Friday, August 26, 2016

சேர மான் இரும் பொறை வரும்இயக்குநர் சேரன் அண்மையிலே ‘கன்னா பின்னா’ என்ற படம் சம்பந்தப்பட்ட விழாவிலே “கன்னாபின்னா என்று ஏதாவது பேசிவிடப்போகிறேனோ?” என்று தற்கேள்வியிலே ஆரம்பித்து, இறுதியிலே திருட்டுப்படவிழியங்கள் இணையத்திலே தொங்குவதற்கு “(புலம்பெயர்)ஈழத்தமிழர்கள்தாம் காரணம்”  என்று சொல்லி, “இவர்களுக்காகத் தான் போராடியதற்காகஅருவருப்படைகின்றேன்” என்று சொல்லியிருந்தார். வலைஞ்சிகைகளுக்குப் பரபரப்புத்தலைப்பு. எதிர்பார்த்ததுபோலவே, சமூகவலைத்தளங்கள் மெல்லத்தொடங்கின – நிதானத்துடனும் நிலைதவறியும். கேட்ட பரபரப்பான வலைஞ்சிகையின் செய்தியாளருக்குச் சேரன்தொடர்ச்சியாகக் கொடுத்த விளக்கத்திலும் அவரின் சொந்தப்பாதிப்பே (C2H என்ற நிறுவனத்தினை அகிலம் தழுவிப் புலம்பெயர் ஈழத்தமிழரோடு சேர்ந்தே தொடங்கமுயன்றதாகவும் அதன் பின்னே திருட்டுத்தனமாக இணையமேற்றும் ஈழத்தமிழர் சிலராலேயே அது தடைப்பட்டதாகவும் சொன்னார்) துருத்திக்கொண்டிருந்தது. ஈழத்தமிழர் முழுப்பேரினையும் தான் குற்றம் சாட்டவில்லையென்றும் இங்கிலாந்திலுள்ள நானூறு தமிழ்க்குடும்பங்களின் நண்பர் தானென்றும் சொன்னார். அவை புரிகின்றது; ஆனால், அவரின் “ஈழத்தமிழரென்றாலே அருவருப்பாகவிருக்கின்றது” என்ற வரிகளுக்கு எவ்வித விளக்கமுமில்லை. விளக்கவும் அவராலே முடியாது.   

திருட்டுப்படவிழியங்கள்,  இணையத்திலே தொங்கும் படங்களெல்லாம் நிச்சயமாகத் கொட்டகைத்திரைப்படங்களுக்குப் பாதிப்பேதான். ஆனால், தாணு தெறி, கபாலிக்குப் பண்ணிய கூத்துகள், நடிகர்களின் கூத்துகள், தொடரும் தொலைக்காட்சிகள் இவையெல்லாம் ஊக்கிகளாகச் செயற்படுகின்றதை விபரமாகப் பேசத் திரைப்படவுலகம் சார்ந்தவர்கள் தயாரில்லை. திரைப்படவிழியங்கள் தமிழ்நாட்டிலேயே அடிக்கப்படுகின்றதையும் தொகையோடு கூடச் சேரனே சொல்கின்றார். உயூரியூப்பிலே நகைச்சுவை, பழையபடங்களுக்கு அப்பால் பெரிதாகத் தமிழ்ப்படங்கள் சார்ந்து எதையும் பார்க்காததாலே, படங்களைக் “கொள்ளை” அடித்து இணையமேற்றும் நிறுவனங்கள் எவருடையதெனத் தெரியாது. இவற்றை ஆய்ந்தவர்கள் சொல்லவேண்டிய தொகையும் அடையாளங்களும் அவை. ஆனால், உயூரியூப்பிலே ஏற்றப்படுகின்றவை எல்லா நாட்டுத்தமிழர்களினதும் கைக்காரியமாகவேயிருக்கின்றன. இதுபற்றித் தனியே விரித்துப் பேசப்படவேண்டும்.  இப்போதைக்கு விட்டுவிடலாம்.

சேரனுடன் நொந்துகொள்வதிலோ கன்னாபின்னா என்று திட்டுவதிலோ அர்த்தமில்லை. அண்மைக்காலத்திலே தனிப்பட்ட, தொழிலளவிலான காரணங்களினாலே உளவழுத்தத்திலே, பொருளாதாரமுடக்கத்திலே அவர் இருக்கின்றாரெனத் தோன்றுகின்றது. இவரை நம்பித்தான் ஈழப்போராட்டத்தையோ இழப்பின்போது ஆறுதலையோ ஈழத்தமிழர்கள் கொண்டிருப்பார்களென அவரே தன்னினைவோடிருப்பின் எண்ணமாட்டாரென நம்புகிறேன். தமிழகத்தின் கூத்தாடி என்று -பழைய இந்திய காங்கிரஸ்காரர்கள் திட்டியதுபோல- திட்டுவதிலும் நியாயமில்லை. தமிழகத்தின் அரசுக்கட்டிலேறிய கூத்தாடிகளின் அரவணைப்பினை ஏதோவொரு காலகட்டத்திலே அளவிலே குறிப்பிடத்தக்க உறுப்பினர்களைக் கொண்டிருந்த எந்த ஈழத்தமிழமைப்பும் நம்பியிருந்தது.

சேரனை நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஈழம் பற்றிய அரசியலிலே இரண்டிடத்திலே முகத்தினைமட்டும் காட்டிய சேரனின் குரலைப் பொருட்படுத்தத்தேவையில்லை என்றே எண்ணுகிறேன். . மார்க்ஸ், எஸ். வி. ராஜதுரை போன்றவர்களே சுழன்று போட்டடித்தார்கள். திமுகத்தொண்டர்கள் நாம் தமிழர்களைப் போட்டுக் குத்துகின்றோமென்று எண்ணிக்கொண்டு, கடந்த தேர்தலின்போது பண்ணாத ஈழ வரலாற்றுத்திரிப்புகளையும் ஈழத்தமிழர்மேலே கக்காத நஞ்சினையும் சேரன் செய்துவிடவில்லை. இவர்கள் அன்றுமுதலே ஈழ எதிர்ப்பினைச் செய்துவரும் தமிழகத்தின் குறிப்பிட்ட ஊடகங்கள், அவற்றின் பின்னே மறைந்துநின்று நேரடியாகத் தம் கருத்துகளைச் சொல்லத் துப்போ துணிவோ அற்றவர்கள்போலின்றி, ஈழத்தின் கருத்தியற்போராளிகள், நான்குநாட்களிலே உண்ணாவிரதத்திலே ஈழம் வாங்கிக்கொடுத்த காவலர்கள், என்று தமிழகத்திலே காட்டிக்கொண்டவர்கள். இப்படியானவர்களே பேசுகையிலே யாரோ சொன்னார்கள் என்ற உளவழுத்தத்தின் பேரிலே ஈழத்தமிழர்தாம் திருட்டுத்திரைப்படம் பரப்புகின்றார்கள் என்று சொன்ன சேரனை நொந்துகொள்வதிலே அர்த்தமில்லை.

சுப்பர் சிங்கரிலே, ஈழம் என்று ஒரு சொல் போட்டாலே,  யூரியூப்பிலே அழுது கலங்கி பகிர்ந்து நாடு கிடைத்ததுபோல பகிர்ந்துகொள்ளும் நமக்கு - அதாவது, புலம்பெயர்ந்த நமக்கு- இதெல்லாம் நீதியின் கோலினைக் கையிலே தூக்கவைக்கக்கூடாது. இலங்கையின் இலண்டன்மாப்பிள்ளை விஜயின் பிறந்தநாளுக்குப் பாடலமைத்து இசையமைத்தும் பாலாபிஷேகம் செய்யாத குறையாக இலங்கையிலேயே வாடிக்கொண்டிருக்கின்றோம். சேரனிலே உணர்ச்சிவசப்பட்டு என்னத்தை ஆகப்போகின்றது? சொந்தமாகப் பதிப்பகமோ, படநிறுவனமோ நமக்கென ஆகாதவரைக்கும், மதிப்புரைக்கும் மாண்புரைக்கும் தமிழக வர்த்த எழுத்தாளர்களை நம்பியிருக்கும்வரைக்கும் சுப்பர் சிங்கருக்கு ரொராண்டோ விமானநிலையத்திலே நின்று மாலைபோட்டு அழைத்துப்போகும்வரைக்கும் சேரனுக்கு ஈழப்போராட்டம் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் எடுத்ததுபோல, அம்மா- தங்கை செண்டிமெண்ட், கற்பழிப்பு சீன், பௌதீகவியலைமறுக்கும் சண்டைச்சூட்டுக்காட்சிகள், தேசியப்பற்று நரசிம்மாவாகத்தான் தோன்றும்; தவளை கிணற்றுக்குள்ளே தாவினால், சமுத்திரத்தை அளந்து காட்டி என்ன பயன்? கிணற்றுக்குள்ளேதான வாழ்க்கை அதற்கு.

மறுபுறம், தமிழகத்தின் "கூத்தாடிகள்", படைப்பாளிகள் வட்டத்திலே சிலர் உணர்ச்சிமயப்பட்டோ விளம்பரத்துக்காகவோ விற்பனைக்காகவோ அன்றி இன்றைக்கும் குரல்கொடுப்பதைப் பொதுப்படையாக "கூத்தாடிகள்" என்று நாம் திட்டமுன்னாலே எண்ணிப்பார்க்கவேண்டும். இதைவிட மோசமானது, சேரனின் மகளுக்குப் பேஸ்புக்கிலே துரியோதன அவையைச் சிலர் அமைக்கமுயல்வது. சேரனின் படைப்புலகம் சார்ந்த சொற்களுக்கும் அவர்மகளின், ஏன் சேரனின் சொந்த வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? இதுபோலத்தான் சிவகாமி வாய்க்குவந்ததைச் சொன்னபோது, சாதியின் அடிப்படையிலே தாக்கினோரும் தாங்கினோரும் இனவடிப்படியிலும் சாதியடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட எல்லோரையும் மீண்டுமொரு ஒடுக்கிக்காட்டினார்கள்.

நாளைக்கே சேரன் வந்து "நான் சொல்லவந்தது சரியாகச் சொற்களிலே வந்து விழவில்லை" என்று எழும்பமுயன்றால், வியப்படையத்தேவையில்லை. சொல்கின்றவர் சொன்னால், கேட்பவர்களுக்கு என்ன மதியென்றுதான் அவரிடம் அந்நேரத்திலே கேட்பேன். ஈழத்தமிழர்கள்தாமென்று சொன்னால், சொன்னவர்கள் யாரென அவர் வெளிப்படையாகச் சொல்லவேண்டும்.

ஈழத்தமிழர்கள் இப்படியாகச் சேரனைத் திட்டுவதைவிட, தமிழகத் திரைப்படத்துறையிலே, பதிப்பகத்துறையிலே இவர்போன்றவர்களிலே முதலீடு செய்கின்ற ஈழத்தின், புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை (பொருள், படைப்பு) முற்றிலும் தவிர்க்கக் கேட்பது சிறப்பானது.

தமிழகக்கூத்தாடிகளை இன்றும் வரவழைத்துக் கொண்டாடும், ஈழப்படைப்புகளை ஊக்குவிக்காது "பண்பாட்டினைப்" படங்கள், தொலைக்காட்சி, பதிப்பகங்கள், முன்னுரை, அணிந்துரையூடாக இறக்குமதி செய்து விற்பனைசெய்யும் ஈழத்துக்கு ஆதரவான புலம்பெயர்தமிழர்கள், இலங்கையரசு+இந்திய(த்துணைத்தூதரக)மேலாண்மைக்கு அடிமையான இலங்கைத்தமிழர்கள்+புலம்பெயர்பழைய ஆயுத நவீன பௌத்தப்போராளிகள் உள்ளனர். இவர்களை நோகாது, ஜெயமோகன் போன்ற காலின் கீழ் தொடந்தூரும் நச்சரவுகளை நோகாது சேரனை ஓர் இலகு இலக்காகக் கொள்கின்றோமோ?


-------
பிகு: அதெல்லாம் சரி, சேரன். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன் இறந்ததற்காக இவ்வாரம் அவருக்குப் பிடித்த பாட்டென்று, உங்கள் "பொற்காலம்" படத்திலே வரும் "தஞ்சாவூரு மண்ணெடுத்து" பாட்டை, இறப்புச்சடங்கு நினைவுகூரும் விழாவிலே போட்டார்களே! சிங்கப்பூர்த்தமிழர்களையோ சீனர்களையோ அரசினையோ திருட்டுப்பாட்டினைப் போட்டதாக நீங்கள் இன்னும் gun ஆ pin ஆ என்று சுடவோ குத்தவோவில்லையே? :-)

No comments: