Sunday, September 11, 2005

புனைவு - 25


தொழிலகத்திலிருந்து பதினைந்து இருபது நிமிடங்கள் மாலைவெயிற்கசகசப்பிலே நடக்கவேண்டும்; நடந்தான். பிறகு, தொடர்வண்டியில் நெருக்கடிக்கேற்ப நின்றோ இருந்தோ முப்பத்தைந்து நிமிடங்கள் வரவேண்டும்; வந்தான். இறங்குநிலையத்திலிருந்து, வீட்டுக்கு, பத்து நிமிட நடை; நடந்து வந்து, கடிதங்களைப் பெட்டியிலே பொறுக்கிக்கொண்டு கதவைத் திறந்தான்.

குழந்தை கெக்கட்டமிட்டுக்கொண்டு கையை விரித்துக்கொண்டு ஓடிவந்தது; தூக்கிக்கொண்டான். தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.நிகழ்ச்சியின் பின்புலம் தொடர்பான மூன்று தகவல்களை மனைவியிடம் தெரிவித்தான்:- செந்நாய்க்குக் குரல் கொடுப்பது இன்னார்; இத்தொடர்நிகழ்ச்சி தயாரிக்கத் தொடங்கின ஆண்டு & முடிந்த ஆண்டு; இத்தொடரின் சிறந்த அங்கங்கள். குழந்தை தாயிடம் மீளத் தாவியது. தோட்பையை ஓரமாகப் போட்டான்; முகப்பிலேயே முழுவதும் தெரியும் கடன், எரிபொருட்கணக்குவழக்குகளுடனான உப்புச்சப்பறுகடிதங்களைப் பிரிக்காமலே மனைவியிடம் நீட்டினான்; இடது இடுப்புக்குக் குழந்தையை மாற்றிக்கொண்டு, 'இதுக்கெல்லாம் நான்' என்பது வெளிப்பட்ட தலையசைப்புடன் வலக்கையால் வாங்கிக்கொண்டாள்.

மீதியாய்க் கைக்கிடந்த இன்னோரன்ன விளம்பரங்களைக் கட்டிலிலே பரப்பி வாசித்துக்கொண்டு உடையை மாற்றினான்; ஊரிலே விபத்துகளுக்கான சட்டத்தரணியின் தொழில்மேசை, விளம்பரத்திலே வேறொரு கோணத்திலே படமாகத் தரப்பட்டிருந்தால், எடுப்பாயிருந்திருக்கலாமெனத் தோன்றியது. விளம்பரங்களைக் கசக்கிக் காலால் அழுத்தித் திறந்த குப்பைக்கூடைக்குள்ளே போட்டபோது, உள்ளே கிடந்த நேற்றைய விளம்பரமொன்றிலே வாசிக்காமல் விட்ட ஒரு குறிப்பு கன்ணிலே பட்டது; 'பரீஸுக்கும் பிரெஸில்ஸுக்கும் குறிப்பிட்ட முகவரூடாக விமானச்சீட்டுக்கு ஒரே தொகைதானெனத் தெரிந்துகொண்டான். தான் கழற்றித் தோளிலே தொங்கிய உடுப்புகளை ஒரு முறை உதறிக் கொண்டு இரண்டாக மடித்து, அலுமாரிக்குள்ளே தொங்கப்போட்டான். சுவரலுமாரிக்கதவுச்சக்கரங்களில் ஒன்று உருள மறுத்தது. தூக்கி வைத்தான்; நிமிர்ந்தபின்னும், உள்ளங்கைகளிலே சமாந்திரக்கோடுகளாகப் பாரம் உறுத்தியது. இந்த உறுத்தும் உணர்வுக்கு அறிவியல்ரீதியான காரணம்...

குளியலறைக்குப் போகும் வழியிலே செல்பேசியை மூடியபின்னான கடந்த இருபது நிமிடங்களிலான உலகநடப்புமாற்றங்களைப் படுக்கையறைக்குள்ளேயிருந்த கணணியூடாக, சில நிமிடங்கள் உந்தலோடு அறிந்துகொண்டான்; தெற்காசியாவிலே ஒரு சின்ன நிலநடுக்கம் - 6.7 ரிட்சர் அளவு; கௌதமாலாவில்....

திருப்தி; நிமிர்ந்து, குளிக்கப்போவதை உரத்துச் சொல்ல, குழந்தை கெக்கட்டமிட்டுச் சிரித்தபடி ஓடிவந்தது. அதன் கைகளும் கால்களும் ஓடுகையிலே எப்படியாக சமநிலையைப் பேண முயல்கின்றதென்பதை அவதானித்தபடி, தூக்கிக்கொண்டான். குழந்தை தன் முகத்தை அவன் முகத்தோடு தேய்த்த அடுத்த கணத்திலேயே அவன் முகத்தினைத் தள்ளிவிட்டு, அம்மா இருக்கும் திசையைக் காட்டி, "ங்கா" என்றது; தாயைக் கண்டு தாவியது; அவர்கள் அந்தப்புறம்போக, இவன் குளியலறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டான்.

குளியலறை முகம்பார்க்கும்கண்ணாடிக்குள்ளே மாலைவெயிலிலே அவன் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் எடுப்பாகத் தோன்றியதாகப் பட்டது; இன்றைக்குமட்டும் தொழில்நிலையத்தலைமைக்குத் தெரியாத ஆறு... இல்லை... ஏழு விடயங்களைச் சுட்டிக் காட்டப் பாராட்டு - குறிப்பாக, மதியத்தின் வாரக்கூட்டத்திலே தொய்கணங்களை உயிர்ப்பூட்ட ஈரக்கையை உதறச் சிதறுகிற நீர்போல, தொழில்நுட்பம் சாரா உலகத்துச் சின்னத்தகவல்கள்:- 'நெருப்புக்கோழி மெய்யாகவுமே தலையை மணலுக்குள்ளே நுழைத்துகொள்கின்றதா என்பது குறித்தது; மழைநீர்த்துளிக்கு மூன்று வடிவங்கள் இருப்பதும் குளியலறைக்குழாயிலே சொட்டும் நீர்த்துளியின் வடிவிலே மழைத்துளியிருக்காதென்பதும் குறித்தது.'

இயலுமானவரை உதடுகளை வெளித்தள்ளி இளித்துப் பார்த்தபடி, பற்களை -வத்தகைப்பழத்திலே நல்லது கெட்டது பார்க்கத் தட்டுவதுபோல- சுண்டிவிட்டான்; வாயைத் திறக்க, கண்ணாடியிலே ஆவிபடர்ந்து மூக்குக்கு நாற்றம் தெறித்தது. பற்களைத் தீட்டிக்கொண்டிருக்கும்போது, ப்ரோக்கலி, வத்தாளங்கிழங்கு ஆகியவற்றிலேயிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்துகளின் வீதங்கள் தனக்கு ஞாபகமிருப்பது சரியா என்பது குறித்து தலைக்குள்ளே கணச்சந்தேகம் ஓடியது; "என் தரவுத்தளம் தளும்பாதது; பாபா வெம்பாவை நான் முதலிலே கேட்ட நாள்... நாளென்ன நாள்.... நேரம்.. சரியாக, ஆயிரத்துத்தொள்ளாயிரத்து...."

குளியற்றொட்டிக்குள்ளே நீரை, சுடுநீரும் தண்ணீரும் அளவாகக் கலக்கும்வரை சரிபார்த்துத் திறந்துவிட்டுக்கொண்டு இறங்கித் தலையைப் பிடித்தான். நீர் கரைத்துக்கொண்டோடியது. கசகசக்காத மாலைகளிலே குளிக்கத் தேவையில்லைத்தான்; ஆனாலும், பழக்கம் விடுவதில்லை; வேலைமுடிந்துவந்து குளிப்பதினால், தொழிலகம் முற்றாகத் தொடர்பறுந்து வீடு மட்டுமே காலைக்குளிப்புவரைக்கும் என்றாகிறதாக உணர்வு.

சீறி மூர்க்கத்துடன் விராண்டப்போகும் பூனைபோலக் கைவிரல்களை மடித்து, உள்ளங்கைகள் முகத்தைக் காணக் குனிந்து பார்த்தான்; நீர் விரல்களிலே சொட்டியது; ஆ,,க்,,, ஹா!............ வலக்கைச்சின்னிவிரல் நகவிடுக்கில் ஒரு கருந்தார்ப்பொட்டு; பதின்மவயதுநடிகையின் மார்பக-இடுப்பு-பின்புற அளவுகள் குறித்தது. தேய்த்தான். போவதாகத் தெரியவில்லை; சவர்க்காரமும் ... ம்ஹூம்! போக்கவில்லை; XX-YY-ZZ இளித்தபடி இன்னும் கருமையாக நுரைக்குள்ளாக மின்னியது. குளியற்றொட்டி விளிம்புகள் தேய்க்கும் வன்பஞ்சை எடுத்துத் தேய்த்தான்; சவர்க்காரநுரையைத் தள்ளிவிட்டு, நீருக்கு வெளியே பிடித்து வாயால் சின்னிவிரலை ஊதி உலர்த்திய பின்னால் - ஈரப்பதன் குறைந்த காற்று, இலகுவிலே உலர்த்துமாம் - வன்பஞ்சாலே அழுத்தித் தேய்த்தான். எரிந்தது; நகமும் விரலும் சேருமிடத்திலே தோல் கழன்று எரிந்தது; கசிவூடக, இரத்தம் மெல்லியதாகப் படர, நடிகை மறைந்துபோனாள்.

வெற்றி, கொட்டிய வம்பயர் வேட்டைப்பல்லிரத்தமாய்ச் சொட்ட, விரலை மீண்டும் மேலிருந்து கொட்டும் நீருக்குள்ளே எடுக்கையிலேதான் அவதானித்தான்; ஐரோப்பாவின் மிகச்சிறியநாட்டின் நிலச்சமவுரக்கோடுகள் அவனுடைய வலதுகையின் நடுவிரல்மொழிக்கும் மணிக்கட்டுக்குமிடையே ஏழிடங்களில் மையங்கொண்டெழுந்த வட்டங்களாக, நீள்வளையங்களாக, வளைகோடுகளாக, மண்ணிறத்தேமல் பூசிப் படர்ந்திருந்தன. ஹா!!! கண் விரிய அடித்தொண்டையிலிருந்து அலறல் கிளம்பிக் கேவலாக வெளிவர, திரும்பக் கையை வெளியேயிழுத்து வன்பஞ்சாலே தேய்த்தான்; நாட்டுவரைபடம் அங்குமிங்கும் சிதம்பினாலுங்கூட, அழிவதாகக் காணோம். குளியலறைக்குழாயுலோகத்திலே பின்னங்கையைத் தேய்த்துப் பார்க்கவும் கொஞ்சந்தான் நாடு மறைந்தது. குளியலறைச்சுவரிலே பின்னங்கையை அடிக்கத் தொடங்கினான்; ஆரம்பத்திலே நடிகையின் இடையும் மார்பும் பின்புறமும் மறையக் கிழிந்தெழுந்த எரிச்சல், இப்போது தெரியவில்லை. வலக்கை உள்ளங்கையைப் பளிங்குச்சுவற்றிலே அழுத்திக்கொண்டு, குளியலறைச்சின்னவாளியை எடுத்து இடது கையாலே சேதமடைந்த வரைபடம்மீது அடித்துக் கொண்டிருந்தபோது, வலது முழங்கையிலே தென்னாபிரிக்க அரசிலே இருக்கின்ற இந்தியவழிவந்த அரசியல்வாதிகளின் பெயர்களும் முகங்களும் இருப்பது அவனுக்கு நீரடித்துக் கழுவப்பட்டுத் தெளிவாகத் தெரிந்தன.

ஒரு மணிநேரமாகியும் குளிக்கப்போனவன் வெளிவராததையிட்டுக் கவலைப்பட்ட மனைவி, பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தன் பலம் கொண்டளவும் தட்டிக் களைத்துப்போய், உதவி தேடியபோது, குழந்தையும் கலவரமுற்று வீரிட்டு அழுதது; நகர்காவலரும் தீயணைப்புப்படையும் வந்து கதவை ஒரு சுத்தியலடியிலே உடைத்துத் திறந்தனர். குளியற்றொட்டியிலே குதம் கக்கிய மலமாய்க் குவிந்துகிடந்த சதையையும் தசையையும் தோலையும் எலும்பையும் அவர்கள் அள்ளிக் கொடுக்க, மனைவியின் வேண்டுகோளின் பேரிலே கொளுத்திச் சாம்பலாக ஒரு செம்பிலே மூடிக் கொடுத்தார்கள் இரண்டு நண்பர்கள். அவள் தொலைக்காட்சிப்பெட்டியையும் கணணியையும் அகப்பட்ட விலைக்கு விற்றுவிட்டுக் குழந்தையோடு வேற்றூருக்குத் தொழில் தேடிப்போனாள்.

'05 செப்., 11 ஞாயி. 00:48 கிநிநே.

11 comments:

Sri Rangan said...

கதை விளங்கிற பாங்கிலிருந்தாலும்,இருண்மைத்தன்மை மிகுதி.பளிச்சென்று புரிவது கூடாதா?திடீர் மரணங்களும்-இழப்புகளும் எதையோ தொலைக்கின்றன.அவை நேருவதும்,அதன் வழி நேருவதற்கான இன்றைய உற்பத்திமுறைகளும் மானுடர்தம் வாழ்வைக் குதறுவதுமட்டும் வீச்சாக நடைபெறுவதில் மூலதனத்தின் இருப்பு இதன் வழியே காட்சிப்படுவதுதாம்.

சுந்தரவடிவேல் said...

இதெல்லாம் என்ன கதை?!

அருள் செல்வன் கந்தசுவாமி said...

இருத்தல் எனும் பெரும் கடற்பரப்பில் நாம் கட்டி இளைப்பாறும் தர்க்கத்தீவுகளை இணைக்கும் மெலிதான நிலப்பாலங்களின் தொடர்களை வகையாகத் தகர்த்திருக்கிறீர்கள். ரமணி, நன்று. - அருள்

டிசே தமிழன் said...

வித்தியாசமாயிருந்தது. நடை கூட இந்தமுறை என்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக, வாசிக்கையில் தெரிந்தது :-).
தொடர்ந்து எழுதுங்கள்.

Thangamani said...

இதெல்லாம் என்ன கதை?!

-/பெயரிலி. said...

சொந்தக்கதை சோகக்கதை ;-)
உபரித்தகவல்களை மனிதக்கலங்களாக்குகிறோம் ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//வித்தியாசமாயிருந்தது. நடை கூட இந்தமுறை என்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக, வாசிக்கையில் தெரிந்தது :-).
தொடர்ந்து எழுதுங்கள்.//

Same here. :O)

சன்னாசி said...

தகவல்கள் என்பவை நரகம் விரும்பியணியும் ஆபரணங்கள் என்பது உண்மையே.

KARTHIKRAMAS said...

சொந்தக்கதை சோகக்கதை நல்லா புரியுது. இப்படியான உணர்வுகள் எல்லோருக்கும் வரத்தான் செய்யும் என்று நினைக்கிறேன். ஒன்றும் விடைசொல்லமுடியாமல், வாய்க்குள்ளேயே விழுங்கி நகரவேண்டியதுதான். சில நேரம் தூக்கம் சிலநேரம் எங்காவது ஓடுவது அருமருந்து.நல்லது. நீங்களாவது சொல்லிலே வடிக்கிறீர்கள்.


சன்னாசி, இப்படித்தான் தகவல்களை வெறுத்து நிறுத்தி இப்ப என்ன நடக்குதுன்னு தெரியாத சூனியமா இருக்கிறான் ஒருத்தன். :-)

-/பெயரிலி. said...

அக்கா, அண்ணைமார் சொன்னதுக்கெல்லாம் மெத்தப்பெரிய உபகாரம்

டிசே தமிழன் said...

//சிலநேரம் எங்காவது ஓடுவது அருமருந்து //
'ரன்' படம் மாதிரியா கார்த்திக் :-)?