Friday, February 25, 2005

புனைவு - 19

கழியும் பழையது
சிகை சிரைப்பு

முதலிலே நானும் பில் வ்'போல்கனருமே மாலை 5:30 இற்குப் போவதாக இருந்தது. பிறகு நான் போவதாகக் கூறி வழக்கம்போலவே போகாமல் வந்து ஏதேனும் சாட்டுச் சொல்வேன் என்ற எண்ணத்திலே என் மனைவி தானும் வருவேன் என்றாள்; அதனால், மாலைநேரம் கொஞ்சம் தாமதித்து, 6:00 இற்குப் போனோம்.

சிகை சிரைப்பதொன்றும் பெரிய வேலை இல்லைத்தான்; ஆனால், என்னைத் தலைமயிர் வெட்டவைக்கின்றது என்பது என்னைச் சார்ந்தோருக்கு ஒரு பெரும் மலையை மல்லாக்கப் புரட்டும் விடயம். அவனவன் தலையிலே புல்வெளி வறண்டு கொண்டே மேலேறித் தரிசு நிலப்பரப்பு விரிகிறதென்று கவலைப்படும்காலங்களிற்கூட, நான் 'சூப்பின பனங்கொட்டை,' 'கபூலிவாலா,' 'கொலிவாக்' என்று பலவிதமான பட்டப்பெயர்களுக்கு ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனாலும், என் சிகையின் செறிவிலே 'அவ்ரோ வெட்டு'க்கள் பற்றித் தெரியாத காலத்திலும்கூட எனக்கு ஒரு 'தலை கனத்த' பெருமை. சிலவேளைகளில், "வெட்டு வெட்டு' என்று சொல்லி அலுத்துப்போன அப்பாச்சி, நான் சனி ஞாயிறு மத்தியானங்களிலே, சாப்பாட்டுக்குப் பிறகு, 'புத்தகம் வாசிக்கின்றேன்' என்று பெயர் பண்ணிக்கொண்டு முகத்தை அந்தப் புத்தகத்தினாலே மூடிக்கொண்டு நித்திரையாகிப் போகிற நேரத்திலே, தையலியந்திரத்தினுள் இருக்கும் மாமியின் கத்திரிக்கோலோடு வந்து தாறுக்கும் மாறுக்கும் வெட்டிவிட்டுப் போய்விடுவார். எழும்பி ஒரு 'சன்னதம் ஆடிவிட்டு' என் 'ஆமிக்காரன் தொப்பியைப்' போட்டுக் கொண்டு 'செல்வி சிகை அலங்கரிக்கும் நிலைய'த்துக்குப் போனால், மோஹனதாசுக்குச் சிரிப்பு....... "என்ன தம்பி, ஆச்சி இண்டைக்கும் உன்ரை தலையிலை கீரை ஆஞ்சிருக்குப் போல"..... திரும்பப் போய், கிணற்றிலே யாராவது முதல் வாளி தண்ணீரள்ளி ஊத்தும்வரைக்கும் நின்று... பிறகு நானே அள்ளிக்குளித்து.... ஒரு ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்காற்று அநியாயச் செலவு.

ஆனால், இப்போது இந்தப்பிரச்சனை ஏதுமில்லாதபோதும், என்னைத் தலைமுடி வெட்ட வைக்க இவள் செய்கிற சித்துவேலைகள் அப்பாச்சியிலிருந்து வேறுபட்டவை.... இதைத்தான் தலைமுறை இடைவெளி என்பதோ தெரியாது. கல்யாணம் ஆகி விமானம் ஏறும் நேரத்திலும், அம்மா என் சிகைப்பற்றறுத்தல் மிகவும் கத்திரிச் சிக்கலான கைங்காரியம் என்று மருமகளிடம் சொல்லியிருந்ததாக ஒருமுறை தெரியாமல் ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்திருந்தாள். சில நோய்கள் பெண்களுக்கு வராது, ஆனால், அவர்களின் மரபணுக்களூடாக, ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் என்று பின்னே என்ன சும்மாவா மரபணு விஞ்ஞானிகள் சொன்னார்கள்? தாங்கள் மட்டும் அடியில், அடிப்பாதத்திலும் முடி தொடுகின்றதா என்று பிரம்மா விஷ்ணு போல் அளந்து கொண்டு இருக்கலாம், ஆனால், பிள்ளை புருஷன்காரன் கொஞ்சமும் வளர்க்கக்கூடாது..... தான் வேகமான ஓட்டக்காரன் என்று காட்ட கூட ஓடுகிறவனை, 'கொஞ்சம் சாவகாசமாக வெத்திலைபோட்டுக்கொண்டு நடந்துவா' என்று சொல்கிற சித்து.. பிறகு வந்த காலங்களிலே, இன்னொரு தந்திரம்... இப்போதெல்லாம், உள்ளே புல்லு விதை வைத்து மண்ணடைத்து வெளியே சாக்கினால் கரடி, குரங்கு, நாய், பூனை என்று வடிவமைக்கப்பட்ட பல பொம்மைகள் விற்கத்தொடங்கியிருக்கின்றன. நான் தலைமயிர் வெட்டுகிற அன்றைக்கு அப்படி ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு, அதற்கு ஒவ்வொருநாளும் காலையிலே தண்ணீரூற்று.... ஆக, காலையிலே கண்விழித்தால், சாளர ஓரம் என் முடிவளர் நாட்காட்டி.... தொல்லை.... மேலும், மிக அண்மையிலே "இன்றைக்கு வேலை கொஞ்சம் கூட; முடித்துப் போக முடிதிருத்தும் நிலையம் மூடிவிட்டான்" இப்படியாகச் சாட்டுகள் சொல்ல, "எனக்குக் கத்திரிக்கோலும் அந்த இலத்திரனியற்செதுக்கியும் வாங்கித்தா, நானே வெட்டிவிடுகின்றேன்" என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றாள்..... இதற்கு என் நண்பர்களின் மனைவிகள் வேறு வக்காலத்து..... வேலையில்லாத வேலிக்கு சாட்சி சொல்ல வாலில்லாத ஓணான்கள்..... நான் அவள் முகத்துக்கு நேராகவே கடுமையாகச் சொல்லிவிட்டேன், "எத்தனையோ புதுச்சாரதிகள் உழவியந்திரங்களிலே வயல் கோலிப் பார்த்திருக்கின்றேன்; இப்படிப்பட்ட விளையாட்டுகள் மட்டும் வேண்டவே வேண்டாம்."

இந்த நிலையிலேதான் என்னோடும் பில்லோடும் அவளும் வரப்போகின்றேன் என்றாள். உள்ள எரிச்சலிலே 'சரி வா' என்று இழுத்துக்கொண்டு போனேன். இங்கே நானிருக்கும் இடத்திலுள்ள பல முடிதிருத்தும் நிலையங்கள் எனக்கு ஒத்து வருகின்றதில்லை; போய்க்குந்தியவுடனேயே, 'இந்தமுறை, யூற்றா ஜாஸா, சிக்காக்கோ புல்லா' என்றோ, 'போர்ட்டிநைனேர்ஸோ செயின்ஸோ' என்று கேட்கும் சிகை அலங்கரிப்பாளர், என் அன்றைய மனநிலையை அப்படியே சிகையோடு சேர்த்துச் சிரைத்துவிடுவார். அதனால், நான் கொஞ்சம் 'நாட்டுப்புறமாக' இருக்கும் 'தெற்கத்தைய டிக்ஸி' சிகையறுப்பாரின் இடங்களுக்கே போதல் வழக்கம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தவழும் குழவி எழுத்தாளர்களுக்கு எந்த நாட்டிலும் இப்படியான பழங்காலத்துச் சிகையலங்கரிப்பு நிலையங்களிலே அவ்வவ்விடப்பண்பாட்டினை அவதானிக்கவும் கிரகித்து உள்வாங்கவும் நிரம்பவே வாய்ப்புத்தரப்படுகின்றது என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறதே அதுவாகும்.

இந்த முடிதிருத்தும் நிலையம்கூட அதிக தூரத்திலே இல்லை; வீட்டுக்கு முன்னாலிருக்கும் 'நான்கு-ஒழுங்கை' வீதியைக் கடந்து, பிறகு, 'பப்பாஜோன் ப்ட்ஸா' கடை..... நடை.... தெற்கத்தைய 'கேஜன் பர்ஹர் பப்பா-மம்மா' கடை .... நடை... (கொட்டியிருக்கும் குப்பைமீது தாவுக)....இங்கு துவிச்சக்கரவண்டி விற்றலும் பழையன வாங்குதலும் மற்றவை திருத்துதலும் செய்யப்படும் ("ஞாயிறு திறக்கப்படமாட்டாது")........ வீதியை அக்கம்பக்கம் பார்த்து, குறுக்கே கட......'கல்ஹ¥ன் பப்' (மகிழ்ச்சி மணிநேரங்கள் மாலை 4:00-8:00; 'உதை கழுதை' பியரும் மடி- நடனமாதுக்களும் உண்டு.....இன்று, 'பிக்பூப் ஹக்ஸி')......... ஒருதிசைப்பட ஒளிகசி சாளரக்கண்ணாடியூடே பார்த்தும் பாராதது போல நடை.....'ஓல் ஸ்ரேட் காப்புறுதி' முகவர், ஜிம் அப்துல்லா...... ("1981 இலே இங்கு வரமுன்னர், பாக்கிஸ்தான் பலூஸிஸ்தானிலே அகமதியா ஜிம்மினை எப்படி அழைப்பார்கள்?").... நட.....(இது உனக்குத் தேவையில்லாத கேள்வி ... முன்னாலே பார்) ......'டிக்ஸி' முடிதிருத்துநிலையம்... நுழைந்தோம்.

கடை, நடைபாதைத் தாழ்வாரத்துக்கு வலதுபுறமாக, இரண்டு பிரிவுகளாகத் தடுப்பினாலே பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலாவது (வயதுபோன) பெண்களுக்கு.... அவர்கள் மிஞ்சிய தலைமுடிகளினை நூற்கட்டைகள் போன்ற சிறு உருளைகளினாற் சுருட்டிக்கொண்ட பிறகு, ஐம்பதாம் ஆண்டுக்கால கருப்புவெள்ள 'ஹொலிவுட்' செவ்வாய்க்கிரகத்து வனிதாமணிகள் போன்று கண்ணாடிக்கோளங்களுக்கிடையே தலையை வைத்து கதிரைகளிலே உட்கார்ந்து தலையைச் சூடாக்கிக் கொள்வதைப் பார்க்கும் எவருக்கும் மின்சாரநாற்காலியூடான மரணதண்டனையை ஒழித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் உடனடியாக வந்தே தீரும்......

..... "........... நான் நம்பமாட்டேன்", "தேனே, ஜூடித்தின் ஓடிப்போன மகள், பிலொக்ஸியிலேதான் இருக்கிறாளாம்"......., "இருக்கமுடியாது; அவளை ஜக்ஸனிலே கண்டதாக ரோய்ஸ் என்னிட...."

.....அடுத்ததாக, ஆடவருக்கானதுக்குள்ளே நுழைந்தோம்; என் மனைவி "உள்ளே வரவா? இல்லை, வெளியேயே தரிக்கவா?" என்று, கடைசி நேர ஹம்லட் போல அறைவாசலிலே இழுக்காத இலட்சுமணக்கோட்டுக்கு இடது காலெடுத்து பரதம் ஆடினாள். இழுத்துக்கொண்டு, உள்ளே போக,'பாபா பொயிட்,' ஒரு கிழவருக்கு வலது தாடையில் இழுத்துக் கொண்டிருந்த சவரக்கத்தி -தரித்து - யிலிருந்த முடியைத் தோளிலே தொங்கிய துணியிலே வழித்துக் கொண்டு, 'வருக, கதிரையிலே அமர்ந்திருந்து பத்திரிகை காண்க' என்று விட்டு, தாடைக்கு மீண்டும் தாவினார்; கத்தியில் நுரையைத் தடவினார்; தேய்த்தார்; இழுத்தார்.

மேசையிலே மாசிகையும் தாளிகையும் மாதமிரு பத்திரிகையும் அறுபதாம் ஆண்டிலிருந்து முந்தநாள்வரைக்குமாக தொடர்ச்சியில்லாது, இலவச ' ஒன்றெடுத்தால் இரண்டு இனாம்' போட்டிக்கட்டங்கள் கத்திரிக்கோலே படாது கை வரிசைக்குக் கிழிக்கப்பட்டு, பின்னர், நிலம் முழுவதும் மயிரிடையே இராணுவம் புகுந்து சோதனை செய்த வீட்டுப் பொருட்களாக எறிந்து கிடந்தன. 'நஸனல் எஸ்குயரர்', 'த குளோப்,' 'த ஸ்ரார்', 'ஹோம் கார்டினிங்', 'செவன்ரீன்'....... யாரோ பிரித்தானியாவிலிருந்து 'மினக்கெட்டுக்' கொண்டு வந்து, ஒரு பிரதி - 'ஸாரா பெர்குஸ்ஹன் அன்ரூவின் மார்பகம் வெனீஸ் ஓடத்திலே வெளிச்சத்திலே வெண்மையாகத் தெரிகின்றது' என்ற தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு- 'த மிரர்' கூடக் கருணையோடு போட்டிருந்தார்கள். வானொலியிலே, லூயிஸ் ஆம்ஸ்ரோங்கின் 'ஜாஸ்' குரலிலே யாரோ ஒருவர், முதலைக்கட்லட்டுக்கு தரமான உணவுக்கடை இதுதான் என்று எதையோ சொல்லிவிட்டு, காலநிலை, வீதிவிபத்து எல்லாம் வரிசைக்குச் சொன்ன பின், தாரை தப்பட்டைகூட 'ரம்பெட்'டினார்கள். நான், ஒஸ்கார் விருதாளி, கெவின் ஸ்பேசி உண்மையிலேயே ஒருபாற்புணர்ச்சியிலே நாட்டம் கொண்டு திரிகின்றார்தானா என்று வாசிக்கத்தொடங்கினேன். சதுர அடியிலே வாழ்விடமும் சமையலறையும் கொண்ட எனது அவள், 'ஹோம் ஹார்டினிங்' இனை எடுத்து, பத்து ஏக்கரிலே ஓரிகன் வீட்டு முற்றத்துக்கு ரோஜாப்பாத்தி போடுகின்றதை மிகவும் ஆர்வத்தோடு வாசிக்கின்றது எனக்கு இடப்பக்கமாக மயிர்க்குவியல் மீதெழுந்திருந்த மெத்தை பிய்ந்த 'ஊத்தை'க்கதிரையிலே தெரிந்தது. பில், கைக்கடிகாரத்து முட்களை கண்ணாலே துரத்தித்துரத்தி ஓட்டமுடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்ததையும் நான் அறிவேன்.

தாடிக்கிழவர் எழுந்தபின்னர், பில்லைப் பார்த்த பாபாவுக்கு, பதிலாக அவன் என்னைப் பார்த்தான்; நான் 'போ' என்று கண்ணைக் காட்டினேன்; எனக்கு அருகாமையிலே வீடு; அவனுக்கு பரிசாரகராக, இரவு வேலையும் எட்டுமணிக்கு ஒரு தனிக் கல்யாண விருந்திலே இருக்கின்றதாகச் சொல்லியிருந்தான். கோடைவிடுமுறைக்கு 'யெலோ ஸ்ரோன்' தேசியப்பூங்காவுக்குப் போகின்றதற்கு பணம் சேர்க்கின்றதிலே மும்முரமாயிருக்கின்றான் என்று சொன்ன ஞாபகம். ''எம்என்பிஸி' ரிவேரேவும் மனைவியும் பிரியப்போகின்றார்கள்' என்பதை மிகவும் அக்கறையோடு வாசிக்கத் தொடங்கினேன்...... பில்லும் பாபாவும் கோரினையும் புஷ்ஷையும் அக்குவாறு ஆணிவேறாக, அவர்கள் செனட்டர் அப்பாக்கள் நடத்தைகளைக்கூட, பிய்த்துப்பிய்த்துப் பேசிக்கொண்டிருந்ததும் இடைக்கிடை இந்த விவாகமுறிவு நிகழுமா இல்லையா என்ற கயிற்றிலே தொங்கும் கதையூடாக எனக்குக் கேட்டது....அரசியல், மித்திரன்-குளோப் பத்திரிகைகள், ராணி-செவன்ரீன் சஞ்சிகைகள், திரைப்படநடிகர்கள்... நடிகைகளின் மதர்த்த மார்புகள்.... அல்லி-ஆன் கேள்வி பதில்கள்....... முடிசிரைக்கும் நிலையங்கள் எங்கும் தம் அர்த்தம் பொதுவிலே மாற்றுவதில்லை.

..... 'ஹேய்! நீதான் அடுத்தது;' பில், பாபா கிழவரிடம் ஒரு பத்து டொலரைக் கொடுத்துவிட்டு, பிறகு கூடவே மற்றைய காசுப்பை உள்ளறையிலிருந்து இரண்டு ஒரு டொலர்த்தாட்களையும் எடுத்துக் கொடுத்துவிட்டு, 'நன்றி' என்று விட்டுப் போனான். இங்கே வழக்கமாக முடி வெட்டிக்கொள்ள பன்னிரண்டு டொலரானபோதும், புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் மாலையிலே நான்கு முதல் எட்டு மணிவரை பத்து டொலராகும் என்பதாக இங்கே நான் முடி வெட்டிக்கொள்ளத் தொடங்கிய காலத்திலே இதனை எனக்கு அறிமுகப்படுத்திய மாணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். மேலும், வெளி அறிவிப்புப்பலகையிலே, கீழோ மேலோ சிறிய எழுத்துக்களிலே அவ்வாறு எழுதியிருந்தது என்று நினைவு (இப்போதெல்லாம், யார் அறிவிப்புப்பலகையைப் பார்த்து நுழைவது? கண்ணாடியூடே ஒவ்வொரு கடையுள்ளும் நிகழும் செயற்பாடுகளைக் கண்டுகொள்ளக் கவனம் செல்ல, கால்கள் தம்பாட்டிலேயே கடைக்குள்ளே கொண்டு வந்து தள்ளி நிறுத்துகிறன.) கூடவே, ஓர் இருபது வீதம் வெட்டுகின்றவர் 'மகிழ்ச்சிக்காக' இரண்டு டொலர் தாட்களைத் தள்ளவும் சொன்னார். அவ்வாறே செய்து வருகின்றேன். அமெரிக்கன் ஆனபோதும் பில்லுக்குக் கூட இந்த இடத்தை ஓர் எட்டு மாத காலம் முன்பு ஆவணியிலே அறிமுகப்படுத்தியது நான்தான்.

நான் ஏறிக் கதிரையிலே அமர்ந்தேன்; பாபா, 'அதிகமா, குறைவா, இடையா?" என்று முடியினைக் குறைக்க வேண்டிய அளவினைக் கேட்டார்; 'எனக்கு கொஞ்சமாகவே குறைக்க விழைவு; ஆனால், இவள் நான் வெட்டுகிறது மாதிரி பொய் வேலை பண்ணிக்கொண்டு வீட்டுக்கு வருகின்றேன் அல்லது கிட்டத்தட்ட குளிர் காலத்திலே இலைகிளையெல்லாம் உதிர்த்துவிட்ட கூம்பிய நெட்டைக்காட்டுமரம் மாதிரி மொட்டையடித்துக் கொண்டு வருகின்றேன் என்கிறாள்; அதனாலேயே அவளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றேன்; அவளிடமே கேட்டுக்கொள்ளூங்கள்; முடியோடு எனக்கு முடிவெட்டலுக்குப் பின்னான அவளின் தொணதொணப்பும்கூடச் சேர்ந்து குறையட்டும்" என்று நீண்டதாக நகைச்சுவையாகப் பேசுகின்றேன் என்ற எண்ணத்தோடு சொன்னேன். பாபா திரும்பி அவளிடம் அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல், 'இளம்பெண்ணே, இந்த நகரத்திலே உள்ள சுவருக்கடிக்கும் வர்ணம் விற்கும் கடைகளிலே நிறச்சாயம் வாங்கப்போகும் கணவர்மார்களிடம் கடைச்சிப்பந்திகளும்கூட, இதைப்போலவே, மனைவியிடம் இருந்து இந்த வண்ணம்தான் வேண்டும் என்று உத்தரவாதக் கடிதம் வாங்கி வரச்சொல்வதுண்டு. இல்லாவிட்டால், கணவனுக்கும் தொல்லை; கடைச்சிப்பந்திக்கும் தொல்லை; காருக்கும் ..... இப்போது ஏறியிருக்கும் விலையில் அதை ஓட்டுகிற 'காஸலீனு'க்கும் தொல்லை." - காவிப்பல் தெரியச் சிரித்தார் கிழவர்..... எனக்கென்றால் பயமாகிப்போய்விட்டது.. எந்த நேரத்திலே இவள் இதற்கொரு பெண்ணிலைப்பார்வை பார்த்து பேசி வைக்கப்போகின்றாளோ என்று..... அவள் சிரித்துக்கொண்டாள்... "இடைப்படவே வெட்டிவிடுங்கள்.' சிக்கல் இனி கிழவருக்கில்லை; இரவு எனக்குத்தான் என்று வெட்டவெளிச்சமாகித் தெரிந்தது.

கிழவர் வெட்டத்தொடங்கினார்; முன்னிலைக்கண்ணாடியின் மேலே, 'அம்மப்பா/அப்பப்பா, உங்களுடன் நான் அன்போடு இருக்கின்றேன் - சமந்தா' என்று தடித்த அட்டையிலே எழுதி, அதன் கீழே, வட்டத்தலை, இரட்டைப்பின்னல், குச்சிக்கைகாலோடு ஒரு சின்னப்பிள்ளைக் 'க்ரையான்' கிறுக்கலும் ....... "என் மகளின் மகள்; மிகவும் பொல்லாதது.... மேலே ஸெர்வபோர்ட்டிலே அவள் அம்மாவோடு இருக்கின்றது; இந்த வார இறுதிக்கு என்னையும் என் மனைவியையும் பார்க்க வரும்; அதுபோகட்டும்; நீ எந்த நாடு?" என் கொப்புளிப்பு உற்சாகம் கொஞ்சம் வடிந்தது.... இ·து ஏழாவதோ எட்டாவதோ தரம் இங்கே முடிவெட்டிக்கொள்ள வருகின்றேன்... அதே கேள்வி மூன்றாவதோ நான்காவதோ தடவை இவரிடமிருந்து.... நான்கு முறை அறிமுகத்துக்கு அப்பாலும் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாத அடையாளமில்லாத மனிதனா நான்? சமாளித்துக்கொண்டு, "போனதடவையே சொல்லியிருந்தேனே.. இலங்கை." "அப்படியா? மன்னித்துக்கொள் மகனே, நான் வயோதிகனாக மிகவும் விரைவாகவே ஆகிக்கொண்டிருக்கின்றேன்.' என்னிலே எனக்கே ஒரு வெறுப்பு ஏற்பட்டது.... நான் கூடத்தான் இன்று காலை நூல்நிலையத்திலே பார்த்துச் சிரித்த சீன மாணவனை ஒளியூடுபுகவிடுகண்ணாடியூடே பார்க்கின்றவன்போல ஊடுருவி அவனுக்கப்பாலே பார்த்துக்கொண்டு சிரிக்காமல் வந்துவிட்டேன்.. என்ன நினைத்தானோ? குற்றம் அழுத்தியது...... கிறிஸ்மஸ¤க்கு வைத்த மரம் இன்னமும் ஆறு மாதங்களுக்குப் பிறகும் கழற்றப்படாமலே ஒரு மூலையிலே சாத்திக் கிடந்தது.. தூசு, 'ரெஜிபோர்·ம்' செயற்கை வெண்பனிமீது அழுக்காகப் படிந்துபோய் அறைக்கு ஒரு இருட்தன்மையைத் தந்ததுவாய் அதைப் பார்த்தபிறகு எனக்குப்பட்டது. மேசையிலே பலபல வடிவங்களிலும் அளவுகளிலும் சீப்புகளும் தண்ணீர்க்குடுவையியுள்ளேயிருந்து நீரை பூவிசிறியாக, அழுத்தத் தெறிக்க வைக்கும் ஹ¥க்காக் குழாய்களும்.....

.....கிழவர் ஏதும் பேசுவதாகத் தெரியவில்லை..... அவரின் மனதை என் பதில் புண்படுத்தியிருக்கக்கூடுமோ? ஏதாவது நான் பேசித்தான் ஆகவேண்டும்..."கோடை காலம் ஆரம்பமாகின்றதுபோலத் தெரிகின்றது... கொஞ்சம் கூடவே தலைமுடி வெட்டினாற்றான், வியர்வையின்றி தடிமன் பிடிக்காது இருக்கும்.. ஏற்கனவே சைனஸ¤டன் நான் படும்பாடு சொல்லிமாளாது..." ...பேசிவிட்டேன்... "அப்படியானால், உன் விருப்பம்போலவே, இன்னமும் குறைத்துவிடுகின்றேன்..." கிழவர் நான் சொன்னதை மிகவும் அர்த்தத்துடன் எடுத்து குரலிலே என் சைனஸ¤க்கு வருத்தம் தெரிவித்து, வெட்டும் வேகத்தை என் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு குறைத்தார். "வேண்டாம் வேண்டாம்... எப்படியும் சரியான உக்கிரமான கோடை எறிக்கமுன்னர், மீண்டுமொரு முறை உங்களிடம் தலைமுடிவெட்ட வருவேன்தானே? அப்போது அவ்வாறு மிகவும் அளவிற் குறைத்து, பயிற்சி- இராணுவவீரர் முடிவெட்டு வெட்டிக்கொள்ளலாம்" - அவசரப்பட்டு, அதே நேரத்திலே சொல்லும் சொற்கள் ஒவ்வொன்றையும் பயனுள்ளதாக அர்த்தப்படுத்தும் வண்ணம் சொன்னேன். "ஏதேனும் சிக்கல் நிகழ்ந்துவிட்டதோ?" என்று, வாசிப்பதை நிறுத்தி ஓரளவு பதட்டத்துடன் கேட்ட அவள், எங்களிருவரினதும் ஒத்தொலித்த, "இல்லை, இல்லை; நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருக்கின்றோம்" பதிலுடன் விட்டவிடத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினாலும், அடிக்கடி தலையை உயர்த்தி உயர்த்தி எங்களைப் பார்த்தும் கொண்டாள்.

அவர் ஒரு வெள்ளையரானபோதும், அறை முழுவதும், ஐம்பது அறுபதாம் ஆண்டுக்காலப்பாடகர்களினது படங்கள், கறுப்பர்-வெள்ளையர் பேதமில்லாது, கண்ணாடி தவிர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் பெரிய அளவுகளிலே ஒட்டப்பட்டிருந்தன. அதனால், அவரோடு பேசுவதற்கு இசை ஓர் ஊடகமாக ஆகமுடியுமென்று எனக்குத் தோன்றியது; நான் கிழவரிடம் நாட்டுக்குப் புதியவனாதலால், எனக்கு கறுப்பின மக்களின் ஜாஸ் மற்றும் ப்ளூஸ், ஆத்மீக, நாட்டுப்புறப் பாடல்களினை எப்படி வகைபிரிக்கின்றார்கள் என்று சொல்லமுடியுமா என்று கேட்டுக்கொண்டேன். பிறகு, இடைக்கிடையே ஒரு கைக்கண்ணாடியினை எடுத்து என் தலைக்குப் பின்புறம் -அங்கும் இங்கும்- வெவ்வேறு இடங்களிலும் கோணங்களிலும் வைத்துக்கொண்டு, "இது சரியா? இவ்விடத்திலே இந்த அளவுடன் முடிவெட்டுதலை நிறுத்திக்கொண்டாற் போதுமானதா? இது உனக்குத் திருப்தியா, மகனே?" என்று கேட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, மிகுந்த நேரமெல்லாம் (ஒரு பத்துநிமிடநீளம்), கிழவர் நிறுத்தாத இசைச்சரித வாகனம். இடைக்கிடையே, கிட்டத்தட்ட குரலினாலே ஒத்தோரின் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுமுகமாக, மெல்லிய குரலிலே வெவ்வேறு பாடவும் செய்தார். அவள் தலையை நிமிர்த்தாது, விழிகளையும் புருவங்களையும் மேலுயர்த்தி, கூடவே சிறு இடையறா முறுவலையும் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.

இறுதியிலே, அவர் ஒரு துண்டினாலே என் புறங்கழுத்தினைத் துடைத்துக் கொண்டிருந்தபோது, "வெட்டுக்கூலி எவ்வளவு?" என்று கேட்டேன்; சாவாதானமாக, 'பன்னிரண்டு' என்றார். துணுக்கென்றிருந்தது; நெஞ்சின்மேலே போர்த்தப்பட்டு, கைகள் மேலே பரவிப் படர்ந்திருந்த (முடி உடலிலே விழுவதைத் தடுக்கும்) போர்வையின் கீழே, கைமுஷ்டிகளால், கதிரையின் இருகைப்பிடிகளிலும் ஆத்திரத்துடன், அதேநேரத்திலே அதிராமலும் ஒலியெழுப்பாமலும் தொடர்ந்து போர்வையை அவர் விலக்கும்வரையும் குத்திக்கொண்டேன். இன்று வியாழக்கிழமை மாலையாக இருக்கையிலே எப்படி பன்னிரண்டு...? கூடவே, பில், வெறுமனே ஒரு பத்து டொலர்த்தாள் கொடுத்துவிட்டு அவர் சேவைமீதுள்ள திருப்திக்காக மகிழ்ச்சியுடன் இரண்டு மேலே வைத்துப்போனதைக் கூடக் கண்டேனே..... நான் இந்த நாட்டுக்காரன் இல்லை என்பதை அறிந்து கிழவர் என்னை ஏமாற்றுகின்றாரா அல்லது என் நிறத்துக்காக எனக்கு மட்டும் இந்தக்கூலியா? .... எதுவெனத் தெரியவில்லை; சே! எவ்வளாவு என்று கேட்காமலே பத்து டொலரைக் கொடுத்துவிட்டு இரண்டு மேலே 'சந்தோஷ'த்துக்காக வைத்துவிட்டுப் போயிருக்கலாம். மேலதிகமான இரண்டு டொலர்கள் பெரிதல்ல....ஆனால், இந்த ஏமாற்றுப்படுகின்றோம் என்று அறிந்தபடியே ஏமாற்றுப்பட்டுக்கொண்டு, கையாலாகதவன் போல, 'பெரிய மனிதத்தன்மையுடன் சிறியவர்களின் கெடுதல்களை அலட்சியம் செய்து விட்டுப்போவதே என் உளப்பண்பும் செயல்வலிமையும்' என்று பொய்யாய்க் காட்டி, பன்னிரண்டு டொலரினையும் கொடுத்து மேலும் இரண்டு டொலர், 'திருப்தி உன் சேவை' என்று வைத்துவிட்டுப் போகிற ஆள் நான் என்ற பண்பும் நினைப்பும் பிறப்பிலிருந்தே எனக்கு இல்லை; அதிலும் குறிப்பாக, நான்கைந்து முறை என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபிறகும் என்னைப் பற்றிய படிமத்தை ஞாபகத்திலே ஏற்றியிருத்திக்கொள்ளாது, அதையும்கூட, "நான் கேட்டால் என்ன, நீ குறைந்தா போகப்போகின்றாய்? மீள அறிமுகப்படுத்திக்கொள்" என்ற தொனியிலே கேட்கும் ஒருவனை, அவன் வயது ஒன்றை மட்டும் காரணங்காட்டி, என்னை ஏமாற்றவிடமுடியாது; இதிலே முரண்படுவதுதான் என் நெறியும், சேரவே நீதியின் வெற்றியும் என்று எனக்குத் தெள்ளென தெளிந்தது.

பேசாமல், எழுந்து பின்காற்சட்டைப்பையிலே இருந்து, காசுப்பையினை எடுத்து எண்ணி, தனியே வெட்டுக்கூலி, பன்னிரண்டு டொலரினைக் கிழவரின் அமெரிக்க வெள்ளைக்கையிலே என் இலங்கை மண்ணிறக்கையினாலே வைத்து விட்டு, திரும்பிப் பாராமலே அவளுடன் நடந்தேன். கிழவர், பேசாமல், வாங்கி மேசை இழுப்பறைக்குள்ளே வைத்துவிட்டு, அடுத்துக் காத்திருந்தவரை அழைத்தது நான் நடக்கும்திசையிலே இருக்கும் கண்ணாடியிலே தெளிவாகத் தெரிந்தது; அவள், கூனிக் குறுகிக் கொண்டு, "அவருக்கு நீங்கள் 'டிப்ஸ்' வைக்கவில்லையே?" என்று கிசுகிசுத்தாள்... "ஏன் அவர் உன் மாமனாரா? நான் போகின்றேன்; வேண்டுமென்றால், நீ போய் பத்து டொலர் வெத்திலை பாக்குடன் தாம்பாளத்திலே வைத்துக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வா... இது மட்டும் என் ஊராயிருந்தால், அவர் நடத்தின முறைக்கு, அவருக்கு ஒரு பக்கத்துக்கு இரண்டு என்று நாலு கன்னத்திலே வைத்திருப்பேன்.' அவளுக்கு ஏதோ நடந்துவிட்டதென்று அப்போதுதான் புரிந்திருக்கவேண்டும். மௌனமாகத் தொடர்ந்தாள்; அறைக்கு வெளியே வந்து தாழ்வார ஓடையிலே நடக்கும்போது, கிழட்டுப்பாபா நடத்தின முறைக்கும் எனது சொல்லால் திருப்பி அடித்துக் கேட்கமுடியாத கையாலாகாத்தனத்துக்கும் அவளிலே கோபம் கொள்வது முறையாகாது என்பதோடு, மேலாக, கிழவர் என்னை பயன்படுத்திக்கொண்டது போலவே அவளின் நல்ல நோக்கத்தினை வந்த வீச்சிலேயே எதிர்த்திசை திருப்பி முகத்திலே அறைந்து எனது ஆத்திரத்தை தவறான முறையிலே வடிகால் செய்கின்றேன் போலத் தோன்றியது. அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தணிந்த குரலிலே நடந்ததைச் சொன்னேன். வெளியே, வாசலுக்கு வந்தபோது, முகப்பிலே ஒட்டியிருக்கும் கட்டணம் பற்றிய அறிவிப்புத்தாளினைக் கிழித்தெடுத்துக் கொண்டுபோய் அவரிடம் காட்டி ஏன் எனக்கு மட்டும் பன்னிரண்டு டொலர் என்று கேட்போமோ என்று ஒரு கணநேரவெறி; ஆத்திரத்திலே அறிவிப்புப்பலகையை நோக்கி நான் நடக்க, அவள் பயப்படுவது தெரிந்தது. பலகையை நெருங்கியபோது, அறிவிப்புப்பலகையிலே தை மாதம் முதல் சவரஞ்செய்தல் தவிர மிகுதி அனைத்துக் கட்டணங்களும் இரண்டு டொலர்களினாலே அதிகரிக்கப்பட்டதாக ஒரு புதிய அறிவிப்பு கிடந்தது. அவள் என்னைப் பார்த்துக் கொண்டு நெற்றியிலே கைவிரல்களாற் சொறிந்து கொண்டு, "பாவம் அந்தக் கிழவர்; எங்களைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியாது " என்றாள். "வாயை மூடிக்கொண்டு கிட.... அவர் பாவமென்றால், எல்லாம் தெரிந்த திரிஞானி நீ, அப்போதே கூலி கூடினதைப் பற்றி வாயை மூடிக்கொண்டிராமல் எனக்குச் சொல்லியிருக்கலாம் தானே!" - இப்போதும் கையாலாகாத்தனத்திலே அவளிலே கத்தியபோதும் எனக்கும் எங்கோ வெகுவாக உறுத்தியது... பிறகு வீட்டு வாசலை அடையும் வரை நாமேதும் பேசவில்லை. வாசலிலே கதவைத் திறக்கத் திறப்பால் அவள் குடைந்து கொண்டிருந்தபோது, "ஆனாலும், கிழவன், பில்லுக்கு மட்டும் ஏன் பத்து டொலர் எடுத்தான்?" - என்னிடமே நானோ அல்லது அவளிடம்தானோ தெரியாது, ஆயினும்- கேட்டேன். அவள், என் ஆத்திரத்துக்குப் பயந்துபோய் கொஞ்சம் தயங்கிக் கொண்டிருந்துவிட்டோ, அல்லது திறப்பு சரியாகத் துவாரத்துள்ளே துழாவாததால் அதிலே வாசல் திறக்கும்வரை கவனத்தினைச் செலுத்திவிட்டோ, நாம் கட்டிடத்துள்ளே நுழையும்போது, "யாருக்குத் தெரியும்! பில் பன்னிரண்டு குடுத்ததை நாங்கள் இரண்டுபேரும்தான் கண்டோம்; அவரும்கூட சேவைத்திருப்திக்கான உபரித்தொகை கொடுக்காமலே போயிருக்கலாம்." அவள் சொல்கின்றது ஒரு வகையிலே நியாயமாகத்தான் பட்டாலும், பில் அப்படி திருப்தித்தொகை ஆறரைக்கு ஒரு தொழிலாளிக்குத் தான் கொடுக்காமல், எட்டரைக்கு ஒரு விருந்திலே தானே பரிசாகரனாக அதையும் எதிர்பார்த்து வேலை செய்யப்போகின்றவன் அல்ல...... அவள் இரவு முழுவதும் மட்டுமல்ல, மறுநாட்காலையிலும்கூட "இதையிட்டுப் பெரிதாகக் கவலைப்படவேண்டாம்" என்று சொல்லி பல விதங்களிலே என்னை உற்சாகப்படுத்தினாள்.

அடுத்தநாள் பில்லைக் கண்டபோது, எதேச்சையாகக் கேட்பதுபோல, "பார்த்தாயா முடிவெட்ட விலையைக் கூட்டிவிட்டார்கள்?" என்று சொன்னேன்; "இப்போதா? அ·து எப்போதோ ஆண்டுத்தொடக்கத்திலே தையிலேயே கூட்டிவிட்டார்களே!" என்றான். கொஞ்சம் திக்கென்றது... முகத்தினை வேடிக்கை செய்கின்றவன் போல வைத்துக்கொண்டு, "அப்படியானால், ஏன் அந்தக்கிழவனுக்கு கணக்காக பன்னிரண்டு டொலரினை மட்டும் எண்ணி வைத்து வயிற்றிலே அடிக்கிறாய்? ஓர் இரண்டு மேலே வைத்துக் கொடுத்தால் என்ன, குறைந்தா போவாய்? நேற்றைக்கு இரவு நீ 'டிப்ஸி'லே எவ்வளவு உழைத்தாய் என்கிறதை நினைவிலே வைத்துக் கொண்டு பதிலைச் சொல்வாய் என்று நம்புகின்றேன்" என்றேன். "ஏய்! என்னை பற்றி என்ன நினைத்தாய்? போன மாசி மாதம் முடிவெட்டப்போனபோது, கூலிகூடியது முடி வெட்டியபிறகே எனக்குத் தெரியவந்தது; கையிலே இரண்டிரண்டாக மாற்றிய காசில்லை. அதே நேரம் கிழவருக்கு உபரித்தொகையாக இரண்டு டொலர் கொடுக்காமல் வரவும் மனம் ஒப்பவில்லை, அதனாலேதான் பதினாறாக வைத்துவிட்டு, அடுத்தமுறை வருகின்றபோது, பத்தை மட்டும் வெட்டக்கூலியாகத் தருகிறேன் என்று கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்; என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாய்?" கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டே சொன்னான் என்பதும் தெரிந்தது; அரசாங்கக் கடனிலே படிக்கும் வையோமிங் கிராமவிவசாயியின் மகன்.... மேலே ஏதும் நான் சமாளிக்கப் பேசுவதுகூடடாவனின் தன்மானம் என்று கருதுவதிலே தொட்டுக் கிள்ளிச் சினத்தினைக் கூட்டும் என்று பட்டது. பேசாமல் நகர்ந்தபோது, அவசியமற்றபோதும் எனக்காகப் பாடிவிட்டு, என் பன்னிரண்டு டொலர்க்காசை மேசை இழுப்பறையிலே போட்டுக்கொண்டிருந்த பாபா கிழவரின் முகத்தின் சலனவோட்டத்தையும்கூட, திரும்பிவருகையிலே நான் ஒரு கணத்திற்கேனும், முன்னாலிருந்த கண்ணாடியில் அவதானித்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன்.

அடுத்தமுறை கோடைக்கு முடிவெட்டப்போகும்போது, 'நியூயோர்க் யாங்கி'களைப் பற்றிக் கேட்டாலும் பரவாயில்லை என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு, என்னிடம் "கூடவா, குறைவா, இரண்டுக்கும் இடையா?" என்று அபிப்பிராயம் மரியாதைக்குக்கூடக் கேட்காத இன்னொரு நாகரீக முடிவெட்டு நிலையத்துக்குப் போய், பேசாமலே இருந்து அவர்கள் வெட்டியதே முடிவெட்டு என்று திரும்பி வந்தேன். அவள் அந்த முடிவெட்டு, 'என் குருவித்தலைமேலே புல்லுக்கட்டு வைத்ததுபோல', பொருந்தவில்லை என்றாள். எனக்கென்றால், 'வெட்டும் கடையோடு முடி போய் விடவேண்டும்; இரவுணவின் சுவையைக் கெடுக்கக்கூடாது' என்பதற்கேற்ப, கத்தரிக்கோலோட்டும் எல்லா முடிவெட்டும் பொருந்தமானதே என்றுமட்டும்தான் பட்டது.

ஏப்ரில் 09, '00 ஞாயிறு 19:27 மநிநே.

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

arumai.

not erumai. ;)

ஈழநாதன்(Eelanathan) said...

கண்ணில் தெரியுது வானத்தில் கொள்ளை கொண்ட ஒரு படைப்பு.

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.