Thursday, June 30, 2005

புனைவு - 24

கழியும் பழையது

திறப்புக்கோர்வை



முன்கதை விரிவு I, II :- கடந்த இரண்டு வருடங்கள்
---------------------------------------------

I
-
சாவிக்கொத்து என்று எல்லோராலும் வீட்டிற் செல்லமாய்
அழைக்கப்படும் திறப்புக்கோர்வையை வைத்துப் பராமரிப்பது
எப்படிப்பட்ட பொறுப்பான காரியம் என்பதை அது
கையிலகப்பட்ட ஆரம்பகாலங்களில் நான் அவ்வளவு
அறிந்திருக்கவில்லை. வீட்டுமுன்வாயில் ஒற்றைச்சாவியாய்க்
கிடைத்து, பிறகு அலுவலகவறைத் திறப்பு, மேசைச்சாவிகள்,
வீட்டு அலுமாரிச்சாவி, துவிச்சக்கரவண்டிப்பூட்டுச்சாவி என்று
நாளொரு சாவியும் பொழுதொரு திறப்பும் என்று வெவ்வேறு
அளவுகளில் வளர்ந்து -முதல் குட்டி போட்டு முழு வாரம் ஆக
முன்னாடி முழுதாய் எட்டுக்குட்டி போட்ட நாய்போல- ஒரு
திறப்புக்கோர்வை இருந்தாற்றான் ஓரளவு சமாளிக்கலாம் என்ற
நிலைமைக்கு ஆக்கிவிட்டது. அந்நேரத்திற்றான்,
சொந்தநாட்டு பட்டினங்களின்
தங்குவிடுதிப்பொறுப்பாளர்களும் குறுஞ்சிறுவர் பாடசாலை
ஆசிரியைகளும் என்ன அவதி பட்டுத்தொலைந்திருப்பார்கள்,
தொலைத்துக்கொண்டிருப்பார்கள் என்பது மனதிற்கு
வெளிச்சமானது.

சாவிகள், நண்டுக்குளுவன்களாக வளர்ந்த செய்கை எனக்கு
வயதுபோனதை அடிக்கடி எடுத்துச்சொல்லும்
அளவுச்சுட்டியாகிப் போனது. கடைசியில், என் அலுவல
அலுமாரிச்சாவியினால் அரைமணிநேரம் முயன்றும் என்
கைப்பெட்டியைத் திறக்கமுடியாதுபோய், பெட்டி செய்த
கொரியர்களின் வம்சத்தை வாயாற் துவம்சம் செய்தது
மனைவிக்குப் பொறாமல், எனக்கு வயது சரியாக
முப்பத்துமூன்றான நாள் அன்றைக்கு, ஓர் தட்டைப் பச்சை
இதயம் சங்கிலியிற் கொழுவிக்கொண்ட சாவிகள் கோர்ப்பி
வாங்கித்தந்ததோடு விட்டுவிடவில்லை. அதில், மாரியம்மன்
கோவிற்பூசாரியின் குங்குமப்பூச்சு, சமையற் பலசரக்குத்தூட்
போத்தலுக்கு வெளியே எழுதப்பட்ட "மஞ்சள்",
"மிளகாய்த்தூள்", "மிளகு" என்ற அளவுக்கு ஒவ்வொரு
சாவிக்கும் ஒற்றை எழுத்தில் நாமம் சாத்தி வேறு கைவசம்
ஒப்பித்தாள்

இரண்டு பெரிய சாவிகள் (அலுவல வெளிக்கதவு, வீட்டுவெளிக்கதவு);

நான்கு நடுத்தரம் (அலுமாரிகள் 2, அலுவலக மேசை வலப்புற
இழுப்பறை, சாவி இல்லாமலே திறக்கக்கூடிய வீட்டுமேசை
இடப்புறஇழுப்பறை);

நான்கு சிற்றரம் (துவிச்சக்கரவண்டி பூட்டு [வண்டி இருக்கும்
வயோதிப நிலைக்கு, வண்டியை விட்டு விட்டு, அதன்
காவற்பூட்டை யாராவது களவாடிக் கொண்டு
போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், பூட்டுக்கு ஒரு பூட்டுப்
போடலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன் என்பது
இன்னொரு சமயம் இரண்டு மணிநேரம் பேசுவதற்கான
விடயம்], கைப்பெட்டிச் சாவி இரட்டைகள், மனைவியின்
உடுப்புப்பெட்டிச் சாவி இரட்டையின் ஒற்றை [தான்
தொலைத்தாலும், கைகாவலுக்கு இருக்கட்டுமென்று உதிரி
என்னிடம்; "சாவி தொலைந்தாற் சரி, உதிரி; நான்
தொலைந்தால்.. என்னாகும்??" என்று கேட்டு இரண்டு முறை
அடி வாங்கியிருக்கின்றேன் (முதல்முறை உண்மையாகவே
கத்தரிக்காய் வதக்கிய அகப்பையால்; இரண்டாம் தடவை,
திறந்து வைத்த மிளகாய்த்தூள்போல காட்டம் குறைந்து,
செல்லமாக, தொலைக்காட்சி விளம்பரத்திற் பார்த்து,
~கையாளல், அனுப்பற்செலவு உட்பட~ $35 இற்கு
வாங்கிய தலையணையால்)].

கடைசியாக, இவை எதுக்கும் அடங்காமல் எப்படி என்
கைக்கோர்வைக்கு வந்து சேர்ந்தன என்று ஆக்கத்தின் தியும்
அந்தமும் அறியப்படாத ஆண்டவர் வகைச்சாவிகள் ஒரு
குத்துமதிப்பாக ஐந்தாறு.

ஆனால், அவளின் பெயரீட்டின் சுருக்கத்துக்கு குறைந்தபட்சம்
நான் சுருக்கெழுத்துப் படித்திருக்கவேண்டும் என்ற
அடிப்படைத்தகுதி கொண்டிருந்திருக்கவேண்டும் என்பது,
அடியேனுக்கும் தெரிந்திருக்கவில்லை; அம்மணிக்கும்
அப்படியே. சும்மா சாவியின் மேல், 'அ' என்று -வெகுவாய்ப்
பொதுப்பட, ஏதோ பெண்பிரச்சனைக்குள் அடிபட்ட
இன்னோர் அமெரிக்க ஜனாதிபதி மாதிரி- பெயர் போட்டால்,
அலுவலகமா, அலுமாரியா என்று கண்டுகொள்ள, கையிலே
கடதாசி ஒன்றில் 'அ எனப்படுவது யாதென்றால், அ·தென்றும்
அலுவலக அலுமாரி சாவி, அறிக.' என்று நன்னூற்சூத்திரம்
மாதிரி எழுதிவைத்து, அடிக்கடி பலசரக்குக்கடையில் வாங்கும்
பொருட்பட்டியல் போல எடுத்துப்பார்த்து கதவைத் திறப்பது
என் வயதுக் கனத்துக்கும் வாழ்க்கை நேரத்துக்கும் அவ்வளவு
அழகாகப்படவில்லை. அதற்குமேலே சிக்கலுக்கு, தான்
வாங்கித் தந்த இதயத்தை அழுக்குப்படாது
வைத்திருக்கிறேனா என்ற தினசரி உணர்ச்சி ரீதியான
மனையாளின் வைத்தியப் பரிசோதனை, "ஆவீன.. மழை
பொழிய இல் வீழ, அகமுடையாள் மெய் நோவ..." என்ற
உயரத்திலே உள்ள கொடுமை.

போதாக்குறைக்கு, எனக்குக் காதுக்குடைச்சல் எப்போது
வரும் முதுகு சொறிவு எப்போது வரும் என்பது, நேரம்சார்
இரண்டாம் மூன்றாம்படி, நாலாம் ஐந்தாம் அடுக்கு
வகையீட்டுச்சமன்பாடுகளாற் சொல்லிச் சிக்கல் பிரித்து
வைக்கமுடியாத சங்கதி. ஆக, சொறிவகைகளுள்,
பின்+முன்தலைச்சொறிவு மட்டுமே வரக்கூடிய (அதாவது,
தேவைப்படக்கூடிய) நேரம் இடம் என்பவற்றை ஓரளவு
எதிர்வுகூறும் அளவுக்கு என்னோடு சிநேகிதமாக இருந்தது.
அதனால், இந்தச்சொறிதலுக்கு எந்நேரமும் உதவியாகி
இடுக்கண் களையும் சொறிந்துவைப்பான்கருவிகள்,
கையிலிருக்கும் சாவிகளே. ஆனால், பெரிய சாவிகளுக்கு
இந்தச்சொறிவேலையில் அவ்வளவு பிடித்தமில்லை என்பது,
என் இங்கிதமற்ற சொறிகள், உருமாறாவடுக் குறிகளாய்
மாறியதிலிருந்து கண்டுகொண்டேன். சிறுசாவிகள், பருவம்
வராப்பிஞ்சுகள்; இதம்தரச் சொறியத்தெரியாதவை; அவை
பட்ட இடத்தில் வேறு தனியாகச் சொறியச் சொல்லி
உணர்வேற்படல் வழமை என்றும் அறிந்திருந்தேன். அதனால்,
இடைத்தரச்சாவிகளே அதிகமாகப் பயன்படுத்துவது உண்டு.
இந்தக்காரணத்தினால், சாவி நெற்றிநாமங்கள் நிலைத்து
நிற்காதது மட்டுமல்ல, அழுக்கு வேறு பட்டு, புதையற்தீவுப்
பெட்டிச்சாவிகள் இரகத்துக்கு இடுக்கெல்லாம் களிம்பேறி,
கறுப்பேறிப்போய் விட்டன.

அதனால், குத்து மதிப்பாக, முதலிருப்பது, சிறிய அவள்
பெட்டிச்சாவி, பின்னால், என் பெட்டிச்சாவிகள்,
வீட்டலுமாரிச்சாவி; மிகப் பெரியசாவி, வீட்டுவெளிவாசல்;
வெளியே வந்தால், வண்டிச்சாவி, அடுத்தது; பின்னால்
இருப்பது (வளையத்தில் என்ன பின் முன் என்கிறீர்களா?
அதுவும் சரிதான்... என்றாலும், மனவசதிக்கு ஒருவகையில்
இப்படி பழக்கிவைப்பதுதான் நல்லது என்று படுகின்றது),
அலுவலச்சாவி, அலுவல மேசைச்.... இப்படியாக ஓர் ஒழுங்கு
பண்ணி வைத்துக் கொண்டிருந்தேன் (அல்லது பண்ண முயற்சி
பண்ணிக்கொண்டிருந்தேன் என்று மனைவியும் மகளும்
அர்த்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்).

அங்கே எனது மனித பொதுவுணர்வு சதி பண்ணிவிட்டது;
வீட்டுவாசலிலும்விட, அலுவலக வாசல், பிரித்தானிய அலகில்
அளந்தாலும் சரி, சர்வதேச அலகில் அளந்தாலும் சரி
பரப்பளவில் மிகப்பெரிது; னால், சாவி அளவிலோ,
அலுவலகச் சாவி, வீட்டுச்சாவியிலும் விடச் சிறிது. காலை
வீட்டு வாசலை விட்டு வெளியே, அன்றைய மேலதிகாரியின்
திட்டலுக்கு முன்தலையா, பின்தலையா,
இடப்பக்கவாட்டுச்சிரமா வெகுசிரமமாய்க் கரம் சொறிவது
இந்த யோசனையில் மூளையை விட்டால், இச்சையின்றி
இயங்கும் உணர்வு, சின்னச்சாவியை வீட்டுக்கதவுச்
சாவித்துவாரத்துள் விட்டு ஓர் ஐந்து நிமிடம், அறைக்கதவு
அளவு தொடர்பு பண்ணி, தேநீர்க்கோப்பைக்குள்
அகப்பையினால் சீனிபோட்டுக் கலக்கும் முயற்சி பண்ணிக்
கொண்டிருக்கும். அதனால், திறப்புத் தொடக்கம் எங்கே
முடிவெங்கே என்று தெரிந்திருப்பதற்கு இலகுவாக, மகளின்
யோசனையை (அவளுக்கு அவள் அம்மாக்கும் தாங்கள்
'ஸிம்ஸன்ஸ்' கேலித்தொடர்க்குடும்ப ஸிம்ஸன் பெண்கள்
என்பதாய் ஒர் உணர்வு இருக்கின்றதோ இல்லையோ
தெரியாது; ஆனால், நிச்சயமாக நான், ஹோமர் ஸிம்ஸன்
வகைப்படு மனிதன் என்பதில் எதுவித கருத்துவேறுபாடும்
சட்டைக்குத் துணி எடுக்கும்போது அவர்களுள் எழுவதுபோல
எழுவதில்லை என்பது கவலைக்குரியவிடயம்)
அமுற்படுத்தமுயன்றேன்; அதாவது, இயேசு மார்பிற்
பிரித்துக்காட்டும் இதயம் தொங்கும் வளையச் சங்கிலிக்கு ஒரு
புறம் வளையத்தில் முதலாவது திறப்பினை இட்டு, மிகுதியை
ஒழுங்கில் இட்டுவைத்தால், கடைசியில், அலுவலக
மேசைத்திறப்புக்குப் பின்னால், அடையாளம் காணப்படாத
விபத்தில் அகப்பட்டு என்னிடம் வந்தடைந்த சாவிகள்,
சங்கிலியின் மறு பக்கத்தில் வந்து முடியும் என்பது கொஞ்சம்
தொழில்நுட்ப ஆலோசனையிற் தரத்தினால் ஒரு படியால்
உயர்த்தியான கருத்தாகவே பட்டது; ஆனால், அடுத்த நாள்
காலை மனைவியின் உடுப்புப்பெட்டி, ஒரு முகவரியற்ற
சாவியினால் பத்து நிமிடங்கள் திறக்கப்பட முடியாதுபோய்,
அவள் அலுவலக நிகழ்ச்சிக்கு 'சாதாரணமான'
ஆடையயலங்காரத்துடன் போகவேண்டிவந்ததே, சாவிக்கு
இன்றைய இடமே நாளைய வலமாகலாம், நாளைய இடமே
இன்றைய வலமாயுமிருக்கலாம், இவையிரண்டும் இல்லாமல்
இன்றுபோலவே நாளையும் வலம் வலத்திலேயே வலம் வரலாம்
என்ற 'சொதப்பல்' தத்துவத்தைச் சொல்லிவைத்தது.

இந்த நிலையில், இயலுமானவரை, பக்கத்தில் இருக்கும்
சாவிகளைப் பார்த்து, எட்டாமல் எட்டாம் இடத்தில் இருக்கும்
சாவியினைப் பார்த்து, சாவிகளைத் திருடன்போலப் போட்டுத்
திறக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். தற்செயலாக,
அலுவகத்தில் புது மேசை வருகிறதென்றாலோ, அல்லது,
மனைவி இன்னொரு ஆடையலங்காரப்பெட்டி
வாங்குகின்றாள் என்றாளோ, பயமே பிடித்துக் கொண்டது.
மொத்தத்தில், நாய்க்குட்டிக்கு ஆள் பழகிக்கொள்கிற
விடயம்போல ஆகிப்போனது புதுச்சாவிக்கு நான்
பொருந்திப்போகின்றது.

II
--

அலுவலகச் சக உத்தியோகத்தன், வெஸ்லி கிளன்மேயர்
சரியான 'அமெரிக்கத்தெற்குச் செங்கழுத்தான்' என்பான
குரூஸ். அங்கே, நான், குரூஸ், பாபாங்கிடா மூன்றுபேரும்தான்
அண்மைக்கால பொருளாதார அகதிகள்; தென்னமரிக்க,
ஆசிய, பிரிக்க வந்தேறுகுடிகள். "கொலம்பியா= கோப்பி +
கொக்கேயின் + கடத்தல் + இடதுசாரிப்புரட்சி -
கைப்பொருள்" இவ்வளவுதான் குரூஸ் பற்றிய கிளன்மேயரின்
கருத்தென்று குரூஸின் கருத்து; இதிலிருந்து என்னைப் பற்றி
அவன் என்ன சொல்வான் என்பதை ஊகிக்கக்கூடியதாக
இருந்தது. அதனால், அதை அவன் வாயிலிருந்தே வருவிக்கும்
முயற்சியில் என்றைக்கும் நான் பரிசோதனை
பண்ணிப்பார்த்ததில்லை. ஆக, தொழில் நிமிர்த்தப்
பேச்சுவார்த்தைகள் மட்டுமே. நல்லகாலத்திற்கு, நான்
திட்டமிடலும் வடிவமைப்புப் பிரிவு; அவன் களவேலைப்பிரிவு.
நிறவுணர்வு மிக்க இவன், பாபாங்கிடாவுடன் எப்படி ஒரு
சுமுகமான உறவை வைத்து இருக்கின்றான் என்பது பற்றி
எவருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. வருடாவருடம்
இருவருமே மலைக்குப் போகும் சபரிமலை யாத்திரீகர்போல,
அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துவிட்டு, விமானம் பிடித்து
ஹ¥ஸ்டன் போயிறங்கி கூடைப்பந்து பார்த்துக் கூக்குரல்
குரவை இட்டு வரும் பேர்வழிகள். ஆனால், ஹ¥ஸ்டனில்,
இருவருமே ஒரே விடுதியில், ஒரே அறையிற் தங்குகின்றார்களா
இல்லையா, ஒரே மேசையில் இருந்து சாப்பிடுகின்றார்களா,
அல்லது வேறுவேறாய் நழுவிப்போய் விடுகின்றார்களா என்று
'கூற்றுப்படி தவறான' கேள்விகளைக் கேட்க எவரும்
துணிவில்லை. பாபாங்கிடாவுக்கும் எனக்கும் குருஸிற்கும்
மேலாக சிறுபான்மையோர் என்ற அளவில் ஒருவித 'ஒரே
இனப்பாசமும் பரிதாபமும்' கலந்த உணர்வுவலை
போர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், பாபாங்கிடா,
கிளன்மேயருடன் கூடி நடந்துபோகும்போது, என்னால்,
பாபாங்கிடாவைப் பார்த்துச் சிரிக்கமுடிவதில்லை. ஏதோ
எதிரியுடன் கூடி நடந்து துரோகம் பண்ணியவனைக் காணும்
உணர்வு உள்ளெழுந்தது. அப்படியான நேரங்களில்,
அலுவலகத்தில் உள்ள தாய்லாந்து சுவர் ஓவியத்தில் இருக்கும்
பௌத்தபிக்குவின் தலையில் இரண்டு வாரங்களுக்குள்ளாக
ஏதாவது தலைமயிர் முளைத்த அடையாளம் தெரிகின்றதா
என்ற சந்தேகம் அல்லது வரவேற்பாளர்ப்பெண் கையிலிருக்கும்
மோதிரம் நியூயோர்க்கில் ட்வானியில் வாங்கியதா அல்லது
அவளின் நான்குவருடகாலம் முந்திய தென்னாபிரிக்க
விஜயத்தில் வாங்கியதா என்ற வினாவின் பத்தாவது எழுச்சி
என்பன என்னுட் கருவாகி வெளி உருவாகி, கரைந்தருகிக்
கருகிக் கழியும். இ·து அவர்களுக்குப் புரிந்திருக்கலாம்
என்றுகூட எனக்குச் சந்தேகம் உண்டு. ஆனால், தனியே
இருக்கையில், பாபாங்கிடாவும் நானும், டெக்ஸாஸ் கிங்கின்
இழுத்துப்பண்ணிய கொலையூடாக, டேவிட் டியூக்கின் புதிய-
நாட்சிசம்வரை விவாதித்து (அதாவது நான் திட்டுவதை அவன்
ஆமோதித்து, அவன் திட்டுவதை நான் அங்கீகரித்து
ஆளுக்காள் முதுகிற் தட்டிக்கொண்டு), அவன்
செங்கழுத்தானிடம் டெனிஸ் ரொட்மன் கார்மன் எலக்ராவைக்
கல்யாணம் பண்ணியது பற்றிய கடைசியாக வெளிவந்த
காதல்நிலை அறிக்கை அறியப்போக, நான் மின்வலைக்குள்
ஏதாவது இயூடோரா முகவரியூடாக, கொசவோ,
செஸ்னியாவில் சிறுபான்மையினருக்கெதிராகச் சேர்பியர்,
இரஷியர் பண்ணுவது எவ்வளவு (அ)நியாயம் என்பது பற்றி
யாராவது விரலை வாய்க்குள் வைத்து விட்டு வையவும் கக்கவும்
முடியாதவர்கள் தாங்கள் என்று மின் அஞ்சற்
கையொப்பக்கோப்பு வைத்திருக்கும் அப்-பாவிகளினை
அவர்கள் செயல்வழியிலேயே தாக்கப்போய்விடுவது வழக்கம்.
ஆக, இரண்டுவருடகாலத்தில், இப்படியானதோர்
உள்ளொன்று வைத்து வெளியொன்று பண்ணும்
ஒளித்துப்பிடித்து விளையாடல் அலுவலகத்துள்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிகழ்ந்திருக்கும்.


பின்கதைச்சுருக்கம் III, IV
------------------------

III - நேற்று
-----------
வீட்டுக்குப் போகும் என் அலுவலக மேசைப்பூட்ட நிகழ்த்தும்
யுத்தம், அன்றன்றைய மனநிலையைப் பொறுத்து,
சக்கரவியூகமா, கருடவியூகமா, இல்லை சாதாரண கரப்பான்பூச்சி
வியூகமா என்று அமைந்திருக்கும். நேற்றைக்கு,
திறப்புக்கோர்வைக் கையிலே நெருப்புக்குவையாக
வைத்திருப்பதுபோல வைத்து, கோர்வையில் இதயம் தொங்கும்
சங்கிலிக்கு இரண்டு பக்கமும் உள்ள சின்னச்சாவிகளில்
இருந்து ஒவ்வொன்றாய், மனயாத்திரை வீட்டில் அவளின்
பெட்டிச்சாவியிலிருந்து சொல்லிக்கொண்டு வீடு
அலுமாரியைப் பூட்டி, முன் வாசற்கதவைப்பூட்டி, வண்டியைத்
திறந்து, அலுவலக வாசலுக்கு வந்து வண்டியைப் பூட்டி, திரும்ப
அலுவலகம் திறந்து.... இப்படி பூசலார் வேலை பார்த்துக்
கொண்டிருக்கையில், கிளன்மேயருடன் பாபாங்கிடா அவர்கள்
அறையிலிருந்து வெளிவந்து என் அறைக்கதவு முன்னாக,
கடந்து போவது தெரிந்தது. என் வெறுப்பிலே, கிளன்மேயரின்
முகத்தைக் கண்டதால், பாபாங்கிடாவையும் வழமைபோலக்
காணாமல் இருந்ததுபோல, மேசை இழுப்பறையினைத்
திறப்பதில் வெகு சிரத்தை காட்டுக்கையில், தலைக்குட் பொறி
பறந்தது. பபாங்கிடா போல உருவிலும் என்னோடுடனான
பழக்கத்திலும் சிறியோன் ஆனாலும், அவனில் நான் கொள்ளும்
வெறுப்பினால் முக்கியத்துவம் ஆகி, பாபாங்கிடாவின் மீதிருந்த
நட்பு சிறுத்துப் போவது புரிந்தது. அதன்பின், நேற்றைக்கு
மேசையினைத் திறப்பது முகச் சுலபமானதாக இருந்தது -
பெரிய சாவி, சின்னப்பரப்பளவு வீட்டு வெளிச்சாவி,
இரண்டாவது பெரியசாவி, பெரியகதவுப்பரப்பளவு
அலுவலகச்சாவி என்று கை பழக; அன்றைக்கு அது
சம்பந்தப்படுத்தி, மிகுதி எந்த நிலையிலும் சாவிகளை மாறிப்
போட்டுச் சிக்கல் பண்ணாமல் வீடு போய்ச் சேர்ந்தேன்.


IV - இன்று
----------
இன்றைக்குக் காலையிலும் சங்கிலி அருகிருந்து
தொடங்காமல், பெரிய சாவிகளை தாரமாக வைத்துச்
சிக்கலின்றி வந்து சேர்ந்தேன். பாபாங்கிடாவையும்
கிளன்மேயரையும் கண்டபோது, சாவிகளை முன்னே
கையாண்ட எண்ணச்சிந்தனையே மனதில். கிளன்மேயரின்
நண்பன் பாபாங்கிடா என்ற உணர்வு செத்து, பாபாங்கிடாவின்
தோழன் கிளன்மேயர் என்று பட்டது. காலைவணக்கம்
இருவருக்கும் சொல்ல, கிளன்மேயர் முதலில் அதிர்ந்து
பின்னால், பதில்வணக்கமும் வாழ்த்தும் சொல்லிப்போனான்.
நேற்றைய சாவிகள் இன்றைய நண்பராகிப் போக,
நேற்றைய நண்பர்கள், இன்றைய சாவிகளானார்கள்.
இன்றைக்கு முழுவதுமே சாவிகளும் அலுவலமும் அவ்வளவு சிக்கலாக
இருக்கவில்லை.


'99/15/03

9 comments:

aazhiyaal said...

இதற்கு முன் ஏதாவது சிற்றிதழில் இது வெளிவந்ததா? ஏற்கெனவே நான் வாசித்த மாதிரி உள்ளதே.

-/பெயரிலி. said...

'தமிழர் தகவல்-பொங்கல் - ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர் 2005' இலே வந்திருக்கிறது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே ;-)

சன்னாசி said...

வீட்டுச்சாவிகளைத் தொலைப்பது வீட்டின் மேலுள்ள ஆர்வம் குறைகிறதைக் காட்டுகிறதென்று ஒரு ஃப்ராய்டியக் கூற்று உள்ளது: இந்த சாவிக்குழப்பங்கள் பெருமளவில் எனக்கும் நிகழ்பவையே. இருப்பிடச் சாவியைக் காருக்கும், கார்ச்சாவியை ஆராய்ச்சிக்கூடத்துக்கும், ஆராய்ச்சிக்கூடச் சாவியை இருப்பிடத்துக்குமென! பெண்களுக்கு முதல் ஆயுதம் முஷ்டிக்கிடையில் இறுக்கப்பட்ட சாவிகளே என்பதை அறிந்தபோது வியப்பாகத்தான் இருந்தது.

டென்னிஸ் ராட்மென் - கார்மென் எலக்ட்ரா! பெயரிலி, VH!, E! ஐயும் விடுவதில்லையா? வாழ்க!

aazhiyaal said...

நான் இன்னும் பொங்கல் ஈ.சி 2005 பார்க்கவில்லை. அதை விட வேறெங்கோ வந்திருக்க வேண்டும் அல்லாவிடில் உங்களின்ட மற்ற பல கதைகளின் பரிச்சயம் காரணமாக அந்த எழுத்து style எனக்கு மிகவும் பழகிப்போயிருக்க வேணும்.

(வேற style என்று சொல்லி நாடுகளுக்குள்ள பிரச்சனையை எழுப்பாதேம்)

ஓமோம். அது பாடமாக்கிப் பாடிக்காட்டிற பாட்டாக்கும். படியும். படியும் ;-);-);-)

Sri Rangan said...

கதை நல்லாத்தாம் போகுது.உங்களுக்கென்றொரு நடையை ஏற்படுத்தி'காமி காசே'யை எழுதினீர்கள்.அது பலராலும் இரசிக்கப்பட்டது.எனது நண்பன் பார்த்திபன் அடிக்கடி தூள்,தூள் என்று அந்த நடையை மெச்சுவான்.அவனே நல்ல கதைகளை எழுதியவன்.அவன் உங்கள் நடையை வெகுவாக இரசித்தான்.நானும்தாம்.ஆனால் இக்கதையில் அந்த நடை இல்லாது போயிற்று.எனினும் கதை நன்றாகச் செல்கிறது.பத்மநாப ஐயரின் இன்னுமொரு காலடியில் அக்கதை வந்தது.

-/பெயரிலி. said...

மாண்ட்ரீஸர்,
/டென்னிஸ் ராட்மென் - கார்மென் எலக்ட்ரா! பெயரிலி, VH!, E! ஐயும் விடுவதில்லையா?/
OUI! ;-)

ஆழியாள், இவையெல்லாம், 97~99 உள்ளே எழுதியவை. அதே காடி, அதே பினாட்டு ;-) அதுக்குப் பிறகு எழுதப் புதிதாக வாசிக்கவேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால், அதே காடி அதே பின்னாட்டு ... இன்னும் இழவளிச்சுப்போய் வரும். இப்ப கொஞ்ச நாளாத்தான் திரும்ப வாசிக்கத் துடங்கியிருக்கிறன் ;-)

ஸ்ரீரங்கன்,
பார்த்திபன் சொன்னாரெண்டால், கேட்கச் சந்தோசமாகத்தான் இருக்கு. புலம்பெயர்ந்து எழுதத்தொடங்கியவர்களிலே ஆரம்பம் முதலே பிடித்த எழுத்தாளத் தீவு மனிதர். (பத்மநாப ஐயர் உட்பட சில நண்பர்களிடம் பார்த்திபனின் படைப்பு மீதான பிடிப்பினைச் சொல்லியிருக்கின்றேன்). ரஞ்சகுமாரும் பார்த்திபனும் மீதியான புலம்பெயராத, பெயர்ந்து படைக்கின்றவர்களிலே (படைத்தவர்களிலே?) என்னை ஈர்த்துக்கொண்டவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தனிமையிலே சீனாவின் ஒரு மூலையிலே ஒடுங்கியிருந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னான காலத்திலே, அஞ்சலிலே வரும் தூண்டில், மனிதம், உயிர்ப்பு இவை தந்த உயிர்ப்பும் பிடிப்பும் தனியே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. ஆளை அறியாமலே இவற்றினை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி சொல்ல இத்தருணத்தினை எடுத்துக்கொள்கிறேன்.

Jayaprakash Sampath said...

இந்தக் கதையை நிறைய முறை படித்திருக்கிறேன். இன்றும் படித்தேன். நல்ல ஆக்கம். இப்போதெல்லாம் கதைகள் எழுதுவதில்லையா?

SnackDragon said...
This comment has been removed by a blog administrator.
SnackDragon said...

பெயரிலி,
ஏற்கனவே வாசித்திருந்தேன் பதிவுகள்.கொம்-லே. இருந்தாலும் இப்போதும் வாசித்தேன்.

பொதுப்படையான கருத்து எல்லோருக்கும் எல்லா பிரிவினரின் மீது உண்டு எனபது உண்மைதான் என்றாலும், அவரவரோடு ஏற்படும் அனுபவத்தின்/விவாதத்தின் மீது வரும் கருத்துக்குத்தான் முக்கியத்துவமும் அதன் அடிப்படியிலே_அவரினைப்பற்றிய புரிதலும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அல்லது புரிதல் ;-)

முன்னால் பழகிய நண்பனின் நண்பன்
இன்னுஞ் சிறந்தவனெனின் , அவனுக்கான முக்கித்துவத்தை தராமல் இருத்தலும் குற்றம்தானே? இடையில் கசப்புகள் வராமல் பார்த்துக்கொள்வதுதான் புச்சாலித்தனம். :-P


/டென்னிஸ் ராட்மென் - கார்மென் எலக்ட்ரா! பெயரிலி, VH!, E! ஐயும் விடுவதில்லையா?/

E! சேனலை இப்படிப் பேசும் மாண்ட்ரீசரை நான் கண்ணடிக்கிறேன். ;-)

இங்கே இ! சேனல் ஒரு உதாவாக்கரை சேனல் என்று ஒரு கருத்து இருப்பதாக எங்கோ சில வாரங்களுக்கு முன் வாசித்தேன்.

சமீபத்தில் அது ஒளிபரப்பிய , "நியுடிட்டி பற்றிய நடிக/நடிகையர்கள்" கருத்து நிகழ்ச்சி வெகு அருமையாக இருந்தது. அது போலவே, "-ஹாலிவுட் நமக்கு கற்றுத்தந்த செக்ஸுவாலிடி" என்ற நிகழ்ச்சியில் எப்படி பாலியல் கல்வி ஒருங்கிணைதுள்ளது என்பது பற்றியும், தற்பாலர்கள் பற்றி விளம்பர/சரியான பார்வைக்கு திரைப்படங்களின் பங்கு பற்றியும் சொன்னது குறிப்பிடத்தக்கது.

-ஹுர்ரே E!
எலெக்ரா பார்த்தீர்களா?