Tuesday, October 09, 2007

முடிச்சுப் போடும் இடுகை

அரைகுறை - 15

வவ்வால் என் முன் பதிவிலிட்ட பின்னூட்டம் கொஞ்சம் நாக்கை வெளியிழுத்துக் கன்னத்தைத் தொடச் செய்யும் பின்னூட்டமாகத்தான் இருக்கிறது. "பாலிலே எதேச்சையாக விழுந்த ஒரு சிறுதுளி நஞ்சிருப்பதாலேமட்டும், விளையும் கேடென்ன?" என்பதுபோலவும் "'தட்டுக்கழுவி, ஓர் அப்பனுக்குப் பிறந்தவனா?' என்று கேட்டால் பெரிது படுத்தப்படவேண்டிய விடயங்களா?" என்பது போலவும் அவர் எழுதியதை வாசிக்கும்போது புரிகின்றது. ஒருவரின் அச்சிலசுக்குதி இன்னொருவருக்கில்லை என்பதுதான் இதன் வழியறிதல்; மேலும், "ஆணைத் தாக்குவதாக எண்ணிக்கொண்டு பெண்ணையே (பெண்ணாயிருந்தும்) தாக்குவதேன்?" என்றதன் கேள்வி அவரிடம் எழுபடவில்லையோ தெரியவில்லை. அவர் எழுதியதை அவரும் ஒருமுறை வாசித்துப் பார்த்திருப்பாரோவென்று எனக்குச் சந்தேகமாகவிருக்கிறது. அவரைக் கடிவதாக இதை நான் சொல்லவில்லை. உண்மையிலேயே அப்படியாகத்தான் தோன்றுகிறது. தவறாக எடுக்கமாட்டாரென்று நம்புகிறேன். பதில் எழுதப்போனால், இன்னொரு பெரும் 'வழவழ கொழகொழ' பாயாசப்பதிவாகத்தான் போகும். இதுவரைக்கும் புளிச்சதை வச்சு ஊத்தின தோசைகளே போதும் என்றளவு ஆயாசமே மிஞ்சியிருக்கின்றது. ஒன்றைமட்டும் சொல்லவேண்டும். உலகநிகவுகள் குறித்த பதிவுகள் அவ்வப்போது அங்குமிங்கும் எழுதியதுண்டு. ஆனால், இந்தியநிகழ்வுகள் குறித்து - எனக்கும் ஒன்றரைத்துட்டு அபிப்பிராயங்கள் இருந்தபோதுங்கூட- இலங்கை சம்பந்தப்படாத எதிலும் நான் அநாவசியமாக எழுதத் தலைப்படுவதில்லை. அஃது அநாவசியமான வார்த்தைப்போராகி புலி-எலி-கிலி-களி-சளி-பழி-மழி என்றுதான் தள்ளப்பட்டுப்போய் முடியுமென்பதாலே:-)

சாத்திரிக்கு நானிட்ட பின்னூட்டமும் சரி, இங்கே என் பதிவிலே எழுதியதும் சரி, அவர் தமிழச்சியினைத் தம்பி என்று விளித்தெழுதியதன்பின்னான கயமைத்தனமும் தமிழச்சி தந்த அவரது எந்த ஈழத்து இயக்கமும் அரசியலும் சாராத நிலை பற்றிய விளக்கத்தையும் காதுகொடுத்துக் கேட்காமலே தமிழச்சி் தான் நினைப்பதுபோலவே யாரோடு கூட்டுச்சேர்வது என்பவற்றிலே செயற்பட்டிருக்கவேண்டுமென்ற தொனியுமே; அதைக் கடிவதாகவே அவருக்குப் பின்னூட்டமிட்டேன்; என் பதிவிலும் எழுதினேன். மிகுதிப்படி தமிழச்சி-சாத்திரி-தொலைபேசி எண்கள்-ஏற்காமை-பதிவிலேகூறாமை இவை குறித்து எனக்கு எதுவும் தெரியாது; அவை குறித்த மேலதிக ஈடுபாடுமில்லை. தமிழச்சி அப்படியாகத்தான் ஒரு பக்கம் சாய்ந்துதான் அரசியலிலே செயற்படுகின்றார் என்றொரு கதைக்கு வைத்தாலுங்கூட, அப்படியாக அவர் செயற்படக்கூடாதென்று சொல்வதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமையிருக்கின்றது? அவரின் செயற்பாடு, அவரின் சுதந்திரம், அவர் ஒத்தியங்கமாட்டாரென்றால், சபேசன்போலவே மாற்றமைப்பு ஏற்படுத்தி இயங்குங்களேன்.

சத்தியக்கடதாசி+இரயாகரன் ஆதரவாகத் தோன்றுகின்றாரோ என்று எண்ணிக்கொண்டு, தமிழச்சியைப் போட்டுத் தொல்லைப்படுத்தும் ஈழத்தமிழுருவேறிகளின் அடாவடித்தனத்துக்கும் தமிழச்சி வலை இரசிகர் மன்றத்தாரின் போகிற போக்கிலே தேநீருக்குள் சொட்டாய்ச் சயனைட் ஊற்றித் தரும் ஈழ-எலியெதிர்ப்புக்க்காழ்ப்புத்தனத்துக்கும் -இன்றைக்குக் காலையிலே பார்க்கும்போது- பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.

தமிழச்சி, 'தமிழ்மணம் நீக்கவேண்டிய இடுகைகள் இப்போது இரண்டு', 'கொளத்தூர் மணி தமிழச்சிக்கு ஆதரவாக விட்ட அறிக்கை' இப்படியாகக் காட்டும் "பில்டப்பு"கள் வேறு தனிப்பட்ட விதத்திலே எனக்கு எரிச்சலைத்தான் ஊட்டுகின்றன. [சாத்திரியின் 'தம்பி தமிழச்சி' இடுகை தமிழ்மணத்திலே இல்லை என்பதோ, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் (அல்லாதவர்கள்) ஆனவர்களிலே நான் அவர்களின் உறுதியான கொள்கைப்பிடிப்புக்காக மதிப்புக் கொண்டவர்களிலே கொளத்தூர் மணி மிகவும் முக்கியமானவர் என்பதெல்லாம் இங்கே சம்பந்தப்படத்தேவையில்லை] கொளத்தூர் மணி இது சம்பந்த ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறாரா என்றும் தெரியவில்லை; அப்படியானாலுங்கூட, "அவர் எனக்கு ஆதரவாகக் கருத்தைத் தெரிவித்தார்" என்று தமிழச்சி சொல்லியிருந்தால் ஆவலுடன் கேட்கத் தூண்டியிருக்கக்கூடியது, "தமிழச்சிக்கு ஆதரவாகக் கொளத்தூர்மணி அறிக்கை" என்று கூவும்போது, "அட, அதுக்கென்ன? சும்மா (பிலிம்) ஷோ காட்டாதீங்க" என்ற மாதிரியாகவே சலித்துக்கொள்ளவைக்கிறது.

''பிரஞ்சு-தலித்' மகாநாட்டுக்கு டக்ளஸ் தேவானந்தா இலட்சம் கொடுத்தார்', 'பெரியார் தமிழ் எதிரி' என்று அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைவிடும் ஈழத்தமிழர்கள் சிலரின் கோணங்கித்தனத்துக்குக் குறைந்ததாகத் தெரியவில்லை, தமிழச்சியின் 'நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று சொன்ன பிரெஞ்சின் இயக்கத்தலைமை எனக்கு இப்படியானவர்களின் நடத்தைக்கும் போன் போட்டுக் கருத்தினைச் சொல்லவேண்டும்' என்று நிற்பது. தலைமைப்பீடங்கள் சொல்லியா தொண்டர்கள் துண்டை எல்லாவிடங்களிலும் விரித்துத் தாண்டிச் செயற்படுகின்றார்கள்? கொள்கைப்போராட்டத்தன்மைக்கும் குழந்தைப்பிள்ளைத்தன்மைக்குமிடையிலே தடார் தடாரென்று பதிவுக்குப் பதிவு, பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் பாய்ந்து பாய்ந்து ஆடலோட்ட மின்னோட்டமாக, தமிழிச்சி உணர்வு மாறித் தட்டச்சிடுகின்றாரோ என்று சந்தேகமாகவிருக்கின்றது.

ஐம்பது எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெரியார் சொன்னதை ஆய்வுக்குள்ளாக்கி, காலத்துக்கொவ்வியதைத் தேர்ந்தெடுத்தோ, காலத்துக்கொப்ப உருமாற்றாமலோ இப்போது பெரியாரையும் திருவுருவாக்கி, மந்திரமாக அப்படியே உச்சரிப்பதிலே எனக்கு நம்பிக்கையில்லை. பெரியாரின் அநேக கருத்துகளை அவர் சொன்ன காலத்தினை எண்ணி, அவற்றின் புதுமைக்கும் புரட்சித்தன்மைக்குமாக வியந்து கொண்டு போகலாம் (தமிழகத்திலே பாரதியைக் காலத்தின் முன்னோடி என்று வியக்கும் பலருக்குப் பெரியாரை அப்படியாகச் சொன்னால், ஒவ்வாதிருப்பது ஏன் என்று இன்னமும் எனக்குப் புரியவிலை); ஆனால், இன்றைக்கு எனக்கு அவரின் கருத்துகளை அப்படியே வைத்துக் கொண்டு செயற்படவேண்டிய அவசியமுமில்லை. அதேநேரத்திலே, பெரியாரைப் பற்றித் தெரியாத ஈழத்தமிழர்கள் வாயை மூடிக்கொண்டாவதிருக்கவேண்டும் என்று நிச்சயமாகச் சில குருவிப்பதிவுகளை வாசிக்கும்போது தோன்றுகிறது; அப்படியான பதிவுகளிலே, இந்துமுன்னணி குண்டாக்கள் மட்டத்துக்கு இறங்கி, "பெரியார் தமிழுக்கு எதிரி", "பெரியார் தொண்ணூறு வயதிலே முப்பது வயசுப்பெண்ணைக் கட்டினார்", "பிள்ளையார் சிலையை உடைத்தது மட்டுமே பெரியாரின் சாதனை" போன்ற எடுத்தேன்~கவிழ்த்தேன் வரிகளைப் போடும்போது, தூக்கினேன்~ உதைத்தேன் என்று முதுகிலே இரண்டு வரி காலாலே போடத்தான் உத்வேகம் வருகிறது. சத்தியக்கடதாசியையும் இரயாகரனையும் எதிர்ப்பதானால், போய் நேரடியாக அவர்களை எதிருங்களேன்; எதுக்கு அரையும் குறையுமாக பெரியார் தாடியைப் பிடித்திழுக்கின்றீர்கள்?

மறுபுறத்திலே, பிரச்சனையின் வீரியம், நூற்கண்டுச்சிக்கற்றன்மையை உணர்ந்து கொள்ளாது, நேரம் பிறழ்ந்த நகைச்சுவையுணர்வுடன் "தமிழச்சிக்கு ஆதரவாக உதைப்பேன், அடிப்பேன்" என்று காலைத்தூக்கி, கையைச் சுழற்றி, கராட்டே போஸ் கொடுத்து ஓசை கிளப்பும் 'பேன்' பெரியார்ப்பதிவர்களுக்கும் முன்னர்கூறியது மாதிரியான பெரியாரைப்புரியா ஈழப்பதிவுக்குஞ்சுகளுக்கும் அவற்றைச் செய்யக் 'கருத்துச்சுதந்திரம்' இருக்கின்றதென்பது நடைமுறையின் கொடுமையென்றாலும், அது சகித்துப்போகவேண்டிய கொடுமை.

சுகுமாரன், கொளத்தூர் மணியையெல்லாம் 'சத்தியக்கடதாசி' ஷோபா சக்தியின் ஆதரவாளர்கள்போலக் கொண்டுபோய் -இப்பிரச்சனையின் & ஆட்களின் பின்புலம் அறியாமல் வாசிப்பவர்களுக்கு- வலையிலே மாயத்தோற்றத்தினை ஆக்கியிருப்பது காலத்தின் விகாரமென்றால், அச்சுழியிழுந்தோடிய ஓட்டத்திற்கு எவர், எது காரணமென்று எனக்குத் தெரியவில்லை. தமிழச்சியோடு சுரண்டிக்கொண்டிருக்கும் புலிவால்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் ஈழத்தமிழர்களின் அறியாமையும் பொறுமையின்மையுமா அல்லது தமிழ்நாட்டிலிருப்பவர்களுக்கு ஈழத்தமிழ்ப்போராட்டம் என்பது ஈழப்பஞ்சமருக்கெதிரான ('தலித்' என்ற பதத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் நுண்ணரசியல் தம் ஈழத்துத்தலித் சிறுகதைத்தொகுப்புக்கு அ. மார்க்ஸினை முன்னுரை எழுத வைக்கும் சத்தியக்கடதாசிக்காரருக்குத்தான் வரும்) போராட்டம் என்பது போல தமிழகத்தினருக்கு நிறுத்தியிருக்கும் புத்திசாலித்தனமாவென்று தெரியவில்லை. அதற்குப் பால் வார்ப்பதுபோல, புலி ஆதரவாளர்களின் ஈழத்திலே சாதிப்பாகுபாடே இப்போது இல்லை என்ற "ஈரானிலே தற்ப்பாற்புணர்ச்சியாளர்களே இல்லை" வகை அறிக்கைகள்.

இத்தனைக்கும் இரயாகரனோ, சத்தியக்கடதாசிக்காரர்களோ மேற்கொண்டு எவ்விதத்திலும் வாயைத் திறக்காமலிருப்பது, எரிகிற வீட்டிலே புடுங்கிற கொள்ளியும் இலாபமெனும் செயலன்றி வேறென்னவென்பது?

இவற்றைத்தான் விடுவோம்; இவையெதுவுமே புரிந்து கொள்ளாது, செந்தோழர் தியாகு வெளிப்படுத்தும் மார்க்ஸியப்போராட்ட வரி அறிக்கைகளும் கேள்விகளும் பெருந்தோழர் இரயாகரனே பரவாயில்லை என்றாக்கிவிடுகிறது (இத்தனை குளறுபடிக்குள்ளேயும் கொஞ்சம் அழுத்ததைக் குறைத்து முறுவலைத் தருவது தோழர் தியாகுவின் பகுதிநேர மார்க்ஸியப்போராளிக்கீச்சுக்காட்டற்பின்னூட்டமே என்றால் மிகையாகாது)

தமிழ்நதி சொன்னதிலே நிச்சயமாக ஒரு வலுத்த யதார்த்தமிருக்கின்றது. கோபத்திலே எல்லோருக்கும் சறுகுவது வழக்கமே. எத்துணை விழிப்புணர்வு, புரட்சிக்கருத்து என்று பேசிக்கொண்டிருப்பவர்களுக்குள்ளேயும் அறியாமலே கடத்தபட்ட அழுக்குகள் உள்ளிருப்பது தடுக்கமுடியாதது. இந்நிலை எல்லோருக்கும் உண்டு. வெளிவரும் சந்தர்ப்பம் கிடைக்கையிலேயே தெரியும். இஃது எனக்கும் பொருந்தும் எவருக்கும் பொருந்தும். அவ்வகையிலேதான் தமிழச்சியின் வரிகள் வந்திருக்கமுடியும். அதனை அவர் உணர்ந்தால் சரி; அவ்வரிகளி்லே என்ன அத்துணை காட்டமாகவிருக்கின்றது என்று வவ்வால் போல அவர் கேட்டுவிடமாட்டாரென்று நம்பிக்கைதான்.

குறைந்த பட்சப்புரிந்துணர்வுக்கு உள்ளே இடமும் நிதானமாக மற்றவர்களின் குரலைக் கேட்பதற்குப் பொழுதும் ஒதுக்க வசதிப்படாதவர்களுக்கு இதிலே இனிமேல் சொல்வதற்கு என்னவுண்டு? எக்கேடும் பட்டுத் தொலையுங்கள்.

இதனைப் புரிந்துகொண்டு இரு பக்கத்தாரும் நடக்காவிட்டால்,

1. நட்டம் களத்திலே குதித்துக் குதித்து, "ஹா! ஹா! ஹதம்! ஹதம்!" என்று அறை(அரை?)கூவும் சம்பந்தப்பட்ட இரு சாராருக்குமே

2. போரின் எச்சத்து இலாபத்தை அந்தப்பக்கம் பார்ப்பனியப்பின்னூட்ட வாலாக்களும் இந்தப்பக்கம் புலியெதிர்ப்புக்கும்பலும் பிரித்துக்கொண்டு போகும். இது சிண்டைப் பிடித்துச் சண்டைபோடும் இரு பக்கத்தவர்களுக்கும் உவப்பென்றால், பதிவுப்போரிலே சம்பந்தப்படாத பார்வையாளர் நாம் என்ன சொல்லவிருக்கிறது? நீங்கள் சொல்லவும் புரிந்து அறியாத குழந்தைகளுமல்ல; நாங்கள் சொல்லும் பக்குவம் வாய்ந்த பெரியோருமல்லர்.

தமிழச்சி - சாத்திரி ஒப்பந்தமின்மை தொடர்ந்தால் தொடரட்டும். ஆனால், நான் இச்சுயநியமிப்புத்தான்தோன்றிச்சமாதானத்தூதுவர் முயற்சியிலிருந்து மனந்தளர்ந்து சோர்வுடன் விலகிக்கொள்கிறேன்.

இந்தப்பிரச்சனையைத் தீர்க்க, இனி ஈழத்தில் ஐபிகேப்பை வாய்மூடாமலே ஆதரிக்கும் யாரேனும் முகமூடி ஆண்டவரே வந்து மாயாவதி பெரியார் சிலையை எழுப்பியதுபற்றிக் கண்மூடித்தனமாகக் கிண்டல் செய்து தாக்கும் பதிவு போட்டாலே வழியுண்டு :-( [நம் நண்பர் சர்வேசன் வந்து, பிரெஞ்சுப்புரட்சியிலே முக்கியமான பதம், 1. புரட்சி, 2. தோழர், 3. புலி, 4. பெரியார் என்று கொண்டையை மட்டும் விட்டுவிட்டு வாக்கெடுப்பு நடத்தினாலும், வழி திறக்கலாமென்று யாரும் கொலைவெறியுடன் பின்னூட்ட முன்னால் நானே முன்னூட்டிவிடுகிறேன் :-)]

(வலைப்பதிவில் இவ்விவகாரம் தொடர்பான என் கருத்து இவ்விடுகையுடன்) முற்றும்.

அநாநி சொன்னதைக் கவனிக்கப்போகிறேன். (அப்படியாகச் செய்துகொண்டிருப்பதாகத்தான் போன ஒன்றரை மாதங்களாக நெற்றுப்பக்கம் நாற்று நடவோ, களை பிடுங்கவோ, அங்கு விளையாடும் எந்தக்குலப்பெண்களுக்கும் மஞ்சள் அரைத்துக்கொடுக்கவோ, மாமன் மச்சானோடு பஞ்சாயத்துக்கூட்டவோ போவதேயில்லையென்று என்று எனக்கும் என் மேலதிகாரிக்கும் வாரச்சுற்றறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறேன் என்பது ஒரு பக்கமிருக்கட்டும் :-))

14 comments:

DJ said...

/ஐம்பது எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெரியார் சொன்னதை ஆய்வுக்குள்ளாக்கி, காலத்துக்கொவ்வியதைத் தேர்ந்தெடுத்தோ, காலத்துக்கொப்ப உருமாற்றாமலோ இப்போது பெரியாரையும் திருவுருவாக்கி, மந்திரமாக அப்படியே உச்சரிப்பதிலே எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பெரியாரைப் பற்றித் தெரியாத ஈழத்தமிழர்கள் வாயை மூடிக்கொண்டாவதிருக்கவேண்டும் என்று நிச்சயமாகச் சில குருவிப்பதிவுகளை வாசிக்கும்போது தோன்றுகிறது; அப்படியான பதிவுகளிலே, இந்துமுன்னணி குண்டாக்கள் மட்டத்துக்கு இறங்கி, "பெரியார் தமிழுக்கு எதிரி", "பெரியார் தொண்ணூறு வயதிலே முப்பது வயசுப்பெண்ணைக் கட்டினார்" போன்ற எடுத்தேன் கவிழ்த்தேன் வரிகளைப் போடும்போது, தூக்கினேன் உதைத்தேன் என்று முதுகிலே இரண்டு வரி போடத்தான் உத்வேகம் வருகிறது. சத்தியக்கடதாசியையும் இரயாகரனையும் எதிர்ப்பதானால், போய் அவர்களை எதிருங்களேன்; எதுக்கு அரையும் குறையுமாக பெரியார் தாடியைப் பிடித்திழுக்கின்றீர்கள்./
இதேயேதான் நானும் சொல்லவிரும்பியிருந்தேன். இப்பதிவை அவசரமாய் வாசித்து அவசரமாய் எழுதுகின்றேன். மற்றவை பின்பு.

Anonymous said...

பொருத்தமான பதிவு. ஆனால் எத்தினை பேருக்கு விளங்குமோ தெரியல. சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சி வசப்படாமல் மூளையைப் பாவித்தால் நல்லது. நட்டம் தமிழர்களுக்கே. இவ்வளவு முட்டாள்கள் வலைப்பதிகிறார்கள் என்பது கவலையளிக்குறது.

தமிழிச்சி தன் சொந்தப் பதிவுகளையும் பெரியாரின் கருத்துக்களையும் வெவ்வேறு வலைப்பதிவுகளில் இடுவது நல்லது. அவையிரண்டும் ஒன்றாக வருவது பெரியாருக்கு அவமானம்.

இன்ஷா அல்லா, நீங்கள் அனானிக் கருத்துக்களை மதித்து மேலதிகாரிக் கொடுத்த சுற்றறிக்கைப் பிரகாரம் நடக்க வாழ்த்துக்கள்.

சின்னக்குட்டி said...

//தமிழச்சிகூட, 'தமிழ்மணம் நீக்கவேண்டிய இடுகைகள் இப்போது இரண்டு', 'கொளத்தூர் மணி தமிழச்சிக்கு ஆதரவாக விட்ட அறிக்கை' இப்படியாகக் காட்டும் பில்டப்புகள் வேறு தனிப்பட்ட விதத்திலே எனக்கு எரிச்சலைத்தான் ஊட்டுகின்றன//

பெயரிலி நீங்கள் சொல்லுறது முற்றிலும் உண்மை

இது எங்கடை ஊர் வழிய கைபாட் காட்டிறது என்று சொல்லுவினம்

அதே நேரத்தில் தமிழச்சி தம்பிக்கு என்ற பதிவுக்கும் எனது எதிர்ப்பை தெரிவித்துக்கிறேன்

Anonymous said...

//சில குருவிப்பதிவுகளை வாசிக்கும்போது தோன்றுகிறது; அப்படியான பதிவுகளிலே, இந்துமுன்னணி குண்டாக்கள் மட்டத்துக்கு இறங்கி//

யாழ் இ----தில் நீண்ட காலமாக இருந்து நீங்கின சனி தோசம் செவ்வாய் தோசம் தமிழ் மணத்திற்க்கும் தொற்றும் அறிகுறிகள் தோன்றுகின்றன. -;))

குழைக்காட்டான் said...

பெயரிலி இந்த பதிவு தேவையான முக்கியமான பதிவாக இருந்த போதும், முதல் எழுதிய 2-3 பதிவுகளில் வாசிக்கும் போது வரக்கூடிய தெளிவு இதை வாசிக்கும் போது எல்லாருக்கும் கிடைக்காது. அதாவது நான் சொல்ல வாறது என்ன எண்டா இந்த பதிவில் உங்கள் எழுத்து நடை(எனக்கு புரிகிறது ஆனால்)அவசர கோலத்தில் அங்கும் இங்கும் ஆடு குழை கடிப்பது போல் கடித்துவிட்டு பதிவெழுதும் பலருக்கு முதல் வாசிப்பில் விளங்காது. அதை 2 ஆம் முறை வாசித்து புரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் கண்ட பாட்டுக்கு விளக்கம் எடுத்து பதில் பதிவை எழுத சாத்தியம் அதிகம்.


ஈழத்து சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல், அல்லது போதுமான அறிவற்று எப்படி ஈழத்துடன் சம்பந்த படாதவர்கள் தெரிவிக்கும் சில தீர்வுகள், ஆதரவுகள், கருத்துக்கள் எனது ( எங்களது)பார்வைக்கு சில நேரங்களில் பொருத்தமற்றனவாக தெரிகிறனவோ;

அதே போன்றதே பெரியார் தனது கொள்கைகளை பரப்பிய காலத்தை, அப்போதிருந்த்த அதன் தேவையை சரியாக உணராது எம்மவர்கள் அதை பற்றி இப்போது கூறும் கருத்துக்கள்.

நீங்கள் சொன்னது போல இப்போதைய சூழலில் பெரியாரின் கருத்துக்களில் எவை எவை பொருந்துமோ அவையை தெரிந்தெடுத்து அதை நடைமுறைபடுத்தவோ அல்லது மக்களிடம் கொண்டு செல்வது தான் பொருத்தமே தவிர, அன்றைய சூழலில் சொன்ன அத்தனையும் இன்றைய சூழலிற்கு பொருத்த முடியாது.

அதற்கு மேல் ஒரு சிலரிடம்?? பொதுவாக அனைவரிடத்தும்??
பாராட்டும் போது அதை கண்டு சந்தோசபடுவது போல் அவர்கள் செய்த குறைகளை சுட்டிகாட்டினால் ஏற்று கொள்ள இருக்கும் தயக்கமும் அதை தங்களுகெதிரான, தங்களின் மீதான தக்குதலாக எடுப்பதும் (அதுக்கக்க ஒருவரையும் தாக்கி பதிவுகள் வரவில்லை என சொல்லவில்லை.)ஆக்க பூர்வமாக வைக்கப்பட்ட விமர்சனங்களை கூட பதில் சொல்லது..... எல்லாத்துக்கும் பொதுவில் பதிலாக வரும் "பில்டப்" பதிவுகளும்....

இதுக்கு மேல என்ன சொல்லுறது

வவ்வால் said...

பெயரிலி,

//"தட்டுக்கழுவி, ஓர் அப்பனுக்குப் பிறந்தவனா?" என்பவை பெரிய விடயங்களா என்பது போலவும் அவர் எழுதியதை வாசிக்கும்போது புரிகின்றது. ஒருவரின்//

உங்களுக்கு மட்டும் நான் சொல்லாதது எல்லாம் எப்படி சாமி புரியுது , அதற்கு எங்கே பயிற்சி எடுத்தீர்! :-))

நான் சொன்னது பிறர்களின் தாக்குதல் தரும் அழுத்தம் காரணமாக அப்படி வார்த்தைகளை விட்டு விட்டார் அது சரியானது அல்ல என்பதே!

ஒரு வேளை எனக்கு தமிழில் உங்களைப்போல விளையாடத்தெரியவில்லை போலும்.

நான் போட்ட அப்பின்னூட்டத்தினை மீண்டும் படித்து பாருங்கள், அல்லது யாரேனும் படித்து நீங்கள் சொன்னது போல் இருக்கிறதா என சொல்ல சொல்லுங்கள், கிட்டத்தட்ட நான் "தமிழ் நதி"சொன்னக்கருத்தினை ஒத்தே அதில் சொல்லி இருப்பேன்! அதனை மட்டும் நீங்கள் வேறு தட்டில் வைத்துப்பார்க்கிறீர்கள்?

சரி உங்கள் அரசியல் உங்களுக்கு, நான் அதெல்லாம் கேட்கவில்லை!


சாத்திரி என்பவர் வேறுமாதிரி பின்னர் ஒரு பதிவிட்டுள்ளார் அதனை அச்சமயத்தில் இதில் சேர்க்க தவறிவிட்டேன், அப்படி தம்பி என்று மாற்று பாலில் விளித்ததும் அவரது குறுகிய மனோபாவத்தையே காட்டுகிறது!(நான் கூட சாத்திரி என்பது ஒரு அக்கா எனவே நினைத்தேன், அக்கா தானா?)

பெயரிலி உங்கள் பதிவுகளில் எதுவும் நேரடியாகப்பேசுவதே இல்லை, அதனை எப்படி வேண்டுமானாலும் பொருளுரைக்கலாம் என்பது போலவே இருக்கிறது, ஒரு வேளை நீங்கள் விரும்பியே அவ்வாறு செய்கிறீர்கள் போலும். எனவே நான் சொல்லாத ஒன்றை எல்லாம் கயிறு திரிக்க வேண்டாம், பின்னர் அது உங்கள் மீதே பாயலாம்!

-/பெயரிலி. said...

வவ்வால்,
நீங்கள் நான் நீங்கள் எழுதியதாகப் புரிந்துகொண்ட அர்த்தத்திலே எழுதியிருக்கவில்லையென்றால், மகிழ்ச்சியே. ஆனால், என் புரிதல் இன்னும் முன்னரைப் போலவேயுள்ளது. ஏனென்று விளக்கம் சொல்லி வாசிக்கின்றவர்களை மயக்கத்துக்குள்ளாக்காமல், நீங்கள் எழுதியதையும் (சம்பந்தப்பட்ட பகுதி) தமிழ்நதி எழுதியதையும் (சம்பந்தப்பட்ட பகுதி) கீழே சேர்த்திருக்கின்றேன். வாசிக்கின்றவர்களே புரிந்துகொள்ளட்டும்.

ஒரு குறிப்பு மட்டும்; தமிழ்நதி சொன்னதிலே இப்படியாக நிகழ்வது நான் உட்பட எல்லோருக்கும் வழக்கமென்றே ஒத்துக்கொண்டேனேயொழிய, அது சின்னச்சறுக்குதலென்று ஒதுக்கலாமென்று அல்ல. சிறிய சறுக்கல் பெரியசறுக்கல் எதென யார்மீது சறுக்கியதோ அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதே என் நிலை.

தமிழச்சியின் சில அத்துமீறல்கள் என்பதிலே நீங்களும் சில துருத்தித்தெரியும் தலையங்கங்கள் என்று தமிழ்நதியும் சொல்பவை ஒன்று என்றே கொண்டுவிடுவோம்.

வாசிப்பவர்கள் கருத்தினைச் சொல்லி, நான் நீங்கள் எழுதியதை புரிந்துகொண்டது அவர்களின் கணிப்பின்படி தவறுதான் என்றால், அதற்காக மன்னிப்பு கேட்பதிலேதும் எனக்கு மறுப்பில்லை. என்னை நோக்கிப் பாய்ந்தால் பரவாயில்லை. சரியானது நின்றால், சரி.


வவ்வால் கூறியதின் பகுதி:

தமிழச்சியின் செயல்பாடுகளை ஆதரித்தே இப்பதிவு இருப்பினும் , அவருக்கு ஏற்பட்ட சறுக்கல்கள் எனவும் தலைப்பு பேசுகிறது(பெரிதாக சறுக்கியும் விடவில்லை). ஏற்கனவே கொழுவிப்பதிவில் சொன்னது போல தமிழச்சியின் சொல்லாடல்களில்(தட்டுக்கழுவி, ஒருவனுக்கு பிறந்தவனா போன்றவை ) சில சறுக்கல் இருந்தாலும் அவரை அது போன்ற நிலைக்கு தள்ளிக்கொண்டு போனது சிலரின் கைங்கர்யம் என்பதே எனது எண்ணம்.

பெண்ணாக , தனியாக அவர் செய்வதைப்பார்க்கையில், அவர் மீது பலர் தாக்குதல் தொடுக்கையில் சமாளித்து நிற்பதை பார்க்கும் போது சில சமயம் அவரின் வார்த்தை அத்து மீறல்களை பொறுத்து போகலாம் என தோன்றுவதால் , அவரின் அத்துமீறல் வார்த்தை பிரயோகத்தை நான் சொல்ல நினைத்தும் சொல்வதில்லை.உங்களுக்கும் அத்தகைய எண்ணம் இருக்கிறது என்பது தெரிகிறது.


தமிழ்நதி சொன்னது:
கருத்து, வார்த்தைச் சறுக்கல்கள் எவருக்கும் நிகழ்வதே. கோபத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் தம்மளவில் முழு அர்த்தப்பாடுடையவையல்ல. அந்த வகையிலேதான் 'ஒரு அப்பனுக்கு'மற்றும் 'தட்டுக் கழுவுதல்'சொல்லப்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து. எழுத்தில் வரும்போது அவர் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். இதைக் காரணம் காட்டி தமிழச்சியைத் தாக்கிப் பின்னூட்டமிடுவது வரவேற்கத்தக்கதல்ல. எவரையும் கருத்துக்களால் வகைப்படுத்தலாமேயன்றி 'ஈழத்தமிழன்' - 'இந்தியத்தமிழன்'என்று வகைப்படுத்தல் நியாயமல்ல. ஆனால் 'துருத்திக் காண்பித்தல்'என்று மற்றவர்கள் சொல்லுமளவிற்கு ஏன் நடந்துகொள்கிறார் என்ற விசனம், அவருடைய தலையங்கங்கள் சிலவற்றைப் பார்க்கும்போது எனக்குள்ளும் எழுந்ததுண்டு.

theevu said...

// போன ஒன்றரை மாதங்களாக நெற்றுப்பக்கம் நாற்று நடவோ, களை பிடுங்கவோ, அங்கு விளையாடும் எந்தக்குலப்பெண்களுக்கும் மஞ்சள் அரைத்துக்கொடுக்கவோ, மாமன் மச்சானோடு பஞ்சாயத்துக்கூட்டவோ போவதேயில்லையென்று என்று எனக்கும் என் மேலதிகாரிக்கும் வாரச்சுற்றறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறேன் என்பது ஒரு பக்கமிருக்கட்டும் :-))//


அட அட எல்லா மேலதிகாரிகளும் ஒன்றையே எதிர்பார்க்கிறார்கள். :)


அங்காலை ரேப்றெக்கோடர் ஓடுது.கேக்கலையோ?

Anonymous said...

//அங்காலை ரேப்றெக்கோடர் ஓடுது.கேக்கலையோ?//

கிளியர் இல்லை. சிஞ்சா மனுசி கலையகத்தின் அவுஸ்ரேலிய கிளையுடன் தொடர்பு கொள்ளவும். உதவிகள் செய்வார்கள். சுவிஸ் கிளை இப்ப பிசி

-/பெயரிலி. said...

கவனமெடுத்து விஷயத்தை அணுகினால், தமிழச்சியோடு அந்தப்பக்கமிருந்து தொலைபேசுகின்றவர் தமிழ் பேசுவதிலே இலங்கைத்தமிழராகத்தான் இருக்கிறார். [ஆனால், அதிக இடங்களிலே என்ன பேசுகிறார் என்றுதான் தெளிவாகக் கேட்கவில்லை :-( ]

தலையாட்டி said...

தமிழச்சிக்கு ஈழத்து தலித் சிறுகதைகள் புத்தகத்தை கடதாசி மகாநாட்டுத்தோழர்கள் குடுத்திருக்கினம்

அப்பிடியே அ. மார்க்ஸ் முன்னுரையை டைப் அடிச்சிருக்கா

புத்தக அட்டைப்படத்தில மார்க்ஸின்ரை பேரைத் தணிக்கை செய்திருக்கிறா

டைப் அடிச்சு தன்ரை பதிவில போட்டதில ஆருடைதெண்டதைச் சொல்லாம விட்டிருக்கிறா

பாக்கிறவை தமிழச்சி ஈழத்துத்தலித்துகள் பற்றி வாசிச்சு தன்ரை கருத்தை எழுதியிருக்கிறா எண்டு யோசிக்க அத்தினையும் செய்திருக்கிறா

theevu said...

//சிஞ்சா மனுசி கலையகத்தின் அவுஸ்ரேலிய கிளையுடன் தொடர்பு கொள்ளவும்//

நட்டப்பட்டு விட்டிட்டினம் என்று கேள்விப்பட்டம்.

சுவிஸ் கிளைதானாம் அதை வாங்கப்போகுதாம்.உண்மையா?

-/பெயரிலி. said...

தலையாட்டி,

இதனை அ. மார்க்ஸ் எழுதினாரா தெரியவில்லை. ஆனால், தேசம் சஞ்சிகைக்காக பாலசந்திரன் எழுதியதாக ஸ்ரீரங்கன் தனது பதிவிலே ("பாரீஸ் தலித் மகாநாட்டை முன்வைத்துச் சில...") எடுத்து மூன்று நாட்களின் முன்னாலேயே போட்டார். எனது பதிவு, ஸ்ரீரங்க ஸரிதம் இலே இதிலிருந்து ஒரு பந்தியை எடுத்தும் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.

தமிழச்சி எங்கிருந்து எடுத்திருந்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்திருக்கலாம்.

கொழுவி said...

//பாக்கிறவை தமிழச்சி ஈழத்துத்தலித்துகள் பற்றி வாசிச்சு தன்ரை கருத்தை எழுதியிருக்கிறா எண்டு யோசிக்க அத்தினையும் செய்திருக்கிறா//

ஏன் அண்ணை ?

வாசிக்கும் போதே விளங்கிடுமே .. இதை தமிழிச்சி எழுத வில்லையென :))