்' தீர்மானித்து இடம்<->வலம், மேல்|கீழ் பார்த்து, -வெட்டி(யாக) ஒட்டுவதிலுங்கூடப்- போட்டுக்கொள்ளும் சிலரின் பொய்மைத்தனம் தள்ளித் துருத்தி ஆபாசமாக இளிக்கிறது. சொல்சார்கலகக்குரலும் பேச்சதிர்ச்சியலையும் முதல் அறிமுகப்பதிவேற்படுத்துதல் போல; ஒரு முறை தாக்கத்தினை ஏற்படுத்தும். அவ்வளவுதான். அவை கவனத்திருப்பு பக்கவாட்டு உத்திகள் மட்டுமேயன்றி சிந்தைசார்ந்த முன்னேற்ற நகர்த்தலுக்கான முழுமையான செயற்பாடுகள் அல்ல; சொல்லப்போனால், பேரலைச்சிதைவுகளை எதிரொலிக்கும் பூமியதிர்ச்சிகளுமல்ல
).

முனைப்பற்ற, எதிர்வினையாற்றப் பலமற்ற அதிகாரமையங்களைத் (sic) தேடித்தாக்க - அதுவும் தங்களது எடுகோள்களின் அடிப்படையிலோ, போராடுவதற்கான கள+கணவசதிகளை ஏற்படுத்தித்தரும்படி - அதிகாரம் சிதைக்கும் விளிம்புநிலை மையமாக (sic) தங்களை எவ்வகையிலே அதிகாரபீடப்படுத்துகின்றார்கள் என்பதை இவர்கள் கொஞ்சம் விலகிநின்று பார்த்திருக்கின்றார்களா? இதிலும்விட மிகவும் வருத்தமும் அபாயமும் நிறைந்தது, போகிற போக்கிலே நின்று நிதானித்து நடப்பதை அவதானித்து, உணர்ந்து பேசாமல் தர்ம அடி கொடுப்பதனாலேமட்டும், தாம் புரட்சியாளர், கலகக்காரர்கள், போராளிகள் என்ற உணர்வினைத் தமக்கும் பிரமையைப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்துகின்ற பல பின்னூட்டிகளை இம்முன்னிலைப்போராளிக்கலகக்காரர்கள் எண்ணிக்கைக்காக ஊக்குவிக்கும் தன்மை. இவற்றிற்கு உதாரணங்கள் இங்கே தனிப்பட்ட போர்களாக நீண்டு விடுமென்பதாலே பட்டியலிடமுடியவில்லை.

"உண்மைக்கு மாறாகத் திரித்தல், வதந்திகளை அப்படியே நம்பிக்கொள்ளுதல், பெற்றவற்றை உருப்பெருக்கல், தாம் தவறு என்ற உணர்ந்தவிடத்தும் அதை ஒத்துக்கொள்ளாதிருத்தல், அதற்காகத் திசைதிருப்புதல், தமக்கொரு பீடம்-பிறர்க்கொரு தரை நிறுவி வைத்திருத்தல்; தன் கருத்துக்கு மாற்றான, தன் கருத்தினைத் தவறென்று நிரூபிக்கும் கருத்துகளை மறைத்தல்" - இவை அனைத்தும் அதிகாரபீடங்களின் ஆயுதங்கள் என்றுதான் எண்ணியிருந்ததால், அவற்றை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென்றாகியிருக்கிறேன். தன்னோடு முரண்படும் அடுத்தவன் கருத்தைப் பின்னூட்டத்திலே அனுமதிக்காத ஒருவர், தணிக்கையைப் பற்றிப் பேசத் தகுதி கொண்டிருக்கின்றாரா என்பதைக்கூட நின்று கேட்கவோ, பேசவோ நிதானிக்காத பின்னூட்டிகளும் பதினைந்து நிமிடத்து வலைப்பொரிபொறிக்கு அலைதலுமாகச் சுருங்கிய நவீனத்துவம் இது. அதிகாரத்துக்கு எதிரான விளிம்புநிலைக்கலகக்காரர்கள் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள ஆசைப்படுகின்றவர்களே இப்படியான பண்புக்கூறுகளுடன் நுடங்கும்போது என்ன செய்யலாம்? ஒன்றில், இப்பண்புத்தொகுதி ஆள், அதிகாரம் சாராத பொதுப்புத்தியின் வழிப்பட்டதென்று கொள்ளவேண்டும்; அன்றில், விளிம்புநிலைக்கலகக்காரர்கள் என்று அழைத்துக்கொள்கின்றவர்களும் தம்மை ஓர் அதிகாரமையமாக்கிவிட்டார்கள் என்று எண்ணவேண்டும்.

இவர்களிலே பொய்மைத்தன்மையானவர்கள் தம்மைத் தாம் சொல்லிக்கொள்ளும் அடையாளத்தன்மை கொண்டவர்களாக நிறுவ எடுத்துக்கொள்ளுவன, பின்நவீனப்போக்குகளின் கருத்துகள் அல்ல, வெறுமனே ஆரம்பகால பின்நவீனத்துவர்களின் அடையாளங்களையே (ஆரம்பகாலப்பின்நவீனத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது; திரை விமர்சனமாகட்டும், கருத்தாகட்டும்; இவர்கள் உதாரணத்துக்கு எடுத்துகொள்கின்ற முன்மாதிரிகளின் காலத்தினை வாசிப்பவர்கள் கவனத்திலே எடுத்துக்கொள்ளவேண்டுகிறேன்). பிற்போக்கான கட்டித்த மதவாதிகளின் சடங்குகளுக்கும் அடையாளங்களுக்கும் ஒப்பானவை இவர்களுடையவை. "மம்முட்டி மிக எளிமையானவர்; இன்னமும் பீடியே பிடிக்கின்றார்" என்ற பொதுப்புத்திச்சிங்கள்டீ சினிமாரசிக(மிடில்கிளாஸ்??)மகன் வகையிலேதான் இவர்களின் சடங்குகள் ஒடுங்குகிறன; பீடி, சாரம், வீதியோரத்திலே சாயம் காய்ந்த கிழிந்த டெனிம், சொல் மயக்கம் தரும் மாந்திரீக யதார்த்தம் (இதுவும் பின்நவீனத்துவமே), குறிப்பிட்ட வலையத்துவளையத்துட் தம்மை ஏற்றி அருட்பீடத்தில் (வேண்டுமானால், பின்நவீனத்துவமாக இருள்/மருள்/தெருள் போட்டுக்க ராசா) அமர்த்தும் தேர்ந்தெடுத்த கலகக்குரல், (திருப்பித் தாக்கமாட்டாத பிள்ளைப்பூச்சி) மொன்னைக்குறிகளிலே தாக்குதல், அட மறந்தால் எப்படி...? பியர்.... கொஞ்சக்காலம் கூட்டுக்கலவி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் (ஆனால், தமிழ்நாட்டுப்பின்நவீனத்துவிகள் இந்த அடையாளம் வரைக்கும் வேண்டவில்லை... இந்த சந்(தத்)தில் ஜால்ராத்தோழிகளும் தோழர்களும் "பார்றா வேறே ஆளை" என்று புத்திசாலித்தனமாக "ஜீபூம்பா" சொல்லாமலே காணாமற்போய்விடுவார்கள் என்று பகுத்தறியும் புத்திசீவித்தனம் இவர்களுக்கு உண்டு; இவர்கள் "உன் பூல்+என் கோல்-> கல்லாச்சார ரவுடி நான்+லீனியர்பதிவு காண்" என்ற சவாடல் செயின் சுழற்றல்களுடன் மிக அவதானமாக தம் எடுத்து நின்றாடிய பாதத்திற் பீ படாமல் மடிசஞ்சி மாமாக்களுக்கும் மடிசார் மாமிக்களுக்கும் மட்டும்(கடைசிப்பின்னூடமும் சலாமாகப் போடவிடாமல்)அதிர்ச்சி கொடுத்து அவ்விடத்தோடு நின்றுகொண்டதைக் கவனிக்கவேண்டும்). "எழுபது எண்பதுகளின் பஜாமா, தாடி, சிகிரட், கவிதை, தோழர், புரட்சி, சிங்கள் ரீ" இனை இடப்பெயர்ச்சி, காலப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி செய்தது மட்டுமே இவர்களின் உன்மத்த கலையின் உன்னதம் (அல்லது 'உன்னத கலையை உன்மத்தமாக்குதல்'. விரும்பிய வரிகளை அவர்களே கருத்துச்சுதந்திரத்துடன் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும்.)

இரண்டு; சொற்கள்.எதிர்.வரிகள் (இப்படியாக, "சொற்கள்.எதிர்.வரிகள்" என்று இடையிலே "Vs." போடுவதைத் தமிழிலே அறிமுகப்படுத்தியது நாமே/நானே என்று சில பின்நவீனத்துவப்பேச்சாளர்கள் எழுதிச் சண்டைபோட்டதை ஏழெட்டு ஆண்டுகளின் முன்னாலே வாசித்திருக்கின்றேன். இவ்வளவுதான் எமது மையம் சாராத, தன்னை முன்னிலைப்படுத்தாத மிடில்கிளாஸ் மெண்டாலிட்டியை மறுதலிக்கும் போராட்டக்கலகக்குரல்களா என்று தோன்றியது). பின்நவீனத்துவத்தின் தெரிதாவும் முன்நவீனத்துவமாக ஸோம்ஸ்கியும் என்ன சொன்னார்கள் என்பது முக்கியமல்ல; அவர் உதிர்த்த சொற்களைப் பிடித்துப் பரப்புவதே தொழிலாகிவிட்ட நிலை பரந்து பட இப்போது; கிட்டத்தட்ட 'எல்லா மொழிகளுக்கும் என் மொழியே வேர்' என்று வலிந்து மொழி காணுகின்றவர்களுக்கும் இவர்களிலே பலரின் கட்டுடைத்தல், பருப்புப்புடைத்தல் செயற்பாடுகளுக்கும் வித்தியாசமிருப்பதில்லை. முடிவுகளை வைத்துக் கொண்டு வழியை வரவழைப்பதுதான் இவர்கள் செய்துகொண்டிருப்பது. சொற்கள் தனியே சொற்கள் மட்டுமே; பயன்படுத்தும் சந்தர்ப்பத்தினைப் பொறுத்தே அவற்றின் தன்மை மாறுகிறது. இதைப் புரிவதற்குக் கட்டுமானமும் வேண்டாம்; கட்டுடைப்பும் வேண்டாம்; வெறும் பகுத்தறியும் தன்மையிருந்தாலே போதும்.

உதாரணத்துக்கு எட்டு வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம். 'ஆயா', 'சூரன்', 'கோயில்', 'ராசா', 'ராத்திரி', 'ரகசியம்', 'போ', 'படு' வார்த்தைகளாக இவற்றுக்கு எக்கேடுமில்லை. எவரையும் பாதிப்பதில்லை. ஆனால், கோர்த்துப் போடும் விதமேதான் வார்த்தைகளுக்கு முழு உருவததைத் தருகின்றது; "ராசாவின் ஆயா, ராத்திரியில் ரகசியமாகக் கோயில் சூரனிடம் படுக்கப்போனா" என்று எழுதுவதற்கும் "ரகசியமாகப் படுத்திருந்த ராசா ஆயாவுடன் ராத்திரி சூரன் கோயிலுக்கு போனான்" என்று எழுதுவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல இணையப்பின்நவீனர்கள்; மேலும் 'ராசா', 'சூரன்' என்பதெல்லாம் '-/பெயரிலி.', 'பேமானி', 'ஆட்டுக்குட்டி','புண்ணாக்கு','ராசாக்கண்ணு', 'மாதவன்' என்பன போல பொதுப்படையான பெயர்களே என்பதும் தெரியாதவர்களல்ல. ஆனாலும், இவர்களுக்கு ராசாவையும் சூரனையும் தங்களிலே கண்டுகொண்டால், அழுகையும் ஆத்திரமும் வந்துவிடும்; ஆனால், மற்றப்படிக்கு, படுத்தலும் நீட்டலும் கலாச்சாரததகர்ப்பு (அது 'கலாசாரம்' என்பதுதான் சரி என்பது ஒரு விடயம்; மொழியிலே கலகத்தனம் செய்வதென்பது 'க்' போடத்தான் வேண்டுமென்றால், பார்ப்பன வடமொழியான கலாசாரத்தைவிட்டுவிட்டு, 'பண்பாடு' என்று எழுதுவதே மேல் என்று எவரும் சொல்லமுடியாது; அப்படியாகச் சொல்கிறவர்கள் 'குறியை வெட்டிப் பூலைக் கிழிக்கவேண்டிய அதிகாரபீடங்களும் கலாச்சாரக்கமிசார்களும்' ஆகிவிடுவார்கள்). ஒரு நிறுவனப்படுத்தலை, அதிகாரப்படுத்துதலைக் கலை(லாய்)க்கும் கலகத்துக்கும், சொந்த ஈகோவின் அடிப்படையிலமைந்த வல்லடி வழக்குக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல இப்படியான பின்நவீனத்துவர்களும் அவர்களின் சொல் முலையூட்டிப்பிறந்த பின்னூட்டிகளும். மிஞ்சினால், முடிந்தது, "புரியல்ல; கிழியுது; கிழிஞ்சது; கழியுது" என்று நக்கலோடு ஓடுவதுதான்; உணர்ந்து கொள்ளுங்கள், நக்கல் என்பதும் பின்நவீனத்துவத்தின் ஒரு தவிர்க்கமுடியாத கூறு - பியருக்குத் தொட்டுக்கொள்ளும் காரவடைபோல.

சாதாரண மக்கள் என்பதை இவர்கள் பயன்படுத்தும் விதமே விந்தையானது(ம் முரணானதும்); பார்த்தால், தம் தேவைக்கான பகடைக்காயாக உருட்டுவதாகத்தான் தெரியும். விபரமானவர்களே "moronகளே உங்களுக்குத் தெரியுமா?" என்றபோதும் "பொதுப்புத்தியுள்ளவர்களே கேளுங்கள்" என்று கணிப்பிரசங்கிக்கும்போதும் கீழே குனிந்து பார்த்துக் காணவேண்டிய மக்கள், தடாலென்று, (இவர்களது) கருத்துச்சுதந்திரம் (அதாவது, இன்றைய கணத்துக்கான கருத்து வசதி) வேண்டிப் 'போராடும் போது' மட்டும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டிய சகதட்டு வாயிலே பூட்டுப்போட்ட அடைக்கோழிகளாகக் குந்தியிருக்கின்றனர். சில வேளைகளிலே இவர்கள் மக்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்; அப்போது, இவர்கள் தம் அடையாளங்களை அணிந்து கொண்டு சேரிக்குப் பக்கத்திலே (டிவிக்குப் பக்கத்திலே நின்றோ, கணனிக்குப் முன்னாலே அமர்ந்தோ அல்ல) அவதானமாகக் கிழித்த ('கிழிந்த' அல்ல) பாண்டும் சட்டையும் முறையாக ஹெயார் ட்ரையர் கொண்டு வாரிக் கலைந்த கேசமும் மறக்காமல் டிசைனர் போலோரைட் சன்க்ளாசும் கொண்டு, கோடம்பாக்கத்தின் ஏழை திருப்பாச்சி, அருவாமணைக் கதாநாயகர்கள்போல, தோழர்களுடன் பாடல், படக்காட்சிகளிலே தோன்றுவார்கள். மிடில்க்ளாஸ் நாயகிகள்/ நவீனதாரிகள்/ நாதாரிகள் (பின்நவீனவழி பிடித்த பதத்தைப் பொறுக்கி(ப்) பொருத்திக்கொள்க) கண்டு கொண்டு "லல்லலா" பின்னூட்டுக.

இந்த பொதுப்புத்தி மக்களுக்கு அறிவூட்டப் பதிவு தொடங்கி கட்டுரையும் விமர்சனங்களும் நீளும்; ஆனால், இந்தப்பொதுப்புத்தி மக்கள் இவற்றை வாசித்துத் திருந்த வேண்டுமானால், முதலிலே பதிவுகளிலே உள்நுழைவதற்குப் பயப்படாமல் இருக்கும்வகையிலே பொதுப்புத்திக்காளையை மிரளவைக்காத அமைப்பு சொற்களிலேயிருக்கவேண்டுமென்ற அடிப்படை அறிவினை மறந்(றைத்)துக்கொள்வார்கள். இவர்கள் கலக்காரர்கள் என்று எவர்களுக்குக் காட்ட முடியும் என்ற அடிப்படை அடையாள அட்டையைக்கூட மறந்து விடுகின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்விதமாக, பொதுப்புத்தி மக்களுக்குப் புதுப்புத்தி கிட்டும் இடத்துக்கு பயமின்றி வந்து புதுப்புத்தி வர வசதி செய்ய விரும்பும் எல்லோரும் அதிகாரபீடத்துக்கமிசார்களாகக் கட்டுடைக்கப்பட்டுவிடுவார்கள். "எம்மிடம் குறி தாங்கமுடியாக் கேள்விகளும் முக்கும் முறையீடுகளும் முட்டும் கலகமுடுக்கலும் மட்டுமேயுண்டு; எமக்குப் பிடிக்கக்கூடிய பம்பிளிமாஸ் பதில்களைத் தாருங்கள்."(..... ங்கொய்யால!!...பாரு பாரு போமோ பாரு; பக்கத்துல மாமூ பாரு; மாமூகூட போமோ தானுடா; பீரு போட்டா மாமூகூடா போமோ தானுடா... அஜக்குகுன்னா போமோடா; குஜக்குன்னாலும் போமோதா; நா போர்னோரோடு மாமூதானுடா!! கிழிஞ்சா மாமூ டவுசர்கூட போமோதானுடா!!...மாமூ டவுசர்கூட போமோதானுடா!!.......டவுசர்ன்னா போமோடா; பவுசர்ன்னா போமோடா; ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....)

பின்நவீனத்துவமென்பது கருத்திலே அரைகுறையாகப் போனநூற்றுப்பிற்பாதிப்பிரான்சையும் எழுத்திலே அரைக்கடியாக லத்தீன் அமெரிக்காவையும் நடிப்பிலே கோடம்பாக்கத்தையும் உரு அமைப்பிலே தமிழரையும் ஒத்திக்கொண்டு ஒற்றைக்காலிலே நிற்பதுதான் எனும்வரை மாமன் - மச்சானின் விசாலத்தைச் சொல்லும் இணையக் கேள்வி-பதில் தொடர்சங்கிலியோடு புரட்சியும் கலகமும் பந்தற்புடலங்காய்போல பாரக்கல்லிழுத்து முறிந்து முடிந்து போகும். பிறகு, முட்டிக்கொண்டு வந்தால், முடுக்கைப் பார்த்துக் குந்தவேண்டியது ஒன்றுதான் மாமூ போமோ சாய்ஸ்.

நெற்போமோவின் காமப்பூரிப்பு கதையாய் அந்தப்பக்கம் விரியட்டும்; இந்தப்பக்கம் நான் முற்போக்கு நாகராஜனின் முட்டின முடுக்கையோ, பிற்போக்குச்சுப்பையரின் சூப்புற புராணத்தையோ வாசிக்கலாம்.

"...பூப் பாயலின்மே லாடவரைப்
பொலிவோ டிருத்திப் பொருள் கவரக்
காப்பாங் கச்சுதனை நீக்கும்
கனகே! நடக்கு மனப் பெடையே!
பாப்பார் மிகவுந் தனைச் சூழப்
பங்கே ருகம்போல் வைகு மிவன்
கோப்பாய் முத்துக்குமாருவென்று
சொல்லுங் குமரர் போரேறே....

....செட்டித் தேர்தெருத் தேவடியார்களுள்
மெட்டுக்காரி கனகியை மேவியோர்
தட்டுப் பட்டுத் தலைவிரிகோலமாய்
முட்டுப் பட்டனர் (மூத்திரம்) பெய்யவே...."



வலைபின்னிய நவீனத்துவமொழிகள்:
1. எழுதியவுடன் எழுத்தாளனின் வேலைப்பணி களத்தில் முடிந்துவிடுகிறது.
பின்னூட்டிகளின் மூளைப்பனி மூக்கால் வசதிக்கேற்பக் கொட்டத்தொடங்குகிறது

2.if the public bus is not comfortable,
get down and get into your own car
- as you claim you like it the best


யாராவது பின்நவீனத்துவப்பெரும்பம்மாத்து 1995 இன் பின்னால் வந்த பின்நவீனத்துவக்கருத்தைப் பற்றி இணையத்திலே எங்காவது சொந்தமாக சுயசிந்தையிலிருந்து தான் வாழும் சூழலை மையப்படுத்தி எழுதியிருந்தால், அறியத்தாருங்கள்; பூக்கோவின் பழம்பெரும்புடுக்கை அருவாமணையிலே வைத்து கட் ஒன்று, காய் ரெண்டென்று அறுத்தெறிந்து இதை இடம்பெயர்த்து இருத்தி விடலாம்.


THIS POST SHOULD NOT BE COPIED ANYWHERE WITHOUT THE PERMISSION FROM THE WRITER

Saturday, July 12, 2008

12 ஜூலை, 2008: நண்பனுக்கு எழுதிய அஞ்சலிலிருந்து...

"அடையாளக்குழப்பம் ஒருவனுக்கு வேண்டாத அலுப்பினைத் தருமென்று யார் சொன்னார்? உனக்கு வேண்டாதவர்கள் (அல்லது உன்னை வேண்டாதவர்கள்) அடையாளக்குழப்பம் கொள்கிறபோது, காணும் எதிர்வினை இருக்கிறதே.... களிப்பினைத் தரும்; காணக் கண் ஆயிரம் வேண்டும். முட்டாள்கள் எப்போதுமே தம்மை அவர்களேயென நிரூபித்துக்காட்ட ஆயிரம் முயற்சிகள் செய்வார்கள் என்ற உனது கருத்தினைக் கடைசியிலே ஒத்துக்கொள்கிறேன். இப்போது, நான் முயற்சி செய்வதில்லை என்பதுமட்டுமே என்னைப் புத்திசாலியாக்கிவிட்டதா என்பதை இன்னொரு நாள் விவாதத்துக்குத் தொலைபேசிக்காக வைத்துக்கொள்கிறேன்; கூடவே "Pattern recognization" பற்றியும் "Infomation extraction" பற்றியும் எத்துணை மனிதமூளையும் அலசுதிறனும் உண்மையைச் செறித்துப் பிரித்து உய்த்தறிவதிலிந்து வழுவலாமென்றும் விரிவாகப் பேசலாம்.

என்றோ விதைத்தது ஓய்வுகாலத்திலே இப்படியாகச் சும்மா இருந்து சுவைக்கும் சுகக்கனியாகுமென்று எண்ணியிருக்கவில்லை.

இவ்விரிவாக்கம் குறித்து, விளைவு பற்றி மகிழ்ச்சியுடனிருக்கிறேன்.முடிந்தால்,கண்டு நீயும் அதுபோல் களித்திரு.

மீதி பதில் கண்டு..."