Thursday, June 23, 2005

புலம் - 14

கலங்கல் அகலக் காணலே காட்சி


முதலே சொல்லிவிடுகிறேன்; முக்குலத்தோரை நியாயப்படுத்துவது அல்ல என் நோக்கம். ஆனால், தமிழக நிகழ்வுகளை உன்னித்துக் கவனித்து வருவோமானால், பெரும்பாலும் பார்ப்பனிய_ஊடகங்கள் (இங்கே கண்ணும் கருத்தும் தெளிவானோர் பார்ப்பனர்_ஊடகங்கள் என்று வாசிக்கமாட்டார்கள்) முக்குலத்தோர்-தலித் பிளவுகளைப் பெரிதுபடுத்திக்காட்டுவதிலேயும் ராமதாஸ்-திருமாவளவன் (வன்னியர்-தலித்_ஒரு-பகுதி) ஆகியோரின் கூட்டினை எள்ளி நகையாடுவதிலுமே கண்ணாக இருக்கின்றார்கள்; "ஆக, இத்தால் அறியப்படவேண்டியது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே." உலகின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் மூலகாரணம், அமெரிக்காதான் என்று ஒடுக்கிச் சுருக்குவது எவ்வளவுக்கு மடைத்தனமும் நேர்மையற்ற செயலுமோ அதைப்போலவே "தமிழகத்தின் எல்லாச்சிக்கல்களுக்கும் அடிவேர் பார்ப்பனியமே" என்பதும்; ஆனால், பார்ப்பனியம் என்பது நிச்சயமாக பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அத்தோடு, பார்ப்பனியம் எனும்போது, இடைநிலைச்சாதி, கீழ்நிலைச்சாதி என்ற வகைப்படுத்தலோடு மேல்நிலைச்சாதி என்பதும் உள்ளடங்கியிருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

பார்ப்பனிய ஊடகம், ஊடகவியலாளர் என்று ஏன் கூறுகின்றேனென்றால், தமிழ்நாயரான ஜெயக்காந்தன்பிள்ளை போன்றோரும் அவருடைய குட்டிநாயர்களும் மிக இலகுவாக பார்ப்பனர் அல்லாதவராக உருக்காட்டப்பட்டுத் தப்பிவிடலாம்; கிட்டத்தட்ட வையாபுரிப்பிள்ளை போன நூற்றாண்டின் முன்பகுதியிலே செய்ததும் இதுவே; வேண்டுமானால், கல்யாணசுந்தரமுதலியாரையும் டி. கே. சிதம்பரம்பிள்ளையையுங்கூட இந்தப்பட்டியலிலே சேர்த்துக்கொள்ளலாம். இப்பட்டியலிலே, தண்டபாணிபிள்ளை ஜெயக்காந்தன்பிள்ளையை விட்டுவிடுவோம்; மிகுதியானவர்கள், தாம் பார்ப்பனியச்சித்தாந்தத்தினைக் காவுகின்றோமென்று அறிந்தே - தம் குல இருப்பினைத் தக்க வைக்கச்- செய்தார்களா, அல்லது, இவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டினாலே (வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுரீதியான வடமொழியினை முன்னிறுத்திய போக்கு; கல்யாணசுந்தரமுதலியாரின் இந்தியதேசியத்தினை முன்னிறுத்திய காங்கிரஸினை முன்னிறுத்திய போக்கு; டிகேசியின் இலக்கியச்சுவைத்தலின் பாற்பட்ட கம்பராமாயணத்தினை முன்னிறுத்திய போக்கு) பார்ப்பனிய சித்தாந்தத்தினை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு அறியாமலே நகர்த்துகாய்களானார்களா என்று சரியாக எனக்குப் புரியவில்லை. ஆனால், இவர்களையும் இவர்களின் கருத்துகளையும் பார்ப்பனிய/வடமொழி முன்னிறுத்து/தமிழ்த்தேசியக்கூட்டுவுணர்வுக்கெதிரான நிலைப்பாடுள்ளோர்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்; இன்னும் பயன்படுத்துகின்றார்கள்.

ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலும் அறுபதுகளிலேயும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தினையும் பார்ப்பனிய எதிர்ப்பினையும் திராவிடதேசியத்தினையும் முன்னிலைப்படுத்திய திராவிடக்கட்சிகளின் ஆளுமைக்கு முன்னாலே, ஒடுங்கிப்போயிருந்த பார்ப்பனிய/வடமொழி/தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சக்திகள், திராவிடக்கட்சிகளின் அரசியல், பண்பாட்டுச்சீரழிவின்பின்னாலே, மீண்டும் உலகளாவிய மதத்தீவிரவாதத்தின்பின்னால் மறைந்துகொண்டு ஆழ வேரிட்டு முளையெடுத்து மேற்செல்ல முயல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தக்காலகட்டத்திலே, இத்தகுசக்திகளின் காய்நகர்த்துதல், ஒடுங்கிப்போய்விட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பலம்பொருந்திய கொள்கையான தனக்கு எதிரானசக்திகளைப் பிரித்தலும் தம்மை மீறாதவிதத்திலும் தம்நலத்தினைச் சேதப்படுத்தாதவிதத்திலும், தாம் கூறாக்கிப் பிளந்த எதிர்ச்சக்திகளிலே தமக்கு அடுத்த நிலையிலே வர்ணாசிரம அடிப்படையிலே வைத்திருக்கும் குழுவுக்கெதிராக, அடிமட்டத்திலே வர்ணாசிரமும் வைத்திருக்கும் குழுவினை மோதவிடுதலுமாக இருக்கின்றது. இந்துமதபீடங்கள் முதன்முதலிலே, தலித்துகளை மீனாட்சிபுரமதம்மாறுசம்பவத்தோடு ஒரு கண்துடைப்புக்காக அணுக முயன்றன. அதற்குக் காரணம், இந்துமதத்தின் அத்திவாரத்திலே ஆட்டம் வந்துவிடுமோ என்பதால், மேல்மாடியிலே இருந்தவர்கள் பயமுற்றது. அதன் பின்னாலே, எதுவுமே பத்தாண்டுகளாக நடக்கவில்லை. பிறகு, இந்துமதபீடங்களுக்கு ஈடான அசகிப்புத்தன்மை கொண்ட பொருட்பலமுள்ள பப்டிஸ் கிறிஸ்துவ ஊடுருவலும் மத்தியகிழக்கிலே தொழிலுக்குப் போனவர்களூடாக உள்நுழைக்கப்பட்ட தீவீரவாத வஹாபி இஸ்லாமும் வெளிப்படையாகச் செயலாற்றத் தொடங்கிய காலத்திலே, தீவிர இந்து இயக்கங்களினை வைத்து பார்ப்பனியகூட்டுச்சக்திகள் செயலாற்றத்தொடங்கின என்று சொல்வேன்.

அண்மைக்காலத்திலே, இருள்நீக்கி சுப்பிரமணியம் என்ற காஞ்சி சங்கராசாரியாரின் தலித்துகளை அணுகலும் இதன்பாலானதே. கிட்டத்தட்ட, 'பிராமணகுருவுக்கு வன்னாயுதப்போரிட எத்துணை தெரிந்தபோதும், புழு தொடையிலே துளைத்தாலுங்கூட குருவின் தூக்கம் கலையாது அசையாதிருக்கும் சீடனாக, ஒரு ஷத்திரியனுக்குத்தான் ஆகும்' என்கிற புராண(ப்)பார்வையைக் கொஞ்சம் தலித்துகளுக்கு நகர்த்தியதுபோன்ற செயற்பாடு இதுவெனலாம். மீதியான தம்மை அரசியல், பொருளாதார வகையிலே எதிர்கொள்ளக்கூடிய சாதியினரை எதிர்கொள்ள, தலித்துகளைப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கின்றது. (தம்மிலும் மாற்றான குழுமங்களின் பண்பாட்டு வகை குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை. எம் பண்பாட்டினை விட மேலானது உண்டோ என்ற வகையிலான ஒரு பெருமித உளப்பாங்கிலே இந்த நிலை அமைந்திருக்கிறதெனலாம். நாட்டார் சிறுதெய்வங்கள்முன்னால், பூசாரி ஆடு வெட்டினால், தவறு; ஆனால், புராண, இதிகாச, பிற்காலவேதங்களிலே அசுவமேத யாகம் தொடக்கம் பலவகை உயிர்ப்பலிகள், சோமபான அருந்துகை இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன) நேராக, குறியினைத் தாக்காமல், நீரிலே, ஆடியிலே விழும் விம்பத்தினைச் சுட்டி அம்பெய்யெனும் தன்மை இதுவெனலாம். தம் உழைப்பாலே உயர்மட்டத்தினை அடைந்த தலித்தினர் சிலரின் பார்ப்பனியப்போர்வைக்கு ஆசைப்படும் போக்கும் இங்கே பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கின்றது; பண்ணைபுரம் சின்னத்தாயி புள்ளை இளையராசா வாழ்க்கை இதற்கு ஒரு செவ்வுதாரணம். இளையராஜாவினைத் தூக்கித் தலையிலே வைத்துக்கொள்ளும் பார்ப்பனிய ஊடகங்களும் அபிமானிகளும் இளையராஜாவின் அரசியல் திருமாவளவன் போலவோ அல்லது கிருஷ்ணசாமிபோலவோ இருந்தால், அவரை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.

இதுதவிர, பார்ப்பனிய நலனைப் பேணும் சக்திகள் அமைப்பு சார்ந்து தமிழகப்பொதுவுடமைக்கட்சிகளிலும் நிறையவே தொடர்ந்திருக்கிறன. தமிழகத்திலே மட்டுமல்ல, பொதுவாகவே இந்தியாவிலேயே மரபுசார் பொதுவுடமைக்கட்சிகளிலேயிருந்து, தொண்ணூறுகளின் பின்னே விலகிப்போனவர்களைப் பார்த்தால், பார்ப்பனியத்தினை முன்னிறுத்துகின்றவர்கள் பாரதீயஜனதா போன்ற கட்சிகளிலே சேர்ந்திருக்க, மீதியானவர்கள், தலித்முன்னிலைப்படுத்து, தமிழ்த்தேசிய, பெரியாரியப்பார்வைகளை எடுத்துச் செல்ல முயல்கின்றனர். ஆனால், மரபுசார் பொதுவுடமைக்கட்சியில் இன்னமும் பார்ப்பனியகைப்பிடி இறுக்கமாக இருக்கின்றதைக் காணலாம்; மார்க்ஸும் லெனினும் பார்ப்பனிய நலத்துக்குக் கேடுவராதவரைக்குமென்பதே இவர்களின் நிலைப்பாடும். பார்ப்பனிய நலனைப் பொறுத்தமட்டிலே இவர்களுக்கு இடது வலது கொள்கைப்பேதமில்லையோ என்றே தோன்றுகிறது. மிகவும் இயல்பாக, செந்தோழர் 'இந்து' ராமும் காவிஞானி 'துக்ளக்' ராமசாமியும் பொருந்திக்கொள்கின்றார்கள். ஒருவர் இருள்நீக்கி சுப்பிரமணியர் சிறை வைக்கப்பட்டதற்கு வருந்தி எழுதினாரென்றால், மற்றவர் அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது, போய் சவாரி கொடுக்கின்றார். அடிப்படையிலே, இவர்கள் இணைவது இந்த பார்ப்பனியநலன்பேணலின்விளைவாகவே.

இந்த வகையிலேயே "தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே" என்னும் மாயை ஏற்படுத்தப்படுகின்றது; தமிழுக்காகக் குரல் கொடுக்கின்றவர்கள், இந்தப்பார்ப்பனிய சக்திகளாலே மிக இலகுவாக, குரல் கொடுப்பவர்களை இவர்கள் எடைபோடும் வகையிலே, ஒன்று, எள்ளிநகையாடப்படுகின்றார்கள், அல்லது, பயங்கரவாதிப்பட்டம் கட்டப்படுகின்றார்கள். ராஜ்குமார் தொடர்பாக வீரப்பனோடு பேச, நெடுமாறன், கல்யாணி, சுகுமாரன் போனபோது, இந்து ராமும் துக்ளக் சோவும் ஒருமித்த குரலிலே ரீடிஃப்பிலே, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளர்கள் என்ற குரலை இடம்-வலம் மறந்து எழுப்ப முடிகின்றது. அதேபோல, ராமதாஸினையும் திருமாவளவனையும் 'தமிழைச் செம்மொழி ஆக்குங்கள்' என்பவர்களையும் இலகுவாக தார்பூசி, தமிழ்க்குடிதாங்கி என்றவகையிலே எளிமைப்படுத்திவிடமுடிகின்றது. ராமதாஸும் திருமாவளவனும் உச்சக்கட்டத்திலே சண்டைபிடித்துக்கொண்டபோது, வன்னியர்.எதிர்.தலித் என்றதை வலிந்து வலிந்து "வெட்டு_குத்து_கொலை" என்பதாகப் பெரிதுபடுத்தி எழுதிய ஊடகங்கள், இப்போது, இருவரும் சேர்ந்து செயற்படுவதிலே கிண்டலடிக்கச் செய்கின்றன. இங்கே, குறிப்பாக ஒன்றைக் கவனிக்கவேண்டும். இந்தக்கூட்டினைக் கிண்டல் செய்யும்போதுகூட, திருமாவளவனை இவர்கள் நேரடியாகக் கிண்டல் செய்வதில்லை என்பதை கொஞ்சம் உன்னிப்பாக வாசிக்கின்றவர்கள் அவதானிக்கலாம்; ஆக, ராமதாஸினையும் அவர் மகனையுமே வெளிப்படையாக அடித்துத்தள்ளுகின்றார்கள். இதற்கான காரணத்தினை அறிவது மிக இலகு; நான் மேலே எழுதிய, "பலமற்ற எதிரியைத் தட்டிக்கொடுத்து அவன் மூலம் உடனடி எதிரியைத் தாக்கு." 'கிருஷ்ணசாமி.எதிர்.திருமாவளவன்' என்ற 'தென்மாநில தலித்.எதிர்.வடமாநிலதலித்' என்ற உருவாக்கமும் சில ஆண்டுகளின் முன்னே பார்ப்பனியசித்தாந்தத்தினை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காவும் பத்திரிகைகளிலே பெரிதுபடுத்தப்பட்டுக்கொண்டேயிருந்தது. ஆனால், இப்போது, வடமாநில வன்னியர்_தலித் கூட்டு மிகவும் பயமுறுத்துவதாக இருப்பதால், அதையிட்டே கவனம் திரும்பியிருப்பதால், இந்த 'வடதலித்.எதிர்.தென்தலித்' அடங்கிப்போயிருக்கின்றது. இப்படியான ஊடகங்கள், பதிப்பிலோ, ஒலி/ஒளியிலோ, ஏன் இணையத்திலோ இயன்றவரை பார்ப்பனிய (பார்ப்பன என்றே இங்கே வாசித்துக்கொள்ளவும்) ஒற்றுமைக்கு ஏதோ வகையிலே உள்வீட்டுத்தனியார் ஈடேற்றம் குறித்த மோதலிலே ஊறுவரும்போது, கலங்கிவிடுகின்றன. இந்து பத்திரிகையின் மீது ஜெயலலிதா அம்மையார் தன்னைச் சம்பந்தப்படுத்தியதால் நடவடிக்கை எடுக்க முயன்றபோது, பல (எல்லோருமல்ல) ஐயங்கார்களுக்கு ஏற்பட்ட மனக்கலவரத்தினை எழுத்திற் கண்டபோது இது தெளிவாகத் தெரிந்தது. இதேபோலவே, காஞ்சி சங்கராசாரியாருக்கும் ஜீயருக்கும் உரசல் ஏற்பட்டபோது, அது வெளியே பெரிதும் தெரியாமலே அடங்கிப்போனது. குறைந்த பட்சம் கண்டமகாதேவி தேர் குறித்து எழுதப்பட்டதுபோலாவது, ஊடகங்கள் பேசியிருக்கக்கூடாதா?

சன் ரிவி, ஜெ ரிவி, குமுதம், குங்குமம் என்பன பார்ப்பனிய சக்திகளுக்கானவை இல்லையே என்பதாகவும் ஓரளவுக்குத் திராவிடக்கட்சிகள் சார்ந்தன என்பதாகவும் சொல்லித் தப்பிவிடமுடியாது. சன் ரிவி.எதிர்.ஜெ ரிவி இரண்டு சீரழிந்த அரசியல்வாதிகளினையும் அவர்கள் நலன்களையும் பேண நடாத்தப்படுவன. அதிலேகூட ஜெ அம்மையாரின் ஜெ ரிவியினைத் தாக்காமல், சன் ரிவியினை(யும் குங்குமத்தினையும்) மட்டுமே தொடர்ந்து சிலர் இணையத்திலே தாக்குவதற்கான காரணம் ஜெ அம்மையாரின் பின்புலம் சார்ந்த இவர்களின் நூலிழைப்பிணைப்பும் கருணாநிதியோடு அத்தகு இழை அமையாததுந்தவிர வேறு எதுவாக இருக்கமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுமே குப்பை என்றால், ஒரு குப்பையை மட்டுமேன் இவர்கள் நாறுகின்றதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள்? உள்ள திருடர்களுக்குள்ளே எவர் நல்ல திருடர்? எவர் கெட்ட திருடர்? குமுதம் அடிப்படையிலே ஒரு வர்த்தக சஞ்சிகை; உரிமையாளர்கள் செட்டியார்களாக இருப்பினும், அடிப்படையிலே அதன் ஆசிரியபீடம் தொடர்ச்சியாக பார்ப்பனிய நலனினைப் பேணுவதாகவே இருந்திருக்கின்றது; ஆனால், அதற்குக்கூடவே உரிமையாளர்களின் வியாபாரநலனைப் பேணும் தேவையும் இருக்கின்றது; தீராநதி, யாழ்மணம் போன்றவை இந்த நலனைச் சுட்டும்.

ஆரம்பத்திலேயே சொன்னதுபோல, நான் தேவர்களின் தலித்துகளுக்கு எதிரான செயற்பாட்டினை எந்நிலையிலும் (ஊர்க்கோவிற்றேர் என்றாலென்ன, பஞ்சாயத்துத்தேர்தலென்றாலென்ன) நியாயப்படுத்த மாட்டேன். அதேபோல, பாமா, இமையம் போன்ற தலித்துகளே, அடித்தட்டிலே சாதியடைப்படையிலே வைக்கப்பட்டிருக்கின்றவர்களிடையே நிகழும் பிக்கல்களைப் பேசியிருக்கின்றார்கள். அதையும் மறுக்கப்போவதில்லை. ஆனால், சாதிவெறியோடு அலைகின்றவர்கள் தேவர்களும் வன்னியர்களும் தலித்துகளுமே என்பதுபோல, மேல்நுரையைக் காட்டிவிட்டு, தமிழகத்திலே சாதிப்பிரச்சனை முழுக்கவுமே அதற்குள் அடக்கமென்று சொல்லிவிட்டுச் சிலர் தப்பிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. இதற்கு இவர்களுக்கு "மீதி சாதி/குழு குறித்த அடக்குமுறை எதையுமே சொல்லாத" ஊடகங்கள் வாய்ப்பாக இருக்கின்றன. ஆனால், இவர்கள், அசோகமித்திரன் சொன்னதாகச் சொன்னதிலே தான் சொல்லவில்லை என்று சொன்னதை விட்டு ஒன்றுமே சொல்லாமல் விட்டதையிட்டு என்ன சொல்லப்போகிறார்கள்? ஜெயக்காந்தன்பிள்ளை தமிழ்(த்தேசியம்) குறித்துச் சொன்னது குறித்துச் சொன்ன விளக்கம் குறித்து என்ன நினைக்கின்றார்கள்? இவை குறித்து ஏன் பத்திரிகைகள் மிகவும் ஆழமாக விவாதிக்க மறுக்கின்றன என்பதைச் சொல்லவேண்டும். பெருமளவிலே நான் பார்ப்பனியசித்தாந்தத்தையே சுட்டியிருக்கின்றேன்; பார்ப்பனர்களை அல்ல; ஆனால், சில இடங்களிலே நிச்சயமாக பெருமளவிலான பார்ப்பனர்களையும் சுட்டித்தானிருக்கின்றேன். இந்தப்பார்ப்பனிய சித்தாந்தநிலைப்பாட்டினை விட்டுவிலகிச் சிட்டுக்குருவிகளாக நின்ற, நிற்கிற பார்ப்பனர்களையும் எனக்குத் தெரியும்; இந்தப் பார்ப்பனிய சித்தாந்தத்தின் படிக்கட்டுகளிலே உச்சிக்கு அடுத்த குருபீடத்துக்கு நடக்கத் துடிக்கும் நடந்தடைந்த பிள்ளைகளையும் தேவர்களையும் தலித்துகளையும் எனக்குத் தெரியும். ஆக, இத்தால் சொல்ல விழைந்தது என்னவெனில், நாம் 'நீருக்கு மேலே தெரியும் வாலை மட்டும் பார்த்து, ஆழக்கடற்சுறா அளவு இவ்வளவுதான்' என்று சொல்லிவிட்டுப் போகக் கூடாது.

'05 ஜூன், 23 வியா. 12:30 கிநிநே.


பி.கு.: பெயரிலிகளாக, முகமூடிகளாக வந்து திட்டிவிட்டுப்போகவும் கருத்துச்சுதந்திரம் உண்டு; மூலம் கண்டுபிடித்து, வழக்கேதும் போடமாட்டேன். ;-)

25 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல தெளிவான பதிவு!

-மதி

Jayaprakash Sampath said...

வலையில் இருக்கிற முக்குலத்தோர், தலித், பிள்ளைமார், ஐயர், ஐய்யங்கார் எல்லாரும் சேர்ந்து இந்தப் பதிவுக்காக உங்களுக்கு தர்ம அடி கொடுக்கக் கடவது :-)

இன்றைக்கு குமுதத்தில், டயமண்டுக்கவி, "தங்கள் அடையாளங்களை இழக்காமல் உலக நீரோட்டத்தில் கலக்க வேண்டும் " என்று குட்டி ஸ்டேட்மெண்ட்டு விட்டிருந்தார். அதன் பாதிப்புதானோ இது?

மிக நல்ல பதிவு. ஆனால் சரியாகப் புரிந்து கொள்ளப் படாமற் போவதற்கான சாத்தியம் மிக அதிகம். பெஸ்ட் ஓ·ப் லக்

// இந்து பத்திரிகையின் மீது ஜெயலலிதா அம்மையார் தன்னைச் சம்பந்தப்படுத்தியதால் நடவடிக்கை எடுக்க முயன்றபோது,
பல *(எல்லோருமல்ல)* ஐயங்கார்களிடையே ஏற்பட்ட கலவரத்தினைக் கண்டபோது //

:-) :-) :-)

SnackDragon said...

"முன்னே போனால் கடிக்குது பின்னால் போனால் எத்துது" என்று ஒரு பின்னூட்டிடவெண்ணியிருந்தேன் , தங்கமணியின் பதிவிலே காலையில். பின்னாலே முட்டியது, எத்தியதும் தெரியாமல் நான் முட்டியது மட்டும் தம்பட்டமாகிவிடும் என்று வாளாவிருந்துவிட்டேன்.
/பார்ப்பனிய சித்தாந்தத்தினை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு அறியாமலே நகர்த்துகாய்களானார்களா என்று சரியாக எனக்குப் புரியவில்லை. /
இதற்கு "சைவப்பிள்ளை" என்று பிள்ளைகளோடு "சைவத்தை" இணைக்க வேண்டிய தேவையை வைத்துப் புரிந்துகொள்ளலாம் என்றாலும் எனக்கு இதன் பின்னால் நடந்த/நடக்கும் அரசியல் காய்நகர்த்தகல் அவ்வளாவாகத் தெரியாது. இது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்தது/வீறு கொண்டது என்று இராமலிங்கப் பிள்ளையின் கூட்டத்தாரால் அறியப் பெற்றேன்.

பரி (Pari) said...

ஆக, இத்தால் சொல்ல விழைந்தது என்னவெனில், நாம் 'நீருக்கு மேலே தெரியும் வாலை மட்டும் பார்த்து, ஆழக்கடற்சுறா அளவு இவ்வளவுதான்' என்று சொல்லிவிட்டுப் போகக் கூடாது.
>>>>>
செவிடன் காதில் ஊதிய/ஊதப்படும்/ஊதப்போகும் சங்கு :-)

கொஞ்சம் நடையை எளிமைப்படுத்தியிருக்கலாம். நிறைய பேருக்குப் புரிஞ்சா நிறைய தர்ம அடி கிடைக்கும்ங்ற பேராசைதான் :))

Mookku Sundar said...

இதுக்கு மேல தெளிவா யாரும் சொல்ல முடியாது. எப்பவுமே கஷ்டப்பட்டு புரியிற உங்க எழுத்து, இந்த மாதிரி மேட்டர்ல மட்டும் தெளிவா புரியுது..?? காரணம் - ஆர்வம்னு சொல்லுவேன் நான். படிக்கிற மகாஜனங்கள் வேறெதாவது சொல்லி பட்டம் கட்டி விடுவாங்க.:-)

என்னவோ போங்க..( ஆமாம்..ஜெயஸ்ரீ எங்கே மதி..? )

SnackDragon said...

/ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலும் அறுபதுகளிலேயும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தினையும் பார்ப்பனிய எதிர்ப்பினையும் திராவிடதேசியத்தினையும் முன்னிலைப்படுத்திய திராவிடக்கட்சிகளின் ஆளுமைக்கு முன்னாலே, ஒடுங்கிப்போயிருந்த பார்ப்பனிய/வடமொழி/தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சக்திகள், திராவிடக்கட்சிகளின் அரசியல், பண்பாட்டுச்சீரழிவின்பின்னாலே, மீண்டும் உலகளாவிய மதத்தீவிரவாதத்தின்பின்னால் மறைந்துகொண்டு ஆழ வேரிட்டு முளையெடுத்து மேற்செல்ல முயல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது./
இது கொஞ்சம் சிக்கலாகப் படுகின்றது. ஏதாவது உதாரணம் இருந்தால் விளக்கமுடியுமா?

Sri Rangan said...

இரமணி,ஒரு பெரிய விவாதத்துக்கான கருவோடு எழுதியுள்ளீர்கள்.பார்ப்பனியம் என்பதும் பார்பனர் என்பதும் வெவ்வேறாகக் கருதினும்.பார்ப்பனியக் கருத்தியலை பார்ப்பனருக்கு வெளியிலும் காணும்போதும்,பார்ப்பனர்களில் பலர் அதைப்புரிய மறுக்கின்றனர்.இந்தச் சங்கதியைத் தங்கமணி மயூரனின் பதிவிலெழுதியபோது அதையுமொரு பார்ப்பனர் சாதியத்தை இழுத்ததாகப் புண்பட்டார்.இத்தகைய அறியாமைகள் இக்கட்டுரையைப் பற்றியெதைப் புரிவர்?என்றபோதும் ஆழமான பார்வைதாம்.

இளங்கோ-டிசே said...

பெயரிலி, நீங்கள் திருமாவளவன் - ராமதாஸ் எதிர்நிலைப்பாடு இப்போதைய நிலைப்பாடு குறித்து ஊடகங்கள் முன்வைக்கும் பார்வையை, எழுதியதை வாசிக்கும்போதுதான் இங்கு 'விளம்பரம்' (வாரமிருமுறை வரும் பத்திரிகையில் வெ.சா பத்திகள் எழுதுகின்றார்) வெங்கட்சாமிநாதன் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து தேர்தல்களை முன்வைத்து ஒரு பதிவு எழுதியிருந்தார். ஆரம்பத்தில் தலித்துக்கள் மீது அக்கறை இருப்பது போல எழுதி பிறகு வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல தன்ரை வழமையான நிலைப்பாட்டுக்கு வந்திருப்பார். முக்கியமாய் திருமாவளவனும், கிருஸ்ணசாமியும் முந்தி பகையாளிகளாக இருந்தபோது மற்றவர் பிரதேசஙகளில் (வட-தென் மாவட்டஙகள்) கால்வைப்பதில்லை என்றும், இன்று திருமாவளவன் கிருஷ்ணசாமியின் பிரதேசத்தில் கால்வைத்துக்கொண்டிருக்க கி.சாமி என்ன செய்கின்றார் என்று எழுதப்பட்டிருந்தது. இது கி.சாமி ஒழுஙகாய் இயங்கவில்லை என்பதைவிட கி.சாமியை/அவரது தொண்டர்களை உசுப்பேத்திவிடும் உத்தியில் எழுதப்பட்டிருந்தது. தலித்துக்கு யார் வந்து நல்லது செய்தாலும் இவருக்கு ஏன் வயிறெரிகிறது? கட்டுரையை வாசித்துமுடிக்கும்போது, இவருக்கு பஞ்சாயத்து தேர்தல்களில் தலித்துகளுக்கு நிகழும் கொடுமைகளைவிட, தலித்துக்களிடையே சண்டையை மூட்டிவிடுவதுதான் முக்கிய நோக்கியபோல எனக்குத் தெரிந்தது. வெ.சாமிநாதன் போன்றவர்களுக்கு இரவிக்குமார் ஒரிடத்தில் சொன்னதைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது.... தலித்துக்கள் ஏன் தலித்துக்களிடையே சண்டை பிடிக்கின்றார்கள் என்று சாதியின் மேல் நிலையில் உள்ளதாக் எண்ணிக்கொள்வோர் தலித்துக்களைப் பார்த்து கேட்கவேண்டாம். வேண்டுமென்றால் உஙகளுக்குள் அடிபட்டு இதுக்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள் என்பதைத் தான் நினைவுபடுத்தவேண்டும்.

பரி (Pari) said...

அதிலேகூட ஜெ அம்மையாரின் ஜெ ரிவியினைத் தாக்காமல், சன் ரிவியினை(யும் குங்குமத்தினையும்) மட்டுமே தொடர்ந்து சிலர் இணையத்திலே தாக்குவதற்கான காரணம்..
>>>>
இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது.
சன் டிவி உலகெங்கும் காணக்கிடைக்கிறது. ஜெயா டிவி அப்படி இல்லை. இணையத்தில் பெரும்பாலான "விமர்சகர்கள்" இந்தியாவுக்கு வெளியே இருப்பதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு. பெண்டாமீடியாவின் இணையவழிNum TV யில் ஜெயா டிவியையும் பார்த்து விமர்சனம் செய்பவர்கள் குறைவு(அறவே இல்லை?)

இந்தியாவில் இருந்து கொண்டு ஜெயா டிவி பற்றி விமர்சனம் செய்ததை இதுவரை கண்டதாக ஞாபகம் இல்லை. இரண்டு காரணங்கள் இருக்ககூடும்:
1. விமர்சிக்க ஒன்றுமில்லை
2. பார்க்கச் சகிக்கவில்லை, அதனால் பார்த்து விமர்சனம் செய்வதில்லை :-)

..இப்போது எனக்கு நேரம் சரியில்லை :))

Anonymous said...

அருமையான கட்டுரை பெயரிலி!!!!
..aadhi

-/பெயரிலி. said...

மதி, ஸ்ரீரங்கன், ஆதிரை, டிஜே பின்னூட்டங்களுக்கு நன்றி.

பிரகாஷ், குமுதம் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. பயனாளி பெயர், கடவுச்சொல் எல்லாம் போட்டுப் போக முன்னாலேயே இசை ஓடவைத்து விடுகிறது.
/ஆனால் சரியாகப் புரிந்து கொள்ளப் படாமற் போவதற்கான சாத்தியம் மிக அதிகம்/
அது சரி. இத்தனைநாள் சரியாகப் புரியப்பட்டோமல்லவா? ;-)

பரி, விடமாட்டீங்களே; காகத்துக்கு அதன் நடைதான் ஒழுங்காக வரும் ;-) சொந்தத்துட்டு குடுத்து இல்லையாதலால், நம்ரீவியூடே நான் ஜெ ரிவி பார்ப்பேன். ஆக, தேன்கிண்ணம், காமெடி பழசு-புதுசு, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சி அவ்வளவுதான். ராகமாலிகா பாடுகின்றவர்கள் நன்றாக இருந்தாலுங்கூட, அதற்கு முன்னான அங்கசேஷ்டைகளும் நடத்துகிறவரின் மொழியும் வெறுப்பேற்றிவிடுகிறன. அவ்வளவுதான். சன்ரிவி பார்ப்பதில்லை. அதனாலே தெரியாது.

கார்த்திக், இராமலிங்கம்பிள்ளை என நாமக்கல் இராமலிங்கம்பிள்ளையைச் சொல்கிறீர்களா, அல்லது 19 ஆம் நூற்றாண்டு இராமலிங்கவள்ளலாரைச் சொல்கிறீர்களா?

நீங்கள் கேட்ட உதாரணத்துக்கு, இந்து இயக்கங்களிலே "பதவி"களிலே தலித் (பஞ்சமர்கள்) வைக்கப்படுவதினைப் பாருங்கள். எந்த அளவுக்கு அங்கே அவர்களுக்குச் சக்தி இருக்கின்றது சுதர்ஸனுக்கு, இராம. கோபாலனுக்கு இருக்குமளவுக்கு? இல்லை; ஆனால், தலித்தினை முன்னிறுத்துகிறோமென்ற அடையாளம் தேவை.

மூக்கரே, நீங்கள் உங்களுக்கு முதலிலே குறிப்பெழுதிய பரிக்குப் பதில் கொடுத்தது மாதிரியல்லவா இருக்கிறது ;-)

SnackDragon said...

நன்றி பெயரிலி,
இன்னொரு முறை வாசிப்பேன். இராமலிங்கவள்ளலாரைச் சொன்னேன்.

-/சுடலை மாடன்/- said...
This comment has been removed by a blog administrator.
-/சுடலை மாடன்/- said...

பெருமைமிகு இந்தியத்தமிழனின் சாதிய அரசியலை சிறுமையான ஈழத்தமிழர் இப்படி விமர்சிக்கலாமா :-) வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன்!

கீழ்க்கண்ட வசனங்கள் உங்களை நோக்கி வீசப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்

//பெயரிலி இரமணிக்கு,

நமஸ்காரம்.

உம் பெயரை பெயரிலி என்று மாற்றிக் கொண்டதால் ஜாதியை ஒழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தீர் என்றால் நீவிர் நீடூழி வாழ்க. உம்முடைய பெயர் இரமணித் ... தொடர்ந்திருந்தால்கூட உம்மை ஜாதி வெறியர் என்று சொல்கிற உம் தரத்துக்கு இறங்க எனக்கு விருப்பமில்லை. பெயரிலி என்று பெயர் வைத்துக் கொண்டதால் நீர் உம்முடைய ஜாதீய சிந்தனையிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டீர் என்றால் அந்த சுலபப் புரட்சி உலகெங்கும் செழிக்க என் வாழ்த்துகள்! //

என்று பேசாப் பொருளைப் பேசத்துணிந்தவரும்

// இரமணித் தேவர் அண்ணன் தமிழ்நாட்டில கூட்டணி கேக்கறதும் ஈழத்துல புலிக்கு சொம்படிக்கிறதும் ஒரே காரணத்துக்குத்தான். அண்ணனுக்கு எப்பவும் தீவிரவாதம் புடிச்ச ஒன்னு//

என்று அவரது ந(ண்)பர் சூச்சுவும் சாதியைக் கண்டுபிடித்து உங்கள் மேல் அம்புகளை வீசக்கூடும் என்று எச்சரிக்கிறேன்.

இரமணியை 'தேவர்' என்றது சும்மா நான் இட்டுக் கட்டியது, அதைக் கண்டுபிடிக்கத்தான் சூச்சு போயிருக்கிறார். அதனால்தான் சூச்சுவை கொஞ்ச நாளா ஆளைக் காணவில்லை. ஒரு வேளை சாயம் வெளுத்து விடும் என்று புதைக்கப் பட்டு விட்டாரோ என்னவோ.

பெயரிலி, இப்படியெல்லாம் மேம்போக்காக எழுதாதீர்கள், பெரியார் முதல் அ. மார்க்ஸ், அம்ஷன் குமார் வரை உங்கள் கருத்துக்களுக்கு எதிராக ஏதாவது சொல்லியிருப்பார்கள், ஆழமாகத் தோண்டி எடுத்து உங்கள் மேம்போக்கான கருத்துக்களை முறியடிப்போம்.

என் மேல் இன்னோரு கோர்ட் நோட்டீஸ் வரும் என்பதால் பயந்து இதோடு உங்களை விட்டு விடுகிறேன்.

:-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் நடை இப்போதெல்லாம் கொஞ்சம் பழகி விட்டது. இந்தப் பதிவு தெளிவாக இருக்கிறது. பின்னணி அரசியலைக் கொஞ்சம் புரிய வைத்ததற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
-செல்வராஜ்.

Thangamani said...

நல்ல பதிவு. ஆழமான விசாரணை. நடைதான் கொஞ்சம் கொஞ்சம் சிக்கலாய் இருக்கிறதென கருதுகிறேன். எளிமையாய் எழுதுவது இன்னும் அதிகமான புரிதலை என்போன்றோருக்கு ஏற்படுத்தும். நன்றிகள்.

திருமா-இராமதாஸ் இணைப்பை முடிந்த எல்லா தளங்களிலும் கேள்வியெழுப்பவும், விமர்சிக்கவும், நகைக்கவும் பதிவர்கள் தொடக்கம் பத்திரிக்கைகள் வரை அணியமாய் இருக்கும் போது மார்ச்சீய ராமும்- இந்துத்துவ சோவும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்படுவதை காணவும் மறுக்கும் கண்களை திரையிட்டிருப்பது எது? அதன் பெயர் என்ன?

இதில் இராமதாஸுக்கும்- திருமாவுக்கும் வெட்கப்பட ஒன்றுமில்லை. ஆகக் குறைந்த தளத்தில் இருவரும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் (இவர்கள் மொழியில் வியாதிகள், ஜனநாய அமைப்பில் எவ்வளவு குறையுடையோராய் இருந்தாலும் அரசியல்வாதிகள் வியாதிகளாக முடியாது. ஜனநாயகம்-அரசியல் வியாதிகள், இந்த போலித்தனம் செக்ஸில் தமிழர்களுக்கு இருக்கும் போலித்தனம் போன்று இருப்பது வியப்பாயில்லை) என்றாவது சொல்லிவிட முடியும். சிந்தாந்தச் சிங்கங்களான ராமும், சோவும் ஓட்டு கூட இல்லாத எதன் அடிப்படையில் இணைகிறார்கள்?

பெரியாரிய இயக்கங்களோடு சில கொள்கையடிப்படையில் கூட இணக்கம் காண முடியாத கம்யூனிஸ்டுகள், பெரியார்-தீண்டாமையை தொடர்ந்து கடைப்பிடிக்கும் கம்யூனிஸ்டுகள் எதன் அடிப்படையில் ராமை விமர்சனமற்று கடக்கின்றனர்?

பெரியார் பார்பனீயம் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள், வலதுசாரிகள் (இந்து இயக்கங்கள்), நடுநிலை போன்று தோன்றுகின்ற கட்சிகள் (காங்கிரஸ்) இயங்குவதாகவும், இவை ஆகக் கடைசியாக காப்பாற்ற விரும்புவது பார்பனியத்தையே என்பதை சொல்லியிருப்பார்.

காந்தியிடன் பெரியார் நடத்திய சந்திப்புகளில் ஒன்றில் கூட இதைக்குறிப்பிட்டு சாதிபற்றிய அவரது புதிய அறிதல்களுக்காகவும், முயற்சிகளுக்காகவும் அவர் காங்கிரஸில் தனிமைப்படுத்தப்படுவார் என்பதையும், அவரது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் எச்சரித்திருப்பார். காந்தியும் அதை ஒத்துக்கொண்டு சாதியொழிப்பு நடவடிக்கைகளில் அவர் பெரிய ஆதரவை, ஈடுபாட்டை மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து பெறமுடியவில்லை என்பதையும் சொல்லியிருப்பார். நடுநிலை பார்ப்பனீயவாதிகளால் ஓதுக்கப்பட்ட காந்தி வலதுசாரி பார்பனீயத்தால் கொல்லப்பட்டது வியப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல.

Anonymous said...

சங்கரபாண்டி!
ஏன் இப்போது சூச்சூவை இதற்குள் இழுக்கிறீர்கள்?
நீங்கள் என்னதான் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் அல்லது ரோசம் வரத்தக்கதாக ஏதாவது சவால் விட்டாலும் அவரால் பெயரிலியின் தளத்தில் வந்து பின்னூட்டமிட முடியாதுது முடியாது முடியாது.

ஈழநாதன்(Eelanathan) said...

தமிழக அரசியலை தெளிவாக :)விளங்கவைத்திருக்கிறீர்கள்

ஆனால் பின்னூட்டங்களைப் படித்தால் சிலர் நடை விளங்கவில்லை என்கிறார்கள் சிலர் உங்கள் பதிவுகளிலேயே இதுதான் விளங்குகிறது என்கிறார்கள்.இதுக்குப் பேசாமல் படம் போட்டிருக்கலாம்.இப்படியான கட்டுரைகளை கொஞ்சம் எளிமையாக எழுதினால் என்ன.எனக்கு விளங்கியது மற்றவர்களுக்கும் விளங்கினால்தானே அடி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும்

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.
நடையின் சிரமத்தினை உணர்வேன். பின்னூட்டமிட எழுதத்தொடங்கி விரிந்து போனது; இருந்து செப்பனிட்டு, ஒழுங்கமைக்க முடியவில்லை. அதனாலே, வாசிக்கும் சிரமம் இன்னும் அதிகமாக இருக்கலாம். வருங்காலத்தில் மாற்ற முயல்கிறேன்.

Anonymous said...

Thanks for the post.

சுந்தரவடிவேல் said...

இப்போதுதான் பார்க்கிறேன். நல்ல பதிவு. பார்ப்பனீயத்தின் வேர் புகாத இடமில்லை தமிழகத்தில். சினிமா, டி.வி, நாட்டியம், இசை, இயல்...எல்லாவற்றிலும் இதுவே கொள்கை நிறுவுதலையும் காத்தலையும் செய்கிறது. இவர்களுக்கு முதுகு சொறியும் இளையராஜாவைத் தூக்கிப் பிடிக்க முடியும் இவர்களால், காஞ்சி சுப்ரமணியன் தும்மினால் செய்தியாக்கும் இவர்களால் பார்ப்பனீயத்துக்கு எதிரான கலையம்சங்களை ஆதரிக்கவோ அல்லது தலித்துகளுக்காக உண்மையாக எழுதவோ முடியுமா? இவர்களிடம் நடுநிலையையும் மக்கட்பண்பையும் எதிர்பார்ப்பது இலவு காத்தல்தான். இவர்களை விமர்சிப்பதோடு மட்டுமே நின்றுவிடுவதும் இதிலேயே நம் சக்தியைச் செலவிடுவதும் (விரயம் செய்வதென்று சொல்ல மாட்டேன்) போதாது என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது.

arulselvan said...

அகில இந்திய தலித், வனவாசி இன மக்களை தம் வயப்படுத்த இந்துத்துவ சநாதன இயக்கங்களுக்கும், கிருத்துவ மிஷநரிகளுக்கும் இடையே ஒரு பத்துப் பதினைந்தாண்டுகளாக நாடுதழுவிய துவந்த யுத்தம் ஒன்று நடந்து வருகின்றது. அவர்களின் அடையாள அழிப்பு மிக விரைவாகவும் வீரியத்துடனும் இவ்விரு இயக்கங்களால் நடத்தப் படுகின்றன. புதுப் புனைவுகள் பல்கிப்பெருக சரியான பொருளாதார-கலாச்சாரக் களத்தை தாராள்மயமாக்கல் அமைத்துள்ளதால், வேலை இன்னும் சுலபம். தமிழகத்திலும் இதன் தாக்கங்களைப் பார்க்கலாம். இதில் 'இடைச் சாதியினரின்' பங்களிப்பு மற்றொரு சுவாரசியமான இழை. நல்ல பதிவு ரமணி.
அருள்

பத்மா அர்விந்த் said...

பெயரிலி
நல்ல பதிவு. ஒரு குலத்தில் பிறந்த ஒரு காரணத்தாலேயே அவர் எத்தனை தவறுகள் செய்திருந்தாலும் காப்பாற்ற அல்லது மறைக்க முயலுவதும், ஒரு குலத்தில் பிறக்காத ஒருவரை தவறே செய்யாத போதும் குற்றம் சாடுவதும் மிக தவறே. நான் படிக்கின்ற காலத்தில் இட ஒதுக்கீடு பற்றி வருத்தம் இருந்ததுண்டு அதுவும் கையில் பணம் இல்லாமல் கஷ்டபட்ட போது. ஆனால் மற்றவர்கள் பட்ட படும் கஷ்டத்தின் முன் இது பெரிய செய்தி இல்லை. யோசித்து பார்த்தால் இன்னமும் பார்ப்பன குலத்தில் பிறந்தவர்கள் ஒருவித குலப்பெருமை கொள்வதையும், பெண்களை இன்னமும் அடிமைப்படுத்துவதையும் காணலாம். சமீபத்தில் திருப்பதி சென்ற ஒரு பெண்ணின் கணவர் ஜீயர்களோடு சேர்ந்து சன்னிதிக்கு பல முறை செல்லவும் அதே சாயம் அவருடைய மணைவி கூட்டத்தில் 6 மணி நேரம் இருக்கவும் நேர்ந்ததை கேட்டேன். பிரம்மம் என்பதும் தெரியாமல் நோக்கமும் தெரியாமல் சடங்குகள் செய்வதும் குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்வதும் எப்போது நிற்கும்?

-/பெயரிலி. said...

சுந்தரவடிவேல், அருள், பாரி-பாலாஜி & பத்மா,
கருத்துகளுக்கு நன்றி.

சுவ,
ஒவ்வொரு சிக்கலையும் சுட்டிக்கொண்டிருப்பதிலே நேரவிரயமேற்படுமென்று கொண்டாலுங்கூட, பிரச்சனையின் வீரியத்தினைப் பொறுத்தும் பொதுவான போக்கினைத் தொகுத்துச் சுட்டியும் பதிவுகள் அவசியமென்றே நினைக்கிறேன்.

அருள்,
நிறுவனப்பட்ட மதம்சார்ந்த தாபனங்களிடையே மக்களை அணுகும்விதத்திலே வித்தியாசமுண்டென்றாலும், நோக்கிலே வேறுபாடு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

பத்மா,
'பொதுவிலே "புரியாத" சடங்குகள் பூரண சடத்துவமானவை' என்றே சொல்லிவிடலாம் ;-)

ROSAVASANTH said...

பெயரிலி இப்போதுதான் படித்தேன். சொல்ல வேண்டிய மற்றவற்றை பலர் சொல்லியிருக்கிறார்கள்.