Sunday, September 04, 2005

புலம் - 18








சென்ற கிழமை மூன்று விடயங்கள் தொடர்பான பதிவுகள் எனது கவனத்துக்குரியனவாகின; மூன்றும் பெண்கள் மீதான ஆண்களின் சொல், செயல் வன்முறை குறித்தவை:

1. ரூமியின் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்த விமர்சனம்
2. தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்து
3. யாழ் பல்கலைக்கழக அரசியலறிவியல் விரிவுரையாளர் கே. ரி. கணேசலிங்கம் மீது எழுந்திருக்கும் சிறுமியைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டு

உரைக்கப்பட்டவை உண்மைகளாகும் பட்சத்திலே, இவை பெண்கள்மீதான ஆணாதிக்க எழுத்து, சொல், செயல் வன்முறையென்பது குறித்து கண் விரித்துப் பார்க்கின்றவர்களுக்குக் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. முதலிரண்டு பற்றியும் தோன்றியதை ஏற்கனவே குறித்துவிட்டதனால், மூன்றாவது விடயம் பற்றிமட்டும் அடுத்த பதிவிலே குறிக்க விரும்புகிறேன்.

இது குறித்து என் கருத்து மற்றவர்களுக்கு அவசியமா என்றால், இல்லை என்பதை ஒத்துக்கொள்வேன்; ஆனால், இந்த இடத்திலே எனது கருத்தினைப் பதிவு செய்துகொள்வது என் நிலைப்பாடு குறித்த ஒரு தெளிவினைக் மற்றவர்களுக்குத் தர உதவக்கூடுமென்ற சொந்த நலனை முன்னிட்டது; அதனால், இப்பதிவு எனக்கு அவசியமானது.

முதலிலே, கொள்கையளவிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மார்க்ஸியம் சார்ந்த புளொட், ஈரோஸ் ஆகியன சிதிலமடைந்து திரிபுவாதநிலைப்பாடு கொண்டபின்னால், ஈழநோக்கினை முன்வைத்துத் தக்கித்திருக்கும் ஒரே ஈழ இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து என் நிலைப்பாடு குறித்துச் சொல்ல வேண்டியதாகவுள்ளது; இயக்க ரீதியிலே ஒரு சின்னத்துரும்பைக்கூடத் தேசியவிடுதலைக்காகவும் மார்க்ஸியமுன்னெடுப்புக்காகவும் செய்யாதபோதுங்கூட, தேசியமும் மார்க்ஸியமும் பிணைந்த ஈழமே விடுதலை என்று முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாய்மனைக்கதிரைக்காரர்களிலே என்னையும் கணக்கெடுத்திருக்கலாம். ஆனால், தம்முள் இந்தியமேலாதிக்கத்தின் ஊடுருவலின்பின்னால், புழுக்கொண்டு மாய்ந்தும் தேய்ந்தும்போன மார்க்ஸிய_ஈழ_தேசிய இயக்கங்களின்பின்னால், தேசியமென்றவளவிலே அரசியற்கொள்கையடிப்படையிலே அடுத்த தராசுத்தட்டிலிருப்பினுங்கூட, கட்சி & இயக்கம் சாராது ஒவ்வொரு தனிப்பட்ட செயற்பாட்டினதும் தன்மையைப் பொறுத்து, விடுதலைப்புலிகளின் தேவையை ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு நடைமுறைக்கொவ்வாத ராயாகரனின் கட்டித்த மரபுவாத கொள்கையவினாலான மார்க்ஸியத்தின் சமகாலத்தோல்வியும் இந்திய மார்க்ஸியவாதிகளின் ஈழத்தேசியத்துக்கெதிரான திட்டமிட்ட நிலைப்பாடும் பலஸ்தீன தேசியத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவுமென்ற இரட்டைநிலைப்பாடுகளும் மேலும் ஊக்கிகளாகத் தொழிற்படுகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள்போல தமிழீழம் என்ற பதத்தினை அடிப்படையிலே இன்னமும் நான் ஒத்துக்கொள்வதில்லை; அதைவிட ஈரோஸ் முன்வைத்த தமிழர்கள் அல்லாத மாற்றுமொழியினரும் இனத்தவர்களும் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடிய ஈழம் என்ற பதத்தினையே இன்னும் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்.

மொழி அடிப்படையிலான தேசியமென்ற உணர்வினை இழிவுணர்வென்ற அடிப்படையிலே குற்றவுணர்வினை ஏற்படுத்த முயலும் நடைமுறையிலில்லாத வர்க்கம்சார் மரபுவாதபொதுவுடமைவாதிகளின் கருத்துத்திணிப்பும் அடியிலே மறைந்து மெல்லிய இந்துமேலாதிக்கம் உள்ளோட, மொழியடிப்படையிலான உரிமைகளைப் பின்தள்ள வற்புறுத்தும் இந்தியமேலாதிக்கவாதிகளின் (இவர்களிலே தமிழ்நாட்டினைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இற்றை மார்க்ஸியர்களும் முன்னை_மார்க்ஸியர்களும் அடக்கம்) கருத்துத்திணிப்பும் எனது ஈழதேசியம் குறித்த உணர்விலே குற்ற அழுத்தத்தினைத் திணிக்கமுயன்றபோதுங்கூட, சமகாலத்துக்கான மார்க்ஸியத்தின் ஆழமாதலும் விரிதலுங் குறித்த எனது புரிதல், அத்தகு குற்றவுணர்வு அநாவசியமென்பதை உணர்த்துவதால், அரசியலளவிலே மிகவும் தெளிவாக இருக்கின்றேன்; "ஆயுதப்போராட்டம் என்பது வன்முறையின் அடையாளம்" என்பதாகவும் ஜனநாயகவழிப்பாதை மட்டுமே நெறியானது" என்பாதாகவும் கருத்து முன்வைக்கும் பல "மனிதவுரிமைச்சாத்வீகப்போராளிகளினது பேச்சாளி"களின் உள்நோக்கங்கள், சொந்த நலன்கள் குறித்த வேட்கைகள் மிகவும் துல்லியமாக அவர்களின் வேறு விடயங்கள் தொடர்பான கருத்துவெளிப்பாடுகளிலே தெரிந்துவிடுவதாலும், ஆயுதப்போராட்டமென்பது விரும்பாதபோது ஈழத்தேசியத்தின்மீது காலத்தினாலே திணிக்கப்பட்டதென்பதை நிகழ்வுகளின் சாட்சியாக இந்தப்பேச்சாளிகளின்மேலாக அறிந்திருக்கின்றேன் என்பதாலும் ஆயுதப்போராட்டத்தின் மீது இன்றைய நிலையிலும் - சொந்தமாக ஒரு சின்ன சவர அலகை எடுத்துக் கடதாசி வெட்டவும் மிக அவதானம் கொள்கின்ற ஆளானபோதுங்கூட - நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். குருஷேத்ரத்திலே சொல்லப்பட்ட கீதையை விதந்தோத்துகின்ற நாமதாரிகளுக்கு ஆயுதப்போராட்டத்தின் அவசியம் ஈழம் தொடர்பாக கட்டாயம் தெரிந்திருக்குமென்ற நம்பிக்கையும் அதைத் தம் சொந்தநலன் குறித்து அமுக்கி, மனிதநேயம், ஜனநாயகப்போர்வையால் மூடமுயல்கின்றார்களென்ற உண்மைநிலையும் தெரியும்.

விடுதலைப்புலிகள் குறித்து எனக்கு விமர்சனமிருக்கின்றது; மற்றைய இயக்கங்களை அவர்கள் ஒடுக்குவதற்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே மற்றைய இயக்கங்களின் மேல்மட்டத்தலைமைகள் தாம் சொல்லிக்கொண்ட ஈழதேசியநோக்குக்கு எதிரான நடவடிக்கைகளிலே விரும்பியோ திணிக்கப்பட்டோ இயங்கியதும் காரணமாகவிருந்தபோதுங்கூட, அந்த இயக்கங்களைச் சேர்ந்த கீழ்மட்டப்போராளிகளை விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒடுக்கிய விதத்திலும் அழித்த விதத்திலும் எவ்விதமான ஒப்புதலுமில்லை. தமக்கெதிரான எதிர்க்கருத்துகள் குறித்து, விடுதலைப்புலிகளோ அவர்களின் ஆதரவூடகங்களோ கண்மூடிய ஆதரவாளர்களோ பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே வாய்திறக்கவிடுவதில்லையென்பது மறுக்கமுடியாத உண்மை - கிட்டத்தட்ட, த இந்துவினதும் அதன் ஆதரவு ஊடகவியலாளர்கள், விமர்சனமில்லாத வாசகர்களின் ஈழ ஆதரவு குறித்த பேச்சுக்கான சுதந்திரமளவுக்கே விடுதலைப்புலிகளும் வாயைத் திறக்கவிடுகின்றனர் என்பது என் கருத்து. முஸ்லீங்களை அவர்களின் பாரம்பரியப்பிரதேசங்களிலே இருந்து அகற்றுவதிலே (குறிப்பாக, வடக்கிலே) விடுதலைப்புலிகளின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் - இன்றைய காலகட்டத்திலே தமது அந்தக்குற்றத்தினை மிகவும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டபோதிலுங்கூட. (கிழக்கிலே தமிழர்-முஸ்லீங்கள் குறித்த முரண்பாடு தனியே ஈழதேசியத்தின் அடிப்படையிலானதல்ல; தவிர, அதிலே கிழக்குமுஸ்லீங்களும் முழுக்கமுழுக்க பாதிப்புக்குள்ளானவர்கள் என்ற வகையிலேமட்டும் பார்க்கப்படக்கூடியவர்களல்ல; அடுத்தடுத்திருக்கும் தமிழ்-முஸ்லீம் ஊர்களுக்கிடையேயான தனிப்பட்ட உள்ளூர் அரசியற்குரோதங்களும் அரசுசார் முஸ்லீம் ஊர்காவற்படையின் தமிழரெதிர்ப்பு நடவடிக்கைகளும் கவனத்திலெடுக்கப்படவேண்டியவை). சிறுபிள்ளைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பயன்படுத்துவது குறித்துக் கொள்கையடிப்படையிலே எனக்கு மிகவும் எதிரான கருத்துண்டு - நடைமுறையிலே இயக்கத்தின் தேவையும் நிலைப்பும் அப்படியான சிறுவர்களிலே தங்கியிருக்கின்றபோதிலுங்கூட. எனது குழந்தை அதே வயதிலே ஆயுதம் தூக்கிவிடக்கூடாதேயென்பதிலே மிகவும் கண்காணிப்பாகவும் பயமுள்ளவனாகவுமிருப்பேன். விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளிகள் பற்றி விசனம் தெரிவிப்பவர்களுக்கு நான் தற்கொலைப்போராளிகள் குறித்த சில நூல்களின் கீழ்வரும் அறிமுகக்குறிப்பினை வாசிக்கும்படி பரிந்துரைக்கின்றேன். Why They Do It. ஆனால், அரசின் பொருளாதாரநலன்களையும் அரசுபோரிடுசாதனங்களையும் குறிகளாக்குவதை ஏற்றுக்கொள்ளும்போதிலே, எந்த வகையிலும் நிலையிலும் இவை தவிர்த்த நிராயுதபாணிகளை வேண்டுமென்றோ பக்கவிளைவாகவோ நாசம் செய்வதை முற்றிலும் எதிர்க்கின்றேன்.

இலங்கை-ஈழம்-இந்தியா குறித்த அரசியல் குறித்து நூல்களைப் பரிந்துரைக்கக்கேட்கும் நண்பர்களுக்கு நான் விடுதலைப்புலிகளின் சார்பான புத்தகங்களையோ கட்டுரைகளையோ ஊடகங்களையோ மட்டும் பரிந்துரைப்பதில்லை; எனக்குத் தெரிந்த, நான் வாசித்த, விடுதலைப்புலிகளுக்கு எதிரான/ஆதரவான ஈழத்தமிழர்களின், சிங்கள ஊடகங்களின், இந்தியர்களின் நூல்களையெல்லாவற்றினையுமே பரிந்துரைக்கின்றேன்; வாசித்தபின்னால், அவர்களையே அரசியல் குறித்துத் தீர்மானிக்கும்படி சொல்கிறேன். ஈழத்தவரின் பாரம்பரியப்பிரதேசங்களென்பதும், மொழி, பண்பாடு, கலை வெளிப்பாடுகளென்பதும், ஈழத்தவரின் சுயநிர்ணயவுரிமையின் முழுமையான அடைதலிலேதான் தங்கியுள்ளன என்பதிலே எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அந்த அடைதல் இலங்கை என்ற கூட்டமைவின்கீழான இரு தேசங்களாகவோ அல்லது தனியான ஈழமென்ற தேசமாகவோ இருப்பது குறித்து எனக்குப் பெரிய அக்கறையில்லை; ஆனால், எந்தத்தீர்வு முழுமையான உரிமையைத் தருகின்றதோ அதுவே முக்கியமானது; தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளோ இந்திய அரசுகளோ ஈழத்தவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் இவையிவையெனத் தீர்மானிப்பதினை முழுக்க வெறுக்கின்றேன்; அத்தகு அரசுகளின் விசுவாசிகளும் தரகர்களும் எழுத்தூடகத்திலும் ஒலி ஒளி இணைய ஊடகங்களிலும் அவற்றினை எந்தப்பட்டுப்போர்வையின்கீழும் நெளியும் புழுக்களாக விற்பனை செய்வதனை இயன்றவரை கிழித்துக்காட்டி உள்நோக்குகளையும் திரிபுகளையும் தரகர்களையும் வெளிப்படுத்துவது என் கடமையென்று உணர்கிறேன். இதற்கு நான் ஈழத்தவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை; தர்க்க அடிப்படையிலும் பகுத்தறியும் தன்மையிலும் ஒரு மனிதனாகவே செய்யலாம்; ஆனால், ஓர் ஈழத்தவனாக இருப்பது அவ்வாறு செயற்பட ஓர் உணர்வுந்தலைத் தருகின்றது; அந்த உணர்வுந்தலைச் சிறப்புக்கூறாகப் பெற்றிருப்பது, அவ்வாறு இம்முகமூடிகளை உரித்துக்காட்டும் கடமையை மேலதிகமாக என்னைப் போன்றவர்களிலே சுமத்தியிருக்கின்றதென்று நினைக்கிறேன்.

இந்த வகையிலேயே பொதுவான கருத்தமைவிலே, ஈழம் குறித்த எனது கருத்துநிலைப்பாடும் செயல்நிலைப்பாடுமுள்ளது. தனியாள் எனது கருத்தும் நிலைப்பாடும் எதனையும் மாற்றப்போவதில்லையென்ற நிலையிருப்பினுங்கூட, இந்தக்குறிப்பு என் நிலைப்பாடு குறித்து வெறுமனே "பு...மகனே" என்ற மெய்ஞ்ஞான அரசியல்ஞான பின்னூட்ட விளிப்புக்கு அடுத்தபடியிலே தாவிக் கூர்ப்படைந்திருந்து "புலி ஆதரவு" என்ற குற்றச்சாட்டினைமட்டுமே முன்வைக்கும் அறிஞர்களுக்கும் தார்மீகத்தினைத் தமக்கே உரித்தென்று உரியாடையாகப் போர்த்திருக்கும் அறிவுஜீவிகளுக்கும் மனிதவுரிமைக்காவலாளிகளுக்கும் திரும்பத் திரும்ப, கிளிப்பிள்ளைமாதிரி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லாமல், இப்பதிவினைத் தேவையான இடத்திலே "நிலைமறுப்புக்கூற்று" இணைப்புக் கொடுக்க உதவுமே என இட்டிருக்கிறேன். மீதியானோர் புலம்பலென்று விட்டு நகர்க. விரும்பினோர், இதன் உபயத்திலேயே ஒரு பகிடிப்பதிவு போட்டு, பின்னூட்டம் பெற்றுய்ந்து பிழைத்துச் செல்க ;-)

நாளையிலிருந்து ஈழ அரசியல் குறித்து வெளிவரும் பிறரின் எந்தப்பதிவிலுமே என் பெயரை இழுக்காதவரையில் எந்நிலையிலும் பின்னூட்டமிடுவதில்லை என்ற எல்லோருக்கும் நன்மை பயக்கும் முடிவினை எடுத்திருக்கிறேன். ;-)

இக்குறிப்போடு, கணேசலிங்கத்தின் மீதான பாலியல்வன்முறைக்குற்றச்சாட்டினைக் குறித்து, ஊடறுவில் Rape by Kanesalingam என்று தலைப்பிட்டு வெளிவந்த அதே கட்டுரை, இலக்கிலும் ஜனநாயகத்திலும் Rape by LTTE Kanesalingam என்ற தலைப்போடு வந்தது குறித்தும், சார்ள்ஸ் விஜயவர்த்தனா கொலை குறித்து, ஊடறுவிலே வெளிவந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரை, "இதுவா தமிழ்க்கலாச்சாரம்?" விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு என்பதே முழுக்க முழுக்க நிலைப்பாடாகக் கொண்ட இலக்கிலே "இதுவா தமிழ்க் கலாசாரம்?" எனவும் த இந்து பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாட்டினை பெரும்பாலும் நியாயப்படுத்தி வெளிக்காட்டிய, இந்து ஆசிரியரின் அண்ணன் மகளினைத் திருமணம் செய்துகொண்டவருக்குரிய சன் தொலைக்காட்சியிலே தொழிலாற்றும் மாலன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட திசைகளிலேயும், கருணானந்தம் பரமுவேலன் பதிவின் பின்னூட்டத்திலே வெளிவந்தது குறித்தும் இன்னோர் உள்ளிடுகையிலே சுட்டிப் பேச முடிந்தால் முயல்வேன்.

'06 செப்ரெ.,04 ஞாயிறு. 09:38 கிநிநே.


8 comments:

Anonymous said...

பெயரிலி உங்கள் விளக்கம் தெளிவாக இருக்கிறது. கடைசி பந்தியில் சொல்லியதை நானும் பார்த்தேன்.

Sri Rangan said...

இரமணிதரன்,வணக்கம்!உங்கள் பதிவுகுறித்துக் கருத்திடுவது,மறுப்பது-எதிர்ப்பது என்பதற்கப்பால் இதன் தாத்பரியமானது மிகவும் அவசியமானதென்ற வரலாற்றுத்தேவையை முன்னிறுத்தும் ஒரு அவாவினூடாகக் 'கடமை செய்து கிடக்கக் கடவாய்' என்பதே என் கருத்தாகும்.இது அவசியமானதாகும்.விமர்சனம்-சுயவிமர்சனமென்பது உட்கட்சி ஜனநாயகப் பண்பாகவிருக்கும் சூழலற்றவொரு போராட்டச் சூழலில்,தங்கள் சுய,அகத் திறப்பானது மிகவும் தோழமைசார்ந்தவொரு பதிவாகவிதைக் கொள்ளலாம்.எனவே இதைக் குறித்தான எதிர்வினையாற்றலுக்கப்பால் நாம் இத்தகைய தேவையை அனைத்துத் தளத்திலும் விரியும்படியாற்றவேண்டிய தேவை அவசியமென்பதை இதில் சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே கீழ்வரும் உங்கள் குறிப்புகளில் இருக்கும் இருவிதமான எண்ணத்தைச் சுட்டி அவசியமெதுவென்பதை நீங்களே தீர்மானிக்கக் கோருகிறேன்.

>>>>> ஈழத்தவரின் பாரம்பரியப்பிரதேசங்களென்பதும்இ மொழிஇ பண்பாடுஇ கலை வெளிப்பாடுகளென்பதும்இ ஈழத்தவரின் சுயநிர்ணயவுரிமையின் முழுமையான அடைதலிலேதான் தங்கியுள்ளன என்பதிலே எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அந்த அடைதல் இலங்கை என்ற கூட்டமைவின்கீழான இரு தேசங்களாகவோ அல்லது தனியான ஈழமென்ற தேசமாகவோ இருப்பது குறித்து எனக்குப் பெரிய அக்கறையில்லை; ஆனால்இ எந்தத்தீர்வு முழுமையான உரிமையைத் தருகின்றதோ அதுவே முக்கியமானது; தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளோ இந்திய அரசுகளோ ஈழத்தவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் இவையிவையெனத் தீர்மானிப்பதினை முழுக்க வெறுக்கின்றேன்; அத்தகு அரசுகளின் விசுவாசிகளும் தரகர்களும் எழுத்தூடகத்திலும் ஒலி ஒளி இணைய ஊடகங்களிலும் அவற்றினை எந்தப்பட்டுப்போர்வையின்கீழும் நெளியும் புழுக்களாக விற்பனை செய்வதனை இயன்றவரை கிழித்துக்காட்டி உள்நோக்குகளையும் திரிபுகளையும் தரகர்களையும் வெளிப்படுத்துவது என் கடமையென்று உணர்கிறேன். இதற்கு நான் ஈழத்தவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை; தர்க்க அடிப்படையிலும் பகுத்தறியும் தன்மையிலும் ஒரு மனிதனாகவே செய்யலாம்; ஆனால்இ ஓர் ஈழத்தவனாக இருப்பது அவ்வாறு செயற்பட ஓர் உணர்வுந்தலைத் தருகின்றது; அந்த உணர்வுந்தலைச் சிறப்புக்கூறாகப் பெற்றிருப்பதுஇ அவ்வாறு இம்முகமூடிகளை உரித்துக்காட்டும் கடமையை மேலதிகமாக என்னைப் போன்றவர்களிலே சுமத்தியிருக்கின்றதென்று நினைக்கிறேன்.<<<<<



>>>>>நாளையிலிருந்து ஈழ அரசியல் குறித்து வெளிவரும் பிறரின் எந்தப்பதிவிலுமே என் பெயரை இழுக்காதவரையில் எந்நிலையிலும் பின்னூட்டமிடுவதில்லை என்ற எல்லோருக்கும் நன்மை பயக்கும் முடிவினை எடுத்திருக்கிறேன். ;-) <<<<<


மேற்காணும் வாக்கியங்களுடாய் இருக்கும் அவசியத்தையும் பின்பு பின்னூட்டமிடுவதில்லையென்பது தேவையற்றது.உங்களுக்கு தேவையானதைச் செய்வது... உங்கள் பெயர் இழுத்துச் செய்வது அவசியம்.அதுதாம் தேவையுங்கூட!

நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

கொழுவி said...

பின்னூட்டமிடச் செய்வதற்காகவே உங்கள் பெயர் இழுபடும்.
ஆகவே பேசாமல் உங்கள் விரதத்தை வாபஸ் வாங்கிவிடுங்கள்.

உங்கள் பதிவையடுத்து 'விசமத்தனமான' அந்தத் தலைப்பை ஜனநாயம் (இதற்கு என்ன பொருள்?) அகற்றிவிட்டார்.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
அநாவசியமாக, இன்னொருவர் பதிவிலே போய் பின்னூட்டிப் பின்னூடி நிற்பதிலே வெறும் நேரவிரயமும் உளவழுத்தமுமே மிஞ்சுகின்றதென்பதாலே, ஏதாவது உருப்படியென்று சொல்லலாமென்று தோன்றினால், என் பதிவிலேயே குறித்துவிடலாமென எண்ணுகிறேன்.

கொழுவி,
பின்னூட்டத்திலே இழுப்பதுக்காகச் சொல்வதிலே இழுக்குக்காகச் சொல்வதுக்கெல்லாம் எதுக்குக் கருத்து? மற்றவற்றுக்கு வேண்டுமானால், ஒரு வரியிலே இல்லை/உண்டு சொல்லிவிட்டுப்போகலாம்.

இந்தப்பதிவு கொஞ்சம் 'நான்', 'நான்' என்றிருந்த பதிவென்றுதான் வாசிக்கிறவர்களுக்குத் தோன்றலாம். ஆனாலும், வாயை மூடமுன்னால், ஒரு முறை பெரிதாகத் திறக்கவேண்டியிருக்கின்றது ;-)

-/சுடலை மாடன்/- said...

உங்களுடைய நிலைப் பாட்டை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் இரமணி.

//இதற்கு நான் ஈழத்தவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை; தர்க்க அடிப்படையிலும் பகுத்தறியும் தன்மையிலும் ஒரு மனிதனாகவே செய்யலாம்; //

ஈழப்பிரசினையில் என்னைப் போன்றோருடைய நிலைப்பாடும் அதுவாக இருப்பதற்கான காரணத்தையும் சொல்லி விட்டீர்கள்.

//அந்த உணர்வுந்தலைச் சிறப்புக்கூறாகப் பெற்றிருப்பது, அவ்வாறு இம்முகமூடிகளை உரித்துக்காட்டும் கடமையை மேலதிகமாக என்னைப் போன்றவர்களிலே சுமத்தியிருக்கின்றதென்று நினைக்கிறேன்//

இப்படி உங்கள் கடமையாயிருக்கும் பொழுது, "நாளையிலிருந்து ஈழ அரசியல் குறித்து வெளிவரும் பிறரின் எந்தப்பதிவிலுமே என் பெயரை இழுக்காதவரையில் எந்நிலையிலும் பின்னூட்டமிடுவதில்லை என்று நீங்கள் சொல்வது முரணாயிருக்கிறது. தேவைப் படும் பொழுதெல்லாம் உங்கள் வாதத்தை முன் வைப்பது அவசியம் என்று நினைக்கிறேன். ஆனால் முட்டாள்தனமான முகமூடிகளுக்கெல்லாம் (யாரென்று ஒருவராலும் அறியப் படாதவர்களை குறிப்பிடுகிறேன்) பதிவு செய்ய வேண்டியதைத் தவிர்க்கவும், அவர்களின் முட்டாள்தனத்தை, அவர்கள் பாணியிலேயே எதிர் கொள்வதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தொடர்ந்து உங்கள் கருத்தைக் கூறி வாருங்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

உங்களுடைய நிலைப் பாட்டை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் இரமணி.

SnackDragon said...

பெயரிலி, அருமையான விளக்கமான பதிவு.

/மொழி அடிப்படையிலான தேசியமென்ற உணர்வினை இழிவுணர்வென்ற அடிப்படையிலே குற்றவுணர்வினை ஏற்படுத்த முயலும் நடைமுறையிலில்லாத வர்க்கம்சார் மரபுவாதபொதுவுடமைவாதிகளின் கருத்துத்திணிப்பும் அடியிலே மறைந்து மெல்லிய இந்துமேலாதிக்கம் உள்ளோட, மொழியடிப்படையிலான உரிமைகளைப் பின்தள்ள வற்புறுத்தும் இந்தியமேலாதிக்கவாதிகளின் (இவர்களிலே தமிழ்நாட்டினைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இற்றை மார்க்ஸியர்களும் முன்னை_மார்க்ஸியர்களும் அடக்கம்)/
மொழியை அழிப்பதனால்/முடக்குவதனால் நிச்சயம் ஒரு இனத்தை அழிக்கமுடியாவிட்டாலும் முழுதாய் முடக்கமுடியும் என்று தோன்றுகிறது.


புலிகளைப்பொறுத்தவரையில், அவர்களது கொள்கைகளிலும் , செயல்பாடுகளிலும் நிறைய மாற்றங்கள் உள்ளது என்றுதான் தோன்றுகிறது, ஒட்டு மொத்த வரலாற்றையும் பார்க்கும்போது. அதானால் கூட அவர்களாது,
சிறுவர்களை செய்யும் எக்ஸ்ப்ளாய்டேஷனும், பிற இயக்கத்தவர்களை கொலை செய்ததும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆனால், மிகவும் சிறுபான்மையான கூட்டத்தில் [இலங்கைத் தவிர்த்து யோசித்தால்] எழும் ஒரு விடுதலைப்போராட்டத்தில், இத்தகு செயல்பாடுகள் [இருப்பவர் அனைவரையும் போராளிகளாக மாற்ற முயல்வது] அதன் தேவையும் அவசியத்தையும் பொறுத்து மாறுபடும் என்று நினைக்கிறேன்.

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.
சங்கரபாண்டி, சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லும்நிலையையும் வெறும் குத்துக்கு உதை வகைப் பின்னூட்டங்களைத்தான் தவிர்க்க எண்ணுகிறேன். மற்றப்படி, பதிவிலே இலங்கைச்சிக்கல் குறித்து அறிந்தவரை, புரிந்தவரை எழுத முயல்வேன்.