Thursday, June 09, 2005

கணம் - 471


'05 யூன் 08, புத. 18:21 கிநிநே.

இதுவரை முடித்த நூல்களைப் பற்றிச் சொல்லக் கேட்கிறாய்.
நாவுக்கும் கண்டத்துக்குமிடை சின்னச்சொல்லும் சிக்கிப் புதைகிறேன்.
ஈதரைப் போல் புலனுக்குப் பிடியுணாது, உள்ளவிந்து பெருந்துயர் விரிகிறது.

முடிக்காத நூலொன்று என் முன்னுக்கிருக்கிறது, பார்த்தாயா?

ஒரு கைக்குழந்தைக்கு முன் வந்த நூல்; தவழ்ந்திருக்கிறது கை;
முகம் தடவுண்டிருக்கிறது; தவறிக் கால் விழுந்திருக்கிறது விரிந்து;
முன் மயிர்க்கற்றை முன்னும் பின்னுமாய் விரல் உழன்றிருக்கிறது;
நடந்திருக்கிறது என்னுடன், நகர்வாகனத்தில், நடைவழித்தடத்தில்,
வந்தாரை வரவேற்க வான்விமானக்காண்கூடத்திருக்கை இடுக்குள்.
அந்த ஓரத்திற் பார், ஒரு முனை உள் நசுங்கிப் போயிருக்கிறது முகம்
- மரக்கதவிடுக்கில் என் கைத்தவறு; பின்னும் சொல் பேசாமற் தொடர்ந்து,
நெடுநாளாய் விரல் முடுக்கித் தடவித் தாள் விரித்துத் தட ஒளி காண,
முடிக்காத நூலொன்று என் முன்னுக்கு யோகத்தவமிருக்கக் கண்டாயா?
நிழல் நோகாமல், இதுநாள் முடித்தன எண்ணி எப்படி நான் சொல்வேன்?

இழைத்து முடிக்காத நூலொன்றைச் சுவைத்து முடித்த பின் வா;
எடுத்துப் படித்ததில், என்னோ டிணங்கிப் பிடித்ததைச் சொல்வேன் நான்.
'05 யூன், 09 வியா. 12:05 கிநிநே.

9 comments:

கறுப்பி said...

ராஜ்கௌதமனின் கதையை எனக்கு ஒருக்கா அனுப்பி விடுங்கள் வாசித்து விட்டுத் தருகின்றேன். உதவிக்கு நன்றி

மு. சுந்தரமூர்த்தி said...

உங்க கலெக்ஷன் இவ்ளோதானா? ஒரு நூறுகூட தேறாது போல இருக்குதே. சீக்கிரம் யாருக்காவது எழுதிப்போட்டு ஒரு மூட்டை அனுப்ப ஏற்பாடு செய்யும். வந்தபின் மூட்டையை பிரிக்காமல் ஒரு படம், பிரித்து ஒரு படம் எடுத்து போடும்.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை எனக்கு ஒருக்கா அனுப்பி விடுங்கள் வாசித்து விட்டுத் தருகின்றேன். உதவிக்கு நன்றி.

-/பெயரிலி. said...

சுந்தரமூர்த்தி,
இவை புத்தக அலுமாரிகள் இரண்டிலே, ஒன்றிலே இருக்கிறவற்றின் 2/3. மீதி இரண்டு கார்ட்போர்ட் பெட்டிகளுக்குள்ளே. இந்த கண்காட்சித்தரவுகள் அல்ல முக்கியம்.
முக்கியமான தரவுகள்
1. 1/3 பங்கு பத்மநாப ஐயர் அனுப்பி வைத்தது (புத்தகச்செலவும் அனுப்பும்செலவும் அவரே)
2. 1/6 'பார்வை' மெய்யப்பன் போன்ற நண்பர்களிடன் கடனாகப் பெற்றவை (அவர் மகனுக்கு ஓராண்டுப் பூர்த்தி வரப்போகும் பத்து நாட்களிலே கடன்களை மறந்துவிடுவார் என்று நம்புவோம்)
3. 1/6 நண்பர்கள் அனுப்பி வைத்தவை
4. 1/3 நான் பழைய புத்தகக்காரர்களிடம் வாங்கிக்கொண்டவை
5. 1/8 அனைத்திலும் வாசித்தவை

கறுப்பி, அடிடா சக்கையெண்டானாம்; நானே இரவல் ;-)

கறுப்பி said...

பெயரிலி சரியான நப்பி. தமிழரின்ர நப்பிக் குணத்தைக் கடைசியாக் காட்டிப் போட்டீர். நான் என்ன காசே கடனாக் கேட்டனான். (நெருங்கினால் அதுவும் கேப்பன்) புத்தகம் வாங்கக் காசில்லை அதால உதவியாக் கேக்கிறன் உப்பிடி உசுப்பிறீரே?

பத்மநாபஐயர் இஞ்சதான் நிக்கிறார் நான் கேக்கப் போறன் ஏன் பெயரிலிக்கு மட்டும் ஓசியா அனுப்பிறியள் எண்டு. எனக்குத் அனுப்பாட்டியும் பரவாயில்லை உமக்கு அனுப்பிறதை நிப்பாட்டிப்போட்டுத்தான் மற்ற வேலை.
அவரோடையும் ஒரு டீல் அவசரமாப் போட வேணும்.

Shankar said...

உம்ம கிட்ட இதே தான் லொள்ளு. எளுதாம டார்ச்சர் பண்ணுவீரு. எளுதச்சொன்னா இப்பிடி எளுதி வெப்பீரு. புரியறதுக்குள்ளாற டங்கு டிங்காயி டிங்கு டணாராகிப் போவுது சாரே!

மு. சுந்தரமூர்த்தி said...

கறுப்பி,
அவசரப்படாதிங்கொ. உங்களுக்கு அனுப்பத்தானே தனியா எடுத்து வச்சிருக்காரு!

பெயரிலி,
அப்போ அந்த அகராதி. என் வாசிப்பனுபவத்தை அங்கிருந்து தான் ஆரம்பிக்கோணும். சீக்கிரம் அனுப்பி விடுங்கள் (நீங்க வாசிச்ச 1/8 இல் அதுவும் ஒன்னா?).

-/பெயரிலி. said...

கறுப்பி, அக்கா நான் சொன்னது புத்தகமே கடன். கடன் வாங்கினவன் கடைத்தேங்காயோ வழிப்பிள்ளையாரோ எண்டு விளையாடமுடியாதே எண்டதை வைச்சுத்தான். நப்பித்தன்மையும் பெயரிலியும்.. ஹா ஹா ஹா!!

Thangamani said...

அழகான அலமாரி, வளைந்து போகிற அளவுக்கா வைப்பது, சே சே...எனக்கு பொறாமை எல்லாம் இல்லை. :))

-/பெயரிலி. said...

/அழகான அலமாரி, வளைந்து போகிற அளவுக்கா வைப்பது,/
மூண்டு டொலருக்கு யார்ட் சேலில வாங்கின அலுமாரி, அழுகின அலுமாரி இல்லை அழுக்கான அலுமாரி எண்டிருந்தால் மெய்யாய் இருந்திருக்கும் ;-) கனத்தால், வளையத்தானே வேணும்.