Wednesday, September 28, 2005

கரைவு - 6ஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க...... &
கொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல் பின்னான குறிப்பு

திரு. மறவன்புலவு சச்சிதானந்தன் தமிழகத்திலே காந்தளகத்தினை வைத்திருக்கின்றபோதும், "ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும்" என்று சொல்வது மிகவும் பெருந்தன்மையுள்ள கருத்து. இதை அடிக்கடி நாம் ஈழத்தவருக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாகவிருக்கின்றது. ஒவ்வொருவரும் தாம் விரும்புவதை எங்கே பதிப்பிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரமென்பதை ஒத்துக்கொள்கின்றோம். ஆனால், பெரும்பாலான ஈழத்தமிழர்களின் நிலைமையைத் துணிந்து பதிப்பு, தொலைக்காட்சி, திரைப்படம் மூலம் வெளியிட மறுத்த மறுக்கின்ற திரித்த திரிக்கின்ற பெரும்பாலான தமிழகப்பதிப்பகங்களும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தொலைக்காட்சிச்செய்திகளும் திரைப்படத்துறையாளர்களும் வெட்கமின்றி ஈழப்பதிப்புகளை வர்த்தக ரீதியிலே அணுகுவதும் அவ்வணுகுதலை பல ஈழப்(புலம்பெயர்) "படைப்பாளிகள்" சாதகமாக்கிக்கொண்டு "ஈழப்படைப்பு, புடைப்பு, புடலங்காய்" என்று குறிசுட்டுக்கொண்டு பதிப்பதும் மிகவும் வேதனையளிக்கின்றது. தமிழ்நாட்டின் மிகச்சில படைப்பாளிகளும் பதிப்பகங்களும் மட்டுமே எக்காலத்திலும் ஈழத்தவர்களின் நலனிலே தம் நலன் கெடுகின்றபோதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கின்றார்கள்; இன்னும் செயற்பட்டிருக்கின்றார்கள்; இனியும் செயற்படுவார்கள். ஆனால், இன்றைக்கு இணையத்திலும் தமிழ்வெகுசன ஊடக, பதிப்பக, பத்திரிகைத்துறையிலே ஈழத்தவர்களின் படைப்புகள் எமக்கூடாகவேயென்றும் நாமே அவர்களைத் தாங்குகின்றோமென்றும் பதாகைபிடிக்கும் பிரபல்யங்கள் இந்த மெய்யான நலன்விரும்பிகளுள்ளே அடக்கமில்லை.

அதே நேரத்திலே, சச்சிதானந்தத்தின் "ஈழத்தவர் என்றாலே காமாலைக் கண்ணுடன் பார்க்கக் கூடிய தமிழகச் சூழ்நிலையிலும் (இராஜீவ் கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர் சிலோன் விஜயேந்திரன்) தரமான எழுத்துக்கும் படைப் புக்கும் அணுகு முறைக்கும் தமிழகப் பதிப்பாளர் தரும் ஆதரவு போற்றுதற்குரியது. மணிமேகலைப் பிரசுரத்தார் ஈழத்தவர் படைப்புகளை வெளிக் கொணரும் வேகத்தைப் பாராட்டுகிறேன்" என்ற கருத்தினை ஈழதேசிய அணுகுமுறையிலே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மணிமேகலைப்பிரசுரம் அடிப்படையிலே விற்பனையை முன்வைத்து எதையும் செய்யக்கூடியவர்கள். மணிமேகலைப்பதிப்பகத்தின் லெட்சுமணன் அவர்கள் ஒரு முறை திரு. நாராயணன் மாலன் என்ற இன்னொரு பத்திரிகையாளருடன் சேர்ந்து, வழக்கம்போல வாயை வைத்துக்கொள்ளமுடியாத, தற்போது இந்தியாவிலே பாதிநேரம் தஞ்சம் புகுந்து தானுமொரு பதிப்பாளராக உருவெடுத்துள்ள திரு. எஸ். பொன்னுத்துரை என்பவரின், "புலம்பெயர்படைப்புகளே தமிழிலக்கியத்தினை நிமிர்த்தி நிறுத்தப்போக்கின்றன" என்ற மாதிரியான கருத்துக்கு, எதிர்வினையாக அதேமேடையிலே "சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் என்று பட்டம் கொடுத்தவர்கள் நாமே" என்ற விதத்திலே பதிலிறுத்ததை இப்பாராட்டினை சச்சிதானந்தன் அவர்கள் மணிமேகலைப்பிரசுரத்துக்கு வழங்கும்நிலையிலே நினைவிலே கொள்கிறோம்; சுப்பிரமணியபாரதியையும் உ.வே.சாமிநாதரையும் ந. பிச்சமூர்த்தியையும் ரா. கிருஷ்ணமூர்த்தியினையும் மாதவையாவையும் ராஜமையரையும் மட்டுமே வைத்துத் தமிழிலக்கியவரலாறு கட்டப்படும் அவச்சூழலிலே அதன் நீட்சியாக தமிழிலக்கியத்தின் எதிர்காலவரலாறெழுதுதல் அமையக்கூடிய நிலை குறித்து அழுத்தி நினைவூட்டவிரும்புகிறோம்.

ஆயுதந்தாங்கு தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் முற்பட்ட காலமிருந்தே தமிழ்த்தேசியத்தினை முன்வைத்திருக்கும் திரு. சச்சிதானந்தன் இப்படியாக எத்தனையோ ஈழத்தமிழர் நலனையும் மெய்யாகவே பிணைத்துக்கொண்டு செயற்படுகின்ற நல்ல தமிழகப்பதிப்பகங்கள் (அவருடைய காந்தளகம் உட்பட) இருக்கும்போது, மணிமேகலைப்பிரசுரம் போன்ற சேற்றைக்கண்டால் பதித்து, ஆற்றைக்கண்டால் விற்கும் பதிப்பப்பங்களின் செயற்பாடுகளைப் பாராட்டுக்குரியதாகச் சொல்வது முற்றான புரிதலை அவர் கொண்டிருக்கவில்லையோவென ஐயமேற்படுத்துகின்றது.

இலெட்சுமணனின் தமையனாரான இரவி என்பவர் ஈழத்தின் திருகோணமலை தொடக்கம் இலண்டன், பெர்லின் வீதிகளூடாக அமெரிக்காவின் பொஸ்ரன் நகர்வரைக்கும் இப்படியான விற்பனை-பதிப்பக வர்த்தகராக எப்படியாக அலைகின்றார் ---- மன்னிக்கவேண்டும், ஈழத்தவர்களிடையே ஊடுருவித்திரிகின்றார் - என்பதை நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டேயிருக்கின்றோமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதற்கு, பதிப்பிலே தமது கோவணச்சலவைக்கணக்கும் சாம்பார்ச்சமையற்குறிப்பும் வந்தாலே போதுமென்ற வெறியிலே அலையும் புலம்பெயர்ந்த பெயராத ஈழத்தமிழர்களிலே பலரும் காவு போவது வெட்கத்துக்குரியது. ஆனால், இவர்களுக்கு தற்கால மணிமேகலையின் அண்மைக்கால பிட்சாபாத்திர வரலாறு தெரியாமலிருப்பதும் ஒரு காரணமாகும்.

ஈழத்தின்/ஈழத்தமிழர்களின் சுயமான சுயாதீனமான, சுதந்திரமான எதிர்காலத்துக்கு, இந்தியாவிலே முழுமையாகத் தங்கியிருக்கும் எந்த நிலையும் - அது பதிப்பகமாகட்டும், படைப்பாகட்டும், படமாகட்டும், எந்தப் பணியாரமாகட்டும் - நல்லது செய்யப்போவதில்லை. மிகச்சிறந்த உதாரணம், ஈழத்திலே தக்கிப்பிழைத்த விடுதலைப்புலிகள் இயக்கமும் தக்காது தேய்ந்த மாற்றியக்கங்களும். அதைவிட மிகவும் சிறப்பான கொள்கைகளும் ஆட்பலமும் மிக்க மீதி இயக்கங்கள் அழிந்தபோதும், விடுதலைப்புலிகள் இயக்கம் தக்கப்பிழைத்த முதன்மைக்காரணம், விடுதலைப்புலிகள் இயக்கம் தன் தளத்தினையும் உற்பத்தியினையும் முக்கிய நிலைகளையும் ஈழத்தினை மையமாக, ஈழத்திலே வைத்து செயற்பட்டதே.

அதனால், இன்றைக்கு இந்தியமேலாதிக்கவாதிகளின் கலாச்சார ('பண்பாடு' என்றால் அவர்களுக்குப் பிடிக்காது, 'கலாசார' என்றுகூட இயன்றவரை சரியாக எழுதாமலு மடம் பிடிப்பார்கள்) காவலர்கள் ஆடென ஆடவும் பாடெனப் பாடவுமே நமது தக்கித்திருப்பதற்கான பண்பாட்டுக்கோவையும் எதிர்காலமுமில்லையென்று ஈழத்தவர்கள் உணர்த்தவேண்டிய தேவையும் வாழவேண்டிய அவசியமும் எமது எதிர்காலச்சந்ததியினையிட்டேனும் உள்ளது.

திரு. சச்சிதானந்தத்தின் கருத்து, "I personally believe without India's effective intervention nothing can come to pass in Sri Lanka. And Indian intervention requires a good understanding of the ground situation in Sri Lanka" என்று இன்றுங்கூட இருக்கலாம்; ஆனால், எண்பதுகளிலே இராணுவரீதியாக ஊருடுவமுடியாது தோற்ற இந்திய மேலாதிக்கவாதிகள், ஈழத்திலே இன்றைக்கு வர்த்தக, பண்பாட்டுரீதியாக ஊடுருவ முயன்று ஓரளவுக்கு வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதை அவர் கவனிக்கவேண்டும்.

சன் தொலைக்காட்சி, கல்கி, மணிரத்தினம், மணிமேகலைப்பிரசுரம் தொடக்கம் விடுமுறைக்காலங்களிலே இந்தியக்கோயிற்சுற்றுலா, உடுபுடவை வாங்குதலென்று இந்தியமேட்டுக்குடிகளின் கலாசாரத்தினைத் தம் பண்பாடு என்று எண்ணி மயங்கும் ஈழத்தவர்களை அடுத்த இந்தியமேட்டுக்குடிமயமாக்குதலின் அடுத்த கட்டமே, இந்தியமேலாதிக்கக்கூறுகளை மையங்கொண்டியங்கும் தமிழகக்காவலர்கள் ஈழத்தவர்களின் படைப்புகளை எடுத்து தம்விருப்புப்படி உடைப்பிலே போடும் இந்நிலை.

தனிப்பட்ட அளவிலே எவரும் -ஈழத்தவரானாலும் சரி, வேறெந்த மானிடக்குஞ்சானாலுஞ் சரி- தமக்கு விரும்பியபடி எங்கும் பதிப்பிக்கலாம் எதையும் பதிப்பிக்கலாம்; அதை மறுக்கவில்லை; ஆனால், ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவரும் பதிப்புத்துறையிலே நெடுங்காலம் பணியாற்றுகின்றவருமான திரு. சச்சிதானந்தன், மணிமேகலைப்பிரசுரம் ஈழப்படைப்புகளை "துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" என்று வெளியிடுவதை, பாராட்டுவதைச் சரியான பார்வையிலே வந்திருக்கக்கூடிய முடிவாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்கள், இயன்றவரை பதிப்பகங்கள் தொடக்கம் படங்கள்வரைக்கும் கோயில் தொடக்கம் கோவணம்வரைக்கும் இந்தியமேலாதிக்கத்தினை முனைப்புடனோ அல்லது மூளையின் ஒரு மூலையிலேயேனுங்கூட மறைத்துவைத்தோ செயற்படும் கூட்டத்திற்கு ஒரு சதமேனும் மறைமுகமாகச் செல்லாமல் செயற்பட முயலவேண்டும். குறைந்தபட்சம், எக்காலத்திலும் இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்திலே, அதைக் கெடுக்காத ஈழநலனையும் முன்னெடுக்கும் எத்தனையோ பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலே உள்ளன. அவற்றினை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முயலவேண்டும்.

அதைவிட முக்கியமாக, ஈழத்தின் பதிப்பகத்துறை தொழில்நுட்பவளவிலே இன்னும் முன்னேறவேண்டும்; இது குறித்து விரிவாக தன் பதிப்புத்துறை குறித்த பதிவுகளிலே எழுதியிருக்கும் திரு. சச்சிதானந்தனுக்கு நன்றி. இலங்கையின் கொழும்பினை மட்டுமே சார்ந்திருக்காமல், ஸ்ரீலங்கா அரசின், இந்தியாமேலாதிக்க அரசின் ஊடகக்கூலிகளின் கட்டுப்பாடு செல்லுபடியாகாத கைபடாத கைபடமுடியாத ஈழத்தின் முடுக்குகளிலே இப்பதிப்பகங்கள் தோன்றவேண்டும். வெளிச்சம் போன்ற இயக்கம் சார்ந்த பதிப்பகங்களும் இயக்கம் சாராத இன்னும் பல தமிழ் பதிப்பகங்களும் முகிழ்க்கவேண்டும்.

ஆனால், தற்போதைய சூழலினைக் கவனிக்கும்போது, இதுவெல்லாம் நடக்குமென்று எனக்கு நம்பிக்கையில்லை; 80 களிலே இராணுவ, அரசியல்ரீதியாக ஊடுருவ முனைந்து தோற்ற மேலாதிக்க இந்தியா, இன்றைக்கு பொருளாதார, ஊடக, கலை, பண்பாட்டுரீதியாக ஊடுவ முனைந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதே சோகமான யதார்த்தமான நிலையாகும். :-(

எனினும், இயன்றவரை இந்தியமேலாதிக்க/மேட்டுக்குடிகளின் ஈழ எடுபிடிகளை நாம் அடையாளம் கண்டுகொள்வதும் அவர்களின் பாதைகளை நமக்கேனும் நாம் தேர்ந்துகொள்ளாமல் மறுத்துக்கொள்வதும் மிகவும் அவசியமாகும்.

வாழ்க ஈழம்! வளர்க தமிழ்த்தேசியம்!!பாடலுக்கு நன்றி: தமிழ்தேசியம். அமை

'05 செப்ரெம்பர், 28 புதன் 14:45

பி.கு: இப்பதிவு, இப்பதிவினையும் இதுபோன்ற பதிவுகளையும் இப்பதிவுகளையிடுகின்ற எம்மைப் போன்றவர்களுக்கு இட முடியாதென தாம் நினைக்கும் விதத்திலே கிண்டலடித்து ஒரு கிழ மைப்பதிவிட்டுப் பிழைக்க மட்டுமே பெருந்தன்மையும் பேரறிவும் கொண்ட எல்லா இந்தியமேலாதிக்கச்சின்னக்குசுமூடிக்கழுதைப்புலிகளுக்கும் நம் பின்னூட்டத்தகுதியில்லாத உதிர்ந்த .யிர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. கவனிப்புக் கலையும் இவ்வுரோமங்களுக்கு, தமிழ் அத்துணை பிடிக்காதென்பதால், Please serve yourself and go on living on what I pee(d) on my exdispense ;-) :-)
_/\_


பிற்போக்கைக் கண்டிலர் விண்டிலர் ;-)
கரைவு~

16 comments:

Anonymous said...

Bravo!

KARTHIKRAMAS said...

/இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்திலே, அதைக் கெடுக்காத ஈழநலனையும் முன்னெடுக்கும் எத்தனையோ பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலே உள்ளன. அவற்றினை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முயலவேண்டும்/

இங்கே சில உதாரணங்களை சொல்லியிருக்கலாம். அதனால் பிற சிலவற்றை மறுக்க முடியும்.

டிசே தமிழன் said...

பெயரிலி அவசியமான பதிவு. மணிமேகலைப் பிரசுரத்தின் சுரண்டல்கள் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கவேண்டும், இந்து (ராமை) போல. அதேவேளை ஈழத்தமிழர்பால் அக்கறையுள்ள தமிழகப் பதிப்பகங்களையும் நீஙகள் குறிப்பிட்டமாதிரி நினைவுபடுத்தத்தான் வேண்டும். இப்போது வன்னியில் கூட நல்ல தரமாய் பதிப்பிக்கின்றார்கள். 'மூன்றாம் மனிதன்' பதிப்புக்களும் நல்ல த்ரத்தில் இருந்தன என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

icarus prakash said...

சச்சிதானந்தத்தின் பதிவைப் படித்த போதே, இது குறித்து உங்களிடம் நக்கலாக ஏதேனும் பின்னூட்டம் வரும் என்று அனுமானித்தேன். இத்தனை நீளப்பதிவாக வருமென்று நினைக்கவில்லை. ம. க. சி யின் லேனா கோஷ்டி குறித்தான அபிப்ராயம், ஒரு politically correct statement. அவ்வளவே, அதற்கா இந்த அளவுக்கு சத்தாய்க்க வேண்டிய அவசியமில்லை என்பது எ.தா.க

டிசே தமிழன் said...

கார்த்திக், நானறிந்தவரையில் விடியல், காவ்யா (பெஙகளூர் ராமகிருஷ்ணனினது), அன்னம் (தற்சமயம் அகரம்), ஸ்நேகா (?), அடையாளம், கருப்புப் பிரதிகள் போன்றவற்றை நல்லவையென அடையாளம் கண்டு வைத்திருக்கின்றேன். எங்கும் தவறிருப்பின் யாரும் தலையில் குட்டலாம் :-).

மு. சுந்தரமூர்த்தி said...

DJ
A quick correction. "Kavya"'s owner is Dr. C. Shanmugasundaram which he started 80s when he worked at Bangalore. It has moved to Chennain few years back.

ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி அவசியமான பதிவு சில தூண்டுதல்களையும் உருவாக்கியிருக்கிறது.டி.சே பத்மநாப ஐயர் சிலவேளை பதிப்பகங்களின் பட்டியலைத் தரக்கூடும்.நீங்கள் சொல்லும் ராமகிருஷ்ணன் 'க்ரியா' ராமகிருஷ்ணன் என நினைக்கிறேன்

மு. சுந்தரமூர்த்தி said...

டி.ஜே.
என்னுடைய முந்தைய பின்னூட்டமும், ஈழநாதனுடைய பின்னூட்டத்தையும் சேர்த்து வாசிக்கவும். க்ரியா ராமகிருஷ்ணன், காவ்யா சண்முகசுந்தரம்.

ஈழத்துக்குள்ளேயே பதிப்புத் தொழில் வளர்வது இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்கு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் பங்கைச் செலுத்தும். அதற்கான சூழலை (வசதிகளை அல்ல)அங்கு உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பு புலிகளுக்கு உள்ளது.

வசந்தன்(Vasanthan) said...

எங்கட ஆக்களின்ர ஆட்டுமந்தை மனப்பான்மை இப்போதைக்கு மாறாது எண்டுதான் நினைக்கிறேன். அதிலயும் நாங்கள் நம்பிக்கை வச்சிருக்கிற சக்திகளே அப்பிடிப்போறதுதான்.

வன்னியில இப்ப நல்ல தரமான அச்சகங்கள் வந்திட்டுது. சில நல்ல அச்சிதழ்களையும் தந்திருக்கினம். கொழும்போட ஒப்பிடேக்கக் கூட தரத்தில உயர்ந்தும் விலையில குறைந்தும் இருக்கிறது ஆச்சரியமாயிருக்கு.
ஆனா அவை பயன்படுத்தப்படுறேல எண்டதுதான் உண்மை.

பண்டிதர் பரந்தாமன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட வேர்ச்சொல் அகராதியொன்று மணிமேகலைப்பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்டது. வன்னியிலிருந்து, அதுவும் புலிகளின் தமிழ்த்துறையில் முக்கியமானவராயிருக்கும் பண்டிதரின் நூல் இப்படி வெளிவந்தது ஆச்சரியம்தான். இதன் முழுச்செலவையும் பதிப்பு வேலைகளையும் ஏற்றுக் கொண்டவர் புலம்பெயர்ந்த தமிழரொருவர்.

இதுபற்றி நான் கேட்டதுக்கு, "புத்தகம் வித்து லாபம் வாறதெண்டதவிட எங்கட நோக்கம் புத்தகங்கள் நிறைய இடங்களுக்குப் போய்ச்சேர வேணுமெண்டதுதான். வன்னியில அச்சிட்டா, வன்னியைத் தாண்டி அது மற்ற இடங்களுக்குப் போறதுக்குரிய சந்தர்ப்பங்கள் குறைவு. மணிமேகலைப்பிரசுர வெளியீடுகளுக்கென்று நியமமாக பெருந்தொகைக் கோரல் தமிழர்களிடத்தில், குறிப்பாக கல்விநிறுவனங்கள், நூல்நிலையங்களிடத்திலுண்டு. ஆகவே நாங்கள் அதில பதிப்பிச்சனாங்கள்" எண்டு எனக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அந்த விளக்கம் உண்மைதான். அவர்கள் பார்வையில் அது தவிர்க்கமுடியாததாகவே இருக்கிறது. புத்தகங்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதுதான் முதல்செய்ய வேண்டியது.

இங்கே பண்டிதரின் புத்தகங்களைப் பொறுத்தவரை அது எந்த லாபத்தையும் இவர்களுக்கு ஈட்டித்தரப்போவதில்லை. ஏனென்றால் வெறும் 200 புத்தகங்கள் மட்டுந்தான் இவர்களுக்குக் கொடுக்கப்படும். மிகுதி விற்பனை உரிமை முழுவதும் பதிப்பகத்துக்கே. 200 புத்தகங்களையும் வித்தால்கூட எந்த லாபமும் வரப்போவதில்லை.

உந்தப்பதிப்பகத்துறையில நிறையக்கூத்து நடக்குது. நூல்நிலையத்துக்கு அன்பளிப்பு எண்டு புத்தகங்களை அள்ளிக்குடுப்பினம். பிறகுபாத்தா அதுக்கு புலம்பெயர்ந்த ஆராவது நிதியுதவி செய்திருப்பினம்.

-/பெயரிலி. said...

நண்பர்களுக்கு, பின்னூட்டங்களுக்கு நன்றி.

கார்த்திக்,
நான் சொல்லவந்தது திராவிடக்கட்சிசாராத (இந்திரா கொலைமுயற்சி வழக்கிலே கருணாநிதிக்கு எதிராகச் சாட்சி சொன்னதாகச் சொல்லப்படும்) பழ. நெடுமாறன் தொடக்கம் இன்னும் எத்தனையோ அரசியல்வாதிகள் குறித்து பூச்சாண்டிகாட்டிகள் வைக்கும் முக்கியமான பயமுறுத்தல், "ஈழவிடுதலைக்கு ஆதரவானவர்கள் இந்தியாவினைக் கூறுபோட முயல்கின்றவர்கள்." இதேமாதிரியான அழுத்தங்கள் திரைப்பட இயக்குநர்கள் (நான் தங்கர்பச்சானைப் பற்றிப் பேசவில்லை; புகழேந்தி குறித்துப் பேசுகிறேன்) குறித்தும் கட்சிசார் தணிக்கைத்துறை அதிகாரிகள் ஏற்றியிருக்கின்றார்கள். அப்படியாகத்தான் பதிப்பகங்களினையும் திரிக்க முயல்வார்கள். பிற்பாடு சுந்தரமூர்த்தி, டிஜே தமிழன், தன் ஒரு பதிவிலே சச்சிதானந்தன்கூட தந்த பதிப்பாளர்கள் இந்தியதேசியத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்களா? (இவர்களிலே பெரும்பான்மையோர் ஈழதேசியத்தினைக்கூடக் கருத்திலே கொள்ளாத, ஆனால், எக்காலத்திலும் ஈழப்படைப்புகளைப் பதிக்க முன் வந்தவர்கள்) இவர்களை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும். மணிமேகலைப்பிரசுரமோ, காலச்சுவடோ, உயிர்மையோ ஒருபோதும் நிகழ்கால, ஈழதேசிய அரசியற்சுவடு சார்ந்த படைப்புகளை வெளியிட்டுக் கண்டிருக்கின்றீர்களா? இவர்களின் வெளியீடுகளை உற்றுக்கவனித்தீர்களென்றால், அவை அடங்கும் வகைகள்

1. இந்தியமேலாதிக்க ஆதரவினை வேண்டி நின்ற, விமர்சிக்காத எண்பதுகளின் ஈழ அரசியல்சார்படைப்புகள்

2. அரசியல்சாராத படைப்புகளைத் தரும் ஈழ(ப்புலம்பெயர்(வேண்டும்)) எழுத்தாளர்களின் படைப்புகள்

3. தானும் ஒரு முன்னைய போராளி என்ற முகத்தோடு ஈழப்போராட்டத்தினைக்கூறிட்டுப் பேசும் படைப்பாளிகளின் படைப்புகள் (இவை தற்போதைய ஈழதேசியத்தினை மெல்லியதாகவோ (சேரன்) கடுமையாகவோ (சி. புஷ்பராசா) விமர்சிக்கும் பாங்கு கொண்டிருக்கவேண்டும் - ஆனால், இந்தியாவின் சிறுநீர்த்துளி குறித்தோ எலும்புக்கூடுகளின் ஊர்வலம் குறித்தோ எந்தக்கேள்வியும் எழுப்பியிருக்கக்கூடாது)


வசந்தன்,
புலம்பெயர்ந்தவர்கள் பலர் காசைக் கொடுத்து அட்டைப்படத்தின் பின்னாலே தமது முகங்களையும் விலாசங்களையும் பொறித்துக்கொள்ளத் தயாராகவிருக்கும்போது, மணிமேகலைப்பிரசுரம் வெல்லத்தான் செய்யும்.

குறைந்தது, ஈழப்படைப்பாளிகள் தமது எழுத்தின் முக்கியத்துவத்தினை, இருப்பின் மதிப்போடு உரைத்துப் பார்த்துக்கொண்டு செயற்பட்டால், இந்நிலை ஏற்படாது.

சுட்டுப் பத்துநாட்களுள்ளே வீரப்பன் வதம் குறித்து அள்ளிக்கொட்டி அடுத்தவனுக்கு முன்னால் புத்தகம் போட ஓடும் அவலச்சூழலிலே, கொண்ட கொள்கையாவது பனக்கொட்டையாவது. :-(

KARTHIKRAMAS said...

படைப்பாளிகளையும் , பதிப்பகங்களையும் எந்தச்சூழ்நிலையிலும் வணிக,கருத்தளவிலான வேறுபாடுகளால் ஒன்று சேர்ப்பதென்பது கடினமான விசயமென்றாலும், ஈழத்தேசியம் என்ற ஒரே நோக்கத்துக்காக செயல்படுகின்றவர்கள், அந்த ஒரு நோக்கத்துக்காகவேனும் ஒன்றுசேரவேண்டும்.
ஈழத்தமிழர்கள் இவர்களை(இந்தியத்தேசியத்தின் மேலாதிக்கத்துக்கு வால் பிடிப்பவர்களை) மறுக்கவாவது புத்தக,அச்சகங்கள் மூலம் மறுத்தல்களை காட்ட சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டியட கட்டாய்த்தில் நாம் உள்ளோம். எதிர்வினைகள் ஆற்றப்படுதல் வேண்டும்.

டிசே தமிழன் said...

சுந்தரமூர்த்தி, ஈழநாதன் திருத்தங்களுக்கு நன்றி. நான் குறிப்பிட விளைந்தது, ராமகிருஷ்ணனின் 'க்ரியா' பதிப்பகம்.
.....
Bro, Why your blog is keep asking me to enter a verification word? could you check when you have time. Thankx.

-/பெயரிலி. said...

எல்லாமே அநாமதேய ஓட்டோமேட்டு ஆங்கிலவிற்பனைப்பிரதிநிதிகளை, "அய்யா! உமது உள்நுழைவு விரும்பத்தகாதது" என்று அடித்துக்கலைக்கத்தான்.
இந்த Bitக்கு மண்சுமக்கான்களுக்கான அடி, என் முதுகு சேர்ந்து எல்லோரின் முதுகுலேயிலேயுந்தான் விழுகிறது. ;-)

Sri Rangan said...

இரமணி தங்கள் பதிவில் விரவிக்கிடக்கும் கருத்துக்கள்,கவனிப்புகள் அவசியமானது.ஈழத்தில் பதிப்பது,வன்னியில் புதிய பதிப்பகம் அமைப்பது குறித்துக் கடந்தவருடம் திரு.பற்றிமாகரன் ஐ.பி.சி வானொலியில் கருத்தாய்வு செய்ததும் ஞாபகத்தில் வருகிறது.அவரது கருத்தும் தங்கள் கருத்தோடு ஒன்றி வருவதே.ஈழத்தில் பல பிடுங்குப்பாடானது ஒருவரையொருவர் தலைவெட்டுவதுதாம் பலபடைப்பாளிகளை தமிழகத்துப் பதிப்பகங்களை நாடவைத்தது.உதாரணமொன்றும் கூறுகிறேன்:சரிநிகரில் கவிதைகள் எழுதியவரும்,அப்பத்திரிகைகளில் வேலை செய்தவருமான இரமணீஷ் என்ற அஸ்வகோஷ் நல்ல படைப்பாளி.அவரது கவிதைத் தொகுப்பை (வனத்தின் அழைப்பு) இலைங்கையில் சரிநிகர் ஆதரவோடு நிகரி வெளியிட்டது.பின்பு அவர்களுக்குள் பிடுங்குப்பாடு வந்து அத்தொகுப்புப் பற்றி நான் எழுதிய விமர்சனத்தைக்கூடச் சரிநிகர் இருட்டடிப்புச் செய்தது.அதன் கையெழுத்துப் பிரதியை இரமணீஷ்(அஸ்வகோஷ்) சரிநிகரிடம் மல்லுக்கட்டிப் பின்னாளில் வேண்டியதாக எனக்கு எழுதினார்.இந்த விமர்சனத்தை நண்பன் கலைச்செல்வன் தனது எக்ஸில் போட்டான்.இதே அஸ்வகோஷ் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான'என் வசந்தம் வராமலே போய்விட்டது' என்பதை மணிமேகலை மூலமே வெளியிட்டார்.அத்தொகுப்பானது வெறும் கேவலமான முறையில் பதிப்பிக்கப்பட்டது.வடிவமைப்பு அவ்வளவு கேவலமகச் செய்யப்பட்டது.காரணங்கள் இல்லாமல் பலர் தமிழகத்தை நாடுவதில்லை.ஒரு அற்புதமான கவிஞனின் நிலையைப் பார்த்தீர்களா!

அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

எங்கே போயிட்டீங்க பெயரிலி?.நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.
..aadhi

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
உங்கள் கருத்துக்கு நன்றி. உடன் பதில் போடமுடியவில்லை. மன்னிக்கவேண்டும்.

ஆதி,
அன்புக்கு நன்றி.