Saturday, October 22, 2005

கணம் - 478



'05, செப்., 19 திங் 18:05 கிநிநே.


நகரத்தில்
கண்களை அணிந்துகொண்டவர்களின்
நெளிபாம்புத்தெரு முளைத்தது தனியாய்.

ஒற்றைப்பாவனைத் தொடுவில்லை போல்
கண்கள் எடுத்துப் பொருத்தி நடந்தது தெரு.

அணிந்த கண்களுக்கு அணிந்துரைக்கண்கள்
அடுத்து முளைத்த தெருவில் கிடைத்தன.

கண்களுக்குக் கருத்து எதிர்த்து(ம்) முளைக்க
இன்னொரு தெரு கிளைத்து முளைத்தது;
சின்னச்சீசாவில் சொல், நீர், சுரணை
-வியாபித்துச் சூடு பிடித்தது வியாபாரம்; விழி.

அணிந்த கண்களை அவிக்கத்
தேவை பிறக்காதாவென்றால்,
அதுவும் தொடர்ந்தது; அப்பால்
தழைத்தது அவிகரணர் தெரு.

அவித்த கண்கள் -> அழிந்த கண்கள் ->
அவிழ்த்த கண்கள் -> கழித்த கண்கள்
கழித்ததைக் கிளற முளைத்த சிறுவர்
பொம்மைக்குப் பொருந்தப் பொறுக்கின
கண்களால் பிறந்துழன்றன இரண்டு
பிள்ளைத்தெரு, பொம்மைத்தெரு.

பொறுக்கலின்பின் பொருந்தலின் பின்
இழிந்தவை குவித்து எரிக்கப் புகுந்தார்
இருந்திடத் தெருவொன்று இறங்கிட நகரினில்...

.....கண்களால் தின்றார்;
........கண்களால் கேட்டார்;
...........கண்களால் தொட்டார்;
.................கண்களால் நுகர்ந்தார்.

.................கண்களை நுகர்ந்தார்;
...........கண்களைத் தொட்டார்;
........கண்களைக் கேட்டார்;
.....கண்களைத் தின்றார்.

இந்திரன் தோல், தெரு சமைத்த மாபூஸ் நகரில்
பாகர்கொல் மதயானை கால் தழுவித்தடவி
அலைந்து திரிவர் கண்ணணி அலங்காரிகள்.


'05, ஒக்., 22 சனி 17:50 கிநிநே.

11 comments:

இளங்கோ-டிசே said...

புரிவது மாதிரியும் புரியாத மாதிரியுமான வகைக் கவிதை.
.....
மற்றுப்படி ப்ரோ வெட்டிவேலை செய்யாமல் back in form ற்கு வருவது குறித்துச் சந்தோசம். இப்படி எழுதுவதே சிலரது முணுமுணுப்புக்களுக்குத் தக்க பதிலாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து :-).

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//இப்படி எழுதுவதே சிலரது முணுமுணுப்புக்களுக்குத் தக்க பதிலாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து//

எனதும்! தலையால கிடங்கு கிண்டிக்கிண்டிச் சொன்னது இதைத்தான்.

சந்தோசமா இருக்கு.

-மதி

மு. சுந்தரமூர்த்தி said...

ஏதோ புரிந்த மாதிரி இருக்கிறது. நான்கூட திரைப்படங்களுக்கு வைக்கத் தமிழ்ப் பெயர்கள் தீர்ந்து போனபின்னால் தான், New, Old, Love என்று ஆங்கிலப்பெயர்களை வைக்க ஆரம்பித்தார்கள் என்று நினைத்திருந்தேன். திரைப்பட இயக்குநர்கள் வலையுலகில் வலம் வந்தால் நூதனமான தமிழ்ப் பெயர்கள் ஏராளமாக கிடைக்குமே! யாரும் காப்புரிமை கேட்டு சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதும் இன்னொரு வசதி.

சரி இன்னும் என்ன "ஒற்றைப்பாவனைத் தொடுவில்லைகள்" என்று புரியாத மாதிரி எழுதிக்கொண்டு. எல்லோருக்கும் புரிகிறமாதிரி டிஸ்போஸபிள் காண்டாக்ட் லென்ஸ் என்று அழகாக தமிழ் மணக்க எழுத கற்றுக்கொள்ளுங்கள்!

வசந்தன்(Vasanthan) said...

//பொறுக்கலின்பின் பொருந்தலின் பின்
இழிந்தவை குவித்து எரிக்கப் புகுந்தார்
இருந்திடத் தெருவொன்று இறங்கிட நகரினில்...


.....கண்களைத் தின்றார்;
........கண்களைக் கேட்டார்;
...........கண்களைத் தொட்டார்;
.................கண்களை நுகர்ந்தார்.

இந்திரன் தோல், தெரு சமைத்த மாபூஸ் நகரில்
பாகர்கொல் மதயானை கால் தழுவித்தடவி
அலைந்து திரிவர் கண்ணணி அலங்காரிகள்.//


இது புரிந்ததுபோல் இருக்கிறது. அது சரியென்றால் மிச்சமும் புரிந்த மாதிரித்தான். ஆனால் சுந்தரமூர்த்தி சொன்னபிறகுதான் அந்தச் சொல்லின் அர்த்தம் புரிந்தது;-( புரிதலுக்கு அது அவ்வளவு முக்கியமில்லையென்றாலும்.

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி
கண்கள் காண்பதற்கே ;-)

SnackDragon said...

ஒருவகையில் நிறைய புரிந்த மாதிரியும் இன்னோரு வகையில் சுத்தமாய் புரியாத மாதிரியும் இருக்கு.
கண்ணுக்கு மையழகு. :-)

வலைஞன் said...

please mail me at sanuragc at yahoo.com

Anonymous said...

//அனுராக் said...
please mail me at sanuragc at yahoo.com //

'could you please mail me at sanuragc at yahoo.com ?' would hve been better

-/பெயரிலி. said...

அனுராக்
அனுப்பிய அஞ்சல் கிடைத்ததா?

Anonymous said...

என்ன சொல்ல வருகிறீர்கள் பெயரிலி ????????????/

-/பெயரிலி. said...

இரவல் என்றால் கண்களைக் காண்பதற்குத்தான் பயன்படுத்தவேண்டும் ;-)