Wednesday, July 16, 2008

நுகத்தடிகளின் விருப்பப்படியே தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்

மிகவும் யோசித்துத்தான் இதை எழுதுகிறேன். உணர்ச்சிமயப்பட்டோ அல்லது பரிதாபகரமான "போகாதே போகாதே" பூ, கற்களையோ (சகதமிழ்மணம் நிர்வாகிகள் உட்பட) எதிர்பார்த்தோ நிச்சயமாக எழுதவில்லை. முதலிலேயே அதைத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது.

தமிழ்மணம் திரட்டியின் செயற்பாட்டிலிருந்து விலகியிருக்கலாமென்று எண்ணுகிறேன். இஃது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மணத்தின் சகநிர்வாகநண்பர்களிடம் தனிப்பட உள்ளிருந்து இயங்கும் அழுத்தத்தின் காரணமாகச் சொன்னதே. அவர்கள் மறுத்ததின்பின்னால், தொடர்ந்தும் நீடித்தேன். அதன்பின்னால், என் செயற்பாடுகள், சும்மா பெயருக்குத் தமிழ்மணம் திரட்டியிலே இருப்பதாலேயே சகதமிழ்மணம் நண்பர்கள் பெற்ற, பெற்றுக்கொள்ளும் தொல்லைகள் குறைவில்லையென்பதே கண்கூடு. தமிழ்மணம் திரட்டிக்கு வெளியிலிருந்து டிஎம்ஐயின் அங்கத்துவனாக வேறெந்த வேலையைச் செய்வதாயினும் எனக்குச் சங்கடமில்லை. ஆனால், தமிழ்மணத்திரட்டியின்மீது சும்மா ஒப்புக்கு என் பெயர் இருந்தாலும், தமிழ்மணத்தையும் என்னையும் தாக்கும்போக்கு இந்த வட்டாரத்திலே இருந்துகொண்டேயிருக்கும். பதிவர்களுக்கும் நான் சுருக்கமாக விலகிக்கொள்கிறேன் என்பதை நானே சொல்லிவிடலாம். கடந்த ஒரு மணிநேரத்தின்முன்னரேமட்டும் தமிழ்மணம் நண்பர்களுக்கு அஞ்சல் அனுப்பிவிட்டு, அவர்களின் எதிர்வினை வருமுன்னரே, பொறுப்பின்று இங்கே பகிரங்கமாக எழுதுவதற்கு அவர்கள் மன்னிக்கவும். புரிந்துகொள்வீர்களென்று நினைக்கிறேன். நான் பெண்ணில்லாததாலே, நான் தமிழ்மணம் திரட்டிக்கு வெளியே போகிறேன் என்று நானே தீர்மானித்துக்கொண்டதற்காக, உங்களின்மேலே ஒரு கழுகும் மொய்க்காது என்று மகிழ்ச்சியடையுங்கள் :-). வேடிக்கையை விட்டுச் சொன்னால், பொறுப்பின்றித் தடாலடி விலகுவது முறையற்றதுதான். ஆனால், என் பெயருக்காக, நீங்களும் ஏன் சேர்ந்து அடிவாங்கவேண்டும்? விளக்கம் கொடுத்துக்கொண்டேயிருக்கவேண்டும். தமிழ்மணம் திரட்டி என்ற அளவிலே எதையுமே நான் இவ்வாண்டு உருப்படியாகச் செய்ததில்லை. அதனால், ஓட்டை விழுந்து ஆறு வற்றப்போவதில்லை.

இது பயந்து ஓடும் செயற்பாடில்லை; சோர்ந்துபோகும் செயற்பாடுமில்லை; தமிழ்மணத்திலே இணையும்போது, தமிழ்மணத்தினை நடத்தும் ஒவ்வொருவரையும் போலவே எனக்கும் இங்கே எருமைத்தோல் தேவையென்று நிச்சயமாகத் தெரியும். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னே soc.culture..... usernets இலே பெற்ற பயிற்சி எருமைத்தோலாகவிருக்கப்போதும். ஆனால், தொடர்ச்சியாக எதற்குத் தமிழ்மணம் திரட்டிக்கு அடிக்க நான் இருப்பதே வசதியான காரணமாக வேண்டும்?

ராஜாவனஜ் போன்ற அருமையான பகுத்தறியும் பொதுவுடமைத்தோழர்கள் அவர்களின் தோழி தமிழச்சியை நீக்கியபின்னால், தமிழ்மணத்திடம் என்னை நிர்வாகப்பொறுப்பிலிருந்து விலக்கக் கேட்டிருந்ததை முன்னரே இணைத்திருந்தேன். ஓரிடத்துக்குப் பலமாகவிருப்பதே செய்யும் சேவையிலே சிறப்பு - பலகீனமாகவிருப்பதல்ல. இப்போது ராஜாவனஜ், ஸ்டாலின் போன்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் எனறு நம்புகிறேன்.

குறிப்பிட்ட என்னை இவர்கள் வெறுப்பதற்குக் காரணம் - உண்மையை வெளிப்படையாகச் சொல்லப்போனால் - நான் தமிழகத்தமிழன் இல்லையென்பதுதான் என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது. ஈழத்தமிழன் என்று கணமும் யோசிக்காமல், என்னைத் தாங்கி நிற்கும் தமிழகநண்பர்களை எல்லா வலைப்பதிவாளர்களுமே காணக்கூடியதாக இருக்கும் அதே நேரத்திலே, என்னைத் தாக்குகின்றவர்களுக்கு நான் ஈழத்தமிழனாக இருப்பதே வசதியாகிப் போய்விட்டது. என்னை நேரடியாகவோ ஏதோ விதத்திலோ சந்திக்கவேண்டிய அவசியம் இப்படியானவர்களுக்கு இல்லை. நான் எனது குடும்பம் தமிழகத்திலே கொண்ட ஈழத்தமிழனோ, மூன்றாண்டுக்கொரு முறை தமிழகத்துக்குப் போய்வரும் ஈழத்தமிழனோ அல்ல. என்னை நேர்கொண்டு சந்திக்கவேண்டிய கட்டாயமோ தேவையோ இவர்களுக்கும் மறுதலையாக எனக்குமில்லை. போட்டுச் சாத்துவதாலே இவர்களுக்கு ஏதும் நட்டமில்லை. இவர்களுக்கும் ஸ்ரீலங்கன்பாஸ்போர்ட்டோடுதானே நாட்டைவிட்டுப்போயிருக்கின்றீர்கள் என்பவர்களும் என்னைப் பொறுத்தமட்டிலே அதிக வித்தியாசமில்லை. இவர்களைப் போலவே குணம் கொண்ட பல ஈழத்தமிழர்களையும் கண்டிருக்கின்றேன். இவர்களுக்கும் இவர்கள் முரண்டுபிடித்துக்கொள்ளும் பார்ப்பனியசக்திகளுக்கும் தளம் வேறு என்பதைத் தவிர ஏதும் வித்தியாசமில்லை. பழைய புளொட் நண்பர் ஒருவர் கூறியதுபோல, "விடுதலைப்புலிகள் பாசிசம் நிறைந்தவர்கள் என்று குற்றம் சாட்டும் இதே இயக்கங்கள்தான் ஐபிகேப் வந்து தமக்கு அதிகாரம் கிடைத்தபோது அவர்களைவிட மோசமாகப் பாசிசத்தைச் செயற்படுத்தினார்கள்." இப்போது ஊடக அதிகாரத்திலிருக்கும் பார்ப்பனிய சக்திகளை இந்தச் சகதிகள் இடம்பெயர்த்தால், அதைவிட மோசமாக இந்த நவபார்ப்பனியசகதிகள் செயற்படுவார்கள் என்பதிலே இத்துணை கண்டபின்னால், இன்றைக்கு எனக்கேதும் சந்தேகமில்லை. வலதுசாரிகள் எல்லாப்பொந்துகளிலிருந்தும் தாம் வலதுசாரிகள் இல்லை என்று சொல்லிக்கொண்டே வெளிவருவார்கள்.

தமிழ்மணம் திரட்டியின் நலன் கருதியேனும், நான் ஒதுங்கியிருக்கவிரும்புகிறேன். லக்கி லுக், தமிழச்சி, சுகுணா திவாகர், ஓசை செல்லா, பொட்"டீ"கடை, செந்தழல் ரவி, இரவுக்கழுகுகள், அவர்களுடைய நுகத்தடிகள், நெம்புகோல்களும் அவர்களுக்கும் ஈழத்தமிழருக்கும் எதிரான பார்ப்பனிய சக்திகளும் இனியேனும் புதிய ஈழத்துத்தட்டுக்கழுவும் வேட்டைப்பன்றியைத் தேடட்டும்.

இவர்களைப் போன்றவர்களை வாழ்த்துவதே இவர்களுக்கு வாழ்த்துப்பின்னூட்டமிடுகின்றவர்களுக்கான தண்டனை என்ற மகிழ்ச்சியை மட்டும் என்னோடு தக்க வைத்துக்கொள்கிறேன். விலகுவதால், தமிழ்மணம் திரட்டியிலே மீண்டும் என் பதிவினை இணைக்கலாமென்றும் தோன்றுகிறது.

இந்தப்புரட்சிப்போராளிகளின் நக்கல்கள், விக்கல்கள் வழக்கம்போல வளரட்டும். அதேநேரத்திலே, இவர்களினைத் தம் சொந்த வர்க்க/கன/அடுக்கு நலன் கருதி எதிர்ப்பதற்காக மட்டுமே என்னைத் தூக்கிப்பிடிக்கப்போகும் மக்களையும் மற்றோர் அடையாளம் கண்டுகொள்ளட்டும்.

I appreciate if no person will link this post to his/her site/"collection"/"archives". thank you very much.