Thursday, May 19, 2005

கணம் - 465

புண்ணியபூமி

காலங்காலமாய்
ஈரங்காணா
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்:
-இரு சிறு விரற்றுண்டு
-கடிகாரம் ஓடுமொரு கைப்பாதி
-பொசுங்குமயிர் நாற்றம்
-உதிரந்தோய்கிழிசற்சீலை
-புண்டபானை ஒழுக்கும் பழஞ்சோறு
-எரியுங்கூரை உத்திரம்
-நல்லதில்லாத நள்ளிரவு, சுடுகிற நடுப்பகல்
-பயந்த முகத்துடன் இடம் பெயர்ந்த மனிதர்
-புதியதொரு மொழி, சனம், குடிசை, குழாய்நீர்
-ஆயுதம் தாங்கி, கமிஸாக்கி, தொப்பி, சப்பாத்து
-இடமெல்லாம் வளைத்துச்சுற்றிய முள்ளுவேலி.
-இரட்டை இலை பிளந்தோர் இளம் வெள்ளரசு.

அத்தனைக்கும் ஆதியில்
வேறு வயல் வித்திட்டுக் கிள்ளி
நட்டதோர் முற்றிய நாற்றென
நடுவீதியில், புலர்பொழுதிற்
சட்டென முளைத்த புத்தன்
-திறந்த கண் தெரு விறைக்க
வெறுங்கல்லாய்த் தரை அறைந்து.
போதி அத்தனைத் தொடரும்,
போகா அத்தனை துயரும்.

பசும்புல்லை,
பாடுபுள்ளைத் தவிர,
தறை வெடிக்கும்
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்,
மூடிக் கண் திறக்க முன்னோ,
முன் காலை பிறக்க முன்னோ.

05 மே, 19 வியா. 14:06 கிநிநே.

25 comments:

SnackDragon said...

style and signature sheet super!!!!!!!!

மு. சுந்தரமூர்த்தி said...

நல்ல கவிதை. தரையா தறையா?

ஓவிய எழுத்து முகப்பை இரண்டுவிதமாக படிக்க முடிகிறது: அலைஞனின் அலைகள்; கலைஞனின் கலைகள்.

SnackDragon said...

கவிதை நன்றாக் உள்ளது. இப்போது இப்படி எழுதும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது? தொலைபேசிச் செய்தியா? ஏதோ ஒரு இணையப் படக் கணமா?

இந்த கோவிந்தா மஞ்சளை கொஞ்சம் நமச்சிவாய நீற்று சாம்பலாய் மாற்றலாம் .

//தறை வெடிக்கும்//
நானும் தரை என்றே நினைக்கிறேன்

-/பெயரிலி. said...

கார்த்திக், நன்றி.

சுந்தரமூர்த்தி, தறை/தரை இரண்டும் பொருந்தினாலுங்கூட, இந்த இடத்திலே நான் குறிப்பிட விரும்பியது தறைதான். ஈரமில்லாமல் வெடித்துப் பிளந்திருக்கும் நிலத்தினைக் குறிக்க, 'தறை' என்ற இலங்கையிலே பயன்படும்; அந்த அர்த்தத்திலேதான் இங்கே பயன்படுத்தியிருக்கின்றேன்.

/அலைஞனின் அலைகள்; கலைஞனின் கலைகள்/
நீங்கள் சொன்னபின்னாலேதான், பார்க்கிறேன். அப்படியாகத்தான் தோன்றுகிறது. தெளிவில்லாத கையெழுத்தும் ஒரு விதத்திலே நல்லதுதான் போல இருக்கின்றது ;-)

இளங்கோ-டிசே said...

பெயரிலி, கவிதை பிடித்திருந்தது.
இந்தக் கவிதையை வாசித்தபோது, வேறொரு அர்த்தத்தில்/வடிவத்தில் எழுதப்பட்ட மகாகவியின், 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' என்ற கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
//தறை வெடிக்கும்// தரையா அல்லது தறையா? தறை என்றால் என்ன அர்த்தம் :-(?
...
அதுசரி, கவிதைக்கு கீழே யாரோ கிறுக்கிவிளையாடியது மாதிரித் தெரிகின்றது? நித்திலனா :-)? இப்படி பெயரிலி பெய்ரிலி என்று எழுதியெழுதி, பெயரில்லாத Piano Man ஆகாவிட்டால் சரி.

-/பெயரிலி. said...

கார்த்திக், அண்மைய திருகோணமலை நிகழ்வுதான் காரணம்.

SnackDragon said...

//'தறை' என்ற இலங்கையிலே பயன்படும்;//
அப்படியா தெரியாது மன்னிக்கவும். பெயரிலி 'ஸ்பெல்லிங் மிஸ்டேக்' எல்லாம் பண்ணமாட்டேரே என்று யோச்த்துக்கொண்டேதான் எழுதினேன்.

arulselvan said...

நிசம்தான் ரமணி. முற்றிய அயல் நாற்றுகள் அனைத்துப் பழந்தாரைகளிலும்
முளைக்கும் காலம். பரவியிருந்த பசும்புற்கள் மறையும் நேரம்.

SnackDragon said...

பெயரிலி சுட்டிக்கு நன்றி; டீ ஜே பியானோ மேன் தகவலுக்கும்.
டீ சே உமக்குமா தெரியவில்லை தறை ? :P

மு. சுந்தரமூர்த்தி said...

இதுக்குத் தான் சிறுபத்திரிகை பின்னணி இருக்கணும் என்பது. பல கோணல் எழுத்து. பல கோணப் பார்வை :-). (பெங்களூரில் துவங்கிய காவ்யா பதிப்பகத்தின் இலச்சினையை தமிழ், கன்னடம், ஹிந்தி மூன்று மொழிகளிலும் 'கா' என்று படிக்க முடியும்).

தறை என்ற சொல்லையும், அதற்கான பொருளையும் இப்போது தான் கேள்விபடுகிறேன்.

சுந்தரவடிவேல் said...

படத்தில் புத்தன் எதன் மேலோ உட்கார்ந்திருக்கிறான்!

SnackDragon said...

//எதன் மேலோ உட்கார்ந்திருக்கிறான்!//
என்ன கட்சி கொடி என்று சந்தேகப்படுகிறீர்களா? (சொல்லமுடியாது புத்தனைத் தூக்கி புட்டியில் போட்டாலும் போடுவர் )

///அலைஞனின் அலைகள்; கலைஞனின் கலைகள்///
அப்படியே இன்னொன்னு; 'அ' வுக்கு சின்ன கீழே கோடு போட்டீர்க்ளெனில்
'வலைஞனின் வலைகள்' -ஆகவும் வளைக்கலாம்.

இளங்கோ-டிசே said...

கார்த்திக், தறை என்ற பேச்சுவழக்குச் சொல் தெரியும். ஆனால் பெயரிலி, தறை என்பதை வேறு ஏதாவது அர்த்தத்தில் பயன்படுத்தினாரோ என்ற ஐமிச்சத்தில் கேட்டிருந்தேன் :-(.

Muthu said...

பெயரிலி,
நம்புவோம்.அங்கு நற்பசும்புல்லும், கீதம்பாடு்புள்ளும் மட்டுமே மனிதர்கள் பார்க்கும் நாள் தூரத்தில் இல்லை.

Muthu said...

///இதுக்குத் தான் சிறுபத்திரிகை பின்னணி இருக்கணும் என்பது. பல கோணல் எழுத்து. பல கோணப் பார்வை :-).///
சுந்தரமூர்த்தி,
கோணல் பார்வை இல்லையே :-)))), சும்மா சும்மா.. :-)

-/பெயரிலி. said...

/பல கோணl/ப் பார்வை :-)./
;-)

சுந்தரவடிவேல், புத்தன் அமர்ந்திருப்பதும் பீடம். கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல் என்பதுபோல, புத்தரும் புத்தர் சார்ந்த இடமும் புதுச்சிங்களக்குடியேற்றம் ஆவது இலங்கையிலே வழமை. அதானாலேயே, புத்தரோ அரசமரமோ எந்தச்சிறுபான்மையோர் பிரதேசத்திலே முளைத்தாலும், சிறுபான்மைச்சமூகத்தினர் இலங்கையிலே கவலை கொள்வது; முனிவரின் கோவணத்தினை எலியிடமிருந்து காக்க, ஒரு பூனை; அந்தப்பூனைக்குப் பால் கொடுக்க, ஒரு பசு. அந்தப்பசுவைப் பராமரிக்க, ஒரு முனிபத்தினி; அந்த முனிபத்தினிக்குப் பொழுதுபோக, ஒரு குழந்தை; இப்படியாக ஒரு கோவணத்திலிருந்து, முனிவர் குடும்பம் உருவாக்குகிற கதைதான், இலங்கையிலே தமிழ்பேசும் சிறுபான்மையினரின் பிரதேசத்திலே, சிங்களக்குடியேற்றம்; எல்லாம், ஒரு சின்ன அரச மரத்தோடும் அதன்கீழே ஒரு புத்தர்சிலையோடும் தொடங்கும். சில நேரங்களிலே, இது மிகவும் குறியீடாக, அரசமரத்தின்கீழேயிருக்கும் பிள்ளையாரைத் தள்ளிவிட்டுப் புத்தர் அமர்ந்துகொள்வதோடும் ஆரம்பிக்கும். திருகோணமலை-கந்தளாய் வீதியிலுள்ள தம்பலகாமம் சந்தியிலேயிருக்கும் புத்தர் நுழைந்தது அப்படித்தான்.

குமரன்கடவை கோமரங்கடவல ஆகியிருக்கிறது; மணலாறு, வெலி ஓயா ஆகியிருக்கிறது. இதுதான் நியதி:(

சுந்தரவடிவேல் said...

நன்றி பெயரிலி. மேலாதிக்கக் கலாச்சாரங்களை நிறுவுகின்ற முறைகளில் சமயங்களின் மூலம் நிறுவப்படுகின்ற, மக்களின் பயங்களின் மீது நிறுவப் படுகின்ற முறையே "சிறந்த"தெனக் கருதப் படுகிறது, அங்கும்! இப்படித்தான் எங்கள் தெருவில் புதிதாக ஒரு பிள்ளையார் திடீரென்று சில மாதங்களுக்கு முன் வந்து உட்கார்ந்து கொண்டார்.

மு. சுந்தரமூர்த்தி said...

//ஒரு புத்தர்சிலையோடும் தொடங்கும்//
தலிபான்களிடமும், சிங்களப் பேரினவாதிகளிடமும் புத்தர்சிலையும், மக்களும் படுகின்ற பாடு. :-(

-/பெயரிலி. said...

வாதாபிகாலக்கணபதியை இப்போது, மும்பாய்_கணபதி (வாணி கணபதி அல்ல :-)) பெயர்ப்பதைத்தான் இப்போது, அடிக்கடி செய்திகளிலே கேள்விப்படுகிறேனே! (அண்மையிலே சுந்தரவடிவேலின் பதிவிலே கண்ட, கறுப்பனுக்கும் காலம்/ன் எவ்வளவோ கிட்ட இருக்கிறானோ தெரியாது. மாரியம்மன், கண்ணகியம்மன், முருகன், மால் எல்லாமே இப்படியாகத் தொலைந்தோ உருமாறியோ உருகிச்சேர்ந்தோ போயிருக்கின்றார்கள். பெரும்வேடிக்கை என்னவென்றால், முருகன் ஸ்கந்தாவாகி, மீண்டும் கந்தனானதுதான் :-( )

தலிபான் - ஆப்கானிஸ்தான் புத்தர் குறித்த வேதனையும் வேடிக்கையுமென்னவென்றால், தலிபான் பாமிர்_பெரும்புத்தரை இடித்தபோது, இலங்கை அரசு ஐநாவின் கலாச்சாரப்பிரிவூடாக, அழுத்தம் கொடுத்து, மீளக் கட்டத் தான் பொறுப்பெடுப்பதாக நின்றது.

போன கிழமை, தலிபான் ஆட்சியிலே ஆப்கானித்தியக்கலைப்பொருட்கள் பற்றிய நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியிலே பார்த்தீர்களா?

மு. சுந்தரமூர்த்தி said...

ரமணீ,
அடிக்கடி தொலைகாட்சி நிகழ்ச்சி ஏதாவது குறிப்பிட்டு பார்த்தீர்களா என்று கேட்கிறீர்கள். நீங்கள் கொடுத்து வைத்தவர் போல் தெரிகிறது. என் வீட்டில் ஒரு பெட்டிக்கு நாலுபேர் போட்டி. கடைசியில் நான். இப்போதெல்லாம் PBSல் எனக்கு கொடுப்பினை In between the Lions, Arthur, Comfy Couch மட்டுமே. என்முறை வரும்போது இரவு 10, 11 ஆகிவிடுவதால் கொஞ்சம் Letterman உடன் சரி. எனது ஜன்னல் உள்ளூர் செய்தித்தாளும், Newsweekம், வேலை செல்லும்போது, வீடு திரும்பும்போது NPR/BBC உடன் சரி. மற்றபடி எப்போதாவது நூலகம், புத்தகக்கடை என்று போனால் மேலோட்டமாக New Yorker, Granta, Utne Reader, Nation, Progressive இவற்றை மேலோட்டமாக மேய்வதோடு சரி. அறிவுத் தேடல் இதோடு முடிந்தது. புதையல் கிடைத்தது போல இப்போது தான் தமிழ்மணம் என்ற அறிவுச் சுரங்கம் கிடைத்திருக்கிறதே! இனி என்ன வேண்டும்? :-)

முத்து,
என்ன இது! செடிகளுக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருந்தவர் சிப்பிக்குள் போய் உட்கார்ந்துக் கொண்டீரே!! :-)

-/பெயரிலி. said...

/நீங்கள் கொடுத்து வைத்தவர் போல் தெரிகிறது./
அப்படியாகச் சொல்வதற்கில்லை; பிள்ளைப்பார்க்கும்வேலை(ளை)யிலே இப்படியாகப் புல்லுக்கிறைந்த கொஞ்சம்; அவ்வளவுதான் ;-)

நான் சொன்ன நிகழ்ச்சி; National Geographic இன்
Lost Treasures of Afghanistan
http://news.nationalgeographic.com/news/2004/11/1117_041117_afghan_treasure.html

Muthu said...

//முத்து,
என்ன இது! செடிகளுக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருந்தவர் சிப்பிக்குள் போய் உட்கார்ந்துக் கொண்டீரே!! :-)//

:-))

Anonymous said...

Buddha statue installed in Omanthai Pillayar temple grounds

சோமி said...

இன்னாது..? இதுதான் பின்நவீனக் கவிதையா?

ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டிச்சாம்.

வாசிக்கும் போது என்னைபோன்ற அரைகுறை வசிப்பாளனுக்கு ஒண்டும் விளங்கேல்லை பிறகு டிசே போன்றவர்களின் பின்னூட்டங்களைப் பாத்தபிறகு இதுதான் விசயம் எண்டு விளங்கிச்சு.

உண்மையில் எனக்கு நிறைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.

யாழ்பாணதில 144 சதுர கிலோமீற்றர் பரபில இருந்த விவசாயிகளும் மீனவர்களுமாக சுமார் 80,000 சற்று அதிகமானவர்களை வெளியேற்றி விட்டு அதி உயர் பாதுகாப்பு வலையம் எண்ட போர்வையில் 40000 இராணுவம் குடியிருக்குது,விவசாயம் செய்யுது.....விகாரை கட்டுது....ம்

-/பெயரிலி. said...

;-)
நன்றி சோமி

பிகு: அது என்னாது இன்னாது? ஊரில எவடம்? :-)