Tuesday, April 19, 2005

அரைகுறை - 1

நாய்மணிக்கடி(கை)

97 இன் பழங்கடி

முற்குறிப்பு:
கற்றோரெல்லோரும் கருத்துய்த்துணர்க - அதுவிட்ட
மற்றோரெல்லாம் திறக்க மற்றஞ்சல்.


தொகுப்பாசிரியர் குறிப்பு:
நாய்மணிக்கடி(கை) தொகுத்தவர், நாலாம் நூற்றாண்டே (நாய்க்கேதையா, கி.பி.யும் காபியும்?) வாழ்ந்த உடற்புழுதி ஞமலியார். இங்கே தெரு நாய்ப்பாடல்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வாகனம் ஏற்றப்படுகிறது. மிகுதி பின்னே கடிக்கப்படும்.

பொறுக்கிநானூற்றிலும் சறுக்கிப்போனவை
----------------------------------

1.மெய்யின்பம் இணையப் பெற்றார் நிலை எடுத்துரைத்தல்
-----------------------------------------------

மெய்வருத்தம் பாரார்,
கண்துஞ்சார், பசி காணார்,
கணணிகண் internet
இணையப்பெற்றார்.

2. கோடரிதாசனின் விடுதலைக்கவி
------------------------------
அச்சமும் நாணமும் நாய்கட்கு வேணுமாம்
வால்மட்டும் போதும் எம் வக்கிற்கு...
...(மிகுதி கவிஞர் கடிதாங்கா(து) வெறிகொண்ட நாய் கொண்டுபோனதாய்ப் பின்வந்த கள்ளதாசன் ஓரிடத்தே 'நாய்நகர்ப்பள்ளு'வில் எடுத்துக் குரைக்கிறார்).

3. மூக்குப்பொடிப்புலவரின் நாய்விடுதூது
---------------------------------

நாயாய்! நாயாய்!
கம்பம்கால்தூக்கு நாயே!
நீ (விளக்குக்கம்பம்)
போகும் வழியில் என்
பொண்டாட்டி கண்டால்,
பெற்ற சம்பளமும் பொடிக்காரன்
பற்றியதைச் சொல்வாயா?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


எலியரித்ததீறாக,
எஞ்சிக்கிடக்கும் தமிழ் கல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள்
மின்வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் (அதாவது, மிகுதியைக் குலைக்கமுன்) வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


பிற்குறிப்பு:
^* எஞ்சிக்கிடக்கும் தமிழ்நாட்டு நல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள் மின்வலையேற்றியே, பின், பிறநாட்டுநல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற்பெயர்ப்போம் என்ற உறுதியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சியிது. எமனை அஞ்சோம் (ஆனால், அதுபற்றி அவனுக்கென்ன கவலை?), எது வரினும் எமது இலட்சியம் நிறைவேற்றலே திண்ணமாய் உழைப்போம் என்ற எண்ணத்தே செயலுறும் முயற்சியிது. பொருள் நிறைந்தவர் பேசாமற் போவீர், தமிழ் நிறைந்தவர் தோள் துணை தாரீர்.

எலியரித்ததீறாக,
வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.



நறுக் கடி II

முற்குறிப்பு:
புலவர்கள் பிழைபொறுக்க-பொறுக்காப்
பொறுக்கியர் தம் தர்ம அடி தவிர்க்க.

பொறுக்கிநானூறில் பிழைத்துப் பொறுக்கியெடுத்தவை
___________________________________________

1.பொருளீட்டிவந்த தலைவன் பொருமியது
----------------------------------
மோப்பக்குழையுமாம் அனிச்சம்பூ
மோக்காமலே குழைந்தது, அவள்வைத்த
அடுப்புச் சோறு.


2.தலைவி தலைவனுக்குத் தலை(யில்) விதித்தது
-----------------------------------------
நீயும் நாயும் எத்துணைக் கேளிர்?
எந்தையும் நிந்தையும் எக்கணம் பிரிவில்லை.
செம்புலப்புயநீரெனத் தரை புணர்ந்திடும்-உன்
செந்நீர்.
கவனம்!


3.தலைவன் பற்றித் தலைவி தோழிக்குச் செப்பியவை
--------------------------------------------
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
கண்டனர் என்bank balance காதலவரவர்.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
பெற்றோரிடம் பெற்று வரல்.


4.பாணன் புலவருக்குச் செப்பியது
----------------------------
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
திரையறிந்து நாள் நூறு ஓடும் படம்.


5.(புலவர் போன வண்டி) சிதறிய நாற்பத்தில் சேர்த்தெடுத்த சில
------------------------------------------------------

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தவர் அனுபவிக்குங்கால்.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
வெள்ளநிவாரணம் போடுவானெனில்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்மனக்
கள்ளத் தனையது உயர்வு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
ஏராளம் கடன்கண்டார் கண்ணே உள.


நறுக் III

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூத்தகுடி,
கண்டது கல்லும் மண்ணும்
கடல் கடந்து.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
படித்துப் பள்ளி சென்ற பாலகன்,
படையினால் பற்றப்படான் துப்பாக்கிமுன்,
துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று
துப்பாம்.
தூ!


குஞ்சியழகும் கொடுந்தானைக்கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல- மனித நேயப்
பஞ்சத்தால், பிறநாட்டகதித் தஞ்சம்
அடைதலே அழகு.


அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்,
பின் வந்த, அவள்
அண்ணனும் நோக்கினான்.
உடைந்தது கோ தன்
(உ)டல் முதுகென்பு வில்.



முற்குறிப்பு: அன்றைய சங்க காலம், இன்றைய பஞ்ச காலம் இரண்டும் கருதி, புலவர் பெருங்கடியூர் உடற்புழுதி ஞமலியார் (இ)யாசிப்பதற்காக (இ)யாத்தது; சங்ககாலச் சந்தர்ப்பம் தந்துள்ளார்; இக்காலத்திற்கானதை பொருள் (இல்லா) ஆசிரியரே போட்டுக்கொள்(ல்)க. (மூலப்பிரதி, பசியால் பாதி தின்னுற்ற பனையோலையிலிருந்ததால், சில இடங்களிற் தமிழ் குதறுண்டுள்ளது; மன்னிக்குக)
____________________________________________________________________
கலி(டி)யும் இன்ன(‘) பிற(ழ்)வும்
----------------------------

1. புலவர் புறநானூறு புத்திரருக்குப் புகட்டும்போது, அகமிருந்தெழுந்த பத்தினி நான்கு
-----------------------------------------------------------------------
i

"மலையும் மலை சார்ந்தவிடமும் குறிஞ்சி,
வனமும் வனஞ் சார்ந்தவிடமும் முல்லை,
வயலும் வயல் சார்ந்தவிடமும் மருதம்,
....ம் கடல் சார்ந்தவிடமும் நெய்தல்,
..................டமும் பாலை"
புதல்வனுக்குப் போதித்த புலவர் மனைப்
பத்தினி பட்டினி பொறுக்காமற் பொரிந்தாள்,
"தமிழும் தமிழ் சார்ந்தவிடமும் தரித்திரம்",
அடுக்களை அயர் பூனை துரத்தி.

ii வேறு

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" கவியாத்த
கவிஞர்தம் காமக்கிளத்தி, கலி நொந்து கடித்தாள்,
"மனைப்பொருள் விற்று மாத மளிகை பெற்றாரை..
.......யார், மரத்தடி மடம் தூங்கு ஆண்டியோ?"

iii வேறேவேறு

கோனிடம் மானிய நெல் பெற்று வாழ்வாரே வாழ்வார் மற்றோர்
தமிழ்ப்புல்லுக்கு உரம்போட உடல்வெந்து சாவார்.

iv மிக வேறு

முதல்இலார்க்கும் ஊதியம் ஊதிவரும் மழைபோற்
கவிஉள்ளார்க்கோ கடனே நிலை.


2. தேரோடும் வீதியிலே (நீல. பத்மநாபன் மன்னிக்குக) மாதமான்யம்பெற்ற பை பலமுறை பறிகொடுத்த புலவர் புதுப்புலவருக்குப்(பு.பு.) புத்திபோதித்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் (பின்)பணப்
பொதி தூக்கி மெல்ல நழுவும்.


3. தீர்த்தயாத்திரை போகையிற் கள்வராற் கானகத்தே கொலையுண்ட முனிபுங்கவர்தம் முடிபங்கம் பு.பு. இற்கு எடுத்துரைத்தது
---------------------------------------------------------------------------------------------------------
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைதூக்கி
எல்லாவுயிரும் கொல்லும்.


4. கொற்றனிடம் கவியுடன் போன கவியிடம் அரசவைவாயிற்காப்போன் காணிக்கை கேட்டபோது முறையிட்டழுதது
---------------------------------------------------------------------------------------------

கற்க கசடறக் கற்க கற்றபின் நேர்முகங்
காணவே பொருள்கொடுத்து நிற்க.


5. முதலமைச்சர் பின் பதவிக்காய்க் காத்திருந்த கல்வியமைச்சர் முதல்வர் புத்திரர் பற்றிக் காதற்கிழத்தியிடம் கவலையுடன் கருவியது
--------------------------------------------------------------------------------------------------------------

தோன்றிற் புகழுடன் தோன்றுக அன்றில்
அரசு அமை(ச்சு)வது அசாத்தியம்.


6. நகரமாந்தர் அங்காடியில் குரங்காட்டியின் வித்தையிற் களித்தது கண்ட நற்பாணன், பாடினியிடமும் இன்னோர் விறலியிடமும் விரக்தியிற் சொன்னது
---------------------------------------------------------------------------------------------------------------------------
பைந்தமிழ்ப்பண்ணோடமைந்ததெல்லாம் குயிற்பாட்டல்ல கழுதைக்
குரலுக்குக் குரங்கா(ட்)டுவதே தமிழிசைக்கவி.



(நீதி : கவிவீட்டுக் கலியும் கவிபாடும்)


25 comments:

மீனாக்ஸ் | Meenaks said...

பின்னுறீங்களே..!! பின்னுறீங்களே..!!

Vijayakumar said...

யப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபா... பெயரிலி புலவரே!

யாரங்கே!! இந்த பெயரிலி புலவருக்கு என் அந்தப்புரத்துக்கு 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அந்த பொட்டல்காட்டில் 4 கிரவுண்டுக்கு பட்டா போட்டு எடுத்து வாருங்கள்.

ROSAVASANTH said...

நன்று,

தக்ஷிணாமூர்த்தியை தாங்கள் அறிவீரா?

-/பெயரிலி. said...

/தக்ஷிணாமூர்த்தியை தாங்கள் அறிவீரா?/
எந்த தக்ஷிணாமூர்த்தி? விபரமாக, ஓர் அஞ்சலிடுங்கள்.

ROSAVASANTH said...

நாளை இடுகிறேன். ஆனால் அஞ்சலிட கேட்டதை பார்த்தால் தெரியும் போலத்தான் தெரிகிறது.

Anonymous said...

மிருதங்க வித்துவானோ?

Thangamani said...

:)

Anonymous said...

அய்யா...கலக்குங்க....

SnackDragon said...

இந்த கவிகளை
அரைகுறை என்று
தலைப்பிட்டதை
வன்மையாகக்
கண்டிக்கிறேன்.
//நான்
நோக்குங்கால்
நிலம் நோக்கும்
நோக்காக்கால்
(பின்)பணப்
பொதி தூக்கி
மெல்ல நழுவும்.//
அப்படியே
எட்டணா
டெக்னிக் -ஐயும்
எழுதியிருக்கலாம்.
//நீதி :
கவிவீட்டுக்
கலியும்
கவிபாடும்// இது
அநீதி
என்றிருக்கவேண்டும்.
கலிவீட்டுக்
கவியும்
களிசுடும்
என்றாலும் ஓகே
தான்.

நாய்முனிக்கவ்விகை
- எனபது ஒரு
அனானிமஸ் சொன்ன சினானிமஸ்.

SnackDragon said...

சங்கறுத்தல் எங்கள்
குலம் சங்கரனார்கேது
குலம்?
போல இது
சங்கத்து (தமிழ்)
சங்கு அறுத்தல்
என்பது இதுதானோ?
(முதல்ல ஒரே கோட்டிலதான் அடிச்சிருந்தேன், அப்பறம் மடக்கி அடிச்சா கவிதை மாதிரி தெரியுமேன்னு ...)

மு. சுந்தரமூர்த்தி said...

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பெயரிலி பள்ளிக் காலத்தில் உருப்போட்ட செய்யுள்களின் எண்ணிக்கை இருபது, முப்பதுக்கு மேல் தேறாது என்பதே! நான் சொல்வது பொய்யென்றால் நீர் உருப்போட்ட செய்யுள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்ச்செய்யுள்கள் இயற்றுங்கள் பார்ப்போம்.

(பெயரிலிக் கவிராயர்)
காரிகை கற்காமல் கவிபாடுவதிலும்
(பின்னூட்டமிட்டவர்கள்)
பேரிகை கொட்டி... ச்சே! ஜால்ரா தட்டி பிழைப்பதே நன்று.

மு. சுந்தரமூர்த்தி said...

தக்ஷிணாமூர்த்தி என்னவானார்?

"ராமச்சந்திரனைத்
தெரியுமா என்றார்
தெரியும் என்றேன்
எந்த ராமச்சந்திரன் என்று
அவரும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை"
(ஞானக்கூத்தன்?)

கதையாக இருக்கிறதே!

ஒரு பொடிச்சி said...

"ராமச்சந்திரனைத்
தெரியுமா என்றார்
தெரியும் என்றேன்
எந்த ராமச்சந்திரன் என்று
அவரும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை"
(ஞானக்கூத்தன்?)

நகுலன்!

-/பெயரிலி. said...

/நான் சொல்வது பொய்யென்றால் நீர் உருப்போட்ட செய்யுள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்ச்செய்யுள்கள் இயற்றுங்கள் பார்ப்போம்./
;-)
ஐயோ! காலைக்காட்டுங்கள். பூரண சரணாகதியே மிகச்சிறந்த பாதுகாப்பு அமையம் ;-)

நகுலனினது எந்த ராமச்சந்திரன் கவிதை.. அதனுடைய இற்றைப்படுத்திய என் அந்தரங்கவிஷயம் ஆன கடிவதை;-)

-/பெயரிலி. said...

/(முதல்ல ஒரே கோட்டிலதான் அடிச்சிருந்தேன், அப்பறம் மடக்கி அடிச்சா கவிதை மாதிரி தெரியுமேன்னு ...)/
செர்ரீ தம்பீ, என்னட்டை இல்லை, ஆனால், இந்தக் கொமென்ருக்காண்டி ஆரிட்டையோ வாங்கிக்கட்டப்போறீர். ;-)

மு. சுந்தரமூர்த்தி said...

//நகுலனினது எந்த ராமச்சந்திரன் கவிதை.. அதனுடைய இற்றைப்படுத்திய என் ஆன கடிவதை;-) //
அய்யய்யோ! ஒன்றையும் விட்டு வைக்கமாட்டீர் போலிருக்கிறதே! காலைக் காட்டுங்கள். கேட்டதற்கு நான் தான்... :-)
சரி, பெயரிலி கவிதையை பெயரிலியின் எதிரிலி...இல்லை...எதிரொளி parody பண்ணி எழுதின ஏதோவொரு க...தை உண்டா?

-/பெயரிலி. said...

ஹிஹி..

இருக்குதே ;-)

நத்தை நகர்

போகிற பாதையெல்லாம் புற்பொட்டு
சொட்டிப்போகிறது பெருநகர்.
பாதத்து ஓரப்பல் உள்ளிடுக்கு
எல்லாம் துணுக்கொட்டு.
கரையெல்லாம்
கம்பம் முளைத்துக்
காலூறிக் கையூன்றும்.
கணம் குந்தி
கலைந்த தொலைவுள்
கடந்த தரை காண
இந்தத் திசை நோக்கி
மையம் மடி புண்ட
நகர்
நத்தை.


:எதிரொழி:

நகர் அத்தை

வருகிறது உபாதை! எங்கும் ஸ்டிக்கர்பொட்டு
கொட்டப்போகிறது நகரத்தை.
பாத்ரூமு ரேழித்தரை உள்வீடு
எல்லாம் ஸ்டிக்கர்துணுக்கு.
புழக்கடையெல்லாம்
ஜம்பம் முளைத்துப்
பொட்டுக் கிளையும்.
கணம் முந்தி
கலந்த டிகாஷனுள்
கறந்த பசு முதுகில்
எந்தத் திசை நோக்கு!
மையம் ஆரை அன்றிப் பரவி
அத்தை
ஒட்டும்
ஸ்டிக்கர்.

எந்தைக்குப் பிந்திய மந்தை மொழிபெயர்ப்பும் வைத்திருக்கிறேன்

இலக்கியச்சிந்தனை
(இடறியசிந்தனை)



யாயும் ஞாயும் யாராகியரோ
(என் மகள் எவனையும் நினைத்திருப்பாளோ?)

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
(எவனோடாச்சும் ஓடிப்போனாளோ?)

யானும் நீயும் எவ்வழி அறிதும்
(எம் சாதி சனங்கள் ஒத்துவருமோ?)

செம்புலப் பெயல் நீர் போல
(செந்நீர் ஒழுகி ஓடினுங்கூட)

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
(வலுச்சண்டையில் அவர்தமைப் பிரித்திடல் குலநீதி)

-/பெயரிலி. said...

மீனாக்ஸ், அல்வாசிட்டி, தங்கமணி, பரி-பாலாஜி பின்னூட்டங்களுக்கு நன்றி

SnackDragon said...

அப்படி என்றால் ஞானி நந்தனும்??? இன்னும் எத்தனை உள்ளது ?

//ஆரிட்டையோ வாங்கிக்கட்டப்போறீர். ;-//
வாங்குதலும்
கட்டுதலும்
வாலிபனுக்கழகு
ஆரிடம் வாங்க
ஆரிடம் க(கொ)அட்ட
சேரிடம் சே(ரி)றிடம் என் செய்ய?
பாரீரே பாரீர்
போரீரே போறீர்?
பொறை?

பெயரிலியை பாத்துட்டு வந்த எபெக்டு; எனெக்கென்னமோ பெயரிலியாக நீங்க இருந்திருக்கலாம்னு தோனுது.

ROSAVASANTH said...

தஷிணாமூர்த்தி பற்றி இங்கே குறிப்பிட்டு விட்டு மறந்தே போய் விட்டது. சுமுவும் கேட்டுள்ளதால் இங்கேயே...!

திருக்குறள் பழைய செய்யுள் எல்லாவற்றையும் மாற்றி பாலியல் வார்த்தைகளுடன் எழுதி ஒரு தொகுப்பும் கொண்டு வந்திருந்தார். கடைசி பக்கங்களில் சுஜாதாகூட ஒருமுறை சொல்லியிருப்பார். சுஜாதா கொஞ்சம் (தஷிணாமூர்த்திக்கு ஒரு நாள் ..என்று)மாற்றியது.

...த்தார்கொரு நாளைக்கின்பம்,....
பார்தார்க்கென் றென்றைக்கும் இன்பம்.

என்பது போல். இதை தவிர வேறு எதையும் அவர் எழுதியதாய் தெரியவில்லை.

மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்
நீங்கள் குறிப்பிட்ட அந்த பாடலும் (இரண்டாவது வேறுமாதிரி வரும்), அதே தரத்தில் சில பாடல்களையும் எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சிலேடையில் சிவனைப் பற்றியும் ஒரு பாடல் உண்டு ('அச்சங்கு ஊதி' என்று ஆரம்பித்து 'செம்பு உடுக்கை ஆட்டும் சிவபெருமானே' என்று முடியும். சரியாக அசை, சீர் எல்லாம் பார்த்து இதையே மாற்றி எழுதினால் வேறு மாதிரி ஒலிக்கும்). அதெல்லாம் 'சித்தர் பாடல்' என்று சொன்னார். ஒரிஜினல் கவிஞர் ஒரு சித்தராகவோ, தக்ஷிணாமூர்த்தியாகவோ இல்லாமல் அது நாட்டுப்புறப் பாடல் போல பெயர் தெரியாத ஆசாமிகளால் கட்டப்பட்டு வாய்வழியாக பரவியிருக்கலாமோ?

ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி பார்த்த அன்றைக்கே பின்னூட்டாமற் பொறுத்திருந்தேன் இப்போதெல்லாம் பதிவுகளோடு பின்னூட்டங்களும் சுவாரசியமாக இருக்கின்றன.நன்றி வசந்தாருக்கும் மூர்த்தியாருக்கும், விட்டா நீங்களே புதுக்கவிதை படிப்பீங்க போலிருக்கே

-/பெயரிலி. said...

ஹிஹி! இப்படியாகப் பல இடைச்செருகல்களும் இடைக்கும் கீழான சொருகுதலும் நிறைந்த பாடல்கள் இருக்கின்றன. வசந்த சொன்ன தட்சணாமூர்த்தி வகையிலும் சுந்தரமூர்த்தி சொல்லும் காவியவகையிலும் (17/18 நூற்றாண்டுகளின் பல உலாக்களே இப்படியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. ;-)) அவை மெய்யாகவே இலக்கிய இலக்கணத்துக்கு உட்பட்டவைதானாக்கும்.

வசந்த், தட்சணாமூர்த்தி பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது. ஆனால், திருக்குறளை மாற்றுவதும்
"திருஞானசம்பந்த மூர்த்தி, நீர் திலகவதியாருக்கு ஏன் காணும் ....?
அரகர சிவசிவ சம்போ! அரைப்போத்தல் கள்ளுக்கு ஏனிந்த வம்போ?" இப்படியாக பல வழிவழி வந்த கூத்துகள் மாணவர் பரம்பரையிடையே இருக்கின்றன.

நாட்டுப்புறக்கதைகளைக் கேட்டால், இப்படியான எத்தனை இலக்கியமென்று பேசப்படாத "கதைகள்" மிகவும் பச்சையாக உலவுகிறன எனக்காணலாம்.

சன்னாசி said...

ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு தெரியுமா யாருக்காவது? ;-) அந்தப் பாவத்துக்கெல்லாம் சேர்த்து ஒருநாள் பெருமாள் கதாயுதத்தால் என் பல்லை நொறுக்கப்போகிறார்!!

Vel Tharma said...

அனைத்தும் அருமை
மிகவும் வித்தியாசமான சிந்தனை
பாராட்டுக்கள்