not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Wednesday, August 06, 2008
பழசோ பழசு
சச் சச் சச்
சச்சரித்துக்கொண்டிருந்தன எலிகள் - விட்டால்,
பற்கள் பெருகிச் செத்திடுவோம் என்னுமாப்போல்,
தம் முலகிற் சஞ்சரித்து, தலை
தட்டுத் தடவெனத் தாளமிட்டுக்
கை கொட்டிக் கொட்டிக்
குதூகலமாய்க் கூட்டம்போட்டு.
வழவழத்தோடி, வழி சறுக்கி, சொற்சலம் பெருக்க, ஒட்டித் தூக்கினேன் கால்;
கொழகொழத்து வெளிக்கொட்டாமல், பல்லிடுக்கில் ஒட்டிய துளிச் சொற்கள்
எகிறி, எட்டிக் குந்தின என்மீதும் குத்தின கூர்ந்தம்பால்.
சிற்றெலி சிதறப் பொறுக்கி வாய்
பேரெலி போட்டுப் போட்டதொரு பேரொலி கேட்டுப்
பார்த்தால், மிச்ச எலியெல்லாம் பேரொலி பிரித்துப்
பிளந்தன; பேசின; பின்னெல்லாம், பிய்த்த எச்ச சொச்ச
எதிரொலியிருந் தெழுந்தும் பிறந்தன பறந்தன பெரிதென,
பெயர், வினை, எச்சம்; எச்சத்துப் பிறவினை; வினையணை பெயர்...
... பல் தத்திடத் தடங்கிட, தாளம் சொல்......சச்சிட; சச் சச்;
சச் சச் சச்; சட சச்; சச் சச்; ச் ச் ச்; சச் சட் சட சட..
நிறுத்தம் வந்தது; இருக்கை வெளிக்க, எட்டினேன்; இறங்கினேன்.
தரித்தொரு கணம், முறித்து, தலை திருப்பிப் பார்த்தேன்;
முண்டியடித்துள் ஏறின மூவருள், சொல்லெலிச்சச்சரவால்
எட்டு வரியேனும் எவர் எழுதுவார் இனிக் கவி?
'05 மே, 16 திங். 15:20 கிநிநே.
ஒரு நாய்க்கவிதை
நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.
வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.
ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.
கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.
'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.
முறுக்காமற் கிட
போகின்ற பாதையிலே புடுங்கிப்போடுகிறாய் புதர்முள்;
ஒரு சொல் பேசாமற் போகிறேன்; சுற்றி முன் போய், விடாது
போகக்கூடிய வெளிப்புல்லிற்கூட முள்ளைத் தழைக்கிறாய்.
உனக்குத் தெரிந்ததெல்லாம் வகிடெடுத்து வகுத்த தெருவில்,
வரைந்த வயல்வரம்பில், திசை கிடத்திக் கிழித்த நீர் வாய்க்காலில்
தேரும் ஏரும் படகும் ஆள் காட்ட வழி நகர்த்துதல்.
வெளியில் அடுத்தான் விதை கிள்ளி அள்ளிப்போட்டுக்கொண்டு
பெருமரம் முளைப்பார் பாவனையில் முயங்கக் கிடக்கிறது முழுத்தேசமும்.
முழுத்தேசமென்றால், உன் பூச்சித்தேகமும் அடங்கும் பார் அதனுள்ளே.
"எனக்கென்ன? கிடக்கட்டும் விடு" என்றிருக்க நான், சொல்,
தன்பாட்டில் விரல் முடக்கிக் கிடப்பான் குறியை முறுக்குவானேன் நீ?
'05 Feb., 14 04:22 EST
படுக்கவிடுவாயா பாம்பை?
நாட்டுப்பட்டறைக்கு அப்பாலே படர்வது என் தாவரம்;
வைத்திருக்கும் கையுளியால் உனக்குப் பட்டதை, கொத்து, கொந்து;
உன் உளி; உன் வழி; உன் இஷ்டம்; ஆனால்,
விட்டுவிடு படாத அடர்வனத்தை பரந்து படர்ந்திருக்க.
பட்டறை, சிந்தைக்குட்படு செத்த கட்டைச் சிலும்பாச் சிலைக்குதவும்;
எதேச்சை ஒரு சுயேட்சை இலை வெடிக்க என்றேனும் இயலுமா?
உளி செதுக்கிக் காய் காயமரப்பட்டறைக்கப்பாலே
கால் தன்னிச்சைப்படி ஏறிப் படர்வதென் பெருவனம்.
ஓய வனம் படுக்கும் பாம்புவால் மிதிப்பாயா,
இல்லை, பையத் திரும்பி,
பாதம் வந்த திசை நோக்கி மெல்ல நடப்பாயா,
நீ?
'05 Feb., 14 02:54 EST
வால்களும் குதிகளும்
குரங்கின் வாலும் நாயின் வாலும்
குழைத்துப் புனைந்ததென் கூர்ப்பு வால்.
எரிகின்ற முனையும் குழைகின்ற திசையும்
எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.
விலங்கும் பூப்பூக்கும் தாவரமும் ஊனுண்ணும்
விந்தைப்பூமியிலே உலவுன்றதென் குதிகள்.
கண்கள் அறுந்த காலக்குமிழிற் கிளர்ந்து
குதித்துக் குதித்துக் குதிர்ந்தெல்லாம் பெருங்குதிகள்.
அடுத்த விலங்கின் ஆதர்சம் காண் கண் துடித்து விளையாது
அந்தக விலங்கின் வால் விரிவின் செவ்வெரிவும் தண்குழைவும்.
ஊன்றிக் குதி நடக்கின்ற நிலம் குறித்து வால் முளைக்கின்ற
குருட்டுவிலங்கொன்றின் நீள்மூக்கிற் துளிர்ப்பது புறப்பார்வை.
விழியறு விந்தைப்பூமிக்குள் வில்லெடுப்பார் வேண்டாதார்.
'05 Feb., 14 03:23 EST
கோடு போடுதல்
தான் தோன்றி
நெடுக்கப் போடுகிறேன் கிடைக்கோடு
குறுக்காய்
செங்குத்தி உன் நிலைக்கோடு
அடி இரண்டு பக்கம் நகர்ந்து
போடுகிறேன் இன்னோர் நெடுங்கிடை
உயர்ந்து நிலை இரண்டடியாய்
கிளைக்கிறது உன் குறுக்குநிலை.
அடுத்து எழுந்து அடி உயர்ந்து நான்
போடும் கோடு,
எனக்குக் குறுக்கு, உனக்கு இணை
என்ற பின்னால், சடக்கென
எதுக்குச் சரிகிறது கிடையில்
உன் நெடுக்கு?
'06 ஜூலை 25 செவ். 09:44 கிநிநே.
கிளிப்போர்வீரன்
காலைத்தூக்கத்தின் கடைசியிலே
தனிக்கிளிப்போர்வீரன் கழிசுற்றி
வழிபோகக் கண்டேன் நான்;
அகல விழி கொண்டேன் பின் விரைந்து.
மெல்லாமலே மிரட்டுஞ்சொற்களை,
கூவித்தின்றும் கூட்டித்துப்பியும்
குறுக்கும் நெடுக்கும்
கொண்டுபோனான்;
கொட்டிக் கொட்டிக்
குதறிக்கொண்டும்கூட.
தனக்கு வெந்ததையே மீளமீள வெக்கைப்படுத்திப்போனான்;
சொல் மாளச் சொல் மாள, பையெடுத்துச்
சொன்னதையே வன்கதியிற் சுற்றிப்போனான்.
இல்லாத கேள்விகளுக்கும் இந்தா பதிலென்று
எடுத்தெறிந்தான் இங்குமங்கும்.
எதற்கு இதுவென்றால், அதற்குமோர்
அந்தரத்தே தான் தங்கும் அசிங்கப்பதில் தந்தான்.
வந்ததுவும் போனதும் தன்னடைக்கே தெளிவு என்றான்;
என்னதுவும் உன்னதுவும் எல்லாமே பொய்யென்றான்.
கண்ணைத் திறந்தால் கூர்க்காற்கைகொண்டு பொத்தினான்;
நான் நிலவைக் காணத்தானே தான்
கண்ணைக் கொண்டு பறத்தலென்றான்.
தத்தித்திரிந்தான் முன்னுக்கும் பின்னுக்கும்;
முடுக்கத்தில் முக்கிக் கழித்தான் சொட்டெச்சம்;
முரமுரவென்று மூக்குள் மூச்சோடு முனகினான்.
எந்த வினைக்கும் எதிர்ப்பட்டாரைக் குறை சொன்னான்;
தன் வினைக்கு முன்வினையைத் தானே முன்வைத்தான்.
கழுத்தைச் சுழித்தான்; சரித்தான்; வட்டக்கண்ணைப் படபடத்தான்;
அடர்ந்த அலகைமட்டும் அவதியிலே கொறிக்க வைத்தான்.
இறக்கை தறித்த கிளிப்போர்வீரன் தத்தலுக்கு,
ஏட்டுச்சுவடியினை இழுத்துக் கதை சொல்வதற்கு,
என்னத்தைப் பதிலாக இங்கே எழுதிவைக்க?
"அவதி அலகை மூடிக்கொள்; அறுந்த சிறகை முளைக்கச்சொல்;
விரைந்து பறக்கக்கல்; வெளியை மிதிக்கச்செல்.
கொறித்துக் கொறித்துக் குறை கொட்டித் திரிதலுக்கு,
கொவ்வை ஒன்றை ஒழுங்காய் எடுத்துருட்டி,
உண்டலகு மென்று தின்று மூடிக்கொள் நா"
என்றால் கேட்குமா இறகறுந்த அலகுக்கிளி?
தனிக்கிளிப்போர்வீரனின் போர்வையெல்லாம்
கேட்டலும் கிழித்தலும் பிதற்றலும் பீய்ச்சலுந்தான்.
"கழிசுழற்றும் கிளியெல்லாம்
கிண்ணிக்களி கண்டால்,
தண்ணீர்சுனை கண்டால்
என்ன செய்யும்?
என்னைப்போல்,
தின்னுமா, குளிக்குமா,
தினவெடுத்துத் திரியுமா?
என்ன சொல்வாய்?"
என்று கேட்டேன்.
பதிலொன்றும் சொல்லாமல்
காலைத்தூக்கத்தின் தனிக்கிளிப்போர்வீரன்
கழிசுற்றி கடந்துவழிபோகக் கண்டேன் நான்;
அசரும் விழி மூடிக்கொண்டேன்.
மோனத்தில் என்னைமட்டும்
மோகித்து மொத்தமாயொரு
வட்ட முடிச்சிட்டிருந்தேன்
மிச்சவிடிநேரத்துக்கு.
'01, ஜூன் 22, வெள்ளி 20:05 மநிநே
தளையுறாததும் தலைப்புறாததும் IX
அடுத்தாள் அடிப்பதற்காய் வாயில்
புடைத்துப் பருத்திருக்கிறது ஆராய்ச்சி மணி.
குலைக்காவேளையிற் குட்டிநாய்
பாதிக்கண் பொருத்தி படுத்திருக்கும்.
"உருக்குருக்கி ஒலியுரு வடித்தவன் யார்? - ஓசைப்படாது,
என் வாயில் தூக்கிக் கொழுவி முடித்தவன் யார்?"
கூறாமல், அடுத்தாள் தான் முன்னாள் முடித்த
பிடித்த நேரத்தில் முடிப்பிழுத்திழுத்து
அரற்ற அடிக்க வகை புடைத்திருக்கும்
என் வாசல் ஒரு மழுக்கு பழமுருக்குமணி.
முருக்கம் கதியால் வெறுமுதுகு இழுத்துக்கிழிப்பதுவாய்
போவான் வருவாள் பொல்லாப்புக்கெல்லாம்
என் வாயில் இழுத்து அடிப்பார் வாயிலெல்லாம்
உருக்கி வடித்து உருக்காவிக் கொணர்ந்து கொழுவார்
எனது வாயில் இழுத்தழுத்து அடித்துப்போவதினாற் பொழுது
இல்லாமலே நிம்மதியாய்க் காயும் ஏதுமின்றி அரற்றுமணி.
~13 மே 2004, வியாழன் 04:53 மநிநே.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
யப்பா எனக்கு தலை சுத்தி மயக்கம் வருதுப்பா!
முடியல அழுதுருவேன்
Post a Comment