Saturday, September 03, 2016

அரசியல்

போராட்டம் பேரிலே
புத்தகங்கள் போடுகின்றவர்களைப்
புத்தகங்கள் பேரிலே
போராட்டத்தைப் பேசுகின்றவர்கள்
பொருதுகிறனர்.

பழைய மிருகத்தைப்
புதிய மிருகம் புசித்துவிடுகிறது.

அடையாளத்தை
அடையாளம் வெல்லுகிறது.
அதிகாரத்தை
அதிகாரம் வெல்கிறது.
அரசியலை
அரசியல் வெல்கிறது.
அதிகார அடையாள அரசியலை
அதிகார அடையாள அரசியல் வெல்கிறது.

அமரும்
அனைவரும் அனைவரையும்
அவரவரிடத்தில்
அமர்த்திக்கொள்கின்றனர்.

புத்தகங்கள் பேரிலே
போராட்டத்தைப் பேசுகின்றவர்களை
போராட்டம் பேரிலே
புத்தகங்கள் போடுகின்றவர்கள்
பொருதுகிறனர்

புதியமிருகம்
பழையமிருகமாகிறது.

மிருகங்கள் பசி கொள்வன;
பசிப்பன புசிப்பன.

பசித்தார் புசித்தார்
பார்வையால் ஆனவை
கட்டப்படு பொய்யும்
கட்டித்த மெய்யும்.

காலம் கனத்து
டாலியின் தொங்கு
கடிகாரமாய்க்
கணம் சொட்டி
உருகி ஓடுகிறது
ஓயாத நிலம் பரந்து
காணா எல்லைவரை.

Friday, August 26, 2016

சேர மான் இரும் பொறை வரும்



இயக்குநர் சேரன் அண்மையிலே ‘கன்னா பின்னா’ என்ற படம் சம்பந்தப்பட்ட விழாவிலே “கன்னாபின்னா என்று ஏதாவது பேசிவிடப்போகிறேனோ?” என்று தற்கேள்வியிலே ஆரம்பித்து, இறுதியிலே திருட்டுப்படவிழியங்கள் இணையத்திலே தொங்குவதற்கு “(புலம்பெயர்)ஈழத்தமிழர்கள்தாம் காரணம்”  என்று சொல்லி, “இவர்களுக்காகத் தான் போராடியதற்காகஅருவருப்படைகின்றேன்” என்று சொல்லியிருந்தார். வலைஞ்சிகைகளுக்குப் பரபரப்புத்தலைப்பு. எதிர்பார்த்ததுபோலவே, சமூகவலைத்தளங்கள் மெல்லத்தொடங்கின – நிதானத்துடனும் நிலைதவறியும். கேட்ட பரபரப்பான வலைஞ்சிகையின் செய்தியாளருக்குச் சேரன்தொடர்ச்சியாகக் கொடுத்த விளக்கத்திலும் அவரின் சொந்தப்பாதிப்பே (C2H என்ற நிறுவனத்தினை அகிலம் தழுவிப் புலம்பெயர் ஈழத்தமிழரோடு சேர்ந்தே தொடங்கமுயன்றதாகவும் அதன் பின்னே திருட்டுத்தனமாக இணையமேற்றும் ஈழத்தமிழர் சிலராலேயே அது தடைப்பட்டதாகவும் சொன்னார்) துருத்திக்கொண்டிருந்தது. ஈழத்தமிழர் முழுப்பேரினையும் தான் குற்றம் சாட்டவில்லையென்றும் இங்கிலாந்திலுள்ள நானூறு தமிழ்க்குடும்பங்களின் நண்பர் தானென்றும் சொன்னார். அவை புரிகின்றது; ஆனால், அவரின் “ஈழத்தமிழரென்றாலே அருவருப்பாகவிருக்கின்றது” என்ற வரிகளுக்கு எவ்வித விளக்கமுமில்லை. விளக்கவும் அவராலே முடியாது.   

திருட்டுப்படவிழியங்கள்,  இணையத்திலே தொங்கும் படங்களெல்லாம் நிச்சயமாகத் கொட்டகைத்திரைப்படங்களுக்குப் பாதிப்பேதான். ஆனால், தாணு தெறி, கபாலிக்குப் பண்ணிய கூத்துகள், நடிகர்களின் கூத்துகள், தொடரும் தொலைக்காட்சிகள் இவையெல்லாம் ஊக்கிகளாகச் செயற்படுகின்றதை விபரமாகப் பேசத் திரைப்படவுலகம் சார்ந்தவர்கள் தயாரில்லை. திரைப்படவிழியங்கள் தமிழ்நாட்டிலேயே அடிக்கப்படுகின்றதையும் தொகையோடு கூடச் சேரனே சொல்கின்றார். உயூரியூப்பிலே நகைச்சுவை, பழையபடங்களுக்கு அப்பால் பெரிதாகத் தமிழ்ப்படங்கள் சார்ந்து எதையும் பார்க்காததாலே, படங்களைக் “கொள்ளை” அடித்து இணையமேற்றும் நிறுவனங்கள் எவருடையதெனத் தெரியாது. இவற்றை ஆய்ந்தவர்கள் சொல்லவேண்டிய தொகையும் அடையாளங்களும் அவை. ஆனால், உயூரியூப்பிலே ஏற்றப்படுகின்றவை எல்லா நாட்டுத்தமிழர்களினதும் கைக்காரியமாகவேயிருக்கின்றன. இதுபற்றித் தனியே விரித்துப் பேசப்படவேண்டும்.  இப்போதைக்கு விட்டுவிடலாம்.

சேரனுடன் நொந்துகொள்வதிலோ கன்னாபின்னா என்று திட்டுவதிலோ அர்த்தமில்லை. அண்மைக்காலத்திலே தனிப்பட்ட, தொழிலளவிலான காரணங்களினாலே உளவழுத்தத்திலே, பொருளாதாரமுடக்கத்திலே அவர் இருக்கின்றாரெனத் தோன்றுகின்றது. இவரை நம்பித்தான் ஈழப்போராட்டத்தையோ இழப்பின்போது ஆறுதலையோ ஈழத்தமிழர்கள் கொண்டிருப்பார்களென அவரே தன்னினைவோடிருப்பின் எண்ணமாட்டாரென நம்புகிறேன். தமிழகத்தின் கூத்தாடி என்று -பழைய இந்திய காங்கிரஸ்காரர்கள் திட்டியதுபோல- திட்டுவதிலும் நியாயமில்லை. தமிழகத்தின் அரசுக்கட்டிலேறிய கூத்தாடிகளின் அரவணைப்பினை ஏதோவொரு காலகட்டத்திலே அளவிலே குறிப்பிடத்தக்க உறுப்பினர்களைக் கொண்டிருந்த எந்த ஈழத்தமிழமைப்பும் நம்பியிருந்தது.

சேரனை நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஈழம் பற்றிய அரசியலிலே இரண்டிடத்திலே முகத்தினைமட்டும் காட்டிய சேரனின் குரலைப் பொருட்படுத்தத்தேவையில்லை என்றே எண்ணுகிறேன். . மார்க்ஸ், எஸ். வி. ராஜதுரை போன்றவர்களே சுழன்று போட்டடித்தார்கள். திமுகத்தொண்டர்கள் நாம் தமிழர்களைப் போட்டுக் குத்துகின்றோமென்று எண்ணிக்கொண்டு, கடந்த தேர்தலின்போது பண்ணாத ஈழ வரலாற்றுத்திரிப்புகளையும் ஈழத்தமிழர்மேலே கக்காத நஞ்சினையும் சேரன் செய்துவிடவில்லை. இவர்கள் அன்றுமுதலே ஈழ எதிர்ப்பினைச் செய்துவரும் தமிழகத்தின் குறிப்பிட்ட ஊடகங்கள், அவற்றின் பின்னே மறைந்துநின்று நேரடியாகத் தம் கருத்துகளைச் சொல்லத் துப்போ துணிவோ அற்றவர்கள்போலின்றி, ஈழத்தின் கருத்தியற்போராளிகள், நான்குநாட்களிலே உண்ணாவிரதத்திலே ஈழம் வாங்கிக்கொடுத்த காவலர்கள், என்று தமிழகத்திலே காட்டிக்கொண்டவர்கள். இப்படியானவர்களே பேசுகையிலே யாரோ சொன்னார்கள் என்ற உளவழுத்தத்தின் பேரிலே ஈழத்தமிழர்தாம் திருட்டுத்திரைப்படம் பரப்புகின்றார்கள் என்று சொன்ன சேரனை நொந்துகொள்வதிலே அர்த்தமில்லை.

சுப்பர் சிங்கரிலே, ஈழம் என்று ஒரு சொல் போட்டாலே,  யூரியூப்பிலே அழுது கலங்கி பகிர்ந்து நாடு கிடைத்ததுபோல பகிர்ந்துகொள்ளும் நமக்கு - அதாவது, புலம்பெயர்ந்த நமக்கு- இதெல்லாம் நீதியின் கோலினைக் கையிலே தூக்கவைக்கக்கூடாது. இலங்கையின் இலண்டன்மாப்பிள்ளை விஜயின் பிறந்தநாளுக்குப் பாடலமைத்து இசையமைத்தும் பாலாபிஷேகம் செய்யாத குறையாக இலங்கையிலேயே வாடிக்கொண்டிருக்கின்றோம். சேரனிலே உணர்ச்சிவசப்பட்டு என்னத்தை ஆகப்போகின்றது? சொந்தமாகப் பதிப்பகமோ, படநிறுவனமோ நமக்கென ஆகாதவரைக்கும், மதிப்புரைக்கும் மாண்புரைக்கும் தமிழக வர்த்த எழுத்தாளர்களை நம்பியிருக்கும்வரைக்கும் சுப்பர் சிங்கருக்கு ரொராண்டோ விமானநிலையத்திலே நின்று மாலைபோட்டு அழைத்துப்போகும்வரைக்கும் சேரனுக்கு ஈழப்போராட்டம் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் எடுத்ததுபோல, அம்மா- தங்கை செண்டிமெண்ட், கற்பழிப்பு சீன், பௌதீகவியலைமறுக்கும் சண்டைச்சூட்டுக்காட்சிகள், தேசியப்பற்று நரசிம்மாவாகத்தான் தோன்றும்; தவளை கிணற்றுக்குள்ளே தாவினால், சமுத்திரத்தை அளந்து காட்டி என்ன பயன்? கிணற்றுக்குள்ளேதான வாழ்க்கை அதற்கு.

மறுபுறம், தமிழகத்தின் "கூத்தாடிகள்", படைப்பாளிகள் வட்டத்திலே சிலர் உணர்ச்சிமயப்பட்டோ விளம்பரத்துக்காகவோ விற்பனைக்காகவோ அன்றி இன்றைக்கும் குரல்கொடுப்பதைப் பொதுப்படையாக "கூத்தாடிகள்" என்று நாம் திட்டமுன்னாலே எண்ணிப்பார்க்கவேண்டும். இதைவிட மோசமானது, சேரனின் மகளுக்குப் பேஸ்புக்கிலே துரியோதன அவையைச் சிலர் அமைக்கமுயல்வது. சேரனின் படைப்புலகம் சார்ந்த சொற்களுக்கும் அவர்மகளின், ஏன் சேரனின் சொந்த வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? இதுபோலத்தான் சிவகாமி வாய்க்குவந்ததைச் சொன்னபோது, சாதியின் அடிப்படையிலே தாக்கினோரும் தாங்கினோரும் இனவடிப்படியிலும் சாதியடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட எல்லோரையும் மீண்டுமொரு ஒடுக்கிக்காட்டினார்கள்.

நாளைக்கே சேரன் வந்து "நான் சொல்லவந்தது சரியாகச் சொற்களிலே வந்து விழவில்லை" என்று எழும்பமுயன்றால், வியப்படையத்தேவையில்லை. சொல்கின்றவர் சொன்னால், கேட்பவர்களுக்கு என்ன மதியென்றுதான் அவரிடம் அந்நேரத்திலே கேட்பேன். ஈழத்தமிழர்கள்தாமென்று சொன்னால், சொன்னவர்கள் யாரென அவர் வெளிப்படையாகச் சொல்லவேண்டும்.

ஈழத்தமிழர்கள் இப்படியாகச் சேரனைத் திட்டுவதைவிட, தமிழகத் திரைப்படத்துறையிலே, பதிப்பகத்துறையிலே இவர்போன்றவர்களிலே முதலீடு செய்கின்ற ஈழத்தின், புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை (பொருள், படைப்பு) முற்றிலும் தவிர்க்கக் கேட்பது சிறப்பானது.

தமிழகக்கூத்தாடிகளை இன்றும் வரவழைத்துக் கொண்டாடும், ஈழப்படைப்புகளை ஊக்குவிக்காது "பண்பாட்டினைப்" படங்கள், தொலைக்காட்சி, பதிப்பகங்கள், முன்னுரை, அணிந்துரையூடாக இறக்குமதி செய்து விற்பனைசெய்யும் ஈழத்துக்கு ஆதரவான புலம்பெயர்தமிழர்கள், இலங்கையரசு+இந்திய(த்துணைத்தூதரக)மேலாண்மைக்கு அடிமையான இலங்கைத்தமிழர்கள்+புலம்பெயர்பழைய ஆயுத நவீன பௌத்தப்போராளிகள் உள்ளனர். இவர்களை நோகாது, ஜெயமோகன் போன்ற காலின் கீழ் தொடந்தூரும் நச்சரவுகளை நோகாது சேரனை ஓர் இலகு இலக்காகக் கொள்கின்றோமோ?


-------
பிகு: அதெல்லாம் சரி, சேரன். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன் இறந்ததற்காக இவ்வாரம் அவருக்குப் பிடித்த பாட்டென்று, உங்கள் "பொற்காலம்" படத்திலே வரும் "தஞ்சாவூரு மண்ணெடுத்து" பாட்டை, இறப்புச்சடங்கு நினைவுகூரும் விழாவிலே போட்டார்களே! சிங்கப்பூர்த்தமிழர்களையோ சீனர்களையோ அரசினையோ திருட்டுப்பாட்டினைப் போட்டதாக நீங்கள் இன்னும் gun ஆ pin ஆ என்று சுடவோ குத்தவோவில்லையே? :-)

Friday, February 26, 2016

நுழைப்பு

இலங்கையிலே தமிழர்களிடையே இதுவரை நாள் பறை என்பது தமிழர்களின் அடையாளமாக இல்லாத நிலையிலே, அதுவேதான் தமிழர்களின் அடையாளமாக இறக்குமதி செய்யப்படுவதின் பின்னணி என்ன? இருநூறு ஆண்டுகளின் முன்னாலே பறை வடகிழக்கிலேயிருந்ததா? இதனைக் கொணர்கின்றவர்களும் கொணரப் பின்னாலிருந்து இயக்குவிக்கின்றவர்களினதும் நோக்கமென்ன? இஃது எதேச்சையாக நிகழ்வதாகத் தெரியவில்லை.


இலங்கையிலே யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்தியத்துணைத்தூதராலயம் ஹிந்தி படிப்பிக்கச் செய்வதற்கும் வடகிழக்கிலே வைஷ்ணவக்கோயில்கள் பெரிதாக எழுவதற்கும் அனுமான், ஐயப்பன் நுழைக்கப்பட்டு "இந்து" என்ற மதம் சார்ந்த பதமும் அடையாளமும் சைவத்தமிழர்களிலே திணிக்கப்படுவதற்கும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திலே ஒற்றைப்படைச்சைவ அடையாளம் வற்புறுத்தப்படுவது அதன் பின்னாலே, இந்தியாவின் மேட்டுக்குடி ஆட்சியாளர்களின் தமிழர் என்ற அடையாளத்தினை நீக்கி, இந்து(/கிறீஸ்துவம் (காண்க: கொழும்புரெலிக்ராப்பிலே ஹூலின் நிலைகுலைந்த அரட்டல்)/ இஸ்லாம் என்ற பெருமுரணைக் கொணரக்கூடிய) என்ற பேரிந்தியம் சார்ந்த அடையாளத்தினை ஏற்படுத்தும் நோக்கிருப்பதுபோல, பறை + தமிழ்ப்பௌத்தம் என்பதை நுழைப்பவர்களின் பின்னாலும், தமிழர் என்ற அடையாளத்தினை அழித்து சாதி சார்ந்து அடையாளத்தினை நுழைக்கும் சிங்களபௌத்தஒத்தோடிகளின் பின்புலமிருப்பதாக ஐயப்படுகின்றேன்.
தமிழகத்தின் ஒடுக்கப்பட்டமக்களின் பறையினை முன்வைத்த (அம்பேத்காரினை/தமிழ்ப்பௌத்தத்தினை மையப்படுத்தும்) அடையாளப்போராட்டத்திற்கும் ஈழத்திலே இதனை ஒடுக்கும் பெரும்பான்மைச்சமூகமே பௌத்தத்தின் ஒரு வன்னாயுதமாகப் பயன்படுத்தும்வேளையிலே நுழைப்பற்கும் இடையிலான வேறுபாடின் பின்னான நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும். சார்ந்த பிரதேசம், பெண்ணியம் இவைகூட, இப்படியான ஶ்ரீலங்கா அரசின் அரசியலுக்குக் காவல்விளக்குகளாக ஏந்தப்படுகின்றன.

தமிழ்நாட்டிலே தமிழ்ப்பவுத்தர்களும் பறையும் முன்வைக்கப்படுவதற்கும் இலங்கையின் வடகிழக்கிலே இவை முன்வைக்கப்படுவதற்கும் பெரிய வேறுபாடுண்டு. இலங்கையிலே ஶ்ரீலங்கா அரசே ஒடுக்கும் ஆயுதமாகப் பௌத்தத்தை வைத்திருக்கின்றது. இதனை ஆயுதமாக முன்வைக்கின்ற புலம்பெயர்தமிழ்க்குழுக்கள் ஶ்ரீலங்கா அரசின் செல்லப்பிள்ளைகள். இவற்றின் இளைய பட்டங்கள் சில நாட்டுள்ளே வளர்க்கப்படுகின்றனவோ என்று சந்தேகமுண்டு. தவிர, இந்திய அரசே இந்தியத்துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்திலே வைத்துக்கொண்டு அதன் பொறுப்பதிகாரி ஊடாக, ஹிந்தியும் "இந்து"வும் வளர்க்கின்றன என்று படுகின்றது. நம்பமுடியாத பிரமாண்ட விஷ்ணு ஆலயங்கள் வடகிழக்கிலே கட்டப்பட்டிருக்கின்றன. வைஷ்ணவமே இல்லாத ஒரு நாட்டிலே நுழைக்கப்பட்ட கொடுமை இது. அண்மையிலே ஒரு நண்பர், இக்கோவில்களுக்குப் பூசை செய்ய "அசல் ஐயங்கார்களை இந்தியாவிலேயிருந்து வரவழைக்கவேண்டும்" என்று விஷ்ணு ஆலயங்களின் தேவகர்த்தா சபை(!) தீர்மானித்திருப்பதாக யாரோ சொன்னதாகச் சொன்னார். ஆமைபுகுந்த வீடுதான்! விஷ்ணு தெய்யோக்கள் இலகுவிலே சிங்களபௌத்தர்களைக் கவரலாம் வாழ வழியின்றி உட்கிராமங்களிலே மக்கள் தடுமாறுகையிலே அங்கம் இழந்து கிடக்கையிலே என்ன இழவுக்கு இந்தப்பெரிய ஆடம்பரக்கோவில்கள். அனுமார், ஐயப்பன் என்று வேறு வானரங்கள், குந்தியிருப்பவை வந்து சேர்ந்திருக்கின்றன. சகிப்போடிருந்த சைவம் (சாதியம் உள்ளடக்கியதுதான் என்பதை மறுக்கமுடியாது) என்ற நிலை மாறி ஆர் எஸ் எஸ் கூட ஊடுருவி இந்துவாக உருமாற்றம் வந்திருக்கின்றது. தமிழ்த்திரைப்பட இறக்குமதி படைப்புகளிலும் நாளாந்தப் பேச்சு, செயற்பாடுகளிலும் நுழைந்திருக்கின்றது. தமிழ்ப்பேசும் மக்களைச் சமயத்தின் (மதத்தின்) பேரிலே உடைப்பதற்கான அடுத்த கட்டம் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றது. மொத்தத்திலே இலங்கை அரசும் இராணுவமும் நிலமும் அரசியலும் தமிழர்களுக்குத் தோற்கச் செய்திருக்கின்றன; இந்திய அரசின் தட்டிக்கொடுப்புடனான பின்வீட்டு ஊடுருவல், பண்பாட்டளவிலே முற்றாக இன்னொரு தமிழகமாநிலமாக வடகிழக்கைக் கொண்டுவந்து நிற்பதிலே வெற்றிடைந்துவிடுமோ என்ற அச்சம் மிஞ்சியிருக்கின்றது

தமிழ்நாட்டிலிருக்கும் "பறை"யடிக்கும் குழுக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான அறைதலும் அம்பேத்காரியமும் பௌத்தமும் முற்றிலும் தேவையானதும் அவசியமானதுமாகும். ஆனால், இலங்கையிலே இவர்களை அழைக்கின்றவர்களைப் பின்புறமிருந்து இயக்குகின்றவர்கள் அரசுடன் சார்ந்த "தலித்"தியத்தினை முன்வைத்து தமிழ்த்தேசியப்போராட்டத்தைப் பிளக்க முயலும் புலம்பெயர்ந்த சிலராக இருப்பார்களோ என்ற ஐயமுண்டு. ஒரு புறம் இக்குழுக்கள் பிரதேசவாதம், சாதியம் என்பவற்றினைத் தமிழ்த்தேசியத்த்திலே கஷ்டப்பட்டு இழுத்துக்கட்டி ஶ்ரீலங்கா அரசினைத் தீர்வாக முன்வைக்கின்றன. மறுபுறம் யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்தியத்தூதரகமும் இந்தியாவின் ஹிந்துதுவாகும்பலும் தமிழர் பண்பாடு என்ற பேரிலே இந்துத்துவாவைத் திணித்து, தமிழர்களை இந்துக்கள்.எதிர். கிறிஸ்தவர்கள் என்று பிரிக்க அலைகின்றன. ஏற்கனவே முஸ்லீம்கள் அந்நியப்பட்டுப் பிரிந்துபோயிருக்கும் நிலையிலே இஃது இன்னமும் சிதறடித்துத் தமிழ்ப்பேசும் மக்களின் போராட்டத்தைச் சிதறடிக்கும் நுணுக்கமான முறையே. தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துக்கு வரும் பறையறையும் தமிழ்த்தேசிய ஆதரவுக்குழுக்கள், அழைப்பவர்களின் பின்னணி எதுவெனத் தெரிந்து கொண்டு வருவது/செல்வது எல்லோருக்கும் நலம் பயக்குமல்லவா?

இவற்றிடையே ஒரு நொடிந்த போராளியின் வறுமை/உடற்குறைபாட்டுப்படத்தைப் போட்டுவிட்டு அனைத்தும் தமிழ்த்தேசியம் என்பதாலே வந்தது என்பதுபோலவும் "காசைச் சுருட்டியவர்களே நீங்கள் எங்கே?" என்பது போலவும் குரலையெழுப்புகின்றவர்களின் பின்நிற்கும் அரசியல் எது? குரலையெழுப்புகின்றவர்கள், இந்நொடிந்த போராளிக்கு இச்செய்திப்பகிர்வுக்கு அப்பாலே செய்ததுதான் என்ன? சத்தமின்றிச் செய்துவிட்டுக் கேள்விகள் எவரையுமே கேட்காதிருப்பவர்கள் இருக்கக்கூடும் என்ற இடைவெளியைக்கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. அண்மையிலே இப்படியாகப் படத்தைப் போட்டுவிட்டுக் கேள்வியை எழுப்பிய புலம்பெயர்ந்தார் ஒருவர், 2009 இலே வன்னியிலே கொத்துக்கொலைகள் நடந்தமுடிந்தபின்னாலே,பறந்து வந்து மகிந்தவுடன் நின்று குழுப்படம் பிடித்துக்கொண்டவர். காசைச்சுருட்டுவது பற்றிக் கேட்கும் இவர்களிலே பலருக்கு இப்படியாக அங்குமிங்கும் பறப்பதற்கும் தரை தட்டுவதற்கும் எங்கிருந்து காசு வருகின்றதென்று கேட்கமுடியாது. வரியும் வாலும் சுட்டுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த பதில்வழி.

இவர்களின் வழிமுறைகள் இலகுவாகச் சொன்னால் மூன்று:

1. இவர்களின் செயற்பாடுகளிலே, ஶ்ரீலங்கா/இந்திய அரசுகளின் தமிழ்ப்பேசும் மக்கள் சார்ந்த செயற்பாடுகளிலே கேள்வி வைப்பவர்களை "பாசிஸ்டுகள்", "புலிவால்கள்", "பினாமிகள்", "சாதியம் பேணுகின்றவர்கள்", "போர்விரும்பிகள்", "பெண்ணொடுக்குவாதிகள்" என்று மீண்டும் மீண்டும் ஆதாரமின்றி சொல்லி, பகிர்ந்து கேள்விகேட்பவர்களின் ஆளுமைகளைச் சிதைப்பது.

2. தொடர்ச்சியாக அரசியல்/இராணுவ ரீதியிலே ஶ்ரீலங்காவின் "நல்லாட்சி" ஒடுக்குமுறையிலும் பண்பாட்டு ரீதியிலே "இந்தியாவின் அத்தனை அமைப்பு" பின்வழி ஊடுருவல்களிலும் கேள்வி எழுப்புகின்றவர்களை ஈழத்திலே போரினைக் கொணரவும் இருப்புகளைக் கெடுக்கவும் முயல்கின்றவர்களாகவும் பரப்புரை செய்வது. தமிழ்த்தேசியத்தினை ஒற்றைப்படையாகவும் தட்டையாகவும் காட்டுவது. சமூகத்திலே நிலவும் அனைத்துக்கெடுதல்களுக்கும் தமிழ்த்தேசியமும் அதன் நோக்கான சுயநிர்ணயக்குரலெழுப்பலுமே காரணம் என்று மாட்டை மரத்திலே கட்டிமுடிக்கும் அழுக்குச்செயற்பாடு.

3. மதின்மேற்பூனைகளைத் தொடர்ந்து நைச்சியப்பேச்சாலும் திரைபாவிய பயமுறுத்தலாலும் அடையாளப்படுத்தலாலும் உள்ளிழுத்துக்கொண்டு, அவற்றை வைத்தே திரும்ப அவை சூழ்ந்த சமூகத்தினை கலைஇலக்கியத்தாலும் அதன்பின்னான அரசியலாலும் அடிப்பது. இலங்கைத்தமிழ் -புலம்பெயர்ந்த/நிலம்வாழ்கின்ற- எழுத்தாளர்களிடையே ஒப்பீட்டினைச் செய்கின்றவர்கள் இலங்கையிலிருப்பினும் இந்தியாவிலேயிருப்பினும் புலம்பெயர்நாடுகளிலேயிருப்பினும் ஈழநிலத்தைக் காயப்படுத்திக்கொண்டேயிருக்கின்ற சுயதேவை, சுயதேசியங்கள் கொண்டவர்கள்தாம். இவர்களைவிட மோசமானவர்கள் இவர்கள் இருவரையும் வேறிருவருடன் ஒப்பிட்டு, அடித்து அடுத்த இருவர்களின் காவியங்களைப் பேசாதவர்களையெல்லாம் மோசமானவர்களென்று முடிக்கின்றவர்கள்.

இப்படியாகவே ஒரு குழப்பகரமான சூழலைத் தொடர்ந்து வடகிழக்கிலங்கையிலே தக்கவைத்திருப்பவர்களின் செயற்பாடுகள் எதேச்சையானவையோ சுயமானவையோ அல்ல; உள்ளூர் வெளியூர்ப்பெரியண்ணர்சின்னக்காக்களின் கக்காவிளையாட்டுகளின் திட்டமிட்ட நகர்வே.