Friday, October 21, 2005

புனைவு - 26


அந்த சம்பந்தப்பட்ட மீசைமழிதாடி அதிகாரியைச் சந்தித்தபோது, கதிரைக்கு வெளியே மேசையைத் தாண்டி உருவம் கண்களை வந்தடைய முடியாதவளவிலே இருந்தார். அவர் தலைக்குப் பின்னாலே உயரத்திலே சூரியவெளிச்சத்தினை மங்கமுறித்து உள்ளேயனுப்புவிதமாக ஒரு முப்பரிமாணப்பலகணியும் படுதாவும். என்ன என்று கண்ணாலேகூட அவர் கேட்கவில்லை. கருங்கல்லுக்கு அங்கம் சேர்த்து கதிரையில் இறுக்கியதுபோன்ற ஆள். தன்னிடம் வேறெதற்கு வருவார்களென்ற பழக்கப்பட்ட சிந்தனையோ அல்லது வந்தவர் தனக்கு வேண்டியதைக் கேட்பார்தானே என்ற எதிர்பார்ப்போ இருந்திருக்கலாமென நினைத்தேன். என் பங்கீட்டட்டையை நீட்டினேன். எடுத்தவர் பங்கீட்டு அட்டையின் இன்றைய நிறத்தினைக் கவனித்தார்; பின்னால், கதிரைக்கு வெளியே உருவத்தினைக் கொண்டுவந்து அதே நிறத்திலே இருந்த தடிப்பமான பதிவுப்புத்தகத்தினை தலைக்குமேலிருந்த அலுமாரியிலிருந்து எடுத்து மேசையிலே வைத்தார். இந்தக்கணக்குகளையெல்லாம் ஒரு கணணியிலே பதிவு செய்து வைத்தால், அரசுக்கும் அலுவலகர்களுக்கும் எத்துணை பயனோ இருக்கக்கூடுமேயென்று தோன்றியது. இதுவரை காலமும் எதுவிதமான குளறுபடியும் பிக்கல் பிடுங்கலும் இந்தப் பங்கீடு காரணமாக எனக்கு ஏற்பட்டிருக்கவில்லையென்றாலுங்கூட, இந்த எண்ணம் தோன்றியது; சிலவேளை, கொடுத்த தொகைக்கு வரைந்துகொண்டு சிக்கனமாய்ச் செயற்பட்டதால் பிக்கல் ஏற்படாதிருந்திருக்குமோ? இருக்கலாம்.

அட்டையிலே என் பெயரைப் பார்த்தபின்னால், பெயரின் தொடக்க எழுத்தினைக் குறிக்கும் பக்கத்தினை திறந்தார். "சென்ற மாதத்திலே மிஞ்சியிருந்த நிலுவையை இந்த மாதத்துக்குச் சேர்த்துக்கொள்ளப்போகின்றீர்களா அல்லது வேண்டுவார் வேறு யாருக்காவது கடத்தி விட்டு, ஈட்டுத்தொகை பெறப்போகின்றீர்களா?" எனக் கேட்டார். அந்த ஆண்டு புனைவு தொடர்பாக அதிகம் செயற்படமுடியவில்லை. இனியும் புனையலாமென்ற நம்பிக்கையுமிருக்கவில்லை.

"கடத்தப்போகின்றேன்"

குறித்துக்கொண்டார். அலுவலகமூடாகத்தான் கடத்தமுடியும். சொந்தமாக அலுவலகத்துக்கு வெளியே விற்பனை செய்ய முடியாதென்பதல்ல, ஆனால், கூடாது. இந்த "கூடாது" இனையும் மீறி வெளியே அறாவிலைக்கு விற்றும் விகல்பமும் வில்லங்கமுமில்லாமலிருக்கின்றவர்களை அறிவேன். 'எனக்குத் துணிவில்லை. அவ்வளவே' என்று சொல்லி இந்தக்கிளைக்கதை வளர்ச்சியைச் சொற்சிக்கனம் கருதி வெட்டிவிடலாம்.

"உங்கள் அனுபவம் இருபதாண்டுகளாக இந்த மாதத்துடன் ஆகின்றது. ஆகையால், தகைமைப்படியேற்றத்துடன் இன்னொரு நிறத்தினை உங்களுக்குத் தரவேண்டும்"

[தாருங்கள் ஐயா. இப்போது கிடைப்பதிற் பாதியையே அடுத்த மாதம் உங்களிடம் மீள விற்கும் நான் இன்னொரு நிறப்பங்கீட்டினைப் பயன்படுத்துவேனா என்பது தெரியாதபோதும், மாத முடிவுகளிலே விற்கும் தொகையை அதிகரிக்கலாம் அல்லவா? அதனால், தாருங்கள் ஐயா] - எண்ணிக்கொள்ளலாம். சொல்லக்கூடாது. அரசின் ஆணைநிறைவேற்று அதிகாரியினை அவமதிப்பதின்மூலம் அரசினை அவமதிக்கும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவிடுவேன்.

ஏற்கனவே இன்னொரு சாயம் தோய்த்து வைக்கப்பட்ட வெற்று அட்டையை எடுத்து என் பெயரை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக, தேய்ந்த அரசுத்தட்டச்சுப்பொறியிலே அடித்தெடுத்தார். கையாலேயே எழுதியிருக்கலாமென்றபோதுங்கூட, அலுவலகரின் கையெழுத்திலே அவரின் தனியாள்_ஆளுமை கடத்துப்பட்டு விடுமோவென அரசு கவலைகொண்டிருக்கக்கூடும். சாயங்கள் தோய்க்கமுன்னால், பங்கீட்டட்டை சுயமாக என்ன நிறத்திலே இருந்ததென்று நான் கேட்கவில்லை; கேட்கத் தோன்றாததற்கு முன் பத்தாண்டுகளாக இவரினை விடவுங்கூடச் சிரித்த முகத்தோடும் பருத்த உருவத்தோடும் இருந்த அதிகாரிகளைக் கேட்டு, அவர்கள் பண்போடு சொல்ல மறுத்துவிட்டதுதான் காரணமென்பேன்.

வாங்கிக்கொண்ட அட்டையை எடுத்துக்கொண்டு முப்பரிமாணப்பலகணி அறைப்படுதாவின் பார்வைக்கு வெளியே வந்து விழுந்த பின்னாலேதான் சூரிய வெளிச்சத்திலே இம்மாதத்துக்கும் இனி வரும் ஐந்தாண்டுகளுக்குமான பங்கீட்டுவீதங்களையும் தொகைகளையையும் பார்த்தேன்.

முன்னைய அட்டைகளின் அமைதலின் பிரகாரமே, உணர்வுகள் குறித்தும் உரையாடல் குறித்தும் எதுவிதமான குறிப்பேற்றமுமில்லை. அவற்றில் தொடர்ச்சியைப் பேணலாமெனக் கருதிக்கொண்டேன். நிகழ்வுகளுக்கான தொகை போன மாதத்துக்குப் பத்து வீதம் அதிகரித்திருந்தது; புனைவுக்கான வீதம் போன மாதத்துக்கு இருபத்தைந்துவீதம் அதிகரித்திருந்தது. இரண்டினையும் கலக்கக்கூடிய நிகழ்வு/புனைவு விகிதவெண்ணின் உயர்பட்ச எல்லை கணிசமாகக் குறைந்திருந்தது. இதனால், புனைகதைகள் எழுதாத எனக்கேதும் பெரிய பாதிப்பிருக்கப்போவதில்லையென்று நினைத்தேன். ஆக, நிகழ்வுகளைமட்டும் நிகழ்வாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளிக்கு - நிகழ்வுகளை வெறும் நிகழ்வுகளாக எழுதுகின்றவனைப் படைப்பாளியெனச் சொல்லமுடியாது என்ற வாதமும் இருந்ததால் நிகழ்வெழுதி என்று இனிமேல் சொல்கிறேன் - அதாவது, நிகழ்வெழுதிக்கு எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை.

ஆனால், இவ்வகையான பங்கீட்டுக்கலவையை அரசு முற்போட்டிருக்க ஒரு பின்புலமிருக்கின்றது. அதற்கான அண்மைக்காலத்திலே நிகழ்வுகளைப் புனைவென்றும் புனைவுகளை நிகழ்வென்றும் பிணித்தும் பிசைந்தும் இடைவரைகோட்டின் அடையாளத்தினைத் தேய்த்துக்கொண்டு வந்த நிகழ்வுகளையோ படைப்புகளையோ அரசின் பங்கீட்டலுவலகம் வகை பிரிக்கமுடியாமற் திணறியதும் ஒரு காரணம். இதற்கு பங்கீட்டு அட்டை வழங்கு அதிகாரிகள் போலல்லாது, வகைபிரிப்பதற்கான அதிகாரிகளின் திறமை, அனுபவக்குறைபாடு காரணமென்று அரசுசார்பிலே பேசவல்ல பேச்சாளர்கள் தம் பேச்சிலே சொன்னாலுங்கூட, அதற்கப்பாலும் அதை விட முக்கிய காரணங்கள் இருக்கலாமென வல்லுநர்கள் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்; அடிப்படைக்கல்வியையும் அனுபவ ஆண்டுக்கணக்கினையும் வைத்துப் பங்கீட்டு அட்டையை வழங்கிவிடுவது மிகவும் இலகுவான ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுமாதிரியான செயல்; ஆனால், நிகழ்வினையும் புனைவினையும் பிரிப்பது அப்படியான தெளிவுத்தன்மையுள்ள இலகுவான செயலில்லை. இருக்கும் பழைய ஆவணங்களின் அடிப்படையினை வைத்தும் புரிதலினை வைத்தும்மட்டுமே செயற்படவேண்டிய அவலம் இந்த அதிகாரிகளுக்கிருந்தது. ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் புனைவுகளாகவும் வெறும் புனைவுகள் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் சேர்க்கைப்படுத்தலென்றும் சட்டத்தினதும் நுட்பத்தினதும் ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிகழ்வெழுதிகள், புனைவெழுதிகள், கலந்தெழுதிகளினாலே சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேதான் அரசின் நிர்வாகிகள் இப்படியான புனைவுகளின் மேலெல்லையும் நிகழ்வுகளின் கீழெல்லையும் மீறமுடியாதபடி, தனிப்புனைவெழுதலுக்கும் தனிநிகழ்வெழுதலுக்கும் ஊக்கமளிக்கும்வண்ணம் (அதாவது, மாறுபடக் கலந்தெழுதிப் பிழைப்பவர்களை அழுத்தித் தள்ளும்வண்ணம்) இப்படியாக புனைவுக்கான தொகையை நிகழ்வுக்கான தொகையைவிட மிக அதிகமாகவும் அதேநேரத்திலே நிகழ்வு/புனைவு விகிதவெண்ணின் உயர்பட்ச எல்லையைக் குறைத்தும் விட்டிருந்ததென்று எனக்குத் தோன்றியது.


***** ***** ***** ***** *****


இது நிகழ்ந்து ஓராண்டுக்குப் பின்னால், ஒரு மாதத்திலே எனது மாதப்பங்கீட்டினைப் பெற்று வர அலுவலகத்துக்குப் போனால், படுதாப்பலகணிக்குக்கீழே கதிரைக்குள்ளே வேறொரு மனிதர் தொலைந்திருந்தார். முன்னர் தொலைந்திருந்தவர் எங்கே போய்த்தொலைந்தாரென்று அரசு அதிகாரி-பயனாளி என்ற உறவுமுறையிலே நான் இருபதாண்டு அனுபவத்தின் பின்னாலே கேட்பது சட்டரீதியான குற்றமென்று அறிவேன். ஆனால், எனக்குச் சொல்லாமல், அதிகாரியை மாற்றிவிட்டு அந்த அதிகாரியைப் பற்றி ஓராண்டு அறிந்த மனிதனாக எந்தக்கேள்வியையும் எழுப்பமுடியாத மனிதனாக என்னையாக்கிய அரசினை எப்படியாவது பழி வாங்கிவிடவேண்டுமென்று தோன்றியது. இந்த மாதமாவது, சென்ற மாதத்திலே தேங்கிய என் பங்கீட்டெஞ்சலையும் இந்த மாதத்துக்கான என் முழுப்பங்கீட்டினையும் பயன்படுத்தி விடுவதெனத் தீர்மானித்தேன்.

நான் விரும்பியபடியே கேட்டு புதிய அதிகாரியினை அட்டைக்காரரின் வழமைக்குமாற்றான செயல்குறித்துக் கண்புருவம் சுருக்கிப் பார்க்க வைத்து, பங்கீட்டினைப் பெற்று, சூரிய வெளிச்சத்துக்கு வெளியே வந்தபோது மிக உற்சாகமாகச் சீட்டியடித்துச் சிரித்துக் கடந்த தாடிமழிமீசை ஆளைத் திரும்பிப்பார்த்தேன்.

அந்நேரத்திலே என் கைகளை இரு அரசுபங்கீட்டலுவலகக்கண்காணிப்பதிகாரிகள் வந்து பிடித்தனர். வாசலிலே ஆளைப் பார்த்ததுவரை எழுதியிருந்தபோது, எனது அந்த மாதப் பங்கீடு அத்தனையையும் சட்டப்படி செலவழித்து முடித்திருந்தேன். அதற்கப்பால், இருபத்தோராண்டு அனுபவம் வாய்ந்த எனக்கு அரசுப்பங்கீட்டுச்சட்டத்தினை மீறி ஒரு வாக்கியம் முணுமுணுத்தேனும் அவர்களுக்குச் சொல்லத் துணிவு வந்திருந்தது:

"நிகழ்வு புனைவுகளை அரசுப்பங்கீட்டுச்சட்டங்களை மீறி எழுதுகின்றவனில்லை நான்."
கரு: '05, செப். 18, ஞாயிறு.
கதை: '05, ஒக். 21, வெள்ளி. 15:53 கிநிநே.

9 comments:

ப்ரோ வோச்சர said...

இந்த பதிவுக்கு ப்ரோ வோச்சரினின் மிக்க நன்றி..

KARTHIKRAMAS said...

சாதாரண நிகழ்வைக்கூட அழகான புனைவாய் எழுதுபவர்களை "நிகழ்வெழுதி" என்று சொல்லமுடியாது என்பது எம் வாதம். :-)

மூர்த்தி said...

நன்றாகப் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

வசந்தன்(Vasanthan) said...

தலைசுத்துது.
அதுசரி, புனைவுக்கான காலஒதுக்கீடு என்ன மாதிரி? மாதத்துக்கு ஒன்றா?
காணாது போலக்கிடக்கு.

சன்னாசி said...

The Castle நினைவு: ஃபோன் செய்தால் பல இடங்களில் மணி அடிக்கும் ;-)

-/பெயரிலி. said...

வாதம், பகிர்வு, சுத்துதல், கோட்டை எல்லாவற்றுக்கும் கிக்க நன்றி.

சன்னாசி, Whitehouse Katrina இனைக் கொண்டு போய், The Castle Bell உடன் சம்பந்தப்படுத்துகிறீர்களே? அப்படியானால், இதைச் சொல்லும் நீங்கள் பெயரிலியில்லையா? தலையிலே துளைபோட்டுத்தான் பார்க்கவேண்டும் ;-)

சன்னாசி said...

துளை போடும்போது முகத்துக்கு மேல் மூடியிருக்கும் தகட்டைக் கழற்றிவிட்டுப் போட்டுவிடலாம், சரிதானே? ;-) இல்லையென்றால் பாட்டும் நானே பாடலும் நானே என்று மலச்"சிக்கல்" வந்த ஜிவாஜி மாதிரி கண்ணைக் கண்ணை உருட்டவேண்டிய கஷ்டத்துக்கு ஆளாகவேண்டியதாகப் போகிறது!

Anonymous said...

பாட்டும் நானே பாவமும் நானே???

Anonymous said...

:(