Wednesday, August 31, 2005

புலம் - 17

தங்கர்பச்சான் தலை உருள்கிறது; திரைப்பட உலகினை ஆவென்று பார்க்குமொரு சமூகத்தின் முன்னே அதன் ஒளிவெள்ளத்திலே உலாவுகின்றவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது விவாதப்பொருளாகிவிடுகின்றது; ஹொலிவுட்டின் (உ)ரொம் க்ரூஸ் அண்மையிலே சயின்ரோலஜி குறித்து என்பிசி இன் மற் (உ)லோவரின் காலைநிகழ்ச்சியிலே தான் நடித்த War of Worlds இனை விளம்பரப்படுத்த வந்து War of Words நிகழ்த்தி, வேண்டாமல் ப்ரூக் ஸ்ல்ட்ஸுக்கும் தாய்மையின் நெறி எப்படியாக இருக்கவேண்டுமென்பது குறித்து அறிவுரைகூறி சலசலப்பினையும் ஊடகங்களுக்கு மெல்ல அவலையும் கொடுத்திருந்தார். ('Blue Lagoon' Brook Shields இற்கு என்றபடியாலே விட்டுவிட்டேன்; 'Paradise' Phobe Cates இற்குச் சொல்லியிருந்தால், அண்ணருக்கு பொஸ்ரன் பக்கம் அடுத்த முறை வரும்போது நடந்திருக்கக்கூடியதே வேறு). போலிவுட்டிலே, ஸக்தி கபூர், ஸல்மான் கான்-மான் என்று தொடர்ந்து ஏதாவது அவல் பொரிகின்றது. கோலிவுட் மட்டும் குறைந்ததா என்ன? நிறைய நடக்கின்றது.

ஆனால், அடிக்கடி திறக்கத் தெரியாமல் வாயைத் திறக்கின்றவர்களுக்குமட்டும் சிக்கல் பெரிதாகிவிடுகின்றது; அதுவும் குறிப்பாக, பெரும்பான்மையிலிருந்து விலகி நின்றுகொண்டு, கண்ணாடி வீட்டுக்குள்ளே கல்லெறிகின்றவர்களுக்கு மிகவும் சிக்கல். அதுதான் தங்கர்பச்சானுக்கு நிகழ்ந்திருக்கின்றது. தங்கர்பச்சான் குறித்து தங்கமணி மிகவும் சுருக்கமாகவும் அருமையாகவும் எம். கே. குமாரின் பதிவிலே சொல்லியிருக்கின்றார்; வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது ('இவைகள்' என்று எழுதுவதைத் தவிர ;-)).

தயாரிப்பாளர் தங்கர்பச்சானின் பக்கம் கூலி- வேலை நேரம் தொடர்பாக நியாயமிருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். அது குறித்து, தொடர்ச்சியாக நான் வாசித்திருக்கவில்லை. அதனாலே ஏதும் சொல்லமுடியாது; ஆனால், அவர் பக்கம் நியாயமிருக்கிறதோ இல்லையோ, தங்கர்பச்சான் "நடிகைகள் விபசாரிகள்" என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்திலே சொன்னால், அவரின் அக்கருத்தினை எந்தக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தமுடியாது; நியாயப்படுத்தத்தேவையில்லை. மன்னிப்பு பிரச்சனையை ஆற்றுமோ, அல்லது அவர் குறித்த மற்றவர்களின் பார்வையை மாற்றுமோ தெரியாது; ஆனால், அதற்கு அவர் மன்னிப்புக் கேட்பதுதான் நியாயமே - அஃது அவரினை ஒரு பகிடிக்குரிய பண்டமாக, வித்தையாட்டப்படும் குரங்கின்நிலையிலே மற்றவர்கள் பார்க்க வைத்தபோதுங்கூட.

அவமதிப்புக்குரிய பாத்திரப்படைப்புகளையும் காட்சிகளையும் நகைச்சுவை, பண்பாடு என்ற விதத்திலே உள்ளிடும் படங்களிலும் நடிகர்களும் நடிகைகளும் வாய்ப்புக்கிடைத்தாலே சரியென்ற விதத்திலே நடிக்கவும் செய்கின்றார்கள். பாடலாசிரியர்களும் கதாசிரியர்களும் 'பெண் என்றால் இப்படியாகத்தான்' என்று வரையறுக்க, அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கும் கேடான நிலையையும் காணலாம். ஆனால், இவை மறைமுகமான ஆமோதிப்பென்று விட்டுவிடலாம். தயாரிப்பாளர்.எதிர்.நடிகர் என்ற நோக்கு என் கரிசனைக்கு அப்பாற்பட்டதாலும் அந்தக்கோணத்திலே நிகழ்ந்தது முழுக்க எனக்குத் தெரியாததாலும் ஏதும் சொல்லமுடியாது.

ஆனால், இந்த விடயம் தொடர்பாக வேறு சில பக்கங்கள் பார்க்கப்படவேண்டியவை; குறிப்பிடத்தக்க இரண்டு.

1. அவதூறு பேசுதல் என்பது, அரசியலும் திரையுலகும் கலந்த கோடம்பாக்கத்திலே இன்றைக்கு நேற்றைக்கு நிகழ்ந்ததல்ல; திரைப்படக்காரர்களைக் கூத்தாடிகளென்று முதலமைச்சர்களாகவிருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லியிருந்தார்கள்; அஃது இழிவுபடுத்தும் நோக்குத்தான். எஸ். எஸ். சந்திரன் போன்ற அரசியல்நடிகர்கள் (முன்னாள்) பெண்நடிகைகள் பற்றி, முன்னாள் சொன்னதெல்லாம் இழிவு நோக்குத்தான். கூட நடிகைகளை, சக ஜரிதாபீடா நடிகர்கள் பறக்கும் விமானத்திலே, அவமானப்படுத்துவது தொடக்கம், தொட்டு அழுத்துவது தொடக்கம், வெளிப்புறப்படப்பிடிப்புகளிலே அத்துமீறி நடிகைகள் அறைக்குள்ளே நுழைவதுவரைக்கும் கிசுகிசுக்கள் வராத சஞ்சிகைகள் இல்லை; அப்படியான "நடிகைகளின் கதைகளை" விற்றுப்பிழைக்காத கௌரவமான பத்திரிகாசிரியர்களுமில்லை. அந்த நேரங்களிலே எதுவுமே நடிகர்கள் சகநடிகைகளுக்காகக் குரல் கொடுத்துவரவில்லை. (ஹொலிவுட்டிலே இவ்வாறு நடிகைகளுக்கு நிகழ்பவை குறித்து அண்மையிலே ஒரு குறை_சுயசரிதை வந்திருக்கின்றது). நடிகைகள் நடிகர்களை அவமதிப்பதும் (ரஜனிகாந்த்~மனோரமா) நடந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கர்பச்சானை நடிகர்சங்கக்கூட்டத்திற்கு வரச்செய்து, இறுதியாக, "இப்படியாக நடந்தால், தொழில்புரிய மறுப்புத்தான்" என்று சொன்ன விஜயகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே, தொலைக்காட்சி நடிகையான புவனேஸ்வரி தொடர்பாகச் சொன்னது, "தொலைக்காட்சிநடிகைகள் மட்டுமே விபசாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; சினிமா நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதில்லை." குஷ்பு, ராதிகா, தேவயானி, மனோரமா, சரிதா, காந்திமதி தொடக்கம் எத்தனையோ திரைப்பட நடிகைகள் தொலைக்காட்சியிலே பெரும்புகழடைந்திருக்கும் இந்நேரத்திலே, இவர் சொன்னது குறித்து எந்த நடிகரும் நடிகையும் எதையும் கேட்டதாகத் தெரியவில்லை; கண்டித்ததாகவும் தெரியவில்லை.

2. தங்கர்பச்சான் குறிப்பாகத் தாக்கப்படுவதற்கான காரணம், 'நடிகர்-எதிர்-தயாரிப்பாளர்' என்ற கூட்டமைப்புகளுக்கிடையேயான பலப்போட்டியிலே, இவர், முழுமையாக, ஒரு தமிழ்த்தயாரிப்பாளருக்குரிய பொதுப்பண்புகள் கொண்டிராததால், தயாரிப்பாளர்கள் முழுமையாக ஆதரிக்கமுடியாத ஆளென்பதும் ஆனால், அதே நேரத்திலே தயாரிப்பாளர் என்ற குறியீடாக இவர் பயன்படக்கூடுமென்பதும் இருக்கலாம். மேலும், குறிப்பாக அவரின் கார்காலநுணல்வாயின் வினை குறித்தும் காணவேண்டும்; இவர் இரஜனி குறித்துச் சொன்ன கருத்துகளின் பின்னால், சில ஆண்டுகளின் முன்னால், இணையத்திலே தமிழ்க்குழுமங்களிலே இவர் ரஜனியைத் தாக்கிப்பேசினாரென்ற காரணத்தினாலே மட்டும் "(இ)ரஜனி என் வீட்டிலே ஒண்ணுக்கடித்தார்" என்று அணுக்கத்தார் பதிவுகள் போடக்கூடியவர்களாலே தாக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கின்றோம்; இவரும் சேரனும் ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளுக்கும் பொலீஸுக்கும் கொடுத்த பெண்ணினாலே இழுத்தடிக்கப்பட்டார்கள்; பின்னால், அப்பெண் சொன்னவை பொய்யெனத் தகவல்கள் வந்தன. அந்த விசாரணையும் அதன் முடிவுகளும் என்ன ஆயின என்பது குறித்தோ, அல்லது சுடச்சுட மெல்லும் வாய்க்குப் பொய்யவல் கொடுத்தது குறித்தோ எந்த அச்சூடகமும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், இப்படியான நிலை, 'சேரன், தங்கர்பச்சான் போன்றவர்கள் காட்டமாகக் குறிவைத்து திரைப்படவுலகத்திலும் பத்திரிகையுலகத்திலும் இணையத்திலும் சிலரினாலே தாக்கப்படுவதற்கு தங்கர்ப்பச்சானின் ஓவெனத் திறந்த வாய்மட்டுமே முழுக்கக் காரணமெனச் சொல்லிவிடமுடியாது' என்ற கருத்துந்தலையே தருகின்றது; அவருடைய அரசியல்நிலைப்பாடும் அதிலே பெரும்பங்கு நடத்துகின்றதென்றே சொல்லலாம். தங்கமணி சுட்டிக்காட்டியதுபோல, தங்கர்பச்சானின் இக்கருத்தினை எதிர்த்துப்பேசுகின்ற திரைப்படம்சாராதவர்களிலே சிலர், சங்கராச்சாரியாரின்மீது அனுராதா ரமணன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியோ அது ஏன் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையிலே வெளிவர அதன் அன்றைய ஆசிரியர்கள் விடவில்லையென்பது குறித்தோ ஒரு கருத்தும் சொல்லவில்லையென்பதைக் காணவேண்டும்.


தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்துவெளிப்பாடு எதுவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது; அதேபோல, நடிகைகள் குறித்து இன்னும் "எம்பிபிஎஸ் படித்து பெரிய வக்கீலாகியிருப்பேன்" 'ஜோக்' போடுகின்றவர்கள் குறித்தும் நடிகைகள் குறித்து சொல்வன்முறை, உடல்வன்முறை செய்யும் சகநடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும் தங்கர்பச்சானை அவரின் திரைப்படம்சாரா அரசியல்குறித்து இலக்குவைத்துத் தாக்குகின்றவர்கள் குறித்தும் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும்.

'05 ஓகஸ்ற் 31, புத. 16:54 கிநிநே.11 comments:

Thangamani said...

பதிவுக்கு நன்றி. இந்த விசயத்தில் தொடங்கி பெண்கள்பற்றியும், பாலியல் பற்றியும் முடை நாற்றம் வீசும் தமிழ் மனோபாவம் குறித்த பதிவொன்றினை எழுத விரும்பினேன். நேரமில்லை. ரோசாவசந்த் குமாரின் பதிவிலே இட்ட பின்னூட்டு அத்தகைய கேள்விகளிலேயே மையங்கொண்டிருப்பதாய் புரிந்துகொள்கிறேன். இந்த விசயத்தில் நானும் தயாரிப்பாளர்-நடிகர்-அரசியல் பற்றி பேசு எதுவுமில்லை; ஏனெனில் அது எனக்குத்தெரியாது; அவசியமும் இல்லை. நான் பேச விரும்பியது தங்கரின் ஆணாதிக்க-நோய்பிடித்த பாலியல் மனப்பான்மை தொடங்கியே. இதை சங்கராச்சாரியார் வேலைக்குப்போகும் பெண்கள் அனைவரும் ஒழுங்கக்கெட்டவர்கள் என்று சமூகத்தின் பெரும்பகுதி பெண்களைப் பற்றி சொன்னபோதோ, அல்லது விதவைகள் தரிசு நிலங்கள் என்று சொன்னபோதோ, அல்லது பெண்களின் ஒழுக்கம், ஆடைகள், பண்பாடு, எது முன்னேற்றம் என்பன பற்றியெல்லாம் சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி நீதிபதிகள் (நியு படத்தின் மீதான விசாரணையில் பெண்களின் முடி, புகைக்கும் பழக்கம் பற்றிய கருத்து) வரை ஆணாதிக்கக் கருத்துத் திணிப்பை கண்டவிடத்திலெல்லாம் எழுத நினைத்தது போலத்தான் இப்போதும் எழுத நினைத்தேன். இந்த பால் சார்ந்த துவேசம், இழிநோக்கு உடம்பில் இருந்தே ஆரம்பிக்கிறது. நேரம் கிடைத்தால் எப்போதாவது எழுதலாம். ஏனெனில் இன்னும் சூப்பர் ஸ்டார்கள், சங்கராச்சாரியார்கள், நீதிபதிகள், தங்கர்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

பதிவுக்கு நன்றி. இந்த 'இவைகள்' குறித்து கவனம் கொள்கிறேன். சுட்டியமைக்கு நன்றி!

Padma Arvind said...

பெயரிலி

தனி மனிதர்கள் மட்டும் இல்லை ஊடகங்கள் கூட பெண்களை கேவலமாக சித்தரித்து வந்திருக்கிறார்கள். இது மாறப்போவதும் இல்லை. இதில் இன்னும் மோசம் என்ன என்றால், ஜாதகத்தை பார்த்து நடத்தையை கணிப்பது. இது புதிதாக ஆரம்பித்திருக்கிறதா இல்லை எனக்கு இப்போதுதான் தெரிந்ததா என்று தெரியவில்லை. மனம் சஞ்சலப்படும், ஜாதகம் சொல்கிறது எனவே படிப்பை நிறுத்திவிடுங்கள் என்றெல்லாம் சொல்லும் அறிவுறை கேட்டு படிப்பை நிறுத்திய பெற்றோர்களை பார்க்கின்றேன். தன் மகள் மீது, சகோதரிமீது மனைவி மீது ஏன் தாய்மீதே நம்பிக்கையில்லாமல், காலம் சரியாக கணிக்கப்படாத ஜாதகத்தை நம்புபவர்களையும் வாழ்க்கையை தொலைத்த பெண்களையும் பார்க்கிறேன். இதில் தங்கர் போன்றவர்கள் எம்மாத்திரம். பெண்ணோடு பிறந்திருந்தும் பெண்ணோடு வாழ்ந்திருந்தும் பெண்ணாக பிரந்தவரை கண்ணாக யார் நினைத்தார் என்ற பாடல் தான் நினைவில் வருகிறது

முகமூடி said...

// தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்துவெளிப்பாடு எதுவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது // அதற்கு மேல் இவ்விஷயத்தை பற்றி யோசிக்க ஒன்றுமில்லை என்பதே எனது கருத்தும். ஆனால் கண்டிப்பதை விட இதன் பிண்ணனி அரசியலையும் நடிகைகளின் கற்பு குறித்த எள்ளலையும் வெளிப்படுத்தும் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு கேள்வியை மட்டுமே எனது பதிவில் கேட்டிருந்தேன்.

கற்பகவினாயகத்தின் மட நம்பிக்கைகள் பற்றியோ, பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் விஷயத்தில் 'உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதால் அவரின் கௌரவம் கருதி' அவகாசம் கொடுத்த அநீதி பரிபாலனத்தை பற்றியோ அல்லது சங்கராச்சாரியாரின் பிற்போக்குதனத்தை பற்றியோ குரல் கொடுத்த திரைப்படம் சாராதவர் மட்டும்தான் இவ்விஷயத்துக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்றில்லை.. அவர்களுக்கும் தங்கமணி போலவே நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.. அல்லது அவர்களது நோக்கத்தில் இருக்கும் உள்குத்து அரசியலை யாராவது ஆராயலாம்.

மு. சுந்தரமூர்த்தி said...

//இதில் தங்கர் போன்றவர்கள் எம்மாத்திரம். பெண்ணோடு பிறந்திருந்தும் பெண்ணோடு வாழ்ந்திருந்தும் பெண்ணாக பிரந்தவரை கண்ணாக யார் நினைத்தார் என்ற பாடல் தான் நினைவில் வருகிறது//

உண்மைதான். தங்கரின் கூற்றை ஆணாதிக்க மனத்தின் வெளிப்பாடு என்றழைக்கலாம். அதை எந்த அளவுக்கு கண்டிக்கமுடியுமோ அவ்வளவு கண்டிக்கலாம். அதற்கு தண்டனை ஏதேனும் கொடுக்கமுடிந்தாலோ, அபராதம் விதிக்கமுடிந்தாலும் அதையும் செய்யலாம். எல்லாம் சரி.

அவரைப் பார்த்து "இதை போய் உன் அம்மாவிடம் சொல்லு" என்று நடிகை குஷ்பு சொன்னதாக யாரோ எழுதியிருந்தார்கள். இவர் போன்று பெண்ணாக பிறந்தும் இன்னொரு பெண்ணை கண்ணாக நினைக்கமுடியாதவர்களை எப்படி மதிப்பிடுவது? இதை என்ன ஆதிக்கம் என்று சொல்வது?

டிசே தமிழன் said...

நிதானமாய் யோசிக்க வைக்கும் பதிவு. அனைத்து 'நியாயங்களுக்கு' அப்பாலும் தங்கர்பச்சனின் இந்தக் கூற்று வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதே. இதேபோன்று ஒரு அபத்தமான கூற்றைத்தான், பெரியாரை தான் விஞ்சிவிட்டேன் என்று பொருள்படும்படியாக பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டு சீமான், அறிவுமதி போன்றவர்களால் ஏற்கனவே கடும் கண்டனத்துக்குள்ளானவர் என்பதுவும் நினைவு.

ஒரு பொடிச்சி said...

//அவரைப் பார்த்து "இதை போய் உன் அம்மாவிடம் சொல்லு" என்று நடிகை குஷ்பு சொன்னதாக யாரோ எழுதியிருந்தார்கள். இவர் போன்று பெண்ணாக பிறந்தும் இன்னொரு பெண்ணை கண்ணாக நினைக்கமுடியாதவர்களை எப்படி மதிப்பிடுவது? இதை என்ன ஆதிக்கம் என்று சொல்வது?//
விரும்பினால் 'பெண்ணாதிக்கம்' என்று சொல்லலாம்.
அதுதானே எதிர்ச்சொல்?

பொதுவாக பஸ்ஸிலோ தெருவிலோ பாலியல் தொந்தரவுக்குள்ளாகிறபோது 'நீ அக்கா தங்கையோட பிற்க்கலையா' 'உன்னோட அம்மாட்ட வச்சுக்கோ' போன்ற பிரசித்தி வாய்ந்த வசனங்களை எடுத்து விடுவார்கள். அவர்கள் மீது ஏவப்படுகிற சேட்டை கிடக்கட்டும், ஆனால் ஏன் அவர்கள் இவ்வளவு 'புரிந்துணர்வு' இல்லாமல் இருக்கிறார்கள்?

இத்தகைய போக்குகளை பெண்ணாதிக்கத்தின் கூறுகளாகப் பார்க்கலாம்.

சுந்தரவடிவேல் said...

தங்கர் பச்சானின் வார்த்தையை மட்டுமே வன்முறையென்று கொள்கின்ற இத்தருணத்தில்: தமிழ்த் திரைப்படங்களில் ஆதிகாலந்தொட்டே நாயக-நாயகியரின் பாட்டுக்கள் பெண்களின் மீது எறியப்படும் ஒவ்வொரு வெடி குண்டுகளாகவே நோக்கப் பட வேண்டும். கண்ணதாசனின் இலை மறை காய் வர்ணணைகளாகட்டும் 'பட்டணத்துப் பொண்டுகளின் லட்சணத்தக் கண்டா பயப்படாம மஞ்சத்தாலி கட்டுறவன் உண்டா'ன்னு கேட்ட கமலாகட்டும், 'கல்லூரிக்குப் போனா கன்னிப் பொன்னு மீனா, கல்லூரியே படிச்சதுல கர்ப்பமானா'ன்னு பாடுன ரஜினியாகட்டும் (பாட்டெழுதுன கழிசடைகளுக்கும் பங்குண்டு) அல்லது இன்று நின்றாடும் ஆண்குறி நாயகர்களின் பாடல் காட்சிகளாகட்டும் அனேகமாய் எல்லாப் படங்களிலும் இந்த வன்முறை ஏவப் படுகிறது. பெண்களைக் கொண்டே பெண்கள் மீது. காலிலிருந்து தலை வரைக்கும் முகர்வதை நடித்து, படமாக்கி, இயக்கி, தயாரித்து, விற்று அந்தப் பணத்தில் பெருமை கொள்வதில் வன்முறை இல்லையா? இத்தகையவர்களின் பணத்தில் மடாதிபதிகள் கொழுப்பதும் அவர்களுக்கு "மூலதனமான" பெண்ணை ஏசுவதும் வன்முறை இல்லையா? தங்கர் பச்சான் செய்தது பிழைதான், ஆனால் தொப்புள் பம்பரக்காரர் அவரைக் கண்டிப்பதுதான் முரண்நகையும், பச்சானுக்கு எதிரான அரசியலும்.

பி.கு: பழைய 'சீசா'வைப் பார்த்ததும் என்னவோ ஒரு மகிழ்ச்சி! (பழைய சீசாவில் புதுக் கள் என்று சொல்லாதீர்கள்:).

Padma Arvind said...

சுந்தரமூர்த்தி
பெண்களை வளரவிடாமல் தடுப்பதில் மற்ற பெண்களுக்கும் நிறைய பங்கு இருக்கிறது. இது பற்றியும் எழுத வேண்டும். ஆனால் இந்த நிலைப்பாடு வரக்காரணமே ஆணகள் ஏற்படுத்திய சட்ட திட்டங்கள்தான்.
பாடல்கள் மட்டுமென்ன பல திரைபட காட்சிகளிலும் பெண்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதற்கும் உதாரணங்கள் காட்டினால் முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும்.ஊடகங்கள் , பன்னாட்டு நிறுவனங்கள் இவர்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா

KARTHIKRAMAS said...

விஜயகாந்தைப் பொறுத்தமட்டில், தங்கர் பச்சான் "ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்பதுதான் கதை. "பொம்பளைன்னா அடக்கமா இருக்கனும்" என்று தன் திரைப்படங்களிலே பேசிவரும் தங்கத்தலைவர் ரஜினிகாந்த் குறித்து ஒரு குரலாவது எழுப்பியிருக்க முடியுமா இவரால்? பெண்விடுதலை காவலரக ஒரே இரவில் உருவெடுத்துகொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு.

கருத்துகளோடு முழுதும் உடன்பாடு.

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.

-/பெயரிலி. said...

பிபிஸி தமிழோசை - வியாழன்
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 231 பொறியியல் கல்லூரிகளில் செல்லிடத் தொலைபேசிகளுக்கும், கவர்ச்சி ஆடைகளைப் பெண்கள் அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குட்டைப் பாவாடை, கையேற்ற ரவிக்கை மற்றும் ஜீன்ஸ் பாண்ட் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக் கலை விழாக்களில் சினிமாப் பாடல்கள் உட்பட அனைத்து வகையான சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைகள் அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவிகளிடம் கடும் விமர்சனத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஆனால் இந்தத் தடைகளை மாணவ மாணவிகளின் நன்மை கருதியே கொண்டுவந்திருப்பதாகக் கூறிகிறார் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் டி. விஸ்வநாதன்.

உடைக் கட்டுப்பாடு என்பது பெண்களை மாத்திரம் குறிவைக்கும் ஒரு நிகழ்வு என்பதனையும், பழமை வாதத்தை புதிய வடிவில் புகுத்தும் முயற்சி என்று கூறப்படுவதையும் அவர் மறுக்கிறார்.