Wednesday, June 01, 2005

குவியம் - 4



காலைவேளைகளில் என்னைக் கீறாதே;
எனக்குக் குடும்பம் இருக்கிறது; குழந்தை இருக்கிறது;
உண்ண, உடுக்க, இருக்கவென்று
உழைக்கவேண்டும்; தொழில்.

"உனக்கென்ன?" என்றா உரத்துச் சொன்னேன்?
உனக்கும் குடும்பம் இருக்கிறது; குழந்தை இருக்கிறது;
உண்ண, உடுக்க, இருக்கவென்று
உழைக்க உண்டு உனது தொழில்.

பேச்சுக்காகும் எம் பேதம், வாதம், விவாதம்;
பிள்ளைப்பாலுக்காகுமா? இல்லை, சொல்,
நாமாக்கவேண்டுமெனும் படைப்புக்காகுமா? விழலைப்
பேசிப்பேசியே பேச்சற்றுப் போனோம் இதுவரை நாம்;
இன்னும் தொடர்ந்து பேசவும் வேண்டுமா,
இந்த நாள் வேலைப்பொழுதில்?

வேலை வேளைகளில் என்னைக் கிழிக்காதே;
எனக்கு வேறு வேலை இல்லையா?
உன் கிழித்தலுக்கு மறு கிழிப்பாய்
ஒரு கவிதை கிறுக்கிப் போட.

கதைக்கென்ன, கவிதைக்கென்ன? இல்லை,
ஒரு பக்கக் கட்டுரைக்கென்ன கேடு?
காத்திருக்கலாம். நாளைக்கோ, இன்னொரு வேளைக்கோ;
என் நாளை உலைக்கு, கையில் உள்ளதுதான் வேளை.

'05 '05 யூன் 01, புத. 12:25 கிநிநே.