Friday, February 18, 2005

புனைவு

கழியும் பழையது
செத்தவீடு

""சும்மா அடைஞ்சுகொண்டுதானே இருக்கிறாய்; போயிற்று வாவனடா; உனக்கும் சனத்தைச் சந்திச்சதுமாதிரி இருக்கும்" என்று அம்மா சொன்னா. வதனிக்கு அவித்துத் தோலுரித்த உருளைக்கிழங்கு கொஞ்சம் உப்பும் மிளகும் தூவிப்போட்டு நசுக்கிச் சோறு பிசைஞ்சு கொண்டு 'குசினி'க்குள்ளிருந்து 'விறாந்தை'க்குக் கடந்த அக்கா போகிறபோக்கிலே "ஓமடா" என்றாள். கூரைக்குப் போட்டிருந்த 'அஸ்பெஸ்டஸ் சீற்'றுக்களின் அலைவளைவுக்குள் வலைகட்டிய சிலந்திகளைச் 'செற்றி'யிலே படுத்திருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தவன், "பாப்பம்." ~சித்திரைக்காண்டாவனத்து வெய்யிலுக்குள்ளேயும் சிலந்திகள் எப்படிச் சூட்டு அஸ்பெஸ்டசிலே வாழ்விடம் வைத்துக்கொண்டிருக்கின்றன?~ "என்னடா பாப்பம் பாப்பம் எண்டபடி? ஊரிலை இருக்கிறகாலத்திலை முந்தியெண்டால், வீட்டிலையே இருக்கமாட்டாய். காலிலை சக்கரம் பூட்டினவன்மாதிரி சைக்கி'ளிலை ஊரளந்துகொண்டு, சாப்பிட மட்டும் வீட்டுக்கு வாறது; வந்து சாப்பிட்ட கையோட வாசிக்க ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு பாயிலை விழுந்தால், மூச்சுப்பேச்சில்லை. இருந்து அம்மா, அக்கா, தங்கைச்சி எண்டு எங்களோட கதைக்க நேரமில்லை. இப்ப என்னடாவெண்டால், வந்ததிலையிருந்து அடைக்கோழிமாதிரி வீட்டுக்குள்ளையே பதுங்கிக்கொண்டு.. அதுவும் ஆமிக்காரன் அட்டகாசம் கொஞ்சம் அடங்கிச் சனம் ஊருலகம் பாப்பமெண்டு வெளியாலை இழுத்த மூச்சை லேசாய் இறக்கி விடுற நேரம். செத்தவீடெண்டால் நாலைஞ்சு உன்ரை பழைய சிநேகிதன்மார் அறிஞ்சவங்கள் வருவாங்கள் எல்லே. போயிற்றுவாவன்ரா." "ம்ம்ம்ம்; பாப்பம்" ~சிலந்திக்குத்தான் அடிமண்டி வயித்திலை, தொடுற காலிலை சூடு தெரியாமற் கிடக்கட்டும்; இந்த எறும்புக்கென்ன 'விசர்'? சூட்டிலே கஷ்டப்பட்டு ஏறிப்போய், சிலந்தியிற்றை இந்தா 'பிடியெண்டு உயிரைக் குடுக்க?~

"செற்றியுக்குள்ளை கிடந்து என்னத்தைப் பாக்கப்போறாய்? மோட்டிலை சிலந்தியும் நுள்ளானும் எப்பிடிப் பிடிபடப்போகுதெண்டோ?"

"அதில்லை; அவங்கள் செத்தவீட்டுக்கு வந்து சொல்லயில்லை; கூப்பிடாத இடத்துக்குப் போய் முகத்தைக் காட்டினால், இவனாரடா எண்டெல்லே பாப்பாங்கள்?"
- அமெரிக்காவிலே கூட நண்பர்களின் அறிந்த அறியாத நண்பர்கள் வீட்டிலே நடக்கும் நடனவிருந்துகளுக்குக்கூட போகும் நண்பர்கள் அழைத்தால் போவதில்லை.

"எந்தக்காலத்திலை நீயிருக்கிறாய்? செத்தவீட்டுக்கு நோட்டிஸ் அடிச்சு, சனம் கூட்டிச் சொல்லிப் போற காலம் செத்துப்போய்க் கனகாலம்; எண்டைக்கு எவள் சாவாள் எண்டு நிச்சயமில்லாத நேரத்திலை; அள்ளி உடம்பெடுத்து எரிக்கமுதல் ஆர் சாவாரெண்டு அழுதும் பயந்தும் அலைஞ்சும் ஊர் திரியிற காலத்திலை, உனக்கு வெத்திலைத்தட்டெடுத்து நோட்டிஸ் அடிச்சுச்சொல்லிச் சவமெடுக்கவேண்டுமெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறாய்!..." -ஏளனம் ஒரு கடவாயிருந்து மறுகடவாய் போய் முடிய, தங்கிய குரல், "...கலியாணத்துக்கே, காலமை யோசிச்சுப் பின்னேரம் கட்டுற காலம்" என்று சொல்ல ~மெய்தான், கலியாணத்துக்கே கால் நாள் தவணைமட்டும் அம்மாவே குடுக்கிறா எண்டால், நாடு நானிருந்த நாடில்லை; அதைவிடு அங்கை பார்; சிலந்தியும் எறும்பும் கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருக்குது~ "என்ரை சிநேகிதப்பொடியங்கள் ஆர் வரப்போறாங்கள்? 'முக்கால்வாசிப்பேர் ஊருக்குள்ளை இல்லை; மிச்சப்பேரிலை ஒண்டிரண்டு பேரைத்தான் வந்த இந்த மூண்டு கிழமைக்குள்ளை ஒண்டு ரெண்டு தரக்கா எண்டாலும் காணக்கூடியதாக் கிடக்கு. அதுவும், 'வந்தான்-நிண்டான்-என்னெண்டான் -போனான்' எண்டமாதிரி. முகம் தெரியமுதல் ஆக்களைக் காணம். செல்லக்குமார் ஓஎல் பேப்பர் கரெக்ஸனோட ஊரிலை நிக்கிறதாக் கூடத்தெரியேல்லை. சரவணபவன் காலை ஒண்டு, கையிலை ஒண்டு, தோளிலை ஒண்டு எண்டு குரங்காட்டுறவன் மாதிரி செத்தவீட்டுக்கு வருவானெண்டு நினைக்கேல்லை நான்."

"எவன் வந்தாலென்ன வராட்டியென்ன? ராஜேஸ்வரன் உன்ரை சிநேகிதனெல்லே".... "ஆனால், டென்மார்க்கிலை இருக்கிறவோனடை இருபது வருசத்துக்கு முதல் படிச்சுப்போட்டு பத்து வருசத்துக்கு முதல் ஊரிலை இருந்து காணாமப்போனவனை அங்கை ஆருக்..." "சும்மா விழல் நியாயம் பேசாமல், போறதெண்டால் போ போகாட்டி இதுக்குள்ளையே கிடந்து சிலந்தியும் எறும்பும் ஓடிப்பிடிச்சு விளையாடுறது பாத்துக்கொண்டிரு.... அங்கையில்லாத சிலந்தியும் எறும்பும் இங்கே ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுறதைப் பாக்கிறதுக்குத்தானே பயந்து பயந்து பிளேனிலை பறந்து வந்தனி? எனக்கு அரிசியிலே கல்லுக் களைஞ்சு உலை வைக்கோணும்; கொஞ்சம் பிந்திச்செண்டால், உன்ரை சண்டியன் தம்பி வேலைத்தரத்து ஆத்திரத்தையெல்லாம் என்ரை தலையிலைதான் கொட்டிச் சன்னதமாடுவான்" ஆத்திரத்தோடு எழும்பினா ~ ஆத்திரம்போல எழும்பினா; இந்தப்பதிலுக்கு நான் போவன்; நான் மாறேல்லை எண்டு அவவுக்குத் தெரியும். சிலந்தி வலை சலனமின்றிக் கிடந்தது; உத்தியை மாற்றாத எறும்பு தப்பி ஓடியிருக்க வாய்ப்பில்லை. சிலந்தி நிஷ்கர்மியாய் நித்திராநிஷ்டையிலே காலொடுக்கிக் கிடந்தது.

அப்பாவின் 'ஹம்பர் சைக்கிளிலை' போகலாமோ என்று தோன்றிய எண்ணம், அதைத் தரிக்கவைக்குமிடம், சுடலைவரைக்கும் நடக்கவேண்டியிருந்தால், அந்த ஐம்பத்தேழாமாண்டு இரும்புக்கனத்தையும் இழுத்துக்கொண்டு நடக்கவேண்டிய கஷ்டம், எல்லாவற்றுக்கும் மேலாக நாலுமுழ வேட்டியைச் செருகிக்கொண்டு, கால் பிரிந்து 'துடை' தெரிகிறதைத் தவிர்க்கக் கையன்று சங்கீதவித்தைபோல, இடது 'துடை'யோடு ஒவ்வோர் உழக்கலுக்கும் தட்டித்தட்டிக்கிடக்கவேண்டிய அவலம் எல்லாம் நான்முந்தி நீமுந்தி என்று மூளைக்குள் ஊர, நடப்பது புத்திசாலித்தனமாகப் பட்டது. ஊரிலே இருந்த காலத்திலேயே செத்தவீடு கல்யாணவீடுகளுக்குப் போகிற ஆளில்லை; குடும்பப்பிரதிநிதியாக, அம்மாவோ அப்பாவோ, அம்மம்மாவோ இடத்துக்கேற்றமாதிரி முறை வைத்ததுபோல, முக்கியத்துவத்துக்கேற்றமாதிரி எண்ணிக்கை வைத்தாற்போல, போய் வந்துவிடுவார்கள். இதுவரைக்கும் ஒழுங்காகச் ஒரு சவத்தை, படம் பத்திரிகைக்கு அப்பால் பார்த்திருக்கலாமோ என்பதே சந்தேகம். கூடப்படித்த ஒரு தூரக்கிராமத்துப்பொடியன் குடல்வளரி வெடித்துச் செத்தபோது, வீட்டுப்பிரதிநிதித்துவம் அர்த்தப்படாதபோது, துவிச்சக்கரவண்டியிலே 'உல்லாசப்பயணம்' போல, எட்டு மைல்கள் பத்துப்பன்னிரண்டு நண்பர்களுடன் போய் வந்ததும் பல்கலைக்கழகத்திலே படித்தபோது, நாட்டி!ன் தென்பகுதி நண்பனொருவனின் தாய் செத்தபோது, இரவோடிரவாகப்போய் காலையோடு காலையாகத் திரும்பிவந்ததும்தான்; இரண்டிடத்திலும் விருந்தினர் உபசாரம் கிடைத்ததுடன், ஏதோ சம்பிரதாயத்துக்குச் பூவும் மலர்வளையமும் மூடிமறைத்துக் கிடந்த சவத்தை ஒரு சுற்றுச் சுற்றி, சுற்றியிருந்தவர்களைப் பார்த்துவிட்டுமட்டும் திரும்பிவந்ததுதான் மிச்சம். சவமுகம் ஞாபகப்பட வாய்ப்பில்லை. அப்பா, அம்மம்மா செத்தபோது நாட்டிலேயே இல்லை. ~சிலந்தி தின்று முடித்த எறும்பு; இறந்தது நிச்சயமானாலும், முன் கண்ட இடத்திலே இப்போதில்லை என்பதைத் தவிர அதன் இழப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை; ராஜேஸ்வரனுக்கும் சித்திரைவேலர் சவமுகமாகார்; எங்கையாவது ஒரு மதுவிடுதியிலோ அல்லது அறைக்கட்டிலின் தலையணையிலோ பூட்டனாரின் நினைப்பை வைச்சுக்கொண்டோ படத்தை வைச்சுக்கொண்டோ அழுதுகொண்டிருக்கலாம்...... இரண்டுமேயில்லாமல், 'இண்டை-நாளை இருப்பு'க்காக 'அண்டண்டைய' வேலையிலே 'மாஞ்சு கொண்டிருக்கலாம்'~

ராஜேஸ்வரன் வீட்டுக்கு முன்னாலே, பத்துப்பன்னிரண்டு சனம்; பாதிக்குமேல் கிழம்; வழக்கம்போல பக்கத்துப்பள்ளிக்கூட வாங்குக் கலாசாரம்; கூட, சித்திரவேலரின் 'அப்புக்காத்து' + 'சித்தவைத்திய'த்தகுதி + பிள்ளைபேரப்பிள்ளைகளின் தகுதி கூடப்போட்டிருந்த வளைந்தகைபிடி வலைப்பின்னற்கதிரைகள், 'செற்றி', பித்தளை வெத்திலைத்தட்டங்கள், நிறைமுத்தின கிழங்களுக்கு 'சாய்மானக்கதிரை'கள் ஊஊc¡கக் கண்ணிற் சிந்தியது, தவறணைச்சண்டையிலே, 'ஆமிச்சோதனையிலே' அடுக்கும் அமைப்பும் குழம்பின தளபாடங்கள்போல அங்குமிங்கும். வாசலுக்கு இருபுறமும் கட்டின வாழைகளிலே ஒன்று 'நிறைமாசப்பிள்ளைத்தாச்சிப்பொம்பிளை'மாதிரி மதிலைத் தலையால் தாங்கிக்கொண்டு நின்றது. மற்றது 'ரோட்டால போற வாற சனத்தைப் பேந்திப்பேந்தி முழிச்சுப்பார்த்துக்கொண்டு' கிடந்தது ~'ஒரு தொண்ணூற்றிரெண்டு வயசுக் கிழவர் செத்ததுக்காய், இந்தக் கன்னிவாழையளையும் சீனடெரகோட்டாக்கன்னியள், பிரமிட் அடிமையள் மாதிரி ஏன் காவு கொடுப்பான்?'~

"அண்ணை, சிகிரட்" - சுயமே முளைத்த பேய்க்கேள்வி வால் உடைந்தழிந்தது; சின்னப்பொடியனொருவன் "கிசுகிசு பாக்"குக்குள்ளே ஐந்தாறு வகை பெட்டிகளை விரித்துப்பிடித்தபடி, தீப்பற்றியையும் நீட்டினான். தனி வாங்கிலே அமர்ந்திருப்பது தெரிகிறது ~சுருட்டுக்கறை நுரையீரற்புற்றிலே போன கிழவரின் செத்தவீட்டிலே அமர்ந்தவுடன் 'முதலிலை பத்து வயசுப்பொடியன் கையாலை சிகிரட் முகவியளம்'. கொடுப்புச்சிரிப்பு.... 'அம்மம்மாவின்ரை அச்சு'.....கரைந்தது.

"வேண்டாம் தம்பி; நான் குடிக்கிறதில்லை"; போய்விட்டான்..... ஒரு ஐந்துநிமிடம் தலையைக் குனிந்தபடி சுட்டு-பெருகைவிரல்களை மாறிமாறித்தொடுப்பு... மாமியின் கல்யாணம் முடிந்தவுடன் 'அவவோட அவரோடு' படம்பார்க்கப்போகையிலே 'ரோட்டிலை சனம் முழுக்கண்ணும் அவையிளை பட்டு நாவூறுபடாமலிருக்கவோ அல்லது புதுசாக் கட்டினவையள் பயமில்லாமலும் பேசுறதுக்கும் இடைப்போக ஒரு மூன்றாம் ஆட்சங்கதியாகவோ துணைக்கு ஒரு சின்னப்பொடியனையும் அனுப்ப "அவள் ஒரு தொடர்கதை"யிலே இலக்காய் விரலிடுக்குளிலே தைத்துக்கொண்ட பழக்கம்.... தத்திய துரிதம் தொத்தி வேகத்தில் விரல்கள் இலக்குத் தளம்பின.... வெத்திலையைக் காண ஒரு சின்னத்தவனம்; இருபத்தைந்து வருசம் இருக்கும் கடைசியாகப் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துப்போட்டு... சிறுவன் கிழவர்களுக்கு மட்டுமே தகுமென்று தள்ளிவைத்துவிட்டான் போல. ~ நாற்பது வயதுக்குக்கீழ் 'சிகிரட்'; அறுபதுக்கு மேல் சுருட்டு; இரண்டுக்கும் இடையில் வேண்டிய சங்கதி~

கிழவர்களுக்குத் தான் பேசுபொருளாவது தெரிந்தது. மற்றவர்களின் புருவங்களும் கொஞ்சம் நெரிந்ததனதாம். ஊருக்குள் இயக்கமும் வெளிநாட்டுப்போக்குவரத்தும் கொஞ்சம் ஆரவாரமாகவே புழங்கிக்கொண்டிருக்கிற காலம்; அதுவும் நெடுங்காலச்சலனமில்தூக்கம் 'பச்சைத்தண்ணி முகத்திலை அடிச்செழுப்பிக்கலைச்சதுபோலை'.... எவர் எவரென்று எவருக்கும் தெரியாது நியாயந்தான். கொஞ்சம் நட்பைப் பரப்பப் பொதுவாய்ச் சிரித்து வைத்தால் நல்லதென்று தோன்றச் செய்தாகிவிட்டது.

உள்ளே யாரோ ஒரு கிழவி, செத்துப்போன சீமான் காப்பாரென்று தான் காத்திருந்ததாக ஒப்பனைக்கு ஒப்பாரி ஒன்றிரண்டு சொற்களிலே வைத்தடங்கியது கேட்டது; ஆறேழு ஆண்டுகள் படுத்தபடுக்கையாகிப் பேச்சுமூச்சில்லாமல் பாயிலேயே சலமும் மலமும் கழித்த சித்திரவேலர் இந்தக் கிழவியைக் காப்பாத்துவார் என்று எந்த நம்பிக்கையிலே இருந்தாள் என்று கொஞ்சம் அவளின் வசனத்துக்கு அப்படியே நிகழர்த்தம் கொடுத்துப்பார்க்கச் சிரிப்பு வந்தது; கூடவே இந்தக்காலத்திலும் சாட்டுக்கேனும் ஒரு வரி கேவியிழுத்து தழுதழுத்துச் சொல்லும் ஒரு கிழவி நம்பிக்கையோடு மீந்திருப்பது ஆச்சரியுமாகியது. நம்பிக்கை ஊருக்குள் இன்னும் மீந்திருக்கிறது. கல்யாணம் கட்டி ஓரிரு வருடங்களுட் பிரிந்துபோவதை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பேரக்குழந்தைகளைப் பெற்ற கிழவிக்கு புற்றுநோயிலே படுக்கையிலே கிடந்த முப்பது வயது மூத்த கிழவனிலே வந்து காப்பாரென்..... ஈர்ப்புகள், பிணைப்புகள் ஏற்படும் விதங்களை எண்ணக் கொஞ்சம் தெம்பாகவிருந்தது.

"தம்பி செல்லத்துரையற்றை பேரனெண்டு நினைக்கிறன்" - 'கோடன் சாரத்தோடு உள் பெனியனோடை' வாங்கருகே நகர்ந்த கிழவர்... சிரிப்பு வந்தது; "அறுபதெழுபது வயதிலை ஒரு செல்லத்துரையேனும் இல்லாத இந்த ஊர்த்தெருவொன்றைக் காட்டமுடியுமா?" எதேச்சையாக வானத்திலே பறக்கும் கொக்குக்குக் கல்லையெறியும் என்னூர்க்கிழவர். "இல்லை" இன்னாரென்று விரிகின்ற விபரத்திடையே கிழவர்கள் கூட்டம் இங்கும் விளக்கதாரி அங்குமாகச் சமரசம் செய்து இடம் நகர்ந்து கொள்கின்றார்கள்.

அமெரிக்காவைப் பற்றிய உடைந்த பிம்பங்களிடையே ஒரு வெத்திலையைக் கிள்ளிச் சீவற்பாக்கோடும் சுண்ணாம்போடும் நாக்கு விறைக்கப்போடமுடிகிறது; உடையும் தம் கருத்துப்பிம்பங்களை வலிந்தொட்ட முயல்கின்றவர்களுக்கான நோகாத-இளகாத பதில்களுக்கிடையே தனது முதிர்ச்சியை, இவர்களுக்கான இருப்புச்சமானத்தை வெற்றிலை போடும் கிரியையூடாகப் பெற்றுக்கொண்டது திருப்தியைத் தருகின்றது.

கொஞ்சம் தலையாகத் தோன்றிய கிழவர் எடுத்தெறிந்ததுபோலவோ அல்லது மிகக்கிட்டியவர்போலக்காட்டவோ சொன்னார், "உம்மடை பேரனாரும் நானும் கட்டுக்கஸ்தோட்டையிலை கடை வைச்சிருந்த நேரம், அந்த சிங்கள வடுவாக்கள் கலவரத்திலை... செல்வக்கோன் எழும்பின ஆம்பிள்ளையெல்லே...." காலத்திலும் கருத்திலும் சொல்லிலும் கவனமின்றி நாதமயப்பட்டு அலைந்து கொண்டிருந்தார்..

"அண்ணை தம்பி பிறக்கமுந்தியே கோனார் செத்தெல்லே போயிட்டார்; தம்பிக்கு பேரனைத் தெரிஞ்சிருக்க நியாயமில்லை" - தன்னைத் தாங்கப் பழையதிலே சிக்கிக்கொண்ட கிழவருக்குக் குரல் கொடுத்தவரின் இதமான 'தம்பி'க்கு ஆதாரம் அமெரிக்க இருப்பா அப்பப்பாவின் மீதான வாஞ்சையா என்று சரி வரத் தெரியவில்லை. என்ன இருந்தாலும், நன்றியோடு புன்னகித்துத் தலையாட்ட முடிந்தது. "அப்பற்றை, பேத்தியின்றை சாவுக்கும் வரேலாமற்போயிட்டிடுத்து பிள்ளைக்கு; பிறகு பிள்ளையின்ரை தம்பியன்தான் ரெண்டு பேருக்கும் நெருப்பு மூட்டினது, என்ன? " - இது தனக்கான கேள்வியா மற்றவர்களுக்கான தரவா என்று தெரியாதபோதும், சுருட்டுப்புகைக்குள்ளும் "காறாப்பின சளிக்குள்ளும்" யாரோ இரண்டு மூன்று பேர் "உச் உச் உச்ச்" கொட்டினார்கள் ~சிலந்திகளுக்குத் தம்மைத் தேடி எறும்புகள் வருமென்றது நிச்சயமாகத் தெரிகின்றது; காலை மட்டும் தம் முழுவலைகளும் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்க, உட்புலன் வெடித்துக் காத்திருக்கின்றன.

"வைத்தியரின்றை பூட்டப்பெடியன் நாலு பேர்கூட வராலாமற் போச்சாமெல்லே" - வந்த இடத்துக் காரியத்தைச் சம்பந்தம் பண்ணிச் சொல்லிவிடவேண்டும் என்றவரின் உள்ளுக்குள்ளே இருந்தது தனக்குத் தகவல் தெரியும் என்றதைச் சொல்லும் துடிப்பா, அல்லது சும்மா தந்த கொக்கோகோலா ("இப்போது ஒரேஞ் பார்லி கிரீம்சோடா குடிக்கிறவை எல்லாம் எங்கே போயிட்டினம்?"), சுருட்டு, வெத்திலைச்சங்கதிகளுக்கு இடையிலே செத்தவீட்டிலே 'ஊர்க்கதை பறையிறது' தந்த குற்றவுணர்ச்சியா என்று தெரியவில்லை.

"ஓமோம்; ராஜேஸ்வரன் வரேலாமத்தான் போச்சு; அவனுக்கு இன்னும் போய்ச்சேர்ந்த நாட்டை விட்டு வெளிக்கிட..." இவன் சொன்னதின் மீதியைக் கேட்க எவருமில்லாமல், ராஜேஸ்வரின் செத்தவருக்கு மகள் வழிப்பேரனா மகன் வழிப்பேரனா என்ற விவாதம் நடக்கின்ற அவப்போதிலே, இவன் செத்தவீட்டுக்குள்ளே பொம்பிளையள் பகுதியிலே தனக்குத் தெரிந்த எவராவதிருக்கிறார்களா என்று கண்ணால் நோண்டிக்கொண்டிருந்தான்;

"தம்பியும் படிச்சு முடிச்சு வேலையெடுத்தாச்செண்டபின்னால், இனி ஒரு கலியாணத்தைக் கட்டவேண்டியதுதானே" கேட்டவருக்கு பேத்தி யாராவது இருக்கிறாளோ, நாளைக்குச் சாதகக்கட்டை எடுத்துக்கொண்டு மூன்றாம் சிநேகிதரூடாக வீட்டுக்கு ஓலைக்கட்டிலே படை வருமோ என்று பயம் பிடித்துக் கொண்டது....

"வேலையிலே கொஞ்சம் தாக்குப்பிடித்து, பி. ஈ எடுத்த பின்னாலைதான் அதை யோசிக்கவேணும்; கொஞ்சம் ஆரம்பத்திலை கஷ்டப்பட்டுத் தாக்குப்பிடிச்சாத்தான் பின்னாலை..." - ஆறு வருடப் பழக்கத்திலே ஞாபகமறதியாக 'சார்ட்டட் எஞ்சினியர்' என்றதுக்குப் பதிலாக பி. ஈ என்று சொன்னதுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதாக, சாய்மனைக்கதிரையிலே சரிந்திருந்த கிழவர், முன்னாலே குனிந்து கேட்டார், "இவன் மூத்ததம்பியின்ரை பேரன், உம்மடை சினேகிதன் ராசேச்வரன்தான், ஒரு வெள்ளைக்காரியைக் கட்டியிருக்கிறானாமெல்லே; மெய்யே?"

வியப்பாக இருந்தவை, அருகிலேயிருந்த தனக்குத் தெரியாமல் ஊருக்குள்ளே கதை பரவியதோ, 'ராசேச்வரன்' 'வெள்ளைக்காரி'யிலை விழுந்ததோவல்ல; ஆனால், ‘வெள்ளைக்காரியிலை விழுறது எழும்பிற’தெல்லாம் இன்னமும் நெடு விசாரிப்புக்கும் குறுக்குவிசாரணைக்கும் உகந்த குற்றங்களாகவும் இழிதரப்புச்செயல்களாகவும் தக்கி நிற்பது... இவனின் தயக்க கணத்தின் பின்னே கிழவர் தொடர்ந்தார், "தம்பி சொல்லப் பயப்பிடுது போல; சிநேகிதப்பொடியனைக் காட்டிக்குடுக்கிறதெண்டு... நான் அந்தக்கால ஆளிள்ளை; எனக்கு இப்படியான முன்மாதிரியான விசயங்கள் எங்கடை சமூகத்திலை நடக்கவேண்டு...தவிர, இது ஊருக்கென்ன, மூத்ததம்பி, சித்திரவேலர் எல்லாருக்கும் தெரிஞ்ச விசயந்தா.." கிழவர் சுறாப்பிடிக்க இறால் போட்டு நெம்பிக்கொண்டிருந்தார். "முன்மாதிரி"... சிரிப்பு வந்தது... "மற்றவங்களின்ரை ஊர்க்காதலிலை எல்லாம் முன்மாதிரியாயிருந்தவர்களெல்லாம் தங்கள் வீட்டுக்காரியங்களிலே எப்படி விளக்குமாறாகச் சுழன்றார்கள் என்று காலகாலமாகத்தான் கண்டும் கேட்டும் வருகிறோமே" ~ சிலந்தி வலையே காற்றெழுப்பியாய்ச் சாமரம் வீச்சிப் பார்த்திருக்கிறீர்களோ?

-"பயமெண்டில்லை; இதிலையென்ன பயப்பட இருக்குது? ஓருயிருக்கு வேறோர் உயிரைப் பிடித்தால், நிறம் மணம் குணமெல்லாம் ஊருக்காண்டிப் பாக்கமுடியுமே; தாலியைக் கட்டுறதோ கட்டாமலே ஒரே தாழ்வாரத்திலே குளிருக்கு ஒதுங்கிறதோ ஒட்டிக்கிடக்கிறதோ அவரவர் விருப்பமேல்லே; ராஜேஸ்வரன் இருக்கிறது ஐரோப்பாவிலை; நான் இங்காலை அமெரிக்காவிலை; பள்ளிக்கூடத்திலை விட்டுப்போன தொடர்பு; பிறகு அவன் பாடென்னெண்டு எனக்குத் தெரியாது; என் பாடென்னெண்டு அவனுக்கும் தெரியாதெண்டுதான் நினைக்கிறன்" ஆத்திரமோ மேற்கொண்டு வரப்போகும் கேள்விகளிலேயிருந்து தற்பாதுகாப்போ, கொஞ்சம் பதட்டப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. ~வலையைத் தலை தொட்டபின்னர் எறும்பு சுதாகரித்துக்கொள்ளக்கூடும். அவர்கள் கொஞ்சம் அதிர்ந்திருக்கவேண்டும். நானும் என்ன மற்றவன் வீட்டுக்கதைக்குள்ளே மூக்கை விட்டு, காற்று நாற்றம், வெப்பம், வீச்சம், திசை, வேகம் சுவாசிக்காத ஆளா? அவதானமாயிருந்திருக்க வேண்டுமென்று பட்டது. "இல்லை; எங்கடை ஆக்கள் டிவோஸ் எடுத்துப்போட்டும் ஒண்டாய்க் காசுக்காய் இருக்கினம் எண்ட வெக்கக்கேட்டுக்கு வெள்ளைக்காரியோட அந்தப்பொடியன் இருந்தாலென்ன குற்றமே? அதுக்கும் முப்பத்து நாலு முப்பத்தைஞ்சு வயசிருக்காதே; தனியக் குமர் மாதிரி போன இடத்திலை அங்காலையும் இங்காலையும்! சோடி சோடியாத் திரிய இதுக்குமட்டும் ஆசையெண்டு இருக்காதே; சுப்பிரமணியமண்ணை; சித்திரவேலரே, அறுபது வயசிலை முப்பது வயசுக்காரி..." செத்தவருக்குக் தடிக்கொள்ளியும் கைமண்ணும் பிடி அரிசியும் சாட்டோட சாட்டாய் இங்கேயே சாடையாத் தூவியும் ‘அடிச்சறெஞ்சும்’ விழுகிறது தெரிந்தது.

"அண்ணை; நான் வாற கிழமை பயணம்; இண்டைக்குப் போயருக்கால், கொழும்புக்குப் போனடிச்சு ரிக்கற்றெல்லாம் கொன்பேர்ம் பண்ண வேணும்; இந்தக் கட்டிடத்திலை பிளேனடிச்ச பிறகு இந்த எயார்லைன்ஸ்காரங்கள் சும்மாவே எங்கட நிறத்துக்கும் முகத்துக்கும் கஷ்டமான பயணங்களை இன்னும் நெருக்குவாரப்படுத்தத் தொடங்கியிட்டாங்கள்; உங்களைச் சந்திக்கக்கிடைச்சது மெத்தச்சந்தோஷம்; போயிட்டு வாறன்"

நடக்க, பொந்தைத் தேடி ஊத்தையிருட்டுக்குள்ளே மூலைக்கு மூலை மூசி மூசி மோப்பம்பிடிக்கும் மூஞ்சூறுகள்போல போகிறவன் பின்புறத்தைப் பார்த்தபடியே இருக்கிறவர்களைப் புரிகிறது; இவர்களிலே ஒருத்தராவது, ஒரு வெள்ளைத்தோற்கிழவி கிடைத்தாலும், உதறிப் பாய்போட்டுச் சறுக்காத ஆளாயிருப்பார்களோ என்று திடமாகச் சொல்லமுடியவில்லை; இருக்கவும்கூடும்; இருபது நிமிடப்பேச்சுகளிலே என்னத்தைப் பற்றி அறிந்து கொள்ளமுடிந்திருக்கலாம். இனி எழும்பி நடந்து மறைகிறவனைப் பற்றி என்ன கதை நடக்குமோ என்ற பயம் அலைக்கழித்தது.

எப்படிச் சொல்வதென்று தெரியாமல், சிலந்தியையும் எறும்பையும் பார்த்துக்கொண்டிருப்பதை விட அடுத்த முறை சொல்லத்துணிவு வரலாமென்று தள்ளிப்போடாமல், விமானத்திலேறிப் போயிறங்கி, "எங்களூரிலே நானிருந்தபோது ஆபிரிக்க உடல் கொண்ட உயிரொன்றுடனான என் அமெரிக்க வாழ்க்கையைச் சொல்லவும் ஏற்கவும் துணிவும் பக்குவமும் யாருக்கும் வரவில்லை" என்று சொல்வது கஷ்டமானதென்றாலும், முன்னால் உள்ளவற்றிலே நேர்மையான முடிவாகப்பட்டது. கல்யாணப்பேச்சையும் நோக்கிவரும் பெண்களையும் தள்ளிப்போடுவதும் படரும் சிலந்தி வலைக்கான பாதைகளைத் தவிர்ப்பதும் -வாரத்திறுதி நிமிடத்தொலைபேசியிணைப்புக் கல்யாணவாதங்களை வென்றுவிட்டால்- தொலைதேசத்தே அத்துணை சிக்கலானதல்ல. அடைத்த நண்டுமட்டும் உள்நெஞ்சுக்குள் மேலேறக் கால் குறுகுறுக்கும்.

மூல எழுதுகை : ~15, மே '02, புதன் 05:05 மநிநே.
*கோகுலக்கண்ணனின் கதையொன்றை வாசித்துக்கொண்டிருந்தபோது விழுந்த கருமுளையும் கதைமுடிவும்.

No comments: