Thursday, December 21, 2006

புலம்-20


"..... and when experience is not retained, as among savages, infancy is perpetual.
Those who cannot remember the past are condemned to repeat it...."
- George Santayana in "The Life of Reason"



எல்லோருக்கும் இன்னல் தீர்க்கும்படி எல்லோரும் வாழ்த்துச் சொல்லி வந்த இன்னோர் ஆண்டும் "வருமாண்டும் மற்றோர் ஆண்டே" என்று சாக்குருவி இராக்கூவல் கூறிப் பறக்கக் கடக்கிறது. ஈழத்துத்தமிழ்ப்பேசும் சமூகம் சுட்டிச் சொல்லும்வண்ணம் முகமறியாத, வயதறியாத பலரை எண்ணிக்கையறியா நிலையிலே தொலைத்துக்கழிகிறது. துயர்களைக் கழிக்கும் புதிதான கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் செய்திகளுமே மீண்டும் மீண்டும் வாசித்ததைப் படிக்கும் அலுப்போடு மூடவைக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியிலே ஜோசப் பரராஜசிங்கம், தன் தொடக்கத்தில் விக்கினேஸ்வரன், சி. புஷ்பராஜா என்ற அரசியல் முகங்களையும் நற்பிட்டிமுனை ஏ. எல். எம். பளீல் என்ற எழுத்துமுகத்தினையும் குண்டும் நோயும் காவு கொண்டபின்னால், இவ்வாண்டு ஈழத்தமிழரசியலின் சிந்தைப்போக்கிலும் இலக்கியப்போக்கிலும் - அவர்களுடன் ஒத்துப்போகிறோமோ இல்லையோ - குறிப்பிடத்தக்க ஆளுமையான இடங்களை ஏதோவொரு காலகட்டத்திலே கொண்டிருந்த பொதுமுகங்கள் சிலவற்றினை படபடவெனக் கடைசி நான்கு மாதங்களிலே சாயக் கண்டிருக்கின்றது.

உலோகநாதன் கேதீஸ்வரன்; கேதீஸ் என அறியப்பட்ட கேதீஸ்வரன் செப்ரெம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திய அரசினாலே நெம்பி திம்புவுக்குத் தள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, ஈபிஆர்எல்எப் சார்பாகச் சென்றிருந்தவர். ஈழ அரசியலிலே ஆயுதம் தாங்காமல், அரசியல்சார் சித்தாந்தரீதியான பார்வையோடு மட்டும் தான் சார்ந்த இயக்கத்திலே இருந்தவர். பின்னாளிலே, அதிலிருந்து விலகி, சமூக ஆய்வுநிறுவனமான மார்க்காவிலே இருந்தபோதுங்கூட, தமிழ்த்தேசியவாதியாகவே இருந்தாரெனச் செய்திகளும் அலசல்களும் சுட்டின. பிறகு, அதிலிருந்து விலகி, மஹிந்த இராஜபக்க்ஷவின் அரசின் (அ)சமாதானச்செயலகத்திலே துணைத்தலைமைப்பதவியிலே அவரை என்ன செல்லத் தூண்டியதென்பது புரியாத ஒன்றுதான்; அத்தெளிவின்மையே அவரைக் கொன்றவர்கள் யாரென்பதையும் இன்னும் தெளிவாகச் சுட்ட முடியாத நிலையினை வைத்திருக்கின்றது. எக்காரணம் கொண்டு கொல்லப்பட்டாலுங்கூட, தமிழ்த்தேசியத்திற்கு அவரது கருத்தாளுமை "இடித்துச் சொல்ல எவருமில்லா" நிலையை இன்னும் அண்மைப்படுத்துகிறது. ஆனால், அவரது மரணத்தினை ஈழத்தேசியத்துக்கு எதிரான சக்திகள் அவரைத் தமது நட்புசக்தி எனக் காட்டப்பயன்படுத்திக்கொள்வதால், அவர் அவருக்கு நியாயமாக ஈழத்தமிழர்கள் கொடுக்கவேண்டிய மரியாதையையும் பெறாமலே போய்விட்டிருக்கின்றாரெனச் சொல்லலாம்.

நடராஜா ரவிராஜ்; ஒக்ரோபர் மாதத்திலே கொல்லப்பட்டார். ஈழத்தேசியத்தை அழித்தொழிக்கவே உருப்பெரிதாக்கி ஈழ எதிர்ப்புச்சக்திகளாலே காட்டப்படும் ஆனந்தசங்கரியினாலே வளர்த்தெடுக்கப்பட்ட ரவிராஜ் பின்னால், தமிழர் தேசியகட்டமைப்பிலே ஒரு மிதவாதி என்றே கருதப்பட்டார். அரசியல்சார்ந்த நெடுங்காலச்சிந்தனையோ பார்வையோ அதிகம் அவரிலே தென்படாதபோதுங்கூட, நடைமுறைசார் நாளாந்த வாழ்க்கைக்கு அவரின் அரசியல் ஓரளவுக்கு பெரும்பான்மையினத்தவரிடத்தே சிலரிடமாவது தமிழ்மக்களின் ஆதங்கங்கள் வெளிப்படக் காரணமாகவிருந்தது. அவருக்கும் அகாலமரணமே வந்தது.

இளையதம்பி இரத்தினசபாபதி; ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்ப அமைப்பாளரும் ஏனைய இயக்கங்களுக்கு ஆயுதம் சார் போராட்டத்துக்கான பிறநாட்டு விடுதலையியக்கங்களுடனான தொடர்புகளும் இந்திய அரசு சில இயக்கங்களைத் தான் ஆளும்வண்ணம் ஆயுதம் கொடுத்து வளர்க்க முன்னமே ஏற்படவும் பெருமளவிலே காரணமாகவிருந்தவர். திம்பு பேச்சுவார்த்தையிலே ஈரோஸ் சார்பாகக் கலந்து கொண்டவர்களிலே இவரும் ஒருவர். இறுதிக்காலகட்டத்திலே அரசியலிருந்து விலகிப்போனாலும், இவர் போன்ற சிலரின் முன்மாதிரியே ஈழப்போராட்டத்திலே தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் சார் சத்தம்மிகு தேசியத்தினையும் தேசியத்தை மறுதலித்த இடதுசாரிச்சிந்தனையும் ஒருங்கிணைத்து ஈழத்தேசியபோராட்டம் வளர வாய்ப்பேற்பட்டது.

அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம்; ஜோசப் பரராஜசிங்கம், சிங்கள இனவாதச்சக்திகளின் குரலாக வெளிப்படும் ஏசியா ரிபியூனின் ஆசிரியரெனக் கருதப்படும் கே. ரி. ராஜசிங்கம் ஆகியோரைப் போலவே தமிழ்ப்பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இரத்தினசபாபதிகூட இடதுசாரித்தமிழ்த்தேசியத்தின்பால் நடைப்பட்டு, இறுதியிலே வலதுசாரித்தமிழ்த்தேசியத்தின் குரலாக மறைந்துபோனவர். எதிரிகளாலே குறைகூறப்பட்டாலுங்கூட, ஈழத்தேசியத்தினைப் பொறுத்தமட்டிலே அவரின் பங்களிப்பு புறக்கணிக்கமுடியாதது.

வி. நவரத்தினம்; தமிழரசுக்கட்சியின் ஆரம்ப அமைப்பாளர்களிலே ஒருவரான காவலூர். வி. நவரத்தினம் ஆண்டின் இறுதியிலே மொன்றியலிலே சரிந்திருக்கின்றார். தமிழரசுக்கட்சியின் இலங்கை அரசியல் தொடர்பான விட்டுக்கொடுப்புகளுக்கு உள்ளாகாமல் விலகி நின்றே செயற்பட்டவர்களிலே ஒருவர். நாற்பதாண்டு இடைவெளிகளிலே ஈழத்தமிழரின் அரசுநிலை குறித்த இரு நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். - பிற்சேர்க்கை 20061222

இங்கே ஒவ்வொருவரின் இறப்பும் அவர் இறந்த காலகட்டத்திலே ஈழத்தமிழ்ச்சமூகத்திலே அவருக்கிருந்த் பெயருக்கேற்ப வாழ்த்தவோ தாழ்த்தவோ இனம் காணப்படவோ செய்யப்பட்டிருக்கின்றது. ரவிராஜும் பாலசிங்கமும் சரியான வகையிலே கௌரவிக்கப்படும்போது, எண்பதுகளிலே ஈழத்தின் தமிழ் இளைஞர்களில் கணிசமானோரைப் பிரதிநிதிப்படுத்திய கேதீஸ்வரன், இரத்தினசபாபதி போன்றோர் இன்றைய ஈழத்தமிழ்த்தலைமுறையினாலே சரி வர அவர்களின் இலக்குகளும் இழப்புகளும் அறியப்படாதோ, கண்டுகொள்ளப்படாதுபோயிருப்பது வருந்தத்தக்கதாகவே தோன்றுகிறது; அவர்கள், அவர்களின் இழப்புகளுக்கு நாம் தரும் குரல்களுக்கும் மேலான மதிப்பினைப் பெறவேண்டியவர்கள்.



ஈழத்தமிழிலக்கியத்திலேயும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க, ஏ. ஜே.. கனகரத்தினா, சு. வில்வரத்தினம், வரதர் ஆகிய மூவரை அடுத்தடுத்து விரல்சொடுக்கும் நேரத்துள்ளே இழந்திருக்கின்ற உணர்வு சூழ்கிறது. எழுபதுகளின் இறுதியிலே என ஞாபகம்; ஒரு வாசிகசாலை; கல்கி, சாண்டில்யன், தேவன், நா. பார்த்தசாரதி மட்டுமல்லாது, 'வாசகர்வட்டம்' நூல்கள், சிங்காரத்தின் 'புயலில் ஒரு தோணி' போன்ற நூல்களையும் கொண்டிருந்தது. அவற்றினைச் சேகரித்ததோடு கூடவே இன்னும் ஒரு நல்ல வேலை செய்திருந்தது; ஈழத்துநூல்களுக்கென ஒரு தனியடுக்கு வைத்திருந்தது. (இளம்பிறை ரஹ்மான் வெளியிட்ட ?) ஏஜே இன் 'மத்து', தளையசிங்கத்தின் 'போர்ப்பறை', வீரகேசரி பதிப்பக நூல்கள், சிரித்திரன் நூல்கள், அங்குமிங்கும் தனித்தனியார் தாமே வெளியிட்ட ஈழத்துநூல்கள் (தாழையடி சபாரத்தினம் போன்றோர்) என்பனவும் கையிலே கிடைக்க வசதி செய்தது.

ஏ.ஜே. கனகரத்தினா; முதலிலே அவரது நூல் கிடைத்தபோது, "அட ஒரு சிங்களவர் எப்படியாகத் தமிழிலே எழுதுகிறார்!" என்றுதான் நினைத்தேன். உள்ளே எழுதியிருந்த விடயங்கள் எனக்குப் புரியக்கூடிய அளவுக்கோ சுவை தருமளவுக்கோ அப்போது இல்லை. பின்னாட்களிலே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து "வாசிப்பதனாலேயே ஒருவன் முழுமையடைகின்றான்" என்பதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தவரோ ஏ. ஜே. என்று தோன்றினால், கூடவே இன்னொரு வரியினையும் சேர்த்துக்கொள்ளலாம்; "'அறிந்தவற்றை அலசி எழுதினால், வாசிக்கும் நேரம் வீணாகிப்போய்விடும்' என்றும் யோசித்திருப்பார் போலும்." அந்தளவுக்கு ஈழத்தமிழ்த்திறனாய்வாளர்களிலே ஆங்கிலப்புலமையும் பரந்தபட்ட வாசிப்பும் கொண்டு விளங்கிய அவர், எழுதியது மிகக்குறைவு. எடுத்தது அத்தனையையும் அப்படியே கொண்டு போய்விட்டாரோ என்ற உணர்வுதான் இறப்பினைக் கேட்டவுடன் தோன்றியது. வேறுமொழி இலக்கியப்பார்வையையும் வரட்டுத்தனமாக கல்விக்கூடப்பார்வையின்றி தமிழிலே குறித்துத் தர ஒரு பாலமாக இருந்தாரென்றே சொல்லவேண்டும்.

சு. வில்வரத்தினம்; தளையசிங்கத்தின் போர்ப்பறையிலே வில்வரத்தினம் குறித்து "இளங்கவிஞன்" என, தளையசிங்கம் குறிப்பிடுவதாகவே முதலிலே வாசித்த ஞாபகம். பிறகு, வில்வரத்தினம் "ஓ வண்டிக்காரா" பாட்டு பாடுவது குறித்து தளையசிங்கத்தின் தம்பி பொன்னம்பலம் ஒரு கவிதையிலே குறிப்பிட்டிருந்தார் என்றும் நினைவு. அவருடைய கவிதைகளிலே மற்றைய சமகாலத்து ஈழத்துக்கவிஞர்களிலேயிருந்து மாறுபட்டதாகத் தோன்றுவது, இழப்புகளை தான், தன்னைச் சார்ந்தோர், ஊர், இனம் எனும் தனிமனிதனின் இழப்புகளாகவே கண்டு, கொள்கைசார் போராட்ட அரைகூவல்களை மேற்கொள்ளாது, தன்னுட் பாயும் ஒரு தேடலைக் கொள்வதாக ஒலிப்பது. இவ்வகையிலே ஈழத்திலே இருந்து கவிதைகள் புனைகிறவர்கள் மிகக்குறைவு.

வரதராஜன்; வரதரையும் அகஸ்தியரையும் குழப்பிக்கொண்டதுதான் அவர் குறித்த எனக்கான முதல் அனுபவம். அடிப்படையிலே எழுத்துப்போக்கிலே கொஞ்சம் பழங்காலத்தவர் என்ற அபிப்பிராயமேயிருந்தது. ஆனால், அவர் வெளியிட்ட "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது" அது வந்த காலகட்டத்திலே ஒரு துணிச்சலான வெளியீடு. அவரின் இழப்பிலே ஒரு முன்னைய தலைமுறை எழுத்தாளருடனான இறுதி இழைகளிலே ஒன்று அறுந்திருக்கிறது.

*படங்களுக்கு நன்றி: ஏசியா ரிபியூன், தமிழ்நெற், தேனி, விம்பம், ஈழக்கலையிலக்கியச்சுவடி, பதிவுகள்

'2006 டிசம்பர் 21, வியாழன் 05;8 கிநிநே.



11 comments:

-/பெயரிலி. said...

இவ்வாண்டில் இன்னோர் ஈழத்தமிழ் நீளிழையும் அறுந்தது.:

தமிழரசுக்கட்சியின் வி. நவரத்தினம் மறைந்தார்

மு. சுந்தரமூர்த்தி said...

ரமணி,
சி. புஷ்பராஜாவின் பெயர் விடுபட்டிருக்கிறதே!

-/பெயரிலி. said...

சுந்தரமூர்த்தி,
நினைவூட்டியதற்கு நன்றி. கடைசி நான்கு மாதங்களிலே இறந்தவர்கள் பற்றித்தான் விபரமாகக் கொடுத்திருக்கிறேன். ஆரம்பப்பந்தியிலே அவரின் பெயரையும் இணைத்துவிடுகிறேன்.

ஒரு பொடிச்சி said...

தேவையான குறிப்பு.
//இங்கே ஒவ்வொருவரின் இறப்பும் அவர் இறந்த காலகட்டத்திலே ஈழத்தமிழ்ச்சமூகத்திலே அவருக்கிருந்த் பெயருக்கேற்ப வாழ்த்தவோ தாழ்த்தவோ இனம் காணப்படவோ செய்யப்பட்டிருக்கின்றது. ரவிராஜும் பாலசிங்கமும் சரியான வகையிலே கௌரவிக்கப்படும்போது, எண்பதுகளிலே ஈழத்தின் தமிழ் இளைஞர்களில் கணிசமானோரைப் பிரதிநிதிப்படுத்திய கேதீஸ்வரன், இரத்தினசபாபதி போன்றோர் இன்றைய ஈழத்தமிழ்த்தலைமுறையினாலே சரி வர அவர்களின் இலக்குகளும் இழப்புகளும் அறியப்படாதோ, கண்டுகொள்ளப்படாதுபோயிருப்பது வருந்தத்தக்கதாகவே தோன்றுகிறது; அவர்கள், அவர்களின் இழப்புகளுக்கு நாம் தரும் குரல்களுக்கும் மேலான மதிப்பினைப் பெறவேண்டியவர்கள்.///

அதற்கு பெரும்பான்மை தமிழ் அரசியல் வட்டத்திற்குள் அவர்களது இருப்பு இல்லாதுபோனது ஒன்றே காரணம். மற்றது பொதுவான அலட்சியம்.
இன்றைய தலைமுறைக்கு அவர்களது பெயர் கூட -பெரும்பாலும்- தெரிந்திருக்காது. இதற்கான கர்த்தாக்களாய் அவர்கள் தமது "அறிவை" பெற்றுக் கொள்கிற முந்தைய தலைமுறையினரைத்தான் கைகாட்ட முடியும். தமது சமூகம் சார்ந்த பிரக்ஞையுடன் -எமது உடன்பாடு, உடன்பாடின்மைக்கு அப்பால்- தமது காலத்தின் (இளமையின்?) பெரும் பகுதியை போராட்டத்தில் ஈடுபடுத்திய/பங்களித்த மனிதர்களுக்கான கெளரவம், அவர்களைத் தொடர்ந்து வாற தலைமுறை, இன்னார் யாரென்று கேட்பதுடன் முடிந்து போய் விடும். பெரும்பான்மை அரசியல் வெளிச்சத்துள் இல்லாத அவர்களது பங்களிப்பின் பெறுமதி அவ்வளவுதான். இறுதிக்காலங்களில் நம்பிய எல்லாவற்றாலும் கைவிடப்பட்டு பரிதாபமாக இறந்துபோவதுதான் வாழ்வின் மிகப் பெரிய துரோகம். ஈழப் போராட்டத்திலும் அப்படி ஒரு தலைமுறை எல்லா இடங்களில் உண்டே.
_____________

இந்த வருடத்தில் தொடர் இழப்புகளின் பட்டியலில் திரு. துருவசங்கரி அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். The lost aviation Technology, என் மொழியின் கதை ஆகிய நூல்களின் ஆசிரியர். இலக்கியம், அரசியல் என்றில்லாமல் பிற துறைகளில் ஈடுபட்டவர்.

-/பெயரிலி. said...

ஒரு பொடிச்சி,
செய்திக்கு நன்றி. துருவசங்கரி 92-93 இலே கிளிநொச்சி/வன்னி அகழ்வாராய்வு குறித்து கனடா வார இதழ் ஒன்றிலே எழுதிய கட்டுரைத்தொடரைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். மிகவும் வருத்தத்துக்குரிய மாதம் இது.

Anonymous said...

//இந்த வருடத்தில் தொடர் இழப்புகளின் பட்டியலில் திரு. துருவசங்கரி அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.//

துருவசங்கரி அவர்களின் மறைவு குறித்து இப்போதுதான் அறிந்து மிக்க அதிர்ச்சியுற்றேன். அவர் மொஸ்கோவில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை அறிவேன். நான் அங்கு (லுமும்பா பல்கலைக்கழகம்) போகும்போது அவரது விவசாயப் பட்டப்படிப்பின் இறுதி வருடத்தில் இருந்தார். சிறிதுகாலமே அவருடன் பழகியிருந்தாலும் பழகுவதற்கு மிகவும் இனியவர். மிகச்சிறந்த அறிவாளர். மறைந்த துருவசங்கரி அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பற்றிய அந்தத் தொடுப்பினை அறியத்தந்த "ஒரு பொடிச்சிக்கு" எனது நன்றிகள்.

-/சுடலை மாடன்/- said...

பூங்கா வழியே இன்றுதான் இங்கு வந்தேன். கச்சிதமாகத் தொகுத்தளித்தமைக்கு நன்றி. ஒவ்வொருவரைப் பற்றியுமான துல்லியமான அறிமுகம் மிக அருமை.

இங்கு பேசப்பட்ட இலக்கியவாதிகள் சிலரை பற்றி நான் அறிந்திருக்க வில்லையெனினும், அனைவரது இழப்புகளும் பல வழிகளில் ஈடுசெய்ய முடியாதவை.

//தேசியத்தை மறுதலித்த இடதுசாரிச்சிந்தனையும்//

நிறுவனமயமாக்கப் பட்ட இடதுசாரிக் கட்சிகள்தான் தேசியத்தை ஒருபக்கம் மருதலித்து விட்டு இன்னொரு பக்கம் தேசத்தையும், தேசப்பற்றையும், இறையாணமையையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

//பாலசிங்கம் - இறுதியிலே வலதுசாரித்தமிழ்த்தேசியத்தின் குரலாக மறைந்துபோனவர்//

இதுவும் முழுக்கச் சரியில்லை என நினைக்கிறேன்.


நன்றி - சொ. சங்கரபாண்டி

-/பெயரிலி. said...

சுடலைமாடன்,

இடதுசாரிச்சிந்தனை குறித்த உங்கள் வித்தியாசம் காட்டுதல் மிகவும் சரியானது. நான் எழுபது மத்திவரை இலங்கையைப் பொறுத்தமட்டிலே இடதுசாரிகள்-தேசியவாதிகள் ஆகியோர் பிரிவுபட்டிருந்த விதத்தினைக் கூறினேன். அந்நேரத்தில் நீங்கள் கூறிய நிறுவனமயப்படுத்தப்பட்ட (உரொஸ்கியம்கூட அப்படித்தான்) சிந்தையைத்தான் இடதுசாரிகள் இலங்கையிலே கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பாலசிங்கம் தன் கருத்தளவிலே இடதுசாரித்துணுக்குகள் கொண்டிருந்திருக்கலாம்; ஆனால், அவரின் குரல் வலதுசாரி நிலையிலிருந்து ஈழதேசியத்துவத்தை ஒலிக்கவே பயன்பட்டிருக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தமட்டிலே இடதுசாரியியக்கங்கள் நோக்கிலே திசைமாறிபோய்விட்டன என்பது ஒரு புறமிருக்கட்டும்.

Anonymous said...

கடைசி நான்கு மாதங்களில் இறந்தவர்களின் பட்டியலை பார்க்கும் பொழுது மனம் கனக்கிறது.

ஈழ மக்கள் என்றுதான் சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறார்களோ?

தொகுப்பிற்கு நன்றி

மயிலாடுதுறை சிவா...

இளங்கோ-டிசே said...

தொகுப்பிற்கு நன்றி பெயரிலி.

மீராபாரதி meerabharathy said...

வணக்கம் பெயரிலி
மகா உத்தமனும் இதே காலப்பகுதியில் மரணித்தவர்.
ஆனால் பலரால் கண்டுகொள்ளப்படவில்லை...