Wednesday, February 23, 2005

புனைவு - 17

கழியும் பழையது
இருப்பும் இறப்பும்

அவர் செத்துப்போய்விட்டார் என்று யாரோ பேச்சு வாக்கில் எனக்குச் சொன்னார்கள். அன்று, அவர் செத்து இரண்டு கிழமைகள் என்றும் தெரியவந்தது. சிறுநீரகக்கோளாறா அல்லது இதயநோயா என்று நான் கேட்கவில்லை, இரண்டும் அவருக்கு இருந்தன என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்தும்கூட. ஒருவர் இறந்துபோனார் என்று தெரிந்தபின்னர், முன்னேபின்னே பேசியிருக்காத, எதேச்சையாக வீதியிற் சந்தித்த ஒருவரிடம், எதனால் இறந்தார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் எதுவும் அர்த்தமிருப்பதாக எனக்குப்படவில்லை. ஆனாலும், பேச்சைத் தொடர வேறெந்தப் பேசுபொருளும் இல்லாத நிலையில், அவரிடம் கேட்டேன். "வீதி விபத்து" என்றார். இறப்புக்கான காரணத்தைக் கேட்டதில் அர்த்தம் இருக்கிறதாக எனக்கு இப்போது பட்டது; எனது சோர்வான எதிர்பார்ப்பின் முகத்திலே பச்சைத்தண்ணீ£ர் அடித்தெழுப்பியதுபோல... விறுவிறுப்பாக ஒரு மாற்றுப்பதில் கிடைத்திருக்கின்றது; ...... இதயநோயாலோ சிறுநீரகக்கோளாற்றாலோ இறக்கக்கூடும் என்று எண்ணியெண்ணி எத்தனை பாதுகாப்பாக இருக்கின்றோம்....கடைசியில் ஒரு வீதி விபத்து.....உடல்நோயிலிருந்து எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்வது என்று எண்ணிக்கொண்டு புறநிகழ்வுகளை எண்ணாமல் நடந்தபோது, ஏற்பட்ட விளைவாகக் கூட இருக்கலாம்.

சொன்னவரும் நானும் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தோம்.

"அதைச் செய்யவேண்டும்" என்று அவர் செய்ய விரும்பியதாக ஒரு முறை கூறிய ஒரு விடயத்தை எனக்கு இவர் ஞாபகமூட்டிச் சொன்னபோது, எனக்கு நிம்மதியாக இருந்தது. சங்கடத்துக்குரிய மௌனக்கணங்களை உடைக்கும் தெருநாயின் குரைப்பும் கூட இனிமையானது. மிகுதிப்படி, அவர், தான் செய்யவேண்டும் என்று சொன்ன விடயத்தை அவர் வாழ்ந்தது போன்ற மேலும் இரு வாழ்க்கைக்காலத்தை அவருக்கு எவராவது வழங்கியிருந்தாலும் அவர் செய்திருப்பாரா என்பது பற்றி, சொன்னவருக்கும் எனக்கும் ஐயப்பாடு, அதிமாகவே செறிந்திருந்தது. ஆனாலும், அவர் சொன்னதை ஆமோதித்து, "அவர் அதற்காவேனும் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்கலாம்" என்று நான் விசனித்தேன்.

இறந்தவருக்கும் அவரின் இறப்பினைப் பற்றி எனக்குச் சொன்னவருக்கும் இடையில் பல பேதங்கள் இருந்திருந்தன, எனக்கும் அவருக்கும் எனக்கும் இவருக்கும் இடையில் இருந்ததை, இருப்பதைப் போலவே. கிட்டத்தட்ட அவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நின்றிருந்த காலங்களும் உண்டு என்பது எனக்கு தெரியும் என்றும் எனக்குச் சொன்னவருக்கும் தெரியும்; ஆனாலும், அடுத்த நிச்சலன நிமிடங்களின் பின்னால், தானும் செத்துப்போனவரும் சிறுவயதுமுதலே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது எனக்கு எவ்வளவு தெளிவாகத் தெரியும் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு அதனால், தனக்கு அவர் இறந்தது எந்தவளவு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதை நான் உணரக்கூடுமோ என்று கேட்டபோது, என்னால் கேட்டவருக்கு மறுப்பு சொல்லக்கூடவில்லை. அவருக்கு,இறந்தவரின் இறப்பு வரைக்கு நீடித்த இருவரிடையான பகைமையினால், இறப்புக்குத் தானும் ஏதேனும் விதத்திலே பாத்திரவாளிதான் என்று வருந்துவதில், ஒரு பிராயச்சித்தம் தேடும் நோக்கோ, அல்லது தான் வருந்துவதினால், இத்தனை வருத்தம் உள்ள தன்மீது உள்ள பகைமையினால், மற்றவர் இறந்திருக்க சாத்தியமில்லை என்று நிறுவும் நோக்கோ வெகுவாகத் தொக்கி நின்றது என்று என்னுள்ளே யோசித்துக் கொண்டேன்.

இறந்தவனின் நிமித்தம் தான் வருந்தும் ஒரு மனிதனை அவனின் உள்நோக்குக் கருதிக்கூட, எந்தவிதத்திலும் வருத்தப்பட்டவைக்கும் நோக்கு இன்னொரு மனிதனுக்கு இருக்கக்கூடாது என்று எனக்குப் பட்டது. அவரினதும் இறந்தவரினதும் நட்பினது நெருக்கத்தினை வெகுவாக, கற்பனையிலே, ஆனால் பொதுப்படையாகச் சிலாகித்துச் சொன்னேன். அ·து அவருக்கு மேலும் உற்சாகத்தினைத் தந்திருக்கவேண்டும் என்பதும் அடுத்துப்புறப்பட்ட அவரின் சொற்களிலும் அங்கபாவங்களிலும் தெளிந்திருந்தன. குறிப்பாக நான் அந்த ஊருக்கு வரும் முன்னால், அவர்கள் இருவரும் எத்துணை நட்பாக இருந்தார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்ட முனைந்தார்; இ·து ஒருவகையில் எனது வருகைதான் அவர்களின் நட்புக்குப் பங்கமாகி, ஆண்டுக்காலங்களின் பின்னர், மற்றவர் இறந்துபோக வைத்தது என்று சொல்லும் தொனியோ என்றுகூட நினைத்தேன். இறந்தவருக்கும் எனக்கும் இடையிற்கூட அத்துணை நெருக்கம் இருந்ததில்லை என்று சொல்லி, ஆனாலும், செத்துப்போனவரிடம் எத்துணை மதிப்பு (நெருங்காமல் தூரத்தே நிற்றல்) எனக்கு இருந்தது என்றும் சொல்லி, அவர்களிடையே பிரிவுக்கோ அதேநேரத்தில் அவரின் இறப்புக்கோ நான் எந்தவகையிலும் பாத்திரவாளியில்லை என்பதை ஒரே வாக்கியத்திற் சொல்லமுயற்சித்தேன்.

இ·து இறந்தவருக்கு நட்பாக இருந்தது என்னுடனான நெருக்கத்தைத் தனக்குக் குறைக்கும் என்று அவருக்குப் பட்டிருக்கலாமோ என்னவோ, தான்கூட பிற்காலத்தில், இறந்தவருடன் சற்று நெருக்கத்தினை குறைத்துத்தான் இருந்ததாகச் சொன்னார். இப்போது, அவரிடமிருந்து இறந்தவர் பற்றிய எந்த இழப்பு ரீதியான அனுபவம் தொனிந்தும் எந்தச் சொல்லும் பிறக்கவில்லை என்று எண்ணிக்கொண்டேன். இறந்தவருக்காக, இருப்பவரோடு முரண்படுவதில் ஏதும் அர்த்தமிருப்பதாக எனக்குப் படவில்லை. பிறகு, அதற்காக நான் இறந்தால் அவரும் அவர் இறந்தால் நானும் கவலைப்படுவோம் என்று தெரிந்தது. "அதுவும் தெரியும்" என்றேன்.

இறந்தவர்களைப் பற்றி அவதூறு சொல்லக்கூடாது என்றாலும், இறந்தவர் தனக்கு மிகவும் அநீதியும் துரோகமும் இழைத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார். இறந்த ஒரே மனிதரைப் பற்றி, இருப்பவர்களின் வருத்தங்கள் பலமாதிரிகளில் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்தது. அநீதி என்று அவர் கருதிய ஒவ்வொன்றைப் பற்றிச் சொன்ன பிறகும் இறந்தவரைப் பற்றி அவதூறாகத் தான் பேச விரும்பவில்லை என்பதினை நான் நன்றாக உணர்ந்து கொண்டே அவர் சொல்கின்றதைக் கேட்க வேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார். நான் செவிமடுத்துக் கேட்காமலே ஒவ்வொன்றையும் ஆமோதித்துக் கொண்டிருந்த நேரங்களில் இறந்தவர் எனக்கும் எந்தவளவிற் கெடுதலேற்படுத்த முனைந்திருக்கின்றார் என்பதை அதிகம் தெரியாத இவரிடம் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பிறகு, என் கையிலிருந்த பையுட்குளிருந்த காய்கறிகளைப் பார்த்துவிட்டு, தானும் அந்தக் காய்கறிகளினையே மிகவும் விரும்பி உண்பதாகச் சொன்னார். அவரின், மேற்சட்டையினைப் போலவே என்னிடமும் ஒரு மேற்சட்டையிருப்பதைச் சொல்லி, ஆனால், அதன் நிறம் வேறு என்பதையும் சொன்னபோது, அவர், காற்பந்தாட்டதில் எனக்கு ஈடுபாடு உண்டா என்பதை வினாவினார். அதற்கு எனது மச்சான், ஊரிலே ஒரு சிறிய காற்பந்தாட்டக்குழுவுக்குத் தலைவன் என்று அவன் பெயரைச் சொன்னபோது, அவன் தன்னுடைய நெருங்கிய நண்பனே என்று மிகவும் குதூகலித்து என் தோளிலே உரத்துத் தட்டினார். வலி எனக்குத் தெரியவில்லை. பின்னர் ஓர் அரை மணிநேரம் மழை வரும்வரைக்கும் வீதியோரத்திலே வெயிலில் நின்று இறந்தவரைத் தவிர்த்து வேறேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தோம்.

போகும்போது, சிறிது தூரம் நடந்தவர், திரும்பி, இறந்தவர் செய்ய விரும்பிய காரியத்தைச் செய்யாமல் இறந்தது தனக்கு இன்னமும் வருத்தத்தைத் தருகின்றது, இனியும் தந்து கொண்டிருக்கும் என்றும், அவர் இருந்திருந்தால் இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் நிச்சயமாக அதைச் செய்துமுடித்திருப்பார் என்றும் திரும்பத் திரும்ப இரண்டுமுறை சொன்னார்.

இறந்தவர் எத்துணை கால அவகாசம் கிடைத்தாலும் அதனைச் செய்யக்கூடியவர் இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த எனக்கும் அவர் அதற்காக உண்மையிலேயே வருந்துகின்றார் என்றே அன்றைக்கும் அதற்குப் பின்வந்த அவரைச் சந்திக்கும் காலங்களிலும் பட்டது.

'99 ஜூன் 18

No comments: