Sunday, February 13, 2005

புனைவு

கழியும் பழையது
அவனும் அவன் எனக்குச் சொன்ன ஒரு செத்தவீட்டு நிகழ்வின் கிழவியும்

உள்ளுணர்வுக்கும் சகுனத்துக்கும் -நிச்சயமாக- வரைவிலக்கணத்தின்படி, வரைவிலக்கணத்தினை ஏற்படுத்துகின்றவர்கள் எவர் என்பதைப் பொறுத்து, நிகழ்வு-கருத்து முதல் வாதங்கள் அடிப்படையில் வித்தியாசங்கள் நிறைய உண்டு. உயிர்கள், உடமைகள் அவிந்து கொண்டிருக்கும் நாடொன்றில், காலை மூன்று மணிக்கு, மாணவர் விடுதிக் கதவொன்று அதிரத் தட்டப்படுதல், நிச்சயமாக அந்த ஆண்டு யாருக்குப் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது என்று தனக்குச் சொல்லப்படுவதற்கல்ல என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அந்த உணர்வுதான் உள்ளுணர்வு என்றால், அந்தத் தட்டலினைச் சகுனம் என்று சொல்வதா அல்லது செய்திப் பரிவர்த்தனை மொழி என்று கொள்வதா என்று வழக்கம்போல தன்னைத்தானே விதண்டாவாத கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அவனுக்கு நேரம் இருக்கவில்லை. விடுதி உணவுண்கூடத்த்துத் தொலைபேசியில் தெளிவற்ற பெண்குரல் அவனுக்கு என்பதாய்ப் பீடிப்புகைக்குள்ளாலும் குளிருக்குத் தலையை மூடிய துண்டுக்குள்ளாலும் தெரியவந்தது. மூன்று நிமிடங்களில் நான்கு மாடிகள் இறங்கி, நடைகூடத்தூடாய்(க்) க/நடந்து, திரும்ப இரண்டு மாடிகள் மாடிக்கு ஒரு நிமிடமாய் ஏறி, கிடையாய் விரிந்திருந்த கூடத்து நடைபாதையில் ஒரு நிமிடங்கள் போனதுவரை தான் என்ன எண்ணினான் என்பதை அவன் எனக்கு இன்றைக்கு வரைக்கும் சொல்லவில்லை. (அதற்காக நான் மகிழ்ச்சி அடைவதுண்டு; சொல்லியிருந்தால், எதையும் தவிர்க்காமல் முழுமையைச் சொல்லவேண்டிய குற்ற மனப்பாங்கில் இங்கே அதையும் எழுதி நேரத்தினையும் இடத்தினையும் அடைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கலாம்).

No comments: