Sunday, May 22, 2005

கணம் - 466

கிரகணம்

மாலைப் பூங்காவில் ஆர்ப்பரிக்கும் ஒரு சிறுவன்:
"தெரிந்து கொள்! என் ஞானத்தந்தை தகியொளிச்சூரியன்,"
கை விரல் தூக்கி மேற்கு நிலம் முயங்கும் திசை நோக்கி,
காற்றை எதிர்த்துக் கதை சொல்லி, எரிசூட்டை மிதித்தான்போல்,
சுழல்வான்; சுழிப்பான்; அலைவான் கால் அங்கும் இங்கும்.

காதிலே குண்டலம் கண்டிலேன்; காததுவும் புண்டு தொங்கிலன்.
வாய் சொல்லுஞ் சொல் புரியாத சிறுபிள்ளையல்லோ இவன்!
"ஆர் சொன்னார்?" - அழுத்திக் கேட்டேன் - ஆனாலும்,
அடக்கிக் குரல் முடக்கி அவன் காதுக்கு மட்டும் எட்ட.
"அன்னை" என்பான், ஆள் காட்டினான், அருகொரு வாங்கில்.

குந்தி இருந்தாளைக் குறி வைத்துப் போனேன்; என்னதென்றாள்.
"நின் மகன் ஞானத்தந்தை ஞாயிறென்றான்" - நவின்றேன்.
கூசாமற் சொன்னாள், கூரான விரல், மேற்கைக் குறி வைக்க;
"ஞாயிறே ஞானமானவன்; ஞாயிறே ஞாலமானவன்;
ஞாயிறே நியாயமானவன்; ஞாயிறே நம்பகமானவன்;
ஞாயிறே விசாலமானவன்; ஞாயிறே நல்லொளியானவன்;
ஞாயிறே பீடமானவன்; ஞாயிறே நமக்கு...." சொல் விரித்தாள்,
வெறி மிதப்பாள், விழி சிவக்க, வரி புடைக்க, மயிர் சிலிர்த்து.
காலெடுத்துக் கடந்தேன்; கடி நகர்ந்தேன்; தாய் வேழம் இன்னும்
தடங்காமல் முழங்குமாம் என் நிழலும் தகிக்கத் தகிக்க,
வீசுவெயிலோன் விண்ணாணம் போமென் பிடரி பின்னால்.

கணத்தே, உள்ளிருந்து ஓங்கியடித்தாற்போல்,
உடனெழுந்தது சூழக் குவிந் திரவு குமிழ்ந்தது
போலோர் புறத்தோற்றம்; சூழல் திகைந்து திரிந்தது.
திகைத்துத் திரும்பி வான் பார்த்தேன்; கதிரோன்,
வீசு கற்றை விட்டான், வெறுங்கறை உற்றான்; சூழுங்
கரை மட்டுங் கொண்டான் கதிர், சுட்டுத் தின்றதார், சொல்?
வால் வளைத்துக் காலக்கேதோ? வயோதிபக் காலக்கேடோ?

ஆனாலும், மாறாத காட்சி சில மருட்டும்,
மங்கு இருளிலும் பொங்கு மகிமை பற்றி;
கிளியெனக் கூறும் சிறுவன்,
இன்னும் புகழ் கூவுகிறான், கேள்,
வெறுஞ்சூனியன் ஆனானை, ஞான
வெளிச்சூரியன் என்றே விடாமல்
,
கூடிப் பேசுகிறாள், பார், குந்தி,
பட்டொளி வீசும் பகலவன் வீரம்.

வெறும் பெருங்காயப்பெட்டியும்
திறந்தால் மணக்கும்; கறிக்காகுமா?

சூனியகிரகணம் ஒளிக்காகுமா?

'05 மே, 22 ஞாயி. 04:57 கிநிநே.

9 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

ரொம்ப நாளைக்கப்புறம் துள்ளி விளையாடியிருக்கீங்க!

கொழுவி said...

//வெறும் பெருங்காயப்பெட்டியும்
திறந்தால் மணக்கும்; கறிக்காகுமா?

சூனியகிரகணம் ஒளிக்காகுமா?//

அந்த மாதிரி.

ஈழநாதன்(Eelanathan) said...

சூரியனைப் பாம்பு விழுங்கியதென்பாள் பாட்டி.உண்மைதானோ.கேட்டால் குலைக்கிறோமென்பர் நமக்கேன் வம்பு

-/பெயரிலி. said...

மதி, மஸ்ற் டூ, ஈழநாதன் குரைத்ததற்கு நன்றி ;-)

KARTHIKRAMAS said...

ஏறி நின்று கூவுவேன் ;
உயர உயரத்தே வந்துவிட்டேன்
நானென்று.

ஆர்பரித்து அங்கம் குழைந்து
அழுது மெய் மெச்சுவேன்;
அல்லி மாலைகள் பூணுவேன்.
ஆனந்தக் கண்ணீர் சொறிவேன்

ஆர் பெற்றார் என் அறிவென
அலட்டிகொள்வேன்; அங்கலாய்ப்பேன்.

சடவென மழையில்
சந்தோஷத் துள்ளல்

அது சரி!!

மனு முன் மண்மேட்டில் ஏறி நின்றுக்
கூவும் நுணலை
நுணெலென்றுச் சொல்லாமல்
வேறென்ன சொல்வது? நான்.

நுணலுக்கும் உண்டு
சமூகம்;சந்தர்ப்பம்.
குழவி;குடிமை

சூரியனும் உண்டு
ஞாயுறும் உண்டு
பகலவனும் உண்டு
நுணலுக்கும்

இருள்பிடி பீடிப்பில்
விட்டிலைப் பரிதி என்று
விள்ளும் வீண்
நுணலை நுணலென்று சொல்லாமல்
வேறென்ன சொல்வது ? நான்.

KARTHIKRAMAS said...

பெயரிலி,
கவிதை நன்று. அம்மா பாத்திரம் எதற்கு என்று தோன்றியது . அவ்வளவே? ;-)
அது காலிப்பெருங்காய டப்பியா இல்லை கூலிப்பெருங்காய டப்பியா? :-)

-/பெயரிலி. said...

/கவிதை நன்று. அம்மா பாத்திரம் எதற்கு என்று தோன்றியது/
கட்டாயம் தேவை; குழந்தைகள் தாங்கள் என்ன பேசுகின்றோமென்றே அறியாமல், சூரியன், சந்திரன் என்று பிதற்றும். அதற்குத் தெரிந்ததெல்லாம், அம்மா சொல்வதற்கு ஆமாம் போடுவதுதான். அம்மா, சூரியனைவிட்டால், ஆளில்லை என்று காலகாலமாகக் குந்தி, மந்திரித்துக் கொண்டிருந்தால், அறியாத குழந்தை தன்னை நேசிக்கிற அம்மாவினை அப்படியே நம்பி, "சூரியனே ஞானம்; சூரியனே பீடம்" என்று பிதற்றிக்கொண்டு திரிவது தவிர்க்கமுடியாததல்லவா? எய்தவளிருக்க, அம்பை நோவானேன்?

KARTHIKRAMAS said...

//எய்தவளிருக்க, அம்பை நோவானேன்?// அதுவும் சரிதான். நன்றி. எனக்கு இப்போதைக்கு வந்து துள்ளி விழுந்தது ஒரு நுணல்தான். :-)

Thangamani said...

//அது காலிப்பெருங்காய டப்பியா இல்லை கூலிப்பெருங்காய டப்பியா? :-)//

:)))