Wednesday, October 19, 2005

குவியம் - 18

நேற்றைக்குவரை போன ஒரு மாதமாகப் பண்ணிய உருப்படியான காரியமென்னவென்றால், பதிவுகளின் பக்கம் அடிக்கடி வராமலிருந்தது. குஷ்பு விவகாரம், சுந்தரராமசாமி மரணம் இதிலெதிலுமே நானும் ஒரு தனிப்பதிவு போட்டேனென்று எண்ணிக்கைக்குப் போடாதிருந்தது சொந்த நிம்மதிக்கும் நேரச்சேமிப்புக்கும் உதவியது. தமிழ்மணத்திலே பதிவுகளை நெறிப்படுத்துவது குறித்து சர்ச்சையை நேற்றைக்கு வாசிக்க நேர்ந்ததால் தனியே சொந்த நலனை முன்னிட்டு மூன்று பந்திகளில் சின்னக்குறிப்பு எழுதவேண்டிய அவசியம்.

தமிழ்மணத்தினால் பதிவுத்தொடுப்புகள் மிக இலவாக ஆக்கப்பட்டிருக்கின்றன (அல்லது ஆக்கப்பட்டிருந்தன). அஃது இயங்கும் தொழில்நுட்பம் முழுமையாக எனக்குத் தெரியாது - அதனால், அதனை இயக்குவதற்கான பொருள், நேரத்தேவைகள் குறித்தும் தெளிவான விளக்கமில்லை. உயிர்ப்போடு இயங்காத பதிவுகள் நிர்வகிப்பதிலான சிக்கல் காரணமாக அகற்றப்படின், அந்நிலையை ஏற்றுக்கொள்ளவே வேண்டிய இக்கட்டு - இதனால், தற்போது புதிய உள்ளிடுகைகள் அற்ற பதிவுகளிலே காணப்படும் விடயங்கள் வரப்போகின்ற புதிய பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரியாமலே போகக்கூடுமென்ற நிலையிலுங்கூட.

ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியதுபோல, ஆக்கலும் அவனே அழித்தலும் அவனே என்ற இருமுனைப்பிலே தமிழ்மணம் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் முழுவதிகாரம் காசிக்கு இருக்கின்றது. ஆனால், அவரைக் கட்டுப்படுத்த வல்லமையுடைய ஒரே வழியான தார்மீகக்கடப்பாட்டின் அடிப்படையிலே நோக்கின், எதை நீக்குவது எதைச் சேர்ப்பது என்பது எதேஷ்டமாக (மதம் என்பதுபோன்ற விடயங்கள்) இருக்கமுடியாது. வெடிகுண்டு செய்வது பற்றி ஒருவர் பதிவு போட்டால், அதைத் தமிழ்மணம் சேர்க்கமுடியுமா இல்லையா என்பதை அவர் தீர்மானிக்கலாம். ஆனால், அப்பதிவினை தமிழ்மணத்திலிருந்து நீக்க அவரை நிர்ப்பந்தப்படுத்தும் வலுவான காரணங்கள் எதுவென எனக்குத் தெரியவில்லை. புரியாமல் தமிழ்மணத்தூடாக வாசிக்கும் எதற்கும் தமிழ்மணத்தின் சிகையைப் பிடித்தாட்டும் பதிவாளர்கள்/வாசகர்களிடையே தன் பெயர் கெட்டுவிடக்கூடாதென அவர் கருதுவதாகவும் இருக்கலாம். குசும்பனும் அவரைச் சார்ந்தவர்களும் இட்ட பல பதிவுகள் என்னைப் பகிடி செய்து வந்திருப்பதை என்னைப் போலவே பலரும் பார்த்திருக்கலாம். ஆனால், தமிழ்ப்பதிவு என்றளவிலே சொல்லத் தோன்றுவது, குசும்பனின் பதிவினையோ அதுபோன்ற எந்தப்பதிவினையோ தமிழ்மணத்தின் இணைப்பிலிருந்து நீக்கவேண்டிய அவசியமில்லை. இதை, இதே அலைவரிசையிலே பேர் ஏ ரீலியின் பதிவினை இரண்டாண்டுகளுக்கு முன்னால் நடத்தியவன் என்றளவிலே சொல்லவரவில்லை.

தானம் கொடுத்த மாட்டினைப் பல்லைப் பிடித்துப் பார்க்கக்கூடாதென்பதோடு, நண்டு கொழுத்தால் வலையிலே தங்காது என்பதும் எந்த உன்னதமும் தன் உச்சநிலையடைந்து சுருங்குமென்பதும் இயல்பு. இணையத்திலே தமிழ்நெற் இலே இதனைத் தெளிவாகக் கண்டிருக்கின்றேன். தொழில்நுட்பத்தின் போதாமையும் நேரத்தின் போதாமையும் தமிழ்மணம் போன்று தனியொருவரினாலே அல்லது குழுவினாலே நிர்வகிக்கும் ஒரு தொடர்பாக்கியின் வீச்சத்துக்கு எல்லை வகுக்கும். தமிழ்மணத்துக்கு அது நேர்ந்திருக்கின்றதென்று நினைக்கிறேன். தமிழ்மணம் இல்லாது, இத்துணை தூரம் கடந்த ஓராண்டாக வந்திருக்கமுடியாதென்பது மிக்க உண்மை; அதற்காக காசிக்கும் தமிழ்மண இணை-மட்டுறுத்துனர்களுக்கும் நன்றி. ஆனால், நேரமும் நிதியும் நிர்வாகத்திலே சிக்கல் தராதவிடத்து, பதிவுகளினைச் சேர்த்தலும் விலக்கலும் குறித்து தமிழ்மண நிர்வாகம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்பது என் அவா. ஆனால், அவ்வாறு செய்யாவிடின், தமிழ்மணத்திலிருந்து என் பதிவினையெல்லாம் விலக்கிக் கொல்லவேண்டுமென்று கேட்கமாட்டேன். அது நோக்குக்கே முரண்.

'05 ஒக்., 19 புத. 12:03 கிநிநே.

15 comments:

டிசே தமிழன் said...

//நேரமும் நிதியும் நிர்வாகத்திலே சிக்கல் தராதவிடத்து, பதிவுகளினைச் சேர்த்தலும் விலக்கலும் குறித்து தமிழ்மண நிர்வாகம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்பது என் அவா. ஆனால், அதற்காக, தமிழ்மணத்திலிருந்து என் பதிவினையெல்லாம் விலக்கிக் கொல்லவேண்டுமென்று கேட்கமாட்டேன். அது நோக்குக்கே முரண்.//

இதுவே எனது விருப்பும்.

Padma Arvind said...

பெயரிலி: உங்கள் கருத்துக்களோடு உடன் படுகிறேன்.எந்த பதிவுகள் நீக்கப்பட்டன என்பது தெரியவில்லை. எல்லா பதிவுகளாஇயும் அனைவரும் அப்டிப்பதேன்பது இயலாது. ஆனால், பொது இடத்தில் கருத்துக்களை சொல்லும் போது ஒரு வரை முறை வேண்டும் என்பதி பதிவாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.அலுவலகத்தில் அவதூறாய் பேசினால் தண்டிக்க சட்டம் இருக்கும் போது, எழுதுபர் மட்டும் இல்லாது அவர் குடும்பத்தையும் சேர்த்து பேசுவது வன்முறை தானே.சிலருக்கு அதை விலக்கி செல்வது எளிதாகலாம், சிலருக்கு மனம் புண்படும். விருப்பம் இருப்பின் எந்த பதிவுகள் விலக்கப்பட்டன என்பதை தெரிவிக்கலாம். ஆனால் நிர்பந்திக்கவோ கெடு வைப்பதற்கோ உரிமை இல்லை என்று எண்ணுகிறேன்.

முகமூடி said...

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் என்பது ஒருபுறம் என்றால் ரொம்ப நாளக்கி அப்புறம் புரியிற மாதிரி சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் இரட்டிப்பு சந்தோஷம்.

// உருப்படியான காரியமென்னவென்றால், பதிவுகளின் பக்கம் அடிக்கடி வராமலிருந்தது // நிறைய பேரு சந்தோஷமா இருந்தாங்கலாம்... ஆனா நான் இல்ல :((

// குசும்பனும் அவரைச் சார்ந்தவர்களும் // சார்ந்தவர்கள் அப்படீன்னா யாரு மாசக்கா... குசும்பனை சார்ந்து ஏன் சிலர் பதிவு எழுதணும்? ப்ளாக்கர் இலவச விஷயம் என்றல்லவா நினைத்தேன்.. இல்ல கருத்து பஞ்சமாகவா? ஒரு வேளை குசும்பனும் அவரை போன்ற பதிவாளர்களும் அப்படீன்னு சொல்ல வந்தியளோ?

Jsri said...

///முகமூடி கருத்து:
நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் என்பது ஒருபுறம் என்றால் ரொம்ப நாளக்கி அப்புறம் புரியிற மாதிரி சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் இரட்டிப்பு சந்தோஷம்.
////

வழிமொழிகிறேன். :)))
படிக்கும்போதே நான் தான் தமிழ்ல தேறிட்டேனா, இவ்ளோ நல்லா உங்க பதிவு விளங்குதேன்னு ஒரு நொடி திகைச்சு பெருமிதமாயிட்டேன்.

[பாரீஸ்ல ஒருதடவை திடீர்னு ஒரு கடைல எழுதியிருந்ததெல்லாம் படிச்சா புரிஞ்ச மாதிரி இருக்கவே, "ஐயோ எனக்கு ப்ரென்ச் வரவர புரிய ஆரம்பிச்சுடுச்சு!"ன்னு பக்கத்துல இருந்த வீட்டுக்காரர்கிட்ட புல்லரிச்சுட்டேன். "அது புரிஞ்சுதான் ஆகணும். ஏன்னா அது இங்லீஷ்ல எழுதியிருக்கு!"ன்னு சொன்னார். :((

அதே மாதிரியே இப்பவும் நொந்துட்டேன், முகமூடி வந்து சொன்னதும்.

ரமணி ப்ளீஸ் ப்ளீஸ், உங்க தமிழை இப்படியே மெயின்டெய்ன் செஞ்சீங்கன்னா, நானெல்லாம் கூட ஏதோ படிச்சு கரையேறி கடைத்தேறுவேனில்ல? கொஞ்சம் மனசு வைங்களேன். :)
========

குசும்பன் பதிவு நீக்கினது எனக்கும் ஒரே வருத்தம்தான். தன்னைப் பத்தின கார்ட்டூனை தானே ரசிக்கற அரசியல்வாதியோட மனப்பான்மை இருக்கறவங்களுக்கு அவர் பதிவுகளும் வருத்தம் தராதுங்கறது என் கருத்து.

-/பெயரிலி. said...

நண்பர்களே, எப்போதும் புரியும்படி எழுதினால், இப்படி ஓரிரண்டு பின்னூட்டங்களாவது வராமலே போய்விடுமே ;-) அப்படியே அந்த லா.ச.ராமாமிர்தத்தையும் யாராவது எனக்குப் புரியும்படி எழுத வேண்டுகோள் விடுங்களேன். ;-)

"குசும்பனும் அவரைச் சார்ந்தவர்களும்" என்பது ப்ரோக்கள் என்று டாக்டர் இராமநாதன்வரை ப்ராக்கட் போடுவதுபோல சொல்லப்பட்டது அல்ல. குசும்பனும் அவரின் பதிவுகளிலே நிழல்மனிதர்களாகப் பதிவிட்டவர்களும் என்ற அர்த்தத்திலே சொல்லப்பட்டது. பார்த்தீர்களா? தெளிவாகப் புரியும்படி சொன்னதாகச் சொல்லப்பட்ட என் பதிவிலேகூட புரியாமல் எழுதியிருக்கின்றேன்.

ஜெயஸ்ரீ அடியேன் தமிழ்மீடியம். துர்ப்பாக்கியம். ஆங்கிலத்திலே எழுதினாலும் புரியாது :-(

/தன்னைப் பத்தின கார்ட்டூனை தானே ரசிக்கற அரசியல்வாதியோட மனப்பான்மை இருக்கறவங்களுக்கு அவர் பதிவுகளும் வருத்தம் தராதுங்கறது என் கருத்து./
ஆனால், அதுதான் அவரது நோக்கு/இலக்கு என்ற கருத்து எனக்கு இல்லை.

மு. க. கஜனி காம்கி said...

இதுவே என் பருப்பும்

பெயரிலி சார் ஜெய்ஸ்ரீ மேடம் இங்கிப்ளீசு மீடியம் நீங்க தமிள்மீடியம். அதுவாச்சும் ஓக்கே. நானு ரொம்ப சீப்பான ஆவி மீடியம் சார். கண்டுக்கவே மாட்டேங்குறாங்க.

ravi srinivas said...

[பாரீஸ்ல ஒருதடவை திடீர்னு ஒரு கடைல எழுதியிருந்ததெல்லாம் படிச்சா புரிஞ்ச மாதிரி இருக்கவே, "ஐயோ எனக்கு ப்ரென்ச் வரவர புரிய ஆரம்பிச்சுடுச்சு!"ன்னு பக்கத்துல இருந்த வீட்டுக்காரர்கிட்ட புல்லரிச்சுட்டேன். "அது புரிஞ்சுதான் ஆகணும். ஏன்னா அது இங்லீஷ்ல எழுதியிருக்கு!"ன்னு சொன்னார். :((

was it in the air port :)

ravi srinivas said...

அப்படியே அந்த லா.ச.ராமாமிர்தத்தையும் யாராவது எனக்குப் புரியும்படி எழுத வேண்டுகோள் விடுங்களேன். ;-)


why dont u write his works in ur style :)

Jsri said...

ஏதாவது தவறான புரிதலா ரமணி? (ஹையா ஜாலி, உங்களுக்கே புரியாம நான் எழுதியிருக்கேன்.)

நான் சொன்னது ப்ரென்ச் மொழியையே பாரிஸ்ல எப்பவும் எங்கயும் பார்த்து பார்த்து, திடீர்னு ஒரு கடைல எழுதியிருக்கறதைப் படிக்கும்போது அது ஆங்கிலங்கறதுகூட மூளைல உறைக்கலை; அதே மாதிரி நீங்க எழுதியிருக்கறதே எளிமையா இருக்குன்னு உணராம ரொம்ப தெளிவா உங்க பதிவும் எனக்கு புரிய ஆரம்பிச்சுடுச்சேன்னு சந்தோஷமாயிட்டேன்; முகமூடி சொல்லித்தான் புரிஞ்சுதுன்னு சொல்லவந்தேன். நான் ஆங்கில மீடியம்னு எங்கயும் சொல்லலை.

நான் ஆங்கில மீடியம்தான். ஆனா சுஜாதா தன் ஸ்கூல் பத்தி சொல்லும்போது, எங்களுக்கு இங்லீஷ் க்ராமரையே தமிழ்லதான் சொல்லித்தருவாங்கன்னு சொல்லியிருப்பாரே, அதே ஸ்ரீரங்கம் ஸ்கூல் ஆங்கிலமீடியம்தான் நானும். மேதாவி ஒன்னும் இல்லை.

என்ன பிரச்சனைன்னா எங்களுக்கெல்லாம் தமிழும் தெரியாம ஆங்கிலமும் தெரியாம போச்சு.:(

===
ஒரு பின்னூட்டம் எழுதி, அதுக்குப் பிராயச்சித்தமா ஒரு மறுப்பு.. ஒரு விளக்கம்.. ஒவ்வொருதடவையும் word verification வேற.. ரொம்பத்தான் படுத்தறாய்ங்கப்பா. :(( :))

-/பெயரிலி. said...

/why dont u write his works in ur style :)/
ரவி அண்ணை, எழுதலாந்தான். ஆனால், பாருங்கோ இந்த Catch 22 பிரச்சினை. முதலிலை அவர் என்ன சொல்லுறார் எண்டு விளங்கினாலெல்லோ, அத என்ரை ஸ்ரைலிலை எழுதலாம்.

ஜெயஸ்ரீ நீங்கள் சொன்னது புரிந்தது. ஆனால், புரிந்ததென்று நான் சொன்ன விதந்தான் உங்களுக்குப் புரியாமலிருந்துவிட்டது ;-)

Anonymous said...

எல்லாப் பெரச்சினைக்கும் காரணமே முகம் மறைத்துப் போடும் பதிவுகள்தான். மூஞ்சை மறைச்சிகிட்டா என்னத்த வேணாம் சொல்லலாம். கேட்டா, அது நான் இல்லேன்னு சொல்லிக்கலாம்ங்கிற மெதப்பு வந்துடுது. முகமிலி பதிவுகள் சுவாரசியமா இருக்குன்னு ஃபீல் பண்றவங்க ( நானே அப்படித்தான்) அதுக்குன்னு தனியா ஒரு திரட்டியோ/குழுமமோ தயார் பண்ணுங்க. எல்லா முகமிலி வலைப்பதிவையும் பாரபட்சம் இல்லாம தமிழ்மணத்துல இருந்து நீக்குங்க. பெரச்சினை கொஞ்சம் குறையலாம்.

ஆனா, முகமிலி பின்னூட்ட வசதி மட்டும் இப்படியே இருக்கட்டும் :-)

KARTHIKRAMAS said...

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

அன்பின் இரமணீதரன்,

//நானும் ஒரு தனிப்பதிவு போட்டேனென்று எண்ணிக்கைக்குப் போடாதிருந்தது சொந்த நிம்மதிக்கும் நேரச்சேமிப்புக்கும் உதவியது//

அது சரி. இணையப் பக்கம் ஏன் கணிணிப் பக்கம் வராமலிருந்தாலே நிறைய நேரம் மிச்சமாகும்தான். :) ஆனா இது ஒரு போதை மாதிரி ஆகி, கொஞ்ச நேரம் இணையப்பக்கம் வாராமலிருந்தால் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுது. :))

காசி அவர்களின் வலைப்பதிவுத் தடுப்புச் சட்டத்தில் (?) :) எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ்மணத்தின் உழைப்பு அவருடையது. இதுவும் அவரது சொந்த முடிவாக இருக்கலாம். ஒரு புறம் அவர "வலைப்பதிவுகளைக் கட்டுப்படுத்துவது தமிழ்மணத்தின் வேலையில்லை. வலைப்பதிவுகளைத் தொடுப்பதே தமிழ்மணத்தின் ஆதார நோக்கம்" என்று சொல்லியிருக்கிறார். அப்படி தமிழ்மணத்தின் நோக்கினை தெள்ளத்தெளிவாக உரைத்தபின் இப்படி வலைப்பதிவுகளைக் கழட்டி விடவும், தடுக்கவும், தொடுக்காதிருக்கவும் என்ன அவசியம்?.

தமிழ்மணம் அதன் ஆதார நோக்கத்திலிருந்து மாறாதவரை இம்மாதிரியான நிபந்தனைகள் எதுவும் தேவையில்லை என்பதே என் கருத்து.

தொழில் நுட்பப் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அதை சரிசெய்ய உதவக்கூடிய நண்பர்களை நாடியிருக்கலாம்.

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுத்துப் பார்க்கக் கூடாதுதான். ஆனால் தானம் என்று வந்த பின்பு எதற்கு நிபந்தனைகள்.

தங்கள் பதிவுக்கு நன்றி.

அன்புடன்
சுந்தர்.

பி.கு. நீண்ட நாள்களாகிவிட்டது அம்பறாத் துணியைப் பார்த்து - நீங்கள் அம்புகள் எய்ததையும் பார்த்து. உங்களை வாசிப்பதற்குத் திரும்ப வேண்டும். நன்றி.

-/பெயரிலி. said...

முகமிலி வலைப்பதிவை தமிழ்மணத்திலிருந்து நீக்கமுடியுமென்றால், புளொக்ஸ்பொட் ஆட்கள் தப்பிவிடுவார்கள். இலகுவாக முகத்தைப் போட்டுக்கொள்ளலாம். பார்த்தீர்களென்றால், மபெயரிலி மாடிக்ரா மாஸ்க் முகமூடி, பயில்வான் கார்த்திக்ராமாஸ், அசின் டிஜே எல்லோருக்கும் முகமிருக்கிறது. ;-)


கார்த்திக் ப்ரோவின் நன்றி ;-)
["ப்ரோவின் நன்றி" என்பது எனது பதிவுசெய்யப்பட்ட கூற்றாகும். அனுமதியின்றி எவரும் பயன்படுத்தக்கூடாது]

/ நீண்ட நாள்களாகிவிட்டது அம்பறாத் துணியைப் பார்த்து - நீங்கள் அம்புகள் எய்ததையும் பார்த்து/
commuter இல் எட்டும் தொலைவிலேதான் ;-)

Anonymous said...

உங்கள் முதல் பாரா சிறந்த இணையப் பொன்மொழிக்குசும்புகளில் பத்தாவது இடத்தினைப் பெற்றிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்