not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Monday, September 12, 2005
சலனம் - 4
After Life / Wandafuru raifu (1998)
After Life/Wandafuru raifu (1998)
ஐப்பானியப்படங்களோடு ஒப்பிடும்போது, பொதுவாக பிற நாட்டுப்படங்களிலே இறப்பினைச் சுற்றிய அதீதமான எண்ணச்சுழல்வும் ஈர்ப்பும் மிக அரிதாகவே இருக்கின்றன [Ingmar Bergman இன் 'The Seventh Seal' (1957), Abbas Kiarostami இன் 'A Taste of Cherry' (1997) போன்ற சில குறிப்பிடத்தக்க படங்களைத் தவிர]. ஐப்பானியத்திரைப்படங்களைப் - குறிப்பாக, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான- பொறுத்தமட்டிலே, அவற்றின் மேலே இறப்பின் சாயல் கவின் நிமித்தமாகவேனும், ஒரு மெலிதான ஒய்யாரத்திரையாகப் படிந்திருப்பதைக் காணலாம். இரண்டாம் உலகப்போரின் முடிவிலான ஐப்பானியர்களின் அளவிடமுடியா மனித உயிரிழப்பு மொத்தமாக அவர்களின் சிந்தைப்போக்கிலே இறப்பினைக் குறித்த ஒரு நீக்கமுடியாத பாதிப்பினைத் தந்திருக்கின்றதோ தெரியவில்லை [குரோஸோவாவின் அநேகமான படங்கள் (குறிப்பாக, Ikiru (1952)), Shohei Imamura இன் படங்கள் (குறிப்பாக, Ballad of Narayama (1983)) போன்றவை உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன]. இந்த வகையிலே 'வாழ்வுக்குப்பின்னால்' (After Life) இனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்படம், இறப்பினைக் குறித்தும் வாழ்காலஞாபகங்கள் குறித்தும் பேசுவது; படக்கதையின் சுருக்கத்தினை ஒரு வசனத்திலே சொல்லிவிடலாம்: "ஒருவரின் இறப்பின்பின்னால், அவரால் தன் வாழ்க்கையின் ஒரு ஞாபகத்தினைமட்டும், வரப்போகும் காலத்துக்கெல்லாம் நிலைத்து வைத்துக்கொள்ளலாமென்றால், அவர் எதற்காக, எஞ்ஞாபகத்தினைத் தேர்ந்தெடுப்பது என்பதைக் குறித்தது." புதிய வாரமொன்றின் வேலைநாள் தொடங்குவதாக உணர்த்தப்படுவதோடு படம் தொடங்குகின்றது; இறப்புக்குப்பின்னால், நிலைத்த ஓரிடத்துக்கு (அது, 'நரகம்.எதிர்.சொர்க்கம் என்பதாக படத்திலே எக்குறிப்பும் தெளிவாக உணர்த்தப்படவில்லை; சொல்லப்போனால், அப்படியான வேறுபாடு இல்லையென்பதாக ஒரு பாத்திரத்துக்குச் சொல்லப்படுகின்றது) இறந்தவர்கள் செல்லும்வரைக்கும் அவர்கள் இவ்விருநிலைக்குமிடைப்பட்ட ஒரு திரிசங்கு ஞாபகவிசாரணை + தேர்வுக்கூடத்திலே ஒரு வாரம் தங்க வைக்கப்படுகின்றார்கள். அங்கே, அவர்களுக்குத் தமக்கு முக்கியமான ஞாபகத்தினை மட்டும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது; அதைத் தேர்ந்தெடுக்க, இந்த இடைநிலைகூடத்தின் விசாரணையாளர்கள் (வேண்டினால், இறந்தவர்களின் வாழ்க்கை முழுக்கவுமே ஒளிப்படமாக இருக்கும் படக்கோப்புகளை எடுத்து மீள இறந்தவர்களுக்குப் பார்வையாளர்களாகவிருந்து தம் வாழ்க்கையை மீளப்பார்க்கப் போட்டுக்காட்டியோ, அல்லது தமது வினா-விடைகள்மூலம் முடிவெடுக்கவோ) உதவுகின்றார்கள்; அஞ்ஞாபகம், விசாரணையாளர்கள் துணையோடு இறந்தவர்களும் பங்குபெற மீளவும் நடாத்திக்காட்டப்படுகின்றது; படமாக்கப்படுகின்றது. வாரமுடிவிலே விசாரணையாளர்களுடனான ஒரு விருந்தோடும் விசாரணைத்தலைமையாளரின் உரையோடும் இறந்தவர்கள் அடுத்தநிலைக்குப் போகின்றார்கள்; புதிய வாரம் பிறக்க, புதிய இறந்தவர்கள் கூடத்துக்குள்ளே உட்புகுகின்றனர்; விசாரணை தொடங்குகின்றது.
இச்சாரத்தோடு, பாத்திர ஆய்வுகள் நிகழ்கின்றன; படத்தினைப் பார்க்கும்போது, 'தன் வாழ்க்கையின் முக்கியமான ஞாபகமென்று ஒருவர் கருதுவது, அவரின் விருப்புக்குரிய ஞாபகமாகவிருக்கவேண்டியதில்லை' என்பதாகத் தோன்றுகின்றது. தனது பிடித்த ஞாபகமென்று ஒருவர் எண்ணிக்கொள்வது, சில சமயங்களிலே மெய்யாகவே அவர் ஞாபகப்படுத்திக்கொள்வதுபோல நடந்திருக்கவேண்டியதில்லை, ஆனால், அவர் உணர்ந்துகொள்வதும் ஞாபகத்திலே வைத்திருக்கவிருக்க விரும்புகின்ற விதத்திலுமாகவிருக்கின்றது. சிலருக்குத் தமது கடந்த காலமே ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. இவற்றினூடாக, விசாரணையாளராக இருக்கும் மோஸிஸுகி (Mochizuki) என்பவனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவனிடம் தொழில்பயிலுனராகவும் அவன்மேலே காதல் கொண்டுமிருக்கும் சதோனகா (Satonaka) என்ற இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்படுகின்றன.
விசாரணையாளர்களும் எப்போதோ இறந்தவர்களே; அவர்களை யார் விசாரணையாளர்களாக ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற்றுகின்றார்களெனத் தெளிவாகச் சொல்லப்படவில்லை; இறை, நம்பிக்கை குறித்துப் பேசப்படவில்லை. ஆனால், குறிப்பாக, விசாரணையாளர்களிலே ஒருவர் தனக்கான விருப்பஞாபகத்தோடு அடுத்த நிலைக்கு நகர்கையிலே புதிதாக இறந்து வந்தவொருவர் அந்தப்பதவிக்கு விசாரணைக்கூடத்தின் தலைவராலே நியமிக்கப்படுவது காட்டப்படுகின்றது. விசாரணைக்கூடம், வாழும் உலகத்தின் ஒரு சாதாரண அலுவலகத்தின் பாணியிலேயே காட்டப்படுகின்றது; விசாரணையாளர்களுங்கூட. இவ்விதமான இயக்குநரின் அணுகுமுறை படத்தோடு பார்வையாளரின் ஒன்றிப்போக உதவுகின்றதென்று சொல்லலாம்.
இயக்குநர் ஹொரே எரா டா (Hirokazu Koreeda) இன் விடய அணுகுமுறை, இறப்பினைக் குறித்த மிகவும் சிக்கலான பார்வைகளையும் விவாதங்களையும் தத்துவவிசாரங்களையும் தவிர்த்துவிடுகிறது. அவருடைய இலக்கு, இறப்பு என்பதிலும்விட, தனிமனிதனுக்கும் அவனுடைய ஞாபகங்களுக்கும் இடையிலான ஊடாடல்களைப் பேசுவதாகத்தான் தெரிகின்றது. பட ஒளியத்தட்டிலே மேலதிகமாகத் தரப்பட்டிருக்கும் இயக்குநரின் படத்தின் தேவை, தயாரிப்பினைக் குறித்த பின்புலத்தகவல்கள் மனித ஞாபகத்தினைச் சுட்டிப் பேசுகின்றன; அவர், 'அல்ஸைமர்ஸ் நோயினாலே, இறந்துகொண்டிருந்த தனது பாட்டனார் அவரினைப் பற்றியே அறிதல் உலர்ந்துகொண்டு போனபோது, இப்படம் குறித்த விதை தன்னுள்ளே முளைக்க ஆரம்பித்தது' என்கிறார். ஒரு மனிதன் தனக்கு முக்கியமான ('விருப்பமான' என்று சொல்லமுடியுமோ தெரியவில்லை) ஒரு ஞாபகத்தினை மட்டுமே சேகரித்துத் தன்னுடன் எக்காலத்துக்கும் தக்க வைத்துக்கொள்ளலாமென்றால், 'எதை/ஏன் கொள்வான், அவன் ஞாபகமென்று கொண்டிருப்பதற்கும் மெய்யாக நிகழ்ந்ததற்குமிடையே எத்துணை ஒன்றிப்பு இருக்கின்றது' என்பது குறித்து அலசுகின்றார். இப்படத்தின் கதையினை அமைக்கும்போது, நூற்றுக்கும்மேலானவர்களை நேர்கண்டு, அவர்களின் முக்கிய ஞாபகங்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் கதையினை அமைத்திருக்கின்றார்.
படத்தின் நாயகன் என்று சொல்லக்கூடிய மோஸிஸுகி பாத்திரத்துக்கு, பல நடிகர்களை நேர்கண்டு, அராடா (Arata) என்ற புதுமுகத்தினை எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. அடிப்படையிலேயே ஒரு சோகம் கவிழ்ந்த முகம், அவருடையது; கூட நாயகி, சதோனகா ஆகக் கருதக்கூடிய, எரிகா ஓடா (Erika Oda) இற்கும் பாசாங்குத்தன்மையற்ற, தன் பாத்திரத்துக்குரிய அனுபவமின்மையை முகத்திலேயே காட்டக்கூடிய தன்மை தெரிகின்றதான தேர்வு. கூட வரும் துணைப்பாத்திரங்களான தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேரமுடியாத கிழவர் வடானபே, செர்ரீ பூக்கும் காலத்தினை வேண்டும் கிழவி நிஸிமூரா, டிஸ்னியின் ஸ்ப்ளாஸ் மவுண்டன் நினைவிலிருக்கும் பதின்மப்பருவப்பெண் யோஸிரோ, தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேர்ந்தெடுக்க மறுக்கும் மனிதர், பழைய ஞாபகங்களை மறக்கவிரும்பும் மனிதர், 'ஞாபகமாய் எதுவுமே குறிப்பிட்டுச் சொல்ல இல்லை' என்பதாகப் பிடிப்பின்றிப் பேசும் இளைஞன், தன் ஞாபகங்களைக் கேட்கும் இளம்பெண்விசாரணையாளருக்குத் தன் பாலியற்கிளர்ச்சியூட்டும் ஞாபகத்தினை விரித்து விபரிக்கும் நடுவயது மனிதர் ஆகியோர் முன்னர் பார்த்த ஏதோவொரு ஜப்பானியப்படத்தின் ஏதாவதொரு பாத்திரத்தினை ஞாபகப்படுத்தினாலுங்கூட, இப்படத்தின் நோக்குக்கு, மிகவும் கச்சிதமாக ஐப்பானிய சமூகத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைச் சுட்டும்விதமாக பொருந்தியிருக்கின்றார்களென்று சொல்லலாம்.
படம் முடிந்தபோது, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்பட்டதென்பது உண்மை; அதே நேரத்திலே, ஒரு வெறுமையும் பயமும் கலந்த உணர்வும் ஏற்பட்டது; அவ்வுணர்வுக்குக் காரணம், 'எனக்கு விருப்பமான ஒரு ஞாபகத்தினைத் தீர்மானிக்கச் சொன்னால், என்னத்தினைத் தீர்மானிப்பேனென்ற குழப்பமா, மரணம் குறித்த - காலகாலத்துக்கும் அதே ஞாபகத்துடன் எங்கே உறைந்து நிற்பேன், இப்போதைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட அவ்வொரு ஞாபகத்தோடு மட்டுமே உறைந்து எப்போதைக்குமே அதிலே அலுப்பேற்படாது நிற்பேன் என எண்ணுவது சரியா என்ற குழப்பமா, அல்லது பட முடிவிலே தேர்ந்தெடுத்த தத்தமக்கான ஞாபகங்களோடு இப்பாத்திரங்கள் எங்கே போகின்றார்களென்ற முடிவு தெரியாமையின் விளைவான அச்சமா' என்று என்னால் குறிப்பிட்டுத் தேர முடியவில்லை.
மூலத்தலைப்பு: Wandafuru raifu (1998)
நாடு/மொழி: ஜப்பான்
ஆங்கிலத்தலைப்பு: After Life
ஆண்டு: 1998
ஓடு நேரம்: 118 நிமிடங்கள்
இயக்கம்: Hirokazu Koreeda
நடிகர்கள்: Arata, Erika Oda
'05 செப்., 12 திங்கள் 13:35 கிநிநே.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பார்க்க வேண்டிய பட அறிமுகத்துக்கு நன்றி.
Defending Your Life பார்த்ததுண்டா? நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும், 'இறப்புக்கு பின்' என்பதில் சம்பந்தம் இருக்கும்.
[ரெண்டு பென்னி பெறாத கருத்து: சாம்பல் பின்னணி; சாம்பல் சுட்டிகள்; கண்ணில் ஏற்கனவே கண்ணாடி... கஷ்டமாக இருக்கிறதே. உரல்களுக்கு வேறு வண்ணம் வரையலாமே?]
பாலாஜி, Defending Your Life பார்க்கவில்லை.
/[ரெண்டு பென்னி பெறாத கருத்து: சாம்பல் பின்னணி; சாம்பல் சுட்டிகள்; கண்ணில் ஏற்கனவே கண்ணாடி... கஷ்டமாக இருக்கிறதே. உரல்களுக்கு வேறு வண்ணம் வரையலாமே?]/
ஓர் அமைப்பாகப் போடுவோமென்பதாலே அப்படியாக்கினேன். மாற்ற முயல்கிறேன் (உங்கள் கண்ணாடியை அல்ல ;-))
//மாற்ற முயல்கிறேன் (உங்கள் கண்ணாடியை அல்ல ;-))//
Papa's Camcorder out என்பதைவிட, உங்கள் ஹீரோ Papa's fangs out என்று படமெடுக்கும் நாளை அதிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ;-)
திரைப்பட அறிமுகத்துக்கு நன்றி.
Post a Comment