Monday, May 29, 2006

குவியம் - 28

சொல்வதெளிது; தெளிந்து சொல்லல் மிகவரிது

புலம்பெயர்நாட்டிலே கால்விரல் பாவியபொழுதிலே புலி ஆதரவாளர்களாகவும் (புலம்பெயர்ஈழப்போராளிகளென்று வாசிக்கவும்) சர்வகாலசர்வதேச மனித உரிமைக்காவலர்களாகவும் (புலி எதிர்ப்பாளர்கள் என வாசிக்கவும்) உருவாகின நிறையப் பேரைக் கண்டாகிவிட்டது. அதேநேரத்திலே, ஊரிலே பெரும் போராடிக் களைத்து ஒதுங்கிப் புலம்பெயர்ந்து ஓசையின்றி வாழும் நண்பர்களையும் காண்கிறோம். இரண்டாம்வகை நண்பர்கள் எனக்கு வாழ்விலே நிதானத்தினையும் நெறிப்பாட்டினையும் கற்றுத் தருகின்றனர். அவர்களிடமிருந்து எப்போதாவது ஊசித்துளையூடாகப் பீய்ச்சியடித்துப்போகும் சாம்பல்பூத்தணல் தெறி பழம்பொறி முதலாம்வகையினர் குறித்து வெட்கம் கொள்ளவைக்கின்றது. இவ்வெட்கம் காரணமாகி, ஈழநிலை குறித்து எதுவுமே அண்மையிலே உணர்வோடு பதிய முடிவதில்லை. சொல்வதைச் சொல்லும் சுழிக்குள்ளே ஆழ்வதும் ஆட்போர்புரிவதுமே முடிவாகிப்போகிறது; ஒரு விடலைப்பையனின் சுயதிருப்திமட்டுமே படுக்கைக்கு மிச்சமாகிறது. இவ்வயதுக்கு அஃது அநாவசியம்.

இப்பதிவு, ப. வி. ஸ்ரீரங்கன் குறித்தது. அவருக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் கொடுத்திருப்பதாகச் சுட்டியிருக்கின்றார். "ஸ்ரீரங்கனின் மனைவிக்கும் மக்களுக்கும் எவ்விதமாக ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை" என்பதை மட்டுமே சொல்லத் தெரிகின்றது. அவர் குறித்துச் சொன்ன விபரங்கள் மட்டுமே தெரிந்த நிலையிலே, நடைமுறைக்கு நம்பமுடியாதபோதுங்கூட (அவர் உருப்பெருத்த பயமும் தவறான புரிதலும் நிகழ்ந்த எதையேனும் குறித்துக் கொண்டிருக்கின்றாரோ என்று தோன்றினாலுங்கூட) நிதர்சனம் போன்ற அரைவேக்காட்டுத்தனமான செய்தித்தளங்களிலே வரும் செய்தித்தன்மையையொட்டிக் கண்டவற்றிலிருந்து, நம்பாமலுமிருக்க விருப்பமில்லை. தலையுணராது வாலாடும் நிலை இருக்குமானால், அது தலை செல்லும் திசைக்கே பங்கஞ்செய்துவிடும். நிதர்சனத்தின் முட்டாற்றனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான ஆனந்தசங்கரி குறித்த செய்திகளும் கேலியொட்டுப்படங்களும் மனிதவுரிமைக்கண்காணிப்பியின் பக்கங்சார் கோணலறிக்கைக்குப் பலம் தருவதாகப் போய்விட்ட அவலத்தினைக் காண்கிறோம்.

அதனால், ஸ்ரீரங்கனுக்கு மெய்யாகவே அச்சுறுத்தல் விடப்பட்டிருப்பின், அவரின் ஈழதேசிய அரசியல் குறித்த பார்வையோடு பெரிதும் முரண்பட்டிருந்தபோதுங்கூட, அவருக்கான அச்சுறுத்தலை - இணையத்திலே எங்கோ இருக்கை அசையாமலிருந்து கொண்டு தட்டும் என் எதிர்ப்பு எதனைப் பண்ணிவிடக்கூடுமென்ற நிலையிலுங்கூட- வன்மையாகவும் உரப்பாகவும் கண்டிக்கிறேன். அந்நிலையிலே, அவரின் இருப்பினை அவர் வாழும் நாட்டின் அரசு உறுதி செய்யும் என்பது மிகவும் வெளிப்படையானதென்றபோதுங்கூட, தமிழ்மக்கள் சமூகமும் அவருக்குத் தன் பக்கபலத்தினை உரத்து அறிவிக்கவேண்டுமெனத் தோன்றுகிறது. தமிழ்மக்களுக்கான போராளிகளென்று தம்மை அடையாளம் காட்டும் விடுதலைப்புலிகளும் மிகவும் தெளிவாக இது குறித்து விளக்கத்தினைத் தரவேண்டும்; அவர்களின் ஆதரவாளர்களின் செயற்பாடுதானெனில், அது குறித்து மிகவும் காத்திரமான நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்திலே அப்படியேதும் அவருக்கு ஊறு அவர்கள் சார்ந்தோரினாலே நடக்காதவாறு கண்டுகொள்ளவும் வேண்டும். அல்லாமலிருப்பது, புலிகளுக்கோ ஈழவிடுதலைக்கோ எதுவிதமான நன்மையினையும் புரியக்கூடிய நிலைமையல்ல. அப்படியான விளக்கத்தின் பின்னால், ஸ்ரீரங்கன் தனது கருத்தினை -அஃது எதுவாகவிருப்பினுங்கூட - தெளிவாகச் சுட்டும் நிலை ஏற்பட வேண்டும். குறிப்பாக, இஃது அவரினது தவறான புரிந்துணர்வின் வெளிப்பாடெனில், அவர் அதை வெளிப்படையாகச் சொல்லும் பாங்குள்ளவரென்பதை நான் அவரைத் தொடர்ந்து வாசித்து வருகின்றவனென்ற அளவிலே எண்ணுகிறேன்.

அதுவரை அவர் பகிரங்கமாக எழுதாதவிடத்தும், அவரின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமுகமாக, நண்பர்களோடும் பாதுகாப்புத்தரக்கூடியவர்களோடும் தொடர்புகளைத் தனிப்படப்பேணுவாரென நம்புகிறேன்.

14 comments:

Thangamani said...

ungal pathivodu mutrilumaaha udan padukiReen. Thanks.

Unknown said...

பெயரிலி., என்ன இது...?., ஏன் இப்படி?., இந்தியாவில் திருமணமாகி ஐரோப்பிய நாடு செல்ல இருந்த பெண்ணை., லட்சங்கள் கொடுத்தால்தான் நீ விமானம் ஏற முடியும் என எங்கள் வீட்டிற்கு தொலைபேசினர் சிலர் (அவ்வீட்டினர் எங்கள் தொலைபேசியை அச்சமயம் உபயோகப் படுத்திக்கொண்டிருந்தனர்(2000 ல்)., நான் வாங்கிப் பேசிய போது., எங்களைப் பற்றி முழுமையாக தெரிந்திருந்தது பேசியவருக்கு., பிறகு நாங்கள் ரவுத்திரமாக... பாதுகாப்பாக சிக்கலில்லாமல் வெளிநாடு சென்றது பெண்.


//அவருக்கான அச்சுறுத்தலை - இணையத்திலே எங்கோ இருக்கை அசையாமலிருந்து கொண்டு தட்டும் என் எதிர்ப்பு எதனைப் பண்ணிவிடக்கூடுமென்ற நிலையிலுங்கூட- வன்மையாகவும் உரப்பாகவும் கண்டிக்கிறேன். அந்நிலையிலே, அவரின் இருப்பினை அவர் வாழும் நாட்டின் அரசு உறுதி செய்யும் என்பது மிகவும் வெளிப்படையானதென்றபோதுங்கூட, தமிழ்மக்கள் சமூகமும் அவருக்குத் தன் பக்கபலத்தினை உரத்து அறிவிக்கவேண்டுமெனத் தோன்றுகிறது. தமிழ்மக்களுக்கான போராளிகளென்று தம்மை அடையாளம் காட்டும் விடுதலைப்புலிகளும் மிகவும் தெளிவாக இது குறித்து விளக்கத்தினைத் தரவேண்டும்; அவர்களின் ஆதரவாளர்களின் செயற்பாடுதானெனில், அது குறித்து மிகவும் காத்திரமான நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்திலே அப்படியேதும் அவருக்கு ஊறு அவர்கள் சார்ந்தோரினாலே நடக்காதவாறு கண்டுகொள்ளவும் வேண்டும்//

இதுவே என் கருத்தும். சீரங்கன் துணிவாக இருங்கள்., மனைவி, குழந்தைகளை அமைதிப்படுத்துங்கள்...

-/பெயரிலி. said...

அப்டிபோடு, நீங்கள் சொல்வதும் ஸ்ரீரங்கன் சொல்வதும் வேறுவேறுநிலையெனத் தோன்றுகிறது. ஸ்ரீரங்கன் சொல்வது இயக்கம்சார்ந்த பயமுறுத்துதல். நீங்கள் சொல்வது (வாசித்தது எனக்குப் புரிந்த அளவில்) நாடுகளுக்கு "ஆட்களை ஏற்றியிறக்கும்" பயணமுகவர்களின் தகிடுதித்தம். பயணமுகவர்கள் குறித்து கொஞ்சக்காலம் ஹொங்கொங்கிலே வசித்தபோது அறிந்திருந்தேன்

Unknown said...

பயணமுகவர்கள் இல்லைங்க., புலிகள் எனக் கூறிக் கொண்டு இயக்கத்திற்கு பணம் தந்தால்தான் நீங்கள் வெளிநாடு செல்ல முடியும் எனப் பேசினார்கள். பயணத்திற்காக அவர்கள் எந்த முகவரையும் அணுகவில்லை. விசா முறைப்படி அவர்கள் மாப்பிள்ளை நார்வேயிலிருந்து அனுப்பி வைக்க., டிக்கட் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்ட நிலையில், பயணத்திற்கு 10 நாட்கள் இருக்கும் போது நடந்தது இது.

-/பெயரிலி. said...

அப்டிப்போடு, இச்செய்தி எனக்குப் புதிது. அப்படியாகவிருக்கும்பட்சத்தில் என்னத்தைச் சொல்ல? :-(

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இதுபோன்ற உட்போர்கள் ஈழவிடுதலை குறித்த புரிந்துகொள்ளலில் குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.

Anonymous said...

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மிகவும் கண்டிக்கத் தக்கது. ஆனால், எனக்கென்னமோ, இது ஒரு hoax ஆக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. விடுதலைப் புலிகள் என்று சொல்லிக் கொண்டு, யாராவது ஸ்ரீரங்கன் அவர்களுக்கு, தனியஞ்சல் மூலம் தொடர்ர்ந்து மிரட்டல் விடுத்திருக்கலாம். அதை அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். அவருக்கு வந்த மறுமொழிகள் மூலம், அவர் ஐரோப்பாவில் இருக்கிறார் என்று தெரிகிறது. இலங்கையில் இருந்தால் கூடப் பரவாயில்லை. அங்கே போய் போட்டுத் தள்ளினால், எல்லாரும் சும்மா இருப்பார்களா? எல்டிடீஈக்கு பொலிடிகல் விங் எல்லாம் இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். ( எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகக் கூட இருக்கலாம், எனக்கு ஞானம் கம்மி ). அவங்க எல்லாம் மேலிடத்துக்கு அட்வைஸ் குடுக்க மாட்டாங்களோ, இந்த மாதிரி சில்லி யன வேலையில் எல்லாம் இறங்காதீர்கள்' என்று?

ஈழ விஷயம் குறித்து அரைகுறை புரிதல்களுடன் தான் இதை எழுதுகிறேன். எனவே, ஸ்ரீரங்கன் அவர்கள் எழுதியது உண்மையாக இருக்கும் பட்சத்தில், புலிகளின் இந்த அச்சுறுத்தலை, வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Anonymous said...

செல்வராஜ், பிரகாஷ்:

இது குறித்து எதையும் திட்டவட்டமாக இணையத்திலே வாசிப்பதினை வைத்து என்னாலே சொல்லமுடியவில்லை. இது குறித்து, மேலே இன்னும் ஏதாவது தெரிந்தால்மட்டுமே கருத்தினைச் சொல்லலாம்.

இதிலே தனிப்பட்ட அளவிலே எனக்கு மிகவும் குழப்பத்தினைத் தருவது என்னவென்றால், "புலிகள் கொல்லப் பயமுறுத்தியிருக்கின்றார்கள் என்று ஸ்ரீரங்கன் சொல்வதினை நம்பிக்கொண்டு வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்பதுபோன்ற தொடரைப் பயன்படுத்தினால், என்னைப் போன்றவர்கள் மனிதவுரிமைகளுக்கு எதிரானவர்களாகி விடுவோம் என்ற தொனிப்போடு கருத்தினை முன்வைக்கின்றவர்களைப் பற்றி என்ன சொல்வதென்பதுதான். "நம்பிக்கொண்டு என்ற பதத்தினைப் பயன்படுத்தக்கூடாது; ஸ்ரீரங்கன் சொல்வதுதான் இருக்கக்கூடிய ஒரே உண்மை" என்ற விதத்திலே கூறுகின்றவர்களுக்கும் இவர்கள் தாம் எதிர்ப்பதாகச் சொல்லும் புலிகளுக்கும் எதிர்ப்பதன் காரணத்தினை வைத்துப்பார்த்தால், என்ன வித்தியாசம் தேறப்போகிறது? :-(

SnackDragon said...

மூன்று நாட்கள் , இணையப்பக்கம் அதிகநேரம் செலவிட முடியவில்லை. ஸ்ரீரங்கனுக்கு மிரட்டல் வந்துள்ளது என்று எந்த வரியும் குறிப்பிட்டு வாசிக்க இல்லையாயினும், அவ்வாறு வந்திருக்கும் பட்சத்தில் பலரும் இங்கு சொன்னது போலவே எனது வன்மையான கண்டனங்களை இங்கு பதிகிறேன். புலிகள் தங்கள் உண்மையான எதிரிகளையும் பிறரையும் பிரித்துணரவேண்டும்..

Anonymous said...

சிறீலங்கா புலனாய்வுத்துறையின் முகவராகச் செயற்படும் வைகை சிறி.
Saturday, 27 May 2006
இவர்தான் வைகை சிறி தற்பொழுது யேர்மனி வூப்பெற்றால் நகரில் வசிக்கும் இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவா பழைய புளொட் உறுப்பினர். தற்பொழுது இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் யேர்மனி முகவராக செயற்பட்டு வருபவர். இலங்கையில் மாற்று குழுவில் செயற்பட்ட இவர் யேர்மனியில் நீண்டகாலமாக வசித்து வருபவர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு ஆதரவாளர்களை இனம் கண்டு சுயவிபரங்கள் மற்றும் புகைப்படங்களை வழங்குவதிலும் இவர் மும்முரமாகச் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.
குறிப்பாக யேர்மனியில் நடைபெறும் நிகழ்வுகளுக்குச் சாதாரணமாகச் சென்று மக்களோடு மக்களாக இருந்து சிறிய டிஜிற்றர் கமராக்களினால் படங்கள் எடுத்தும் பின்னுக்கு இருந்து தகவல்களைச் சேகரித்து சிறீலங்கா புலனாய்வு அமைப்புக்கு வழங்கி வருபவர். இதற்கு இவருக்கு பணமும் கிடைக்கின்றது. இவர் தற்பொழுது இனம் காணப்பட்டுள்ளார்.

யேர்மனியில் சிறீலங்கா தூதரகத்தினால் அண்மையில் மது விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் வைகை சிறீ உட்பட நொயிஸ் நகரத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் கலந்கொண்டு போதையில் இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

யேர்மனி நாட்டிலிருந்து கொண்டு இன்னொரு நாட்டுக்கு புனாய்வு வேலை செய்வது என்பது மாபெரும் குற்றமாகும். தற்பொழுது யேர்மனி புலனாய்வாளர்கள் இவர் மீது ஒரு கண் வைத்துள்ளார்கள். காலப்போக்கில் இவர் மக்கள் மத்தியில் இனம் காட்டப்படுவார்.

-/பெயரிலி. said...

மேலே இருக்கும் பின்னூட்டத்தினை அனுமதிப்பதா இல்லையா என்ற கொஞ்ச நேர உளத்தத்தளிப்பின்பின்னாலே கருத்துச்சுதந்திரம் காரணமாக அனுமதித்திருக்கிறேன்.

Jayaprakash Sampath said...

இதுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமா? அந்த அநாமதேயம் அளிப்பது , கருத்து அல்ல. தகவல்கள். அதிலும் அதிபயங்கரமான தகவல்கள். கொஞ்மேனும் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பின்னால் வெளியிட்டிருக்கலாம். ஆராய முடியவில்லை என்றால், வெளியிடாமலே இருந்திருக்கலாம்.

-/பெயரிலி. said...

பிரகாஷ், அநாமதேயத்தின் கருத்தோடு நான் முற்றிலும் முரண்படுகிறேன். ஸ்ரீரங்கன் எழுதுகின்றவற்றினை இணையத்துக்கு வரமுன்னாலேயே புலம்பெயர்ந்த சஞ்சிகைகளிலே நான் வாசித்திருக்கின்றேன். அவர் குறித்து அநாமதேயத்தின் புலம்பெயர்பூமித்"தகவல்கள்" எதனையும் நான் முற்றாக நம்பவில்லை.

ஆனால், அப்பின்னூட்டத்தினை நான் தவிர்த்துவிட்டு, மற்றைய பின்னூட்டங்களைமட்டும் விட்டால், அது பதிவின் மட்டுறுத்தினரின் செயற்பாடு என்ற நிலையிலே முறையல்ல என்றே முடிவுக்கு வந்து அனுமதித்தேன். நான் ஒத்துக்கொள்ளாத, நம்பாத "தகவல்"களைக் கொண்டிருப்பதால்மட்டும் அப்பின்னூட்டத்தினை நிறுத்தினால், தார்மீகவழுதான் எஞ்சும்.

Anonymous said...

அன்பின் பெயரிலி
நல்லா எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் சில விசயங்களை சொல்ல வேண்டும்.
அது சிரிரங்கனின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் தெரிவிப்பவர்கள் மேல் சாற்றப்படும் குற்றசாட்டு தொடர்பானது.

சிரிரங்கன் அந்த பேரில் மட்டும் எழுதுவதில்லை. கருணாநந்தன் என்ற பேரில் அவர்தான் எழுதிறார் எண்டு பலருக்கு தெரியும்.
கருணாந்தன் ஒரு டொக்டர் எண்டு சொல்லி பேருக்கு பின்னால நிறைய பட்டங்கள்கூட போட்டு தான் எழுதிறார்.
அதுமட்டுமில்லாமல் ஒருக்கா தான் தலைமை தாங்கி ஒரு மருத்துவ அணியை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு போனதாகச் சொல்லி, அப்ப தான் பார்த்த, கேட்ட சம்பவங்களெண்டு கொஞ்சத்தைச் சொல்லி புலிகளைச் சாடினார்.

ஆனா அவர் ஒரு மருத்துவருமில்லை, அப்பிடி யாழ்ப்பாணம் போகவுமில்லை.
புலிகளை எதிர்க்க இப்படியொரு பொய்யான பெயரில் பொய்களை அள்ளி விட்டுக்கொண்டு இருக்கிறார். இது வடிகட்டின அயோக்கியத்தனம் எண்டதை மறுக்க முடியுமா? கருத்தாடுவதற்குரிய எந்த நேர்மையுமில்லாமல் இப்படி அயோக்கியத் தனம் பண்ணுவது சரியா? இதற்குள், கருத்தாடுவது பற்றி மற்றவர்களுக்கு அள்ளவிடும் அறிவுரைகள் ஏராளம்.
இப்படி இன்னொரு பேரில் அவதூறான முறையில் பொய்களைச் சொல்லி புலிகளை எதிர்க்கும் ஒருவரின் மீது எப்படி நம்பகத்தன்மை வரும்?

அதுமட்டுமில்லாமல் தானே தன்னை எதிர்த்தும் ஆதரித்தும் பின்னூட்டங்கள் போட்டு விவாதம் செய்த சம்பவங்களைக் காட்டுறதெண்டா நிறைய உதாரணங்கள் அவரின்ர பதிவுகளில கிடக்கு. தாங்கள் ரெண்டு பேரும் வேற வேற ஆக்கள் எண்ட மாதிரி பின்னூட்ட / பதிவுச் சண்டை பிடிச்சதைப் பார்த்தவர்களுக்கு இவர்கள் பதிவில் தூசணப் பின்னூட்டங்கள் வருவதைக்கூட சந்தேகத்தோட தான் பார்க்கவேண்டியிருக்கும்.

மேற்படி விசயங்கள் தெரிந்தவர்களுக்கு "தன்னை புலிகள் தேடுகிறார்கள்" என்று இவர்சொன்னவுடன் அப்படியே நம்பிவிட மூளை என்ன மரத்தா போய்விட்டது?

அவர் தேடப்படுவதற்கான சாத்திய்கூறை மறுப்பதற்கில்லை. ஆனால் எழுந்த மானத்தில் நம்பாமல் சந்தேகம் தெரிவிப்பவர்கள் மீது பாவிக்கப்படும் ஒரு கருத்து வன்முறை குறித்ததே என் கேள்வி.

வன்னியன் சிரிரங்கனை ஏதோ அப்பாவி போல சித்தரிக்க முயல்கிறார். அப்படியில்லை.
மிக நுட்பமான காரியவாதி அவர். தானே இரு வேறு பெயர்களில் சண்டை போடுவதுகூட அப்பாவித்தனமெண்டு சொலுவாரோ?
இங்கிலீசில 26 எழுத்தையும் வச்சு பட்டங்களை உருவாக்கி வால்போட விட்டு ஒரு புனைபெயரில எழுதிறதும் அப்பாவித்தனமோ?
புனை பெயரில எழுதிறதொண்டும் பிரச்சினையில்லை. ஆனா அதை உண்மையாக்கி, அதுக்குள்ளால் பொய்யான தகவல்களைத் தந்து மற்றாக்களை நம்ப வைக்கிறது சுத்த அயோக்கியத்தனம்.
இந்த அயோக்கியத் தனம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த பின்னூட்டத்தை வெளியிடாமல் விட நினைச்சாலும் பிரச்சினையில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில இருக்கிற ஒருத்தருக்கான அனுதாபம் இந்த நேரத்தில சிதையிறது தொடர்பா உங்களுக்கு கரிசனை இருக்கலாம்.
ஏதோ சொல்ல வேணுமெண்டு தோணிச்சு. சொன்னேன்.