Thursday, May 26, 2005

கணம் - 467


'05 மே 26, வியா. 11:36 கிநிநே.

மழைக்காலப்பெருவீதிகள் என்ன செய்யும்?
எழுதிக் களைத்தெரிந்த எழுத்தாளனைப்போல்,
எண்ணம் மிதக்கத் தூங்கும் இரைமீட்டி.

நிறுத்தின கார்கள் பற்றி நினைக்கும்;
நிமிர்ந்த நெடுவரிக்கட்டடங்கள்
நிலைக்கக் கண் வெறிக்கும்;
நிற்கும் மரம் விதைத்தது, முளைத்தது,
பூத்தது, காய்த்தது, பழுத்தது, பட்டது,
விட்ட விழுது, கொட்டின இலை,
இளமையில் புழு கொத்திச் செத்த முளை
அத்தனையும் அலையும் அதற்குள்;
தார் இளக்கிக் கொதிக்கத் தகிக்காது
தலை தொலைத்த சூரியனைக்கூட
கார் மேகத்தூடு கண்தேடிக் கலங்கும்.
தனிமை தரை பிளக்கும் வழி.

எப்போதேனும் வருமொரு கார், புகை,
ஆளிரண்டு, அவசர இலைச்சலசலப்பு.
கணமிரண்டு கழியும்; ஒன்று, இரண்டு,
இன்று நிற்க உள்ளக்கனிவிருந்தால்,
மேலோர் அரைக்கணமும் மேவலாம்.
அதன்பின், ஆள் போகும்; கூடக் கார்;
மெல்ல, மீளத் தொடங்கும் இரைமீட்பு.

காலம் காரென்றால்,
வீதிகளுக்கில்லை பேதம்,
பெரிதும் சிறிதும்.

'05 மே, 26 வியா. 13:58 கிநிநே.

9 comments:

இளங்கோ-டிசே said...

நெகிழ்வான, நல்ல கவிதை பெயரிலி!
//காலம் காரென்றால்,
வீதிகளுக்கில்லை பேதம்,
பெரிதும் சிறிதும்.//
அப்படித்தான் இருக்கும் போல எனக்கும் தோன்றுகின்றது.
.........
இந்தக் கவிதையில் முக்கியமான ஒரு அம்சத்தைத் தவறவிட்டுவிட்டீர்கள் போல எனக்குத் தோன்றியது. மழை பொழியும்போது, அல்லது மழை ஓய்ந்தபின் காதலர்கள் உற்சாகமாகத் திரிவார்கள் அல்லவா? கார்களைப் போல மழைக்காலத் தெருக்கள் இவர்களையும் நேசிக்க அல்லவா செய்கின்றன :-)

SnackDragon said...

ஈ ரோடு எனக்கு தெலுசி (?)

SnackDragon said...

//காலம் காரென்றால்,
வீதிகளுக்கில்லை பேதம்,
பெரிதும் சிறிதும்.//
ம்கூம் சுத்தமா புரியலை..

-/பெயரிலி. said...

டிசே, காதலர்கள் உற்சாகமாகத் திரிவதைக் காணிலேனே! :-( குடை கண்டதெல்லாம் காலிமுகவீதியோடு போயே போச்!

/ம்கூம் சுத்தமா புரியலை../
ஆஹா! நாட்டிலே நல்ல விசயங்கள் நடக்குது. இது ரெண்டாவது; முதலாவது, தம்பி செர்ரியின் பதிவிலே இன்னும் பின்னூட முடியாமலே இருப்பது.

SnackDragon said...

பெயரிலி, இப்பத்தான் எழுதிக்கொண்டிருந்தேன் டீ சேவுக்கு.
நுணலுக்கும் எனக்கும் ஏதோ ஒத்து வரமாட்டேங்குது. 2 தடவை போட்டேன். அப்படியும் தப்பி ஓடி விட்டது. நாளைக்கு மறுபடியும் பார்க்கிறேன். தவளை அழகாக இருந்துச்சு இல்லை?

SnackDragon said...

ஐ மீன் தவளை போட்டோ.

Sri Rangan said...

//மழைக்காலப்பெருவீதிகள் என்ன செய்யும்?
எழுதிக் களைத்தெரிந்த எழுத்தாளனைப்போல்இ
எண்ணம் மிதக்கத் தூங்கும் இரைமீட்டி.//



இரமணி,வணக்கம்!'எழுதிக் களைத்திருந்த எழுத்தாளனைப்போல்?அல்லது 'களைத்தெரிந்த' வசனம் பொருந்தவில்லை,சற்று வாக்கியத்தைச் சரிபாருங்கள்.அல்லது நான்தாம் பிதற்றுகிறேனோ?...

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
சில பெரிய எழுத்தாள வீரர்களெல்லாம், தம் மொழிக்காக எழுதி எழுதியே களைத்துப்போய்க் கடைசியிலே எழுதவும் சரக்கு ஏதுமில்லாமல் (இது வேற சரக்கு ;-)) எரிந்து போய்விடுகின்றார்களல்லவா, அந்த burnt out இனைத்தான் சொல்கிறேன்.

Sri Rangan said...

புரிந்துகொண்டேன்,நன்றி!