Mushroom Metropolis
நிழலும் மழையும் முலைப்பாலாய்க்
குடித்து வளரும் நிலம்சூழ்தேசத்தே
நாளுக்கு நாள் நசிந்து போகும்
காளான் வீடுகளில் என் குடியிருப்பு.
மழை தரை விட்டுவிட்டுத் தட்டும்
காற்றுத்தடம் பார்த்து நடக்கும்
குடைக்காளான் மூக்கு.
அற்றதில் பிறக்கும் தேகம்;
கூரையாய்க் கூம்பிச் சடைக்கும் கொண்டைத்தலை;
இற்றுச் சமாதி பட்ட மரம் சுற்றிச் சுற்றி வட்டத்துளிர்ப்பு,
செத்தவுடல் கொள்ளியிட்டு எரித்துவந்து,
மனைவி சட்டைத்துணி விலக்கிச் சரசமிட்டு ஒட்டித் தழுவு
சுடலைவாழ் வெட்டியின் ஞானக்கற்றைவீச்சு.
குடை பிடித்து வழுகி நனையும் விம்மி, மீன்பூச்சுவாசம்;
விரியும்; சுருங்கும்; வளையும்; வளரும்.
கம்பளிப்பூச்சிகளின் காதலோட்டங்கள்,
கால்களைச் சுற்றிச் சுற்றி ஊறிச் சுனைக்கும்.
இந்த இருப்பில் பிறக்கும் நம்பிக்கை.
மழை மறையப் பிடிக்கும் சோகை;
படியும் பசலை; ஒசியும் உடல்;
காயும்; கசங்கி உதிர்த்திறக்கும் இரப்பை.
சுவாசப்புற்றுமானுடன் வாழ்க்கை.
பட்டமரத்துள் ஊரும் நிழற்படிமம்,
கொட்டும் காளான் துகள் தேசம்.
ஒரு நாள் காளான் தேசம் விரிந்ததெம் உலகாய்.
பட்டமரங்கள் ஆகின வாழ்களங்கள்.
நிழலும் மழையும் தேடி நிமிர்வதாய் எம் வாழ்க்கை.
செத்தமரம் கண்ட தேசமெல்லாம்
செவ்விச் சிறக்கும் எம்பரம்பலின் சிறகு.
விருட்சப்பசுமை இளமை வற்றிப் பட்டாலும் சேதமில்லை,
தன் பிருஷ்டம் ஒரு போகம் ஒட்டி வாழும் உயிர்ப்புக்கேனும்,
உடல் உளுத்து வண்டு செத்த மாவற்றல் தூளாய்ப்
பெருகிப் போகாதிருக்க விட்டுவிடா யாசிப்போடு
காளான் தேசத்துக் குடைகள்,
விரியும்; சுருங்கும்; வளையும்; வளரும்; மடியும்;
மடிதலும் மறைதலும் வேறு வேறு,
இற்றலும் இடைக்கிடைத் தோன்றலும்போலே.
மீளக் கனியும்.
மழையும் கூட நிழல் நீளச் சொட்டும் நிலம்.
'99 ஓகஸ்ட், 30
No comments:
Post a Comment