பழசு - 10
அவனும் அவன் எனக்குச் சொன்ன ஒரு செத்தவீட்டு நிகழ்வின் கிழவியும்
உள்ளுணர்வுக்கும் சகுனத்துக்கும் -நிச்சயமாக- வரைவிலக்கணத்தின்படி, வரைவிலக்கணத்தினை ஏற்படுத்துகின்றவர்கள் எவர் என்பதைப் பொறுத்து, நிகழ்வு-கருத்து முதல் வாதங்கள் அடிப்படையில் வித்தியாசங்கள் நிறைய உண்டு. உயிர்கள், உடமைகள் அவிந்து கொண்டிருக்கும் நாடொன்றில், காலை மூன்று மணிக்கு, மாணவர் விடுதிக் கதவொன்று அதிரத் தட்டப்படுதல், நிச்சயமாக அந்த ஆண்டு யாருக்குப் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது என்று தனக்குச் சொல்லப்படுவதற்கல்ல என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அந்த உணர்வுதான் உள்ளுணர்வு என்றால், அந்தத் தட்டலினைச் சகுனம் என்று சொல்வதா அல்லது செய்திப் பரிவர்த்தனை மொழி என்று கொள்வதா என்று வழக்கம்போல தன்னைத்தானே விதண்டாவாதக்கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அவனுக்கு நேரம் இருக்கவில்லை. விடுதி உணவுண்கூடத்துத்தொலைபேசியில் தெளிவற்ற பெண்குரல் அவனுக்கு என்பதாய்ப் பீடிப்புகைக்குள்ளாலும் குளிருக்குத் தலையை மூடிய துண்டுக்குள்ளாலும் தெரியவந்தது. மூன்று நிமிடங்களில் நான்கு மாடிகள் இறங்கி, நடைகூடத்தூடாய்(க்) க/நடந்து, திரும்ப இரண்டு மாடிகள் மாடிக்கு ஒரு நிமிடமாய் ஏறி, கிடையாய் விரிந்திருந்த கூடத்து நடைபாதையில் ஒரு நிமிடங்கள்போனதுவரை தான் என்ன எண்ணினான் என்பதை அவன் எனக்கு இன்றைக்கு வரைக்கும் சொல்லவில்லை. (அதற்காக நான் மகிழ்ச்சி அடைவதுண்டு; சொல்லியிருந்தால், எதையும் தவிர்க்காமல் முழுமையைச் சொல்லவேண்டிய குற்ற மனப்பாங்கில் இங்கே அதையும் எழுதி நேரத்தினையும் இடத்தினையும் அடைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கலாம்).
தொலைபேசியில் (இந்த நிகழ்ச்சியினை என்னிடம் சொன்னபோது, இடையில் நிறுத்தி, அன்று தொலைபேசி தனக்கு யாரிடம் இருந்து வந்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன் என்பதை ஒரு வற்புறுத்தற் தொனியுடன் கேட்டான்) அவன் அம்மா (நானும் தான் இந்த நிழழ்வினைச் சொல்லக் கேட்டவர்களில் மிக அதிகமானோரைப் போலவே, காதலி என்று பதில் சொன்னதாகச் சொல்லிச் சிரித்தான். சிலர் தனக்குக் கூறியதாக அவன் கூறிய பதிலைச் சொல்ல எழுத்து தர்மம் இங்கே எனக்கு இடம் கொடுக்கவில்லை). தாயார் விடயத்தை முழுக்கச்சொல்லமுன்னர், தொலைபேசி, கம்பி அறுந்து போன 'cablecar' போல டங்... ஒரே அடி... தொனி விழுந்து விட்டது (நாங்கள் இந்த நிகழ்வினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே இத்தாலியில் பயிற்சியிலிருந்த போர்விமானம் தாக்கி ஒரு cablecar விழுந்திருந்து சிலர் உயிரிழந்திருந்தால், அவன் எனக்கு தொலைபேசி வந்த அன்றைய விடிகாலை தன்மனதில் தொலைபேசி அறுந்துபோனது எந்த உணர்வினை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதைத் தெளிவாகப் பதிய வைக்க அந்தவாறு சொல்லியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்). அத்தனைக்குள் அவன் புரிந்துகொண்டாதால் குழம்பமுற்றது ஒன்றாற்றானாம்; "அம்மா இறந்துவிட்டா." "இதில் என்ன குழப்பம்?" என்று நீங்கள் கேட்டக்கூடியதுபோலத்தான் நானும் கேட்டேன்; 'அம்மம்மா' என்று அழைக்கப்படும் அவனின் அம்மாவின் அம்மாவும் 'அப்பம்மா' என்று அழைக்கப்படும் அவனின் அப்பாவின் அம்மாவும் அவன் வீட்டிலேயே அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்திருந்தனர். அவனின் அம்மா, இருவரையும், அம்மா என்றே அழைத்து வந்தார். ஒருவர் மிகவுரிமையுடனும் கொஞ்சுதலுடனும் 'அம்மா;' மற்றவர், மிகமரியாதையுடனும் கொஞ்சம் பயத்துடனும் 'அம்மா.' இதில் எந்த அம்மா இறந்து போனார் என்று தெளிவாகச் சொல்லுவதற்குத் தொலைபேசி மீண்டும் ஒலிக்கவில்லை; அவனும் அதைப் பெரிதாக ஓர் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக எதிர்பார்த்து நிற்கவில்லையாம். சொல்லப்போனால், நாடு இருக்கும் நிலையில் இப்படி ஓர் இடையே வெட்டிப்போகும் ஒற்றைத்துளிநேரத் தொடர்பு கிடைக்க, அம்மா யார் வீட்டுத் தொலைபேசிக்கு யார் துணையோடு போயிருக்க முடியும் என்பதையும் தம்பிக்கும் அக்காவுக்கும் செய்தி போயிருக்குமா என்பதையும் எண்ணித் தன்னைக் கொஞ்சம் கிடைத்த தரவுகளில் இருந்து தெளிவு பண்ணிக்கொள்ளவே அங்கே தான் நின்றிருக்கக்கூடும் என்று தான் இப்போது கருதுவதாக, கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு, இரண்டு சுட்டுவிரல்களையும் ஒன்றால் ஒன்று தட்டிக் கொண்டு எனக்குச் சொன்னான்.
பின்பு, காலை பல்கலைக்கழத்துக்கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் பிரதான நகரம் போய், அங்கிருந்து வீடு போவதற்கான பேரூந்து கிடைக்குமா என்பதை நான்காம்மாடி அடிவரைக்கும் யோசித்துக்கொண்டு வந்தான் என்றான். பின் மாடி ஏறி முடியும்வரைக்கும் (இத்தருணத்தில் ஆறரை நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாயும் மாடிப்படிச்சுவர்களை, ஓர் இசைநிகழ்ச்சி நடத்துனரின் இலாவகத்தோடு கைகளால் விரல்களை நளினித்துத் தட்டியபடி தான் ஏறியிருக்கமுடியும் என்றும் நினைக்கின்றான். ஆனால், சிந்தனையில்) மூன்று நான்கு நாட்கள், குறைந்தபட்சம் ஈமைக்கிரியைகள் முடியும்வரை தங்கிவர என்னவென்ன பொருட்கள் பெட்டிக்குள் வைக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு நடந்தான் (என்பதால் தந்து கைகள் அந்த ஏற்றக்கணங்களில் என்ன பண்ணியதென்று என்றைக்குமே திட்டவட்டமாக அறியமாட்டான் என்பதை எனக்குச் சொல்லும் போது, கையிலே சீனாவிற் செய்யப்பட்ட ஒரு பென்சிலை எடுத்து வைத்து, இசைநிகழ்வுநடத்துனரின் இலாவகம் தனக்கு வருகின்றதா என்பதைச் சரிபார்த்தான்). கதவைத் திறந்து, அறை நண்பனிடம் விடயத்தைச் சொல்ல முயலும்போது, குரல் கம்மிச் செரும வேண்டியிருந்தபோதுதான், தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருப்பதாகவும் கொஞ்சம் அழவும்கூடச் செய்திருப்பதாகவும் தெரிந்தது. "இறந்தது, அம்மம்மாவா, அப்பம்மாவா?" என்று நண்பன் கேட்டபோது, தான் இன்னும் தெளிவு படுத்திக் கொள்ளவில்லை என்றும் உண்மையில் தெளிவுபடுத்திக் கொள்ளமுயன்று தோற்றுப்போனதாகவும் சொன்னபோது நண்பன் ஆச்சரியப்பட்டு, 'அப்படியான தெளிவற்றநிலை அவனுக்கு இன்னும் பயத்தையும் இறப்பின் பயங்கரத்தினையும் கூட்டுகின்றதா' என்று வினாவி, அவன் பதில் சொல்லமுன்னரே, அப்படி பயப்பட வேண்டாம் என்றும் சொன்னான். தெளிவின்மையில், பயப்பட என்ன இருக்கின்றது என்று இவனுக்குப் புரியவில்லை. என்னிடம் கேட்டான், "ஒரு கெடுதலான நிகழ்வு ஒன்று நிகழ்ந்ததென்று தெரிந்து அதற்காக மனதைப்பக்குவப்படுத்திக் கொண்டவனுக்கு, அத்தகைய நிகழ்வில் உறுதிப்படாமல் இருக்கும் தெளிவின்மையின் புதிர் பயத்தினைக் கூட்டுமா? அப்புதிர் தீர்க்கப்படுவது, ஏற்பட்ட துயரின் சுமையினைத்தான் தானும் கூடச் சேர்த்துப் பகிர்ந்துகொள்ளுமா?" எனக்கு என் வாழ்க்கையில் நிகழ்ந்த அவ்வாறான சம்பவங்களூடாக மீளப்போய்த்தான் அவனது கேள்விக்குப் பதிலிறுக்கமுடியும் என்று பட்டது; அப்படியே அவனுக்கும் சொன்னேன். ஆனால், அப்படியான நிகழ்வுகளைச் சிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஒரு பொழுதுபோக்குக்காகக் கதைகேட்போனுக்கு இருக்காததால், கதை கேட்ட நாட்களின் பின்னரும் கூட நான் அறைச் சாளாரங்கள் ஊடாக, நட்சத்திரங்களைப் பார்த்திருந்த வேளைகளிலும், என் ஊரின் கடல்மணலினையும் சந்திரனையும் அருகில் இல்லாத அவளையும் பற்றியே யோசித்திருக்கின்றேன்.ஆனால், அவன் தனக்கு அன்றைய மதியம் அப்புதிர் அவிழ்ந்தபோது, அப்படியேதும் மாற்றம் தன்னுட் தோன்றவில்லை என்றான்.
வார இறுதிக்கு முன்னால், வரப்போகும் இரண்டு நாட்களிலும் தனக்கு இருக்கும் ஆய்வுகூட வகுப்புகளின் செய்துகாட்டுநர்களுக்கு விடயத்தைச் சொல்லி, வரும்வாரம் வந்தவுடன் அவற்றைத் தான் செய்து முடித்துவிடுவேன் என்பதையும் கூறச்சொன்னான். பின்னர், பெட்டியை அடுக்கும்போதும் பேருந்தில் ஏறி அருகிலிருந்த நகர் அடையும் வரைக்கும் அடிக்கடி தன் அடையாளவட்டை பத்திரமாக இருக்கின்றதா என்பது தவிர்ந்த கணங்களில் இறந்தது அம்மம்மாவா, அப்பம்மாவா என்பதை விளங்கிக்கொள்ள அம்மாவின் கூற்றின் சொற்களையும் தொனியையும் அவர்களைப் பற்றிய தனது உள்ளப்பதிவுகளையும் கூறுபோட்டு அலச அலச மண்ணியல் வகுப்பில் புதைமணல் எப்படி எந்தளவு நாங்கள் எம்ப எம்ப உள்ளே எங்களைத் தள்ளுகின்றது என்பதற்கு மணல் நிரப்பப்பட்ட ஒரு தாமரை மொட்டு வடிவ இரப்பர்க்குமிழினையும் அதன் துவாரமுனையிற் பொருத்தப்பட்ட கண்ணாடிக்குழாயில் அவனது பேராசிரியர் வகுப்பிற் செய்து காட்டிய பரிசோதனை ஞாபகத்திற்கு வந்து குழப்பம் செய்து சிதறல் பண்ணியது; குமிழில் உள்ள மண்ணைப் பிதுக்க, வகுப்பில் எல்லோரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, கண்ணாடிக்குழாயில் மணல் கீழிறங்கியது. வாசல்வரை சாரத்துடன் வந்து நின்று ஏற்றிவிட்ட நண்பனுக்குச் சரியாக "போய் வருகின்றேன்" என்பதைச் சொல்லியிருந்தானா என்பதை திரும்பி வந்த மற்றைய கிழமை அவனிடம் கேட்டுத்தான் தெரிந்து
கொண்டானாம். நண்பன், "உனக்குக் கிடைத்த செய்திக்கு, நீ சொல்லாமற் போயிருந்தாற்கூட குறைப்பட்டுக் கொள்ளமாட்டேன்" என்றான்.
அம்மம்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்று பல காரணக்கூறுகள் ஒன்றாக அவனுக்குப் பேரூந்தின் குலுக்கலுக்குள்ளூம் அழுத்திச் சொல்லினவாம். இவ்விடத்தில், அவன் அம்மம்மாதான் என்ற அந்த முடிவுக்கு வர, அவனின் காரணங்கள் தாமாகவே அப்பக்கத்தில் அமைந்திருந்தனவா, அல்லது அவனின் உள்ளுணர்வுதான் அவற்றை அத்திசையிற் திமிறத்திமிற அழுத்தி நகர்த்தியதா என்பதைக் கேட்கவேண்டும் என்ற உந்துதல் என்னிடம் ஏற்பட்டது; ஆனால், அ·து அவனின் கதை சொல்லும் சுவராசியத்தினைக் கெடுத்து, அவனின் சொல்லோட்டத்தினை மந்தித்து விடுமோ என்று அச்சம் கொண்டு அதைக் கேட்கவில்லை; அவன் தன் கதையில் மற்றோர் எந்த அளவுக்குச் சுவராசியம் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் கூர்மையான கவனம் செலுத்தாது, தன் கதையை ஒரு நடிகனின் பக்குவத்துடன் வெளிக்கொணர்வதில் மட்டுமே தன் நாட்டத்தினைத் தேக்கிவைத்து மகிழ்வதாக எனக்குப் பட்டது.அம்மம்மா, அப்பம்மாவிலும்விட மூன்றுநான்கு ஆண்டுகள் வயதினாற்கூடியவர் என்பது அவரின் உடல்நிலையிலும் மனநிலையிலும்கூடத் தளர்ச்சியினால் வெளிப்படையாகத் தெரிந்தது. இதைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அவன் தன் குரலில் ஒரு செயற்கைத்தளர்வினைக் கொணர்ந்து முகச்சுளிப்பினாலும் அங்கசைவினாலும் எனக்கு ஒரு முதிர்ந்து தளர்ந்த பெண்ணை உருவகித்துக் காட்டமுயன்றான். என் மனப்பதிவுகளில் நான் தளர்ந்த முதியபெண் என்று கருதிக்கொண்டிருக்கும் பிம்பத்துடன் அவனின் உருவகிப்பு சீராகப் பொருந்திக் கொள்ளாமல் விம்பச் சட்டவோரங்களில் உராய்ந்துகொண்டதால், அவனின் முயற்சி தோல்வியில் முடிந்ததை அவன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. அடிக்கடி இறப்பைப் பற்றிப் பேசிப்பேசி, விடியற்காலைக்கனவுகளில் தம்மை எடுத்துச் செல்லக் காலன் பாசக்கயிற்றுடன் வருவதாகச் சொன்னவர்கள் சீக்கிரத்தில் - மூக்கிற் பரு மொட்டாய் முகிழ்த்து முளைக்கவே- இறப்பதைக் கண்டிருக்கின்றானாம். அவர்களின் அந்தப்பிரமை அவர்களின் வாழ்வதற்கான அவா விட்டுப்போய், தம்மை இறப்புக்குத் தயார்ப்படுத்திக் கொள்ளும் உணர்வின் வெளிப்பாடாகக் கருதிக் கொண்டிருக்கின்றான். அம்மம்மாதான் இறந்திருக்கவேண்டும்; இல்லாவிட்டால், அம்மா, இந்த அளவுக்கு நெகிழ்ச்சி காட்டி இருப்பாரா என்பது, பேரூந்து நடத்துனருக்கு அதிகாலைவேளையில் நூறு ரூபாத்தாளினை, ஒரு ரூபா எழுபத்தைந்து சதப்பயணச்சீட்டுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, தன் அவசரப்பயணத்தின் மூலகாரணப் பரிதாபத்தை, தன் குற்றத்துக்கான பாவ சங்கீர்த்தனமாக விற்க முயற்சித்தபோது மனதிற்பட்டது.
அம்மாவுக்கு, அப்பாவைத் திருமனம் செய்ய இருக்கும் வேளையிலேயே அப்பம்மாவைத் தெரிய வந்தாலும், அம்மம்மாவும் அப்பம்மாவும் முன்னரே தூரத்து உறவினர்கள் என்ற அளவில் பொதுவான உறவினரின் திருமண,பூப்புநீராட்டு, இறப்புச்சடங்குகளில் சந்திக்க நேர்ந்து, ஒருவரையொருவர், பிள்ளைகள் என்ன பண்ணுகின்றார்கள் என்று கேட்கும் அளவுக்குத் தெரிந்திருந்தவர்கள். அப்படி ஏதோ ஒரு செத்தவீட்டுச்சந்திப்பிலேயே, அவர்கள் இருவரும் அப்பா-அம்மாவின் திருமணத்தினைப் பேசி நிச்சயம் பண்ணி, அம்மாவை, அம்மம்மா, அப்பம்மாவுக்கு அறிமுகம் பண்ணிவைத்ததாகவும் தனக்குத் தெரியும் என்றவன், ஒரு புன்முறுவலை முகத்திலே எறிந்துவிட்டு, பின்னே உள்ளே பறித்துப் பொத்தி வைத்தான். அ·து எனக்கு, மேல் நோக்கி ஒரு ரென்னிஸ் பந்தினை எறிந்த ஒருவன், சிறுபிள்ளையொன்று எம்பி அதைப் பிடிக்கமுன்னர், அதை இலாவகமாக மீளக் கைப்பற்றித் தன் காற்சட்டைப் பைக்குள் ஒளிக்கும் நிகழ்வினை உரசியெழுப்பியது. அவனின் கதைமாந்தர்களின் வெளிப்பாடில்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்த இந்த 'வெளிக்கிடப்பி'ச் (outlier) சிரிப்பின் பின்னர், கொஞ்ச நேரம் கையிலே தமக்குட் சச்சரத்துக் கரகரத்துக் கிடந்த சிறிய உருளைக்கற்களை எடுத்து அருகின் நீரோட்டத்துள் ஒரு சுழல்செயலுட்புதைமாந்தனாய், எண்ணத்திலே குறிப்பிட்ட இலக்கின்றியபோதும், நிகழ்வினிலே குறித்தவோர் இலக்குச் சுற்றிப்படும் வகையில், ஒவ்வொன்றாக, காலலயத்துடன் மௌனத்தினைப் பொதி கட்டி எறிந்து கொண்டிருந்தான். இறப்பு வீடொன்றிலே திருமன நிச்சயார்த்தம் நடந்ததில் உள்ள முரண்நகையை அவன் இரசித்துக் கொண்டிருக்கின்றான் என்று எண்ணிக் கொண்டேன்.
பின்னர், அப்பம்மாவும் அம்மம்மாவும் ஒரே வீட்டில் வசித்தபோதும் அதிகம் பேசிக்கொண்டதில்லை. அம்மம்மாவிலும் அப்பம்மாவின் பகுதியினர் பொருளாதார அளவிற் கொஞ்சம் மேலோங்கியவர்கள் என்பதாகத் தெரிந்தது. பேரக்குழந்தைகளிடையே அவர்கள் தத்தம் வாக்கைப் பெற்றுக்கொள்ளப் பல வழிகளில் முயன்றதாகச் சொன்னான். அப்பம்மாவின் 'கையிருப்பு' வாக்கு, குழந்தைகள் அவரின் பக்கம் கூடுதலாகச் சாய உதவி புரிந்ததாகவும் சில வேளைகளில் அதன் காரணமாக அம்மம்மா அழுததாகவும் சொல்லியபோது, அவன் குரல் கம்மியது. அதன் காரணமாகவே அம்மம்மா அப்பம்மாவிலும் முதலில் தளர்ந்துபோய் இறந்து போனதாகப் புகார் சொன்னான். அவனின் குரலில் அம்மம்மாவின் இறப்பு நேர்ந்ததற்கான காரணத்தைச் சுமந்து கொள்ள ஒரு சடத்துவடிவக் குற்றவாளியைப் பிடித்த கோபமும் நிம்மதியும், பஞ்சுமிட்டாயில் மாறிமாறிக் கலந்து இருநிறப்பிசிற்று இனிப்பாய்த் தெரிந்தது.
பின்னர், அந்த நகரிலிருந்து தனது ஊர் போய்ச் சேரும்வரையும் அப்பம்மா, அம்மம்மாவுக்கு அவரின் வாழ்க்கையில் இழைத்திருக்கக்கூடிய வேதனையைத் தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நிகழ்விலும் தேடி உணர்ந்து அப்பம்மாவில் மிகவும் வெறுப்புற்றான்.
வீட்டுவாசலிற் போய்ச் சேர்ந்தபோது, தம்பியும் தம்பியின் நண்பர்களும் அவனது நண்பர்களும் இறுதிச் சடங்குகளிற்கான ஆயத்தங்களைப் பண்ணிக் கொண்டும் வாங்கு, கதிரைகள் என்பவற்றை நிரல்நிரைப்படுத்தி, வெற்றிலை, சுருட்டுத்தட்டங்களுடன் வந்தவர்களை உபசரித்துக்கொண்டிருந்ததைக் கண்டபோதும், தான் வழியில் இராணுவப்பரிசோதனைகள், வேறேதும் தன்னுயிர்க்கான இடையூறுகளின்றிப் பத்திரமாக வந்து சேர்ந்தது எப்படி என்பது தன் சிந்தனைக் கேள்விக்கொக்கிகளுள் அன்று எழவேயில்லை என்பதை ஞாபகமாக எனக்கு எழுப்பிச் சொன்னான். அடுத்ததாக, அப்பா, அவரின் ஆசிரியநண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டபோது, அக்காவினதோ அல்லது வேறு யாரோவினதோ திருமணநிச்சயார்த்தம் பற்றி, ஏதாவது பேச்சுத்துளி அங்கே சொட்டுகின்றார்களோ என்று தெரிந்து கொள்ள, அவன் ஆர்வம் கொண்டான். அப்பாவுடன் அவரின் நண்பர்கள் அப்படிப் பேசாவிடினும், தமக்குட் தமது பிள்ளைகளின் நிச்சயார்த்தங்களைக் கட்டாயம் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டான். வீட்டுவாசல் கடந்தபின் வீட்டின் பெரிய 'விறாந்தைக்கு' முன்னால் இருக்கும் கதிரைகளில் அமர்ந்திருந்த அவனின் அக்காவின் நண்பர்கள், அவளுக்கு ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாகச் சொன்னவன், அவசர அவசரமாக, நண்பர்கள் என்று தான் சொல்வது, ஆங்கிலத்தில் friends என்று சொல்வதிலுள்ள பாற்குருட்டுத்தன்மையுள்ள பொதுப்படையான அர்த்தமேயொழிய ஆண்நண்பர்கள் என்று நான் அர்த்தம் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டான். நான், அவனின் அக்காவின் தனிப்பட்ட நண்பர்களின் பால்வேறுபாடோ, அல்லது அவனின் கருத்தினைக் கூறுவதிலுள்ள சொற்பிரயோகமோ, என்னுள் நான் பதித்துவைத்துக்கொள்ளும் அளவுக்கு முக்கியம் வாய்ந்ததல்ல என்று கூறிவிட்டு, என்னுடைய அந்தச் சொற்றொடரினால், அவன் தன்னுடைய நிகழ்ச்சிகூறும் செயற்பாட்டினை நான் கவனத்தில் இருத்த முயற்சிக்கவில்லை என்று எண்ணுகின்றானோ என்று பதட்டமுற்றேன். ஆனால், அவனுக்கு, தன் அக்காவின் நண்பர்களின் பாலினைக் கருத்திற்கொண்டு நானேதும் அவளைப் பற்றித் தப்பான கருத்தேதும் கொள்ளவில்லை என்பதைத் தவிர, மிகுதியிற் கரிசனம் இல்லாதது அவனின் தொடர்ந்து போன நிகழ்வு சொல்தலிற் தெரிந்தது.
உள்ளே நுழைந்தபோது, அம்மாவின் அருகிலிருந்து அழுது கொண்டிருந்தவர் அம்மம்மா என்று கண்டபோது, தனக்குப் புதியாய்ப் பொங்கிய ஆத்திரமும் அமைதியும், முன்னே இருந்த ஆத்திரத்தினையும் அமைதியினையும் இடம் பெயர்த்ததாகச் சொல்லி, ஆத்திரத்திலும் அமைதியிலும் பல வகைகள் இருக்கின்றன என்றும் அவற்றை அக்கணம் தான் உணரக்கூடியதாக இருந்தாகவும் அடித்துச் சொன்னான். அந்தச் சந்தர்ப்பத்தில், நான் அவனது அறைநண்பன் சொன்னதுபோல, அவனுள்ளே யார் இறந்தது என்று அறியாத புதிர் தொங்கியிருந்து, அவன் காரண காரியங்களை அலசி எடுத்துக் கொண்ட முடிவு தவறாகிப்போனது, அவனது அனுமானிக்கும் திறனிற் பழுது கண்டதால், அவனுக்கு ஆத்திரமும், இறந்து போயிருக்கலாம் என்று கவலைப்பட்டுக் கொண்டு வந்த அம்மம்மா உயிருடன் இருத்தல், அவனின் அதற்கான பதற்ற அலை மடிந்து, அமைதியையும் பிறப்பித்து இருக்கலாம் என்றும் சொன்னேன். அவன், அப்போதுங்கூட, நிச்சயமாகத் தன்னுட் புதிரென்றேதும் பயங்கரத்தைக் கூட்ட இருக்கவில்லை என்றும், ஆனால், தந்து புதிய ஆத்திரம் தன் மீதுதான் என்றும் சொன்னான். ஏற்கனவே, இறந்திருந்தவர்மீது தான் கோபத்தினைக் காட்டிக் கொண்டு வந்ததாலும் இப்போது எண்ணுகையில் தான் அப்பம்மாவின் செயல்கள் எல்லாமே அம்மம்மாவினைத் தாக்கும் நோக்கற்ற யதார்த்தமான செயற்பாடுகள் என்று காணக்கூடியதாக இருக்கின்றன என்பதை அறிகையில், தன் எண்னவோட்டத்தாலேயே தான் ஒரு வெட்கவுணர்வுக்கும் குற்றவுணர்விற்கும் உள்ளாக வேண்டியிருப்பதாலுமே கோபவுணர்ச்சி தோன்றியிருக்கலாம் என்று எனக்கு விளக்கம் தர முயற்சி செய்தான்.
தான் மீண்டும் வடிகால் தேடி, அவசரப்பட்டு, அம்மம்மாமீது அந்த ஆத்திரத்தினைக் கரைத்து விடக்கூடாதே என்று மிகுந்த அக்கறையோடு போய் அவன்திசைக்கு முதுகு காட்டி அழுது கொண்டிருந்த அம்மம்மாவை அணைத்தபோது, அவர் தள்ளியதாகவும், தான் அதிர்ந்து, அந்தச் செயற்பாட்டைப் புரிந்து கொள்ளமுயன்றபோது, அ·து அம்மம்மா இல்லையென்றும், அதுவரை தெரியாத ஒரு முதிய பெண் தன் கண் விழிவெண்படலத்தைக்கூட அந்நியத்தன்மைமூட அவனை வெறித்ததாயும் மிகவும் பயம் தோய்ந்த சன்னமானகுரலிற் சொன்னான். பின்னர், கொஞ்ச நேரம் இருவரும் பேசாதிருந்தோம். பிறகு மெதுவாக, அந்த நிகழ்வு முடிந்து, அதன் பின் மூன்று மாதங்களின் பின் அவன் போக முடியாதிருந்த மரணவீட்டின் சொந்தக்காரியான அந்த முதியவளின் கண்களில், அதற்குப்பிறகு, மற்றவர்களின் கண்களோடு தன் பார்வையைக் கோர்க்கும் சங்கிலி உடைந்து போன விசித்திரத்திற்குக் காரணம் என்ன என்று என்னிடம் கேட்டான்.
முன்னே பழகியோ, குறைந்தபட்சம், கண்டோ அறிந்திராதா ஒருவரின் பார்வையைப் பற்றிக் கருத்துக் கூறும் அளவுக்கு எனக்கு மனோவியல் தெரியாத காரணத்தினாலும், நேரம் அவமே கரைந்து கொண்டிருந்ததுபோன்ற உணர்வினாலும் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நான், "மன்னித்துக்கொள்; எனக்கு அதனைப் புரிந்து கருத்துச் சொல்லும் வல்லமைக்கு, புத்தியும் அனுபவமும் போதா" என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தபோது, அவனைக் காணவில்லை; அதுவரை என் வாழ்நாளிற் கண்டிராத ஒரு முதியபெண் அந்நியத்தன்மை எரித்த பார்வையை என்மீது எறிந்து கொண்டிருந்தாள்.
ஒரு பயங்கர அமானுஷ்ய உணர்வு மனதை உடன் கவ்வ, எழுந்து திரும்பிப் பார்க்காமல், நடந்தேனா, இல்லை ஓடினேனா........ ஞாபகம் இல்லை.
'99 ஜூன் 12, சனி 16:56 மநிநே.
8 comments:
Ithu 99 la Ezuthiyathaa ? ayoo sami...
But I am able to understand everything :)
இந்தாளுக்கு கார்த்திக்ராமாசே தேவலாம்...
அய்ய்யா.. பெயரிலியய்யா... உங்களைச் சொல்லலய்யா
"...கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு, இரண்டு சுட்டுவிரல்களையும் ஒன்றால் ஒன்று தட்டிக் கொண்டு எனக்குச் சொன்னான்."
இந்த வரியைப் படித்தபோது வாசிப்பை நிறுத்திவைத்துவிட்டு என் கைகள் இரண்டையும் சேர்த்து எல்லா விரல் நுனிகளையும் இணைத்து, சுட்டுவிரல்களை மட்டும் தட்டிப் பார்த்தேன்! கூர்ந்த அவதானம் பிரமிப்பைத் தருகிறது.
இப்படியான பெருங்கதைக்கு இது என்ன விமர்சனம் என்று கேட்டுக்கொண்டேன். பானைச்சோற்றுக்கு ஏதாவது ஒரு பருக்கையைப் பதங்கண்டால் குற்றமில்லையே என்று வைத்துக் கொள்கிறேன்.
கதையைப் படிக்கும் போது என்னையறியாமல் அந்நியனுடன் ஒப்பிட்டுக் கொண்டேன் இந்த என்னையும் அறியாமல் ஒப்பிட ஆரம்பித்தமைக்கு இரண்டு கதைகளிலும் வரும் அம்மா இறந்துவிட்டாள் எனும் சம்பவமும் அதுபற்றிய கதாநாயகனின் விபரிப்புகளும் காரணமாக இருக்கலாம்.ஆனால் திரும்பவும் ஒருமுறை இக்கதையைப் படிக்கும்போது சம்பவங்களின் ஒற்றுமை மட்டும் காரணமல்ல என்று புரிகிறது அம்மாவின் இறப்பு பற்றிய அதியுச்ச உணர்வுத்தெறிப்பு உள்ள சம்பவத்தை விபரிக்கும்போதே தான் தன்னிலிருந்து விலகி இன்னொருவனாக சில விபரிப்புகளை மேற்கொள்ளுவது உதாரணமாய் //இத்தருணத்தில் ஆறரை நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாயும் மாடிப்படிச்சுவர்களை, ஓர் இசைநிகழ்ச்சி நடத்துனரின் இலாவகத்தோடு கைகளால் விரல்களை நளினித்துத் தட்டியபடி தான் ஏறியிருக்கமுடியும் என்றும் நினைக்கின்றான்// போன்ற ஒற்றுமைகள் இந்த ஒப்பிடலை எனக்குள் தூண்டியிருக்கலாம்.
பெயரிலியிடமிருந்து கிடைத்த கதைமுத்துக்களுள் ஒன்று இது(அறைச்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறாள்)
ஒவ்வொன்றாக மீள் பதிவு செய்யவும்...!!!!!!!!!!
நண்பர் பெயரிலிக்கு,
உங்களின் பழைய கதைக்கு எனது பழைய விமர்சனம்.
30-03-2000-த்தில் உயிர்நிழலில் (Issue 12 March-April 2000 இதழில்) இக்கதைக்குறித்து "தொடர் ஆட்டமாகும் கதைத்தல்கள்" என்ற பெயரில் எனது விமர்சனத்தை எழுதி உள்ளேன். அவர்தானா? நீங்கள். உங்களை பதிவில் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் அக்கதையில் வெளியிட்டுள்ள பெயரை இங்கு நான் குறிப்பிடாமல் அப்பெரிய கட்டுரையிலிருந்து உங்கள் கதைப்பகுதியை இங்கு மறுபிரசுரம் செய்கிறேன்...
"நமது அடங்களுக்குள் வராது திமிறும், கதைக்கான மனநிலையில் சஞ்சரிக்கும் கதையாக 'அவனும் அவன் எனக்குச் சொன்ன செத்தவீட்டு நிகழ்வின் கிழவியும்' சொல்லலாம். அம்மம்மாவும் அப்பப்பாவும் மாறி மாறி இறந்து அடையாளமற்றதான நிலையில் உருவாகும் முரண். அதை ஒட்டி மாறும் சராசரி மனநிலை ஆகியவற்றறுடன் இதன் இறதிவரி உருவாக்கும் மாஜிக்கல் சென்ஸ், கதையை தலைகீழாக்கி கரைத்துவிட்டது ரசிக்கும்படி இருந்தது. வாக்கிய அமைப்புகளில் கதையின் நுட்பத்தை கொண்டு வர முயலும் இவர் புதிய கதை சொல்லியாக வருவதற்கான நம்பிக்கையைத் தருகிறார். இறுதிவரியில் உயிர்பெற்று எழும் கிழவி, வேறு யாரும் அல்ல நமது மூதாதைகளின் கததைசொல்லிப் பாட்டிதான். நாகரீகம் என்ற பெயரில் அணுவின் விஷப்புகைக்குள் வாழப்பழகிவிட்ட நவீன பகுத்தறிவு, வெள்ளை, ஆணாதிக்க நவீனர்கள் அதைக்கண்டு ஓடத்தான் செய்கிறார்கள். இந்தப் பதிணைந்து கதைகளில் (உயிர்நிழழில் வெளிவந்த 15 கதைகள்) இது ஒரு வித்தியாசமான கதை, தொழில்நுட்பரீதியில் பார்த்தால் fasinating ஆன ஒன்று. இப்படி வரும் நவீன கதைகள் வடிவங்களுடன் நின்றுவிடாது உள்ளுக்கள் பல தளங்கள் பற்றிய ஓர்மையுடன் வடிவமைக்கப்படுவது முக்கியம். இக்கதை தொழில்நுட்பத்தில் செலுத்திய கவனத்தை, பிரதியின் அழ் தளங்களில் செலுத்தவில்லை எனலாம். எப்படியோ நவீன வாழ்வை பழங்கதையாக சொல்ல முயல்வது, ஒரு வகையில் பழங்கதைகளை நவீனமாகப் புரிந்து கொள்ள உதவும்தானே. பாட்டிக்கு அந்நியமாகிவிட்ட பேரன் என்கிற கலப்பினமாதலின் (hybridization) அரசியலாக ஒரு பார்வை இழையோடுவதாகப் படுகிறது. இது பிரதிக்குள் ஆழமாக ஊடுருவவில்லை."
இவ்விமர்சனம் பெருங்கட்டுரையாக தொடர்கிறது அவ்விதழில். கலப்பினமாதல் என்பது பின்நவீனத்துவ காலத்தில் உருவான சர்வதேச நெருக்கடிகள் மற்றம் காலனித்துவ காலங்களில் உருவாகும் இரண்டு பண்பாடுகளின் கலப்பினால் உருவாகும் ஒரு புதியவகை தன்னிலையாகும். இந்த கலப்பு என்பது இரண்டு இனங்களின் கலப்பினால் உருவாகும் புதிய இனமாகும். இந்தியாவில் உள்ள படித்த elite எனப்படும் நடுத்தரவர்க்கமும், இன்றைய ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் அந்நிய தேசங்களின் ஊன்றப்பட்டு வளரும் குழந்தைகள் ஆகியவற்றையும் உதாரணமாகக் கூறலாம்.
-அன்படன்
ஜமாலன்.
செல்வராஜ் நன்றி.
இங்கே கார்த்திக்கை இழுப்பவர்களைக் கண்டிக்கிறேன்.
ஈழநாதன் அந்நியனிலிருந்து புடுங்கினேன் என்று காம்(யூ)வைக் கிண்டி எடுத்து கேஸ் போட வைப்பீர்களென்றுதான் படுகிறது. எதுக்கு இதெல்லாம்.
செந்தழல், ஏற்கனவே மீதி, இங்கே புனைவாகவோ பூனைவாயாகவோ தூங்குது. எதுக்குத் திரும்ப, வண்டி நிறைய மலம்?
ஜமாலன்
அதை வாசித்திருந்தேன். (உங்கள் உடல் நிலம் அரசியல் கட்டுரைத்தொடரையும் வாசித்தேன்) நீங்கள் நடத்திய சிற்றிதழுக்காக உங்களுடனும் அக்காலகட்டத்திலே தொடர்பு கொண்டிருந்தேன்.
(அந்த அறிதலிலேதான்,நீங்கள் பதிவுகளுக்கு வந்தபோது, வரவேற்பு என்று ஒரு பின்னூட்டமும் இட்டிருந்தேன் ;-))
உயிர்நிழல், எக்ஸில், அம்மா போன்ற சஞ்சிகைகளை இலவசமாகவே இப்போது கருத்தெதிர்ப்பிலே அவர்கள் கலந்து கொள்ளாமலே நான் எதிர்க்கும் சில நண்பர்கள் உட்பட இன்னும் சில நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள். அதற்காக அவர்களுக்கும் என்றென்றும் கடப்பாடும் (உள்ளே குற்றவுணர்வும்) கொண்டுள்ளேன்.
/இங்கே கார்த்திக்கை இழுப்பவர்களைக் கண்டிக்கிறேன். /
அதே அதேதான் நானும் சொல்லவந்தேன். நாங்கல்லாம் ஜிராக்ஸ் இவுருதான் ஒரிஜினல்.
அண்ணே.. வுட்டுடுங்க ஓடியேபோயிடுறன்.
Post a Comment