Thursday, June 30, 2005

புனைவு - 24

கழியும் பழையது

திறப்புக்கோர்வை



முன்கதை விரிவு I, II :- கடந்த இரண்டு வருடங்கள்
---------------------------------------------

I
-
சாவிக்கொத்து என்று எல்லோராலும் வீட்டிற் செல்லமாய்
அழைக்கப்படும் திறப்புக்கோர்வையை வைத்துப் பராமரிப்பது
எப்படிப்பட்ட பொறுப்பான காரியம் என்பதை அது
கையிலகப்பட்ட ஆரம்பகாலங்களில் நான் அவ்வளவு
அறிந்திருக்கவில்லை. வீட்டுமுன்வாயில் ஒற்றைச்சாவியாய்க்
கிடைத்து, பிறகு அலுவலகவறைத் திறப்பு, மேசைச்சாவிகள்,
வீட்டு அலுமாரிச்சாவி, துவிச்சக்கரவண்டிப்பூட்டுச்சாவி என்று
நாளொரு சாவியும் பொழுதொரு திறப்பும் என்று வெவ்வேறு
அளவுகளில் வளர்ந்து -முதல் குட்டி போட்டு முழு வாரம் ஆக
முன்னாடி முழுதாய் எட்டுக்குட்டி போட்ட நாய்போல- ஒரு
திறப்புக்கோர்வை இருந்தாற்றான் ஓரளவு சமாளிக்கலாம் என்ற
நிலைமைக்கு ஆக்கிவிட்டது. அந்நேரத்திற்றான்,
சொந்தநாட்டு பட்டினங்களின்
தங்குவிடுதிப்பொறுப்பாளர்களும் குறுஞ்சிறுவர் பாடசாலை
ஆசிரியைகளும் என்ன அவதி பட்டுத்தொலைந்திருப்பார்கள்,
தொலைத்துக்கொண்டிருப்பார்கள் என்பது மனதிற்கு
வெளிச்சமானது.

சாவிகள், நண்டுக்குளுவன்களாக வளர்ந்த செய்கை எனக்கு
வயதுபோனதை அடிக்கடி எடுத்துச்சொல்லும்
அளவுச்சுட்டியாகிப் போனது. கடைசியில், என் அலுவல
அலுமாரிச்சாவியினால் அரைமணிநேரம் முயன்றும் என்
கைப்பெட்டியைத் திறக்கமுடியாதுபோய், பெட்டி செய்த
கொரியர்களின் வம்சத்தை வாயாற் துவம்சம் செய்தது
மனைவிக்குப் பொறாமல், எனக்கு வயது சரியாக
முப்பத்துமூன்றான நாள் அன்றைக்கு, ஓர் தட்டைப் பச்சை
இதயம் சங்கிலியிற் கொழுவிக்கொண்ட சாவிகள் கோர்ப்பி
வாங்கித்தந்ததோடு விட்டுவிடவில்லை. அதில், மாரியம்மன்
கோவிற்பூசாரியின் குங்குமப்பூச்சு, சமையற் பலசரக்குத்தூட்
போத்தலுக்கு வெளியே எழுதப்பட்ட "மஞ்சள்",
"மிளகாய்த்தூள்", "மிளகு" என்ற அளவுக்கு ஒவ்வொரு
சாவிக்கும் ஒற்றை எழுத்தில் நாமம் சாத்தி வேறு கைவசம்
ஒப்பித்தாள்

இரண்டு பெரிய சாவிகள் (அலுவல வெளிக்கதவு, வீட்டுவெளிக்கதவு);

நான்கு நடுத்தரம் (அலுமாரிகள் 2, அலுவலக மேசை வலப்புற
இழுப்பறை, சாவி இல்லாமலே திறக்கக்கூடிய வீட்டுமேசை
இடப்புறஇழுப்பறை);

நான்கு சிற்றரம் (துவிச்சக்கரவண்டி பூட்டு [வண்டி இருக்கும்
வயோதிப நிலைக்கு, வண்டியை விட்டு விட்டு, அதன்
காவற்பூட்டை யாராவது களவாடிக் கொண்டு
போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், பூட்டுக்கு ஒரு பூட்டுப்
போடலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன் என்பது
இன்னொரு சமயம் இரண்டு மணிநேரம் பேசுவதற்கான
விடயம்], கைப்பெட்டிச் சாவி இரட்டைகள், மனைவியின்
உடுப்புப்பெட்டிச் சாவி இரட்டையின் ஒற்றை [தான்
தொலைத்தாலும், கைகாவலுக்கு இருக்கட்டுமென்று உதிரி
என்னிடம்; "சாவி தொலைந்தாற் சரி, உதிரி; நான்
தொலைந்தால்.. என்னாகும்??" என்று கேட்டு இரண்டு முறை
அடி வாங்கியிருக்கின்றேன் (முதல்முறை உண்மையாகவே
கத்தரிக்காய் வதக்கிய அகப்பையால்; இரண்டாம் தடவை,
திறந்து வைத்த மிளகாய்த்தூள்போல காட்டம் குறைந்து,
செல்லமாக, தொலைக்காட்சி விளம்பரத்திற் பார்த்து,
~கையாளல், அனுப்பற்செலவு உட்பட~ $35 இற்கு
வாங்கிய தலையணையால்)].

கடைசியாக, இவை எதுக்கும் அடங்காமல் எப்படி என்
கைக்கோர்வைக்கு வந்து சேர்ந்தன என்று ஆக்கத்தின் தியும்
அந்தமும் அறியப்படாத ஆண்டவர் வகைச்சாவிகள் ஒரு
குத்துமதிப்பாக ஐந்தாறு.

ஆனால், அவளின் பெயரீட்டின் சுருக்கத்துக்கு குறைந்தபட்சம்
நான் சுருக்கெழுத்துப் படித்திருக்கவேண்டும் என்ற
அடிப்படைத்தகுதி கொண்டிருந்திருக்கவேண்டும் என்பது,
அடியேனுக்கும் தெரிந்திருக்கவில்லை; அம்மணிக்கும்
அப்படியே. சும்மா சாவியின் மேல், 'அ' என்று -வெகுவாய்ப்
பொதுப்பட, ஏதோ பெண்பிரச்சனைக்குள் அடிபட்ட
இன்னோர் அமெரிக்க ஜனாதிபதி மாதிரி- பெயர் போட்டால்,
அலுவலகமா, அலுமாரியா என்று கண்டுகொள்ள, கையிலே
கடதாசி ஒன்றில் 'அ எனப்படுவது யாதென்றால், அ·தென்றும்
அலுவலக அலுமாரி சாவி, அறிக.' என்று நன்னூற்சூத்திரம்
மாதிரி எழுதிவைத்து, அடிக்கடி பலசரக்குக்கடையில் வாங்கும்
பொருட்பட்டியல் போல எடுத்துப்பார்த்து கதவைத் திறப்பது
என் வயதுக் கனத்துக்கும் வாழ்க்கை நேரத்துக்கும் அவ்வளவு
அழகாகப்படவில்லை. அதற்குமேலே சிக்கலுக்கு, தான்
வாங்கித் தந்த இதயத்தை அழுக்குப்படாது
வைத்திருக்கிறேனா என்ற தினசரி உணர்ச்சி ரீதியான
மனையாளின் வைத்தியப் பரிசோதனை, "ஆவீன.. மழை
பொழிய இல் வீழ, அகமுடையாள் மெய் நோவ..." என்ற
உயரத்திலே உள்ள கொடுமை.

போதாக்குறைக்கு, எனக்குக் காதுக்குடைச்சல் எப்போது
வரும் முதுகு சொறிவு எப்போது வரும் என்பது, நேரம்சார்
இரண்டாம் மூன்றாம்படி, நாலாம் ஐந்தாம் அடுக்கு
வகையீட்டுச்சமன்பாடுகளாற் சொல்லிச் சிக்கல் பிரித்து
வைக்கமுடியாத சங்கதி. ஆக, சொறிவகைகளுள்,
பின்+முன்தலைச்சொறிவு மட்டுமே வரக்கூடிய (அதாவது,
தேவைப்படக்கூடிய) நேரம் இடம் என்பவற்றை ஓரளவு
எதிர்வுகூறும் அளவுக்கு என்னோடு சிநேகிதமாக இருந்தது.
அதனால், இந்தச்சொறிதலுக்கு எந்நேரமும் உதவியாகி
இடுக்கண் களையும் சொறிந்துவைப்பான்கருவிகள்,
கையிலிருக்கும் சாவிகளே. ஆனால், பெரிய சாவிகளுக்கு
இந்தச்சொறிவேலையில் அவ்வளவு பிடித்தமில்லை என்பது,
என் இங்கிதமற்ற சொறிகள், உருமாறாவடுக் குறிகளாய்
மாறியதிலிருந்து கண்டுகொண்டேன். சிறுசாவிகள், பருவம்
வராப்பிஞ்சுகள்; இதம்தரச் சொறியத்தெரியாதவை; அவை
பட்ட இடத்தில் வேறு தனியாகச் சொறியச் சொல்லி
உணர்வேற்படல் வழமை என்றும் அறிந்திருந்தேன். அதனால்,
இடைத்தரச்சாவிகளே அதிகமாகப் பயன்படுத்துவது உண்டு.
இந்தக்காரணத்தினால், சாவி நெற்றிநாமங்கள் நிலைத்து
நிற்காதது மட்டுமல்ல, அழுக்கு வேறு பட்டு, புதையற்தீவுப்
பெட்டிச்சாவிகள் இரகத்துக்கு இடுக்கெல்லாம் களிம்பேறி,
கறுப்பேறிப்போய் விட்டன.

அதனால், குத்து மதிப்பாக, முதலிருப்பது, சிறிய அவள்
பெட்டிச்சாவி, பின்னால், என் பெட்டிச்சாவிகள்,
வீட்டலுமாரிச்சாவி; மிகப் பெரியசாவி, வீட்டுவெளிவாசல்;
வெளியே வந்தால், வண்டிச்சாவி, அடுத்தது; பின்னால்
இருப்பது (வளையத்தில் என்ன பின் முன் என்கிறீர்களா?
அதுவும் சரிதான்... என்றாலும், மனவசதிக்கு ஒருவகையில்
இப்படி பழக்கிவைப்பதுதான் நல்லது என்று படுகின்றது),
அலுவலச்சாவி, அலுவல மேசைச்.... இப்படியாக ஓர் ஒழுங்கு
பண்ணி வைத்துக் கொண்டிருந்தேன் (அல்லது பண்ண முயற்சி
பண்ணிக்கொண்டிருந்தேன் என்று மனைவியும் மகளும்
அர்த்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்).

அங்கே எனது மனித பொதுவுணர்வு சதி பண்ணிவிட்டது;
வீட்டுவாசலிலும்விட, அலுவலக வாசல், பிரித்தானிய அலகில்
அளந்தாலும் சரி, சர்வதேச அலகில் அளந்தாலும் சரி
பரப்பளவில் மிகப்பெரிது; னால், சாவி அளவிலோ,
அலுவலகச் சாவி, வீட்டுச்சாவியிலும் விடச் சிறிது. காலை
வீட்டு வாசலை விட்டு வெளியே, அன்றைய மேலதிகாரியின்
திட்டலுக்கு முன்தலையா, பின்தலையா,
இடப்பக்கவாட்டுச்சிரமா வெகுசிரமமாய்க் கரம் சொறிவது
இந்த யோசனையில் மூளையை விட்டால், இச்சையின்றி
இயங்கும் உணர்வு, சின்னச்சாவியை வீட்டுக்கதவுச்
சாவித்துவாரத்துள் விட்டு ஓர் ஐந்து நிமிடம், அறைக்கதவு
அளவு தொடர்பு பண்ணி, தேநீர்க்கோப்பைக்குள்
அகப்பையினால் சீனிபோட்டுக் கலக்கும் முயற்சி பண்ணிக்
கொண்டிருக்கும். அதனால், திறப்புத் தொடக்கம் எங்கே
முடிவெங்கே என்று தெரிந்திருப்பதற்கு இலகுவாக, மகளின்
யோசனையை (அவளுக்கு அவள் அம்மாக்கும் தாங்கள்
'ஸிம்ஸன்ஸ்' கேலித்தொடர்க்குடும்ப ஸிம்ஸன் பெண்கள்
என்பதாய் ஒர் உணர்வு இருக்கின்றதோ இல்லையோ
தெரியாது; ஆனால், நிச்சயமாக நான், ஹோமர் ஸிம்ஸன்
வகைப்படு மனிதன் என்பதில் எதுவித கருத்துவேறுபாடும்
சட்டைக்குத் துணி எடுக்கும்போது அவர்களுள் எழுவதுபோல
எழுவதில்லை என்பது கவலைக்குரியவிடயம்)
அமுற்படுத்தமுயன்றேன்; அதாவது, இயேசு மார்பிற்
பிரித்துக்காட்டும் இதயம் தொங்கும் வளையச் சங்கிலிக்கு ஒரு
புறம் வளையத்தில் முதலாவது திறப்பினை இட்டு, மிகுதியை
ஒழுங்கில் இட்டுவைத்தால், கடைசியில், அலுவலக
மேசைத்திறப்புக்குப் பின்னால், அடையாளம் காணப்படாத
விபத்தில் அகப்பட்டு என்னிடம் வந்தடைந்த சாவிகள்,
சங்கிலியின் மறு பக்கத்தில் வந்து முடியும் என்பது கொஞ்சம்
தொழில்நுட்ப ஆலோசனையிற் தரத்தினால் ஒரு படியால்
உயர்த்தியான கருத்தாகவே பட்டது; ஆனால், அடுத்த நாள்
காலை மனைவியின் உடுப்புப்பெட்டி, ஒரு முகவரியற்ற
சாவியினால் பத்து நிமிடங்கள் திறக்கப்பட முடியாதுபோய்,
அவள் அலுவலக நிகழ்ச்சிக்கு 'சாதாரணமான'
ஆடையயலங்காரத்துடன் போகவேண்டிவந்ததே, சாவிக்கு
இன்றைய இடமே நாளைய வலமாகலாம், நாளைய இடமே
இன்றைய வலமாயுமிருக்கலாம், இவையிரண்டும் இல்லாமல்
இன்றுபோலவே நாளையும் வலம் வலத்திலேயே வலம் வரலாம்
என்ற 'சொதப்பல்' தத்துவத்தைச் சொல்லிவைத்தது.

இந்த நிலையில், இயலுமானவரை, பக்கத்தில் இருக்கும்
சாவிகளைப் பார்த்து, எட்டாமல் எட்டாம் இடத்தில் இருக்கும்
சாவியினைப் பார்த்து, சாவிகளைத் திருடன்போலப் போட்டுத்
திறக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். தற்செயலாக,
அலுவகத்தில் புது மேசை வருகிறதென்றாலோ, அல்லது,
மனைவி இன்னொரு ஆடையலங்காரப்பெட்டி
வாங்குகின்றாள் என்றாளோ, பயமே பிடித்துக் கொண்டது.
மொத்தத்தில், நாய்க்குட்டிக்கு ஆள் பழகிக்கொள்கிற
விடயம்போல ஆகிப்போனது புதுச்சாவிக்கு நான்
பொருந்திப்போகின்றது.

II
--

அலுவலகச் சக உத்தியோகத்தன், வெஸ்லி கிளன்மேயர்
சரியான 'அமெரிக்கத்தெற்குச் செங்கழுத்தான்' என்பான
குரூஸ். அங்கே, நான், குரூஸ், பாபாங்கிடா மூன்றுபேரும்தான்
அண்மைக்கால பொருளாதார அகதிகள்; தென்னமரிக்க,
ஆசிய, பிரிக்க வந்தேறுகுடிகள். "கொலம்பியா= கோப்பி +
கொக்கேயின் + கடத்தல் + இடதுசாரிப்புரட்சி -
கைப்பொருள்" இவ்வளவுதான் குரூஸ் பற்றிய கிளன்மேயரின்
கருத்தென்று குரூஸின் கருத்து; இதிலிருந்து என்னைப் பற்றி
அவன் என்ன சொல்வான் என்பதை ஊகிக்கக்கூடியதாக
இருந்தது. அதனால், அதை அவன் வாயிலிருந்தே வருவிக்கும்
முயற்சியில் என்றைக்கும் நான் பரிசோதனை
பண்ணிப்பார்த்ததில்லை. ஆக, தொழில் நிமிர்த்தப்
பேச்சுவார்த்தைகள் மட்டுமே. நல்லகாலத்திற்கு, நான்
திட்டமிடலும் வடிவமைப்புப் பிரிவு; அவன் களவேலைப்பிரிவு.
நிறவுணர்வு மிக்க இவன், பாபாங்கிடாவுடன் எப்படி ஒரு
சுமுகமான உறவை வைத்து இருக்கின்றான் என்பது பற்றி
எவருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. வருடாவருடம்
இருவருமே மலைக்குப் போகும் சபரிமலை யாத்திரீகர்போல,
அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துவிட்டு, விமானம் பிடித்து
ஹ¥ஸ்டன் போயிறங்கி கூடைப்பந்து பார்த்துக் கூக்குரல்
குரவை இட்டு வரும் பேர்வழிகள். ஆனால், ஹ¥ஸ்டனில்,
இருவருமே ஒரே விடுதியில், ஒரே அறையிற் தங்குகின்றார்களா
இல்லையா, ஒரே மேசையில் இருந்து சாப்பிடுகின்றார்களா,
அல்லது வேறுவேறாய் நழுவிப்போய் விடுகின்றார்களா என்று
'கூற்றுப்படி தவறான' கேள்விகளைக் கேட்க எவரும்
துணிவில்லை. பாபாங்கிடாவுக்கும் எனக்கும் குருஸிற்கும்
மேலாக சிறுபான்மையோர் என்ற அளவில் ஒருவித 'ஒரே
இனப்பாசமும் பரிதாபமும்' கலந்த உணர்வுவலை
போர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், பாபாங்கிடா,
கிளன்மேயருடன் கூடி நடந்துபோகும்போது, என்னால்,
பாபாங்கிடாவைப் பார்த்துச் சிரிக்கமுடிவதில்லை. ஏதோ
எதிரியுடன் கூடி நடந்து துரோகம் பண்ணியவனைக் காணும்
உணர்வு உள்ளெழுந்தது. அப்படியான நேரங்களில்,
அலுவலகத்தில் உள்ள தாய்லாந்து சுவர் ஓவியத்தில் இருக்கும்
பௌத்தபிக்குவின் தலையில் இரண்டு வாரங்களுக்குள்ளாக
ஏதாவது தலைமயிர் முளைத்த அடையாளம் தெரிகின்றதா
என்ற சந்தேகம் அல்லது வரவேற்பாளர்ப்பெண் கையிலிருக்கும்
மோதிரம் நியூயோர்க்கில் ட்வானியில் வாங்கியதா அல்லது
அவளின் நான்குவருடகாலம் முந்திய தென்னாபிரிக்க
விஜயத்தில் வாங்கியதா என்ற வினாவின் பத்தாவது எழுச்சி
என்பன என்னுட் கருவாகி வெளி உருவாகி, கரைந்தருகிக்
கருகிக் கழியும். இ·து அவர்களுக்குப் புரிந்திருக்கலாம்
என்றுகூட எனக்குச் சந்தேகம் உண்டு. ஆனால், தனியே
இருக்கையில், பாபாங்கிடாவும் நானும், டெக்ஸாஸ் கிங்கின்
இழுத்துப்பண்ணிய கொலையூடாக, டேவிட் டியூக்கின் புதிய-
நாட்சிசம்வரை விவாதித்து (அதாவது நான் திட்டுவதை அவன்
ஆமோதித்து, அவன் திட்டுவதை நான் அங்கீகரித்து
ஆளுக்காள் முதுகிற் தட்டிக்கொண்டு), அவன்
செங்கழுத்தானிடம் டெனிஸ் ரொட்மன் கார்மன் எலக்ராவைக்
கல்யாணம் பண்ணியது பற்றிய கடைசியாக வெளிவந்த
காதல்நிலை அறிக்கை அறியப்போக, நான் மின்வலைக்குள்
ஏதாவது இயூடோரா முகவரியூடாக, கொசவோ,
செஸ்னியாவில் சிறுபான்மையினருக்கெதிராகச் சேர்பியர்,
இரஷியர் பண்ணுவது எவ்வளவு (அ)நியாயம் என்பது பற்றி
யாராவது விரலை வாய்க்குள் வைத்து விட்டு வையவும் கக்கவும்
முடியாதவர்கள் தாங்கள் என்று மின் அஞ்சற்
கையொப்பக்கோப்பு வைத்திருக்கும் அப்-பாவிகளினை
அவர்கள் செயல்வழியிலேயே தாக்கப்போய்விடுவது வழக்கம்.
ஆக, இரண்டுவருடகாலத்தில், இப்படியானதோர்
உள்ளொன்று வைத்து வெளியொன்று பண்ணும்
ஒளித்துப்பிடித்து விளையாடல் அலுவலகத்துள்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிகழ்ந்திருக்கும்.


பின்கதைச்சுருக்கம் III, IV
------------------------

III - நேற்று
-----------
வீட்டுக்குப் போகும் என் அலுவலக மேசைப்பூட்ட நிகழ்த்தும்
யுத்தம், அன்றன்றைய மனநிலையைப் பொறுத்து,
சக்கரவியூகமா, கருடவியூகமா, இல்லை சாதாரண கரப்பான்பூச்சி
வியூகமா என்று அமைந்திருக்கும். நேற்றைக்கு,
திறப்புக்கோர்வைக் கையிலே நெருப்புக்குவையாக
வைத்திருப்பதுபோல வைத்து, கோர்வையில் இதயம் தொங்கும்
சங்கிலிக்கு இரண்டு பக்கமும் உள்ள சின்னச்சாவிகளில்
இருந்து ஒவ்வொன்றாய், மனயாத்திரை வீட்டில் அவளின்
பெட்டிச்சாவியிலிருந்து சொல்லிக்கொண்டு வீடு
அலுமாரியைப் பூட்டி, முன் வாசற்கதவைப்பூட்டி, வண்டியைத்
திறந்து, அலுவலக வாசலுக்கு வந்து வண்டியைப் பூட்டி, திரும்ப
அலுவலகம் திறந்து.... இப்படி பூசலார் வேலை பார்த்துக்
கொண்டிருக்கையில், கிளன்மேயருடன் பாபாங்கிடா அவர்கள்
அறையிலிருந்து வெளிவந்து என் அறைக்கதவு முன்னாக,
கடந்து போவது தெரிந்தது. என் வெறுப்பிலே, கிளன்மேயரின்
முகத்தைக் கண்டதால், பாபாங்கிடாவையும் வழமைபோலக்
காணாமல் இருந்ததுபோல, மேசை இழுப்பறையினைத்
திறப்பதில் வெகு சிரத்தை காட்டுக்கையில், தலைக்குட் பொறி
பறந்தது. பபாங்கிடா போல உருவிலும் என்னோடுடனான
பழக்கத்திலும் சிறியோன் ஆனாலும், அவனில் நான் கொள்ளும்
வெறுப்பினால் முக்கியத்துவம் ஆகி, பாபாங்கிடாவின் மீதிருந்த
நட்பு சிறுத்துப் போவது புரிந்தது. அதன்பின், நேற்றைக்கு
மேசையினைத் திறப்பது முகச் சுலபமானதாக இருந்தது -
பெரிய சாவி, சின்னப்பரப்பளவு வீட்டு வெளிச்சாவி,
இரண்டாவது பெரியசாவி, பெரியகதவுப்பரப்பளவு
அலுவலகச்சாவி என்று கை பழக; அன்றைக்கு அது
சம்பந்தப்படுத்தி, மிகுதி எந்த நிலையிலும் சாவிகளை மாறிப்
போட்டுச் சிக்கல் பண்ணாமல் வீடு போய்ச் சேர்ந்தேன்.


IV - இன்று
----------
இன்றைக்குக் காலையிலும் சங்கிலி அருகிருந்து
தொடங்காமல், பெரிய சாவிகளை தாரமாக வைத்துச்
சிக்கலின்றி வந்து சேர்ந்தேன். பாபாங்கிடாவையும்
கிளன்மேயரையும் கண்டபோது, சாவிகளை முன்னே
கையாண்ட எண்ணச்சிந்தனையே மனதில். கிளன்மேயரின்
நண்பன் பாபாங்கிடா என்ற உணர்வு செத்து, பாபாங்கிடாவின்
தோழன் கிளன்மேயர் என்று பட்டது. காலைவணக்கம்
இருவருக்கும் சொல்ல, கிளன்மேயர் முதலில் அதிர்ந்து
பின்னால், பதில்வணக்கமும் வாழ்த்தும் சொல்லிப்போனான்.
நேற்றைய சாவிகள் இன்றைய நண்பராகிப் போக,
நேற்றைய நண்பர்கள், இன்றைய சாவிகளானார்கள்.
இன்றைக்கு முழுவதுமே சாவிகளும் அலுவலமும் அவ்வளவு சிக்கலாக
இருக்கவில்லை.


'99/15/03

துளிர் - 44


Slow & Steady


'06 ஜூன், 20 திங். 15:41 கிநிநே.

பொஸ்ரன் நீருயிரிக்காட்சியகம்

Wednesday, June 29, 2005

கணம் - 472


'05 யூன் 27, திங். 11:05 கிநிநே.

கடந்த பாதையில் கழுத்தெறிந்து தழை
அறுந்த மரம் போல் விரிந்து கிடந்தாள்.

நாள்,
ஒன்றில் ஆட்டும் காற்று
இரண்டில் தோல் சுருக்கும்
மூன்றில் மணக்கும் மூக்கு
மிதித்தும் உதைத்தும்
சிதைந்தழியும் சிறகு.

சிதை உச்சி வெயில்.

உறைந்து
ஒடுங்கும் விரல்கட்குள்
நன்னும் எறும்பு கிள்ளக்
கொஞ்ச இரை.

சின்னக் குருவி சில
தின்னும் திசை தேடி
இன்னும் காத்திருக்குமோ?

அடி
விரைந்து
நடப்பேன்
வீட்டுக்கு.
'06 ஜூன், 29 புத. 12:53 கிநிநே.

Tuesday, June 28, 2005

அரைகுறை - 4


'05 யூன் 27, திங். 11:41 கிநிநே.

டோண்டு முதற்கொண்டு, முத்து, ஸ்ரீரங்கன் வரையான பலர் அநாமதேயங்கள் குறித்து அளவுக்கு மீறி அநாவசியமாகக் கவலைப்பட்டுக்கொள்கின்றீர்களெனத் தோன்றுகின்றது. நிச்சயமாக, யாரும் அறியா அநாமதேயங்களாகப் பதிவதும் அறிந்த ஒருவர் பெயரிலே அநாமதேயங்கள் பதிவதும் வேறான விளைவுகளைத் தரக்கூடியன என்பதை ஒத்துக்கொள்கிறேன். முதலாவது நிலையிலே, கருத்தினை உள்ளிடுகின்றவர் யாரென்பது குறித்து, உள்ளிடுகின்றவர் அல்லாத இன்னொருவருக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ பாதிப்பேதும் ஏற்படுவதில்லை. எல்லாப்புகழும் அந்த அநாமதேயருக்கே.

ஆனால், ஏற்கனவே அறியப்பட்ட ஒருவர் பெயரிலே இன்னொருவர் அநாமதேயமொன்று பதியும்போது, அந்த அறியப்பட்டவருக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படுகின்றது. இங்கே முக்கியமான பதங்கள், "நல்லதாகவோ", "கெட்டதாகவோ" என்பனவாகும். முதற்பார்வையிலே, இப்படியான அநாமதேயங்கள், எப்போதுமே தாம் தாங்கும் பெயருக்குரியவரின் கீர்த்திக்கு அபகீர்த்தி விளைவிப்பதற்ககாகவோ அல்லது தாம் அறுத்துறுத்து எதிர்ப்புத்தெரிவிக்கும் கருத்துகளுக்குக் கெடுதல் விளைவிப்பதற்காகவோ செயற்படுவதாக வாசிப்பவருக்குத் தோன்றலாம்; ஆனால், இந்த இடத்திலே வாசிக்கின்றவர் கொஞ்சம் நிதானிக்க வேண்டும்; ஏனென்றால், இப்படியான நிதானமின்மையினை எதிர்பார்த்தே இந்தவகை முகமூடிகள் பெருமளவிலே செயற்படுகின்றனர் என நான் கருதுகின்றேன். எழுதுகின்றவர் எழுதுகின்ற தொனி, பேசுகின்ற விடயம், அவர் கொண்டிருக்கும் பெயருக்கு உரித்தானவர் கொண்டிருக்கக்கூடிய கருத்து என்பவற்றினையெல்லாம் ஒன்றாகச் சேர்த்தே இதனைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இன்னொருவர் பெயரிலே பொய்யாக எழுதுகிறவர், முன்னையவர் பெயருக்குக் கெடுதல் விளைவிப்பதாக இருந்தால், அவரின் கருத்தின் தொனியிலே நிதானமின்மையும் ஆத்திரமேம்படுதலும் அதிக சந்தர்ப்பங்களிலே எண்ணிக்கையிலே அதிகமான பின்னூட்டங்கள் இல்லாமலும், அப்படி இருக்கும்பட்சத்திலே இருப்பின், அவற்றிலே சொன்னதையே சுட்டிக்கொண்டிருக்கும் கிளிப்பிள்ளைத்தனமோ அல்லது முன்னைப்பின்னைக்குத் தொடர்ச்சியின்மையோ இன்றி குறிப்பிட்ட பதிவுக்கான முழங்காலின் தட்டுப்படுதலுக்கு மூளை, முண்ணாண் துடிப்பான பின்னூட்டங்களாகவே இருக்கும். இவை வாசிக்கும்போது, உணரப்படக்கூடியன. ஆனால், இப்படியான தன்மையின்றி, பின்னூட்டங்களிலும் அநாமதேயப்பதிவுகளிலும் ஒரு தொடர்ச்சியும் திட்டமிட்ட கருத்தூட்டும் தன்மையும் வெகுநிதானமும் உண்மையான பெயருக்குரியவர்மீது அதீதப்படுத்தப்பட்ட வெறுப்பும் சுட்டிக்காட்டப்பட்டுக்கொண்டேயிருப்பின், அந்தப்பதிவு, யாரின் பெயரிலே பதியப்படுகின்றதோ, அவருக்கு நல்லது விளைவிக்கவே அவர்கருத்தினைச் சார்ந்த இன்னொருவரோ சிலரோ செய்கின்றார் எனலாம். அந்தப்பெயருக்குரிய மெய்யான ஆள்மீது ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்துமுகமாக இது செய்யப்படக்கூடும். உதாரணமாக, இப்போது (மெய்யான) டோண்டு ஐயா அவர்களின் பெயரிலே பொய்யான டோண்டுகளினாலே பதியப்படும் பதிவுகளால், டோண்டு ஐயா மீது "ஐயோ பாவம்; இப்படியாக வாட்டப்படுகின்றாரே" என உங்களுக்குப் பரிதாபம் ஏற்பட்டிருக்கின்றதா, அல்லது "டோண்டுவுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்" என மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றதா? எனக்கென்றால், அவர்மீது பரிதாபமே ஏற்படுகின்றது. ஆனால், அதை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கத்திலேயே அவரின் கருத்துகளோடு ஒப்புள்ள முகமூடிகள், பெயரிலிகள் (நான் சொல்வதாவது, பொதுப்பெயர்ச்சொற்களான, "முகமூடி", "பெயரிலி" இனை; குறித்து ஆள்சுட்டுப்பெயர்களான, "முகமூடி", "பெயரிலி" இனை அல்ல) ஏற்படுத்தியதாக இருக்கக்கூடாது? கவனியுங்கள்; அப்படித்தான் என்று அறுதியாகச் சொல்லவரவில்லை; நிச்சயமாக, எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருக்கக்கூடும். ஆனால், அப்படியும் இருக்கக்கூடுமல்லவா?

இதுபோலவே, கருத்துகள் சம்பந்தப்பட்டு, அதீதமாக விகாரப்படுத்தப்பட்டு, வெறுப்பு, ஆதரவு, அன்பு, வன்பு காட்டப்படுகையிலே, அது சொல்லப்படும் கருத்துக்கு எதிர்க்கருத்தினைச் சொல்வதாக இருக்கக்கூடும். இந்தவகையிலேயே பொடியன்களின் புத்தமதம் தழுவுதல் குறித்த பகிடியும் (ரோஸாவசந்த் அந்நியன் பட விமர்சனத்துக்கு எழுதியதுபோல) வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கக்கூடும்.

இப்போது, சிக்கலென்னவென்றால், இப்படியான நிலையினை நல்ல முறையிலே எவ்வாறு கையாளுவது என்பதாகும்; "மயிலே மயிலே இறகுபோடு" என்பதால் பயனாகாது; கூடவே, "நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு" என்ற மாதிரியான இன்னோர் ஆள்பெயரிலே பதியும் அநாமதேய பதிஞர்கள் தூங்கும் பாவனையிலிருந்து எழும்பப்போவதில்லை.

எல்லாவற்றுக்கும்மேலாக, இப்படியான "கெட்ட முகமூடி"களின் செயற்பாடுகள் அநாமதேயத்தினைக் கருத்துச்சுதந்திரத்துக்காகப் பயன்படுத்தும் "நல்ல முகமூடிகள்" இன் ஊடகத்தேவையிலேயும் சிக்கலேற்படுத்துகின்றன. முகம்மூடியும் கருத்துச்சுதந்திரம் கருதி, blogger/blogspot பதிவுகளின் பின்னூட்டங்களிலே அநாமதேயங்களினைத் தடைசெய்யும் தேர்வினை நான் தேர்வதில்லை. "இந்த அநாமதேயக்கருத்துச்சுதந்திரத்தினைத் தந்திருக்கிறேன்; முறையாகப் பயன்படுத்திக்கொள்; நான் போய் நீ யாரென்று தேடிக்கொண்டிருக்கப்போவதில்லை; ஆனால், அதையே இருட்டறையிலே கறுப்புப்பூனையை யார் தேடமுடியுமென்று எண்ணிக்கொண்டு திட்டினால், திட்டு; வெட்டினால், வெட்டு; ஆனால், திட்டமுன்னாலும் வெட்டமுன்னாலும், இருட்டிலே தேடும் விளக்குநுட்பம் வந்துவிட்டதென்பதை எண்ணிக்கொண்டு செய்" என்பதே என் நிலைப்பாடு. திட்டுவதும் வெட்டுவதும் இல்லாவிட்டாலும், சுவையின்றி இணைய வாழ்க்கை கடந்து போய்விடுகின்றது;-) பிச்சைக்குப் போன புத்தர் "பிச்சை தராமற் திட்டியவனுக்குச் சொன்னதுபோல, "ஏற்றுக்கொண்டால் அஃது எனக்கு; ஏற்க மறுத்தால், உன்னது இன்னும் உன்னிடமே" என்பதுதான் என் சித்தாந்தம்; ஆனால், அதற்கப்பாலும்போய், ஆள்மாறாட்டப்பெயரிலே எனக்குக் கெடுதல் செய்ய முயன்றால், ஆளினை என் வசதிக்கும் எல்லைக்கும் உட்பட்ட வகையிலே அறிந்து கொள்ளும்வண்ணம், என் பதிவினைத் தயார் செய்து வைத்திருப்பேன். அதற்கப்பாலே தப்பிச் செயற்படுகின்றாரெனில், சம்பந்தப்பட்டவனான நான் - நான்மட்டுமே அல்லது என்னால் நியமிக்கப்பட்டவர் மட்டுமே- அதற்கான தக்க நடவடிக்கைகளை தக்க ஊடகங்களூடாக எடுப்பேன்; அதைத்தவிர, வேறேதும் அந்நிலையினைச் சரிப்படுத்தப்போவதில்லை.

கோரிக்கைகள், வேண்டுகோள் விடுப்பதால், திட்டமிட்டே கெட்டபெயரினை ஏற்படுத்த நினைப்பவனுக்கு உற்சாகமே பீறிட்டு, இன்னும் இரண்டு குத்துக்கரணங்கள் போடுவானேயொழிய ஏதும் நிகழப்போவதில்லை. கல்லெறிந்த சந்திப்போக்கிரிக்குக் காசைக்கொடுத்துவிட்டுப்போங்கள்; அந்த உற்சாகத்திலே அடுத்து, வரும் முரடனுக்குக் கல்லெறிந்து வாங்கிக்கட்டிக்கொள்ளட்டும்; இல்லை, அவன்/அவள் முரடு யார், சாது யாரென்று அடையாளம் கண்டு தாக்கக்கூடிய புத்திசாலியாக அவன்/அவள் பதிவுகளிலே தெரிந்தால், அவன்/அவள் "நீங்கள் இல்லை" என்று மற்றோருக்கு உணர்த்த முடியாத பட்சத்திலும் அப்படி மற்றோருக்கு நீங்கள் உணர்த்தியே ஆகவேண்டுமென்ற அடிப்படைத்தேவை உங்களுக்கு இருக்கும்பட்சத்திலும் தகுந்த இடத்துக்கு அறிவியுங்கள்; அவனுக்கோ/அவளுக்கோ இணையச்சேவை, பதிவுச்சேவை வழங்கும் நிறுவனத்துக்குச் சட்டரீதியான பொறுப்பிருக்கின்றது. அனுப்புவதும் முகமூடிச்சேவைவழங்கியூடாக வந்தால், அந்த முகமூடிச்சேவைவழங்கிக்கு அறிவியுங்கள். (ஆனால், முகமூடிச்சேவைவழங்கிகளிலே பல, வாசிக்க அனுமதி தரும்; ஆனால், பின்னூடமிட விடா; இந்த முகமூடிகளிலே எத்தனைபேர் - இலங்கை அரசுக்காகச் soc.culture.tamil இலே செயற்பட்ட உம்பிரட்டோ குவி என்ற முகமூடியான அனுரா குலதுங்க போன்றோர் அல்லாதவிடத்து - தமது காசினை விட்டு இந்த முகமூடிவிளையாட்டினைச் செய்வார்களென்று எண்ணிப்பாருங்கள்) இப்படியான முகமூடிகள் மெய்யான ஆட்களாகச் சட்டத்துக்கு மிகவும் பயந்தவர்களாக இருப்பார்களென்பதே எனது அனுமானம்; நாளைக்குச் செய்தொழில் போய், சட்டமும் பின்முதுகிலே சுரண்டத்தொடங்குமென்ற எண்ணமே இவர்களை ஆட்டிவி(ர)ட்டும். இத்தனை முறைகளினையும் சொன்ன ஒழுங்குகளிலே செய்து பாருங்கள். விரும்பினால் (இஃது எனக்கு உடன்பாடு இல்லாதபோதுங்கூட), ஆக, பதிவான பெயர்கொண்டோரே உள்ளிடலாமென்ற தேர்வினை மட்டுமே உங்கள் பதிவுகளிலே ஏற்படுத்துங்கள். ஆனால், அவன் இன்னொரு பதிவிலே போய் உங்கள் பெயரிலே பதிந்தால், அந்தப் பதிவாளரின் உதவியோடு ஆளை அடையாளம் கண்டுகொள்ள முயலுங்கள். இந்த இடத்திலே, கருத்துமுரண்பாடு எதுவிருப்பினும், அடுத்தவர் தானே ஆளைக் காண உதவுவாரென்ற நிலை ஏற்படவேண்டும்; அப்படியாக, அடுத்த பதிவாளர் ஆள்மாறாட்டக்காரர் முகவரி அறிந்தும் தரமறுப்பின், அதனை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்நிலையிலே, அறிந்தும் பேசமறுக்கும் அடுத்த பதிவாளரும் ஆள்மாறாட்டக்குற்றத்துக்கு உள்ளாகின்றார்.

இந்தப்படிமுறையிலே, நீங்கள் ஆள்மாறாட்டக்காரரைக் கண்டுபிடிக்க அணுகாமல், தொடர்ந்து "ஆள்மாற்றாடம் பண்ணுகிறார் பண்ணுகிறார்" என்று ஒன்றுக்குமேற்பட்ட தரம், மற்றோருக்குத் தெளிவுபடுத்தியபின்னும், கத்திக்கொண்டிருப்பீர்களானால், இந்தவகைப்பட்ட வேற்றாள் பெயர்களிலே பதியும் முகமூடிகளின் முக்கியநோக்கம் -ஆள்மயக்கமேற்படுத்துவதல்ல, ஆனால்-, கருத்துமயக்கம் ஏற்படுத்துவதும் பேசும் விடயத்திலிருந்து திசைதிருப்புதலுமென்று கருதுவதோடு, அவர் என்ன செய்கின்றாரென்று நீங்களும் அறிந்திருக்கக்கூடுமோ என்றுதான் நான் சந்தேகப்படுவேன். இதன்மூலம், உங்களுக்குப் பரிதாபத்தினை ஏற்படுத்திக்கொள்ளுதலே உங்களதும் அந்த ஆள்மாறாட்டப்பேர்வழியினதும் நோக்கமென்றுகூட, கொஞ்சம் உன்னித்து அவதானத்துடன் வாசிக்கிறவர்கள் எண்ணினால், ஆச்சரியப்படுவதற்கில்லை.

எழுதியதை வாசித்துச் சீர்ப்படுத்தச் சோர்வாக இருப்பதால், அப்படியே விட்டிருக்கிறேன். இதெல்லாம் பெரிய நசிகேதன் காலதேவனுக்கு இடைப்பட்ட இரகசியத்துக்குப் பாஷ்யம்; அதைச் சீர்ப்படுத்திச் சொல்ல..... இதை எழுதினதுக்கே முக்கால்மணிநேரம் அநியாய நேரச்செலவு;-)

AnionMass எ. அனோனிமாசு எ. -/பெயரிலி. ;-)
'05 ஜூன், 28 செவ். 13:48 கிநிநே.


* முதலாவதாக உள்ளிடப்பட்ட, அநாமதேயத்தின் இந்தப்பதிவு சம்பந்தப்படாதவர்களின் மீதான தாக்குதற் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கின்றது. அதனால், பாஸ்டன் பாலா(ஜி) தந்திருக்கும் பின்னூட்டம் முன்னிடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. பின்னாலே, எழுதியிருப்பவர்கள் முதலாவது பின்னூட்டம் என்று சொல்வது நீக்கப்பட்ட அநாமதேயத்தின் பின்னூட்டத்தினையே என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்வதற்கு நன்றி.

Saturday, June 25, 2005

சிதறல் - 111


Cuts Plus


'05 ஜூன், 25 சனி. 12:42 கிநிநே.
கட்ஸ் ப்ளஸ் சிகைதிருத்துநிலையம்
பிளஸண்ட் வீதி, மோல்டன், மஸாஸூஸெட்ஸ்

துளிர் - 43


Dentric White


'06 ஜூன், 24 வெள்., 10:07 கிநிநே.
ஸோகஸ் - ஸ்குயர் வன் அங்காடி அருகே



Friday, June 24, 2005

படிமம் - 158


Colorfool


'06 ஜூன், 22 வியா. 18:11 கிநிநே.
வேலையகம் மேலிருந்து..., பொஸ்ரன்

Thursday, June 23, 2005

புலம் - 14

கலங்கல் அகலக் காணலே காட்சி


முதலே சொல்லிவிடுகிறேன்; முக்குலத்தோரை நியாயப்படுத்துவது அல்ல என் நோக்கம். ஆனால், தமிழக நிகழ்வுகளை உன்னித்துக் கவனித்து வருவோமானால், பெரும்பாலும் பார்ப்பனிய_ஊடகங்கள் (இங்கே கண்ணும் கருத்தும் தெளிவானோர் பார்ப்பனர்_ஊடகங்கள் என்று வாசிக்கமாட்டார்கள்) முக்குலத்தோர்-தலித் பிளவுகளைப் பெரிதுபடுத்திக்காட்டுவதிலேயும் ராமதாஸ்-திருமாவளவன் (வன்னியர்-தலித்_ஒரு-பகுதி) ஆகியோரின் கூட்டினை எள்ளி நகையாடுவதிலுமே கண்ணாக இருக்கின்றார்கள்; "ஆக, இத்தால் அறியப்படவேண்டியது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே." உலகின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் மூலகாரணம், அமெரிக்காதான் என்று ஒடுக்கிச் சுருக்குவது எவ்வளவுக்கு மடைத்தனமும் நேர்மையற்ற செயலுமோ அதைப்போலவே "தமிழகத்தின் எல்லாச்சிக்கல்களுக்கும் அடிவேர் பார்ப்பனியமே" என்பதும்; ஆனால், பார்ப்பனியம் என்பது நிச்சயமாக பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அத்தோடு, பார்ப்பனியம் எனும்போது, இடைநிலைச்சாதி, கீழ்நிலைச்சாதி என்ற வகைப்படுத்தலோடு மேல்நிலைச்சாதி என்பதும் உள்ளடங்கியிருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

பார்ப்பனிய ஊடகம், ஊடகவியலாளர் என்று ஏன் கூறுகின்றேனென்றால், தமிழ்நாயரான ஜெயக்காந்தன்பிள்ளை போன்றோரும் அவருடைய குட்டிநாயர்களும் மிக இலகுவாக பார்ப்பனர் அல்லாதவராக உருக்காட்டப்பட்டுத் தப்பிவிடலாம்; கிட்டத்தட்ட வையாபுரிப்பிள்ளை போன நூற்றாண்டின் முன்பகுதியிலே செய்ததும் இதுவே; வேண்டுமானால், கல்யாணசுந்தரமுதலியாரையும் டி. கே. சிதம்பரம்பிள்ளையையுங்கூட இந்தப்பட்டியலிலே சேர்த்துக்கொள்ளலாம். இப்பட்டியலிலே, தண்டபாணிபிள்ளை ஜெயக்காந்தன்பிள்ளையை விட்டுவிடுவோம்; மிகுதியானவர்கள், தாம் பார்ப்பனியச்சித்தாந்தத்தினைக் காவுகின்றோமென்று அறிந்தே - தம் குல இருப்பினைத் தக்க வைக்கச்- செய்தார்களா, அல்லது, இவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டினாலே (வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுரீதியான வடமொழியினை முன்னிறுத்திய போக்கு; கல்யாணசுந்தரமுதலியாரின் இந்தியதேசியத்தினை முன்னிறுத்திய காங்கிரஸினை முன்னிறுத்திய போக்கு; டிகேசியின் இலக்கியச்சுவைத்தலின் பாற்பட்ட கம்பராமாயணத்தினை முன்னிறுத்திய போக்கு) பார்ப்பனிய சித்தாந்தத்தினை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு அறியாமலே நகர்த்துகாய்களானார்களா என்று சரியாக எனக்குப் புரியவில்லை. ஆனால், இவர்களையும் இவர்களின் கருத்துகளையும் பார்ப்பனிய/வடமொழி முன்னிறுத்து/தமிழ்த்தேசியக்கூட்டுவுணர்வுக்கெதிரான நிலைப்பாடுள்ளோர்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்; இன்னும் பயன்படுத்துகின்றார்கள்.

ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலும் அறுபதுகளிலேயும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தினையும் பார்ப்பனிய எதிர்ப்பினையும் திராவிடதேசியத்தினையும் முன்னிலைப்படுத்திய திராவிடக்கட்சிகளின் ஆளுமைக்கு முன்னாலே, ஒடுங்கிப்போயிருந்த பார்ப்பனிய/வடமொழி/தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சக்திகள், திராவிடக்கட்சிகளின் அரசியல், பண்பாட்டுச்சீரழிவின்பின்னாலே, மீண்டும் உலகளாவிய மதத்தீவிரவாதத்தின்பின்னால் மறைந்துகொண்டு ஆழ வேரிட்டு முளையெடுத்து மேற்செல்ல முயல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தக்காலகட்டத்திலே, இத்தகுசக்திகளின் காய்நகர்த்துதல், ஒடுங்கிப்போய்விட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பலம்பொருந்திய கொள்கையான தனக்கு எதிரானசக்திகளைப் பிரித்தலும் தம்மை மீறாதவிதத்திலும் தம்நலத்தினைச் சேதப்படுத்தாதவிதத்திலும், தாம் கூறாக்கிப் பிளந்த எதிர்ச்சக்திகளிலே தமக்கு அடுத்த நிலையிலே வர்ணாசிரம அடிப்படையிலே வைத்திருக்கும் குழுவுக்கெதிராக, அடிமட்டத்திலே வர்ணாசிரமும் வைத்திருக்கும் குழுவினை மோதவிடுதலுமாக இருக்கின்றது. இந்துமதபீடங்கள் முதன்முதலிலே, தலித்துகளை மீனாட்சிபுரமதம்மாறுசம்பவத்தோடு ஒரு கண்துடைப்புக்காக அணுக முயன்றன. அதற்குக் காரணம், இந்துமதத்தின் அத்திவாரத்திலே ஆட்டம் வந்துவிடுமோ என்பதால், மேல்மாடியிலே இருந்தவர்கள் பயமுற்றது. அதன் பின்னாலே, எதுவுமே பத்தாண்டுகளாக நடக்கவில்லை. பிறகு, இந்துமதபீடங்களுக்கு ஈடான அசகிப்புத்தன்மை கொண்ட பொருட்பலமுள்ள பப்டிஸ் கிறிஸ்துவ ஊடுருவலும் மத்தியகிழக்கிலே தொழிலுக்குப் போனவர்களூடாக உள்நுழைக்கப்பட்ட தீவீரவாத வஹாபி இஸ்லாமும் வெளிப்படையாகச் செயலாற்றத் தொடங்கிய காலத்திலே, தீவிர இந்து இயக்கங்களினை வைத்து பார்ப்பனியகூட்டுச்சக்திகள் செயலாற்றத்தொடங்கின என்று சொல்வேன்.

அண்மைக்காலத்திலே, இருள்நீக்கி சுப்பிரமணியம் என்ற காஞ்சி சங்கராசாரியாரின் தலித்துகளை அணுகலும் இதன்பாலானதே. கிட்டத்தட்ட, 'பிராமணகுருவுக்கு வன்னாயுதப்போரிட எத்துணை தெரிந்தபோதும், புழு தொடையிலே துளைத்தாலுங்கூட குருவின் தூக்கம் கலையாது அசையாதிருக்கும் சீடனாக, ஒரு ஷத்திரியனுக்குத்தான் ஆகும்' என்கிற புராண(ப்)பார்வையைக் கொஞ்சம் தலித்துகளுக்கு நகர்த்தியதுபோன்ற செயற்பாடு இதுவெனலாம். மீதியான தம்மை அரசியல், பொருளாதார வகையிலே எதிர்கொள்ளக்கூடிய சாதியினரை எதிர்கொள்ள, தலித்துகளைப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கின்றது. (தம்மிலும் மாற்றான குழுமங்களின் பண்பாட்டு வகை குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை. எம் பண்பாட்டினை விட மேலானது உண்டோ என்ற வகையிலான ஒரு பெருமித உளப்பாங்கிலே இந்த நிலை அமைந்திருக்கிறதெனலாம். நாட்டார் சிறுதெய்வங்கள்முன்னால், பூசாரி ஆடு வெட்டினால், தவறு; ஆனால், புராண, இதிகாச, பிற்காலவேதங்களிலே அசுவமேத யாகம் தொடக்கம் பலவகை உயிர்ப்பலிகள், சோமபான அருந்துகை இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன) நேராக, குறியினைத் தாக்காமல், நீரிலே, ஆடியிலே விழும் விம்பத்தினைச் சுட்டி அம்பெய்யெனும் தன்மை இதுவெனலாம். தம் உழைப்பாலே உயர்மட்டத்தினை அடைந்த தலித்தினர் சிலரின் பார்ப்பனியப்போர்வைக்கு ஆசைப்படும் போக்கும் இங்கே பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கின்றது; பண்ணைபுரம் சின்னத்தாயி புள்ளை இளையராசா வாழ்க்கை இதற்கு ஒரு செவ்வுதாரணம். இளையராஜாவினைத் தூக்கித் தலையிலே வைத்துக்கொள்ளும் பார்ப்பனிய ஊடகங்களும் அபிமானிகளும் இளையராஜாவின் அரசியல் திருமாவளவன் போலவோ அல்லது கிருஷ்ணசாமிபோலவோ இருந்தால், அவரை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.

இதுதவிர, பார்ப்பனிய நலனைப் பேணும் சக்திகள் அமைப்பு சார்ந்து தமிழகப்பொதுவுடமைக்கட்சிகளிலும் நிறையவே தொடர்ந்திருக்கிறன. தமிழகத்திலே மட்டுமல்ல, பொதுவாகவே இந்தியாவிலேயே மரபுசார் பொதுவுடமைக்கட்சிகளிலேயிருந்து, தொண்ணூறுகளின் பின்னே விலகிப்போனவர்களைப் பார்த்தால், பார்ப்பனியத்தினை முன்னிறுத்துகின்றவர்கள் பாரதீயஜனதா போன்ற கட்சிகளிலே சேர்ந்திருக்க, மீதியானவர்கள், தலித்முன்னிலைப்படுத்து, தமிழ்த்தேசிய, பெரியாரியப்பார்வைகளை எடுத்துச் செல்ல முயல்கின்றனர். ஆனால், மரபுசார் பொதுவுடமைக்கட்சியில் இன்னமும் பார்ப்பனியகைப்பிடி இறுக்கமாக இருக்கின்றதைக் காணலாம்; மார்க்ஸும் லெனினும் பார்ப்பனிய நலத்துக்குக் கேடுவராதவரைக்குமென்பதே இவர்களின் நிலைப்பாடும். பார்ப்பனிய நலனைப் பொறுத்தமட்டிலே இவர்களுக்கு இடது வலது கொள்கைப்பேதமில்லையோ என்றே தோன்றுகிறது. மிகவும் இயல்பாக, செந்தோழர் 'இந்து' ராமும் காவிஞானி 'துக்ளக்' ராமசாமியும் பொருந்திக்கொள்கின்றார்கள். ஒருவர் இருள்நீக்கி சுப்பிரமணியர் சிறை வைக்கப்பட்டதற்கு வருந்தி எழுதினாரென்றால், மற்றவர் அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது, போய் சவாரி கொடுக்கின்றார். அடிப்படையிலே, இவர்கள் இணைவது இந்த பார்ப்பனியநலன்பேணலின்விளைவாகவே.

இந்த வகையிலேயே "தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே" என்னும் மாயை ஏற்படுத்தப்படுகின்றது; தமிழுக்காகக் குரல் கொடுக்கின்றவர்கள், இந்தப்பார்ப்பனிய சக்திகளாலே மிக இலகுவாக, குரல் கொடுப்பவர்களை இவர்கள் எடைபோடும் வகையிலே, ஒன்று, எள்ளிநகையாடப்படுகின்றார்கள், அல்லது, பயங்கரவாதிப்பட்டம் கட்டப்படுகின்றார்கள். ராஜ்குமார் தொடர்பாக வீரப்பனோடு பேச, நெடுமாறன், கல்யாணி, சுகுமாரன் போனபோது, இந்து ராமும் துக்ளக் சோவும் ஒருமித்த குரலிலே ரீடிஃப்பிலே, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளர்கள் என்ற குரலை இடம்-வலம் மறந்து எழுப்ப முடிகின்றது. அதேபோல, ராமதாஸினையும் திருமாவளவனையும் 'தமிழைச் செம்மொழி ஆக்குங்கள்' என்பவர்களையும் இலகுவாக தார்பூசி, தமிழ்க்குடிதாங்கி என்றவகையிலே எளிமைப்படுத்திவிடமுடிகின்றது. ராமதாஸும் திருமாவளவனும் உச்சக்கட்டத்திலே சண்டைபிடித்துக்கொண்டபோது, வன்னியர்.எதிர்.தலித் என்றதை வலிந்து வலிந்து "வெட்டு_குத்து_கொலை" என்பதாகப் பெரிதுபடுத்தி எழுதிய ஊடகங்கள், இப்போது, இருவரும் சேர்ந்து செயற்படுவதிலே கிண்டலடிக்கச் செய்கின்றன. இங்கே, குறிப்பாக ஒன்றைக் கவனிக்கவேண்டும். இந்தக்கூட்டினைக் கிண்டல் செய்யும்போதுகூட, திருமாவளவனை இவர்கள் நேரடியாகக் கிண்டல் செய்வதில்லை என்பதை கொஞ்சம் உன்னிப்பாக வாசிக்கின்றவர்கள் அவதானிக்கலாம்; ஆக, ராமதாஸினையும் அவர் மகனையுமே வெளிப்படையாக அடித்துத்தள்ளுகின்றார்கள். இதற்கான காரணத்தினை அறிவது மிக இலகு; நான் மேலே எழுதிய, "பலமற்ற எதிரியைத் தட்டிக்கொடுத்து அவன் மூலம் உடனடி எதிரியைத் தாக்கு." 'கிருஷ்ணசாமி.எதிர்.திருமாவளவன்' என்ற 'தென்மாநில தலித்.எதிர்.வடமாநிலதலித்' என்ற உருவாக்கமும் சில ஆண்டுகளின் முன்னே பார்ப்பனியசித்தாந்தத்தினை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காவும் பத்திரிகைகளிலே பெரிதுபடுத்தப்பட்டுக்கொண்டேயிருந்தது. ஆனால், இப்போது, வடமாநில வன்னியர்_தலித் கூட்டு மிகவும் பயமுறுத்துவதாக இருப்பதால், அதையிட்டே கவனம் திரும்பியிருப்பதால், இந்த 'வடதலித்.எதிர்.தென்தலித்' அடங்கிப்போயிருக்கின்றது. இப்படியான ஊடகங்கள், பதிப்பிலோ, ஒலி/ஒளியிலோ, ஏன் இணையத்திலோ இயன்றவரை பார்ப்பனிய (பார்ப்பன என்றே இங்கே வாசித்துக்கொள்ளவும்) ஒற்றுமைக்கு ஏதோ வகையிலே உள்வீட்டுத்தனியார் ஈடேற்றம் குறித்த மோதலிலே ஊறுவரும்போது, கலங்கிவிடுகின்றன. இந்து பத்திரிகையின் மீது ஜெயலலிதா அம்மையார் தன்னைச் சம்பந்தப்படுத்தியதால் நடவடிக்கை எடுக்க முயன்றபோது, பல (எல்லோருமல்ல) ஐயங்கார்களுக்கு ஏற்பட்ட மனக்கலவரத்தினை எழுத்திற் கண்டபோது இது தெளிவாகத் தெரிந்தது. இதேபோலவே, காஞ்சி சங்கராசாரியாருக்கும் ஜீயருக்கும் உரசல் ஏற்பட்டபோது, அது வெளியே பெரிதும் தெரியாமலே அடங்கிப்போனது. குறைந்த பட்சம் கண்டமகாதேவி தேர் குறித்து எழுதப்பட்டதுபோலாவது, ஊடகங்கள் பேசியிருக்கக்கூடாதா?

சன் ரிவி, ஜெ ரிவி, குமுதம், குங்குமம் என்பன பார்ப்பனிய சக்திகளுக்கானவை இல்லையே என்பதாகவும் ஓரளவுக்குத் திராவிடக்கட்சிகள் சார்ந்தன என்பதாகவும் சொல்லித் தப்பிவிடமுடியாது. சன் ரிவி.எதிர்.ஜெ ரிவி இரண்டு சீரழிந்த அரசியல்வாதிகளினையும் அவர்கள் நலன்களையும் பேண நடாத்தப்படுவன. அதிலேகூட ஜெ அம்மையாரின் ஜெ ரிவியினைத் தாக்காமல், சன் ரிவியினை(யும் குங்குமத்தினையும்) மட்டுமே தொடர்ந்து சிலர் இணையத்திலே தாக்குவதற்கான காரணம் ஜெ அம்மையாரின் பின்புலம் சார்ந்த இவர்களின் நூலிழைப்பிணைப்பும் கருணாநிதியோடு அத்தகு இழை அமையாததுந்தவிர வேறு எதுவாக இருக்கமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுமே குப்பை என்றால், ஒரு குப்பையை மட்டுமேன் இவர்கள் நாறுகின்றதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள்? உள்ள திருடர்களுக்குள்ளே எவர் நல்ல திருடர்? எவர் கெட்ட திருடர்? குமுதம் அடிப்படையிலே ஒரு வர்த்தக சஞ்சிகை; உரிமையாளர்கள் செட்டியார்களாக இருப்பினும், அடிப்படையிலே அதன் ஆசிரியபீடம் தொடர்ச்சியாக பார்ப்பனிய நலனினைப் பேணுவதாகவே இருந்திருக்கின்றது; ஆனால், அதற்குக்கூடவே உரிமையாளர்களின் வியாபாரநலனைப் பேணும் தேவையும் இருக்கின்றது; தீராநதி, யாழ்மணம் போன்றவை இந்த நலனைச் சுட்டும்.

ஆரம்பத்திலேயே சொன்னதுபோல, நான் தேவர்களின் தலித்துகளுக்கு எதிரான செயற்பாட்டினை எந்நிலையிலும் (ஊர்க்கோவிற்றேர் என்றாலென்ன, பஞ்சாயத்துத்தேர்தலென்றாலென்ன) நியாயப்படுத்த மாட்டேன். அதேபோல, பாமா, இமையம் போன்ற தலித்துகளே, அடித்தட்டிலே சாதியடைப்படையிலே வைக்கப்பட்டிருக்கின்றவர்களிடையே நிகழும் பிக்கல்களைப் பேசியிருக்கின்றார்கள். அதையும் மறுக்கப்போவதில்லை. ஆனால், சாதிவெறியோடு அலைகின்றவர்கள் தேவர்களும் வன்னியர்களும் தலித்துகளுமே என்பதுபோல, மேல்நுரையைக் காட்டிவிட்டு, தமிழகத்திலே சாதிப்பிரச்சனை முழுக்கவுமே அதற்குள் அடக்கமென்று சொல்லிவிட்டுச் சிலர் தப்பிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. இதற்கு இவர்களுக்கு "மீதி சாதி/குழு குறித்த அடக்குமுறை எதையுமே சொல்லாத" ஊடகங்கள் வாய்ப்பாக இருக்கின்றன. ஆனால், இவர்கள், அசோகமித்திரன் சொன்னதாகச் சொன்னதிலே தான் சொல்லவில்லை என்று சொன்னதை விட்டு ஒன்றுமே சொல்லாமல் விட்டதையிட்டு என்ன சொல்லப்போகிறார்கள்? ஜெயக்காந்தன்பிள்ளை தமிழ்(த்தேசியம்) குறித்துச் சொன்னது குறித்துச் சொன்ன விளக்கம் குறித்து என்ன நினைக்கின்றார்கள்? இவை குறித்து ஏன் பத்திரிகைகள் மிகவும் ஆழமாக விவாதிக்க மறுக்கின்றன என்பதைச் சொல்லவேண்டும். பெருமளவிலே நான் பார்ப்பனியசித்தாந்தத்தையே சுட்டியிருக்கின்றேன்; பார்ப்பனர்களை அல்ல; ஆனால், சில இடங்களிலே நிச்சயமாக பெருமளவிலான பார்ப்பனர்களையும் சுட்டித்தானிருக்கின்றேன். இந்தப்பார்ப்பனிய சித்தாந்தநிலைப்பாட்டினை விட்டுவிலகிச் சிட்டுக்குருவிகளாக நின்ற, நிற்கிற பார்ப்பனர்களையும் எனக்குத் தெரியும்; இந்தப் பார்ப்பனிய சித்தாந்தத்தின் படிக்கட்டுகளிலே உச்சிக்கு அடுத்த குருபீடத்துக்கு நடக்கத் துடிக்கும் நடந்தடைந்த பிள்ளைகளையும் தேவர்களையும் தலித்துகளையும் எனக்குத் தெரியும். ஆக, இத்தால் சொல்ல விழைந்தது என்னவெனில், நாம் 'நீருக்கு மேலே தெரியும் வாலை மட்டும் பார்த்து, ஆழக்கடற்சுறா அளவு இவ்வளவுதான்' என்று சொல்லிவிட்டுப் போகக் கூடாது.

'05 ஜூன், 23 வியா. 12:30 கிநிநே.


பி.கு.: பெயரிலிகளாக, முகமூடிகளாக வந்து திட்டிவிட்டுப்போகவும் கருத்துச்சுதந்திரம் உண்டு; மூலம் கண்டுபிடித்து, வழக்கேதும் போடமாட்டேன். ;-)

Wednesday, June 22, 2005

பின்னம் - 6

டயப்பர் லிங்க் - 348
Diaper Diaboloque - 348

வருடம் 2005. என்னுடன் ப்யூர் ஹம்பக் என்பவர் மளிகைக்கடைக்கு வருவார். அவருடன் ஒருநாள் குஜராத்தி குரோஸரிஸ் கடையில் பேசிக்கொன்றிருந்தேன்.

தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவரென்றும் தன் மனைவியும் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவரென்றும் கூறினார். உடனே என் வயிற்றுக்குள் வழக்கமான அஸிட் அரித்தது போன்ற உணர்ச்சி.

நான் (=தமிழ் நாய்): "நீங்கள் 2000-ல் குழந்தைப்பேறுக்காக குறை எட்டு மாதத்திலேயே அல்டிமேட் அல்ப்ஸிலேதானே குழந்தைப் பெற்றீர்கள்?"

ஹம்பக்: "ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"

நாய்: "அதன் பிறகு குழந்தை ஐசியூவிலே இருந்தது அல்லவா?"

ஹம்பக்: "ஆமாம், ஆனால் ஏன் இது உங்களுக்கு...?"

நாய்: "அதே போல நர்ஸரியிலும் இருந்தது அல்லவா?"

ஹம்பர்க்: "முதலில் உங்களுக்கு ஏன் தெரியவேண்டும் என்று கூறுங்கள்"

நாய்: "பிறகு சொல்கிறேன். உங்கள் குழவி பிழைக்குமா என்று மெகா ப்ராட்டிடம் கேட்ட போது, அவர் உங்களிடம் "விழகு திருப்பிப் போட்டால் குழவி என்று வருகிறது. முயற்சி செய்" என்று கூவினார் அல்லவா?"

ஹம்பக் (பொறுமை இழந்து) : "இதற்கு மேல் உங்களுடன் பேச வேண்டுமானால் இதெல்லாம் உங்களுக்கு ஏன் தெரிய வேண்டும் என்பதைக் கூற வேண்டும்!"

நாய்: இதைப் பற்றியெல்லாம் நீங்கள் 2004-ல் பபில் டோக்கில் எழுதியிருந்தீர்கள். அதை ரிட்டயர் ஆகி வேறே வேலையிலாமல் வீட்டிலே ஈஸி சேர்ல உக்காத்திருக்குற நான் படித்தேன்."

ஹம்பக்: "அதைப் பற்றி நானே மறந்து விட்டேன். நீங்கள் எதற்கு வேறு வேலையில்லாமல் நினைவில் வைத்து என்னையும் அறுக்கிறீர்கள்?"

நாய்: "அந்தக் கட்டுரையில் மேலே கூறியதையெல்லாம் எழுதிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு வீட்டுக்கருகாமையில் கிண்டர்கார்டினில் போதுமான காலியிடம் இல்லாததால் தொலைவிலே சைல்ட் கேர் இலே சேர்த்துக் கொள்ளவேண்டியிருந்தது என்றும் கூறினீர்கள். உங்கள் குழந்தையின் கிண்டர்கார்டினில் இருந்த இன்னொரு குழந்தையின் அம்மாவை இருவரும் விவாகரத்துப் பெற்றபின் மணம் புரிந்ததாகவும் கூறினீர்கள். இப்போது பேசுகையில் நீங்கள் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவர் என்றும் உங்கள் மனைவியும் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவர் என்றும் கூறினீர்கள். காக்கா இருக்க, பனம்பழம் விழுவதுண்டல்லவா? உடனே நான் படித்த உங்கள் கட்டுரை நினைவுக்கு வந்து ஆள் அகப்பட்டால் அறுக்காமல் விடாதே என்றது. ஆகவே கெட்டேன்."

காலன் வரிசைப்படிப் பார்த்தால் இது என் நினைவிலிருக்கும் முன்னூத்தி நாப்பத்தெட்டாவது டயப்பர் லிங்க் ஆகும். டயப்பர் லிங்குக்கான சொற்கல் இங்கு: "நான் ப்யூர் ஹம்பக், என் மனைவி ந்யூ பபில்"

மேலும் பிராண்டுவேன்.

(என்றென்றும்) வம்புடன்
தமிழ்நாய்.




சிதறல் - 110


Living on Death


'06 ஜூன், 20 திங். 16:10 கிநிநே.
பொஸ்ரன் துறைமுகத்தின் ஒரு பகுதி

பின்னம் - 4

அண்ணன் காட்டிய வழியம்மா
Rapper "KD" of One Cent


YO BRO! WHAZZUPPP!
காஞ்சித்தலைவன் காட்டின மாறுவேட, "கண்டுபிடித்தேன் கண்டுபிடித்தேன்" பிலிமின் பிரகாரம் எம் அண்ணன், ஒரு சதம் இசைக்குழுவின் முன்னணிப்பாடகர், இரப்பர் "கேடி" அவர்களை உருவாக்கியிருக்கிறோம்.

கண்டுபிடித்தாலுஞ் சரிதான்; கண்டு பிடிக்காட்டிலுஞ் சரிதான்.


Tuesday, June 21, 2005

உயரம் - 13


City HeLights


ஜூன், 20 திங். 16:37 கிநிநே.
பொஸ்ரன் நகர்மத்தி

படிமம் - 157


Stroller


ஜூன், 20 திங். 16:02 கிநிநே.
பொஸ்ரன் படகுத்துறை அருகே
வண்டியின் அருகிலிருக்கும் குழந்தையிடம் கேட்காமலே படத்தினைப் போட்டதற்கு மன்னிப்புக்கோரலுடன்

துளிர் - 42


Seabra


ஜூன், 20 செவ். 15:47 கிநிநே.
பொஸ்ரன் நீருயிரிக்காட்சியகம்



சிதறல் - 109


Boston Harbor


'06 ஜூன், 20 திங். 16:09 கிநிநே.
பொஸ்ரன் துறைமுகத்தின் ஒரு பகுதி

Sunday, June 19, 2005

துளிர் - 41


The Great Excape


'05 ஜூன், 18 சனி 14:30 கிநிநே.
பொஸ்ரன்
படப்பிடிப்பு உதவி: நித்திலன்



சிதறல் - 108


Bread of Life Posted by Hello


'05 ஜூன், 18 சனி 11:45 கிநிநே.
மோல்டன் அஞ்சல்நிலையம் முன்பாக

துளிர் - 40


Mutual Understanding


'05 ஜூன், 18 சனி 14:30 கிநிநே.
பொஸ்ரன்
படப்பிடிப்பு உதவி: நித்திலன்



Wednesday, June 15, 2005

துளிர் - 39


Raw is


பொஸ்ரன் மாநகர்
'05 ஜூன், 14 செவ். 18:56 கிநிநே.



பின்னல் - 25


Contrast


'05 மே, 27 11:41 கிநிநே.
வீதியோர விளையாட்டிடம்


"பூ போடுறீரு; பாக்கு போடீரோ"ன்னு கவலைப்பட்ட பிறகாசுக்காக, பச்சிலைப்பிள்ளைப்பாக்கு போட்டிருக்கேன்.

துளிர் - 38


Fencing Flowers


பொஸ்ரன் மாநகர்
'05 ஜூன், 14 செவ். 19:01 கிநிநே.



தெறிப்பு - 22


Frederick Douglass - Mural/Wall Art, Boston


'06 ஜூன், 15 புத. 12:30 கிநிநே.
பிரெட்ரிக்கு இடக்லாஸ் சுவரோவியம், பொஸ்ரன் நகர்


துளிர் - 37


One Blooms


பொஸ்ரன் மாநகர்
'05 ஜூன், 14 செவ். 18:29 கிநிநே.



Tuesday, June 14, 2005

Thursday, June 09, 2005

படிமம் - 154


Lit it be! Lit it be!!


'05 யூன், 06 திங்.

கணம் - 471


'05 யூன் 08, புத. 18:21 கிநிநே.

இதுவரை முடித்த நூல்களைப் பற்றிச் சொல்லக் கேட்கிறாய்.
நாவுக்கும் கண்டத்துக்குமிடை சின்னச்சொல்லும் சிக்கிப் புதைகிறேன்.
ஈதரைப் போல் புலனுக்குப் பிடியுணாது, உள்ளவிந்து பெருந்துயர் விரிகிறது.

முடிக்காத நூலொன்று என் முன்னுக்கிருக்கிறது, பார்த்தாயா?

ஒரு கைக்குழந்தைக்கு முன் வந்த நூல்; தவழ்ந்திருக்கிறது கை;
முகம் தடவுண்டிருக்கிறது; தவறிக் கால் விழுந்திருக்கிறது விரிந்து;
முன் மயிர்க்கற்றை முன்னும் பின்னுமாய் விரல் உழன்றிருக்கிறது;
நடந்திருக்கிறது என்னுடன், நகர்வாகனத்தில், நடைவழித்தடத்தில்,
வந்தாரை வரவேற்க வான்விமானக்காண்கூடத்திருக்கை இடுக்குள்.
அந்த ஓரத்திற் பார், ஒரு முனை உள் நசுங்கிப் போயிருக்கிறது முகம்
- மரக்கதவிடுக்கில் என் கைத்தவறு; பின்னும் சொல் பேசாமற் தொடர்ந்து,
நெடுநாளாய் விரல் முடுக்கித் தடவித் தாள் விரித்துத் தட ஒளி காண,
முடிக்காத நூலொன்று என் முன்னுக்கு யோகத்தவமிருக்கக் கண்டாயா?
நிழல் நோகாமல், இதுநாள் முடித்தன எண்ணி எப்படி நான் சொல்வேன்?

இழைத்து முடிக்காத நூலொன்றைச் சுவைத்து முடித்த பின் வா;
எடுத்துப் படித்ததில், என்னோ டிணங்கிப் பிடித்ததைச் சொல்வேன் நான்.
'05 யூன், 09 வியா. 12:05 கிநிநே.

Wednesday, June 08, 2005

படிமம் - 153


Life is more Beautiful


மெய்: '05 யூன், 06 திங். 09:49 கிநிநே.
திரிபு: '05 யூன், 08 புத. 21:08 கிநிநே.

Tuesday, June 07, 2005

கணம்-470


'05 யூன் 03, வெள். 10:34 கிநிநே.

இந்தச்சட்டைதான் என்றல்ல, எந்தச்சட்டையுமே நான் கேட்டிருக்கமுடியா "வயது,
ஐந்திலேதான் வாங்கித் தந்தேன்" என்றதைச் சொன்ன அப்பப்பா செத்துப்போனார்;
செத்துப்போனார் வாழ்ந்தபோது சிறுபொய் சொன்னதில்லை.

"உனக்குப் பிடித்த சட்டை" என அவர் சொல்லித் தெரியும். ஆனால்,
எனக்குப் பொருந்திய சட்டையா எனச் சொல்லமுன், பொக்கைவாய்ச்
சிரிப்புங் கழறாமற் செத்துப்போனார். பொருந்தித்தான் இருக்கவேணும்;
பொருந்திக்கொண்டிருந்ததாற்றான் பிடித்திருக்கவேண்டும் புள்ளிச்சட்டை;
செத்துப்போனார் வாழ்க்கையிலே சொன்னதில்லை சிறுபொய்.

தூசுப்பழசாய்ப் போனது காலம்; பூச்சட்டை இனி, பொருந்தா தெனக்கென்று,
புதுச்சட்டை விரும்பி எடுத்துப் போட்டாலும், அப்பப்பா சட்டை அதே சிறப்பு.
பக்கத்துவீட்டுப் பாலனுக்குப் பைப்பரிசு, "என் அப்பப்பா பேர் சொல்லிப் போடு;
உனக்குப் பிடிக்கும் இச்சட்டை"; பொருந்தாதென்றான்; எம்குடிப் பெருந்தன்மை
புரிய பொய்க் கைத்துப்பாக்கியும் போர்விமானப்பொம்மையும் கொடுத்தேன்.

"எனக்குப் பிடித்த சட்டை" என்றான் சுழன்று பறந்து மனை சுட்டுக்கொண்டே.

செத்துப்போனவர்போல சிறுபிள்ளைகளும் சொல்வதில்லையாம் சிறுபொய்
'05 ஜூன், 07 செவ். 12:56 கிநிநே.

Friday, June 03, 2005

சிதறல்-106


Dust spots


மெய்: '05 யூன், 03 வெள். 10:26 கிநிநே.
திரிபு: '05 யூன், 03 வெள். 15:21 கிநிநே.

Thursday, June 02, 2005

கணம் - 469


'05 யூன் 02, வியா. 11:36 கிநிநே.

சந்திக்கப்போனேன்; பாதி திறந்து கதவு;
தட்டப் பதிலில்லை; தள்ளித் திறந்தேன்;
அனைத்துமிருந்தன; அவரில்லை.

மேலே நாட்காட்டி; கை கிறுக்கிச்
செயல் சுட்டிக் குறித்த நாளிரண்டு;
தலை தொங்கித் தூங்கிய தொலைபேசி;
காது பொருத்திக் கேட்பானில், கீதம்
-பெண்சன்னக்குரலிற் புரியாத மொழி;
பாதி முடிந்த நீருடன் கோப்பை,
ஆவியுயிர்க்கும்; காற்றிலாடிக்
கலைந்த நீள்நரைமுடிபோல்,
கத்தைத்தாள், கட்டுரை பரவிக்
கிடந்த மேசையில் மீதிக்குத் தூசி
வெளிக்காற்றுக்குத் தவழும்; தாவும்;
தொடர, வளி வரத் திறந்த ஜன்னல்.
கழுத்து முடிச்சுக்காகும் நூலிரண்டு
தூக்கிச் சுருங்கு வெனீஸ்_மறைப்பு.
ஆள் அகல, வெளித்த கதிரையை
ஆக்கிரமித்தோர் விரிசட்டை; கறுப்பு.
வாய் திறந்த பை வளைந்து; கரி
முறிந்த பென்சில்_குழாய்; மேசை
கீழ் தரை குப்பை; குண்டூசி; கொழுவி;
துளைத்தறுந்த துண்டுத்தாள்; நாள் பல
தோய்க்காத தொப்பி; இணை சேர்ந்து
பிரி பாம்புக்கம்பி; சிவப்பு; சாம்பல்; கறுப்பு.
"நீயே கல்" என்று நாமமிட்ட நூல் மூன்று.
பாம்புத்தோல் தரைவிரிய, பாவும் கண், என்
கால்; காற்சட்டை; மேற்சட்டை; கையிரண்டு

நின்று இன்னும் பார்த்தேன்; நிமிடம்;
ஆள் இல்லை அப்பொழுதும்; அறைக்குள்,
இன்னும் பாவும் மோனம்; அதன்
பின்னும், மேற் பார்த்தேன்.

கணித்திரை காய்ந்திருந்தது
-"எதேச்சை நடை" என்றிருந்த
பகுப்பாய்வு வேதியல்; முட்டி
மோதத்தான் மூலக்கூறாம்.

அவரைக் கண்டேன்;
அப்படியே திரும்பினேன்.

பாதி திறந்த கதவு,
தட்ட, தள்ளச்
சொல் சத்தங்கெட்டுப்
பார்த்திருக்கட்டும்.

போவார், வருவார்;
வருவார், போவார்.
'05 மே, 02 வியா. 12:57 கிநிநே.

Wednesday, June 01, 2005

குவியம் - 4



காலைவேளைகளில் என்னைக் கீறாதே;
எனக்குக் குடும்பம் இருக்கிறது; குழந்தை இருக்கிறது;
உண்ண, உடுக்க, இருக்கவென்று
உழைக்கவேண்டும்; தொழில்.

"உனக்கென்ன?" என்றா உரத்துச் சொன்னேன்?
உனக்கும் குடும்பம் இருக்கிறது; குழந்தை இருக்கிறது;
உண்ண, உடுக்க, இருக்கவென்று
உழைக்க உண்டு உனது தொழில்.

பேச்சுக்காகும் எம் பேதம், வாதம், விவாதம்;
பிள்ளைப்பாலுக்காகுமா? இல்லை, சொல்,
நாமாக்கவேண்டுமெனும் படைப்புக்காகுமா? விழலைப்
பேசிப்பேசியே பேச்சற்றுப் போனோம் இதுவரை நாம்;
இன்னும் தொடர்ந்து பேசவும் வேண்டுமா,
இந்த நாள் வேலைப்பொழுதில்?

வேலை வேளைகளில் என்னைக் கிழிக்காதே;
எனக்கு வேறு வேலை இல்லையா?
உன் கிழித்தலுக்கு மறு கிழிப்பாய்
ஒரு கவிதை கிறுக்கிப் போட.

கதைக்கென்ன, கவிதைக்கென்ன? இல்லை,
ஒரு பக்கக் கட்டுரைக்கென்ன கேடு?
காத்திருக்கலாம். நாளைக்கோ, இன்னொரு வேளைக்கோ;
என் நாளை உலைக்கு, கையில் உள்ளதுதான் வேளை.

'05 '05 யூன் 01, புத. 12:25 கிநிநே.