Friday, September 16, 2005

படிவு - 14பிபிஸி தமிழோசை
16 செப்ரெம்பர் 2005


இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க முடிவு

இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார்.

உல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார்.6 comments:

Thangamani said...

சிங்கள பெளத்தர் மட்டுமே அரசுத்தலைவராக முடியும் என்பதை மாற்ற பிறகு சட்டத்திருத்தம் கொண்டுவரலாம்..ஏன் சுற்றுலாத்துறை காசு சம்பாரிக்கமுடியாம தள்ளாடுதா?

ஈழநாதன்(Eelanathan) said...

சிறுவர்கள் பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவதாக குற்றச்சாட்டுகள் அதிகமாக எழும் நேரத்தில் இப்படியான ஒரு சட்டம் தேவையா எனப்படுகிறது.தென்னிலங்கைக் கடற்கரைகளை நோக்கிய சுற்றுலாப் பயணிகள் இனி அதிகரிக்கலாம்.அவர்கள் நாடுவது இனி சட்டபூர்வமாகக் கிடைக்குமே

KARTHIKRAMAS said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...

இச்சட்டத்திருத்தம் பொருளாதார நோக்கிலானது மட்டுமே.
இனி வயதுகுறைந்தோர் மீதான விருப்பத்துடனான உறவு சட்டரீதியில் செல்லுபடியாகும். "விருப்பத்துடனான உறவு" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வாயால் வரவைப்பதொன்றும் இலங்கையில் கடினமான காரியமாகத் தெரியவில்லை.

-/பெயரிலி. said...

நீங்கள் சொல்கின்றவற்றின் சாத்தியம் தெரிகின்றது. எனக்கென்ன வியப்பென்றால், குறைந்தபட்சம், இது தனியே நீதி அமைச்சர் சொல்கிறபடி, "பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருகின்றது" என்ற பாராளுமன்றத்தின் எதேச்சைமுடிவோடுமட்டுமே கொண்டுவரப்பட்டதா என்பதே. இதற்கு உளநிலை, சமூகவியலாளர்களின் கருத்துகள் பெறப்பட்டனவா என்பதும் தெரியவில்லை.

பதின்மூன்று வயதிலே பாலியலுறவு ஏற்றுக்கொள்ளப்படுவதென்பது, இலங்கையின் சில பகுதிகளிலே 13 வயதிலே திருமணத்தினைக்கூட ஒத்துக்கொள்ளச்செய்வதாகவிருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' வகை "பாலியல்முதிர்ச்சி"மட்டுமே ஒரு 'குடும்ப அமைப்பு'க்கான முதிர்ச்சியாகிவிடுமா என்பது யோசிக்கவேண்டியது.

வன்னியன் said...

இதுவரை தமிழீழச் சட்டக்கோவைக்கும் சிறிலங்காச் சட்டக்கோவைக்கும் இருந்துவந்த மெல்லிய வித்தியாசம் இச்சட்ட நடைமுறைமூலம் பெரிய வித்தியாசத்தைப் பெறும்.
மேலும் திருமண வயதைக் குறைக்காத இச்சட்டத்திருத்தம், திருமணத்துக்குப் புறம்பான பாலுறவை நாடு முழுவதும் ஊக்கப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது.
இளைய சமுதாயம் பாலியல் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றுவருகிறதென்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று.
இது மிகமிக தன்னிச்சையான, முட்டாள்தனமான வாதமாகும்.

இந்த நிலையில் தர்க்க ரீதியில், சிங்கள அரசே சொல்லும் சிறுவர் படையில் சேர்ப்பு என்ற குற்றச்சாட்டு வலுவிழந்து போகிறது.
பாலுறவுக்கான சட்ட ரீதியான வயதைவிடவும் மூன்று வயது அதிகமான ஒருவன் அல்லது ஒருத்தி ஆயுதமேந்துவது பற்றிக் கதைக்க தார்மீக அடிப்படையில் அரசு அருகதை இழந்துவிட்டது.