Sunday, May 08, 2005

புலம் - 13

இன்று போய் நாளை வா



குழித்தீயோடு சீதையையும்
கோதைசீதையோடு ராமனையும்
உத்தரராமனோடு அனுமனையும்
வலிஅனுமனோடு அங்கதனையும்
அம்பிகாபதியோடு கம்பனையும்
கவிகம்பனோடு வால்மீகியையும்
கல்லூரியோடு கழற்றித் தொலைத்து
கரைத்து மறந்துபோக்கியாகிவிட்டது.

ஆனால், போர்க்களமிருந்து
கடன்பட்டார் நெஞ்சத்தோடு
தலைகுனிந்துபோன
அந்த அவனை மட்டும்
என் மனமிருந்து இன்னும்
இறக்கி விட முடியவில்லை.


கம்பராமாயணம் குறித்து அண்மைய பதிவுகளிலே நிறையப் பேசப்படுகின்றது. எவரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது; எல்லோரும் எழுதியதை வாசித்து வாசித்து விளக்கத்துக்குப் பதிலாகக் குழப்பமே எனக்கு மிஞ்சுகிறது - குறிப்பாக, பேச்சு பேசிக்கொண்டிருந்த படைப்பினை விட்டு மிகவும் விலகி மிகவும் கருத்துரு சார்ந்த தளத்திலே மட்டும் பேசும் நிலை வந்தபின்னாலே. என் பங்குக்கு இங்கே அங்குமிங்கும் அளைந்து ஒரு சட்டிக்குழம்பு :-)

இராமாயணத்தினை எப்படியாகப் பார்க்கின்றோம் என்பது அவரவர் எதை அதிலே தேடுகின்றார் என்பதைச் சார்ந்தது. மிக எளிதான "தேடுங்கள் கிடைக்கப்பெறும்" உண்மை அது. இலக்கியத்துக்காகத் தேடுகின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; இறைவனுக்காகத் தேடிக்கொள்கின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் & ஒரு களத்தின் குறுக்குவெட்டினை அறியத் தேடுகின்றவர் - ஓரளவுக்கு கவித்துவமும் புனைகற்பனையும் மயக்கும் இரைச்சல் விலக்கி - அதற்கேற்ற மாதிரியாகப் பகுத்துக்கொள்ளட்டும். இதிலே முரண் ஏதுமிருக்கமுடியாது. ஒருவரின் பார்வையே சரியென்பதாகவும் தோன்றவில்லை (நிகழ்வு என்பது ஒன்றாக இருக்கலாம்; ஆனால், உண்மை என்பது ஒன்றுக்கு மேற்பட்டது; சொல்லப்போனால், ஒருவருக்கான உண்மை என்பது, நிகழ்வினை அவர் கிரகித்து உள்வாங்கும் விதமும் பார்வையுமே). இந்த வடிவிலேயே, ஒரு புறம், கம்பனுடைய இராமாயணத்தினை வைத்து ஒரு சாராருக்கு கம்பனையோ இராமனையோ குற்றக்கூண்டிலே இழுத்து ஏற்றவும் தாடகையை ஏற்றிப் புகழவும் முடிகிறது; மறுபுறம், செவ்வியல் என்ற அளவிலே அதனை இலக்கியமாக மட்டும் பார்க்கின்றவர்களின் பார்வையும் அதனளவிலே சரியென்று படுகின்றது. ஆனால், இவ்விரண்டு பார்வைகளும் எதிரும் புதிருமென்று தமக்குள்ளே மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எந்தப்படைப்பிலக்கியம் தொடர்பாகவும், அதனதன் தேவை சார்ந்து இவற்றிலே எந்தப்பார்வையும் சரிதான்.

அதன் காரணமாகத்தான், முழுமையாகக் கம்பராமாயணத்தினை முழுக்க நான் ஒருபோதும் வாசித்ததில்லை என்கிறபோதும், அங்குமிங்கும் துண்டங்களாக வாசித்த அளவிலே, நான் ப. ஜீவாவினது எனச் சொல்லப்படும் கட்சி. கம்பன் கவிதையின் ஊற்றையும் ஒழுக்கையும் வாசிக்க உற்சாகம் பொங்க, கம்பராமாயணம் பிடிக்கின்றது; எனக்கு வாசிக்கும்போது, அப்படியாகப் பொங்கிவரும் உத்வேகத்தினைத் தருகின்ற, கம்பனைப் போன்ற, வேறு "பழம்நூற்றாண்டுகாலத்துக்கவிகள்" இருவர்தான்; இன்றைய எந்தத் துள்ளற்பாட்டுக்காரர்களும் தரமுடியாத துள்ளலை மணிப்பிரவாளத்திலே தந்த அருணகிரிநாதர் & ஆளை உருக்கும் வாசகம் தந்த மாணிக்கவாசகர். இங்கே கம்பராமாயணக்கவிதையை கவிதை உணர்வுக்காகமட்டுமே பார்த்துவிட்டுப் போகிறேன். கவிஞனாகக் கம்பன் பிடித்திருக்கிறான். ஆனால், கம்பராமாயணத்தின் கதாபொருள், கதாபாத்திரங்கள், கருத்து என்பனவற்றினை முன்னிலைப்படுத்தி, அதற்குள்ளே ஒரு காலகட்டத்திலே களத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைப் பகுப்பாய்வு பண்ணிக் கட்டுடைக்கப்போனால், தாடகைக்கும் சூர்ப்பனகைக்குமாக நியாயம் கேட்கவே இயல்பாக விருப்பமெழுகின்றது. அந்நிலையிலே கம்பன் என்கின்றவன் துளசி இராமாயணத்திலே எடுத்து எழுதினானா இல்லையா என்பதொரு புறமிருக்க, வடநில இராமனை எப்படியாகத் தமிழ்ச்சூழலிலே உருவகிக்க விரும்பியிருக்கின்றான் என்ற பார்க்க விரும்புகையிலே, கம்பனை, அவன் புரவலர், பின்புலம், புனைகாலம் எல்லாம் நோக்கி விசாரிக்கவே முடிகிறது; அதிலே தவறுமில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் ஒருவன் கம்பராமாயணத்தினை(யோ அல்லது வேறெந்தப் படைப்பினையோ) அணுகலாமா என்றால், (என்னால்) முடியுமென்றே சொல்வேன். இப்படியாக ஒரு படைப்பினைக் குறித்துச் சாத்தியமாகக்கூடிய இரு நிலைப்பாடுகளுக்கு வேறு சில உதாரணங்களையும் தரலாம்.

அ. தமிழ்த்திரைப்படப்பாடல்கள் & Shaggy_மற்றும் பல Rap பாடகர்களின் பாடல்கள் - "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" & "பழகத் தெரிய வேணும்; பெண்கள் பார்த்து நடக்கவேணும்" இவை இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்களிலே அடங்கும். முதலாவது பாடல், அதிலே இருக்கும் கவிதைப்படிமத்துக்காக; இரண்டாவது பாடல், ஏ. எம். ராஜாவின் குரலுக்காக; ஆனால், சமூகக்கருத்தாக்கத்திலே அப்பாடல்வரிகளைப் பார்க்கும்போது இரண்டுமே பெண்களினை அவமதிக்கின்ற, ஆணாதிக்கத்தினைச் செருகுகின்ற பாடல்களாகவே இருக்கின்றன. "மண்ணில் இந்தக்காதலன்றி" போல, இன்னும் பல பாடல்களை இதே வரிசையிலே சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், "It wasn't me" தொடக்கம் பல பாடல்களும் - இசை கொடுக்கும் துள்ளலும் அசைவும் பிடிக்கின்றன; கருத்து பிடிக்கவில்லை. வேண்டுமானால், சமூகக்கருத்-தாக்கத்துக்காக, இச்சந்தர்ப்பங்களிலே பாடலாசிரியர்களைக் குற்றம் சாட்டி விசாரிக்கலாம்; அதேநேரத்தில், பாடலின் இசையமைப்பு & படிமங்களுக்காக, பாடலைப் புகழ்ந்துவிட்டும்போகலாம்.

ஆ. D.W. Griffith இன் "The Birth of a Nation" இனையும், Mario Vargas Llosa இன் "The Real life of Alejandro Mayta" இனையும் அவற்றின் ஏற்படுத்த விழையும் கருத்துப்பதிவுகளுக்காக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால், அவை என்னைக் கவர்ந்தவற்றிலே அடக்கம். படம், அது தயாரிக்கப்பட்ட காலத்துக்குரிய "கருத்தாக்கத்தினைப் பிரதிபலித்தாலும்" அக்காலத்திலே திரைப்படம் என்ற சாதனத்திற்குப் புதிய நுணுக்கங்களையும் அச்சாதனத்தின் புதிய சாத்தியங்களையும் தந்திருப்பதாலே பிடித்திருந்தது. புதினம், அது சொல்லப்படும் உத்தி குறித்துப் பிடித்திருந்தது.

ஆனால், இராமாயணம் போன்ற காதைகளைப் பயன்படுத்தும் விதத்திலே, அது நாளாந்த வாழவிலே சிக்கலை உருவாகின்ற நிலமைகளும் இருக்கின்றன. உதாரணமாக, இராமாயணத்தினை வைத்து

அ. வரலாற்றினை வரையறுத்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால அரசியலையும் சமூகச்சிந்தனைப்போக்கினையும் வளர்த்தலும் (அயோத்தி, அரசியற்களமாகவும் பயணக்கலமாகவும் மாற்றப்பட்டது இதன் வடிவமே),

ஆ. கதையைத் தெய்வீகப்படுத்தி, அதிலே சொல்லப்படும் நம்பிக்கைகளையோ கருத்தாங்கங்களையோ கேள்வி கேட்டலையும் அவற்றோடு முரண்படுதலையும் (மறுவாசிப்பும் மாற்றுப்பார்வைகளும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்) குற்றங்களாக தெய்வநிந்தை என்ற போக்கில் அழித்தலும் அமுக்குதலும்

ஆகியன எதிர்க்கப்படவேண்டியனவாகும் (- குறிப்பாக, நாட்டின் அரசியலும் மதமும் ஒன்றிலொன்று சாராதிருக்கின்றதற்கும் கருத்துச்சுதந்திரத்துக்கும் அடிப்படைச்சட்டமிருக்கின்றபோது).

இனி, காவியத்தை (இங்கே, கம்பராமாயணத்தினை) ஓர் இலக்கியப்படைப்பு என்று ஒத்துக்கொண்டு பார்க்கின்றபோது, அதன் பாத்திரங்களின் அமைவும் பண்புகளும் கவிஞன் (இங்கு கம்பன்) என்ற தனிப்பட்டவனின் சொந்த அனுபவம், விருப்பு-வெறுப்பு, விபரிப்பு எல்லை ஆகியவற்றினாலே வரைந்து வனையப்பட்ட பார்வை மட்டுமே; அதே பாத்திரங்கள், வேறு காலத்திலே வேறு களத்திலே மாறுபட்ட அனுபவங்களூடாகப் பயணித்து வந்தவர்களுக்கு வேறு கோணங்களிலே நோக்கப்படவும் காதையை மீண்டும் மாற்றுப்போக்கிலே புனைந்து பார்க்கப்படவும் சாத்தியமிருக்கின்றது; தாடகை, சூர்ப்பனகை, வாலி போன்றவர்களின் நிலைமையை அவர்களைக் கம்பன் படைத்த பின்புலத்தினை ஒத்த பின்புலத்திலே வருகின்ற ஒருவரால், அப்படியான பின்புலத்தினைச் சமைத்த கம்பன் உணர்ந்திருக்கமுடியாத உணர்வூற்றோடச் சொல்லமுடியும்; நியாயப்படுத்த முடியும்; இதற்குச் சமாந்திரமாகச் சென்ற ஒரு நூற்றாண்டிலே வந்த உதாரணமாக, வெள்ளைக்காரப்பெண்ணான Margaret Mitchell எழுதிய "Gone With the Wind" இற்கு இருக்கக்கூடிய இன்னொரு சாத்தியத்தைச் சொல்லும் "The Wind done Gone" இனை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளின் பின் கறுப்புப்பெண்ணான Alice Randell எழுதியதைச் சொல்லலாம்.

ஆனால், இராமாயணத்தின் கூறுகளான துணைக்கதைகளையும் பாத்திரங்களின் கதைகளையும் மீள எழுதுதலுங்கூட, தமிழிலே வெவ்வேறு காலகட்டங்களிலே வெவ்வேறு நோக்கங்களிலே நிகழ்ந்திருக்கின்றன. பாரதியாரின் சிறுகதையிலே இராமாயணம் நகைச்சுவையை முன்வைத்து முரணுக்குச் சொல்லப்படுவதாக, குதிரைக்கொம்பாக வந்திருக்கின்றது. மரபுசார்ந்த இராமாயணத்தின் ஷத்ரிய இரவிகுல இராமனை ஆரியன் என்றும் பார்ப்பன புலத்திய இராவணனைத் திராவிடன் என்றும் திராவிட இயக்கங்களுக்குக் காட்டத் தேவையிருந்தபோது, புலவர் குழந்தையின் படைப்பும் அண்ணாவின் கம்பரசமும் எம். ஆர். ராதாவின்(?) கீமாயணமும் வந்திருக்கின்றன. துணைக்கதைகளும் அப்படியே பேசப்பட்டிருக்கின்றன; வாலியின் வதம் ஏற்கனவே இராமகாதை சொல்லும் தாங்கும் விழுமியங்களின் அடிப்படையிலே ஒரு துளைபோடுவதாகத் தோன்றுவதாலே, திரும்பப் பேசப்பட்டிருக்கின்றது - சில வேளைகளிலே வாலியை நியாயப்படுத்தி & மீதி வேளைகளிலே கோசலைராமனை நியாயப்படுத்தி. புதுமைப்பித்தன் தொடக்கம், தளையசிங்கம், சிவசேகரம் வரைக்கும் அகலிகையைத் தாங்கிக்கொண்டிருக்கின்றனர். அதுபோலவே, அண்ணனுக்காகத் தூக்கமில்லாமற் பின்னாலே திரிந்த உறங்காவிலி இலக்குமணனுக்குமாய்ச் சேர்த்து அயோத்தியிலே தூங்கின அவன் மனைவி ஊர்மிளை பற்றியும் அநியாயமாகத் இராமன் தீக்குள்ளே இறக்கிய சீதை பற்றியும் நிறையவே பெண்ணியல்வாதிகள் தாங்கியிருக்கின்றனர். அதுபோலவே, வாலி/சுக்ரீவன் மனைவி தாராவும் இராவணன் மனைவி மண்டோதரியுங்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அனுதாபத்துடன் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஏன், கைகேயிகூட நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றாள் - கூனியின் முதுகினை இன்னும் வளைத்தேறி. ஆனால், இங்கேதான் ஒரு சுவையான தொடர்ச்சி இருக்கின்றது. இந்தப்பெண்கள் அனைவருமே அடிப்படையிலே முனிபத்தினி, அரசிகள், இளவரசிகள், குலத்தலைவிகள் என்ற நிலையிலே கற்ற பெண்ணியல்வாதிகளால் (ஆண் & பெண் என்ற பேதமின்றி) தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், சமூகத்திலே விளிம்பு நிலையிலே படைக்கப்பட்ட தாடகை, சூர்ப்பனகை (இராவணன் தங்கை என்றாலுங்கூட, அவள் வர்ணிக்கப்படும் விதம் அவளை ஒரு கௌரவத்துக்குரியவளாகக் காட்ட முயல்வதில்லை), கூனி போன்றவர்களுக்காக இந்தப்பெண்ணியல்வாதிகள் பேசியதாக நான் வாசித்தறியேன். இவர்கள் பேசப்படத்தொடங்கியது, பஞ்சமர் வாழ்க்கையும் தலித்தியமும் தமிழ் இலக்கியத்துள்ளே ஒரு தனியிடத்தினை ஊடுருவிப் பெற்றுக்கொண்ட பின்னாலேதான். சில ஆண்டுகளுக்கு முன்னாலே சூர்ப்பனகையின் மூக்கறுபடுவதற்குக் காரணமாக, ஆக, "அவள் ஒருவனை நான் உன்னை விரும்புகின்றேன்" என்று கேட்டதே அடிப்படைக்காரணமாகிவிட்டதா என்ற வாதம் வந்து எங்கோ வாசித்தேன். சூர்ப்பனகையின் கதை, இப்போதெல்லாம் ஓரளவுக்கு Matthew Shepard இனைத்தான் எனக்கு ஞாபகப்படுத்துகின்றது. ஆக, இருவரும் செய்த தவறு, தவறான மனிதரிடம் தங்கள் இச்சையைத் தெரிவித்ததன்றி வேறில்லை. அதன் பின்னர், சொல்லப்படும் சூர்ப்பனகையின் வெருட்டல், அருட்டல் எல்லாவற்றினையும் களைந்துவிட்டு மாற்றுப்பார்வை இருக்கலாமென்றே தோன்றுகின்றது. தாடகையின் கதையின் நவீனப்படுத்தப்பட்ட வடிவமாக வேண்டுமென்றால், பாலமுருகன் எழுதிய சோளகர்தொட்டியினைச் சொல்லலாம். அதிலே ஏன் சிவண்ணா ஒரு கட்டத்திலே துப்பாக்கியினை எடுக்கவேண்டி வந்ததென்பதற்கும் முனிவர்களைத் தாடகை பயமுறுத்தியதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அஃது இயலாமையின் இறுதிக்கட்டத்திலே, மூலைக்குள்ளே ஓரங்கட்டப்பட்ட, பூனைக்குட்டியும் காற்பாதம் தூக்கிச் சீறும் நிலையை ஒத்தது. அதனால், தாடகை அட்டூழியம்-அழிப்பினைக் குறித்துச் சொல்வதற்குப் புதிய இராமகாதை எழுதப்படவேண்டுமென்றால், அதேபோல, சூர்ப்பனகையின் காமம்-மூக்கறுப்புக் குறித்து, இராமமூக்கை எழுதப்படவேண்டும்; கூனிக்கு உண்டுவில் அடித்தது குறித்து, இராமமுதுகை எழுதப்படவேண்டும். இன்னும் வேண்டுமானால், பொன்னியின் செல்வனின் ஆரம்பத்திலே வரும் ஆழ்வார்க்கடியான் - சிவனடியார் வகை வாதாட்டம் மேவிய பார்வையிலே "இராவணன் மேலது நீறு" என்று சம்பந்தர் ஏற்றிய சைவன் தசக்க்ரீவனின் நிலையை நியாயப்படுத்தி, வைஷ்ணவ கம்பநாட்டாழ்வானின் இராமனுக்கு எதிராக ஒரு படைப்பு இதுவரை வராதது ஆச்சரியத்தினைத்தான் தருகின்றது.

இவை எல்லாம் தவிர, தனியொருவனின் பார்வைகூட, காலத்தோடும் அனுபவத்தோடும் ஒரு படைப்பினைக் குறித்து மாறலாம். சிறுவயதிலே, கடவுளாகத் தோன்றியவன் இராமாயணத்தின் இராமன்; பின்னாலே, இராவணன் என்னூரான் என்ற ஐதீகத்தின் அடிப்படையிலே இராமாயணத்தின் பார்வை, இராவணனுக்கு அனுதாபம் கொண்டிருந்தது. பின்னால், ஜி. பார்த்தசாரதி இந்திரா அம்மையாரின் தூதுவராக வந்தபோது, இலங்கைத்தமிழர்சார்புப்பத்திரிகைகளால், அனுமார் என்று போற்றப்பட, இராமாயணம் தொடர்பாக ஒரு குழப்பம். கடைசியிலே இந்திய அமைதிப்படையோடு வானரசைனியம் வனத்துள்ளே நுழைந்தால், இதுதான் ஆகுமென்று உணர்வு. எல்லாவற்றுக்கும்மேலாக, கடந்த பதினேழு ஆண்டுகளாக ராம் என்ற ஒற்றைச்சொல் மனிதன் ஏற்றும் வெறுப்பு. ஆக, இன்றைய நிலையிலே என்னைப் போன்ற உணர்வு, அனுபவத்தூடாகப் போன ஒருவன் கம்பநாட்டாழ்வானின் இராமாயணத்தினை மீளத் தன் பார்வையிலே எழுத முயன்றால், நிச்சயமாக, அஃது இராவணனுக்கும் வாலிக்கும் தாடகை சூர்ப்பனகை போன்றோருக்கும் அனுதாபமான பார்வையாக மட்டுமே இருக்கமுடியும். (சுப்பிரமணிய ஸ்ரீதரனின் இராமாயண கலகம், இலங்கையின் பிரச்சனை-இந்தியாவின் மூக்கு நுழைப்பு என்பதன் பார்வையிலே மீட்டு எழுதப்பட்ட இராமாயணத்தின் துண்டு எனலாம்)

அடுத்ததாக, சிலப்பதிகாரம் தமிழர்/திராவிடர் சார்பான மக்கள்காதையாகக் காட்டமுயல்வது குறித்து, சிதம்பர ரகுநாதனின் "இளங்கோவடிகள் யார்? (சிலப்பதிகாரம் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி)" என்ற நூலையும் அதன் மீதான எம். ஏ. நுஃமானின் "ரகுநாதனின் சிலப்பதிகார ஆராய்ச்சி" என்ற விமர்சனக்கட்டுரையையும் ("மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும்" என்ற நூலில்) வாசிப்பது சில பார்வைகளைத் தருமென்று நினைக்கிறேன். சிதம்பர ரகுநாதன் உண்மையில் இளங்கோவடிகள் வணிக வகுப்பினைச் சேர்ந்தவரென்றும் அதனால், அவ்வகுப்பின் வர்க்க நலன் குறித்து அரசகுடிக்கெதிரான காவியமாகச் சிலப்பதிகாரத்தினை முன் வைத்திருக்கின்றார் என்று முன்வைக்க, நுஃமான் அக்கருதுகோளை அது வலிந்து பெறப்பட்ட முடிவு என்று மறுக்கின்றார். (ஆனால், சிலப்பதிகாரமும் கண்ணகி மதுரையை எரிக்கின்றபோது, பசுவையும் பார்ப்பனரையும்விட்டுவிட்டே கொளுத்தும்படி சொல்கிறாள் என்பதையும் தொழிலாளி பொற்கொல்லனையும் கெட்டவன் என்ற வகைக்குள்ளே போட்டதையும் இந்த திராவிட மக்கள்கதையிலே எப்படியாகப் பொருத்துவது என்று எனது துணைச்சந்தேகமுங்கூட உண்டு).

'05 மே 08., ஞாயி 04:04 கிநிநே.


16 comments:

ஜெயச்சந்திரன் said...

உங்கள் பதிவில் பெசும் அளவுக்கு ஆளமான இலக்கி வாசிப்பு என்னிடம் இல்லை. ஆனால் இராமணத்தின் மறு வாசிப்பாக ஒரு தொடர் நாடகம் இராவணனை உயர்த்தியும் இராமனை தாழ்த்தியும் புலிகளின் குரலில் 90 95 க்கிடையில் கேட்ட ஞாபகம்

Sri Rangan said...

நியாயமான கேள்விகளையும்,ஆழ்ந்த,பரந்த வாசிப்பனுபவத்தையும் முன்வைத்துள்ளீர்கள்!நமது காலத்தின் தேவைகளோடு பொருந்திவரத்தக்க விமர்சனமாகப் பார்க்கப்படவேண்டிய பற்பல முறைமைகளைப் புரிந்துகொள்ள உங்கள் குறிப்பு வழிவகுக்கும்.

Thangamani said...
This comment has been removed by a blog administrator.
Thangamani said...

நல்லபதிவு பெயரிலி. நன்றிகள்!

தேடுகிற ஒவ்வொருவரும் கண்டுகொள்ளலாம் அவர்கள் தேடுவதை இராமயணத்துள். மசூதி இடிக்கப்போய் இறந்தவர்களையும், கொன்றவர்களையும் எங்கிருந்து தேடியெடுப்பது? அயோத்தி இராமனின் ரதம் இலக்கியத்தின் பக்கங்களில் இருந்து கவியலங்காரத்தையெல்லாம் எல்லாம் உரித்துப்போட்டு இரத்தத் தடத்தோடு துணைக்கண்டம் முழுக்க ஓடுகிற விந்தையை எந்த இராமயணத்தில் தேடுவது? நல்லவேளை நீங்கள் எதையுமே தேடினால் கண்டுபிடிக்கமுடியாது என்று சொல்லவில்லை. நேதி நேதி என்று ஒவ்வொன்றாய்த் தட்டிப்பார்த்து தூக்கிப்போடுகிற வழியும் இருக்கிறது. அதையும் இந்த இராமனைத் தாங்கிறவர்கள்தான் அழித்துவிட்டதாகச் சொல்வேன். அது மாதிரிகூட இராமனைத் தட்டிப்ப்பார்த்து அப்புறம் போடச்சொல்லவில்லை. கடவுளாக மாற்றும் உருப்பெருக்கக் கண்ணாடிகளை உடைக்க, தடாகையின் உரிமைக்குரல்களை, சூர்ப்பனகையின் வலியோடு கூடிய அவமானக் கூச்சலை கேட்கும் பொருட்டு பஜனையை நிறுத்த வழியிருக்கிறதா என்று தான் தேடுகிறோம். அதுகூட இராமயண தாடகை, சூர்ப்பனகையை மனதில் கொண்டல்ல, வீரப்ப வதம் செய்யப்போய் கொல்லப்பட்ட தாடகைகளின் மேல் அக்கறை கொண்டே. குஜராத்தின் சூர்ப்பனைகளின் மேல் அன்பு கொண்டே.

எனக்கும் கவிதை முக்கியம்தான். எல்லோரும் வியக்கிற கம்பன் முட்டாள் என்று, சதிகாரன் என்று சொல்லமாட்டேன். ஆனால் இரதங்கள் ராமாயணப் பக்கங்களில் மட்டும் ஓடிக்கொண்ண்டிருக்க வேண்டும். தாடகைகள் அவர்களது மலைக் காடுகளில் சுயமரியாதையோடு, அத்துமீறலுக்கு ஆளாகாமல் இருக்கவேண்டும். ஏனெனில் சில சமயங்களில் இவர்களது ஓலங்களில் கவிதை படிப்பது சிரமமாய் இருக்கிறது.

(எனக்குத் தனிப்பட்ட அளவில் இந்த 'ராம்' இல்லாமலேயே பொண்டாட்டியை தீக்குளிக்கச்சொன்ன காரணத்துக்காகவே அந்த ராமன் பாத்திரத்தின் மேல் எந்த மரியாதையும் இல்லை. வெறும் இலக்கியமாய் இருக்கையில் அவன் சரயுவில் தற்கொலை செய்தது செத்துப்போனதைக் கூட எழுதியவனின் நேர்மையைக் காட்டுவதாய்த் தான் புரிந்துகொண்டேன். அதனாலயே என்னளவில் அது இலக்கிய மதிப்பைப் பெறுகிறது )

மு. சுந்தரமூர்த்தி said...

//மிக எளிதான "தேடுங்கள் கிடைக்கப்பெறும்" உண்மை அது. //
"தட்டுங்கள் திறக்கப்படும்-பைபிள்" என்றெழுதி அதற்குக் கீழே "திறக்காத கதவுகள் உடைக்கப்படும்" என்று சர்ச்சு சுற்றுச் சுவரில் தி.க.காரர்கள் எழுதி வைத்திருந்தார்கள். கம்பராமாயணத்துக்கு நடக்கும் (கட்டு)உடைப்புகளும் அப்படித்தானே(¡) :-)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

பெயரிலி - ஒரு பொறுமையோடும் நடுநிலையோடும் எழுதி இருக்கிறீர்கள். இப்படி எழுத முடிந்திருந்தால், என்னுடைய கருத்தும் இப்படியாகத் தான் இருந்திருக்கும். இந்தப் பதிவும் இந்தத் தொடரில் எழுதி வரும் வலைப்பதிவுகள் பின்னூட்டங்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் தரமுள்ளதாகவும் எனக்குப் படுகிறது. மாறு கருத்துக்கள் இருந்தாலும் எல்லாவற்றிலும் உண்மை இருப்பதாகப் படுகிறது. நீங்கள் சொன்னபடி குழப்படிக்கவும் செய்கின்றன. நீங்கள் கூடக் கொஞ்சம் அப்படித்தான். 'உண்மை' என்பது வேறு வேறாய் இருக்க முடியாது என்ற கருத்தைப் பார்த்திருக்கிறேன். பார்வையில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் கருத்தியல் அது. ஆனால் அந்தப் பார்வையோடு சம்பந்தப்படுத்தி 'உண்மை' என்பது வேறு வேறானது (தனிநபர் பார்வையில்) என்று நீங்கள் கூறியிருப்பதும் மாற்றுவழியில் சிந்திக்க வைக்கிறது. இந்த இரண்டாம் வழியில் சிந்திப்பது தான் ஒரு பலக்கிய (complex) குமுகத்திற்கு ஏற்றதோ?

arulselvan said...

நன்று ரமணி. தமிழ்ப் பெருங்காவியங்கள் அனைத்தும் நிறுவனமயப்பட்ட சமய விழுமியங்களையே தம் பெருங்கதையாடலாக கொண்டுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், மூன்றுமே ஏற்கனவே வலிமையாக நிறுவப்பட்ட மதச் சட்டகங்கங்களையே நிலை நிறுத்திப் பார்க்கின்றன. முதலிரண்டு அவைதீக மதங்களையும், மூன்றாவது வைதீக மதத்தையும் முன்வைக்கின்றன. அவற்றின் வரலாற்று, சமூக விழுமியங்களும் அவ்வாறே வேறுபட்டுள்ளன. சிலம்பு பேசும் அளவு சாமானிய மக்கள் வாழ்வையோ, மணிமேகலை பேசும் அளவு பிற மார்க்க தரிசனங்கள், எல்லை மக்களின் விழுமியங்கள் போன்றவற்றையோ கம்பன் பாடவில்லை. நன்கு முழுவளர்ச்சியடைந்த வேளாண் நிலக்குடியின் உபரி விரிந்து காலனியாக்கத்தை வகைப்படுத்திய ஒரு பேரரசின் குடிமகனாகவே (with its associated decadence) கம்பன் இம்மாபெரும் காவியத்தைப் படைக்கிறான். மக்களின் வாழ்வறிய சங்கப் பாடல்களை விட்டால் அடுத்து தமிழில் புதுக்கவிதைதான். :-)

-அருள்

வசந்தன்(Vasanthan) said...

குமிழி!
அது கவிஞர் பொன் கணேசமூர்த்தி எழுதி நெறியாழ்கை செய்த "இலங்கேஸ்வரன்" எனும் நாடகம். அந்நேரத்தில் அது மிகப்பிரபல்யமாக இருந்தது. இராமனைத் தாழ்த்தி என்பதைவிட இராவணனினதும் இலங்கையினதும் கோணத்தில் அக்கதை நகர்த்தப்பட்டது அவ்வளவே. இராவணனுக்கு பத்துத்தலை என்பதை, புவியில் எட்டுத்திக்குகளையும் மேலே தேவர்களையும், கீழே நரகர்களையும் என பத்துத் திக்கிலும் தன் வலிமையைக் காட்டி மற்றவரை பயப்பட வைத்தவன் என்பதாலேயே அவனுக்குப் பத்துத்தலையுண்டு என்று கதையுருவானது என்று அதில் அவர் சொல்லியிருந்தார்.

Anonymous said...

கம்பராமாயணம் அப்படின்னா என்னா?

-/பெயரிலி. said...

குமிழி & வசந்தன் தகவலுக்கு நன்றி.

ஸ்ரீரங்கன், நன்றி.

தங்கமணி, உங்கள் கருத்துகளுடன் எனக்கு முற்றிலும் உடன்பாடே. வீடு எரியும்போது, தீயின் அழகை விதந்தோற்றிக்கொண்டிருக்கமுடியாது. கம்பராமாயணம் போன்றவற்றினை எப்படியாகத் தம் நலன்களுக்காகக் கெடுதலான முறைகளிலே பயன்படுத்தவும்கூடும் என்பதிலே குறித்தேன்.

சுந்தரமூர்த்தி, கட்டுடைத்தல் என்பது எந்தப்படைப்புக்கும் அத்தியாவசியமானதும் தவிர்க்கமுடியாததுமாகும் - இது கம்பராமாயணத்துக்கும் தேவை; காதல் திரைப்படத்துக்கும் தேவை.

செல்வராஜ், உண்மை என்பதும் ஒருவகை நம்பிக்கைதான் என்பது என் கருத்து; ஒருவரின் நம்பிக்கை இன்னொருவருக்கு அநாவசியத்துக்கு ஊறு விளைவிக்காதவரையிலே பிரச்சனையில்லை என்றே தோன்றுகிறது. பரிணாமத்தினைப் பயன்படுத்தும் கடவுள் நம்பிக்கையுங் கொண்ட அறிவியலாளர்கள் குறித்து இதைத்தான் அண்மையிலே ஜீனோம் திட்டத்திலே ஈடுபட்டிருக்கின்றவர் NOW நிகழ்ச்சியிலே தொலைக்காட்சியிலே விளக்க முயன்றார் (வசந்தனும் சொல்லியிருக்கின்றார்).

அருள், அவற்றுக்கிடையிலே யாழ்ப்பாணத்திலே கனகிபுராணம் என்றொன்றிருக்கிறது; தமிழ்நாட்டிலே, வேங்கடாசலபதி தொகுத்த குஜிலிவெண்பாக்கள் இருந்திருக்கிறன :-)

பிரசன்னா பிரசன்னம்! ;-)
/இத்தனை ஆண்டுகாலம் கழித்தும், இராமன் சீதையைத் தீக்குளிக்கச் செய்தது சரியா என்று பேசுகிறோம் என்றால் அது ஒரு மிகச்சிறந்த இலக்கிய வடிவமாகவே இருக்கவேண்டும்./
அட ராமா கம்பராமாயணம், சீதையைத் தீக்குளிக்கச் செய்ததற்காகவா மிகச்சிறந்த இலக்கியவடிவமாகக் கருதப்பட வேண்டும்? ;-)

Jayaprakash Sampath said...

//அட ராமா கம்பராமாயணம், சீதையைத் தீக்குளிக்கச் செய்ததற்காகவா மிகச்சிறந்த இலக்கியவடிவமாகக் கருதப்பட வேண்டும்? ;-)//

இராமன் சீதையை தீக்குளிக்கச் செய்ததற்காக அல்ல, செய்தது சரியா என்ற கேள்வி இன்றளவும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்காக... ராமன் கதை, மிகச் சிறந்த... blah blah... என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

-/பெயரிலி. said...

/
//அட ராமா கம்பராமாயணம், சீதையைத் தீக்குளிக்கச் செய்ததற்காகவா மிகச்சிறந்த இலக்கியவடிவமாகக் கருதப்பட வேண்டும்? ;-)//

இராமன் சீதையை தீக்குளிக்கச் செய்ததற்காக அல்ல, செய்தது சரியா என்ற கேள்வி இன்றளவும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்காக... /


சிரிப்புக்குறியைக் கவனிக்கவில்லையோ?
:-)

Jayaprakash Sampath said...

அடச்சே.....தப்பு உட்டேன்... இந்த வாட்டி உட்டுடுங்க... அடுத்தவாட்டி....:-)

-/பெயரிலி. said...

அடுத்தவாட்டி....:-)

.......... வாட்டி எடுத்திடமாட்டேனா?
;-)

சுந்தரவடிவேல் said...

நல்ல பதிவும், பின்னூட்டங்களும். நீங்கள் சொல்லியிருக்கும் இராமாயண/மாற்றுப் பார்வைகளைப் படிக்க முடிந்தால் நன்றாயிருக்கும்!
தேடுகிறது கிடைக்கும் என்பது சரியே. ஆனால் இதில் இதைத் தேடு (அல்லது இதில் நாங்களெல்லோரும் தேடியபோது இதுதான் இருந்தது) என்ற கருத்தைப் பரப்பும்போதுதான் பிரச்சினையே உருவெடுக்கிறது. அது ஒரு பெரும்பான்மைக் கருத்தையே முதன்மை/உண்மைக் கருத்தாக முன்னிறுத்த விழைகிறதான ஒரு தோற்றத்தை ஏற்படுகிறது. அப்போதுதான் அந்தக் காதை முறுக்க வேண்டியிருக்கிறது. அவரவர் படிப்புக்கேற்ற மாதிரி முறுக்குவதும், சுண்டுவதும், காதைக் கையோடு எடுப்பதும், அல்லது பூச்சுற்றிக் கும்பிடுவதும்:)

SnackDragon said...

ஆசூச் 2 வாசிப்பு. ;-)
//குத்துக்கொள்ளட்டும். இதிலே முரண் ஏதுமிருக்கமுடியாது. ஒருவரின் பார்வையே சரியென்பதாகவும் தோன்றவில்லை (நிகழ்வு என்பது ஒன்றாக இருக்கலாம்; ஆனால், உண்மை என்பது ஒன்றுக்கு மேற்பட்டது; சொல்லப்போனால், ஒருவருக்கான உண்மை என்பது, நிகழ்வினை அவர் கிரகித்து உள்வாங்கும் விதமும் பார்வையுமே).//
இதோடு ஒத்துபோகிறேன். ஆனால், பழஞ்சமூகத்தைக் கிளறும்போது, தோண்டுவதில் சிலது அகப்படாமல் இப்படித்தான் எங்காவது நின்றுவிட வேண்டியுள்ளது. அண்மைய கால நிகழவாக இருப்பின், எல்லாக் காரணிகளையும், அவ்வெல்லாகாரணிகளின் பங்கையும் அந்நிகழ்வின் மீது போட்டு வாசிக்கும் /கிடைக்கும் போது கொஞ்சம் தெளிவடையலாம் என்றும் நினைக்கிறேன்.


சுந்தரவடிவேலின் பதிவைப்பொறுத்தவரையில் , நான் புரிந்து கொண்ட வரையில் இதைத்தான்
'பார்வை' என்று சொல்லுவேன். குறிப்பாக 'இப்பழங்கதையாடல்கள்' இன்றைய சமூகத்தில் என்ன விளைவுகளை விட்டு சென்றுள்ளது என்று பார்க்கத் தேவை எழுப்போது இம்மாதிரியான 'பார்வைகள்' அவசியம் என்றே எனக்குப் படுகிறது. (நீங்களும் மறுக்கவில்லை)

கம்பராமாயணத்தை நானும் முழுதாக வாசித்ததில்லை. பள்ளிப்பாடப் பருவத்தில் கொஞ்சம் தமிழ்ச் சுவைக்காகவும், கம்பனின் மொழித்திறனையும் ஆசிரியர் புகழக்கேட்டு வாசித்துண்டு. இன்று அருணகிரியையும்,மாணிக்கவாசகரையும்(ஏன் இராமலிங்கர் என்ன குறைச்சலா? உமறு?) இங்கே சொல்லும்போது, கம்பன் எனக்கு கொஞ்சம் கம்மியாகவேத் தெரிகிறான். (என் பார்வைக்கோளறாகவும் தெரிகிறான்.)

// அதனை இலக்கியமாக மட்டும் பார்க்கின்றவர்களின் பார்வையும் அதனளவிலே சரியென்று படுகின்றது. ஆனால், இவ்விரண்டு பார்வைகளும் எதிரும் புதிருமென்று தமக்குள்ளே மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். //
இலக்கியம் என்ற அளவில் இல்லை என்றாலும் , நான் சொல்லவரும், 'விட்டுசென்ற விளைவுகள்' என்ற ஆராய்ச்சிக்கு இது தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது. இன்னும் சொல்வதென்றால், வைணவ 'கரிய மால்' இன்று எப்படி 'வெண்மால்' [வடக்கு இந்தியாவில் குறிப்பாக] ஆக உருப்பெற்றான் என்பது வைணவர்களுக்குள்ளேயே தெரிந்துகொள்ள்வேண்டியது.(இன்னும் 'கிழ மால் ' -லிருந்து 'இள மால்' ஆணதாக வாசித்தௌண்டு. :-)) ராமாவதாரக் கதைகளும், கிருஷ்ணாவதாரக்கதைகளுக்கும் உள்ள வேற்றுமை / ஒற்றுமை பற்றி சில செவியளவில் கேட்டுள்ளேன்.குறிப்பாக , கம்பராமாயணம் எப்படி 'ராம பக்த' மனத்தோடு ஒன்றுகிறது என்பதும், கதையாடல் என்பதைத் தாண்டியும் விழுமியங்களோடு (;-)) ஒற்றுப் பெறுகிறது என்பதும் சிந்திக்கப்டவேண்டியது.

// கதையைத் தெய்வீகப்படுத்தி, அதிலே சொல்லப்படும் நம்பிக்கைகளையோ கருத்தாங்கங்களையோ கேள்வி கேட்டலையும் அவற்றோடு முரண்படுதலையும் (மறுவாசிப்பும் மாற்றுப்பார்வைகளும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்) குற்றங்களாக தெய்வநிந்தை என்ற போக்கில் அழித்தலும் அமுக்குதலும்
//
அதே அதேதான் .

//வைஷ்ணவ கம்பநாட்டாழ்வானின் இராமனுக்கு எதிராக ஒரு படைப்பு இதுவரை வராதது ஆச்சரியத்தினைத்தான் தருகின்றது.//
இதற்குத்தான் கிளறவேண்டிய அவசியம் உள்ளது என்று நினைக்கிறேன். நாளைக்கே தொல்பொருள் ஆராய்ச்சியில் , ஏதேனும் அழிக்கப்பட்ட அமுக்கப்பட வரலாறுக்கு சான்று கிடைத்தாலும், அது அமுக்கப்படாமல் இருக்க இவ்வகைப் பார்வைகள் அவசியம் என்றே நான் நினைக்கிறேன்.