Sunday, October 14, 2007

Gimpel the Fool

அரைகுறை

Gimpel the Fool
"I am Gimpel the fool. I don't think myself a fool. On the contrary. But
that's what folks call me. They gave me the name while I was still in school. I
had seven names in all: imbecile, donkey, flax-head, dope, flump, ninny, and
fool. The last name stuck. What did my foolishness consist of? I was easy to
take in. ...."
- IBS

இலங்கைத்தமிழர்களின் சாதியமைப்பினைக் குறித்துப் பேசுவதற்கு நான் எத்துணை பொருத்தமானவனெனத் தெரியாது; தாய்வழியிலே யாழ்க்குடாவின் வடமராட்சியினையும் தந்தை வழியிலே வன்னியை முக்கியமாகவும் கொண்டிருந்தாலுங்கூட, கிழக்கின் மக்கள் கலந்த பட்டினத்திலே பதினாறாண்டுகள் வாழ்ந்து கண்டியின் செயற்கைக்கலப்பான பல்கலைக்கழக அமைப்பிலே இலங்கையை விட்டு நீங்கமுன்னான ஒன்பது ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன். யாழ்நகரின் சுற்றுப்புறத்திலே வாழ்ந்தது, ஆக ஈராண்டுகள். இப்படியான அமைப்பின்கீழே, இலங்கைத்தமிழரின் சாதியம் குறித்த அனுபவங்களை நேரடியாக நான் காண வாய்ப்பு மிகவும் குறைவாகவேயிருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்கள். சாதியமைப்பினாலே பாதிக்கப்படவோ பாதிக்கவோ செய்யும்வகையிலே என் 'சாதி' எதுவென்றும் அறிந்துகொள்ளவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. இவ்வகையிலே, இரயாகரன், ஸ்ரீரங்கன், தலித் மகாநாடு நடத்துகின்றவர்கள் ஆகியோருக்கு இருந்திருக்கக்கூடிய, உணர்ந்திருக்கக்கூடிய பட்டறிவு எனக்கு இல்லை. ஆனால், இயலுமானவரை அதன் அழுத்தம், வரலாறு பற்றி நிறைய வாசித்திருக்கின்றேன். கீழே வரும் இரயாகரன், ஸ்ரீரங்கன் இவர்களுக்கான அவர்களின் கூற்றுகளின் மேலான சுருக்கமான பதில்களுக்கு, இந்த வாசிப்பும் வாழ்ந்த சூழலின்மீதான கவனிப்பும் போதுமானதென்று நம்புகிறேன்.

ஈழத்தின் ஐந்துவயதுக்குழந்தைக்கும் தெரியும் ரிவோல்வருக்கும் பிஸ்டலுக்குமே இன்றுவரை வித்தியாசம் தெரியாத நான், இயக்க ரீதியிலும் தத்துவ ரீதியிலும் நிறையச் செயலாற்றி, (புலம்பெயர்ந்து) ஒதுங்கியிருக்கும் பதிவர்கள், பதியாதவர்கள்மத்தியிலே இவற்றினைப் பற்றி எழுதுவதிலேயிருக்கும் தயக்கம் நிறைய. ஆனாலும், இரயாகரன், ஸ்ரீரங்கன், ஷோபா சக்தி, சுகன், அவர்களைப் போன்ற போராடியும் இன்னும் ஓயாத சிலரின் அளவு விரிந்த பெரும்பார்வையின் இடையே விழக்கூடிய நடைமுறைவிரிசல்களைக் காலத்தின் நலன் கருதிச் சுட்டவேண்டிய முரண்படவேண்டிய அவசியமிருக்கின்றது. இதனால், அவர்களின் மீதான என் மதிப்பு அதற்கான தேவைகளிலே குறையாததென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்து இராம் போன்றவர்களினை ஒத்த இணையபிம்பங்களின் முன்னாலே இப்படியாக வாதம் செய்வது எனதும் (இங்கே எதிர்த்துப் பேசுகின்றவர்களினதும்) நலன்களுக்கு ஊறு விளைவிக்குமென்பதையும் இப்படியான இணையபிம்பங்கள் தமது நலன்களை முற்கொண்டு செல்ல வசதியாகப்போகும் என்றளவிலே, இயன்றவரை இத்தனைநாட்கள்போல, இனிவருநாட்களிலும் வேண்டாவாதங்களைத் தவிர்க்கமுயல்வேன். ஆனாலும், எனதும் என்னைப் போன்ற ஈழத்தார் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ளச் சில சந்தர்ப்பங்களிலே இரயாகரன், ஸ்ரீரங்கன், விபு போன்றோருடனான வாதங்களும் தவிர்க்கமுடியாதவை. அதன்வழியே இவ்விடுகை.

==========================

இராயகரன்

இராயகரன் தனது புலிகளும் சாதீயமும் என்ற இடுகையின் இடுகை முன்பதிவாகவும் பின்னூட்டங்களாகவும் நிறைய அல்லது நிறைத்து எழுதியிருக்கின்றார். முன்னூட்டத்தைப் பொறுமையுடன் வாசித்து ஒரு பதிலிட்டேன். அதற்கு இன்னொரு பின்னூட்டம் இட்டார். அதற்கு ஒரு பதிலிட்டேன். விவாதத்துக்கு வெளியேயான பின்னூட்டமும் உள்ளடங்கியதாக அனுமதித்த பின்னூட்டத்தினை அகற்றிவிட்டார். அதன் பின்னால், பின்னூட்டங்களாக நுரைக்க நுரைக்க முன்னூட்டத்தினையும் என் பின்னூட்டத்துக்குப் பதிலென்றும் கருதிக்கொண்டு நிறைத்திருக்கின்றார். அதற்கு நன்றி தெரிவிக்கபோதிலே அவருடைய பதிவின் தலைப்புக்கும் முன்னூட்டம் & பின்னூட்டங்களுக்கு என்ன தொடர்பு என்று விளக்க மறந்திருக்கின்றார். இவ்விடுகையிலும் பின்னூட்டங்களிலும் அவருடைய கட்டுரைகள் எல்லாம் இருபடிச்செயன்முறையானவையாக இருக்கின்றன.

முதற்படி: "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று திரும்பத் திரும்ப எடுகோளாகச் சொல்தல்

இரண்டாம்படி: யாழ்மேலாதிக்கத்தின் கெடுதல்கள் என்று நிறைய எழுதுதல்

மூன்றாம்படி: புலிகள் தாங்கள் சாதியத்தினை மறுப்பவர்களென்று சொல்லியிருந்தாலோ அல்லது அதனுள்ளிருக்கும் ஒடுக்கியசாதி எனக் கருதப்படும் அங்கத்தவர் எனக் கருதப்படும் ஒருவர் சாதியமறுப்பினைச் செய்தால், அவரை அக்கருத்துக்காக கடிதல்

நான்காம்படி: புலிகள் இரயாகரனின் தத்துவத்தின்படி இயங்கவில்லை என்பதற்காக ஏகாதிபத்தியம் போன்ற இன்னோரன்னவற்றின் எடுபிடிகளாகி, தத்துவவெறுமைக்காகத் திட்டுதல்

ஐந்தாம்படி: இத்தனையின் காரணமாக, "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று 'நிறுவுகின்றாராம்'

அதாவது, என்ன செய்கின்றாரென்றால், புலிகளின் சாதியம் தொடர்பான தனது கருத்தை எடுகோளாகச் சொல்கிறார். பின்னர், யாழ்மேலாதிக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து புலிகளின் வேறு விவாதத்துக்குரிய செயற்பாடுகளைப் பட்டியலிட்டு (இரத்தினதுரை புலம்பெயர்ந்தவர்களைக் கடிந்தது & புலிகளின் மற்றைய இயக்கங்கள்மீதான எதிர்வுகொள்ளல்கள்) அல்லது புலிகளின் சாதியமறுப்புக்கருத்துகளையே கிண்டல் செய்து (பாலசிங்கத்தின் கருத்து, இரத்தினதுரையின் கருத்து) எழுதுகிறார். பிறகு, புலிகள் மார்க்சிய தத்துவத்தின்படி நடக்கவில்லையென்பதைப் பெரிதாக விளக்குகின்றார் ("புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான்."). இறுதியிலே யாழ்மேலாதிக்கம், புலிகளின் இன்ன பிற செயற்பாடு & சாதிமறுப்புக்கூற்றுகள், மார்க்ஸியதத்துவத்தினை இரயாகரன் எதிர்பார்க்காதவிதத்திலே பயன்படுத்துதல் இவையனைத்தும் எதுவித தர்க்கக்கோவையோ வருவிப்போ தொடர்போ இன்றி இரயாகரனின் எடுகோளான "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்பதாக ஆகிவிடுகின்றது.

வாசிப்பவர்களின் (அல்லது எழுதியவரின்) புத்திசாலிதனத்தினையும் தொடர்பாக்கிப் பேசுதிறனையும் கேலிக்கும் கேள்விக்குமுள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுதி இரயாகரனின் முன்னூட்டமும் பின்னூட்டங்களும். முப்பதினாயிரம் சொற்களிலே அவர் வளர்த்துவிட்ட வசனவெளியிலே கொண்டுவந்து புலியை மேயக் கட்டுகிறார்.

அதைத்தான் நான் என் இரண்டு பின்னூட்டங்களிலும் சுட்டிக் கேட்டிருந்தேன். கொஞ்சம் பொறுமையோடு அவருடைய கட்டுரையிலிருந்து வழக்கமான சொற்பதங்களைப் பிரித்து வாசிக்க முடியாதவர்களுக்கு நான் கீழே அவரின் கட்டுரைகளிலிருந்து மூன்று பந்திகளைப் பிரித்துத் தந்திருக்கின்றேன். அவற்றின்மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றாரென்று அவருக்குத்தான் வெளிச்சம்.

/யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் மக்களை பிரதிபலிப்பதில்லை. யாழ் மேலாதிக்கம் மிக குறுகிய ஒரு பிரிவை அடிப்படையாக கொண்டது. இது யாழ் பிரதேசத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க வேணடு;மென்பதல்ல. சிங்கள இனத்தில் பிறந்த ஒருவன் கூட யாழ் மேலாதிக்கத்தைக் கொண்டு இருக்கமுடியும். இது பிறப்புக்குள் உட்படுவதில்லை. ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் கிழக்கைச் சேர்ந்தவன் ஒரு முஸ்லீம் கூட யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யமுடியும்./

என்ன சொல்கிறாரென்று யாரேனும் அவரிடம் கேட்டுச் சொல்லமுடியுமா? அப்படியானால், 'யாழ் மேலாதிக்கம்' என்றால் என்னதான்? இவ்விடத்திலே 'யாழ்' என்பதற்குப் பதிலாக 'பாழ்', 'தாழ்', 'சால்', 'பால்', 'குழல்', 'பறை', 'வீணை', 'பூனை', 'யானை' எதைப்போட்டாலும் மேலாதிக்கக்குழப்பமே வருகின்றது.

/"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாராக இல்லை"/

இதைத்தானே முட்டி முட்டி நானும் வேறு சிலரும் சொல்கிறோம். இதை நாங்கள் சொன்னால், பாசிசப்புலிப்பினாமிமாபியா, இரயாகரன் சொன்னால், புரட்சிக்கருத்தா? ("With us or with Terrorists" என்ற புஷ்வகை "detailed dialectic :-)" அராஜகம்) இதனால் என்ன சொல்ல வருகின்றாரென்றால், யாழ்சாதியமேலாதிக்கம் உச்சம் பெற்றிருந்த புலிகள் அதிகாரத்தைக் கொண்டிராத காலத்திலேயிருந்த நிலைமையிலும்விட இப்போது புலிகளின் அதிகாரமுள்ள காலத்திலே நிலைமை மேன்மைபெற்றிருக்கின்றது என்பதாகத்தான் எனக்குப் புரிகின்றது. பிறகு எதற்காக, யாழ்மேலாதிக்கத்தினைப் புலிகள் விதைத்து உரம்போட்டு உற்பத்தி செய்து விற்பனைக்குச் சந்தைப்படுத்துகின்றார்கள் என்ற பாங்கிலே என்று எழுதுகின்றார் என்று சொல்வாரா? பாலசிங்கம் "ஒரு காலத்திலே இவை ஒழியும், ஒழிப்போம்" என்று சொன்னதை வைத்துக் கிண்டல் செய்கின்றவர், சாதியத்தின் இத்தேய்நிலையைக் கருத்திலே கொண்டால், பாலசிங்கத்தின் கருத்தினை ஒரு முகப்பெறுதிக்காகவேனும் ஏற்றுக்கொள்ளலாமே?

இப்படியாக, முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடும் நிறுவல் செய்யும் அவர், கடைசியிலே "இஃதென்ன தர்க்கம் பிறழ்ந்த நிறுவல்?" என்று கேட்டால், /"புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" / என்ற குதர்க்கக்கருத்தினை முன்வைக்கின்றார். இவரோ எங்கும் "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம்" என்று நிறுவவில்லை; செய்ததெல்லாம் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு தொடங்கியதும் பிறகு இரண்டாம்படி தொடக்கம் ஐந்தாம்படிவரை அவருடைய யாழ்மேலாதிக்கம், இரயாகரனின் மார்க்ஸியமற்ற புலிகள் என்பனவற்றைப் பேசியதும் கடைசியிலே மீண்டும் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு முடித்ததுமே. எடுகோளுக்கும் நிறுவப்பட்டதற்கும் இதுவரைக்கும் அவருக்கு வித்தியாசம் தெரிந்ததாக எமக்குத் தெரியவில்லை. இத்தனைக்குள் நிறுவப்படாத கருத்தை மறுத்து, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது எங்கள் கடமை" என்று செய்ய என்ன தேவை இருக்கின்றது?

ஒன்றை ஒருவர் நிறுவின பின்னாலேதானே, தகர்க்கவேண்டியவர்கள் இல்லையென்று நிறுவமுடியும்? இங்கே நான் நிறுவுதல் என்பது சாதி என்பது குறித்துப் புலிகளைச் சம்பந்தப்படுத்திப் பேசும்போது, சாதி என்பதை முன்னிறுத்தி அதை வளர்க்கப் புலிகள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதைச் சுட்டி வாதத்தை எடுத்துச் செல்வதே.

ஆனால் இரயாகரனின் பதிவோ, பின்னூட்டங்களோ அப்படியான வாதத்தைச் செய்வதில்லை. (முரண்நகையாக) சோ ராமசாமி என்ற அதிதீவிரவலதுசாரி ஆசாமி முகமது பின் துக்ளக் நாடகத்திலே,கம்யூனிஸ்டுகட்சி ஆசாமிப்பாத்திரமொன்றினூடாக நக்கல் செய்யும், "மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள்" எனும் வகையிலேதான் வாதம் செய்கின்றார். இப்படியாக, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" என்று வேறு கேட்கும் இரயாகரனுக்கு, "சப்பையைத் தவிர்த்துவிட்டு, நெல்லைக் காட்டுங்கள்; அரிசியையும் உமியையும் பிரித்துத்தருகிறோம்." என்று சொல்வதைத் தவிர வேறேதும் பதில் அவசியமில்லை.

இலங்கைத்தமிழரிடையேயிலேயிருக்கும் பிரதேசவாதம், சாதியம் என்பனவற்றினை மறுக்கவில்லை. ஆனால், அவற்றின் வடிவத்தினையும் அளவினையும் திரிப்பதினையும் மாற்றுவதையும் பின்னால், சம்பந்தப்படாத கொழுக்கியிலே கொண்டுபோய்க் காயவிடுவதையும் இரயாகரன் செய்வதுதான் தவறென்று சொல்கிறேன். புலிகள் மீது விமர்சனங்கள் சில விடயங்களிலே எனக்குமுள்ளது; ஆனால், சாதியத்தினை அவர்கள் வளர்க்கின்றார்களென்பது அதிலொன்றில்லை. அக்கருத்தினை மாற்றிக்கொள்ள, இரயாகரனின் தர்க்கம் கெட்ட குதர்க்கவாதம் பயனாகவில்லை.

==========================
ஸ்ரீரங்கன்

ஸ்ரீரங்கன் தன் "சாதியமைப்பும் தேசியவிடுதலைப் போராட்ட அவநம்பிக்கைகளும்,தலித்துக்களும் " பதிவில் இரண்டு 'அற்புதமான' கருத்துகளைச் சுட்டியிருக்கின்றார். [இவருடைய அகதி பதிவிலே வந்து புலம்பெயர்ந்த வெண்சட்டைப்போராளி மாசிலாமணி பின்னூட்டமிட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. சென்ற வாரத்தின் இரயாகரனின் இடுகைப்பின்னூட்டத்தோடு, காணாமற்போனவர், ஸ்ரீரங்கன், இரயாகரன் இப்படியான அகதிவழிப்புலம்பெயர்ந்தவர்கள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை உத்தேசமாக நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், இப்போது மிகவும் தந்திரத்தோடு ஈழத்தின் தலித் ஒடுக்குமுறைக்காகக் கண்டனம் தெரிவிக்கின்றாராம். வாழும் நாட்டிலே பெயர்ந்திருப்பவனையே தன் பெயர் கெடுக்கும் அகதித்தமிழன் என்று சொல்லி ஒதுக்கும் இவர் கண்காணாத்தேசத்திலிருக்கும் தலித்துகளுக்காக இன்று மீண்டு கண்கலங்குவது வியப்புக்குரியதல்ல]

/இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!/

இலங்கைத்தமிழ்வேளாளசமுதாயத்தின் திமிரினை ஆறுமுகநாவலர் தொட்டு, இராமநாதன் ஊடாக இன்று வரை வாசித்துவருகிறோம். முன்னைக்கு இற்றை தேயும் தன்மை தெரிந்தாலுங்கூட, இன்னுமிருக்கின்றதென்பதை ஆங்காங்கு இணையத்திலேகூடக் காணக்கூடியதாகவிருக்கின்றது. ஆனால், இப்படியான அவநம்பிக்கை தரும் வேளாளர்குடிவந்தவர்களின் ஒரு பகுதியினரே தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து அங்கு தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் இடைநிலைச்சாதியினரூடாக ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாட்டின் அரசியல், பொருளியற்சூழ்நிலைகளை கனடா/ஐரோப்பாவிலிருந்து விற்கும்போது இந்த வேளாளமேலாதிக்கத்தின்மீது என்ன நம்பிக்கையை ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கவேண்டுமென ஸ்ரீரங்கன் எதிர்பார்க்கின்றார்? தன்னுடைய ஓர் இடுகையிலே தானே வேளாளர் என்பதை மறுத்தாலும் தலித் என்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தான் பேசமுடியாது என்று சுட்டியவர், இங்கே கனடா/ஐரோப்பாவிலிருந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தவருக்காக தம் சாதியை மறுக்கும் வேளாளசக்திகள் போராடுவதை ஒடுக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளலாமென்று நம்புவது எவ்விதம்?

இதன் வழியிலேயே நான் கேட்ட, "எந்த நம்பிக்கையிலை திருமாவளவனையும் கிருஷ்ணசாமியையும் விட்டிப்போட்டு அ. மார்க்ஸை பிரதிநிதியா கொண்டு வந்து சுகனும் ஷோபாவும் கற்சுறாவும் ஸ்டாலினும் யாழ்ப்பாண தலித்துக்குத் தருகினம் எண்டும் ஏட்டுச் சொல்லுங்கோவன்" இற்கு, ஸ்ரீரங்கன் சொல்லும் பதில் மறைமுகமாகத் திறந்த வாயை மூடாமல் வைத்திருக்கச் செய்கிறது (இரயாகரன் என்றால், நேரடியாகவே, "வாயைப் பொத்திக்கொண்டுபோ; நான் சொல்லும் புரட்சிக்கொட்டாவிதான் சரியான போராட்டம்" என்றே சொல்லியிருப்பார்):

/அ.மார்க்ஸ் தமிழ்ச்சமூகத்தில் மிக முக்கியமான சமூகவியலாளர்.அவரை சாதிரீதியாக எவரும் பார்ப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் மனிதர்களுக்குத் தோழமையாகப் பார்க்கலாமே?அடுத்து திருமாவளவன்...இவர் ஓட்டுக்கட்சி அரசியல் மாயைக்குள் இருப்பவர்களுக்குப் பிதாவாக இருக்கலாம்.நமக்கல்ல./

ஸ்ரீரங்கன், அ. மார்க்ஸ், திருமாவளவனிலும்விடத் தமிழகத்தலித்துகளுக்குச் சிறந்தவர் என்று சொல்கிறார். அவரின் சாதியையும் பார்க்கவேண்டாமென்று சொல்கிறார். தமிழகத்தின் தலித்துகள் அல்லவா, அவர்களுக்கு சமூகவறிஞர் (சமூக + அறிஞர்) மார்க்ஸ் முக்கியமா, கூட்டுக்கட்சி மாறினாலும் தலித் நலனைப் பிரதிபலிக்கக்கூடிய (பிரதிபலித்த) திருமாவளவன் முக்கியமா என்று தீர்மானிக்கவேண்டும். ஈழத்து வேளாள அடையாளத்தை மறுத்துத் தலித்தின் தலைமையைத் தலித்தே கொள்ளவேண்டுமென்று சொல்லும் ஸ்ரீரங்கன் சொல்லமுடியாதல்லவா? இப்படியான குழப்பங்களே ஸ்ரீரங்கனின் பதிவுகளிலே மாறிமாறிவரும். குறைந்தபட்சம், ஸ்ரீரங்கன் இரயாகரன் மாதிரி தொடர்ச்சியாக அரூபக்கருத்தாக்கங்களிலே தனது விருப்பஎதிரிகளையே எப்போதும் கைவசமிருக்கும் சுட்டுச்சொற்களோடு திட்டிக்கொண்டிருப்பதில்லை என்பது ஆறுதலான விடயம்.

=====================

28 comments:

Anonymous said...

1990களில் புலிகள் சாதியத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதை யாருமே எங்கும் பதிவு செய்யாதது வியப்பளிக்கின்றது.
1. அம்பட்டர், வண்ணார், பறையர் போன்றவர்கள் சாமத்திய, கலியாண, செத்த வீடுகளுக்குப் போய்ச் செய்யும் சடங்குகளை இல்லாதொழித்தமை.
2. சாதி சொல்லுவோரை அச்சாதியினரின் வீட்டில் சாப்பிட வைத்தமை
ஆகிய இரண்டும் நடந்தமையை எனது தென்மராட்சி, தீவக நண்பர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

புலிகள் சாதியத்துக்கெதிரான பகிரங்க அறிக்கையெதுவும் விடவில்லை என்பதும் உண்மைதான்.

யாழ்ப்பாணத்துச் சாதியமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றை இணையத்தில் சமர்ப்பிப்பதும் அதனை விவாதங்களின் பின் திருத்தி முழுமை செய்வதும் காலத்தின் தேவை

கொழுவி said...

91 இல் சாதி குறித்து அன்ரன் பாலசிங்கம் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அதில புலிகள் நிலைப்பாடு விளக்கப் பட்டிருந்தது.

தேடிக் கொண்டோடி வாறேன்

கொழுவி said...

//இப்படியான குழப்பங்களே ஸ்ரீரங்கனின் பதிவுகளிலே மாறிமாறிவரும்.//

அது அப்பிடித்தான் மாறி மாறி வரும். காலத்துக்கு ஏற்ப கருத்துக்கள் மாறித்தானே ஆகணும். அது காலை மாலைக் காலம் என்றாலும்..

Anonymous said...

பெயரிலி

ஈழத்தில் சாதியம் இல்லை என்றோ அல்லது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்றோ பெரும்பாலும் (ஒருசிலரை விடுங்கள்) யாரும் சொன்னது கிடையாது. ஆனால் சாதியம் குறைந்துவருகிறது. மறைந்து போவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறன என்பதை தான் பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி சொல்வதை அடிக்கடி மறுதலித்துவருபவர்கள் இராயகரன், சிறிரங்கன் இன்னும் சிலரும்.

ஒன்றை சொல்ல வேண்டும்....

பெரும்பாலும் 20 வருடங்களுக்கு முன்னர் பிலம்பெயர்ந்த ஈழத்தவர் பலருக்கும் அவர்கள் எப்போது புலம் பெயர்ந்தார்களோ அப்போது இருந்த ஈழம் பற்றிய பிரதிமைகளையே கவிதிரிவதும், அந்த பிரதிமைகளை கொண்டே இப்போதைய ஈழத்து நிலையும் இருக்கும் எனும் எடுகொள்களை கொண்டு கருத்துக்களை கொட்ட வெளிக்கிடுவதும் தான் பிரச்சனை. அது சாதியம் பற்றியாகட்டும், ஏனைய விடயங்களில் ஆகட்டும் புலம் பெயர்ந்தவர்கள் ஈழத்தில் மக்களின் மனங்களில் ஏற்படும், ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களை எதிர்வு கூறவோ அல்லது அதை பற்றி எந்த நேரடி அனுபவங்களோ அற்ற நிலையில் தாங்கள் ஈழத்தில் இருந்து பிடுங்கி புலம் பெயர் நாடுகளில் நடப்பட்ட அந்த நிலையில் இருந்து கொண்டே ஈழத்து மக்களின் மீட்பர்கள்ளாக இணைய புரட்சி செய்ய வெளிக்கிடுவது தான் ஆச்சரியமான அவலம்.


மிக அண்மை வரை ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவன் என்ற வகையில் ஈழத்தில் புலிகள் இல்லாதொழிப்பதாற்காக பல நடவடிக்கைகளை எடுத்ததை நேரில் கண்டவர்கள்.

மேலே அனனி ஒருவர் சொன்னது போல
முடி திருத்துபவர்கள் மரணசடங்கு, சாமத்திய வீட்டு.... இன்ன பிற நிகழ்வுகளில் குடிமை தொழில் செய்வதை, வீடுகளுக்கு சென்று முடிதிருத்துவதை இல்லதொழித்தமை.

சலவை தொழில் செய்பவர்கள் குடிமை தொழில், கோயில்களில் வெள்ளை கட்டுதல் போன்ற பணிகளை இல்லது செய்தமை

சாதிபெயரை உச்ச்ரிப்பவர்களுக்கு தண்ட பணம், அவர்கள் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டமை

உதாரணத்துக்கு எங்கள் ஊரில ஒரு ஆசிரியர் நாய் கடித்ததை பற்றி விசாரிக்க "....." வீட்டு நாய் கடித்தது என சொல்லியதற்காக உடனடி தண்ட பணமும், குறிப்பிட்ட நாயின் உரிமையாளர் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டதும்.

சாதியத்தை இல்லதொழிப்பது என்பது தோசையை ஒருபுறம் இருந்தௌ மறுபுறம் பிரட்டி போட்டு செய்வது போன்ற புரட்சியல்ல.

காலா கலமாக மக்களில்ன் அடி மனங்களில் ஆழ சுவறியிருக்கும் கருத்தாக்கத்தை படிப்படியாக தான் இல்லதொழிக்க முடியும்.

எமது பெற்றோரின் காலத்தில் இருந்ததை விட எமது வளரிளம் பருவதில் சாதி பெரிய விடயமக இருந்ததில்லை..... இப்போது பிறந்து வளரும் குழந்தைக்கு அது இன்னும் குறையும், ....... ஒரு சீரன கதியில் இறுதியில் இல்லாது போகும் என்பது அங்கிருந்து நேரடி அனுபவம் கொண்ட சிலருக்கு புரியும்...... ஆனால் பழைய பிரதிமைகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு புரிவது சிரமாம்.

Anonymous said...

/சாதியமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றை இணையத்தில் சமர்ப்பிப்பதும் அதனை விவாதங்களின் பின் திருத்தி முழுமை செய்வதும் காலத்தின் தேவை/

மேலேயுள்ள அநாமதேய நண்பரொருவர் கூறியதுமாதிரி, இவ்வாறான ஆய்வுகள் செய்யப்படல் மிகவும் அவசியம். ஆக்ககுறைந்து இவ்வாறான பதிவுகளின் மூலமாகவும் பின்னூட்டங்கள் ஊடாகவும் கூட ஒரு உரையாடலை வளர்த்து ஒரு நல்லதொரு கட்டுரையை எழுதிவிடவும் முடியும். ஈழத்தில் வளாக மட்டங்களில் பட்டப்படிப்புகளின் நிமித்தம் பல மாணவர்கள் ஆய்வுரீதியான thesis செய்துகொண்டிருப்பார்கள். அவ்வாறான ஆய்வுகள் தொகுப்பட்டு அச்சாக்கப்படுதல் பல நிகழ்கால விடயங்களை முன்வைத்து உரையாட நமக்கு ஏதோ ஒருவகையில் உதவிபுரியக்கூடும்.
.....
மற்றபடி கடைசி அநாமதேய நண்பர் (வெவ்வேறு நபர்களாக இருக்கும்பட்சத்தில்,ஒன்று இரண்டு என்று குறிப்பிட்டால், உரையாட வசதியாக இருக்கும்) குறிப்பிடும் பல விடயங்களில் உடன்பாடிருந்தாலும், ஈழத்தைப்போல,புலம்பெயர் வாழ்வில் சாதியம் தேய்ந்துகொண்டிருக்கின்றதென்பது அவ்வளவு ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கின்றது. ஈழத்தில் அண்மைவரை இருந்து வந்த இந்த நண்பர் எப்படி சாதியமைப்பு அங்கு தேய்ந்த்கொண்டிருக்கின்றது என்பதற்கு உதாரணம் தருவதைப்போல, இங்கும் நான் அவதானித்த பல விடயங்களைக்கொண்டு சாதியின்னும் அவ்வளவு தேய்ந்துவிடாது இருக்கின்றதெனவும் உதாரணங்களைத் தரமுடியும். சாதி என்பதை ஒரு இயல்பான விடயம்போல (சாறி கட்டுவது, சாமர்த்தியவீடு செய்வது எங்கடை பண்பாடு/கலாசாரம் என்பது போல) அடுத்த தலைமுறைக்கும் பரப்பட்டு வருகின்றது; விரிவான ஆய்வுக்கும் விசனத்துக்கும் உரிய விடயமிது.

Unknown said...

நல்லதொரு பகுப்பாய்வு. ஈழத்தில் சாதீய உணர்வு ஒழிப்பு என்பது உடனடியாக சாத்தியமானதொன்றல்ல.
நமது பெற்றோரின் காலங்களிலும் விட இன்றைய காலங்களில் சாதீய உணர்வின் தாக்கங்கள் வெகு குறைவே. இது மெல்ல மெல்ல இறுதியில் வேரறுந்து போகும் என்பது உண்மையே.

Anonymous said...

இப்படியும் சொல்கிறார்கள்

" Clearly, what Prabhakaran is dreaming of is a casteless and classless state of Eelam. As Prabhakaran has realized, the low caste people of Jaffna could overcome the oppression by the Vellalas by seizing control of the land - a symbol of Vellala superiority - destroying the socio-politico economic domination of the Vellalas (whose leaders living in Colombo have been exploiting the Jaffna waters as pawns to gain political power) and establishing a Marxist state, human rights freedom of expression an independent judiciary, individual ownership of property will have no place in the Eelam of Prabhakaran’s dreams."

http://www.lankalibrary.com/pol/prabha.html

Anonymous said...

இதையும் பாருங்கள்

"That is why opposition to the LTTE from a small groups of Tamils located both in Sri Lanka and abroad must be understood from a caste/class perspective. These Tamils ostensibly belonging to the higher castes simply cannot stomach the fact that LTTE or the Tamil national liberation movement has come to be guided by Tamils belonging to the so called 'low' castes."

http://www.tamilnation.org/intframe/india/caste.htm

தலித்துத் தலைமை கொண்ட புலிகள் இயக்கத்தை ஜீரணிக்க முடியாத ஆதிக்க சாதிகள்தானா புலம்பெயர் தேசங்களில் இருந்து புலியிசத்தை எதிர்க்கிறார்கள் என்பதைப்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

புலிகளை உயர்சாதி இயக்கமாகக் காட்டுவதற்காகவே கரையார் சாதிக்கு வெள்ளாளருக்கு அடுத்த நிலைக்கு சாதியுயர்வு வழங்குகிறார்களா?

Anonymous said...

உண்மையான விபரங்களை நாம் சொல்லாததால் இரயாகரன் மாதிரிகள் தாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்வதை இங்கே பாருங்கள்

The Karuna Faction consists of a few hundred, however they are seasoned. Karuna was one of the top three Tiger generals until 2004 when he split with them. He’s Hindu and eastern, the Tiger leadership mostly Christian, northern, low caste (although it’s not about religion.)

http://polizeros.com/2006/06/19/sri-lanka-history-of-the-war/

வடக்குத் தலைமை கீழ்ச்சாதிக் கிறிஸ்தவர்கள்.....!

-/பெயரிலி. said...

அய்யா அநாமதேயம்,
whoever blogs this absurd post,
/ http://polizeros.com/2006/06/19/sri-lanka-history-of-the-war/ / , this is a stupid arguement and factually wrong as far as I read here and there.

There are people, who want portray LTTE as a christain org ("His son's name is Charles Anthony" & "Anton balasingam is a christain" - an idotic arguement), and who want to portray LTTE as a Hindu Bortherns_are_in_trouble (Including Bal Thackery, whose support, as far as I read LTTE politely refused).

And, as far as I know Thayakaran never made and am sure never will make such stupid arguments - whatever his accusations on and issue with LTTE.

Anonymous said...

புலிகள் இயக்கம் யாழ்ப்பாண உயர்சாதியினரான வெள்ளாளரை எதிர்க்கும் கரையாரின் ஆதிக்கம் கொண்டது என்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சு வலைத்தளம்.

Velvettiturai has since time immemorial been a fishing centre and a harbour famous for smuggling and the audacity of the Karaiyar fishing caste, and as an area where the Karaiyars were particularly well able to hold their own against the high caste Vellalas. This gives one some clues to the caste base of the militant groups, and it can be said that the LTTE is not only one of the few militant groups with a mixed-caste Karaiyar dominated rank-and-file base, but also the only one where Karaiyars are the leaders of the movement.

"It was in VVT of the mid-1970s that the pioneers of Sri Lanka Tamil militancy met frequently to organise their cadres, plan their crimes and chart their political course. Velupillai Prabhakaran, the daredevil "kid brother" (thambi) among the pioneers, already with a few murders and bank robberies to his credit, was a native Karaiyar of VVT. So was Selvaduarai Yogachandran (alias Kuttimani) who, as far back as 1973, had been apprehended by the Sri Lanka navy while conveying a boatload of explosives. Gopalasamy Mahendrarajah (alias Mahattaya), liquidated by Prabhakaran in 1994 in the course of a power struggle within the LTTE, was also a Karaiyar from VVT. Many others like Yogaratnam Yogi, Balakumar, Thangadurai, Sathasivam Krishnakumar (alias Kittu) and 'KP' Kumaran Padmanathan (alias Tharmalingam Shanmugam, best known for his highly successful international arms procurement operations), were all of the same caste, and all from Vadamaratchi, the area within which VVT is located.

http://www.defence.lk/new.asp?fname=20070823_05

கரையாரைப் பெரும்பான்மையாகக் கொண்ட புலிகளை வெள்ளாள ஆதிக்க இயக்கமாகக் காட்டுகிறார்கள் இப்பொழுது....

உண்மை என்னவென்றால் முன்னர் புலி இயக்கம் கரையார் இயக்கம் எனக்கூறி ஆங்கிலத்தில் வாசிக்கும் வெள்ளாளரின் ஆதரவைக் குறைக்கும் திட்டத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை விரைவில் மாற்றப்படலாம்.

புலிகளைத் தலித்துக்களுக்கெதிரான இயக்கம் என பாதுகாப்பு அமைச்சும் விரைவில் சொல்லும். அவர்களது நோக்கமெல்லாம் தமிழர் போராட்டத்தின் திரட்சியை மழுங்கடிப்பது ஒன்றே. பிரதேசவாதம், சாதியம் எல்லாம் தமிழனைப் பிரித்தாளும் கருவிகளே..

இப்பொழுது சொல்லுங்கள் மக்கள் விரோதிகள் யாரென....

Anonymous said...

அய்யா பெயரிலி, நான் //சாதியமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றை இணையத்தில் சமர்ப்பிப்பதும் அதனை விவாதங்களின் பின் திருத்தி முழுமை செய்வதும் காலத்தின் தேவை// என்று கோரிய முதலாவது அனாமதேயம். அந்த வகையில் கூகுகள் செய்து என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனைப் பின்னூட்டமாக ஆவணப்படுத்துகிறேன்.

அந்த இணைப்பு விபரங்கள் தவறென்று தெரியாமல் நான் அதனை இடவில்லை. உண்மை நிலையைனை உரியவன் சொல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு அது.

ரயாகரனின் பல விவாதங்கள் காலாவதியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்த இணைப்பிலுள்ளதுபோல் ரயாகரன் சொல்லமாட்டாரெனினும் அவரது பல கருத்துக்கள் அந்த இணைப்பிலுள்ளோர் ஆஆதாரமில்லாமற் சொல்வது போன்ற ஆதாரமில்லாத காலாவதியான கருத்துக்கள் தான்.

-/பெயரிலி. said...

அய்யன்மீர், அதனைப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனாலும், வாசிக்கும் மக்களுக்குக் கொஞ்சம் விரித்துத் தெளிவு தரவே சுட்டினோம்; சுடாதீர் ;-)

Anonymous said...

The LTTE and its immediate supporters claim that they have succeeded in dissolving caste ties and endogamy. This claim cannot be truly tested in wartime conditions; only when normal conditions return can its validity be verified. The probabilities are that the social set-up that existed for several centuries has been eroded fairly extensively.

நூல்:Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth ... By Alfred Jeyaratnam Wilson

//the social set-up that existed for several centuries has been eroded fairly extensively.// உந்தாளுக்கு விளங்கினது நம்ம புரட்சித்தோழர்களுக்கு விளங்கல.

Anonymous said...

ஓர் உரையாடலில் ஒரு பேரினவாதி சொல்வதைப் பாருங்கள்.

//What we have is an insurgency, led by a bloodthirsty, uneducated, low caste, Tamil thug called Prabhakaran. His grudge is not just against the majority Sinhalese - it's against the high caste Tamils as well. The Tamil community is Sri Lanka is heavily caste ridden, much more so than the Sinhalese. In fact, in Jaffna, low caste Tamils were not even allowed to enter Hindu temples. Prabhakaran as well as most of the Tigers belong to low castes among the Tamil community, and they are looked down upon as scum. They have been conducting this murderous campaign for more than two decades, not just against the Sinhalese, but against every decent, high caste Tamil as well. The prominent Tamils they murdered - Neelan Tiruchelvam, Amirthalingam, and recently Lakshman Kadirgamar, were all high caste Tamils, and therefore, hated by the Tigers. The newly appointed Vice-Chancellor of the University of Jaffna, Prof. Ratnajeevan Hoole, a distinguished scientist, was not allowed to take up his appointment and had to flee the country due to death threats from the Tigers. He was also a high caste Tamil.//

http://hotzone.yahoo.com/b/hotzone/blogs5836

கீழ்சாதித் தலை கொண்ட புலிகள் இயக்கமாம்!

சரி எல்லோரும் எல்லா இடங்களிலும் கீழ்சாதியாளென்ச் சொல்லும் பிரபாகரன் தலைவனாகத் தொடர்ந்திருப்பது எவ்வாறு சாத்தியமாகிறது? சிங்களவன் கொல்லும்போது சாதி பார்த்துக் கொல்லாததால்.

சமாதான காலத்தைப் பயன்படுத்தி பிரதேசவாதமும் சாதியமும் முதன்மைப்படுத்தப்படுவது யாருடைய நலன்களைப் பேண?

மக்களின் நலன்களையா?

மக்களெல்லாம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. நீங்கள் இணையப் புரட்சி செய்யுங்கள்.

Sri Rangan said...

//மேலே அனனி ஒருவர் சொன்னது போல
முடி திருத்துபவர்கள் மரணசடங்கு, சாமத்திய வீட்டு.... இன்ன பிற நிகழ்வுகளில் குடிமை தொழில் செய்வதை, வீடுகளுக்கு சென்று முடிதிருத்துவதை இல்லதொழித்தமை.

சலவை தொழில் செய்பவர்கள் குடிமை தொழில், கோயில்களில் வெள்ளை கட்டுதல் போன்ற பணிகளை இல்லது செய்தமை

சாதிபெயரை உச்ச்ரிப்பவர்களுக்கு தண்ட பணம், அவர்கள் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டமை

உதாரணத்துக்கு எங்கள் ஊரில ஒரு ஆசிரியர் நாய் கடித்ததை பற்றி விசாரிக்க "....." வீட்டு நாய் கடித்தது என சொல்லியதற்காக உடனடி தண்ட பணமும், குறிப்பிட்ட நாயின் உரிமையாளர் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டதும்.

சாதியத்தை இல்லதொழிப்பது என்பது தோசையை ஒருபுறம் இருந்தௌ மறுபுறம் பிரட்டி போட்டு செய்வது போன்ற புரட்சியல்ல.//




அனானி அன்பர் கவனத்துக்கு.

//சாதியத்தை இல்லதொழிப்பது என்பது தோசையை ஒருபுறம் இருந்தௌ மறுபுறம் பிரட்டி போட்டு செய்வது போன்ற புரட்சியல்ல.// :-)))))))))

உண்மையா?அடேங்கப்பா,இது எமக்குப் புரியவேயில்லையே! உம்... என்ன அறிவு,என்னே அறிவு அனானி அன்பருக்கு!!!சே,புல்லாரிக்குது...


இத்தகைய(மேற்காணும்) நடவடிக்கைகள் சாதியொழிப்பு எந்த வகையில் அவசியமாகிறது?

இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் செய்வதற்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் தாமாகத-தன்முனைப்பாக செய்து பார்த்திருக்கிறார்கள்.அவர்களோடு தோளோடு தோள் நின்று செயற்பட்டவன் என்ற முறையில் நாம் 1980-1981 ஆம் ஆண்டளவில் ஊர்காவற்றைத் தொகுதி மற்றும் சுண்ணாகம் எனப் பறை மோளம் செத்தவீடுகளுக்கு அடிப்பது, சாதியத்தை நிலைப்படுத்தும் காரணியாக இனம் கண்டு,உயர் வேளாளச் சாதிகளின் செத்தவீடுகளுக்கு இனிமேல் மேளம் அடிக்கப்படாதென்று அனைத்து மேளங்களையும் பறித்துத் தீயிட்டு எரித்தோம்.

சரி,எரித்துவிட்டோம்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் ஒரு நேர வயிற்றுக் என்ன செய்வதென்ற ஆதாரக் கேள்வியின்றிச் செய்தபோது,அந்தோ பெரும் அவலம்.


மேளம் அடித்து அரை வயிறு கால் வயிறு கழுவிய அப்பாவிகள் நம்மைத் துவேசித்தார்கள்.தூற்றானார்கள்.

தீவில் பெரும் சமூக முன்னெடுப்பைச் செய்த பெரியார் கந்தசாமி இதற்காக் கடும் உழைப்பைச் செய்தார்.கைத்தொழில் மாற்றீடாக அமைக்க முனைந்தார்.முடியவில்லை-அது சோறு போடவில்லை.

இறுதியில் அரபு நாடுகளில் வேலை செய்த ஓரிரு இளைஞர்கள் பணம் அனுப்ப ஓரிரு மாதங்கள் ஏனோதானோவென ஓடியது.


பிறகு?


பழைய கதையைத் தொடர்வதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள், இளைஞர்களின் கதையை-சாதியெதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்துத் தாமே மேளங்கட்டி அதனால் வரும் வருமானத்தில் உயிர்வாழும் நிலைக்குச் சென்றார்கள்.அங்கே, இந்த வகை செயற்பாடு எடுபடவில்லை.இதிலிருந்து அநுபவங்கற்க எமக்கு ஓரிரு ஆண்டுகள் எடுத்தன.இன்றும் நாம் இதுகுறித்த பெரும் மனத்தாக்கத்தோடு இருக்கிறோம்.இந் நிலையில் புலிகள் இவற்றையெல்லாம்(வாழ்வாதாரத்துக்கான தொழில்-குலத்தொழிலாக இருப்பினும்) தடுத்து நிறுத்தும்போது என்ன மாற்றீடு செய்தார்கள்?


அவர்களுக்கு பண்ணையில் வேலை கொடுத்தார்களா அல்லது பக்டரியில் வேலை கொடுத்தார்களா?


இந்த வகைக் குரங்குத் தனங்களுக்கு முன் அவர்களின் அடிப்படை வருமானத்துக்கான பொருளாதாரப் பலத்தைச் செய்துகொடுத்த பின்புதாம் இவை சாத்தியப்படலாம்.


எமக்கும் இலங்கைக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பாடலிருந்தே வருகிறது.இன்றைய நிலவரங்களும் புரிந்தே இருக்கிறது.இவையெல்லாம் சாதியழிப்புப் போராட்டம் என்றால் புலிகளுக்கு முன்பே நாம் செய்து பார்த்தவர்கள்.அதன் விளைவுகள் ஓங்கி உதைத்தபோது,சமூதாயத்தில் எத்தகைய மாற்றம் எப்படிச் செய்ய வேண்டுமென்ற புரட்சிகரமான அறிவே உண்மையாக முக்தில் ஓங்கி அறைந்தது.மேற் சொன்ன பட்டியலிடும் வேலைகளை அப்படியே தூக்கிப் பிடிப்பதற்கும் சாதியொழிபுப் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை.

-/பெயரிலி. said...

அநாநி
உங்கள் கடைசி இணைப்பிலே சுட்டியவரின் கருத்துகள் உள்ளடக்கத்திலே தகவற்பிழைகளுடனான அரைலூஸ்தனமான யாரோ ஒருவரின் வெறித்தனமான கருத்துகள் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்த்விடும். இதை எழுதியவருக்கே தெரிந்திருக்கும். ஆனால், இப்படியான சாதித்தனவறியிருப்பவர்கள் எல்லா மொழியிலும் இனங்களிலும் தென்னாசியாவிலே இருக்கிறது சோகம்

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்

உங்களின் பின்னூட்டத்தின் அர்த்தத்தைப் புரிந்தூ கொள்ள முடியவில்லை.

சரி நீங்கள் புரட்சி செய்ததை மறுக்கவில்லை. கருத்துரீதியிலானா மாற்றப்ப்புரட்சியின்றி ஒருநாள் உடைப்புப்புரட்சியின் உடனடிக்குடுதலான விளைவைச் சொல்லியிருக்கிறீர்கள் (கசிப்பு விற்கின்றவர்களை முட்டியும் போத்தலும் உடைச்சு வெருட்டிப்போட்டு, பெரியதவறணைகள் பேசாமலிருக்கவிட்ட அனுபவங்கள் உண்டு. அப்போது, கசிப்பு விற்கும் சனத்தின்ரை "உடைக்காதையுங்கோடா, உதை நம்பி..." என்ற குரலின் அர்த்தம் புரியாதிருந்திருக்கிறது. :-().

சரி புலிகளும் அதே பிழையைத்தான் விட்டிருக்கிறார்கள் என்றே கொள்வோம். ஆனால், இது எதுவும் புலிகள் சாதியத்தை வளர்க்கிறார்கள் என்று நீங்களும் இரயாகரனும் உங்களின் பெயர் சொல்லாமலே ஒத்தி_ஒட்டி போராளியும் போடுகிறதற்கு ஆதரவாகவிருக்காதே? அதுதானே இங்கே பேச்சுக்குரிய பிரச்சனை?

Anonymous said...

கூகிள் செய்து இணையத்தில் ஆங்காங்கே பொறுக்கிய கருத்துக்கள் தொடர்ச்சியாக இடப்பட்டுள்ளன. அவற்றை இட உங்கள் பதிவைப் பயன்படுத்தியமைக்குப் பெயரிலி மன்னிக்க. ஆனால் அவற்றிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். அவரவர் தமக்குக் கிடைக்கும் சிற்சில ஆதாரங்களை வைத்துக் கொண்டு தாம் நினைப்பது சரியென எழுதி வருகிறார்கள். உண்மை நிலை என்ன?

இப்பொழுது எமக்கு முன்னுள்ள் சில கேள்விகளுக்கு வருவோம்...

1. ஈழத்து குறிப்பாக யாழ்ப்பாணத்தை அண்டிய சாதியமைப்பின் கட்டமைப்பு என்ன? இந்திய மைப்பிலிருந்தான் வேறுபாடுகள் என்ன? கிழக்குச் சாதியமைப்பு எத்தகையது?

2. சாதியமைப்பு என்ன அடிப்படையில் இருந்தது? எவ்வாறு தொடரப்பட்டது? இலங்கை சுதந்திரமடைய முன்னர் வரையான காலத்தில் சாதியமைப்பு எத்தகைய மாற்றங்களைக் கண்டது?

3. ஆறுமுகநாவலர் போன்றோர் சாதியம் தொடர்பாகக் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன? அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன?

4. இலங்கையின் சுதந்திரத்தின் முன்னரும் பின்னரும் தமிழ்த்தலைவர்கள் சாதியம் தொடர்பில் எடுத்த நிலைப்பாடு என்ன?

5. இடதுசாரிக் கட்சிகளின் தாக்கம் எத்தகையது? தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதித்துவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதா?

6. சாதியத்துக்கு எதிரான இலக்கிய இயக்கம் எத்தகையது? அதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பங்கு என்ன? டானியல் தொடங்கிய இலக்கியப்போக்கின் வளர்ச்சி, இன்றைய நிலை என்ன?

7. தாழ்த்தப்பட்ட சாதிமக்கள் கோயில் நுழைதல், கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் போன்றன முன்னெடுக்கப்பட்ட காலப் பின்புலங்கள் என்ன? அது ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் எத்தகையன?

8. 70களின் பிற்பகுதியிலும் 80 களிலும் (ஈழப் போராட்டம் தொடங்கிய காலத்தில்) போராளிகள் இணைந்தபோதும் சாதியத்தின் வகிபாகம் என்ன? (இணைவில் சாதிப்பாகுபாடு தாக்கம் செலுத்தியதா?)

9. 90களிலும் பின்னரும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதியம் தொடர்பில் எடுக்கப்படும் நிலைப்பாடு என்ன? அவற்றுக்குச் சமூகத்திலிருந்து கிடைக்கும் எதிர்வினைகள் என்ன?

10. தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் அகதி வாழ்க்கையும் சாதியத்தில் செலுத்தும் தாக்கம் என்ன?

11. புலம் பெயர்வால் தாழ்த்தப்பட்ட மக்களும் பொருளாதாரப் பலம் பெற முடிந்தமை ஈழத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?

12. புலம்பெயர் சூழலில் சாதியத்தின் இன்றைய நிலை என்ன?

இவற்றுக்கும் அப்பால் கேள்விகள் விரியும். இவை தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே நடந்துமுள்ளன. அவற்றை இணையத்துக்கு எடுத்து வருவதும். இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதும் நம்மெல்லோரின் கைகளிலும் தான் இருக்கின்றது.

வெற்றுச் சொற்களுக்கப்பால் ஆதாரங்கள் தருவதும் முன்முடிவுகளுடன் பிரச்சினைகளை அணுகாதிருப்பதும் பயதரலாம். நன்றி.

-ஆர்வக் கோளாறு-

Anonymous said...

பெயரிலி,

நாமெல்லோருக்கும் ஒன்று தெரியும். இரயாகரன்களுக்கும் சிறீரங்கன்களுக்கும் தேவை புலியெதிர்ப்பு ஒன்று மட்டுமே எங்கே என்ன பிழை நடந்தாலும் அதற்கான காரணம் புலிகள்தானென நிறுவுவதே இவர்களது நோக்கம். புலிப் பாசிட்டுக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எப்பொழுதும் நிறுவியே வந்துள்ளார்கள் இவர்கள்.

எதனைப் பேசுகிறோம் என்பதையே மறந்த நிலையில் சிறீரங்கன் வந்து புலிகள் சாதியத்துக்கெதிரான நடவடிக்கைகள் செய்தவிதம் பிழையென்கிறார் சிறீரங்கன். இனி யாராவது அனானி வந்து புலிகள் செய்த மாற்றிடுகளைச் சொன்னால் அதிலும் பிழை கண்டு இன்னமும் சாதியம் தொடர்வதற்கான காரணம் புலிகள் தானென நிறுவுவதில் தொடர்வார்கள்.

எத்தனைவிதமான மக்கள் விரோதிகள்....

//எமக்கும் இலங்கைக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பாடலிருந்தே வருகிறது.// ஆம். நாமும் அவ்வாறேதான் சந்தேகப்படுகிறோம். என்ன தொடர்புகள் சிறீரங்கன்?

புலிக் கோயாபயஸ்களுக்கும் புலியெதிர்ப்புக் கோயாபயஸ்களுக்கும் இடையில் சிக்கி அல்லாடும் அவலம் எம்முடையது. உண்மை நிலை என்ன என்பதற்கான ஆதாரபூர்வமான ஆராய்ச்சிக்கான தேவை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

-ஆர்வக் கோளாறு-

ஈழநாதன்(Eelanathan) said...

சிறீரங்கன் இயக்கத்தின் ஆரம்பகாலம் முதல் யாழ் வெள்ளாள மேட்டுக்குடியினருக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் முறுகல் இருந்த வண்ணமே உள்ளது அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஆனால் இயக்கம் யாழ் மாவட்டத்தைக் கட்டுப்பாடுக்குள் வைத்திருந்த 1990- 1995 காலத்தில் என்ன நடந்தது என்று யார் யாரோ வாய்வழி கேட்டு நீங்கள் உள்வாங்கியிருக்கப்போவதில்லை.எனக்குத் தெரிந்து சாதிக் கலவரங்களுக்குப் பேர்போன பல கோவிற் கதவுகள் விடுதலைப் புலிகளால் எல்லாச் சாதியினருக்குமாக பலவந்தமாகத் திறந்து விடப்பட்டிருக்கின்றன-உடனேயே வழக்கம் போல கோவில் கதவைத் திறந்து விட்டால் சாதிக்கு விடிவு வந்துவிடுமா என்று வரிந்து கட்டாதீர்கள் எல்லாமே அங்கேதான் ஆரம்பிக்கின்றது என்பதற்காக கோவிலை உதாரணம் சொல்கிறேன்.அதே மாதிரி சாதிமாறிக் காதலித்து திருமணம் செய்த இளவயதினருக்கு உங்கள் காலத்தில் என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதை மறந்திருக்கமாட்டீர்கள் நானறிய விடுதலைப் புலிகளின் காவல்துறை இவ்வாறான சாதிமாறிய கல்யாணங்களுக்கு பாதுகாவலர்களாக நின்றிருக்கிறது காதலர்களைச் சேர்த்துவைக்கும் இந்தக் குற்றத்திற்காகவே வடமராட்சியில் இருந்த காவல்துறை அலுவலகத்தின் பெயர்ப்பலகையை மேட்டுக்குடியினர் சிலர் இரவோடிரவாக காதல்துறை என்று மாற்றியெழுதியதையும் பார்த்தவன் நான்.விடுதலைப்புலிகள் மீதான எனது விமர்சனம் சாதி பற்றிய தங்களது கொள்கையை அவர்கள் தெளிவாக எழுத்தில் முன்வைக்கவில்லை அதாவது சித்தாந்த ரீதியில் போராடவில்லை வழமை போல வல்லடியின் மூலம் அதனை ஒடுக்கி விடலாம் என முயற்சித்திருக்கிறார்கள்.அன்றே அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தால் ரயாகரன் சிறீரங்கன் போன்ற காகிதப் புலிகளின் வாயை இலகுவாக அடைத்திருக்கலாமல்லவா?

வசந்தன்(Vasanthan) said...

ஈழநாதன், நீரும் விசயம் விளங்காமல் கதைச்சுக்கொண்டிருக்கிறீர்.
புலிகள் தமது அதிகாரபூர் ஏடான 'விடுதலைப்புலிகளில்' சாதி பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பை அற்புதன் தனது வலைப்பதிவில் இட்டிருந்தார்.
யாராவது சுட்டி கொடுங்கப்பா.
(கொழுவி, கொண்டோடி வாறன் எண்டிட்டு எங்கயப்பா போனீர்? கொண்டோடியிட்டயாவது குடுத்தனுப்பும்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிரங்கன்,
நீங்கள் சொல்வது போல புலிகள் 'மாற்று' ஏற்பாடின்றி தான்தோன்றித்தனமாக உந்த விளையாட்டுக்களைச் செய்யவில்லை.
வீடுகளுக்குச் சென்று முடிவெட்டுவதைத் தடுத்ததன் மூலம் பாதிப்படைந்தவர்கள் மிகக்குறைவே. 'சிகை அலங்கரிப்பு நிலையம்' என அழைக்கப்படும் சலூன் வைத்திராதவர்கள் மட்டுமே பாதிப்படைந்தார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கப்பட்டது.

முன்பு தங்களுக்குத் தாங்களே முடிவெட்டிக்கொண்டிருந்த புலிகள் தமது உறுப்பினர்களுக்குரிய முடிதிருத்தும் வேலைக்கு பலரை நியமித்தார்கள். அதுவும் பொதுவான கடையொன்றை நிறுவி அங்குதான் வேலை. (புலிகள், அம்பட்டனை அம்பட்டனாகவே இருக்கவிட்டார்கள் என்று அடுத்த வாதத்தோடு வருவீர்கள் என நம்புகிறேன்)

இப்போதெல்லாம் அனைத்துத் தொழில்களுமே அங்கு நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. சீவல் தொழிலாளிக்கு 55 வயதானதும் அவர் இறக்கும்வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் மாதம் பன்னிரண்டாயிரத்துக்கு (அப்போது அது ஒரு பட்டதாரி ஆசிரியரின் சம்பளத்தைவிட சில ஆயிரங்கள் அதிகம்) சீவல்தொழில் பயிற்றுவிக்கும் திட்டமும் தொடர் வேலைவாய்ப்புத் திட்டமும் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கத்தில் இயந்திரத்தின் உதவியோடு கள்ளுற்பத்தி செய்யும் பொறிமுறை பற்றிய ஆராய்ச்சிகளில் பெருந்தொகை செலவழித்தார்கள். இதுபற்றிய அறிவிப்புக்கள் வேண்டுகைகள் மக்களிடம் வெளிப்படையாக கொண்போகப்பட்டன. இதை ஏன் சொல்கிறேனென்றால் சீவற்றொழிலை சாதிதாண்டிய தொழிலாக மாற்ற அவர்கள் முயன்றார்கள். உயர்ந்தபட்ச கொடுப்பனவுகளை உறுதிப்படுத்துவதில் அவர்கள் முன்னின்றார்கள்.

Anonymous said...

இரண்டாவதா அனனி பின்னூட்டம் பொட்ட அதே அனனி.....

சிறிரங்கன் சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாக சொல்வதென்றால்

விழுந்த பாட்டுக்கு குறிசுடுவதில் நீங்கள் வல்லவர்/ நல்லவர் :)

வசந்தன் உங்கள் கேள்விக்கு பதில் தந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு அங்கும் குறி சுட ஏது அப்பிடாமலா போய்விடும் :)

சீவல் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வசந்தன் சொன்ன வழிகளோடு, சிவல் தொழில் சார் உற்பத்தியான பனம் சீனி, பனம் கற்கண்டு, மற்றும் பனை சார் கைப்பணி பொருட்களையும் அது தொடர்பான கற்கை நெறிகளையும் ஊக்குவித்து வந்தார்கள்.

பல சந்தர்பங்களில் சிற்றூர் அவை என அந்த நேரங்களில் கிராமம் தோறும் அமைக்கப்பட்ட குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுபவர்களையே தலைவர்களாக அல்லது முக்கிய போறுப்புக்களை வகிக்க வைத்தார்கள்.
இவை உயர் சாதி என சொல்லபட்ட பலருக்கு விரும்ப தகாததாக இருந்தாலும் அவர்களும் அந்த சிற்றூர் அவைகளின் செய்றபாடுகளில் பங்குபற்றியே வந்தார்கள்.

Anonymous said...

விடுதலைப்புலிகள் - தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடு.
இதழ் 13 (15-4-1990)

ஆசிரியர் தலையங்கத்திலிருந்து:

//
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே!
இது உங்கள் இயக்கம்.

இது உங்கள் பிள்ளைகளின் இரத்தத்தால் வளக்கப்பட்ட ஓர் மாபெரும் இயக்கம்.

இந்த இயக்கத்தில், பழைய சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதியவெறி, பிரதேச் வேறுபாடு, தமிழ்-முஸ்லீம் என்ற பேதம், பெண் ஒடுக்குமுறை இவற்றில் ஊறியவர்களுக்கு இடமிருக்க முடியாது!
//

யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலைபெற்றதைத் தொடர்ந்து வெளியான முதல் விடுதலைப்புலிகள் ஏட்டின் இவ் ஆசிரியத் தலையங்கத்தில் மூன்று இடங்களில் சாதியத்துக்கெதிரான விடுதலைப் புலிகளின் கருத்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப்புலிகளின் அனைத்து இதழ்களையும் வாசிக்க viduthalaipulikax.com க்குச் செல்க

Anonymous said...

சோசலிசம் பேசிய இயக்கங்கள் போஸ்டர்களோடு தங்களது புரட்சிகரக் கொள்ளைகளை நிறுத்திக்கொள்ள, தங்கள்காலத்தில் புலிகள் அதனை முடிந்தவரை சிறப்பாகவே செய்தனர். இது சாதீயம், தொழில் முனைவு, பொருளாதாரம் சார்ந்து, எனப்பலவகைகளில் நடைபெற்றது.
குறிப்பாக குடிமைத் தொழில்முறைமைகளை இல்லாமற் செய்வதில்அவர்கள் ஆற்றிய பணி, இதுவரையில் எந்த அரசியல்சார் அமைப்புக்களும் எடுக்காத முன் முயற்சி. அதெல்லாம் நிச்சயம் சிறிரங்கனோ, இரயாகரனோ, பேசமாட்டார்கள். ஏனென்றால்....

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வசந்தன், சீவல் தொழில் என்றால் என்னவென்று விளக்கம் சொல்ல முடியுமா?

(எங்கள் வட்டார வழக்கில் சீவக்கட்டை என்று ஒன்றுண்டு - 'விளக்குமாறு' இன்னொரு பெயர். அதனோடு தொடர்புடைய துப்புரவுத் தொழிலா?
தவறாய் இருப்பின் மன்னிக்க!)

ஈழநாதன்(Eelanathan) said...

வசந்தன் நான் விசயம் தெரியாமல் கதைக்கிறன் என்றது உண்மை.விடுதலைப் புலிகள் பத்திரிகையை தொடர்ச்சியாக வாசித்ததில்லை(அது மட்டுமல்ல புலிகளுக்கு ஆதரவான வெளியீடுகளுக்கு வீட்டில் தடை இருந்தது அதனால் வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்தது மட்டுமே)ஆகவே விடுதலைப் புலிகள் சாதி பற்றி தெளிவாக எழுதவில்லை என்ற எனது கருத்து தவறாகவும் இருக்கலாம் சாதியை ஒழிப்பதில் இதை விடவும் தாங்கள் தீவிரம் காட்டினால் அதுவே இயக்கத்துக்குள் பிளவை உண்டுபண்ணி இன விடுதலைப் போராட்டமானது வெறும் சாதியெதிர்ப்புப் போராட்டமாக பரிணாமம் அடையக் கூடிய சாத்தியம் இருப்பதால் முள்ளில் போட்ட சேலையை எடுப்பது போன்று மெல்ல மெல்லத் தான் எமது சமூகத்திலிருந்து சாதியை உருவியெடுக்கவேண்டும் என்று எங்கள் பாடசாலைக்கு விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு வந்திருந்த அரசியற் துறைப் பொறுப்பாளர்(இளம்பரிதியா என்று சந்தேகம் நினைவில்லை) சொன்னபோது ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த எனக்கே ஐயோ முள்ளிலை போட்ட சேலையை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என விளங்கியிருந்தது இவ்வளவு சித்தாந்தம் வேதாந்தம் படித்த இவர்களுக்கு விளங்கவில்லை :(

இயக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினரை அவர்கள் தொழிலைச் செய்யவிடாமற் செய்ததன் மூலம் என்ன சாதித்தார்கள் என்கிறார் சிறீரங்கன்.அப்படியென்றால் மாவிட்டபுரம் கோவிலுக்குள் நுழைந்துதான் ஆகவேண்டும் என்று ஈழத்துப் பஞ்சமர்களுக்கு என்ன கட்டாயம்?அந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் செத்துப் போனார்கள் அன்றைய முற்போக்கு இயக்கத்தினரும் மார்க்சியர்களும் (சிறீரங்கன் உட்பட)வெறும் குறியீட்டுப் போராட்டத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்?

Anonymous said...

சீவல்தொழில் என்றால் பனை, தென்னையிலே கள் உற்பத்தி செய்வதோடு சம்பந்தப்பட தொழில் என்ற அர்த்தம். கள்ளினை முதலிலே நீராக வடியவிடுவதற்கு சீவிவிடுதல் வேண்டும். அதனாலேதான் சீவல் தொழில் எனப்படும்.

தென்னை ஈர்க்கில்களாலே கட்டிச் செய்யப்படும் துடைப்பான் விளக்குமாறு என்றே இலங்கையிலும் அழைக்கப்படுகிறது.