Wednesday, October 31, 2007

வண்டிக்கொல்லை


caryard

'07 ஒக்ரோபர் 31 புதன்
வெஸ்ற் ஹார்ட்போர்ட், கனடிகட், அகூநா

Monday, October 22, 2007

Saturday, October 20, 2007

Sunday, October 14, 2007

வன்மையாகக் கண்டிக்கிறோம் :-)




வன்மையாகக் கண்டிக்கிறோம்
14 ஒக்ரோபர் 2007 ஞாயிறு அன்று தமிழ்மணத்திலே நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற, நிகழப்போகும் கீழ்வரும் நிகழ்வுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்

1. "தமிழ்மணத்தில் உள்ள மக்களின் எதிரிகள் யார்?" என்று கேள்விகேட்ட தமிழரங்கம் இரயாகரனை "பிளேன் ரீ குடியுங்கள்" என்று கிண்டல் செய்ய டொக்டர். எம். கே. முருகானந்தனை ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் சார்பாக பூர்ஷுவா இன்ரலெக்சுவலாக அடையாளம் கண்டு கண்டித்தோம்

2. "பிளேன் ரீ குடியுங்கள்" என்று தன் கருத்தைப் பண்போடு சொன்ன டொக்டர் எம். கே. முருகானந்தனின் கருத்துச்சுதந்திரத்தினை அகில உலகப்புரட்சித்"தயாரிப்பாளருக்கு வந்த மிரட்டல்" என்று அறிக்கை விட்டு, தொடர்ந்து "கிட்னி மோசடி டாக்டருக்கு விழுந்த அடி" என்று அசுரத்தனமாக இடுப்புக்குக் கீழே குத்தும்வகையிலே மாற்றுக்கருத்து ஏதுமின்றிக் கிண்டல் செய்த வீராதிவீரனைக் கருத்துச்சுதந்திரத்தின் சார்பாகக் கண்டிக்கிறோம்

3. இப்பதிவினைப் போட்ட எம்மை ஏதாவது காரணம் கண்டு கண்டிக்கப்போகும் எவரையும் மேற்கூறிய இரண்டு காரணங்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எதிர்காலத்திலே கண்டிப்போம்

இப்படிக்கு
பாசிசபுலிப்பினாமிமாபியாபுட்சோல்யர்
அமெரிக்க ஏகாதிபத்தியச்சாப்பாடு ஏரியா பொறுப்பாளர்
மொக்கன் முழுக்கோழிச்சாப்பாட்டுக்கடை
:-)

Gimpel the Fool

அரைகுறை

Gimpel the Fool
"I am Gimpel the fool. I don't think myself a fool. On the contrary. But
that's what folks call me. They gave me the name while I was still in school. I
had seven names in all: imbecile, donkey, flax-head, dope, flump, ninny, and
fool. The last name stuck. What did my foolishness consist of? I was easy to
take in. ...."
- IBS

இலங்கைத்தமிழர்களின் சாதியமைப்பினைக் குறித்துப் பேசுவதற்கு நான் எத்துணை பொருத்தமானவனெனத் தெரியாது; தாய்வழியிலே யாழ்க்குடாவின் வடமராட்சியினையும் தந்தை வழியிலே வன்னியை முக்கியமாகவும் கொண்டிருந்தாலுங்கூட, கிழக்கின் மக்கள் கலந்த பட்டினத்திலே பதினாறாண்டுகள் வாழ்ந்து கண்டியின் செயற்கைக்கலப்பான பல்கலைக்கழக அமைப்பிலே இலங்கையை விட்டு நீங்கமுன்னான ஒன்பது ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன். யாழ்நகரின் சுற்றுப்புறத்திலே வாழ்ந்தது, ஆக ஈராண்டுகள். இப்படியான அமைப்பின்கீழே, இலங்கைத்தமிழரின் சாதியம் குறித்த அனுபவங்களை நேரடியாக நான் காண வாய்ப்பு மிகவும் குறைவாகவேயிருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்கள். சாதியமைப்பினாலே பாதிக்கப்படவோ பாதிக்கவோ செய்யும்வகையிலே என் 'சாதி' எதுவென்றும் அறிந்துகொள்ளவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. இவ்வகையிலே, இரயாகரன், ஸ்ரீரங்கன், தலித் மகாநாடு நடத்துகின்றவர்கள் ஆகியோருக்கு இருந்திருக்கக்கூடிய, உணர்ந்திருக்கக்கூடிய பட்டறிவு எனக்கு இல்லை. ஆனால், இயலுமானவரை அதன் அழுத்தம், வரலாறு பற்றி நிறைய வாசித்திருக்கின்றேன். கீழே வரும் இரயாகரன், ஸ்ரீரங்கன் இவர்களுக்கான அவர்களின் கூற்றுகளின் மேலான சுருக்கமான பதில்களுக்கு, இந்த வாசிப்பும் வாழ்ந்த சூழலின்மீதான கவனிப்பும் போதுமானதென்று நம்புகிறேன்.

ஈழத்தின் ஐந்துவயதுக்குழந்தைக்கும் தெரியும் ரிவோல்வருக்கும் பிஸ்டலுக்குமே இன்றுவரை வித்தியாசம் தெரியாத நான், இயக்க ரீதியிலும் தத்துவ ரீதியிலும் நிறையச் செயலாற்றி, (புலம்பெயர்ந்து) ஒதுங்கியிருக்கும் பதிவர்கள், பதியாதவர்கள்மத்தியிலே இவற்றினைப் பற்றி எழுதுவதிலேயிருக்கும் தயக்கம் நிறைய. ஆனாலும், இரயாகரன், ஸ்ரீரங்கன், ஷோபா சக்தி, சுகன், அவர்களைப் போன்ற போராடியும் இன்னும் ஓயாத சிலரின் அளவு விரிந்த பெரும்பார்வையின் இடையே விழக்கூடிய நடைமுறைவிரிசல்களைக் காலத்தின் நலன் கருதிச் சுட்டவேண்டிய முரண்படவேண்டிய அவசியமிருக்கின்றது. இதனால், அவர்களின் மீதான என் மதிப்பு அதற்கான தேவைகளிலே குறையாததென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்து இராம் போன்றவர்களினை ஒத்த இணையபிம்பங்களின் முன்னாலே இப்படியாக வாதம் செய்வது எனதும் (இங்கே எதிர்த்துப் பேசுகின்றவர்களினதும்) நலன்களுக்கு ஊறு விளைவிக்குமென்பதையும் இப்படியான இணையபிம்பங்கள் தமது நலன்களை முற்கொண்டு செல்ல வசதியாகப்போகும் என்றளவிலே, இயன்றவரை இத்தனைநாட்கள்போல, இனிவருநாட்களிலும் வேண்டாவாதங்களைத் தவிர்க்கமுயல்வேன். ஆனாலும், எனதும் என்னைப் போன்ற ஈழத்தார் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ளச் சில சந்தர்ப்பங்களிலே இரயாகரன், ஸ்ரீரங்கன், விபு போன்றோருடனான வாதங்களும் தவிர்க்கமுடியாதவை. அதன்வழியே இவ்விடுகை.

==========================

இராயகரன்

இராயகரன் தனது புலிகளும் சாதீயமும் என்ற இடுகையின் இடுகை முன்பதிவாகவும் பின்னூட்டங்களாகவும் நிறைய அல்லது நிறைத்து எழுதியிருக்கின்றார். முன்னூட்டத்தைப் பொறுமையுடன் வாசித்து ஒரு பதிலிட்டேன். அதற்கு இன்னொரு பின்னூட்டம் இட்டார். அதற்கு ஒரு பதிலிட்டேன். விவாதத்துக்கு வெளியேயான பின்னூட்டமும் உள்ளடங்கியதாக அனுமதித்த பின்னூட்டத்தினை அகற்றிவிட்டார். அதன் பின்னால், பின்னூட்டங்களாக நுரைக்க நுரைக்க முன்னூட்டத்தினையும் என் பின்னூட்டத்துக்குப் பதிலென்றும் கருதிக்கொண்டு நிறைத்திருக்கின்றார். அதற்கு நன்றி தெரிவிக்கபோதிலே அவருடைய பதிவின் தலைப்புக்கும் முன்னூட்டம் & பின்னூட்டங்களுக்கு என்ன தொடர்பு என்று விளக்க மறந்திருக்கின்றார். இவ்விடுகையிலும் பின்னூட்டங்களிலும் அவருடைய கட்டுரைகள் எல்லாம் இருபடிச்செயன்முறையானவையாக இருக்கின்றன.

முதற்படி: "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று திரும்பத் திரும்ப எடுகோளாகச் சொல்தல்

இரண்டாம்படி: யாழ்மேலாதிக்கத்தின் கெடுதல்கள் என்று நிறைய எழுதுதல்

மூன்றாம்படி: புலிகள் தாங்கள் சாதியத்தினை மறுப்பவர்களென்று சொல்லியிருந்தாலோ அல்லது அதனுள்ளிருக்கும் ஒடுக்கியசாதி எனக் கருதப்படும் அங்கத்தவர் எனக் கருதப்படும் ஒருவர் சாதியமறுப்பினைச் செய்தால், அவரை அக்கருத்துக்காக கடிதல்

நான்காம்படி: புலிகள் இரயாகரனின் தத்துவத்தின்படி இயங்கவில்லை என்பதற்காக ஏகாதிபத்தியம் போன்ற இன்னோரன்னவற்றின் எடுபிடிகளாகி, தத்துவவெறுமைக்காகத் திட்டுதல்

ஐந்தாம்படி: இத்தனையின் காரணமாக, "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று 'நிறுவுகின்றாராம்'

அதாவது, என்ன செய்கின்றாரென்றால், புலிகளின் சாதியம் தொடர்பான தனது கருத்தை எடுகோளாகச் சொல்கிறார். பின்னர், யாழ்மேலாதிக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து புலிகளின் வேறு விவாதத்துக்குரிய செயற்பாடுகளைப் பட்டியலிட்டு (இரத்தினதுரை புலம்பெயர்ந்தவர்களைக் கடிந்தது & புலிகளின் மற்றைய இயக்கங்கள்மீதான எதிர்வுகொள்ளல்கள்) அல்லது புலிகளின் சாதியமறுப்புக்கருத்துகளையே கிண்டல் செய்து (பாலசிங்கத்தின் கருத்து, இரத்தினதுரையின் கருத்து) எழுதுகிறார். பிறகு, புலிகள் மார்க்சிய தத்துவத்தின்படி நடக்கவில்லையென்பதைப் பெரிதாக விளக்குகின்றார் ("புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான்."). இறுதியிலே யாழ்மேலாதிக்கம், புலிகளின் இன்ன பிற செயற்பாடு & சாதிமறுப்புக்கூற்றுகள், மார்க்ஸியதத்துவத்தினை இரயாகரன் எதிர்பார்க்காதவிதத்திலே பயன்படுத்துதல் இவையனைத்தும் எதுவித தர்க்கக்கோவையோ வருவிப்போ தொடர்போ இன்றி இரயாகரனின் எடுகோளான "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்பதாக ஆகிவிடுகின்றது.

வாசிப்பவர்களின் (அல்லது எழுதியவரின்) புத்திசாலிதனத்தினையும் தொடர்பாக்கிப் பேசுதிறனையும் கேலிக்கும் கேள்விக்குமுள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுதி இரயாகரனின் முன்னூட்டமும் பின்னூட்டங்களும். முப்பதினாயிரம் சொற்களிலே அவர் வளர்த்துவிட்ட வசனவெளியிலே கொண்டுவந்து புலியை மேயக் கட்டுகிறார்.

அதைத்தான் நான் என் இரண்டு பின்னூட்டங்களிலும் சுட்டிக் கேட்டிருந்தேன். கொஞ்சம் பொறுமையோடு அவருடைய கட்டுரையிலிருந்து வழக்கமான சொற்பதங்களைப் பிரித்து வாசிக்க முடியாதவர்களுக்கு நான் கீழே அவரின் கட்டுரைகளிலிருந்து மூன்று பந்திகளைப் பிரித்துத் தந்திருக்கின்றேன். அவற்றின்மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றாரென்று அவருக்குத்தான் வெளிச்சம்.

/யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் மக்களை பிரதிபலிப்பதில்லை. யாழ் மேலாதிக்கம் மிக குறுகிய ஒரு பிரிவை அடிப்படையாக கொண்டது. இது யாழ் பிரதேசத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க வேணடு;மென்பதல்ல. சிங்கள இனத்தில் பிறந்த ஒருவன் கூட யாழ் மேலாதிக்கத்தைக் கொண்டு இருக்கமுடியும். இது பிறப்புக்குள் உட்படுவதில்லை. ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் கிழக்கைச் சேர்ந்தவன் ஒரு முஸ்லீம் கூட யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யமுடியும்./

என்ன சொல்கிறாரென்று யாரேனும் அவரிடம் கேட்டுச் சொல்லமுடியுமா? அப்படியானால், 'யாழ் மேலாதிக்கம்' என்றால் என்னதான்? இவ்விடத்திலே 'யாழ்' என்பதற்குப் பதிலாக 'பாழ்', 'தாழ்', 'சால்', 'பால்', 'குழல்', 'பறை', 'வீணை', 'பூனை', 'யானை' எதைப்போட்டாலும் மேலாதிக்கக்குழப்பமே வருகின்றது.

/"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாராக இல்லை"/

இதைத்தானே முட்டி முட்டி நானும் வேறு சிலரும் சொல்கிறோம். இதை நாங்கள் சொன்னால், பாசிசப்புலிப்பினாமிமாபியா, இரயாகரன் சொன்னால், புரட்சிக்கருத்தா? ("With us or with Terrorists" என்ற புஷ்வகை "detailed dialectic :-)" அராஜகம்) இதனால் என்ன சொல்ல வருகின்றாரென்றால், யாழ்சாதியமேலாதிக்கம் உச்சம் பெற்றிருந்த புலிகள் அதிகாரத்தைக் கொண்டிராத காலத்திலேயிருந்த நிலைமையிலும்விட இப்போது புலிகளின் அதிகாரமுள்ள காலத்திலே நிலைமை மேன்மைபெற்றிருக்கின்றது என்பதாகத்தான் எனக்குப் புரிகின்றது. பிறகு எதற்காக, யாழ்மேலாதிக்கத்தினைப் புலிகள் விதைத்து உரம்போட்டு உற்பத்தி செய்து விற்பனைக்குச் சந்தைப்படுத்துகின்றார்கள் என்ற பாங்கிலே என்று எழுதுகின்றார் என்று சொல்வாரா? பாலசிங்கம் "ஒரு காலத்திலே இவை ஒழியும், ஒழிப்போம்" என்று சொன்னதை வைத்துக் கிண்டல் செய்கின்றவர், சாதியத்தின் இத்தேய்நிலையைக் கருத்திலே கொண்டால், பாலசிங்கத்தின் கருத்தினை ஒரு முகப்பெறுதிக்காகவேனும் ஏற்றுக்கொள்ளலாமே?

இப்படியாக, முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடும் நிறுவல் செய்யும் அவர், கடைசியிலே "இஃதென்ன தர்க்கம் பிறழ்ந்த நிறுவல்?" என்று கேட்டால், /"புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" / என்ற குதர்க்கக்கருத்தினை முன்வைக்கின்றார். இவரோ எங்கும் "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம்" என்று நிறுவவில்லை; செய்ததெல்லாம் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு தொடங்கியதும் பிறகு இரண்டாம்படி தொடக்கம் ஐந்தாம்படிவரை அவருடைய யாழ்மேலாதிக்கம், இரயாகரனின் மார்க்ஸியமற்ற புலிகள் என்பனவற்றைப் பேசியதும் கடைசியிலே மீண்டும் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு முடித்ததுமே. எடுகோளுக்கும் நிறுவப்பட்டதற்கும் இதுவரைக்கும் அவருக்கு வித்தியாசம் தெரிந்ததாக எமக்குத் தெரியவில்லை. இத்தனைக்குள் நிறுவப்படாத கருத்தை மறுத்து, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது எங்கள் கடமை" என்று செய்ய என்ன தேவை இருக்கின்றது?

ஒன்றை ஒருவர் நிறுவின பின்னாலேதானே, தகர்க்கவேண்டியவர்கள் இல்லையென்று நிறுவமுடியும்? இங்கே நான் நிறுவுதல் என்பது சாதி என்பது குறித்துப் புலிகளைச் சம்பந்தப்படுத்திப் பேசும்போது, சாதி என்பதை முன்னிறுத்தி அதை வளர்க்கப் புலிகள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதைச் சுட்டி வாதத்தை எடுத்துச் செல்வதே.

ஆனால் இரயாகரனின் பதிவோ, பின்னூட்டங்களோ அப்படியான வாதத்தைச் செய்வதில்லை. (முரண்நகையாக) சோ ராமசாமி என்ற அதிதீவிரவலதுசாரி ஆசாமி முகமது பின் துக்ளக் நாடகத்திலே,கம்யூனிஸ்டுகட்சி ஆசாமிப்பாத்திரமொன்றினூடாக நக்கல் செய்யும், "மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள்" எனும் வகையிலேதான் வாதம் செய்கின்றார். இப்படியாக, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" என்று வேறு கேட்கும் இரயாகரனுக்கு, "சப்பையைத் தவிர்த்துவிட்டு, நெல்லைக் காட்டுங்கள்; அரிசியையும் உமியையும் பிரித்துத்தருகிறோம்." என்று சொல்வதைத் தவிர வேறேதும் பதில் அவசியமில்லை.

இலங்கைத்தமிழரிடையேயிலேயிருக்கும் பிரதேசவாதம், சாதியம் என்பனவற்றினை மறுக்கவில்லை. ஆனால், அவற்றின் வடிவத்தினையும் அளவினையும் திரிப்பதினையும் மாற்றுவதையும் பின்னால், சம்பந்தப்படாத கொழுக்கியிலே கொண்டுபோய்க் காயவிடுவதையும் இரயாகரன் செய்வதுதான் தவறென்று சொல்கிறேன். புலிகள் மீது விமர்சனங்கள் சில விடயங்களிலே எனக்குமுள்ளது; ஆனால், சாதியத்தினை அவர்கள் வளர்க்கின்றார்களென்பது அதிலொன்றில்லை. அக்கருத்தினை மாற்றிக்கொள்ள, இரயாகரனின் தர்க்கம் கெட்ட குதர்க்கவாதம் பயனாகவில்லை.

==========================
ஸ்ரீரங்கன்

ஸ்ரீரங்கன் தன் "சாதியமைப்பும் தேசியவிடுதலைப் போராட்ட அவநம்பிக்கைகளும்,தலித்துக்களும் " பதிவில் இரண்டு 'அற்புதமான' கருத்துகளைச் சுட்டியிருக்கின்றார். [இவருடைய அகதி பதிவிலே வந்து புலம்பெயர்ந்த வெண்சட்டைப்போராளி மாசிலாமணி பின்னூட்டமிட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. சென்ற வாரத்தின் இரயாகரனின் இடுகைப்பின்னூட்டத்தோடு, காணாமற்போனவர், ஸ்ரீரங்கன், இரயாகரன் இப்படியான அகதிவழிப்புலம்பெயர்ந்தவர்கள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை உத்தேசமாக நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், இப்போது மிகவும் தந்திரத்தோடு ஈழத்தின் தலித் ஒடுக்குமுறைக்காகக் கண்டனம் தெரிவிக்கின்றாராம். வாழும் நாட்டிலே பெயர்ந்திருப்பவனையே தன் பெயர் கெடுக்கும் அகதித்தமிழன் என்று சொல்லி ஒதுக்கும் இவர் கண்காணாத்தேசத்திலிருக்கும் தலித்துகளுக்காக இன்று மீண்டு கண்கலங்குவது வியப்புக்குரியதல்ல]

/இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!/

இலங்கைத்தமிழ்வேளாளசமுதாயத்தின் திமிரினை ஆறுமுகநாவலர் தொட்டு, இராமநாதன் ஊடாக இன்று வரை வாசித்துவருகிறோம். முன்னைக்கு இற்றை தேயும் தன்மை தெரிந்தாலுங்கூட, இன்னுமிருக்கின்றதென்பதை ஆங்காங்கு இணையத்திலேகூடக் காணக்கூடியதாகவிருக்கின்றது. ஆனால், இப்படியான அவநம்பிக்கை தரும் வேளாளர்குடிவந்தவர்களின் ஒரு பகுதியினரே தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து அங்கு தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் இடைநிலைச்சாதியினரூடாக ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாட்டின் அரசியல், பொருளியற்சூழ்நிலைகளை கனடா/ஐரோப்பாவிலிருந்து விற்கும்போது இந்த வேளாளமேலாதிக்கத்தின்மீது என்ன நம்பிக்கையை ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கவேண்டுமென ஸ்ரீரங்கன் எதிர்பார்க்கின்றார்? தன்னுடைய ஓர் இடுகையிலே தானே வேளாளர் என்பதை மறுத்தாலும் தலித் என்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தான் பேசமுடியாது என்று சுட்டியவர், இங்கே கனடா/ஐரோப்பாவிலிருந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தவருக்காக தம் சாதியை மறுக்கும் வேளாளசக்திகள் போராடுவதை ஒடுக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளலாமென்று நம்புவது எவ்விதம்?

இதன் வழியிலேயே நான் கேட்ட, "எந்த நம்பிக்கையிலை திருமாவளவனையும் கிருஷ்ணசாமியையும் விட்டிப்போட்டு அ. மார்க்ஸை பிரதிநிதியா கொண்டு வந்து சுகனும் ஷோபாவும் கற்சுறாவும் ஸ்டாலினும் யாழ்ப்பாண தலித்துக்குத் தருகினம் எண்டும் ஏட்டுச் சொல்லுங்கோவன்" இற்கு, ஸ்ரீரங்கன் சொல்லும் பதில் மறைமுகமாகத் திறந்த வாயை மூடாமல் வைத்திருக்கச் செய்கிறது (இரயாகரன் என்றால், நேரடியாகவே, "வாயைப் பொத்திக்கொண்டுபோ; நான் சொல்லும் புரட்சிக்கொட்டாவிதான் சரியான போராட்டம்" என்றே சொல்லியிருப்பார்):

/அ.மார்க்ஸ் தமிழ்ச்சமூகத்தில் மிக முக்கியமான சமூகவியலாளர்.அவரை சாதிரீதியாக எவரும் பார்ப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் மனிதர்களுக்குத் தோழமையாகப் பார்க்கலாமே?அடுத்து திருமாவளவன்...இவர் ஓட்டுக்கட்சி அரசியல் மாயைக்குள் இருப்பவர்களுக்குப் பிதாவாக இருக்கலாம்.நமக்கல்ல./

ஸ்ரீரங்கன், அ. மார்க்ஸ், திருமாவளவனிலும்விடத் தமிழகத்தலித்துகளுக்குச் சிறந்தவர் என்று சொல்கிறார். அவரின் சாதியையும் பார்க்கவேண்டாமென்று சொல்கிறார். தமிழகத்தின் தலித்துகள் அல்லவா, அவர்களுக்கு சமூகவறிஞர் (சமூக + அறிஞர்) மார்க்ஸ் முக்கியமா, கூட்டுக்கட்சி மாறினாலும் தலித் நலனைப் பிரதிபலிக்கக்கூடிய (பிரதிபலித்த) திருமாவளவன் முக்கியமா என்று தீர்மானிக்கவேண்டும். ஈழத்து வேளாள அடையாளத்தை மறுத்துத் தலித்தின் தலைமையைத் தலித்தே கொள்ளவேண்டுமென்று சொல்லும் ஸ்ரீரங்கன் சொல்லமுடியாதல்லவா? இப்படியான குழப்பங்களே ஸ்ரீரங்கனின் பதிவுகளிலே மாறிமாறிவரும். குறைந்தபட்சம், ஸ்ரீரங்கன் இரயாகரன் மாதிரி தொடர்ச்சியாக அரூபக்கருத்தாக்கங்களிலே தனது விருப்பஎதிரிகளையே எப்போதும் கைவசமிருக்கும் சுட்டுச்சொற்களோடு திட்டிக்கொண்டிருப்பதில்லை என்பது ஆறுதலான விடயம்.

=====================

Saturday, October 13, 2007

கானகத்தொளி



'07

அவனும் அவன் எனக்குச் சொன்ன ஒரு செத்தவீட்டு நிகழ்வின் கிழவியும்

பழசு - 10

அவனும் அவன் எனக்குச் சொன்ன ஒரு செத்தவீட்டு நிகழ்வின் கிழவியும்

உள்ளுணர்வுக்கும் சகுனத்துக்கும் -நிச்சயமாக- வரைவிலக்கணத்தின்படி, வரைவிலக்கணத்தினை ஏற்படுத்துகின்றவர்கள் எவர் என்பதைப் பொறுத்து, நிகழ்வு-கருத்து முதல் வாதங்கள் அடிப்படையில் வித்தியாசங்கள் நிறைய உண்டு. உயிர்கள், உடமைகள் அவிந்து கொண்டிருக்கும் நாடொன்றில், காலை மூன்று மணிக்கு, மாணவர் விடுதிக் கதவொன்று அதிரத் தட்டப்படுதல், நிச்சயமாக அந்த ஆண்டு யாருக்குப் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது என்று தனக்குச் சொல்லப்படுவதற்கல்ல என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அந்த உணர்வுதான் உள்ளுணர்வு என்றால், அந்தத் தட்டலினைச் சகுனம் என்று சொல்வதா அல்லது செய்திப் பரிவர்த்தனை மொழி என்று கொள்வதா என்று வழக்கம்போல தன்னைத்தானே விதண்டாவாதக்கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அவனுக்கு நேரம் இருக்கவில்லை. விடுதி உணவுண்கூடத்துத்தொலைபேசியில் தெளிவற்ற பெண்குரல் அவனுக்கு என்பதாய்ப் பீடிப்புகைக்குள்ளாலும் குளிருக்குத் தலையை மூடிய துண்டுக்குள்ளாலும் தெரியவந்தது. மூன்று நிமிடங்களில் நான்கு மாடிகள் இறங்கி, நடைகூடத்தூடாய்(க்) க/நடந்து, திரும்ப இரண்டு மாடிகள் மாடிக்கு ஒரு நிமிடமாய் ஏறி, கிடையாய் விரிந்திருந்த கூடத்து நடைபாதையில் ஒரு நிமிடங்கள்போனதுவரை தான் என்ன எண்ணினான் என்பதை அவன் எனக்கு இன்றைக்கு வரைக்கும் சொல்லவில்லை. (அதற்காக நான் மகிழ்ச்சி அடைவதுண்டு; சொல்லியிருந்தால், எதையும் தவிர்க்காமல் முழுமையைச் சொல்லவேண்டிய குற்ற மனப்பாங்கில் இங்கே அதையும் எழுதி நேரத்தினையும் இடத்தினையும் அடைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கலாம்).

தொலைபேசியில் (இந்த நிகழ்ச்சியினை என்னிடம் சொன்னபோது, இடையில் நிறுத்தி, அன்று தொலைபேசி தனக்கு யாரிடம் இருந்து வந்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன் என்பதை ஒரு வற்புறுத்தற் தொனியுடன் கேட்டான்) அவன் அம்மா (நானும் தான் இந்த நிழழ்வினைச் சொல்லக் கேட்டவர்களில் மிக அதிகமானோரைப் போலவே, காதலி என்று பதில் சொன்னதாகச் சொல்லிச் சிரித்தான். சிலர் தனக்குக் கூறியதாக அவன் கூறிய பதிலைச் சொல்ல எழுத்து தர்மம் இங்கே எனக்கு இடம் கொடுக்கவில்லை). தாயார் விடயத்தை முழுக்கச்சொல்லமுன்னர், தொலைபேசி, கம்பி அறுந்து போன 'cablecar' போல டங்... ஒரே அடி... தொனி விழுந்து விட்டது (நாங்கள் இந்த நிகழ்வினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே இத்தாலியில் பயிற்சியிலிருந்த போர்விமானம் தாக்கி ஒரு cablecar விழுந்திருந்து சிலர் உயிரிழந்திருந்தால், அவன் எனக்கு தொலைபேசி வந்த அன்றைய விடிகாலை தன்மனதில் தொலைபேசி அறுந்துபோனது எந்த உணர்வினை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதைத் தெளிவாகப் பதிய வைக்க அந்தவாறு சொல்லியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்). அத்தனைக்குள் அவன் புரிந்துகொண்டாதால் குழம்பமுற்றது ஒன்றாற்றானாம்; "அம்மா இறந்துவிட்டா." "இதில் என்ன குழப்பம்?" என்று நீங்கள் கேட்டக்கூடியதுபோலத்தான் நானும் கேட்டேன்; 'அம்மம்மா' என்று அழைக்கப்படும் அவனின் அம்மாவின் அம்மாவும் 'அப்பம்மா' என்று அழைக்கப்படும் அவனின் அப்பாவின் அம்மாவும் அவன் வீட்டிலேயே அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்திருந்தனர். அவனின் அம்மா, இருவரையும், அம்மா என்றே அழைத்து வந்தார். ஒருவர் மிகவுரிமையுடனும் கொஞ்சுதலுடனும் 'அம்மா;' மற்றவர், மிகமரியாதையுடனும் கொஞ்சம் பயத்துடனும் 'அம்மா.' இதில் எந்த அம்மா இறந்து போனார் என்று தெளிவாகச் சொல்லுவதற்குத் தொலைபேசி மீண்டும் ஒலிக்கவில்லை; அவனும் அதைப் பெரிதாக ஓர் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக எதிர்பார்த்து நிற்கவில்லையாம். சொல்லப்போனால், நாடு இருக்கும் நிலையில் இப்படி ஓர் இடையே வெட்டிப்போகும் ஒற்றைத்துளிநேரத் தொடர்பு கிடைக்க, அம்மா யார் வீட்டுத் தொலைபேசிக்கு யார் துணையோடு போயிருக்க முடியும் என்பதையும் தம்பிக்கும் அக்காவுக்கும் செய்தி போயிருக்குமா என்பதையும் எண்ணித் தன்னைக் கொஞ்சம் கிடைத்த தரவுகளில் இருந்து தெளிவு பண்ணிக்கொள்ளவே அங்கே தான் நின்றிருக்கக்கூடும் என்று தான் இப்போது கருதுவதாக, கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு, இரண்டு சுட்டுவிரல்களையும் ஒன்றால் ஒன்று தட்டிக் கொண்டு எனக்குச் சொன்னான்.

பின்பு, காலை பல்கலைக்கழத்துக்கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் பிரதான நகரம் போய், அங்கிருந்து வீடு போவதற்கான பேரூந்து கிடைக்குமா என்பதை நான்காம்மாடி அடிவரைக்கும் யோசித்துக்கொண்டு வந்தான் என்றான். பின் மாடி ஏறி முடியும்வரைக்கும் (இத்தருணத்தில் ஆறரை நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாயும் மாடிப்படிச்சுவர்களை, ஓர் இசைநிகழ்ச்சி நடத்துனரின் இலாவகத்தோடு கைகளால் விரல்களை நளினித்துத் தட்டியபடி தான் ஏறியிருக்கமுடியும் என்றும் நினைக்கின்றான். ஆனால், சிந்தனையில்) மூன்று நான்கு நாட்கள், குறைந்தபட்சம் ஈமைக்கிரியைகள் முடியும்வரை தங்கிவர என்னவென்ன பொருட்கள் பெட்டிக்குள் வைக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு நடந்தான் (என்பதால் தந்து கைகள் அந்த ஏற்றக்கணங்களில் என்ன பண்ணியதென்று என்றைக்குமே திட்டவட்டமாக அறியமாட்டான் என்பதை எனக்குச் சொல்லும் போது, கையிலே சீனாவிற் செய்யப்பட்ட ஒரு பென்சிலை எடுத்து வைத்து, இசைநிகழ்வுநடத்துனரின் இலாவகம் தனக்கு வருகின்றதா என்பதைச் சரிபார்த்தான்). கதவைத் திறந்து, அறை நண்பனிடம் விடயத்தைச் சொல்ல முயலும்போது, குரல் கம்மிச் செரும வேண்டியிருந்தபோதுதான், தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருப்பதாகவும் கொஞ்சம் அழவும்கூடச் செய்திருப்பதாகவும் தெரிந்தது. "இறந்தது, அம்மம்மாவா, அப்பம்மாவா?" என்று நண்பன் கேட்டபோது, தான் இன்னும் தெளிவு படுத்திக் கொள்ளவில்லை என்றும் உண்மையில் தெளிவுபடுத்திக் கொள்ளமுயன்று தோற்றுப்போனதாகவும் சொன்னபோது நண்பன் ஆச்சரியப்பட்டு, 'அப்படியான தெளிவற்றநிலை அவனுக்கு இன்னும் பயத்தையும் இறப்பின் பயங்கரத்தினையும் கூட்டுகின்றதா' என்று வினாவி, அவன் பதில் சொல்லமுன்னரே, அப்படி பயப்பட வேண்டாம் என்றும் சொன்னான். தெளிவின்மையில், பயப்பட என்ன இருக்கின்றது என்று இவனுக்குப் புரியவில்லை. என்னிடம் கேட்டான், "ஒரு கெடுதலான நிகழ்வு ஒன்று நிகழ்ந்ததென்று தெரிந்து அதற்காக மனதைப்பக்குவப்படுத்திக் கொண்டவனுக்கு, அத்தகைய நிகழ்வில் உறுதிப்படாமல் இருக்கும் தெளிவின்மையின் புதிர் பயத்தினைக் கூட்டுமா? அப்புதிர் தீர்க்கப்படுவது, ஏற்பட்ட துயரின் சுமையினைத்தான் தானும் கூடச் சேர்த்துப் பகிர்ந்துகொள்ளுமா?" எனக்கு என் வாழ்க்கையில் நிகழ்ந்த அவ்வாறான சம்பவங்களூடாக மீளப்போய்த்தான் அவனது கேள்விக்குப் பதிலிறுக்கமுடியும் என்று பட்டது; அப்படியே அவனுக்கும் சொன்னேன். ஆனால், அப்படியான நிகழ்வுகளைச் சிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஒரு பொழுதுபோக்குக்காகக் கதைகேட்போனுக்கு இருக்காததால், கதை கேட்ட நாட்களின் பின்னரும் கூட நான் அறைச் சாளாரங்கள் ஊடாக, நட்சத்திரங்களைப் பார்த்திருந்த வேளைகளிலும், என் ஊரின் கடல்மணலினையும் சந்திரனையும் அருகில் இல்லாத அவளையும் பற்றியே யோசித்திருக்கின்றேன்.ஆனால், அவன் தனக்கு அன்றைய மதியம் அப்புதிர் அவிழ்ந்தபோது, அப்படியேதும் மாற்றம் தன்னுட் தோன்றவில்லை என்றான்.

வார இறுதிக்கு முன்னால், வரப்போகும் இரண்டு நாட்களிலும் தனக்கு இருக்கும் ஆய்வுகூட வகுப்புகளின் செய்துகாட்டுநர்களுக்கு விடயத்தைச் சொல்லி, வரும்வாரம் வந்தவுடன் அவற்றைத் தான் செய்து முடித்துவிடுவேன் என்பதையும் கூறச்சொன்னான். பின்னர், பெட்டியை அடுக்கும்போதும் பேருந்தில் ஏறி அருகிலிருந்த நகர் அடையும் வரைக்கும் அடிக்கடி தன் அடையாளவட்டை பத்திரமாக இருக்கின்றதா என்பது தவிர்ந்த கணங்களில் இறந்தது அம்மம்மாவா, அப்பம்மாவா என்பதை விளங்கிக்கொள்ள அம்மாவின் கூற்றின் சொற்களையும் தொனியையும் அவர்களைப் பற்றிய தனது உள்ளப்பதிவுகளையும் கூறுபோட்டு அலச அலச மண்ணியல் வகுப்பில் புதைமணல் எப்படி எந்தளவு நாங்கள் எம்ப எம்ப உள்ளே எங்களைத் தள்ளுகின்றது என்பதற்கு மணல் நிரப்பப்பட்ட ஒரு தாமரை மொட்டு வடிவ இரப்பர்க்குமிழினையும் அதன் துவாரமுனையிற் பொருத்தப்பட்ட கண்ணாடிக்குழாயில் அவனது பேராசிரியர் வகுப்பிற் செய்து காட்டிய பரிசோதனை ஞாபகத்திற்கு வந்து குழப்பம் செய்து சிதறல் பண்ணியது; குமிழில் உள்ள மண்ணைப் பிதுக்க, வகுப்பில் எல்லோரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, கண்ணாடிக்குழாயில் மணல் கீழிறங்கியது. வாசல்வரை சாரத்துடன் வந்து நின்று ஏற்றிவிட்ட நண்பனுக்குச் சரியாக "போய் வருகின்றேன்" என்பதைச் சொல்லியிருந்தானா என்பதை திரும்பி வந்த மற்றைய கிழமை அவனிடம் கேட்டுத்தான் தெரிந்து
கொண்டானாம். நண்பன், "உனக்குக் கிடைத்த செய்திக்கு, நீ சொல்லாமற் போயிருந்தாற்கூட குறைப்பட்டுக் கொள்ளமாட்டேன்" என்றான்.

அம்மம்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்று பல காரணக்கூறுகள் ஒன்றாக அவனுக்குப் பேரூந்தின் குலுக்கலுக்குள்ளூம் அழுத்திச் சொல்லினவாம். இவ்விடத்தில், அவன் அம்மம்மாதான் என்ற அந்த முடிவுக்கு வர, அவனின் காரணங்கள் தாமாகவே அப்பக்கத்தில் அமைந்திருந்தனவா, அல்லது அவனின் உள்ளுணர்வுதான் அவற்றை அத்திசையிற் திமிறத்திமிற அழுத்தி நகர்த்தியதா என்பதைக் கேட்கவேண்டும் என்ற உந்துதல் என்னிடம் ஏற்பட்டது; ஆனால், அ·து அவனின் கதை சொல்லும் சுவராசியத்தினைக் கெடுத்து, அவனின் சொல்லோட்டத்தினை மந்தித்து விடுமோ என்று அச்சம் கொண்டு அதைக் கேட்கவில்லை; அவன் தன் கதையில் மற்றோர் எந்த அளவுக்குச் சுவராசியம் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் கூர்மையான கவனம் செலுத்தாது, தன் கதையை ஒரு நடிகனின் பக்குவத்துடன் வெளிக்கொணர்வதில் மட்டுமே தன் நாட்டத்தினைத் தேக்கிவைத்து மகிழ்வதாக எனக்குப் பட்டது.அம்மம்மா, அப்பம்மாவிலும்விட மூன்றுநான்கு ஆண்டுகள் வயதினாற்கூடியவர் என்பது அவரின் உடல்நிலையிலும் மனநிலையிலும்கூடத் தளர்ச்சியினால் வெளிப்படையாகத் தெரிந்தது. இதைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அவன் தன் குரலில் ஒரு செயற்கைத்தளர்வினைக் கொணர்ந்து முகச்சுளிப்பினாலும் அங்கசைவினாலும் எனக்கு ஒரு முதிர்ந்து தளர்ந்த பெண்ணை உருவகித்துக் காட்டமுயன்றான். என் மனப்பதிவுகளில் நான் தளர்ந்த முதியபெண் என்று கருதிக்கொண்டிருக்கும் பிம்பத்துடன் அவனின் உருவகிப்பு சீராகப் பொருந்திக் கொள்ளாமல் விம்பச் சட்டவோரங்களில் உராய்ந்துகொண்டதால், அவனின் முயற்சி தோல்வியில் முடிந்ததை அவன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. அடிக்கடி இறப்பைப் பற்றிப் பேசிப்பேசி, விடியற்காலைக்கனவுகளில் தம்மை எடுத்துச் செல்லக் காலன் பாசக்கயிற்றுடன் வருவதாகச் சொன்னவர்கள் சீக்கிரத்தில் - மூக்கிற் பரு மொட்டாய் முகிழ்த்து முளைக்கவே- இறப்பதைக் கண்டிருக்கின்றானாம். அவர்களின் அந்தப்பிரமை அவர்களின் வாழ்வதற்கான அவா விட்டுப்போய், தம்மை இறப்புக்குத் தயார்ப்படுத்திக் கொள்ளும் உணர்வின் வெளிப்பாடாகக் கருதிக் கொண்டிருக்கின்றான். அம்மம்மாதான் இறந்திருக்கவேண்டும்; இல்லாவிட்டால், அம்மா, இந்த அளவுக்கு நெகிழ்ச்சி காட்டி இருப்பாரா என்பது, பேரூந்து நடத்துனருக்கு அதிகாலைவேளையில் நூறு ரூபாத்தாளினை, ஒரு ரூபா எழுபத்தைந்து சதப்பயணச்சீட்டுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, தன் அவசரப்பயணத்தின் மூலகாரணப் பரிதாபத்தை, தன் குற்றத்துக்கான பாவ சங்கீர்த்தனமாக விற்க முயற்சித்தபோது மனதிற்பட்டது.

அம்மாவுக்கு, அப்பாவைத் திருமனம் செய்ய இருக்கும் வேளையிலேயே அப்பம்மாவைத் தெரிய வந்தாலும், அம்மம்மாவும் அப்பம்மாவும் முன்னரே தூரத்து உறவினர்கள் என்ற அளவில் பொதுவான உறவினரின் திருமண,பூப்புநீராட்டு, இறப்புச்சடங்குகளில் சந்திக்க நேர்ந்து, ஒருவரையொருவர், பிள்ளைகள் என்ன பண்ணுகின்றார்கள் என்று கேட்கும் அளவுக்குத் தெரிந்திருந்தவர்கள். அப்படி ஏதோ ஒரு செத்தவீட்டுச்சந்திப்பிலேயே, அவர்கள் இருவரும் அப்பா-அம்மாவின் திருமணத்தினைப் பேசி நிச்சயம் பண்ணி, அம்மாவை, அம்மம்மா, அப்பம்மாவுக்கு அறிமுகம் பண்ணிவைத்ததாகவும் தனக்குத் தெரியும் என்றவன், ஒரு புன்முறுவலை முகத்திலே எறிந்துவிட்டு, பின்னே உள்ளே பறித்துப் பொத்தி வைத்தான். அ·து எனக்கு, மேல் நோக்கி ஒரு ரென்னிஸ் பந்தினை எறிந்த ஒருவன், சிறுபிள்ளையொன்று எம்பி அதைப் பிடிக்கமுன்னர், அதை இலாவகமாக மீளக் கைப்பற்றித் தன் காற்சட்டைப் பைக்குள் ஒளிக்கும் நிகழ்வினை உரசியெழுப்பியது. அவனின் கதைமாந்தர்களின் வெளிப்பாடில்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்த இந்த 'வெளிக்கிடப்பி'ச் (outlier) சிரிப்பின் பின்னர், கொஞ்ச நேரம் கையிலே தமக்குட் சச்சரத்துக் கரகரத்துக் கிடந்த சிறிய உருளைக்கற்களை எடுத்து அருகின் நீரோட்டத்துள் ஒரு சுழல்செயலுட்புதைமாந்தனாய், எண்ணத்திலே குறிப்பிட்ட இலக்கின்றியபோதும், நிகழ்வினிலே குறித்தவோர் இலக்குச் சுற்றிப்படும் வகையில், ஒவ்வொன்றாக, காலலயத்துடன் மௌனத்தினைப் பொதி கட்டி எறிந்து கொண்டிருந்தான். இறப்பு வீடொன்றிலே திருமன நிச்சயார்த்தம் நடந்ததில் உள்ள முரண்நகையை அவன் இரசித்துக் கொண்டிருக்கின்றான் என்று எண்ணிக் கொண்டேன்.

பின்னர், அப்பம்மாவும் அம்மம்மாவும் ஒரே வீட்டில் வசித்தபோதும் அதிகம் பேசிக்கொண்டதில்லை. அம்மம்மாவிலும் அப்பம்மாவின் பகுதியினர் பொருளாதார அளவிற் கொஞ்சம் மேலோங்கியவர்கள் என்பதாகத் தெரிந்தது. பேரக்குழந்தைகளிடையே அவர்கள் தத்தம் வாக்கைப் பெற்றுக்கொள்ளப் பல வழிகளில் முயன்றதாகச் சொன்னான். அப்பம்மாவின் 'கையிருப்பு' வாக்கு, குழந்தைகள் அவரின் பக்கம் கூடுதலாகச் சாய உதவி புரிந்ததாகவும் சில வேளைகளில் அதன் காரணமாக அம்மம்மா அழுததாகவும் சொல்லியபோது, அவன் குரல் கம்மியது. அதன் காரணமாகவே அம்மம்மா அப்பம்மாவிலும் முதலில் தளர்ந்துபோய் இறந்து போனதாகப் புகார் சொன்னான். அவனின் குரலில் அம்மம்மாவின் இறப்பு நேர்ந்ததற்கான காரணத்தைச் சுமந்து கொள்ள ஒரு சடத்துவடிவக் குற்றவாளியைப் பிடித்த கோபமும் நிம்மதியும், பஞ்சுமிட்டாயில் மாறிமாறிக் கலந்து இருநிறப்பிசிற்று இனிப்பாய்த் தெரிந்தது.

பின்னர், அந்த நகரிலிருந்து தனது ஊர் போய்ச் சேரும்வரையும் அப்பம்மா, அம்மம்மாவுக்கு அவரின் வாழ்க்கையில் இழைத்திருக்கக்கூடிய வேதனையைத் தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நிகழ்விலும் தேடி உணர்ந்து அப்பம்மாவில் மிகவும் வெறுப்புற்றான்.

வீட்டுவாசலிற் போய்ச் சேர்ந்தபோது, தம்பியும் தம்பியின் நண்பர்களும் அவனது நண்பர்களும் இறுதிச் சடங்குகளிற்கான ஆயத்தங்களைப் பண்ணிக் கொண்டும் வாங்கு, கதிரைகள் என்பவற்றை நிரல்நிரைப்படுத்தி, வெற்றிலை, சுருட்டுத்தட்டங்களுடன் வந்தவர்களை உபசரித்துக்கொண்டிருந்ததைக் கண்டபோதும், தான் வழியில் இராணுவப்பரிசோதனைகள், வேறேதும் தன்னுயிர்க்கான இடையூறுகளின்றிப் பத்திரமாக வந்து சேர்ந்தது எப்படி என்பது தன் சிந்தனைக் கேள்விக்கொக்கிகளுள் அன்று எழவேயில்லை என்பதை ஞாபகமாக எனக்கு எழுப்பிச் சொன்னான். அடுத்ததாக, அப்பா, அவரின் ஆசிரியநண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டபோது, அக்காவினதோ அல்லது வேறு யாரோவினதோ திருமணநிச்சயார்த்தம் பற்றி, ஏதாவது பேச்சுத்துளி அங்கே சொட்டுகின்றார்களோ என்று தெரிந்து கொள்ள, அவன் ஆர்வம் கொண்டான். அப்பாவுடன் அவரின் நண்பர்கள் அப்படிப் பேசாவிடினும், தமக்குட் தமது பிள்ளைகளின் நிச்சயார்த்தங்களைக் கட்டாயம் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டான். வீட்டுவாசல் கடந்தபின் வீட்டின் பெரிய 'விறாந்தைக்கு' முன்னால் இருக்கும் கதிரைகளில் அமர்ந்திருந்த அவனின் அக்காவின் நண்பர்கள், அவளுக்கு ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாகச் சொன்னவன், அவசர அவசரமாக, நண்பர்கள் என்று தான் சொல்வது, ஆங்கிலத்தில் friends என்று சொல்வதிலுள்ள பாற்குருட்டுத்தன்மையுள்ள பொதுப்படையான அர்த்தமேயொழிய ஆண்நண்பர்கள் என்று நான் அர்த்தம் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டான். நான், அவனின் அக்காவின் தனிப்பட்ட நண்பர்களின் பால்வேறுபாடோ, அல்லது அவனின் கருத்தினைக் கூறுவதிலுள்ள சொற்பிரயோகமோ, என்னுள் நான் பதித்துவைத்துக்கொள்ளும் அளவுக்கு முக்கியம் வாய்ந்ததல்ல என்று கூறிவிட்டு, என்னுடைய அந்தச் சொற்றொடரினால், அவன் தன்னுடைய நிகழ்ச்சிகூறும் செயற்பாட்டினை நான் கவனத்தில் இருத்த முயற்சிக்கவில்லை என்று எண்ணுகின்றானோ என்று பதட்டமுற்றேன். ஆனால், அவனுக்கு, தன் அக்காவின் நண்பர்களின் பாலினைக் கருத்திற்கொண்டு நானேதும் அவளைப் பற்றித் தப்பான கருத்தேதும் கொள்ளவில்லை என்பதைத் தவிர, மிகுதியிற் கரிசனம் இல்லாதது அவனின் தொடர்ந்து போன நிகழ்வு சொல்தலிற் தெரிந்தது.

உள்ளே நுழைந்தபோது, அம்மாவின் அருகிலிருந்து அழுது கொண்டிருந்தவர் அம்மம்மா என்று கண்டபோது, தனக்குப் புதியாய்ப் பொங்கிய ஆத்திரமும் அமைதியும், முன்னே இருந்த ஆத்திரத்தினையும் அமைதியினையும் இடம் பெயர்த்ததாகச் சொல்லி, ஆத்திரத்திலும் அமைதியிலும் பல வகைகள் இருக்கின்றன என்றும் அவற்றை அக்கணம் தான் உணரக்கூடியதாக இருந்தாகவும் அடித்துச் சொன்னான். அந்தச் சந்தர்ப்பத்தில், நான் அவனது அறைநண்பன் சொன்னதுபோல, அவனுள்ளே யார் இறந்தது என்று அறியாத புதிர் தொங்கியிருந்து, அவன் காரண காரியங்களை அலசி எடுத்துக் கொண்ட முடிவு தவறாகிப்போனது, அவனது அனுமானிக்கும் திறனிற் பழுது கண்டதால், அவனுக்கு ஆத்திரமும், இறந்து போயிருக்கலாம் என்று கவலைப்பட்டுக் கொண்டு வந்த அம்மம்மா உயிருடன் இருத்தல், அவனின் அதற்கான பதற்ற அலை மடிந்து, அமைதியையும் பிறப்பித்து இருக்கலாம் என்றும் சொன்னேன். அவன், அப்போதுங்கூட, நிச்சயமாகத் தன்னுட் புதிரென்றேதும் பயங்கரத்தைக் கூட்ட இருக்கவில்லை என்றும், ஆனால், தந்து புதிய ஆத்திரம் தன் மீதுதான் என்றும் சொன்னான். ஏற்கனவே, இறந்திருந்தவர்மீது தான் கோபத்தினைக் காட்டிக் கொண்டு வந்ததாலும் இப்போது எண்ணுகையில் தான் அப்பம்மாவின் செயல்கள் எல்லாமே அம்மம்மாவினைத் தாக்கும் நோக்கற்ற யதார்த்தமான செயற்பாடுகள் என்று காணக்கூடியதாக இருக்கின்றன என்பதை அறிகையில், தன் எண்னவோட்டத்தாலேயே தான் ஒரு வெட்கவுணர்வுக்கும் குற்றவுணர்விற்கும் உள்ளாக வேண்டியிருப்பதாலுமே கோபவுணர்ச்சி தோன்றியிருக்கலாம் என்று எனக்கு விளக்கம் தர முயற்சி செய்தான்.

தான் மீண்டும் வடிகால் தேடி, அவசரப்பட்டு, அம்மம்மாமீது அந்த ஆத்திரத்தினைக் கரைத்து விடக்கூடாதே என்று மிகுந்த அக்கறையோடு போய் அவன்திசைக்கு முதுகு காட்டி அழுது கொண்டிருந்த அம்மம்மாவை அணைத்தபோது, அவர் தள்ளியதாகவும், தான் அதிர்ந்து, அந்தச் செயற்பாட்டைப் புரிந்து கொள்ளமுயன்றபோது, அ·து அம்மம்மா இல்லையென்றும், அதுவரை தெரியாத ஒரு முதிய பெண் தன் கண் விழிவெண்படலத்தைக்கூட அந்நியத்தன்மைமூட அவனை வெறித்ததாயும் மிகவும் பயம் தோய்ந்த சன்னமானகுரலிற் சொன்னான். பின்னர், கொஞ்ச நேரம் இருவரும் பேசாதிருந்தோம். பிறகு மெதுவாக, அந்த நிகழ்வு முடிந்து, அதன் பின் மூன்று மாதங்களின் பின் அவன் போக முடியாதிருந்த மரணவீட்டின் சொந்தக்காரியான அந்த முதியவளின் கண்களில், அதற்குப்பிறகு, மற்றவர்களின் கண்களோடு தன் பார்வையைக் கோர்க்கும் சங்கிலி உடைந்து போன விசித்திரத்திற்குக் காரணம் என்ன என்று என்னிடம் கேட்டான்.

முன்னே பழகியோ, குறைந்தபட்சம், கண்டோ அறிந்திராதா ஒருவரின் பார்வையைப் பற்றிக் கருத்துக் கூறும் அளவுக்கு எனக்கு மனோவியல் தெரியாத காரணத்தினாலும், நேரம் அவமே கரைந்து கொண்டிருந்ததுபோன்ற உணர்வினாலும் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நான், "மன்னித்துக்கொள்; எனக்கு அதனைப் புரிந்து கருத்துச் சொல்லும் வல்லமைக்கு, புத்தியும் அனுபவமும் போதா" என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தபோது, அவனைக் காணவில்லை; அதுவரை என் வாழ்நாளிற் கண்டிராத ஒரு முதியபெண் அந்நியத்தன்மை எரித்த பார்வையை என்மீது எறிந்து கொண்டிருந்தாள்.

ஒரு பயங்கர அமானுஷ்ய உணர்வு மனதை உடன் கவ்வ, எழுந்து திரும்பிப் பார்க்காமல், நடந்தேனா, இல்லை ஓடினேனா........ ஞாபகம் இல்லை.


'99 ஜூன் 12, சனி 16:56 மநிநே.

Thursday, October 11, 2007

டங்குவாரின் டசின் கொய்ஸன் டைம்

அரை குறை -

டங்குவாரின் டசின் கொய்ஸன் டைம்
அல்லது
(Dozen Ways of Looking at a TamilBlog)

சரியான விடையின் மேல் வெளிச்சக்கற்றை பாய்ச்சுக

வினா 1
பாசிசத்தை அதன் பினாமிக்காதிலே முறுக்கி மார்க்சிய முறத்தால் அடித்துப் புறவால்காட்டி ஓட விரட்டியவர்
1. டொச்சுலாந்து மாபியா வழுவிக் காலையும் புரட்சி தழுவி மாலையும் போராளி்
2. அமெரிக்க மாபியாஸோல்சர் காப்கா
3. பிரெஞ்சுப்பகுத்தறிவாளர்கள், சத்தியவசனக்காரர்கள்
4. தமிழரங்கிடதுகாற்றூக்கியகலயகிலநடமாடிகள்

வினா 2
ஆதியிலே பிறந்தது
1. புலி
2. புரட்சி
3. முறம்
4. வீரம்

வினா 3
பிரான்சின் சைவக்கோவில்கள் சமூகத்திலே முக்கியத்துவம் பெறுவது
1. தெருவெல்லாம் தேருக்குத் தேங்காய் உடைப்பதால்
2. பகுத்தறிவுத் துண்டுப்பிரசுரம் பெறுவதால்
3. தமிழரங்கிலேகூட துணுக்காக இடம் பிடித்துக்கொள்வதால்
4. மேற்கூறிய அனைத்தும் அல்லது கருவறையால்

வினா 4
ஏகாதிபத்தியநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிலே ஏகாதிபத்தியத்தியங்களை விமர்சிக்க ஏகபோக உரிமை பெற்றவர்
1. பினாமிமாபியாபுட்சோல்சர்
2. பகிரங்கமடலி்
3. தமிழரங்காடி
4. மேற்கூறிய எவருமில்லர் அல்லது மேற்கூறிய எல்லோரும்

வினா 5
தீவாரின் மறைமுக & முக்கிய நோக்கம்
1. தமிழ்மணப்பதிவுகளை முகர்ந்து சுவை, ஊறு, ஒளி, ஓசை, நாற்றம் அளவிடுவது
2. புடவைத்தொழில் முதலாளிகளின் சிறந்த பனியன், டவுசர் விற்பனைப்பிரநிதியாவது
3. ஆதித்தகரிகாலனின் பிரேதத்தைத் தோண்டி, டிஎன்ஏ பரிசோதனை செய்து கொலையாளியைக் கண்டு பிடிக்கும் "Secrets of the Dead" இணையத்தமிழ்நிகழ்ச்சி நடத்துவது
4. புடுங்காத தீவுகளுக்கும் புடுங்கும் தீவுகளுக்குமிடையே சேது சமைப்பது (அல்லது உடைப்பது)

வினா 6
கோனார் நோட்ஸ் என்பது
1. க்ளிவ் நோட்ஸின் இந்தியப்பினாமி
2. அநாநி பிராங்கின் அடுக்களைக்குறிப்பு
3. புரியாதவர்களால் புரியாதவர்க்கு புரியாமலே புரியப்படுவது
4. ஒரு டசின் ஒரு லீட்டர் ஆட்டுப்பாற்புட்டி கேஸ்

வினா 7
பதிவுகளில் பகுத்தறிவு என்பது
1. பகுத்தறிய வேண்டியது
2. அடுத்தவனுக்குப் பகுத்தறிவு இல்லையென்பது
3. பகலவன்பாசறைக்குப் போட்டிப்பாசறை தொடங்கி பார்ப்பனியத்துக்கும் பிள்ளையாருக்கும் பால் வார்த்துப் பழமும் வழங்குவது
4. முழுமுனைப்பாக பெரியாரைக் கேலிப்பொருளாகக் காட்சிப்படுத்துவதும் தயிர்ச்சாத ஊறுகாயாகத் தொட்டுக்கொள்வதும்

வினா 8
பதிவுகளில் பார்ப்பனியம் என்பது
1. வாளைத் தூக்காமலே தன் போரை அடுத்தவனைக் கொண்டு நடத்தவைப்பது
2. பின்னூட்ட பா(வா)லாக்களாகப் பிறந்து திரிவது
3. எல்லோருக்கும் ஏழடி மேலே ஏறியிருந்து கொண்டு வாழைப்பழத்திலே ஊசியேற்றுவது
4. மேற்கூறிய எல்லாம்

வினா 9
பின்-நவீனத்துவம் என்பது
1. பதிவர் ஒருவர் மற்றவருக்குப் புரியாமல் எழுதும் வன்பொதி
2. வாசகர் ஒருவர் தனக்குப் புரியாத எல்லாவற்றையும் தள்ளிக் கட்டும் மென்பொதி
3. பின-நவீனத்துவத்தை விளக்குகிறேன் என்று எழுதப்படுகின்ற எதையும் தவிர்ந்த அனைத்தும்
4. சூடான இடுகைகளிலே ஏ(ற்)றிக்கொள்ள, கிண்டலென்று எழுதுகிறவரும் அவரின் பின்னூட்டிசகாக்களாலும் நம்பப்பட்டு எழுதப்படும் எதுவுமே

வினா 10
ஈழத்தின் விடிவுக்காகப் புரட்சியும் புலிச்சியும் முழுநேர வார் த் தைப்போராட்டம் நடத்தும் முன்னணிக்களம்
1. லா சப்பே
2. தமிழ்மணம்
3. தமிழரங்கம்
3. த இந்து

வினா 11
இணையப்படைப்புக்கு முக்கியமானது
1. வாசகர்கள்
2. நண்பர்கள்
3. வாசிக்காதவர்கள்
4. வன்பர்கள்

வினா 12
வலைவினாடிவிடைப்போட்டியென்பது
1. வேலையற்றவன் சவரவேலை
2. கோனார் நோட்ஸுக்கு உகந்த நீண்ட பதம்
3. (stat)counter கலாசாரத்தை இலக்காக கொண்டது
4. தமிழ்மணத்தில் எப்போதும் சூடா(க்)கக்கூடிய ஆயாவின் இராத்திரி ஆப்பக்கடை சமாசாரம்

Wednesday, October 10, 2007

பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry): ஓர் அறிமுகம்

பழசு - 9
அதிர்ஷ் டமும் கஷ் டமும் தனி யே வரா து என்ப து உண் மை. நமக் குச் சுடச் சுடப் பதிவு போட, நேரம் கி டைப் ப தில்லை; சுட்டுப் போட மனசு கிடைப் பதில் லை. ஆனால், பதிவு போடா மலிருக் கவும் கவுண் டர் கல்சர் டவு சர் வயப் பட்ட மனம் விடுவ தில்லை. இந்த நேரத் திலேயே மெய் யான பக்தர் களைக் காக்கப் பஹ வான் மனித உரு விலே அகிலத் திலும் இணையத் திலும் அவதாரம் எடுக் கின்றான் என் பது செயின் ஈ மெயில் களை ஏழு பேருக் கு அனுப் பா மலே உண் மையா கிறது.

எனக் காக ஒரு கோ னார் மொழி பெயர்ப் புப் பால் கறக்க தானே முன் வந்திருக் கிறார். அணிந் துரை, பணிந் துரை, கடிந் துரை, குரை எல்லா வற்றுக் கும் தாம் உபய காரராக நான் நீ என்று போட்டி. இது எழுத விஷய மில்லாத வனுக்கு முதல் அதிர்ஷ் டம்.

தஞ்சா வூரின் குக் கிராமத் திலும் து பாய் ஆப்பக் கடை யிலும் பங் களூர் பீர் பாரி லும் கொரியா வின் சக் கூரா மரத்துக் குக் கீழும் என் பெயர் ப்பு கள் வாசிக் கப் பட்டு விவாதிக் கப் படுவது சிவாஜி மேக் கப் உரு மாற்ற மெற்றா மோர் போஸிஸ் போல டிஜிட் டல் ட்ரீமாக விரி கிற து. ராஜ வேர் வை பூத்து கந் தக ரோ ஜா சுகந் தம் கரை ந்து வீசு கிற து. அலை யாக் கட லின் நுரை நுழைந் து அளைந் து கிளை த்த நீண்ட விரல் கூர்ந்த கூ னல் ஆதித் தாய் வந்து மொழி வேரிலே பூனைக் கடி கடித்து மெல் லிய சுகந் தத்தை நுகர்ந்து நகர் வதைப் பார்த் தாயா, டியூ ரோடா செல் லம்மா? ஓர் உடை ந்த யுகத் தின் ஈரா னிய சினி மா சேர் க்கிள் சிக ரெட் நாய கியாய் நீ யும் இங்கர் மேன் நா யக சது ரங்க மர ணமாய் நா னும் கறை படா த தென்ன மெரிக்க மழ லை ம ழைக் காடுக ளிலே தி ரேத கலி யுகக் கன வாய் அலை ந்து தலை கீழ் மாம் பழக் குரு ட்டு வவ் வாலாய் கு கை பிர ம்ம ராட்ச ஸாகி மு கம் அறை ந்து தி ரிய முளை த்த மெய் மை மறக்கப் படக் கூடிய காதல் புணர்ச் சியா, பெரு விரல் போன்ற அ தை த்த இதழ் ஈ ரம் பிரிந் தவளே? அக் காமம் சொட்டிப் பரவி நனைந் து மே லேறி சிலிர்ந் து மூழ்க் கும் ஸ்வாச நாளிலே உன்னை ஒரு 30% காட் டன் மீதி பொலிய ஸ்டரென்று செம் புரட் சி செய்ய சீனத் தின் சின்னக் கை கள் பிஞ்சுப் பசுங் கை கள் ஊதப் பறக் கும் உமிக் கூலி க்கு போர் வெம் மை பூக்க நெய்த வாசனைக் கட்ட விழ்ப்புத் துகி லாக பேரங் காடி கள் ஊடே வந்து ஒரு சுதந் திர தினத் தில் கழிவு விலை யில் உன் னைக் காண கட்ட மைத்துப் பின் நவீன மாக அணிந் து கொல் வேன். ஸகி என் பதிவு களின் மொழி பெயர்ப் பு களின் உரத்த ஸப்தம் மௌன மாக உனக்கு இந் தப் பூச் சிகள் சில் லிட்டுப் புணர் ந்து முயங் கும் நள் ளிர விற் கேட் கிறதா? ஒரு மழை மின் னலை இடி அழு த்தி தீ யென அணை த் துப் புணர் ந்த வே தனை ஊடறு த்த இன் பக் கணத் தின் கனத் திலே நனையா மல் இரு பது அமெ ரிக்க ஏகாதி பத்திய டாலர் ஏசி பால் கனியி லிருந் து பார்ப் கோர்னு டன் டாபோ ரின் சின்னக் குழந் தையின் வெயிற் சோகங் களுக்காக என் அராஜக வேர் வைத் தோளிலே உன் அவ்லோன் உ தட்டுச் சா யம் பட்டு விடச் சாய் ந்து நீ மெல் லிய தாக "டா நா ன் உ ன் டீ டாபோர் டாப் டாப்பர் போர் bore" என்று ஆறு தலை முறைத் தாய் மையின் பிர ஸவ வே தனை வனம் நிலம் தாண்டிக் காவிக் கடத்தி முனகிய ஆபி ரிக்க ஆசி யாவின் அமெரி க்கப் பெருந் துக் கத்தை அண் டார்ட்டிக்கா உல கம் அறி யாது. பக்கத்து இருக் கைப் பார்ப் பான், பார்ப் கோன் ராம ஸேது பின் ஆமி புலி பாசி சிட்டு அறி லேது. ஆனால், என் யௌ வனக் கா துப் பறையைக் கிழித்த உன் வைர மூக் குத்தி அறி யும் ஸ்நே கீ! உன் கொப் புளித்த வேதனையை இரா மானு சனும் பெரி யாரும் பிரபா கரனும் புரிந்து துடித்த டெஸி பல்லிலே என் வீச்சம் ஒரு மச் சமாக தாய் வழி சமுதா யத்துச் சேது மண் மேட் டிலே வால சைய ஓடும் வ தையை உன் ஆயி ரம் காலத் து பெண் ணடிமை மீறும் பல் தேய் சீயப் புரட் சியினால் ஆத் மார் த்தமாக தத் துவம் ஸ்பரி சிக்க முடி கிறதா, அசினேகா? ......

..... மன்னிக்க வேண்டும். பெயர்ப்பாளர், பதிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியிலே எங்கோ போய் விட்டேன். அதாவது, பெயர்ப்புக்கு இன்னும் -/பெயரிலி.யின் அருஞ் சொற் பத ங்களைக் கொடு க்க வேண் டும். அது வும் சொல் பிரி த்துப் பெயர் ப்பாளாரும் புரி யச் சிறி தாகக் கொடு க்க வேண் டும். அதன் வழியேயே, கோனார் நோட்ஸ் முழுமை யடையும் என்பதால், பழைய அருங் கட்டுரை களைத் தேடிப் பதி வேற்ற இது நல்ல சந்தர்ப் பம். இது தொடரும் அதிர்ஷ் டம்.

அவ் வகையிலே, ஏற் கனவே இரண் டு முறை சுழற் சி செய்த பத் தாண்டு கள் பழு தான அற்புத மான பீன் நவீனக் கட்டு ரையை முன் வைக்கி றேன்.

(அப் பாடா, ஒன்று மே அடைப்புக் குறிக் குள்ளே இது வரை எழுத வில்லை. ஹையா!!)

----------------

பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry)

ஓர் அறிமுகம்
நவீனப் படைப்பு உலகில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திவரும் படைப்புத்தத்துவங்களில் பரந்த-அபத்தலியல்வாதமும் ஒன்று. ஓவியம், திரைப்படம், நாடகம், இசை, மற்றும் சகல படைப்பிலக்கியங்களிலும் இதன் தாக்கம் சமீப காலங்களில் மிகக் கணிசமாக வளர்ந்துவருவது மிகக் கண்கூடான உண்மையாக உள்ளது. இந்த அறிமுகத்தின் மிக முக்கியநோக்கம், இரண்டு அபத்தலியக் கவிதைகளை அறிமுகப்படுத்துவதே.

தனியே அபத்தலியம் என்பதிலும் பரந்த-அபத்தலியம் என்ற சொல்லினை இந்தக்கட்டுரையாளன் இங்கு முன்வைப்பதற்குக் காரணம், அதன் இயங்கு தளத்தின் வீச்சத்தினதும் ஆழத்தினதும் அகலத்தினதும் அளவினை முன் வைத்தே ஆகும். மார்ட்டின் எஸ்ஸிலின் (Martin Esslin) -நாடகத்தினைப் பொறுத்தமட்டில்,- "அபத்தலியலியத்தின் அரங்கு (the theatre of the absurd)" என்ற பதத்தினை முன் வைக்கையில், அல்பேர்ட் கமு (Albert Camus) இன் "மனிதன், அபத்தத்திற்கும் வலிமிகுந்த நினைவுக்குக் கொணரமுடியாத கடந்தகாலமும் நம்பிக்கை வைக்கமுடியாத எதிர்காலமும் கொண்ட சங்கடத்திற்கும் இடைப்பட்ட தீர்க்கமுடியாத இருப்பு அகல்தலில் உள்ள ஓர் அறிமுகமற்ற புதியவனினை" [A human being as a stranger, "an irremediable exile," caught in the absurd and painful predictament of having neither a past to remember nor a future to hope for] தன் அடிப்படை உருவாக எண்ணி ஏற்றுக்கொள்கிறார். (உ+ம்: இயூஜின் ஐயோனெஸ்கோவின் "(ஒரு/அந்தப்) பாடம்" நாடகம் [Eugene Ionesco's "The Lesson")

ஆனால், இங்கே கட்டுரையாளர் முன்வைக்கும் பரந்த-அபத்தலியம் மேற்கூறிய பார்வையிலிருந்து வேறுபட்டதும் விரிவுபட்டதுமாகும். பரந்த-அபத்தலியம், தான் கொள்ளும் வடிவத்திலோ, கருத்திலோ மட்டும் முழுக்கமுழுக்கச் சார்ந்ததல்ல; மேலாக, அது உற்பத்தியாளனினதும் நுகர்வோனினதும் கருத்து வெளிவிடுதற்திறனிலும் கருத்து உள்வாங்கற்றிறனிலும் சார்பாகத் தங்கியிருக்கிறது. இது நிகழ்த்தற்கலைகளுடனோ (performing arts) அல்லது நுண்கலைகளுடனோ (fine arts) சம்பந்தப்படுகையில், உற்பத்தியாளன் படைப்பாளியாகவும் நுகர்வோன் ஆர்வலனாகவும் அடையாளம் காணப்படுகிறான்.

பரந்த-அபத்தலியம் என்பது படைப்புலகில் நூற்றாண்டு காலமாக இருப்பினும், இதுவரை அதன் மூலவேர்த்தத்துவம் வரைவிலக்கணப்படாமலே இருந்துவந்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், இந்தத்தத்துவத்தின் விரிந்த பயன்படுதளமும் அநேக பரந்த-அபத்தவியற்படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் இந்த வகைப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்புத்தன்மையும் இதனை இதுவரை காலமும் ஒரு தத்துவவகைப்படுத்தலுக்கு, வரைவிலக்கணப்படுத்தலுக்கு உள்ளாவதினைத் தவிர்த்து வந்திருக்கிறது. இன்னமும் பரந்த-அபத்தலியவாதம் ஒரு முறையான வரைவிலக்கணக்கத்திற்குக் கூர்ப்படையாத வகையில், தற்போதைக்கு, இந்தக்கட்டுரையினைப் பொறுத்த அளவில் நாங்கள் அதனைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்திக் கொள்ளலாம்.

" படைப்பாளியின் எதுவிதமான கருத்துவெளிப்பாட்டினையும் தெளிவாகக் கலை நுகர்வோனுக்கு வழங்கமுடியாத அல்லது தானாகவே எதுவித தெளிவான கருத்துடனோ அல்லது ஏதுவித செய்தியினையும் தனக்குள் உள்ளடக்கி ஆக்கப்படாத எல்லாவகைப் படைப்புக்களும் பரந்த-அபத்தலியப்படைப்புக்கள் எனப்படும்."

பரந்த-அபத்தலியற்படைப்புக்கள் தமக்கெனத் தனியே ஒரு வகை வடிவத்தினைக் கொண்டு இருக்கலாம்; அல்லது பல வேறுவகைப்பட்ட ஆக்கற்தத்துவங்களினாலான படைப்புகளின் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களின் சேர்க்கையாக இருக்கலாம்; உதாரணத்திற்கு, ஒரு பரந்த-அபத்தலியவாதப்படைப்பு இயற்கையில் ஒரு கனவுத்துவப்படைப்பாக (Surrealistic product) இருக்கும் அதேநேரத்தில், இயற்கையாகவே அதன் பொருளினை வெளிப்படுத்தும் தெளிவின்மையிலோ, அல்லது அதனை உற்பத்தி செய்தோனின் சொந்தக் கருத்துத் தெளிவின்மையிலோ படைப்பாளியின் கோணத்தில் ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இன்னொரு வகையாக, அதன் நுகர்வோனின் பார்வைத்தளத்தில் (உ+ம்: ஒரு கவிதை எனப்படுகையில் வாசகனின்) உள்ள கருத்துத் தெளிவின்மையினால், அல்லது படைப்பாளியின் தளத்தினை அணுகமுடியாத வெளிநிலைப்பாட்டினால், உள்வாங்குவீச்சக்கூர்மை மழுங்குதலினால், அவனளவில் (படைப்பு உள்வாங்குவோனின்) அந்தப்படைப்பு ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இந்தவகையில், பரந்த-அபத்தலியல் தத்துவம் சார்தல் கொள்கை (Theory of Relativity) இன் அடிப்படையில் ஒழுகுகிறது. தவிர, மேலே குறிப்பிட்டதுபோல, பரந்த-அபத்தலியற் படைப்பு ஒன்று, ஒரு கனவுத்துவப்படைப்பினதும் ஓர் நவீனத்துவப்படைப்பினதும் (modernism) ஓர் உணர்த்தலியற்படைப்பினதும் (Expressionism) கூட்டாகவோ இருக்கலாம். இந்தக்கூட்டு பல விதமான விகிதங்களிலும் பண்பளவிலும் ஆக்கப்படலாம். இவற்றினை கீழ்க்கண்ட பிரதான வகைப்படுத்தல்களின்கீழ் நாங்கள் கொணரலாம்.

1. படைப்பின் கருத்து, புரிதலின் அடிப்படையில் //மட்டும்//; இது மேற்கூறிய, படைப்பாளி, பாவனையாளன் இருவரினது நிலைப்பாட்டுத்தள அடிப்படையிலும் ஒருவரை புரிந்து கொள்ளல் அடிப்படையிலும் மட்டுமே சார்ந்திருப்பது.

2. படைப்பின் வழங்கு வடிவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணமாக, அது தனியே ஒரு கவிதை வடிவத்திலே அமைந்திருக்கலாம்; அல்லது கட்டுரை வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது, ஓர் ஓவிய வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது ஓர் இசை வடிவக்குறிப்பு அடைப்படையில், நாடக வடிவில் அமைந்திருக்கலாம்; தவிர, இந்த அமைப்புகள் பல வேறு வேறாக ஒன்று சேருகையில், ஒரு கலந்த வழங்கு வடிவமையலாம். அதாவது, உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் ஒரு கவிதை வடிவிற் செல்லும் படைப்பு இடைப்பகுதியில் ஓர் ஓவியக்குறிப்பீடு வகைக்குத் தாவி முடிகையில் ஒரு சிறுகதை வடிவில் முடியலாம். ஆயினும், இந்த வகைப்படைப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறன. எதிர்காலத்தில், படைப்புத்துறை தன் சலித்துப்போன தேக்கத்திலிருந்து விடுபட்டு தன்னை முன்னெடுத்துச் செல்ல இந்த வகை கூட்டு மாற்றுப் படைப்புக்கள் அவசியப்படும் என்பது இந்தக் கட்டுரையாளனின் பார்வையாகும்.

3. படைப்பின் அடியோடும் படைப்புத்தத்துவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணம், அது தனியே எதிர்காலவியற்படைப்பாக (Futurism) இருக்கலாம். அல்லது, எதிர்காலவியலும் கனவுத்துவவியலும் உணர்த்தலியலும் நவீனத்துவவியலும் கலந்து மாறிமாறி வரும் ஒரு படைப்பாக இருக்கலாம்.

4. இந்த மேற்பட்ட மூன்று அடிப்படைகளும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து வரும் படைப்பாக ஆகலாம்.

அடிப்படையில், பரந்த-அபத்தலியம் என்பது, இந்தக்கட்டுரையாளனினால், படைப்பாளியின் மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படுகிறது; 'பிரதானமாக' என்ற சொற்பிரயோகம் 'முழுதாக' என்ற சொற்பிரயோகத்திலும்விட இங்கே பயன்படுத்தப்பட்ட காரணம், சூழல் என்பது அதன் அளவில், தூரவெளியிலிருந்து முற்றுமுற்றாகப் பிரிக்கப்படமுடியாததாகும் என்பதே ஆகும்; அதாவது, ஓரளவிற்கு அபத்தலியற்படைப்புக்கள் படைப்புக்கள் ஆக்கப்படும் இடத்தளத்திலும் தங்கியிருக்கிறன. இதுவே நுகர்வோனின் நிலைப்பாட்டிலிருந்து, அவனின் உள்வாங்கு மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படலாம். இந்தத் துணிபு, ஒரு படைப்பின் (அல்லது பொதுவில், பண்டத்தின்) பரந்த-அபத்தலியத்தன்மையினை சம்பந்தப்பட்ட படைப்பாளியினதோ நுகர்வோனினதோ காலம், இடம் சார்ந்த ஒரு சூத்திரமாக மாற்றிவிடுகிறது. அதாவது, இன்றைக்கணத்திற்கு ஒருவருக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகக் காணப்படும் பண்டம், இன்னொரு வேளைக்கு முழுதாகவே ஒரு கருத்து/செய்தி கடத்தும் படைப்பாக மாறிப்போகலாம்; இந்த நிலையில், அந்தப்படைப்பு, அந்தக்குறிப்பிட்ட மனிதனுக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ, அல்லது ஒரு செய்தி சொல்லும் ஆக்கமாகவோ மாறிப்போகிறது. இந்த ஆக்கு மூலக்கூறே பெரும்பாலாக எந்தவொரு படைப்பினையும் தன்னளவில் சுயமாக பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ அல்லாமலோ இருக்கவிடாது, வெறும் சார்புத்தன்மையினை மட்டும் அதற்குக் கொடுக்கிறது; இந்தத் தன்மை, சார்ந்ததின் வண்ணத்தன்மையினோடு ஒப்புநோக்கப்படலாம். மேலே பெரும்பாலாக என்ற சொற்றொடர் உட்பதிக்கப்பட்ட காரணம், வெறுமனே வெளிப்படையாக ஒரு கருத்தினை முன்வைக்கும் சொற்றொடர் (உ+ம்: "இன்றைக்கு சோதிடக்குறிப்பின்படி உனக்கு நல்லகாலம்" என்ற சொற்றொடர்) கருத்தளவில் தெளிவாக இருந்தாலும், அதனின் அடிப்படை, உள்வாங்குவோனின் விருப்பு வெறுப்பு, நம்பிக்கை (உ+ம்:சோதிடநம்பிக்கைக்கு) என்பதற்கேற்ப பரந்த-அபத்தலியச் சொற்றொடராகவோ, அல்லது இல்லாமலோ போகலாம். ஆனால், செய்தி வழங்கும் அடிப்படையில் எல்லோரும் (உ+ம்: சோதிடநம்பிக்கை உள்ளோனும், அற்றோனும்) காரண (உ+ம்: சோதிடக்குறிப்பின் அடிப்படையில்) காரிய(உ+ம்: உனக்கு நல்லகாலம்) ஒரு தெளிவான செய்தியினைப் பெற்றுக்கொள்கிறார்கள்; அந்த அளவில் இந்தச் சொற்றொடர் எல்லோருக்கும் தன்னளவில் பரந்த-அபத்தலியச் சொற்றொடர் அற்றே இருக்கிறது; ஆனால், இரண்டாவது (அல்லது இரண்டாவது கட்ட நம்பிக்கையின் அடிப்படைப்) பார்வையில், ஒருவருக்கு பரந்த-அபத்தலியச்சொற்றொடராகப்போகிற வேளையிலே, மற்றவருக்கு இன்னமும் ஒரு பொருள்பொதிந்த சொறொடராகவே இருக்கிறது. இதுவே "பெரும்பாலாக" என்ற சொற்றொடரின் அவசியத்தினை மேலே உட்பதிக்கும் அவசியத்தினை முன்வைக்கிறது. இதுவே, பரந்த-அபத்தலியத்திற்கு ஒரு தனியே கறுப்பு வெளுப்பு என்று கோடுவெட்டிப்பிரிக்கமுடியாத தன்மையினை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு சாம்பற்றன்மையினை ஏற்படுத்தி விடுகிறது; அதாவது, பிறிதொரு சொற்றொடரில், ஒரு படைப்பின்மீதான பரந்த-அபத்தலியப்பார்வை, "அபத்தம்/அபத்தமில்லை" என்ற 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' பார்வையினை, மிகுதி சீர்தூக்கு அலசற்பார்வைகளில் உள்ளது போலத்தரப்போகாது; வெறுமனே, பரந்த-அபத்தலியத்தின் முறிவற்ற தொடர் (not discrete, but continuous) வீச்சத்தின் காத்திரத்தின் கோணத்தின் அளவினையே தரக்கூடும்.

சீர்தூக்கி அலசுதற்துறையில் பரந்த-அபத்தத்தன்மைப்பார்வையின் தேவை மிகவும் அவசியமானதாகும். எந்த ஒரு மனிதனும் அடிப்படையில் ஒன்றானவனல்ல. மேலும் ஒரு தனி மனிதனே, அவனளவில் உடலளவிலும் சிந்தனையளவிலும் காலத்தோடும் புதிதாக மாறிப்போகிறனான், உயிரளவான நிலையில் மீண்டும் பிறக்காதபோதும். இந்த வகையில், ஒருவனின் படைப்பு வெளியீட்டினை இன்னொருவர் நல்லது கெட்டது என்று தன் கருத்து நிலைப்பாட்டில் மட்டும் வெறுமனே கூறுபோடுகை பண்ணிவிடமுடியாது; இந்த அளவில், பரந்த-அபத்தத்தன்மை விமர்சனத்திற்கு ஒரு படைப்பின் நிலைப்பாட்டினை படைப்பாளியளவில் ஏற்றுக்கொள்ளும் நியாயத்தினைப் பெற்றுத்தருகிறது. இன்னொரு விதத்தில், அது நுகர்வோனையே படைப்பினைப் புரிந்து கொள்ளும் கூட்டுப்படைப்பாளி (இதை விடச் சரியான சொற்பதத்தில், "இரண்டாம்படி/நிலைப்படைப்பாளி" அல்லது "நுகர்தற் படைப்பாளி") தரத்திற்கு ஏற்றி, இடையே விமர்சகர் எனும் இடைத்தரகரின் கூலியின் அளவினை மிகுந்த அளவிற் குறைத்துவிடுகிறது. இந்தக்குறைப்பு, இரண்டாம்நிலைப்படைப்பாளிக்குக் காலப்போக்கில், ஒரு "முதல்நிலை/படிப்படைப்பாளி" அல்லது, "ஆக்கற்படைப்பாளி" ஆகும் ஊக்கத்தினையும் அவனின் ஆக்கற்பண்பே பிறிதொரு காலத்தின் சிறந்த படைத்தற்போக்கு முன்னெடுப்புக்கு வழியமைக்கும் விளைவினையும் கொடுக்கிறது.

ஆக்கப்படைப்புகளில் தமிழில் தற்போது பரந்த-அபத்தலியத்தினை வெவ்வேறு படைப்பு ஊடகங்களின் உதாரணத்துடன் பார்வையிட்டு பின்னே ஒரு கட்டுரையில் முன்வைக்கக் கட்டுரையாளர் எண்ணியிருப்பதால், இங்கே அவற்றினைப் பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை.

கீழே உள்ள 'படைப்பு' தற்போதைக்கு அநேக வாசகர்களுக்கு, அபத்தலியப்படைப்பாக இருக்கும் என்ற அளவில், அது முன்னே வைக்கப்படுகிறது. வெளியீட்டளவில் ஒரு கனவுத்துவப்படைப்பாகப் பார்வைக்குப் படுவோருக்கு, அதன் பரந்த-அபத்தத்தன்மை அவரளவில் காத்திரவீச்சக்கோணம் குறைந்துபோகும்; மற்றையோருக்கு அதன் பரந்த-அபத்தத்தன்மை தவிர்க்கமுடியாததாகும்.

எழுது இடம் + நேரம் கருதி பரந்த-அபத்தலியத்தின் மீதான மிக மிக அடிப்படை முன்வைப்புக்களுடன் இங்கே நிறுத்திக் கொண்டாலும், அது பற்றி மேலும் விரிவான கருத்துக்கள் முன்வைக்க வேறு விரிவான சந்தர்ப்பங்களும் விவாதமேடைகளும் அமையும் என்று கருதுகிறேன்.

இந்தக்கட்டுரையும் தானே ஒரு செவ்விய (classic) பரந்த-அபத்தத்தன்மை படைப்பிற்கான உதாரணம் ஆகலாம் என்ற நம்பிக்கையுடன்,
தமிழ் ஆசான்(கண் கோளாற்றால், அப்பாவித் தமிழ் அரசன் மீது பழியைப் போடுகிறவர்களை பசியாத புலியும் பசித்துப் புசிக்கட்டும்)

_______________________________________________________________________
கடவுள் தன் வலக்கைக்கட்டைவிரலாகிப் போனார்;
போனார் கடவுள் கட்டைவிரலாகி,
தன் கட்டைவிரலான உடலின் சிறு கட்டைவிரல் அசைத்து வினை செய்யமுடியா அளவிற்கு.
கடவுளின் விரல்கள் தேய்வதில்லை;
ஆனால், அவர் அவை சிறிதாகிப் போகும்,
அவரின் உடலோடு, உடலின் அளவு சம்பந்தப்படா மனதோடு.
வினை செய்யமுடியா கடவுள் என்னவாவார்?
படைத்தல் அற்றவை தம் இருப்புச் செத்துப்போகும்.
கடவுளும் அவ்விதமே செத்துப்போவார்.
கூடவே, கடவுள் என்ற பெயரும்.
பிறகொருமுறை,
புதிதாய் ஒரு கடவுள் பிறப்பார்,
தன் கட்டை விரற் கரு செத்த கடவுள் உருவம் எழ விரிந்து வைக்க.
நேரம் படைத்துச் செத்தக்கால்,
அக்கடவுளும் கடவுள் தன் கைக்கட்டைவிரலாகிப் போவார்,
இடதோ, வலதோ,
தன் வினை செத்துவைக்கும் அளவிற்கு,
கட்டைவிரற் கட்டைவிரல் குட்டித்துப்போயிருக்க
-----------------------------------------------------

Tuesday, October 09, 2007

ஸ்ரீரங்க ஸரிதம்

அண்ணன் ஸ்ரீரங்கன் "பாரீஸ் தலித் மகாநாட்டை முன்வைத்துச் சில..." என்று போட்டிருக்கும் இடுகையைத் துரியோதனன் சபைக்குக் கொண்டுவந்து துச்சாதனவேலை செய்ய -இப்போது- வரவில்லை. ஆனால், அதிலே கிடக்கும் பாலச்சந்திரன் கட்டுரையின் கடைசியிலே கிடக்கும் பந்திச்சாப்பாடு இன்னொரு பந்திச்சாப்பாடை ஞாபகப்படுத்தியது. அதுவும் இதுவும்

இது
"புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகரக்கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமா னது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில் நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது"


அது
"I also think that there have been subsequent intervening events," Giuliani told the NRA, "September 11, which cast somewhat of a different light on the Second Amendment."

"And while what he just said doesn't seem to make any sense whatsoever with regard to the events of September 11," commented Stewart, "it does speak to the tragedy that is 9/11 Tourette's. 'Won't you 9/11 help us 9/11, because 9/11 is a terrible 9/11 to 9/11?'"

Stewart's remark was a reference to Tourette's syndrome, a genetic disability which causes nervous tics and results in a small percentage of sufferers inserting random obscenities into their sentences.




எங்கட ஸ்ரீரங்கண்ணை கோவிக்கக்கூடாது. சும்மா பகிடிக்கு.

முடிச்சுப் போடும் இடுகை

அரைகுறை - 15

வவ்வால் என் முன் பதிவிலிட்ட பின்னூட்டம் கொஞ்சம் நாக்கை வெளியிழுத்துக் கன்னத்தைத் தொடச் செய்யும் பின்னூட்டமாகத்தான் இருக்கிறது. "பாலிலே எதேச்சையாக விழுந்த ஒரு சிறுதுளி நஞ்சிருப்பதாலேமட்டும், விளையும் கேடென்ன?" என்பதுபோலவும் "'தட்டுக்கழுவி, ஓர் அப்பனுக்குப் பிறந்தவனா?' என்று கேட்டால் பெரிது படுத்தப்படவேண்டிய விடயங்களா?" என்பது போலவும் அவர் எழுதியதை வாசிக்கும்போது புரிகின்றது. ஒருவரின் அச்சிலசுக்குதி இன்னொருவருக்கில்லை என்பதுதான் இதன் வழியறிதல்; மேலும், "ஆணைத் தாக்குவதாக எண்ணிக்கொண்டு பெண்ணையே (பெண்ணாயிருந்தும்) தாக்குவதேன்?" என்றதன் கேள்வி அவரிடம் எழுபடவில்லையோ தெரியவில்லை. அவர் எழுதியதை அவரும் ஒருமுறை வாசித்துப் பார்த்திருப்பாரோவென்று எனக்குச் சந்தேகமாகவிருக்கிறது. அவரைக் கடிவதாக இதை நான் சொல்லவில்லை. உண்மையிலேயே அப்படியாகத்தான் தோன்றுகிறது. தவறாக எடுக்கமாட்டாரென்று நம்புகிறேன். பதில் எழுதப்போனால், இன்னொரு பெரும் 'வழவழ கொழகொழ' பாயாசப்பதிவாகத்தான் போகும். இதுவரைக்கும் புளிச்சதை வச்சு ஊத்தின தோசைகளே போதும் என்றளவு ஆயாசமே மிஞ்சியிருக்கின்றது. ஒன்றைமட்டும் சொல்லவேண்டும். உலகநிகவுகள் குறித்த பதிவுகள் அவ்வப்போது அங்குமிங்கும் எழுதியதுண்டு. ஆனால், இந்தியநிகழ்வுகள் குறித்து - எனக்கும் ஒன்றரைத்துட்டு அபிப்பிராயங்கள் இருந்தபோதுங்கூட- இலங்கை சம்பந்தப்படாத எதிலும் நான் அநாவசியமாக எழுதத் தலைப்படுவதில்லை. அஃது அநாவசியமான வார்த்தைப்போராகி புலி-எலி-கிலி-களி-சளி-பழி-மழி என்றுதான் தள்ளப்பட்டுப்போய் முடியுமென்பதாலே:-)

சாத்திரிக்கு நானிட்ட பின்னூட்டமும் சரி, இங்கே என் பதிவிலே எழுதியதும் சரி, அவர் தமிழச்சியினைத் தம்பி என்று விளித்தெழுதியதன்பின்னான கயமைத்தனமும் தமிழச்சி தந்த அவரது எந்த ஈழத்து இயக்கமும் அரசியலும் சாராத நிலை பற்றிய விளக்கத்தையும் காதுகொடுத்துக் கேட்காமலே தமிழச்சி் தான் நினைப்பதுபோலவே யாரோடு கூட்டுச்சேர்வது என்பவற்றிலே செயற்பட்டிருக்கவேண்டுமென்ற தொனியுமே; அதைக் கடிவதாகவே அவருக்குப் பின்னூட்டமிட்டேன்; என் பதிவிலும் எழுதினேன். மிகுதிப்படி தமிழச்சி-சாத்திரி-தொலைபேசி எண்கள்-ஏற்காமை-பதிவிலேகூறாமை இவை குறித்து எனக்கு எதுவும் தெரியாது; அவை குறித்த மேலதிக ஈடுபாடுமில்லை. தமிழச்சி அப்படியாகத்தான் ஒரு பக்கம் சாய்ந்துதான் அரசியலிலே செயற்படுகின்றார் என்றொரு கதைக்கு வைத்தாலுங்கூட, அப்படியாக அவர் செயற்படக்கூடாதென்று சொல்வதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமையிருக்கின்றது? அவரின் செயற்பாடு, அவரின் சுதந்திரம், அவர் ஒத்தியங்கமாட்டாரென்றால், சபேசன்போலவே மாற்றமைப்பு ஏற்படுத்தி இயங்குங்களேன்.

சத்தியக்கடதாசி+இரயாகரன் ஆதரவாகத் தோன்றுகின்றாரோ என்று எண்ணிக்கொண்டு, தமிழச்சியைப் போட்டுத் தொல்லைப்படுத்தும் ஈழத்தமிழுருவேறிகளின் அடாவடித்தனத்துக்கும் தமிழச்சி வலை இரசிகர் மன்றத்தாரின் போகிற போக்கிலே தேநீருக்குள் சொட்டாய்ச் சயனைட் ஊற்றித் தரும் ஈழ-எலியெதிர்ப்புக்க்காழ்ப்புத்தனத்துக்கும் -இன்றைக்குக் காலையிலே பார்க்கும்போது- பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.

தமிழச்சி, 'தமிழ்மணம் நீக்கவேண்டிய இடுகைகள் இப்போது இரண்டு', 'கொளத்தூர் மணி தமிழச்சிக்கு ஆதரவாக விட்ட அறிக்கை' இப்படியாகக் காட்டும் "பில்டப்பு"கள் வேறு தனிப்பட்ட விதத்திலே எனக்கு எரிச்சலைத்தான் ஊட்டுகின்றன. [சாத்திரியின் 'தம்பி தமிழச்சி' இடுகை தமிழ்மணத்திலே இல்லை என்பதோ, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் (அல்லாதவர்கள்) ஆனவர்களிலே நான் அவர்களின் உறுதியான கொள்கைப்பிடிப்புக்காக மதிப்புக் கொண்டவர்களிலே கொளத்தூர் மணி மிகவும் முக்கியமானவர் என்பதெல்லாம் இங்கே சம்பந்தப்படத்தேவையில்லை] கொளத்தூர் மணி இது சம்பந்த ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறாரா என்றும் தெரியவில்லை; அப்படியானாலுங்கூட, "அவர் எனக்கு ஆதரவாகக் கருத்தைத் தெரிவித்தார்" என்று தமிழச்சி சொல்லியிருந்தால் ஆவலுடன் கேட்கத் தூண்டியிருக்கக்கூடியது, "தமிழச்சிக்கு ஆதரவாகக் கொளத்தூர்மணி அறிக்கை" என்று கூவும்போது, "அட, அதுக்கென்ன? சும்மா (பிலிம்) ஷோ காட்டாதீங்க" என்ற மாதிரியாகவே சலித்துக்கொள்ளவைக்கிறது.

''பிரஞ்சு-தலித்' மகாநாட்டுக்கு டக்ளஸ் தேவானந்தா இலட்சம் கொடுத்தார்', 'பெரியார் தமிழ் எதிரி' என்று அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைவிடும் ஈழத்தமிழர்கள் சிலரின் கோணங்கித்தனத்துக்குக் குறைந்ததாகத் தெரியவில்லை, தமிழச்சியின் 'நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று சொன்ன பிரெஞ்சின் இயக்கத்தலைமை எனக்கு இப்படியானவர்களின் நடத்தைக்கும் போன் போட்டுக் கருத்தினைச் சொல்லவேண்டும்' என்று நிற்பது. தலைமைப்பீடங்கள் சொல்லியா தொண்டர்கள் துண்டை எல்லாவிடங்களிலும் விரித்துத் தாண்டிச் செயற்படுகின்றார்கள்? கொள்கைப்போராட்டத்தன்மைக்கும் குழந்தைப்பிள்ளைத்தன்மைக்குமிடையிலே தடார் தடாரென்று பதிவுக்குப் பதிவு, பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் பாய்ந்து பாய்ந்து ஆடலோட்ட மின்னோட்டமாக, தமிழிச்சி உணர்வு மாறித் தட்டச்சிடுகின்றாரோ என்று சந்தேகமாகவிருக்கின்றது.

ஐம்பது எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெரியார் சொன்னதை ஆய்வுக்குள்ளாக்கி, காலத்துக்கொவ்வியதைத் தேர்ந்தெடுத்தோ, காலத்துக்கொப்ப உருமாற்றாமலோ இப்போது பெரியாரையும் திருவுருவாக்கி, மந்திரமாக அப்படியே உச்சரிப்பதிலே எனக்கு நம்பிக்கையில்லை. பெரியாரின் அநேக கருத்துகளை அவர் சொன்ன காலத்தினை எண்ணி, அவற்றின் புதுமைக்கும் புரட்சித்தன்மைக்குமாக வியந்து கொண்டு போகலாம் (தமிழகத்திலே பாரதியைக் காலத்தின் முன்னோடி என்று வியக்கும் பலருக்குப் பெரியாரை அப்படியாகச் சொன்னால், ஒவ்வாதிருப்பது ஏன் என்று இன்னமும் எனக்குப் புரியவிலை); ஆனால், இன்றைக்கு எனக்கு அவரின் கருத்துகளை அப்படியே வைத்துக் கொண்டு செயற்படவேண்டிய அவசியமுமில்லை. அதேநேரத்திலே, பெரியாரைப் பற்றித் தெரியாத ஈழத்தமிழர்கள் வாயை மூடிக்கொண்டாவதிருக்கவேண்டும் என்று நிச்சயமாகச் சில குருவிப்பதிவுகளை வாசிக்கும்போது தோன்றுகிறது; அப்படியான பதிவுகளிலே, இந்துமுன்னணி குண்டாக்கள் மட்டத்துக்கு இறங்கி, "பெரியார் தமிழுக்கு எதிரி", "பெரியார் தொண்ணூறு வயதிலே முப்பது வயசுப்பெண்ணைக் கட்டினார்", "பிள்ளையார் சிலையை உடைத்தது மட்டுமே பெரியாரின் சாதனை" போன்ற எடுத்தேன்~கவிழ்த்தேன் வரிகளைப் போடும்போது, தூக்கினேன்~ உதைத்தேன் என்று முதுகிலே இரண்டு வரி காலாலே போடத்தான் உத்வேகம் வருகிறது. சத்தியக்கடதாசியையும் இரயாகரனையும் எதிர்ப்பதானால், போய் நேரடியாக அவர்களை எதிருங்களேன்; எதுக்கு அரையும் குறையுமாக பெரியார் தாடியைப் பிடித்திழுக்கின்றீர்கள்?

மறுபுறத்திலே, பிரச்சனையின் வீரியம், நூற்கண்டுச்சிக்கற்றன்மையை உணர்ந்து கொள்ளாது, நேரம் பிறழ்ந்த நகைச்சுவையுணர்வுடன் "தமிழச்சிக்கு ஆதரவாக உதைப்பேன், அடிப்பேன்" என்று காலைத்தூக்கி, கையைச் சுழற்றி, கராட்டே போஸ் கொடுத்து ஓசை கிளப்பும் 'பேன்' பெரியார்ப்பதிவர்களுக்கும் முன்னர்கூறியது மாதிரியான பெரியாரைப்புரியா ஈழப்பதிவுக்குஞ்சுகளுக்கும் அவற்றைச் செய்யக் 'கருத்துச்சுதந்திரம்' இருக்கின்றதென்பது நடைமுறையின் கொடுமையென்றாலும், அது சகித்துப்போகவேண்டிய கொடுமை.

சுகுமாரன், கொளத்தூர் மணியையெல்லாம் 'சத்தியக்கடதாசி' ஷோபா சக்தியின் ஆதரவாளர்கள்போலக் கொண்டுபோய் -இப்பிரச்சனையின் & ஆட்களின் பின்புலம் அறியாமல் வாசிப்பவர்களுக்கு- வலையிலே மாயத்தோற்றத்தினை ஆக்கியிருப்பது காலத்தின் விகாரமென்றால், அச்சுழியிழுந்தோடிய ஓட்டத்திற்கு எவர், எது காரணமென்று எனக்குத் தெரியவில்லை. தமிழச்சியோடு சுரண்டிக்கொண்டிருக்கும் புலிவால்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் ஈழத்தமிழர்களின் அறியாமையும் பொறுமையின்மையுமா அல்லது தமிழ்நாட்டிலிருப்பவர்களுக்கு ஈழத்தமிழ்ப்போராட்டம் என்பது ஈழப்பஞ்சமருக்கெதிரான ('தலித்' என்ற பதத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் நுண்ணரசியல் தம் ஈழத்துத்தலித் சிறுகதைத்தொகுப்புக்கு அ. மார்க்ஸினை முன்னுரை எழுத வைக்கும் சத்தியக்கடதாசிக்காரருக்குத்தான் வரும்) போராட்டம் என்பது போல தமிழகத்தினருக்கு நிறுத்தியிருக்கும் புத்திசாலித்தனமாவென்று தெரியவில்லை. அதற்குப் பால் வார்ப்பதுபோல, புலி ஆதரவாளர்களின் ஈழத்திலே சாதிப்பாகுபாடே இப்போது இல்லை என்ற "ஈரானிலே தற்ப்பாற்புணர்ச்சியாளர்களே இல்லை" வகை அறிக்கைகள்.

இத்தனைக்கும் இரயாகரனோ, சத்தியக்கடதாசிக்காரர்களோ மேற்கொண்டு எவ்விதத்திலும் வாயைத் திறக்காமலிருப்பது, எரிகிற வீட்டிலே புடுங்கிற கொள்ளியும் இலாபமெனும் செயலன்றி வேறென்னவென்பது?

இவற்றைத்தான் விடுவோம்; இவையெதுவுமே புரிந்து கொள்ளாது, செந்தோழர் தியாகு வெளிப்படுத்தும் மார்க்ஸியப்போராட்ட வரி அறிக்கைகளும் கேள்விகளும் பெருந்தோழர் இரயாகரனே பரவாயில்லை என்றாக்கிவிடுகிறது (இத்தனை குளறுபடிக்குள்ளேயும் கொஞ்சம் அழுத்ததைக் குறைத்து முறுவலைத் தருவது தோழர் தியாகுவின் பகுதிநேர மார்க்ஸியப்போராளிக்கீச்சுக்காட்டற்பின்னூட்டமே என்றால் மிகையாகாது)

தமிழ்நதி சொன்னதிலே நிச்சயமாக ஒரு வலுத்த யதார்த்தமிருக்கின்றது. கோபத்திலே எல்லோருக்கும் சறுகுவது வழக்கமே. எத்துணை விழிப்புணர்வு, புரட்சிக்கருத்து என்று பேசிக்கொண்டிருப்பவர்களுக்குள்ளேயும் அறியாமலே கடத்தபட்ட அழுக்குகள் உள்ளிருப்பது தடுக்கமுடியாதது. இந்நிலை எல்லோருக்கும் உண்டு. வெளிவரும் சந்தர்ப்பம் கிடைக்கையிலேயே தெரியும். இஃது எனக்கும் பொருந்தும் எவருக்கும் பொருந்தும். அவ்வகையிலேதான் தமிழச்சியின் வரிகள் வந்திருக்கமுடியும். அதனை அவர் உணர்ந்தால் சரி; அவ்வரிகளி்லே என்ன அத்துணை காட்டமாகவிருக்கின்றது என்று வவ்வால் போல அவர் கேட்டுவிடமாட்டாரென்று நம்பிக்கைதான்.

குறைந்த பட்சப்புரிந்துணர்வுக்கு உள்ளே இடமும் நிதானமாக மற்றவர்களின் குரலைக் கேட்பதற்குப் பொழுதும் ஒதுக்க வசதிப்படாதவர்களுக்கு இதிலே இனிமேல் சொல்வதற்கு என்னவுண்டு? எக்கேடும் பட்டுத் தொலையுங்கள்.

இதனைப் புரிந்துகொண்டு இரு பக்கத்தாரும் நடக்காவிட்டால்,

1. நட்டம் களத்திலே குதித்துக் குதித்து, "ஹா! ஹா! ஹதம்! ஹதம்!" என்று அறை(அரை?)கூவும் சம்பந்தப்பட்ட இரு சாராருக்குமே

2. போரின் எச்சத்து இலாபத்தை அந்தப்பக்கம் பார்ப்பனியப்பின்னூட்ட வாலாக்களும் இந்தப்பக்கம் புலியெதிர்ப்புக்கும்பலும் பிரித்துக்கொண்டு போகும். இது சிண்டைப் பிடித்துச் சண்டைபோடும் இரு பக்கத்தவர்களுக்கும் உவப்பென்றால், பதிவுப்போரிலே சம்பந்தப்படாத பார்வையாளர் நாம் என்ன சொல்லவிருக்கிறது? நீங்கள் சொல்லவும் புரிந்து அறியாத குழந்தைகளுமல்ல; நாங்கள் சொல்லும் பக்குவம் வாய்ந்த பெரியோருமல்லர்.

தமிழச்சி - சாத்திரி ஒப்பந்தமின்மை தொடர்ந்தால் தொடரட்டும். ஆனால், நான் இச்சுயநியமிப்புத்தான்தோன்றிச்சமாதானத்தூதுவர் முயற்சியிலிருந்து மனந்தளர்ந்து சோர்வுடன் விலகிக்கொள்கிறேன்.

இந்தப்பிரச்சனையைத் தீர்க்க, இனி ஈழத்தில் ஐபிகேப்பை வாய்மூடாமலே ஆதரிக்கும் யாரேனும் முகமூடி ஆண்டவரே வந்து மாயாவதி பெரியார் சிலையை எழுப்பியதுபற்றிக் கண்மூடித்தனமாகக் கிண்டல் செய்து தாக்கும் பதிவு போட்டாலே வழியுண்டு :-( [நம் நண்பர் சர்வேசன் வந்து, பிரெஞ்சுப்புரட்சியிலே முக்கியமான பதம், 1. புரட்சி, 2. தோழர், 3. புலி, 4. பெரியார் என்று கொண்டையை மட்டும் விட்டுவிட்டு வாக்கெடுப்பு நடத்தினாலும், வழி திறக்கலாமென்று யாரும் கொலைவெறியுடன் பின்னூட்ட முன்னால் நானே முன்னூட்டிவிடுகிறேன் :-)]

(வலைப்பதிவில் இவ்விவகாரம் தொடர்பான என் கருத்து இவ்விடுகையுடன்) முற்றும்.

அநாநி சொன்னதைக் கவனிக்கப்போகிறேன். (அப்படியாகச் செய்துகொண்டிருப்பதாகத்தான் போன ஒன்றரை மாதங்களாக நெற்றுப்பக்கம் நாற்று நடவோ, களை பிடுங்கவோ, அங்கு விளையாடும் எந்தக்குலப்பெண்களுக்கும் மஞ்சள் அரைத்துக்கொடுக்கவோ, மாமன் மச்சானோடு பஞ்சாயத்துக்கூட்டவோ போவதேயில்லையென்று என்று எனக்கும் என் மேலதிகாரிக்கும் வாரச்சுற்றறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறேன் என்பது ஒரு பக்கமிருக்கட்டும் :-))

Monday, October 08, 2007

தமிழச்சி மீதான சொல்வன்முறைகளும் தமிழச்சியின் கருத்துச்சறுக்கல்களும்

அரைகுறை - 14

தமிழச்சி, நான் வாசித்தவரையிலே இராயகரன் + சத்தியக்கடதாசி போன்றோர் விரித்துக் காட்டியதுபோல, திட்டமிட்டு ஓர் ஈழத்தமிழர் அமைப்பு சார்ந்து ஆதரித்தோ, இன்னோர் ஈழத்தமிழர் அமைப்பினை வெறுத்து எதிர்த்தோ பதிவுகளைப் போடவில்லை என்று நம்புகிறேன்.

தமிழ்ச்சோலையைப் பின்னிருந்து யார் நடத்துவது என்பது இரயாகரன் சொல்லும்வரை எனக்குத் தெரியாது. தமிழ்ச்சோலை என்று ஒன்றிருப்பதோ, அதிலே நிகழ்ந்து குறித்து, தமிழச்சி பதிவு போட்டதுங்கூட இரயாகரன் பதிவிலே கண்டதுதான். ஆனால், தமிழ்சோலையிலே நிகழ்ந்ததாகத் தமிழச்சி சொல்வது அவ்வாறுதான் நிகழ்ந்திருந்தால், தமிழச்சி கேட்கும் நியாயம் அதன் பின்னால், யாரிருப்பினும் கேட்கப்படவேண்டியதே. அவருடைய ஒரே நோக்கம், அவர் சொல்லும் பெரியாரியத்தினது பிரசங்கமும் பரப்பலுமே என்றே தோன்றுகின்றது. இரயாகரன் + சத்தியக்கடதாசி ஆகியோர் அவரின் பதிவுகளிலேயிருந்து தமக்குத் தேவையான வகையிலே விரித்து அர்த்தம் தோன்றும் வண்ணம் எழுதியிருக்கின்றார்கள் என்பதும் என் உணர்தல்.

அதன் பின்னால், இரயாகரன் + சத்தியக்கடதாசி ஆகியோரை அமைப்பு ரீதியிலே முரண்படுகின்றவர்களிலே ஈழத்தமிழர் சிலர் தமிழச்சியினையும் மிகவும் தவறாக இலக்காகக் கொண்டு தாக்க முயல்கின்றனர் என்றே படுகின்றது. சாத்திரியின் கடைசி இரு இடுகைகளும் மிகவும் பொருந்தாதவை என்பதிலே எனக்கேதும் மாற்றுக்கருத்தில்லை. அதுவும் தமிழச்சி பதிவாகவே "எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம்" என்று எழுதி தன் பதிவினைப் பற்றிய இரயாகரன் போன்றோரது விளக்கம் தவறென்று சொன்னபின்னரும் இப்படியாக சாத்திரி எழுதியது மிகவும் முறையல்ல. தமிழச்சியின் பதிவிலேயே வேறு யாரோ அநாநி அவருக்குப் பின்னூட்டம் மிகவும் கேவலமாக, யாழ்ப்பாண வழக்கிலேயே எழுதியிருந்தார். சாதி, பால், மதம், வாழ்வளம், மொழி சார ஏற்றவிறக்கம் சுட்டி இகழ்ச்சியாகவோ சொல்வன்முறைகொண்டோ தாக்குவதிலே உடன்பாடில்லை. தாக்குவதிலே தமிழன் என்று வந்து சேர்ந்த அடையாளத்தை என்னிலே பொதுவிலே அவ்வகையிலே பாதிக்கப்படாவிடத்திலே திணித்துக்கொள்ள விரும்பாவிட்டாலுங்கூட, இவ்விடத்து ஈழத்தமிழன் என்ற அச்சி(லுவையி)னை ஏற்றிக்கொண்டு, தமிழச்சியிடம் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

இது தமிழச்சி போன்றவர்களை ஈழத்தமிழர்களுக்காகக் குரல் எழுப்புவதைத் தடுக்க மட்டுமே வழி செய்யும் என்ற பக்கவிளைவுகளைக்கூட ஈழத்தமிழர் தாம் என்ற எண்ணத்திலே தாக்குகின்ற ஓரிருவர் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுவும் இவை எதற்கும் சம்பந்தப்படாத, ஆனால், இருசாராருக்குமே எதிரான, பின்னூட்ட 'பலான வாலா'க்கள், வளர்மதி-சுகுணா திவாகர் பிரச்சனையிலே, தமிழ்பித்தன் - தமிழச்சி பிரச்சனையிலே புகுந்து தமது திசைதிருப்பலுக்காக, எண்ணெய்..... இல்லை இல்லை பசு நெய் ஊற்றி விளையாடியதுபோல, இப்போதும் தமிழச்சி போன்ற ஈழத்தமிழ் ஆதரவாளர்களையுங்கூட ஈழத்தமிழரிலிருந்து பிரிக்க, "ஈழத்தமிழன்", "தமிழ்நாட்டுப்பெரியார்த்தமிழன்" வடிவங்களாக அவ்வப்போது கரிசனப்பின்னூடங்கள் வந்து கொட்டுகிறன. மாசிலாவுக்கு ஈழத்தமிழன் பின்னூட்டி எரிவதுக்கும் முண்டை மாசிலாவுக்கு ஈழத்தமிழன் பின்னூட்டுவதற்கும் வித்தியாசம் எழுதும் "ஈழத்தமிழிலேயே" தெரிந்துவிடும். இப்படியான நிலைகளையும் சாத்திரி போன்றோர் அந்நியமாக்குதலின்போது எண்ணிப்பார்ப்பதில்லை.


சபேசனின் ஐரோப்பாவின் மாற்றுப்பெரியாரியக்கம் நோக்கு, எவ்வகையிலும் ஆக்கபூர்வமானது. தலித் பெரியாரியக்கம் என்ற பதாகையின்கீழே புலியெதிர்ப்பினைச் சிலர் செய்கின்றார்கள் என்று அவர் கருதுவதால், மாற்றாக புலிகளுக்கு ஆதரவான பெரியாரியக்கம் என்று அவர் ஒன்றை அமைத்திருப்பது மிகவும் ஒழுங்கான சரியான முறையிலான எதிர்கொள்தல். அதை வரவேற்கலாம். தமிழச்சி போன்றோர்கூட, பெரியார் கொள்கைக்காக ஆங்கே சேர்ந்தியங்கும் வாய்ப்புண்டு.

இவ்வகையிலே ஈழத்தமிழரோ எத்தமிழரோ தமிழச்சியினைக் கேவலமாகத் தாக்கிப் பின்னூட்டுவதையும் பதிவிடுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதே நேரத்திலே, கொழுவி் தமிழச்சிக்காக வரிசைப்படுத்தியிருக்கும் கேள்விகள் நியாயமானவையும் தமிழச்சி சொல்லிக்கொள்ளும் பெரியாரியப்பார்வைக்கும் அவரது சொற்செயற்பாடுகளுக்கும் இடையே மிகமுரண் கொண்டவையுமாகக் கருதுகிறேன். இவை தமிழர் என்ற வடிவிலேயே வரவில்லை. தொழில்சார்நிலைவன்மம், பால்வடிவவன்மம் என்பவற்றின் பாற்பட்டவை; கொழுவி நிதானமாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் கேட்டிருக்கின்றாரென்று படுகின்றது, அதற்குரிய நேர்கொள்ளும் திறனுள்ள தமிழச்சி் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.

சின்னத்தோழர் சொன்ன பின் - நவீனத்துவக்கதை

உது இங்கை என்ரை வீட்டுச்சின்னத்தோழர் & தொந்தரவாளர். வேறையொண்டும் நினைக்கக்கூடாது.

போன மாசம் என்னட்டையிருந்து தாய்க்காரி லப்ரொப்பைப் பறிச்சுப்போட்டா; அப்ப அப்ப கண்ணிலை வெள்ளீயமூடியையோ மூடிக்கட்டும் கறுப்புலெதர்ப்பையையோ (தர்ப்பை இல்லை; லெதர்ப்பை) காட்டினா உண்டு. இல்லாட்டி ஒரு அறப்பழசான டெஸ்க்ரொப்தான்; டெஸ்க்ரொப்பெண்டு சொல்லுறதிலும்விட ரெக்ஸ்டவுண் எண்டு சொல்லுறதுதான் சரியாயிருக்கும். கொஞ்சம், நாலு பந்தி அடிக்க விறைச்சுப்போய்ப் பாரீசவாதக்காரன் மாதிரியா மொனிட்டரும் மினுக்காமல் மவுசும் சிமிட்டால் ஐயோண்டு கிடக்கும். அப்பிடியாக் கணிப்பிச்சையெடுக்கிறன் பெருமாள் எண்டிருக்கிறவனிட்டை பிடுங்கித் தின்னுற அனுமாரா இப்பக் கொஞ்ச நாளாய்ச் சின்னத்தோழர். மவுசைப் போட்டு அடிக்கவேணுமெண்டு விளங்குது. ஆனா, அதுக்காண்டி குசினிக்குள்ளை ஓடுற சின்ன எலிக்குத் தும்புத்தடியால அடிக்கிறதுமாதிரி அடிக்கக்கூடாதெண்டு ஆளுக்கு விளங்குதில்லை. மவுஸைப் பிடிச்சு அடிச்சு என்ன செய்யப்போறாய் எண்டால், காயூ (Cail Lou) விளையாடப்போறன், Poowa & Kwala பாக்கப்போறனெண்டு விளக்கம். மாட்டனெண்டால், ரீவியை அமத்திப்போடுவானெண்டு, "சரி தோழர்" எண்டு விட்டு, அப்பப்ப யூரியூப்பிலை சின்னப்பிள்ளையள் கார்ட்டூன் காட்டி கதையும் சொல்லுறது வழக்கம். மூண்டு கிழமைக்கு முன்னாலை ரெட் ரைடிங் ஹுட் கதைப்புத்தகத்தை எடுத்து வந்து படம் காட்டிக் கதையைச் சொல்லிப் போட்டு, இன்ரநெற்றிலையும் போய் 1700 இலிருந்து ரெட்ரைடிங் ஹூட் கதைச்சித்திரங்கள் & கதைமுடிவு மாறி மாறியிருக்கும் படமெல்லாம் காட்டி, "அப்பம்மாவுக்குச் சாப்பாடு கொண்டுபோன ரைடிங் ஹூட்டோட கதைச்ச ஓநாய் விசயம் கேட்டுப் போய் அப்பம்மாவை விழுங்கினது" எல்லாம் சொல்லி முடிச்சாச்சு.

முந்தநாளிரவு.

"அப்பூ படுத்து நித்திரை கொள்ளனணை"

"சன் போகட்டும்"

"சூரியன் போயிட்டுது; போய்ப் பட்றா" - (எரிச்சல்; "டேய்ய்! லப் ரொப் வெள்ளியிரவு மேசையில சும்மா கிடக்குதடா!! போய்ப் படுடா! இல்லை மேலை போய் அம்மாவையாச்சும் தொந்தரவு பண்ணனடா")

"சீ, இங்கை" - அறைலைட் வெளிச்சத்தைக் காட்டுறான்.

"டேய், அது லைற்றெடா" (லைற் எண்டால் எலக்ரிக் லைட்; லோக்கலெண்டால் கூடாத சாமான்; நடுச்சென்ரர் எண்டால், நடுச்சென்ரர்தான் லெப்டுமில்லை, ரைட்டுமில்லை எண்ட பேருண்மையள் சின்னத்தோழருக்கு இன்னும் விளங்கத்தொடங்கையில்லை)

"ரெல் மீ எ ஸ்ரோரி; கதை சொல்லுங்கோ" - வி. எஸ். மணியன் கதையைப் பாலச்சந்தர் இயக்கி சுந்தரராஜன் வசனம் பேசினது மாதிரி இங்கிலீசில சொல்லி, எனக்கு விளங்காதெண்ட (சரியான) சந்தேகத்தில தமிழில வேற. ரெண்டு மொழி கதைக்குதெண்டு புளுகிறதோ (போன கிழமைதான் டெட்லாங்குவிஜ் பற்றிப் புத்தகம் எழுதினவர் ஒருவர் ரிவியில எல்லா ஸோவிலையும் வந்து, இரண்டு மொழி தெரிஞ்சால், மூளை விரியும், அல்ஸைமர்ஸ் குறையும் எண்டு சொல்லினதால சந்தோசந்தான்), இல்லை, குழப்பிறானெண்டு பயப்பிடுறதோ (தங்க்யூவுக்கு ஸ்பனிஷ் என்னவெண்டு டோரா கார்ட்டூனைப் பாத்துப் போட்டுக் கேட்டபிறகு) தெரியேல்லை. தமிழை மட்டும் எங்கை கண்டாலும் இங்கிலிஸிலையிருந்து பிடிச்சுப்போடுறான் (தமிழ்ப்பாட்டு கேட்டால்) அல்லது பிரிச்சுப்போடுறான் (சைனீஸ் ஸ்ரோரிலை தாய்லாந்து அரிசிச்சாக்கிலை ஆடிக்கிடக்கிற பொம்பிளைப்படத்துக்கும் வேர்ச்சுவல்தமிழ்யூனிவசிற்றி வெப்சைட்டில கிடக்கிற சின்னச்சிலைக்கும் தமிழ்முடிச்சுப்போட்ட முதலாவது ஆள் சின்னத்தோழர்தான்).

"இண்டைக்கு நீ சொல்லு" (லப் ரொப்பே கண்ணை நிரப்பிக்கொண்டிருக்குது; பெரிய இன்ரர்நெற் புரட்சித்தோழற்றை புரட்சிமுட்டைப்பொரியற்பதிவைக் கண்டதிலையிருந்து நாலைஞ்சு கேள்வியள் காலைமையிலிருந்து சூடான ரீயாப் போடோணுமெண்டு கை அரைவாசியில கனக்ஷன் அறுந்துபோகாத கொம்பியூட்டருக்காய் அலையுது; "ராசா நீ உன்ரை பாட்டுக்குக் கதை சொல்லு, நான் தட்டித்தட்டி ஓமோம் சொல்லுறனாம்")

"ஓகே" (வாழ்க நீ எம்man)

"லிற்றில் ரைடிங் ஹூட் கதை"

"புக் வேணும்" (வாசிச்சுக்கிழிச்சவங்களைப் பாத்திருக்கிறன்; வாசிக்காமலே புத்தகத்தை நானறிய மூண்டு வயசில கிழிச்சவங்கள் இவனும் இவன்ரை மாமியுந்தான்)

"இந்தா" (ஏதோ ஒரு புத்தகம் - வின்னி த பூவோ? காயோ?)

"ரெத் ரைடிங் ஹூட் புக்..." (டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! வாசிக்காமலே கிழிக்கிறவனே சரியான புத்தகம் கேக்குதா? பொம்மை, களிமண், கார், பந்து, பில்டிங் புளொக், பயர் எஞ்சின், தொமஸ் ரெயின் எல்லாம் விரித்து மூஷிகமாய் அடி தேடிக் குளிச்சுக் களைச்சு ஹூட் பாதி கிழிஞ்ச ரைடிங் ஹூட்டை எடுக்க உற்சாகம் தந்தது மேசைக்கெட்டியும் விரலுக்கெட்டாத லப்ரொப்பின் (நி)தரிசனமே)

"சொல்லு" (லப்ரொப்புக்குத் தாவ, அவன் என் லப்புக்குப் புத்தகத்தோட தாவுறான்; இனியொரு பொல்லாப்புமில்லை; இது எப்போதோ முடிந்த காரியம்)

"சொல்லப்பூ" (கதைக்கான படங்களைச் சரி பார்த்துப் பக்கம் பிரட்டப்படுகிறது)

"ஒரு ஊர்ல ரெத் ரைட்ங் ஹூட்"

"பிறகு.."

"ரெத் ரைடிங் ஹூட் என்ன செய்யுது?"

"நீயெல்லொ சொல்லோனும். என்ன செஞ்சது?"

"அப்பம்மாக்கு ..."

"அப்பம்மாக்கு?"

"அப்பம்மாக்கு அப்பிள், கிரேப்ஸ் பாஸ்கற்றுக்கை..."

"பாஸ்கற்றுக்கை போஒட்டுஉ..."

"பாஸ்கற்றுக்கை போட்டு என்ன செய்யுது?"

"நீ சொல்லு; என்ன செய்யிறது?"

"கொம்பூட்டர்ல ஈமேல் அனுப்பீற்று."

ம்க்!! ...... "என்ன?"

"அம்மாட்ட அப்ஸ்ரையர்ஸ்..."

புத்தகத்தை லப்ரொப்பில விசிறிப்போட்டுத் தோழர் பாஞ்சிறங்கித் தாவியேறிப்போனார்.

மூடாத புத்தகத்தினுள் ஓநாயும் திறக்காத லப்ரொப்பின்முன் நானும் நல்லாக் குழம்பிப்போய்க் கொஞ்சநேரம் குந்தியிருந்தம்.

Sunday, October 07, 2007

இரயாகரனுக்கு மேலதிகமாக ஒரேயொரு கேள்வி (அல்லது வேண்டுகோள்)

அரைகுறை - 12

உங்கள் புரட்சிப்பட்டியலிலே கேள்விகள் கேட்பவர்களைப் பாஸிஸ்ட்டுகள், பினாமிகள் என்றுமட்டும் திட்டிக்கொண்டு பதிலைச் சொல்லுமளவுக்குத் தரமில்லையெனச் சொல்லுவதே ஒரு வகையிலே கருத்துச்சுதந்திரம் மறுக்கும் ஸ்டானிய,பொல்பொட்டிய, பொடா, தடா, பட்ரியோட் சட்ட(மறுப்பு)த்தன்மைகளாம். இதை நீங்கள் செய்கின்றபோது, புரட்சித்தன்மை வருகின்றது. ஸ்ரீரங்கன் தனக்குக் கொலைப்பயமுறுத்தல் புலிகள் விட்டார்களென்று சொன்னபோதும், லக்ஷ்மியின் வீட்டிலே புலிகள் கொள்ளையடித்துக்கொண்டுபோனார்கள் என்று நீங்கள் பதிவுபோட்டபோதும் முதலாவது பின்னூட்டங்களாகவும் பதிவுகளாகவும் இருந்தவை யாருடையனவென்று போய்ப்பாருங்கள். இராஜீவ் கொலை குறித்தோ, துரோகிகள்-தியாகிகள் குறித்துப் பட்டியலிடுவது குறித்தோ, குழந்தைப்போராளிகள் குறித்தோ, தேசியத்தலைவர் புகழுரைப்பது குறித்தோ எனது தனிப்பட்ட ஒற்றைச்சல்லிக்கருத்துகள் எவையென்று அறியாதிருப்பின், மற்றவர்களைப் பற்றிக் கருத்துகளைத் தெரிவிக்காமல் வாயை மூடிக்கொண்டிருங்கள் (ஆஹா! இது புலிப்பாஸிட்டுப்பினாமிமாபியாக்கள் செய்கின்ற காரியமென்ன? ;-)).

உங்களைப் பற்றி இன்றைக்கு நேற்றைக்குக் கேள்விப்பட்டவனில்லை நான்; உங்களுக்கு நடந்தவை குறித்தும்; நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது குறித்தும். தனிப்பட்டவர்களுடனான பேச்சுகளின்போதும், உங்களின் பதிவுகள்குறித்து அவற்றின் நடுநிலையான தரவுகளுக்காக மிகவும் மதிப்பினைக் கொண்டுதான் பேசியிருப்பதையும் (நேற்றுக்கூடப் பேசியதையும்) அவர்கள் சொல்லவேண்டினால், சொல்லலாம். ஆனால், உங்களுடைய கொக்கோ கோலாவுக்கும் கொக்கட்டிச்சோலையிலும் கொக்கிளாயிலும் குண்டுவெடிப்பதற்கும் சம்பந்தப்படுத்தும் பட்டாம்பூச்சி சிறகடிப்புக்கும் பசுபிக்சமுத்திரத்துப்பூகம்பத்துக்குமான தொடர்பாடலின் நடைமுறைப்பயனில்லாமை வெறுப்பேற்றவே செய்வதாலேயே "நடைமுறைப்பயன் என்ன?" என்று கேட்டேன். அதன் நீட்சியாகவே தயா சோமசுந்தரம் தரவுகளை வைத்துச் சமைத்த யாழ்க்குடாமக்களின் இன்றைய உளவியலிலே உங்களின் பாட்டாளிக்கான பாட்டளிசேர்பொற்கொன்றைப்பதிவுப்புரட்சியின் பயனை வினாவினேன்; அவர்களிடம் போய், கொக்கோகோலாவுக்கும் கொக்குவிலிலே குண்டு வெடிப்பதற்கும் பாட்டாளிகளின் பற்றரி வீக் எண்டு சொல்லிப் பாருங்கள்; நீங்கள் சொல்லும் புரட்சிக்கான உந்துதல் தெரியும்.

நீங்கள் சார்ந்திருந்த மார்க்ஸியசிறுகுழுவினரை நேரடியாக எனக்குப் பரிட்சமில்லாதபோதுங்கூட, அதுபோன்ற சொந்தத்தாயியக்கத்தினருக்கே மறைந்து திரிந்த உதிரிமார்க்ஸியத்தமிழ்க்குழுவினர் ஓரிருவரைத் தெரியும்; ஜேவிபியிடம் அடிவாங்கிக்கொண்டும் கொல்லப்பட்டுக்கொண்டுமிருந்த சிங்கள ரொட்ஸ்கிஸ்டுகளையும் கண்டிருக்கின்றேன். அதனால், உங்களின் புரட்சிக்கொள்கைகளைக் கேள்வி கேட்பதோ, உங்களினைப் பகிடி செய்வதோ எனது நோக்கமில்லையென்பதைத் தெளிவாக மீண்டுமொரு சொல்ல விரும்புகிறேன். உங்களளவுக்கு மார்க்ஸியமயிர் புடுங்காவிட்டாலுங்கூட, ஓரளவுக்கு நடப்பது நடக்காதது ஊர்வது ஊராதது பார்த்தறிந்துகொண்டுதான் பலர் இருக்கின்றார்கள். ஆனால், அவற்றினை நடைமுறைப்படுத்தாது, குறுந்தேசிய, பல்தேசிய, பாஸிஸபினாமி என்று சொல்லிக்கொண்டிருப்பதிலே, உங்களுக்கான உளத்திருப்திதான் முடிவாகின்றதேயொழிய, யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கான பயனல்ல. இதற்கும் புஷ்ஷுக்கெதிராக, "அமெரிக்கன்வார் பார்" என்ற யூரியூப்பினைப் பார்த்தோ அல்லது டொன் ஸ்ரூவர்ட்டின் கொமடி சென்ரலிலே புஷ்+செய்னி+ஈராக் போருக்கெதிரான இரட்டைவரிநகைச்சுவைகளைக் கேட்டு அடையும் திருப்திக்கோ பெரிதளவிலே வித்தியாசமிருப்பதில்லையென்றே தோன்றுகின்றது.

ஈழக்கலையிலக்கியச்சுவடி நடத்திக்கொண்டிருந்தபோதிலே, 2002~2005 வரை நீங்கள் வந்து சேரமுடியாத இணைப்பாகவோ அல்லது உள்ளடக்கி பாமினி எழுத்துருவிலோ பிரெஞ்சிலோ அனுப்பிக்கொண்டிருந்த தமிழ்சேர்க்கிள் அஞ்சல்களையெல்லாம் அவை புலிக்கெதிரோ ஆதரவோ, அவற்றின் தேவையும் உங்கள் மீதான மதிப்பும் கருதியே, அக்குழுவின் கலையிலக்கியச்சேகரிப்பு நோக்கத்தினைக்கூடத் தளர்த்தி அனுமதித்துக்கொண்டிருந்தேன். இன்று நீங்கள் உங்களுக்கும் அசுரனுக்கும் கேள்வி கேட்டேன் என்பதற்காக ஒரு பின்னூட்டத்தினையே இதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரமோ தேவையோ இல்லையென்று அலட்சியமாக அமுக்கிவைக்கின்றீர்கள். பதில் தரத்தான் வேண்டாம்; குறைந்த பட்சம் அனுமதித்திருக்கலாமே? நீங்கள் காட்டும் கருத்துச்சுதந்திரமறுப்பு, உங்களின் கேள்விகளுக்கு மற்றவர்கள் பதிலளிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கும்போது, மற்றவர்களின் கேள்விகளைத் தள்ளுதல் (கொலம்பியா பல்கலைக்கழகத்தலைவரின் அராஜகரத்துக்கான ஈரானிய அதிபரின் ராஜகரமான மறுபாணி(ப்பினாட்டு) :-)) எல்லாம் எதனைக் குறிக்கின்றன?

இப்போது, ஈழத்தமிழர்கள் நடத்தாததால், தப்பியிருக்கும் இருக்கும் ஒரே மாற்றுத்தளம் தமிழ்மணம் என்றும் அதைக் கொள்ளை கொள்ள புலி பாஸிட்டு ஈழத்தமிழர்கள் வந்து குமிந்திருப்பதாகவும் ஒரு பதிவு போடுகின்றீர்கள். [இன்னமும் இந்திய தேசியத்துக்கு எதிராகத் தமிழ்மணப்பாஸிட்டுகள் ஸ்வஸ்திகா சின்னத்தோடு சிலரிட்ட பதாகைகளின் பாசிகளே அழியாமலிருக்கின்றன. அந்தப்பாஸிட்டுக்குற்றச்சாட்டுப்பதாகையோடு தமிழ்மணத்திலே சேர்க்கப்பட்ட சரவணகுமார் பதிவுகளையும் தமிழ்மணம் கருத்துச்சுதந்திரத்தோடு அனுமதித்தேயிருந்தது. தமிழ்மணம் நடத்துகின்றவர்கள் புலிகள் என்று அரைவேக்காட்டு மூர்த்தியின் பிதற்றல் தொடக்கம் வெட்டியொட்ட மட்டுமே தெரிந்த "ஈழத்தமிழர்" வீரமணியின் குற்றச்சாட்டுகளும் அநியாயத்துக்குக் கெடுதலாக வந்திருக்கும்வேளையிலே தமிழ்மணத்தினை மாற்றுத்தளமென்று நீங்கள் சொல்வதற்காக நன்றி. தொடர்ந்து அந்தப்புறமும் இந்தப்புறமும் உங்களதும் அசுரனதும் தமிழச்சியினதும் பதிவுகளைக் கடந்தும் பார்த்திருந்தீர்களென்றால், உங்களுக்குத் தமிழ்மணம் அநாவசியத்துக்குப் பெறும் திட்டுகள் புரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக தமிழ்மணம் உங்களின் நடுநிலையான கருத்துக்கு நன்றி சொல்லவேண்டும்.] அவ்வகையிலே தமிழ்மணத்திலே மாற்றுக்கருத்துகள் அவை எப்புறமிருந்து எப்புரமெரிக்க வந்தாலும் விடுவதுதான் முக்கியமான நோக்கம். ஸ்ரீலங்கா, ஈழ, இந்திய ஊடகங்கள் சொல்லமறுக்கும் கருத்துகளும் அவற்றுக்கான வெளிப்பாட்டோடு இருக்கவேண்டுமென்றே தமிழ்மணம் கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றது. அதை நீங்கள் சரியாகவே அடையாளம் கண்டதற்கு நன்றி. ஆனால், உங்களினைப் பேச வேண்டாமென்று தமிழ்மணம் திரட்டியூடே எங்கேனும் எவரேனும் எப்போதாவது சொன்னார்களா? மாலன் அண்மையிலே கூறியதுமாதிரியே ஒரு குழந்தைப்பிள்ளைத்தனமான குற்றச்சாட்டினை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், நீங்கள் உங்கள் கருத்தினைச் சொல்லும்போது, அவற்றினை அனுமதித்து எல்லாப் பதிவுக்காரர்களும் விடுகின்றார்கள். (நீங்கள்தான் மற்றையவர்களினுடையதை அனுமதிக்கின்றீர்களில்லை என்பது இங்கே அடுப்பிலே கிடக்கட்டும்.) அதேபோல, அவர்களும் கருத்தினைச் சொல்லக்கூடாதா? மாற்றுத்தளமென்பது, உங்களுக்கான கருத்தினைச் சொல்லும் தளமென்பதா உங்கள் அர்த்தம்? எல்லாவிதமான மாற்றுக்கருத்துகளுமென்று நீங்கள் சரியாக அர்த்தப்படுத்த உங்கள் சித்தாந்தம் இடமளித்துக் கைகொடுக்காதா?

மெய்யாகவே, வெஞ்சின பாயும்புலியும் சாராமல், குளிர்த்தூக்கம்போட்டுக்கொண்டேயிருக்கும் பொதுவகில ஒரேகணத்துக்கனத்த புரட்சியும் சாராமல் ஈழத்தமிழர்நலனுக்கான (மாற்றுக்)கருத்தினை எப்படி நானோ என்னைப் போன்றவர்களோ தத்துவத்திலே புரட்சிகரமாகவும் செயற்படுவதிலே உடனடி நடைமுறைக்காவும் வகையிலும் செய்யலாமென்பதை நீங்கள் சொல்லித் தந்தால், மகிழ்ச்சியடைவேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புலிப்பினாமிக்குறுந்தேசியக்கத்திகள் என்று சொல்லிக்கொண்டு கட்டுரை போடுவதிலும்விட, இலங்கை வெளிநாட்டமைச்சமைச்சருக்கு அமெரிக்க அரசு, மனிதவுரிமைகளைச் சேதப்படுத்துதல் என்ற அடிப்படையின்கீழே, இராணுவ உதவி வழங்குவதைத் தடுக்க விண்ணப்பிப்பது இன்றைக்கு முக்கியமான தமிழ்மக்களுக்கான போராட்டம் என்றே தோன்றுகின்றது. இதைக்கூட, "ஈராக்கிலே மனித உரிமைகள் மீறும் ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கவேண்டாம்; எதிர்ப்புரட்சி செய்யவேண்டும்; அல்லாதோர் புலிப்பாஸிட்டுப்பினாமிகள்" என்று புரட்சி/டுக்கட்டுரை வடிப்பீர்களானால், உங்களின் தத்துவத்தோடு ஒத்துப்போனாலுங்கூட, நடைமுறை முக்கியமாகின்றதென்பதிலே மாறுபடுவேன். உலகின் ஒரே மார்க்ஸியப்புரட்சியாளர்கள் நீங்களும் அசுரனும் மக்கள் கலை இலக்கியக்குழுவும் மட்டுமே, மற்றோரெல்லாம் பாஸிட்டுப்பூஸ்டர்கள் அன்ரெனாக்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தால், ஏகாதிபத்திய அமெரிக்கப்பாணியிலே நடுவிரலையோ, அரேபியப்பாணியிலே பெருவிரலையோ, ஈழத்துப்பாணியிலே ஒரு கையில் இருவிரல்களாலே வளையம் குவித்து அதனுள் மறுகையின் சுட்டுவிரலாலேயோ சுட்டிச் சைகை செய்வதல்லால், வேறொன்றுமறியோம் இரயாகரனே; வேறு யாருமாயிருப்பின், அப்படியே செய்துவிட்டுப்போயிருப்பேன். இரயாகரன் என்பவரின் கடந்த இருபதாண்டு வரலாறும் தத்துவக்கோட்பாடுகளும் தான் கொண்ட கருத்துக்காக நின்றாடும் நேர்மையும் திடனும் தெரிந்தளவிலே, அவர் புலிப்பாஸிட்டுப்பினாமிமாபியாபோபியாவின் உச்சக்கட்டத்திலே என்னை நோக்கி என்ன வசை அரற்றினாலுங்கூட, அப்படியாக ஒருபோதும் அவமதிப்பினைச் செய்யப்போவதில்லை.



மிகுதி பின்னால். இப்போதைக்கு ஒரேயொரு மேலதிகக்கேள்வி (நீங்கள் திட்டியே பதில் சொன்னாலுஞ் சரி; திட்டாமலே போனாலுஞ் சரி)

உங்கள் இடுகையிலே சிவப்பாலே எழுதியிருக்கும் வரிகளிலே 'புலி' என்பதற்குப் பதிலாக் 'இராயகரன் & அவரையொத்த தத்துவம்சார்மார்க்ஸியக்குழுக்கள்" என்பதைப் பிரதியிட்டு வாசித்து விடைகளைத் தருவீர்களா? (அல்லது உள்ளாழ்ந்து பாருங்கள்)

நன்றி.

இவ்வண் இவன்,
பாஸிஸ்டுப்புலிப்பினாமிமாபியாபுட்(food)சோல்ஜர்


பிகு: தூங்கும் பாஸிட்டுகளை எழுப்பிப் பாஸிஸத்துக்கு உயிர் கொடுக்க முயன்றால், மதிப்புக்குரிய இரயாகரன் என்றுகூடப் பாராமல் எதிர்ப்போம் என்பதை ஒரு கையுயர்த்தி முஷ்டி மடித்து, மறுகையிலே காய்கறியரிகத்தி பிடித்து, செங்கோஷமிட்டு எதிர்ப்பேன் என்பதை இத்தால் தெரிவிக்கின்றேன் :-)

Friday, October 05, 2007

மாசிலா, இரயாகரன், தமிழச்சி இன்னார் பிறர் & புரட்சி

கரைவு - 13

ஆடியவன் காலும் பாடியவன் நாவும் எவ்வளவுதான் கோணலென்றாலும், நிற்காது. யாராவது 'தக்கிட'த் தொடங்கினால் துமித்து நுனி விரலையாவது அடிக்க வைக்கப் பார்க்கிறது. நீட்டி முழக்க நேரம் வாய்ப்பிலை. அதனால், சிலருக்குச் சில கேள்விகள்


இரயாகரன்:

"மாதிரி வகையாறுகளுக்கு நாம் பொழுது போக்காக பதிலளிக்க எமக்கு நேரம் கிடையாது. இதனால் இது போன்றவற்றை நாம் அனுமதிக்க முடியாது" என்று சொல்லி அசுரன் (& உங்கள்) இற்கான எனது (புலிப்பாசிசபினாமிமாபியா) பின்னூட்டத்தைத் தவிர்த்திருக்கின்றீர்கள்;

1. இப்படிச் சொல்லும் உங்களுக்கும் ட்ரொட்ஸ்கியைக் கலைத்துக் கொன்ற ஸ்டாலினுக்கும் இராயகரன்/விஜிதரனின் வாய்களை மூட எண்ணியவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

2. இதே மனப்பான்மையோடு நான்கூட 2002~2005 இலே உங்களின் மடல்களை வைத்துச் செயற்பட்டிருக்கமுடியாதா?

3. உங்களின் கருத்துகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களெல்லாம் புலிப்பினாமிபாசிஸ்டுகள் என்கிற உங்களின் போபியாவுக்கும் இந்து இராம், அவருடைய சகலை, சம்பந்திகளின் போபியாவுக்கும் என்ன வித்தியாசம்?

4. இராஜீவ் காந்தி கொலை, ஈழத்தின் அரங்கிலே தியாகிகள்-துரோகிகள் இவர்கள் கட்டமைப்புகள், புலிகளின் மீறல்கள் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு என்ன தெரியும்?

5. நீங்கள் சொன்னதையே /..../ என்று அசுரன் பின்னூட்டமாக உங்கள் பதிவுக்கு இடுவதைப் போல, நானுமிட்டால், அதை மாதிரி வகையறாக்கள் என்று சொல்லமாட்டீர்களென்று நம்பலாமா?

6. மக்கள் புரட்சி... என்பதிலே பு என்பதை எழுத அருளரின் லங்காராணிமுடிவு ஞாபகத்துக்கு வந்து என்னுள் முரண் சிரிப்பது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்கேனும் புரிகிறதா என்று கேட்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணம்_வைத்தியசாலையிலே உளமருத்துவராகவிருந்த தயா சோமசுந்தரம் நேற்று பிரசுரித்த கட்டுரையிலே (Collective trauma in northern Sri Lanka: a qualitative psychosocial-ecological study) சொல்லப்படும் மக்களுக்குப் போய், தரகுமுதலாளித்துவத்தினைப் பற்றி இன்றைய நிலையிலே சொல்லி, முழு அகிலப்புரட்சிமுட்டைப்பொரியல் போடலாமென்று மெய்யாகவே நம்புகின்றீர்களா?

7. நான் உங்களின் பாசிசப்புலிப்பினாமிமாபியாபோபியாவிலேயிருந்து தப்பி, மக்கள்புரட்சிக்காரனாக (அமெரிக்க ஏகாதிபத்திய இருப்புக்கும் பங்கம் வராமல்) மாறிப் போராட என்ன செய்யவேணும்? ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றியத்திலேயிருக்கும் உங்களுக்குக் கட்டாயம் தெரியுமென்ற நம்பிக்கையிலேயே கேட்கிறேன். ஓய்வு நேரத்திலே காண்ட், அல் தூஸர், பூக்கோ, இந்ரா நூயி, வோல் மார்ட் எல்லாரைப் பற்றியும் எல்லாத்தைப் பற்றியும் இடையறாது கூகுல் செய்து, இந்து ராம் போன்ற இடதுசாரிகளை மேடையேற்றிப் பேசும் பெரும் சுதந்திரப்பல்கலைக்கழக நூலகங்களிலே வாசித்துச் செயற்படத் தயாராகவிருக்கிறேன் என்பதையும் முன்னேற்பாடாக அறியத் தருகிறேன்.

(பிகு: இதற்குப் பதில் சொல்லி புரட்சி நேரத்தை நீங்கள் செலவழிக்கத்தேவையில்லை. அதனாலே, என் கணித்திரையிலேயே கேள்விகள் துகள்மின்னாய்த் தெறித்துவிட்டுப்போகட்டும்)


ஸ்ரீரங்கன்:

யோகன் போன்ற இழிபிறவிகளுக்குத் தமிழச்சியின் பதிவுப்பின்னூட்டத்திலே திட்டியிருக்கின்றீர்கள்.

1. தமிழச்சியின் இடுகைத்தலைப்பினைச் சரியாகப் பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்கள் கொஞ்சம் நிதானமாக என்ன எது என்று பார்த்து வாசிப்பீர்களென்று நான் எதிர்பார்ப்பது தவறா?


தமிழச்சி:
பரிஸிலே தமிழ்வகுப்பொன்றிலே நடந்த சிக்கலைப் பற்றி எழுதியிருந்தீர்கள்

1. இவ்விடுகையிலே தமிழீழவிடுதலைப்புலிகளை நீங்கள் விமர்சித்திருப்பதாக (எழுதும்போதோ, இப்போதோ) கருதுகின்றீர்களா? தமிழ்ச்சோலை என்று நீங்கள் விடுதலைப்புலிகள் என்ற அர்த்தத்திலேயே சொன்னீர்கள்?

2. பரீஸிலே உங்களைத் தொலைபேசியிலே திட்டியவர் ஈழத்தமிழர்தான் என்று நிச்சயமா? (நிச்சயமாக, அப்படியாகத் திட்டக்கூடிய தறுதலை ஈழத்தமிழர்கள் நிறையப்பேர் பரீஸிலே மட்டுமல்ல, பாரெல்லாம் பரந்திருக்கின்றார்கள் என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. தமிழ்ப்பித்தன் என்ற பதிவுப்பேர்வழியே இதற்குச் சிறப்பான எடுத்துக்காட்டு. புலிகளை ஆதரிக்கும் ஒரு பகுதியிலே இருக்கும் வெள்ளாளத்திமிர், பெட்டையெண்டால் தூசணத்தை வச்சே அமுக்கலாமெண்ட ஆணாதிக்கத்திமிர் (தமிழ்மணத்திலிருந்து வேலையே செய்யாமல் காலையாட்டிக்கொண்டிருந்துவிட்டு, பெண்களின் உழைப்பினை உறுஞ்சிக்கொண்டு, கலைத்துவிடும் என் ஆணாதிக்கத்திமிரிலும்விட இதெல்லாம் குறைவுதான் என்றபோதிலுங்கூட :-)) கொண்ட பதினைந்து ஈழத்தமிழரையாவது நான் உடனடியாகப் பட்டியலிடுவேன். அதனால், ஈழத்தமிழர் உதெல்லாம் செய்யமாட்டாரென்பதல்ல இங்கே நான் சொல்ல வருவதென்பதைப் புரிந்திருப்பீர்களென நம்புகிறேன்)

3. ஈழத்தின் சாதிக்கட்டமைப்புக்கும் தமிழ்நாட்டின் சாதிக்கட்டமைப்புக்குமான புரிதலோடுதான் துண்டுப்பிரசுரக்"கலகத்தை" நீங்களும் மாசிலாவும் மேற்கொண்டீர்கள்? இந்தக்கோயில் கோதாரியிலெல்லாம் எனக்கொன்றும் பிடிப்பில்லை. புலம்பெயர்ந்த பெரும்பான்மையான ஈழத்தமிழ்ச்சமுதாயத்தின் இந்த "பண்பாடு" காவும் மந்தைத்தனத்திலே எனக்கும் உடன்பாடில்லை. ஆனால், பெரியாரின் தமிழ்நாட்டுக்கான (இந்தியாவுக்கான) தேவையின் புரிதலோடுமட்டும், வேறான அமைப்பினைக் கொண்ட ஈழத்தமிழ்ச்சமுதாயத்திற்கு நீங்கள் துண்டுப்பிரசுரம் கொடுத்தால், உங்கள் பிரசுரத்திலே நீங்கள் சொல்லாத புலிகள் குறித்து(ம் தமது அரிப்புக்குச் சேர்த்துச்) சத்தியக்கடதாசி வாசிக்கச் சிலருக்கு உதவும். ஆனால், உங்கள் "கலகம்" எத்துணை வெற்றி பெற்றதென்பதினை நீங்கள் அதன் பின்னாலே அறிந்துகொண்டீர்களா? (உந்தப்புலம்பெயர் ஆரம்பரக்கூத்துகள் அப்படியாச்சும் நின்றால், மிக்க மகிழ்ச்சியே)
(கலகம் என்பதை "" உள்ளே போட்டிருப்பதற்கு மன்னிக்கவும்; இப்படியான செயற்பாடுகளுக்கெல்லாம் 'கலகம்', 'புரட்சி' என்று அடை(மொழி) போட்டு மென்று கொண்டால், பத்தாம் வகுப்பிலே, நான் நண்பனுக்காகக் கொண்டுபோய்க் கொடுத்த கொப்பித்தாள் லவ்லெட்டரும் அந்நேரத்துஈழச்சமூகத்திலே ஒரு கலகமே; 81 இலே பள்ளிக்கூடச்சுவரிலே கரித்துண்டாலே, "ஏப்ரல் 29 பாராளுமன்றத்திறப்பினைப் பகிஸ்கரிப்போம்" என்று எழுதியதும் புரட்சியே. 'பார்லே பீர் சாப்டுவதே பாரியபூகம்பக்கலகம்' என்பதாகக் காட்டிக்கொள்ளும் சூழலிலே மட்டுமே இது கலகமாக எடுபடும்)


சத்தியக்கடதாசிக்காரர்கள்:

1. பரீஸிலே தமிழச்சி துண்டுப்பிரசுரம் விநியோகித்ததிலே புலிகள் குறித்த உங்கள் விமர்சனமும் பதிவிலே வந்திருக்கின்றதே; இதுதான் தமிழச்சியின் கருத்துமா? உங்கள் கருத்துமட்டுமா?

2. பரீசின் பெரியாரியப்போராளிக்குழுவிலே நீங்களும் அடக்கமா?

3. ஈழத்தின் அ. முத்துலிங்கத்தின் சிறுகதைத்தொகுதிக்கு மாலன் அணிந்துரைப்பதற்கும் ஈழத்தின் தலித் சிறுகதைகளுக்கு மார்க்ஸ் முன்னுரை எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்? (நிச்சயமாக, உள்ளூர்விபரங்களை நன்கு நேரடியாக அனுபவித்து அறிந்தவர்கள் முன்னுரை எழுதுவதுதான் முறை;-) என்றாலும்....)


கூல் (Hoole):

மனிதநேயவிருதினைப் பெற்றிருக்கின்றீர்கள்; அஞ்சாமலே செயற்படுவதற்கு வாழ்த்துகள். எல்லாப்புறத்துக்கெடுதல்களையும் உங்களுக்கு விரும்பியவரை, இயன்றவரை வெளிக்கொணர்ந்திருக்கின்றீர்கள். நன்றி.
ஆனால்,

1."IPKF was victim of vile LTTE propaganda" என்று சொல்லியிருக்கின்றீர்களென இந்துஸ்தான் டைம்ஸ் பி. கே. பாலச்சந்திரன் சொல்லியிருக்கின்றாரே? இது நகைச்சுவையா? நாகச்சுவையா? [இம்மண்ணுண்ணிப்பாம்புக்கூற்று, இந்திய+ஸ்ரீலங்கா ஊடகங்களிலே என்னென்ன விதங்களாக மலைப்பாம்புக்கூற்றுகளாக உருமாறி வரப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்த்து இரசிப்போம்.]


மாசிலா:

ஈழத்து அகதிகளாலே பரீஸிலே புதுவைத்தமிழர்களுக்கு இழுக்கு வந்துவிட்டதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இனி, ஈழத்தமிழர்-புதுவைத்தமிழர் என்று பிரித்துச் சொல்லவேண்டுமென்றும் சொல்லியிருக்கின்றீர்கள். அதிலே சிக்கலில்லை. பல இடங்களிலே அப்படியான தேவையுள்ளதே.

1. புதுவையிலே பிரெஞ்சு குடிமைகளாக இருந்ததாலே பரீஸிலே உங்களுக்கு அதிதி அந்தஸ்து வந்திருப்பதாகவும் ஈழத்தமிழர்கள் அகதித்தமிழர்களென்று வந்திருப்பதாகவும் கருதிக் கொண்டு எழுதும் உங்களுக்கு,

அ. பெரியாரைப் பற்றிப் பேச அருகதையிருப்பதாக நினைக்கின்றீர்களா?

ஆ. தமிழச்சியின் (நீங்கள் உடன் தொத்திக்கொண்ட) பெரியாரிஸ்டுக்கலகத்தினை ஆதரித்துப் பதிவு போட்ட, சத்தியக்கடதாசிக்காரர்கள் (ஷோபா சக்தி, சுகன் என்று நினைக்கிறேன்) இவர்களும் இதே அகதிகளாகத்தான் வந்தார்கள். அவர்களும் உங்களிடம் சான்றிதழ் பெற்றபின்னாலேதான் பரீசிலே உலாவ வேண்டுமா?

இ. உங்களுக்கும் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டிலே போகின்ற ஈழத்தமிழர் எனும் பத்திரிகையாளருக்கும் ஈன அகதிக்கழுவிநாயே என்கிற மூர்த்திக்கும் என்ன வித்தியாசமிருப்பதாகக் கருதுகின்றீர்கள்?

2. ஈழத்தமிழர்கள் வேறு என்று சொல்கின்ற புதுவை(க்கு)த் (திரும்பவிருப்பதாகச் சொல்லும்) தமிழர் நீங்கள் எதற்காக, ஈழத்தமிழர்களின் ஆடம்பரக்கோயில்களின் கூத்துகளிலே "துண்டுப்பிரசுரக்கலகம்" செய்யப்போகின்றீர்கள்? பரிசிலே வாழும் புதுவைத்தமிழர்கள் அப்படியாக ஆடம்பர அலங்கோல அலங்காரம் செய்பவர்களில்லை என்றால், என்னை மன்னிக்கவேண்டும்.

3. தமிழச்சிக்குத் தொலைபேசித்திட்டியவர் நிச்சயமாக ஈழத்தமிழரென்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவிலே/தமிழ்நாட்டிலிருந்தும் யாரோ திட்டினார்கள் என்கிறார். அவர்களுக்கும் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழர்களாக இருக்குமோ?

4. எப்போதோ கேட்கவேண்டுமென்று வைத்திருந்த கேள்வி; இப்போதுதான் வசதிப்பட்டது; ஸ்பெஷல்-ஆப்பு.கொம்மிலே ஒரு முறை மூர்த்தி யாரைப் பற்றியோ வழக்கமான அன்புததும்பும் உடற்கூற்றியல் மொழியிலே பார்ப்பன்னர் என்று திட்டியபோது, எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று வியந்து, வேறு ஒருவரின் பதிவு முகவரி கொடுத்து, அவரைப் பற்றியும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போடு என்று அன்போடு கேட்ட உங்களுக்கு எப்படியாக சென்ற மாதம், மூர்த்தியினை இந்த மாதிரியாகக் கடிந்துகொள்ளும் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் வீரத்துணிவும் பிறந்தது? (இப்போது, அந்த ஸ்பெஷல்-ஆப்பு பதிவு இல்லாததால், உங்களுக்கு இப்போதைக்கு அப்படியாகச் சொல்லவில்லை என்று மறுக்கும் வாய்ப்பு உள்ளது - என்னுடைய கணணியிலே அவ்விடுகையும் பின்னூட்டங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்)




இவற்றுக்கெல்லாம் எவருமே பதில்களை, அவரவரது புரட்சி, கலக நேரங்களை வீணாகச் செலவு செய்து தரத்தேவையில்லை என்பதையும் அப்படியாகத் தராமல் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தினைப் உங்கள் புரட்சிக்கான/கலகத்துக்கான என் பங்களிப்பாகக் கொள்ளவேண்டுமென்றும் அன்புடனும் தோழமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்


"எம்மிடம் கேள்விகள் மட்டுமேயுள்ளன; பதில்களைத் தாருங்கள்" - யாரோ புலம்பெயர் ஈழத்தமிழ்ப்பின்-நவீனத்துவஇலக்கியவாதப்புரட்சியாளர் சொன்னதாக என் நண்பரொருவர் சொன்னது. மெய் பொய் தெரியாது. ஆனால், இங்கே என் நிலைக்கு இக்கோள் பொருந்துவதாலே எடுத்துப் போட்டிருக்கிறேன்.


இவ்வண் இவன்,
பாசிசப்புலிப்பினாமிபோபியாக்களின்கண்ணிடைமாபியா