Sunday, May 15, 2005

கரைவு - 4

உறுத்தல் ஒன்று

இந்தக்குறிப்பினை, மீள வாசித்துத் திருத்திக்கொண்டு போடலாமென்று எண்ணி, இரண்டு நாட்கள்; சனி-ஞாயிறுகளே மிகவும் வேலை நிறைந்த நாட்களாகிப் போனதிலே, திருத்துவது சாத்தியமாகத் தெரியவில்லை. பிந்திப்போடினும், வழக்கம்போல, படம்போடவும் மற்றவர் பதிவுகளிலே பின்னூட்டத்துக்கும் மட்டுமே சிற்றிடைப்பொழுதுகளே கிடைக்குமென்பதாலே, அப்படியே இங்கே.

'05 மே, 15 ஞாயி. 15:15 கிநிநே.
=========================


[படம் நன்றி: சாந்தகுணம்]

மே 2005 காலச்சுவடு; காலச்சுவட்டின் ஆசிரியர் கண்ணன், தன் வழக்கமான 'மௌனத்தின் சிறகடிப்பு' பத்தியின்கீழ் "குமுதம் தீராநதியின் இதழியல் திருட்டு"என்ற குறிப்பினை எழுதியிருக்கின்றார். கட்டுரையின் அடிக்கருத்தைப் பத்தித்தலைப்பே சொல்லிவிடுகின்றது. கொஞ்சம் விரித்துச் சொன்னால், ஐங்கரநேசன் என்பவர் இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் என்ற பத்திரிகைக்காக இலண்டன் பத்மநாபஐயரினைச் செவ்வி கண்டிருக்கின்றார். 2003 ஓகஸ்ற்-செப்ரம்பரிலே இச்செவ்வி வெளிவந்தது. இதனை குமுதம்-தீராநதி அண்மையிலே (மார்ச் 2005) எடுத்துப்போட்டிருக்கின்றது. அது எப்படியாக, ஐங்கரநேசன் & தினக்குரல் இலிருந்து தளவாய் சுந்தரம் & தீராநதிக்கு வந்தடைந்தது என்பது பற்றியும் அதிலே சம்பந்தப்பட்டவர்கள் பற்றியதுமான கண்ணனின் 2005 - மே காலச்சுவடு பத்தி. ஏற்கனவே பத்திரிகைசார்ந்தும் தனிப்பட்ட ஆட்கள் சார்ந்ததுமாக இருந்துவரும் நிலைகளையும் கண்ணனின் விருப்புவெறுப்புகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. அவற்றினைப் பற்றிக் கருத்தினைச் சொல்ல, எனக்கு விபரம் போதாது; ஈடுபாடில்லை.

வேண்டுமானால், எனக்கு உறுத்தியதைத் தவிர்த்து ஒரு விடயத்தினை மட்டும் இது குறித்துச் சொல்லலாம்; ஆக, குமுதம் குடும்பத்திலிருந்து வரும் சஞ்சிகைகளின் விற்பனை குறித்த வேட்கையிலே சட்டமீறலாகவும் நெறிமீறலாகவும் நிகழ்கின்றவற்றின் தடயங்கள் கவனிக்காமல் விடப்பட்டும் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் போவது வழமை. பொதுவிலே, குமுதத்தின் இவ்வகைச்செயற்பாடு, பெரும்பாலான பெருவிற்பனை, இடைநிலைப்பத்திரிகைகளிலே அளவிலே பெரிதாகவோ சிறிதாகவோ நிகழ்கின்றனவையே. அதனாலேயே, இப்படியான எல்லைமீறல்கள்தான் நடைமுறை என்ற அளவிலே எந்த இவ்வகையான பதிப்பூடகங்களினாலும் பேசப்படுவதில்லை. ஆனால், இப்போது, பெருவிற்பனைப்பத்திரிகைகளினை எதிர்த்து ஓரளவுக்குச் செயற்படவும் அவற்றின் வாசகர்களிலே ஒரு சிறுபங்கினையேனும் தன்பக்கம் இழுத்துக்கொள்ளவுங்கூடிய பொருட்பலம், விசுவாசகர்களை இடைநிலைப்பத்திரிகைகள் கொண்டிருக்கின்றன. இந்த வகையிலேயே காலச்சுவட்டின் குமுதம் மீதான தீராக்கருத்துமோதல் படுகின்றது.

எதேச்சையான சமகாலப்பதிவாக, உயிர்மை மே-2005 இலே குமுதத்தின் தான்தோன்றித்தனமான போக்கினைச் சுகுமாரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஓ.வி. விஜயனின் "காஸாக்கின் இதிகாசம்" கட்டுரையைத் தான் குமுதத்துக்காக மொழிபெயர்க்கப்போய், இடையிலே அனுமதி முதலிலே கொடுத்த ஓ. வி. விஜயன் வேண்டாமென்றபின், தான் குமுதத்திடம் அதுபற்றிக்கூறி நிறுத்தும்படி சொன்னதாகவும், ஆனால், குமுதம் தொடர்ந்து அடுத்த பகுதியினை வெளியிட்டதாகவும், பின்னர், ஓ.வி.விஜயன் தன்மீது சட்டரீதியாக வழக்குத் தொடர, குமுதம், அதற்கு அடுத்த வெளியீட்டிலே, பழியினைத் தன்மீது போட்டுவிட்டதாகவும் தன் "குற்றமும் விடுதலையும்" கட்டுரையிலே சுட்டியிருக்கின்றார். குமுதத்தின் யாழ்மணம் முன்னர் இலங்கையிலிருந்து வெளிவந்த மூன்றாவது மனிதன் இதழ்களிலிருந்தும் நேர்காணல்களை அள்ளியெடுத்துப்போட்டிருக்கின்றது. அதுபோன்றும் புலம்பெயர்ந்தார்தமிழ்ச்சஞ்சிகைகளிருந்தும் எடுத்துப்போட்டுமே, யாழ்மணம் நடந்திருக்கின்றதாக, அவற்றினைத் தொடந்து வாசிக்கின்ற பலர் உணர்ந்திருப்பார்கள். ஆனால், யாழ்மணம் என்ற இணையத்தூண்டிலினைக் குமுதம் எதிர்பார்த்த மீன்கள் கௌவாததால், பின்னொரு முறை அஃது அச்சுப்பதிப்பாக வரும் நோக்கிலே போடப்பட்டிருப்பின், அந்தத்திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் (ஆனால், இதேநோக்கினை ஓரளவுக்குக் கொண்டிருந்த் கோடம்பாக்கச்சமாந்திரங்களான தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால், நளதமயந்தி வெற்றி பெற்றது வேதனைக்குரிய விடயம்); யாழ்மணம் இணையத்திலேகூட, யாழ் மணப்பதாகத் தெரியவில்லை.

அதேநேரத்திலே, இங்கே இன்னொன்றையும் நாங்கள் பார்க்கவேண்டும் - குறிப்பாக, கண்ணன்; இடைநிலைப்பத்திரிகைகள் தொடக்கம், சிறுபத்திரிகைகள் வரைக்கும் நிறைய பிறமொழி ஆக்கங்களை மொழிபெயர்த்துப்போடுகின்றன - சில, மூலமொழி, இடைமொழியாளர்களுக்கு நன்றியுடன், சில அதுவுமேயில்லாமல். ஆனால், இப்படைப்புகளிலே எத்தனை இந்த மூலமொழி, இடைமொழிப்படைப்பாளி-மொழிபெயர்ப்பாளர்களின் அனுமதி பெற்று வருகின்றன என்பது எனக்குத் தெரியாது. தமிழிலே ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு சஞ்சிகை அள்ளிப்போடுவதோ, அல்லது சரியான அங்கீகாரத்தைக் கொடுக்காமலோ, அல்லது தனக்குத் தேவையானதை மட்டும் அள்ளிப்போடுவதோமட்டுமே தவறானது, மற்றைய மொழிப்படைப்புகளினை எப்போதும் நாங்கள் எடுத்துப் பெயர்த்து, விற்பனைக்காகப் போட உரித்துடையோம் என்ற ஒரு சிந்தைப்போக்கு இருப்பதாக எண்ணுகிறேன். பிடித்த மூலப்படைப்பாளி, பதிப்பாளர், பத்திரிகை தொடங்கி, அதைத் தமிழிலே கொண்டு வந்து அச்சடிக்கும்வரைக்குமுள்ள, ஆள் அணுகுதல், உரித்துப்பெறுதல், கொடுக்கவேண்டிய சன்மானம், இதற்கான காலத்தேவை, ஆள்வேலைச்செலவு என்பன (இடைநிலை &) சிறுபத்திரிகைகளுக்குக் கட்டுப்படியாகாதென்பதையும் நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அப்படியாக இருக்கும்போது, தீராநதி திரும்ப காலச்சுவட்டினைப் பார்த்து, தகுந்த ஆதாரங்களுடன் "கேட்டா எடுத்துப்போட்டாய்?" என்றொரு கேள்வியினை ஏதாவதொரு காலச்சுவட்டின் கவிதை, கதை, கட்டுரை குறித்துக் கேட்குமானால், மறுபேச்சுப் பேசமுடியாத நிலை காலச்சுவட்டுக்கு வரலாம்.

தீராநதியின் காலச்சுவடு குறித்த கண்ணனின் கவலை பின்வருவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது; "ஈழத்தமிழர்தேசியம் குறித்து காலச்சுவடு போன்ற சஞ்சிகைகளும் எதிர்நிலையான கருத்தை வெளியிடுகின்றது" என்று பத்மநாப ஐயர் சொன்ன கருத்தினைப் பெருப்பித்து, தீராநதி போட்டுவிட்டதைச் சுட்டி, காலச்சுவடோ தானோ அப்படியாக இல்லை என்பதை நிரூபிக்கும்விதமாக சில நிகழ்வுகளை ஆதாரங்களாக முன் வைத்திருந்தார் - அண்மையிலே ஈழநாதன் குறிப்பிட்ட, சிங்கப்பூரிலே கண்ணன் வந்தபோது நிகழ்ந்த நிகழ்வு உட்பட; ஆனால், இதுமட்டும், காலச்சுவட்டினை ஈழத்தேசியத்துக்கு எதிரான சஞ்சிகையாக தீராநதி இந்தச்செவ்வியினை வைத்துக்கொண்டு நிறுத்த முயலாதிருந்தால், கண்ணன் இந்தக்கட்டுரை தீராநதியிலே வந்திருப்பது குறித்துப் பத்தியெழுதியிருப்பாரா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இனி நான் எனக்கு உறுத்தியதைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இரு குழுவினரின் இந்த உதைபந்தாட்டத்துக்குப் பத்மநாப ஐயரின் தலை பந்தாக உருண்டது எனக்குக் கவலை; ஏற்கனவே, ஐயர் என்ற பின்னொட்டினைக் கொண்டிருப்பதற்காக, தமிழகத்தின் பிராமணர்-அல்லார் சிக்கலினை இலங்கைக்கு அப்படியே களம், காலம், "ஆதிக்கம் ஆர் கையில்" என்பன பார்க்காது பெயர்க்கமுயல்கையிலே பிராமணர் என்ற முகம் தேடுகின்றவர்களுக்கு அவர் சில இடங்களிலே அநியாயத்துக்கு இலக்காகியிருக்கின்றார் என்பதைக் கண்டபோது, ஏற்பட்டதுபோன்ற கவலை. அவர் என் மிக மரியாதைக்குரியவர் என்பதற்காக பின்வரும் கருத்தினை எழுதவில்லை; கண்ணனின் பத்தி, காலச்சுவடு-ஈழத்தேசியம்-தீராநதி என்பவற்றின் நிலைப்பாட்டினை விளக்குவதாகப் போய், பொதுவிலே தன் அரசியல் சார்ந்த கருத்தினை எங்கும் திணிக்காத, தானும் தன் ஈழ இலக்கியப்பதிப்பும் என்று செயற்பட்டிருக்கின்ற பத்மநாப ஐயருக்கு வீணே நண்பர்கள் முறித்துக்கொள்ளும் + விரோதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிலையைமட்டுமே உருவாக்கக்கூடும்.

தீராநதியின் காலச்சுவடு மேலான குறிப்பு அடங்கிய கட்டுரையை முன்னிட்டு, கண்ணனுக்கு தன் பத்தியிலே எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமிருப்பதை மறுக்கவில்லை. ஆனால், அந்தக்குறிப்பினை, தீராநதி எப்படியாகத் தினக்குரல் செவ்வியைப் போட்டது என்பதோடு சேர்த்து, ஒரே பத்தியிலே, இரண்டு விடயங்களையும் வேறாகப் பிரிக்காது போட்டிருப்பது, ஒரு விதத்திலே அநீதியானது; குறிப்பாக, தினக்குரல் முதல் தீராநதிவரையான கட்டுரைப்பயணத்திலே குறிப்பிட்ட சம்பவங்கள் தனிப்பட்டவர்களிடையே நிகழ்ந்த சம்பவங்கள்; அவை அச்சிலே பொதுவிலே வரமுன்னாலே, சம்பந்தப்பட்டவர்களின் சம்மதம் கேட்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியாகக் கேட்கப்படாதபோது, தனிப்படக்கூறியதை அச்சிலே போடுவது முறையான செய்கையல்ல; வெறும் நம்பிக்கைக்கேடாக மட்டுமே முடிவடையும். இதைக் குறித்து ஐயரோடு பேச இதை எழுதும்வரைக்கும் எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிய விருப்பம்; என்னவென்று விடுப்பு கேட்காமல், அவராகச் சொல்லபோகிறவர் இல்லை. ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்பதை மீளப் பதிந்து, இன்னும் இந்த உதைபந்து விளையாட்டினை மேலதிக நேரத்திலே, அவர் தலைக்குத் தண்ட உதை கொடுத்து வெற்றி பெற்றாரைத் தீர்மானிக்க விருப்பமில்லை. இவர் பேசாமல், இயல் விருது பெறாமலே இருந்திருக்கலாம். தனிப்பட்ட அளவிலேனும் வேண்டாத பிரச்சனைகள் திணிக்கப்படாமலிருந்திருக்கலாம்.

'05 மே 13 வெள். 18:10 கிநிநே.


10 comments:

Venkat said...

மிகச் சரியான பதிவு. உங்கள் கருத்துகளுடன் நான் முழுதும் உடன்படுகிறேன். எல்லாவற்றையும்விட பத்மநாப ஐயர் குறித்த கவலையே அதிகமாகத் தோன்றுகிறது. இதற்கு வினை, எதிர்வினை, நியாயம், நோக்க் இதெல்லாம்பற்றி எழுதுமுன் ஐயர் இந்த அரங்கொளியை விரும்புவாரா என்றுதான் நாம் முதலில் யோசிக்க வேண்டும்.

பலமுறை எனக்குச் சிறுபத்திரிக்கைகளில் வரும் மொழிபெயர்ப்புகள் உரிமை பெற்றுச் செய்யப்பட்டவையா என்று ஆச்சரியம் தோன்றும். அதே போல திண்ணையில் வரும் மௌனி, தி.ஜா கதைகளைப் பற்றியும்.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், நான் படிக்கும் சில அறிவியல் கட்டுரைகளைக் கூட முற்றாக மொழிபெயர்த்துப் போடும் ஆவல் தலையெடுப்பதுண்டு. பின்னர், New Scientist, Nature, Newyork times என்று தேடியலைந்து, அவர்களுக்கு என் வர்த்தகமற்ற நோக்கை விளக்கி அனுமதி பெறும் நேரத்தில் தொடர்பான இன்னும் நாலைந்து கட்டுரைகளையும், ஆராய்ச்சித்தாள்களையும் உள்வாங்கிக் கொண்டு நானே தனிக்கட்டுரையாக எழுதியிருக்கிறேன். சில சமயங்களில் நகலாக்கம் பற்றி எழுத எனக்கு என்ன தகுதியிருக்கிறது, இதில் நாம் மொழிபெயர்ப்பை மாத்திரமே செய்ய வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், logistics காரணங்களுக்காக அதில் ஈடுபடுவதில்லை.

இந்த ஒரே காரணத்துக்காகவே நான் விரும்பிய சில அறிவியல் புனைகதைகளை (சிறுகதைகள்) மொழிபெயர்க்க முயலவில்லை.

-/பெயரிலி. said...

வெங்கட், மொழிபெயர்ப்புகள் குறித்து நான் பார்க்கும்போது, இரண்டு வகைகளாகப் பார்க்கிறேன். வர்த்தகநோக்கின்றி, ஒரு குழுமட்டத்திலே செய்யப்படும் மொழிபெயர்ப்புகளைத் தவறாகாது என்றே தோன்றுகிறது.

ஆக, 100~200 படிகள் விற்கும் சிறுசஞ்சிகையிலே வரும் தமிழ்ப்பெயர்ப்புகளைக்கூட அங்கீகரிக்கலாம் (கருத்தளவிலேயில்லாவிட்டாலுங்கூட, நடைமுறைநிலையளவிலே). ஆனால், பெருவிற்பனைச்சஞ்சிகைகள், அவற்றுக்கீடான இடைநிலைச்சஞ்சிகைகள் பெயர்க்கும்போது யோசிக்கவேண்டியிருக்கின்றது.

SnackDragon said...

//தமிழிலே ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு சஞ்சிகை அள்ளிப்போடுவதோ, அல்லது சரியான அங்கீகாரத்தைக் கொடுக்காமலோ, அல்லது தனக்குத் தேவையானதை மட்டும் அள்ளிப்போடுவதோமட்டுமே தவறானது, மற்றைய மொழிப்படைப்புகளினை எப்போதும் நாங்கள் எடுத்துப் பெயர்த்து, விற்பனைக்காகப் போட உரித்துடையோம் என்ற ஒரு சிந்தைப்போக்கு இருப்பதாக எண்ணுகிறேன்.//
இதை நானும் யோசித்ததுண்டு. இந்தப்பதிவு அவசியமானதாகப்படுகிறது.

Jayaprakash Sampath said...

கண்ணன் கட்டுரையை, காலச்சுவட்டிலே வாசித்தேன். இந்த குமுதம் - காலச்சுவடு பாலிடிக்ஸில், ஐயர் பெயரை ஏன் இழுக்கிறார்கள் என்று வருத்தமாக இருந்தது. தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் சேர்க்க வேண்டி, " சந்தேமிருந்தால், ஐயருக்கே மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம் " என்று கண்ணன் எழுதியிருப்பது அநாகரீகம். ரெண்டு தரப்பினரும் ஐயருக்கு மடல்களாக எழுதித் தள்ளினால், அவருக்கு எத்தனை தர்மசங்கடமாக இருக்கும்?

கறுப்பி said...

அதுசரி பெயரிலி வலைப்பதிவுகளிலும் பலர் ஆங்கிலக் கவிதைகளை மொழி பெயர்க்கின்றார்கள், தாங்கள் உட்பட. அப்போ அதற்கும் அனுமதி என்பது தேவையா? இல்லாவிட்டால் இணையத்தளங்களில் வெளிவருபவற்றை யாரும் எடுத்து மொழி பெயர்க்கலாமா?
காலச்சுவட்டு மொழி பெயர்ப்புக் கதைகள் கவிதைகளுக்கு மூலம், மொழிபெயர்த்தவர் போன்ற பெயர்களை தருகின்றார்கள். அது போல் படைப்பின் மூல மொழி எழுதியவர் மொழி பெயர்த்தவர் போன்ற தகவல்களைத் தந்தால் மட்டும் போதுமா?
மேடை நாடகங்களுக்கு எப்படி? அதற்கும் ஏதும் கட்டுப்பாடுகள் இருக்கின்றதா? தகவல்கள் தெரிந்தால் கூறவும். நாம் யோசிக்காமல் எதையாவது செய்து பின்னர் பெரிதாக நஷ்ட ஈடுகட்ட வேண்டி வந்தாலும் வரும்.

-/பெயரிலி. said...

கறுப்பி, சட்டரீதியான என்ன நடக்கின்றதென்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒருவரின் படைப்பின் காப்புரிமை ஒருவரிடம் இருக்கும்போது, அதை வேற்றுமொழிக்கு மாற்றுவதற்கு உரிமம் பெறவே வேண்டும் என்பது எண்ணும்போது சரியானதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு, மூல எழுத்தாளரைப் பாதிக்காதவரையிலே, குறைந்தபட்சம் மொழிபெயர்க்கப்பட்டது அவருக்குத் தெரியாத நிலையிலே, மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டேயிருக்கும். இணையத்தளத்திலே பொழுதுபோக்காகத் தமிழிலே பெயர்த்துப்போடுவதிலே நடைமுறையளவிலே ஏதும் பாதிப்பு மூலப்படைப்பாளிக்கு ஏற்படாது (குறைந்த பட்சம் மூலப்படைப்பு இன்னாருடையது என்றாவது போடவேண்டும்). ஆனால், அதுகூட, சட்டத்தின்பேரிலே நியாயப்படுத்தமுடியாதென்றே படுகிறது. ஆனால், விற்பனையை முன்வைத்து நடக்கும் பத்திரிகைகள் மொழிபெயர்ப்பினைச் செய்யின் (தழுவிப் படைத்தால் அல்ல), கேட்டுப்பெறுதல் முறையே.

பிரகாஷ், நீங்கள் சொல்லும் ஐயருடைய மின்னஞ்சல் முகவரியினை கொடுத்திருக்கும் விடயந்தான் முதலிலே உறுத்தலையே ஆரம்பித்தது.

சன்னாசி said...

பெயரிலி, அவசியமான பதிவு. இலக்கியம் வரையெல்லாம் போகவேண்டாம்; மாலைமதியில் 'நாவல்' முடிந்தபிறகு சினிமா நட்சத்திரங்களின் 'பேட்டிகள்' இருக்கும் - அதில் எனக்குத் தெரிந்தே எத்தனையோ பேட்டிகள் ஸ்டார்டஸ்ட், ஃபிலிம்ஃபேரிலிருந்து சுருக்கென உருவியவை.

இதைவைத்து, மொழிபெயர்ப்பு குறித்து அதே கேள்விகளைக் காலச்சுவட்டுக்கு எழுப்பலாமென்பதும் நிஜமே. காலச்சுவடு விஷயத்திலேயேகூட, இப்போதிருக்கும் காலச்சுவடும், நடுவில் நின்றுபோவதற்கு முன்னால் வந்துகொண்டிருந்த காலச்சுவடுக்குமே எத்தனை வேறுபாடுகள்!! கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி 'இதாண்ணே அது' என்று சொல்லவேண்டுமென்று நினைத்தாலும், முடியாதென்றுதான் நினைக்கிறேன்!! சிறுபத்திரிகை என்ற அடையாளத்தைத் தாண்டி வளர வளர தங்கள் பொறுப்புக்களைப் பிறர் சொல்லாமல் தாங்களே உணர்ந்துகொள்ளும் பாக்கியம் வாய்க்கக்கடவதென்று பிரார்த்தித்துக்கொள்வோம். அந்தவகையில் மொழிபெயர்ப்புக்களை அனுமதிபெற்றுப் போடுவது அவ்வளவு சிரமமல்ல என்று நினைக்கிறேன்.

இதே கேள்வியை, வலைப்பதிவுகளில், கைக்காசைப் போட்டு நடத்தப்படும் சிறுபத்திரிகைகளில் வெளியாகும் மொழிபெயர்ப்புக்கள்குறித்துக் கேட்பது சரியல்ல என்றுதான் நினைக்கிறேன். வலைப்பதிவுகளையோ, நஷ்டத்தில் அவ்வப்போது வெளியிடப்பட்டு நின்றுபோகும் பத்திரிகைகளையோ வர்த்தகரீதியில் நடத்தாத வரையில் தார்மீகம் பொறுத்துக்கொள்ளும். சமகால உலக இலக்கியங்கள் முழுதுமாக மொழிபெயர்க்கப்பட்டனவோ இல்லையோ - சிறுபத்திரிகைகள்வழி பெயர்க்கப்பட்ட சில படைப்புக்களின்மூலமாக ஒரு சுருக்கமான அறிமுகமாவது கிடைக்கிறது. சிறுபத்திரிகைகள் கத்தித் தீர்த்த பெயர்கள்தான் சில தசாப்தங்கள் கழித்து தீராநதிகளின் சலசலப்பாக இன்று கேட்கிறது என்பதையும் உண்மையென்று ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். பாஸ்டனிலே ஒருகாலத்தில் இதுமாதிரி சிறுபத்திரிகையாக வந்துகொண்டிருந்த Dialலில்தான் டி.எஸ்.எலியட்டின் பாழ் நிலம் (The Waste Land) பிரசுரமானது.

சன்னாசி said...

//இதே கேள்வியை, வலைப்பதிவுகளில், கைக்காசைப் போட்டு நடத்தப்படும் சிறுபத்திரிகைகளில் வெளியாகும் மொழிபெயர்ப்புக்கள்குறித்துக் கேட்பது சரியல்ல என்றுதான் நினைக்கிறேன்.//
அது கறுப்பி கேட்டது குறித்து. இதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்...

Thangamani said...

அவசியமான பதிவு. நன்றி!

-/பெயரிலி. said...

மாண்ட்ரீஸர், தங்கமணி, கார்த்திக்
கருத்துகளுக்கு நன்றி.

/சிறுபத்திரிகைகள் கத்தித் தீர்த்த பெயர்கள்தான் சில தசாப்தங்கள் கழித்து தீராநதிகளின் சலசலப்பாக இன்று கேட்கிறது என்பதையும் உண்மையென்று ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்./
உண்மை; ஒரு ஓடை நதியாகிறது :-(