Sunday, May 21, 2006

அள்ளல் - 4




முதலில்
கெட்ட கனவொன்றில்
மரண ஓலம் கேட்டது
பிறகு வானொலிச்செய்தி
பிறகு ஒரு செய்தித்தாள்;
ஆறு பேர்
சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்
இருபத்தைந்து வீடுகள்
தரைமட்டமாக்கப்பட்டிருந்தன
ஒரு தேவாலயத்தில்
கைகள் பின்புறம்
கட்டப்பட்ட நிலையில்
பதினாறு பேர்
தலைவெட்டப்பட்டிருந்தனர்
நாட்கள் நொருங்கி நகர்ந்தன
வென்றவர்களது தொகையும்
வீழ்ந்தவர்களது தொகையும்
கூடிக்கொண்டே வர
தடித்த என் தோலுக்குள்
நான் இறுகிக்கொண்டிருந்தேன்
நைந்துபோன என்
மனிதநேயத்தை இழக்கும்வரை
இன்னமும் தம் பெற்றோரது
வருகைக்காக
எரியும் குடிசைகளுள் காத்திருக்கும்
குழந்தைகளைப் பற்றி
யோசிப்பதைக் கைவிட்டேன்.


கடந்து சென்ற குளிர்காலங்களில்
கணப்புகள் அருகே இருந்தபடி
தம் பாட்டியிடம் கேட்ட கதைகளை
மரணத்தின்போது
அவர்கள் நினைவுகூர்ந்தார்களா,
எழுத்துகளின் மாயத்தை
கற்றிருந்தார்களா அவர்கள்,
நான் தெரிந்துகொள்ள
விரும்பவில்லை.

கர்ப்பத்தின் சுமை கூடிய
பெண்களின்,
மெல்லிய உடல்கள்
அறுவடையின்போது
கதிர்களைப் போல
வெட்டிச் சாய்க்கப்பட்டபோது,
தம் கணவர்களுக்காகக்
காத்திருந்த அவ்வேளையில்
அவர்கள் சூந்தலில்
காட்டு மலர்களைச்
சூடியிருந்தார்களா,
நான் தெரிந்து கொள்ள
விரும்பவில்லை.

அவர்களோடு சேர்ந்து என்
உண்மையை எரித்தேன்
சங்கடம் தரும்
என் மானுடத் தன்மையையும்
அவர்களோடு புதைத்தேன்
நெடுநாள் கழித்து
முணுமுணுக்கத்தான் செய்தேன்
"எதற்கும் எல்லை உண்டு"
பிறகு வந்த நாள்கள்
கொலையாளிகளை
மன்னித்து விடுவித்தபோதும்
எதுவுமே நடவாதது போலத்தான்
இருக்கிறேன்

தமிழில்: அசதா
Indian Literature (205)
இதழ் 41, மே-ஜூன் 2002


-ராபின் எஸ். காங்கோம்
அதற்குமேல் ஒன்றும் இல்லை
காலச்சுவடு மொழிபெயர்ப்புக்கவிதைகள் (1994-2003)
தொகுப்பாசிரியர்: எம்.எஸ்
காலச்சுவடு பதிப்பகம்
நவம்பர், 2003
144 பக்கங்கள்

4 comments:

Sri Rangan said...

பெயரிலி,வேண்டுமென்றே எழுத்துப் பிழைகளை விட்டுள்ளீர்களா?

Anonymous said...

:-((
..aadhi

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், பின்னிரவு 1:00+; தூக்கக்கலக்கத்திலே அள்ளிப்போட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தட்டான்களைத் திருத்தியிருக்கிறேன். சில இலக்கணவழுக்கள் நூலிலேயே கிடக்கின்றன. அவற்றினை அப்படியே விட்டிருக்கிறேன்.

Anonymous said...

இதைப் படித்ததிலிருந்து (/*இன்னமும் தம் பெற்றோரது
வருகைக்காக
எரியும் குடிசைகளுள் காத்திருக்கும்
குழந்தைகள்*/) இன்னும் வெளியே வர முடியவில்லை. என்னத்தைச் சொல்வது.
:-((
...aadhi