Sunday, February 20, 2005

புனைவு - 14

கழியும் பழையது
இன்று

இருட்டுக்குள்ளை விறுச்சுவிறுச்செண்டு 'கிளாக்கர்' ராசமணியரும் மயில்வாகனம் மாஸ்ரரும் எங்கடை வீட்டுக்கதவடிக்கு வந்து தட்டப்போகைக்கையில, நானும் அப்பாவும் அடிவளவுக்குள்ளை தென்னங்குத்தி ஒண்டில காத்துப்படட்டுமெண்டு குந்திக்கொண்டிருந்தம். கிளாக்கருக்கு விறிச்சுநடையர் எண்டுந்தான் அயலிலை கூப்பிடுகிறவை. சாரைப்பாம்பு ஊருற மாதிரி, கொஞ்சம் நெளிப்போட வலுவேகமா நடக்கிற ஆள் கிளாக்கர். இருட்டில இருந்ததால, அவை ரெண்டு பேரும் எங்களைக் காணேல்லைப் போலப் பட்டுது. ஓடிப்போய் அவையளைக் கூப்பிடவோ எண்டு அப்பாவிட்டைக் கேட்டன். "எங்கடை வீட்டுக்குத்தானே போகினம்? அங்கை போய்க் கதைக்கட்டுமன்; பிறகென்னத்துக்கு இந்த இருட்டுக்குள்ளை கள்ளன் ஒளியிறமாதிரி அவையின்ரை காதுக்குள்ளை ரகசியம் பேசிக் குழப்ப?" எண்டு அடிச்சுச் சொல்லிப்போட்டார்.

இவையள் வரக்குமுதல், எவ்வளவு நேரம் பேசாம இருட்டில கண்ணைக் குத்திக்கொண்டு இருந்திருப்பம் எண்டு தெரியேல்ல; திடீரெண்டு பின்னங்காலிலை எலி நன்னினதுபோல இருந்துது. துள்ளிக்கொண்டு கூவெண்டு கத்திக்கொண்டு இருட்டையும் பாராம ஒழுங்கைப்புளியடி மரத்தடிக்கு ஓடினன். அப்பா ஓடேல்ல. தென்னங்குத்தியில இருந்துகொண்டே, "எலிக்குப் பயந்ததொண்டைப் பெத்து வச்சிருக்கிறன்" எண்டு பிலமாச் சிரிச்சார். அப்பா வலுத்த துணிச்சக்காரன்தான். அதாலைதான் அம்மாவுக்குப் பயம். "இந்தாள் எல்லாத்துக்கும் முன்னுக்கு நிண்டு எப்ப ஆராரிட்டை எப்பிடியெல்லாம் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகுதோ?" எண்டு பயந்து பயந்து என்னையும் தங்கைச்சியையும் பொத்திப்பொத்தி வளர்க்கிறவ. "உவள் பொம்பிளை வளப்பையெல்லே என்ரை பொடியிலையும் சோத்தோட சேத்துத்தீத்திப்போட்டாள்" எண்டு அப்பா கொஞ்சம் மப்பேறின நேரத்திலை கவலைப்படுறவர்.

இப்பவும் வீட்டுக்குள்ளை புட்டவிக்கிற அம்மாவுக்குப் பக்கத்திலை சும்மா சுத்திக்கொண்டிருந்த என்னை, "வேலைப்பிராக்காயிருக்கிற அவவுக்குக் வீணாக் கரைச்சல் குடுக்காதை" எண்டு உறுக்கிச் சொல்லிப் போட்டுத்தான் வெளியிலை கூட்டிக்கொண்டு வந்தவர். அம்மாவின்ரை முகத்தில ஆத்திரமும் ஏலாமையும் அப்பிடியே கொப்பிளிச்சுக்கொண்டிருந்தது. "உன்ரை அப்பராலதான் இப்பிடிக்கரைச்சல் எண்டால், பிறகு உன்ரை அண்ணன்காரன், இப்ப நீயருத்தன் வேறை புதுசாய் அந்தாளை உரிச்சுவச்சபடி நிண்டாடிக்கொண்டிருக்கிறாய்" எண்டு இண்டைக்குப் பின்னேரமும் எனக்கு நல்ல ஏச்சு. அண்ணை, தொண்ணூத்தியாறில, ஏஎல் எடுத்தப்பிறகு இங்கை இருக்கமாட்டான் எண்டு தலைகுத்தி நிண்டதால, அப்பா, அம்மாவின்ரை சீதனக்காணியில கொஞ்சத்தை வித்து, ஏஜன்ஸிக்குக் காசுகட்டி, முதலிலை கொஞ்சம் அவையள் ஏமாத்தி, இழுபட்டு பிறகு, ஒரு மாதிரி கனடா போயிட்டான். இப்ப, எப்பாச்சும் கோல் வரும்; பிறகு கொஞ்சம் காசும் அனுப்புறவன். இப்ப அப்பாவின்ரை வருமானம் நிண்டுபோன நேரத்தில, மூத்தபிள்ளைதான் குடும்பத்தைக் காப்பாத்துது எண்டு அம்மாவுக்கு உள்ளுக்குக் கொஞ்சம் பெருமையும் இல்லாமலில்லை எண்டு நினைக்கிறன்.

அம்மா இண்டைக்கு என்னிலையும் அப்பாவிலையும் நல்ல ஆத்திரமாய்த்தான் இருக்கிறா எண்டு நல்லாத் தெரிஞ்சுது. நான் கேட்ட கேள்வியள் ஒண்டுக்கும் பதிலில்லை. நான் அங்கை இருக்கிறன் எண்டமாதிரியே காட்டிக்கொள்ளேல்லை. நான் கடைக்குப் போன நேரத்திலை நான் திரும்பி வந்தால் அபிராமியை வேற என்னோட கதைக்கவேண்டாம் எண்டு சொல்லிப்போட்டா போல இருக்கு. அவள் வேற நான் கூப்பிடக்கூப்பிட குசினிக்கதவுக்கு முன்னாலை ஒரு எத்து எத்தி என்னைத் தள்ளிப்போட்டு, சாப்பாட்டுமேசையிலை போயிருந்துகொண்டு, ஏதோ கொப்பியிலை எழுதிக்கொண்டிருந்தாள். இவளுக்கு வர வரத் திமிர் கூடிப்போச்சு எண்டு எனக்கு நல்லா விளங்கிப்போச்சு. முந்தியெண்டால், "அண்ணை, அண்ணை" எண்டு பின்னால திரியிறதால, சிநேகிதப்பெடியங்கள், "பட்டமும் வாலும் வருகுது" எண்டு நக்கல் அடிக்கிறவன்கள். "பின்னாலை வராதயடி" எண்டாலும் கேக்கமாட்டாள்; அம்மா வேறை, "தங்கச்சியில அன்பில்லாத சென்மம்" எண்டு ஏசிப்போட்டு, அவளையும் சேத்து நான் எங்கை போனாலும் அனுப்பிப்போடுவா. இப்ப என்னெண்டால், அவளுக்கு தானெண்ட எண்ணம். உவளுக்குப் பத்து வயசில இப்பிடி எண்ணமெண்டால், பதின்மூண்டுவயசுக்காரான் எனக்கு எப்படியிருக்கும்?

இத்தனைக்கும் இண்டைக்கு அம்மா எனக்கு ஏசவேண்டி வந்ததெல்லாம் இவளாலதான். இவளுக்கு நாளைக்குப் பிறந்தநாளெண்டது எனக்கு பின்னேரம்தான் ஞாபகத்துக்கு வந்துது. அவளுக்கு, முதுகிலை தொங்கப்போடுற 'பாக்'குகளிலை நல்ல விருப்பம். முன்னமே அம்மா, அப்பா வாங்கிக்குடுத்ததோட, அண்ணை வேறை ஊருக்கு வந்து போற ஆக்களிட்டைக் கனடாவிலையிருந்து " வேற ஆற்றை கையிலையும் குடுக்கவேண்டாம்; அவள் அபிராமியின்ரை கையில மட்டும்தான் குடுத்துவிடுங்கோ" எண்டு சொல்லிக் குடுத்துவிட்டதெல்லாம் சேத்து, ஒரு ஏழு பாக் வைச்சிருக்கிறாள். நான் வேறவேறநாட்டுக்காசு சேக்கிற மாதிரி, அவளுக்குப் பாக் சேக்கிற வேலை. சிலதுகளை ஒரு முறைக்கு மேலை பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக்கொண்டு போயிருப்பாளோ எண்டுறதே கேள்விதான். அதால, இந்தமுறை அவளிட்டை இல்லாத டிசையினில நானொரு பை வாங்கிக்குடுத்தால் சந்தோசப்படுவாள் எண்டு நினைச்சன். அண்ணை எனக்குச் சைக்கிள் வாங்க அனுப்பின காசிலை கொஞ்சம் மிஞ்சியிருந்தததால, இப்பவே வாங்கினாத்தான் காலமை விடியக்கு முதலிலை அவளின்ரை தலைமாட்டிலை வைச்சால், ஆள் நித்திரையால எழும்பிப்பாக்கேக்கில வலுத்தபுழுகம் கொண்டாடுவா எண்டு நினைச்சுக்கொண்டு பான்ஸி ஸ்ரோருக்கு சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டன்.

அம்மா, "இருட்டின நேரத்தில எங்கையடா போறாய்?" எண்டு கேட்டா. அவ சில விசயத்தில ஒரு புழுகு கொண்டோடி; தங்கச்சிக்காரிக்கு பாக் வாங்க மகன் போறான் எண்ட சந்தோஷத்தில, அவளிட்டைப் போய் இப்பவே சொல்லிப்போடுவா எண்டு எனக்குத் தெரியும். அதோட, "அவன் வந்தால், நான் சொல்லிப்போட்டன் எண்டும் சொல்லிப்போடாதை" எண்டும் சொல்லக்கூடிய ஆள். அதால, அவவிட்ட போற இடத்தைச் சொல்லுற பிளான் எனக்கு இல்லை. ஆனால், பதில் சொல்லாட்டி விடக்கூடிய ஆளில்லை அம்மா." ஒரு சினேகிதப்பொடியனிட்டை ரியூசன் கொப்பி வாங்கோணும்" எண்டு சொன்னன். எங்கட அயலுக்குள்ளை, பின்னேரங்களில, சினேகிதப்பொடியங்களிட்ட ரியூசன் கொப்பி வாங்கவெண்டு போன பொடியள் எல்லாம் இயக்கத்துக்கு ஓடிப்போறது அம்மாவுக்கு நல்லாத் தெரியிறதால, அவவின்ரை முகத்திலை, நல்ல பயமும் ஆத்திரமும். "உன்ரை அப்பா மட்டும் இந்த நேரம் வீட்டில இருக்கோணும்; காலுக்குக்கீழ நல்ல பூவசரம்தடியால விளாறியிருப்பார்" எண்டு பொருமினா. நல்லகாலம், அப்பாவும் வீட்டில இல்லை. அவவைப் பாக்கப் பாவமாத்தான் இருக்கு. ஆனாலும், அவவுக்குச் சொல்லாமல், போனாத்தான் நான் நினைக்கிறமாதிரி விசயம் நடக்கும் எண்டு எனக்கு நல்லாத்தெரியும். "சும்மா இருங்கோ; நான் இயக்கத்துக்கு ஓடுற ஆளெண்டால், எப்பவோ ஓடியிருப்பனே; பெட்டை மாதிரி வளந்திருக்கிறாய் எண்டு எல்லாரும் பகிடி பண்ணப்பண்ண நான் ஊருக்குள்ளை உலாவிக்கொண்டிருக்கிறன்; எல்லாம் உங்களாலைதான்; நீங்களோ என்னவெண்டால், இயக்கத்துக்குப் போறன் எண்டு பயப்படுறியள்" எண்டு ஆத்திரமாக் கத்திப்போட்டுச் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியிலே கடைக்கு ஓடிப்போய்ச் சேரேக்கில, கிட்டத்தட்ட பன்ஸி ஸ்ரோர்ஸ்காரர் கடையை மூடிக்கொண்டிருந்தார். அம்மா, அந்த ஆத்திரத்திலதான் தொடர்ந்தும் நான் இரவு கதைக்கக் கதைக்க என்னை ஒரு பொருட்டாயே கருதாம, தன்ரை பாட்டுக்கு நான் தன்ரை சொல் கேட்கேல எண்ட ஆற்றாமையில அழுதுகொண்டு இருக்கிறா எண்டு எனக்குத் தெரிஞ்சுது.

"தம்பி, அங்காலைப்பக்கம், பொடியள் ரெண்டு டிரக்கைக் கிளப்பிப்போட்டாங்களாம். இங்கை மார்க்கட்டுப்பக்கம் கொஞ்சம் பதட்டமாய்க் கிடக்கு. அதால, இண்டைக்குக் கொஞ்சம் வெள்ளனக் கடையைப் பூட்டப்போறன்; காலமை வந்து தேவைப்பட்டதை வாங்கிக்கொண்டு போமன்" எண்டார் முதலாளி. நாளைக்கு வாங்கலாமெண்டால், ஏன் இண்டைக்கு அம்மாவோட இவ்வளவு சண்டையைப் போட்டுக்கொண்டு ஓடிவரவேண்டும்? "நான் வாங்கப்போற பையைப் பள்ளிக்கூடத்துக்குப் போகேக்கையும் வரேக்கையும் கடைக்கண்ணாடிக்குள்ளால பாத்திருக்கிறதால, உடனையே வாங்கியிட்டுப் போயிடுவன்" எண்டு முதலாளியிற்றைச் சொல்லேக்கிள்ளை என்ரை குரலில்லை ஒரு பிடிவாதம் நிண்டிருக்கவேண்டும். அவர், அரை மனசாய் "ஒரு ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வேலையை முடி" என்று சொன்னார். எனக்கு ஐஞ்சு நிமிசமும் தேவைப்படயில்லை. அவர் சொன்ன விலையைக் குடுத்து வாங்கி கொண்டு நான் கடைக்கு வெளியிலை வந்து லைற்போஸ்டிலை கட்டியிருந்த சைக்கிள் பூட்டைத் திறந்து கொண்டிருந்தபோது, மூண்டு பச்சை ஜீப்புகள் சந்தியில வந்து சடின் பிரேக் போட்டு நிற்க, ஆமியுடுப்பில்லை குதிச்சவை, படபடவெண்டு சுத்திநிண்டு சுடத்துடங்கினம். சனமெல்லாம் அங்கையும் இங்கையுமெண்டு கத்திக்கொண்டு ஓடுகினம். குண்டெல்லாம் என்னைத் துரத்துதேயெண்டு சைக்கிளை அப்பிடியே விட்டுவிட்டு பையை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு ஓடத் தொடங்கேக்கை, ஆரோ என்ரை பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கேட்டுது.

பழகின குரலெண்ட ஈர்ப்பில, கொஞ்சம் நிண்டு திரும்பிப்பார்த்தால், மூண்டு வருசத்துக்கு முன்னால, ஆமியோ பொடியளோ ஆரெண்டு ஆள் தெரியாமல் சுட்டுச் செத்த எங்கட பகுதி விதானை- என்ரை அப்பா.

'00, ஒக்ரோபர், 18.

4 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

6th sense padaththai rendaam tharam paarththa maathiri, thirumba padichchan.

Thangamani said...

I too read twice. நடைக்காகவும், அது சொல்லும் சேதிக்காகவும்.

-/பெயரிலி. said...

Sixth Sense; அப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? கதையின் முயற்சி, நிகழ்வுகளிலே பின்னுக்கிருந்து முன்னுக்குப் போகிற உத்தி சித்தி பெறுகின்றதா என்பதைக் காண்பதுமட்டுமே.

கறுப்பி said...

பெயரிலி நன்றாகவே எழுதுகின்றீர்கள். நைட் சியாமளனின் எல்லாப் படங்களையும் நான் பார்த்தேன் “சிக்ஸ்த் சென்” அளவிற்கு கச்சிதமாகப் பின்னால் சியாமளனால் படங்களைத் தரமுடியவில்லை என்று நம்புகின்றேன்.